Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

Posts Tagged ‘Power’

Congo army withdraws under attack: Aid workers to evacuate Congo town as rebels advance

Posted by Snapjudge மேல் ஒக்ரோபர் 28, 2008

காங்கோவில் மோதல் காரணமாக பல்லாயிரக்கணக்கானோர் வெளியேற்றம்

காங்கோ ஜனநாயக குடியரசின் கிழக்கு பகுதியில் அரச படைகளுக்கும் கிளர்ச்சிக் குழுவிலிருந்து பிரிந்து சென்ற தளபதியான லாரண்ட் என்குண்டாவின் விசுவாசிகளுக்கும் இடையே நடைபெறும் கடும் சண்டைகளின் காரணமாக பல்லாயிரக்கணக்கான மக்கள் தங்களது இருப்பிடங்களை விட்டு வெளியேற வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

அந்தப் பகுதியில் இடம் பெயர்ந்தவர்களுகான ஒரு முகாம் தற்போது ஆளில்லாமல் இருக்கிறது என்றும், அங்கிருந்த மக்கள் அந்தப் பிராந்தியத்தின் தலைநகரான கோமாவை நோக்கி இடம்பெயரத் தொடங்கியுள்ளனர் என்றும் கிழக்கு காங்கோவில் இருக்கும் பிபிசியின் செய்தியாளர் கூறுகிறார்.

அரச துருப்புக்கள் பின்வாங்குவது போலத் தெரிகிறது என்றும், ஞாயிற்றுக்கிழமை கைப்பற்றப்பட்ட இராணுவத் தளத்தின் முழு கட்டுப்பாடும் கிளர்ச்சிப் படையினர் வசம் உள்ளதாகவும் எமது செய்தியாளர் மேலும் கூறுகிறார்.

ஐக்கிய நாடுகளின் அமைதி காக்கும் படையினர் தங்களை காப்பாற்றவில்லை என்று கூறி ஆயிரக்கணக்கான போராட்டக்காரர்கள் கோமாவிலுளள ஐ நா வின் தலைமை அலுவலகம் மீது கற்களை எறிந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.


Posted in Politics | குறிச்சொல்லிடப்பட்டது: , , , , , , , , , , | Leave a Comment »

Senior Al Qaeda member killed in US raid in Syria, officials say: Eight people dead after US attack on Syrian town, says Damascus

Posted by Snapjudge மேல் ஒக்ரோபர் 28, 2008


எட்டு பேர் கொல்லப்பட்ட ஹெலிகாப்டர் தாக்குதலுக்கு சிரியா கண்டனம்

தாக்குதலில் கொல்லப்பட்டவர்களுக்கு அஞ்சலி செலுத்தப்படுகிறது

சிரியாவில் கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று ஹெலிகாப்டரிலிருந்து நடத்தப்பட்டிருந்த ஒரு தாக்குதல் குறித்து விசாரிக்கப்பட வேண்டுமென அமெரிக்காவிடமும் இராக்கிடமும் சிரியாவின் வெளியுறவு அமைச்சர் வாலித் அல்மொஅல்லம் வலியுறுத்தியுள்ளார்.

எட்டு பேர் கொல்லப்பட்ட இந்தத் தாக்குதலை அமெரிக்கர்கள்தான் நடத்தியதாக சிரியா பழிசுமத்தியுள்ளது.

இத்தாக்குதல் ஒரு குற்றச்செயல் என்றும் ஒரு பயங்கரவாத அடாவடித்தனம் என்றும் லண்டனில் பேசிய அமைச்சர் மொஅல்லம் வருணித்துள்ளார். இதுபோன்ற தாக்குதல் மறுபடியும் நிகழுமானால், தனது நிலப்பரப்பை சிரியா தற்காத்துக்கொள்ளும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

இத்தாக்குதல் குறித்து அமெரிக்கா உத்தியோகபூர்வமாக அறிக்கை எதனையும் வெளியிடவில்லை என்றாலும் பெயர் வெளியிட விரும்பாத இராணுவ வட்டாரங்களை மேற்கோள்காட்டி வாஷிங்டனிலிருந்து வெளியாகும் தகவல்கள், இத்தாக்குதல் அல்கைதாவினருடன் தொடர்புடைய வெளிநாட்டு போராளிகளை இலக்குவைத்து அமெரிக்க விசேடப் படையினரால் நடத்தப்பட்டிருந்ததாகக் கூறுகின்றன.


Posted in Govt, Law, Politics | குறிச்சொல்லிடப்பட்டது: , , , , , , , , , , , , , , , , , , , , , | Leave a Comment »

DMK Internal Squabbles: Govt told to pay relief for police apathy – Mu Ka Alagiri

Posted by Snapjudge மேல் செப்ரெம்பர் 1, 2008

முதல்வர் மகன் அழகிரி தொடர்பான வன்முறைக்கு அரசு நஷ்ட ஈடு வழங்க உயர்நீதிமன்றம் உத்தரவு

முதல்வரின் புதல்வர் மு.க அழகிரி
முதல்வரின் புதல்வர் மு.க அழகிரி

2000மாவது ஆண்டு செப்டம்பர் மாதத்தில் திமுக தொண்டர்கள் முதல்வர் கருணாநிதியின் மகன் அழகிரியுடன் தொடர்பு வைத்துக்கொள்ளக்கூடாது என்ற அறிவிப்பு வெளியானதை அடுத்து மதுரையில் நிகழ்ந்த வன்முறையின்போது தீக்கிரையான ஒரு தனியார் பேருந்திற்கான இழப்பீட்டை தமிழக அரசு வழங்கவேண்டுமென சென்னை உயர்நீதிமன்றம் உத்திரவிட்டிருக்கிறது.

அப்பேருந்தின் உரிமையாளர்களான தனக்கன்குளம் வெங்கடேஸ்வரா தொழிற்பயிற்சி கழகத்திற்கு 2 லட்ச ரூபாய் இழப்பீட்டை இன்னும் எட்டு வாரங்களுக்குள் செலுத்திவிடவேண்டுமென நீதிபதி சந்துரு கூறியிருக்கிறார்.

அழகிரிக்கும் திமுக தலைவர் கருணாநிதிக்கும் மோதல் முற்றிவந்த நேரத்தில் அழகிரியுடன் தொண்டர்கள் தொடர்பை துண்டித்துக்கொள்ளவேண்டும் என்ற அறிவிப்பு வெளியானது. அப்போது அழகிரி ஆதரவாளர்களின் எதிர்ப்பே பரவலான வன்முறையாக வெளிப்பட்டதாக செய்திகள் கூறின.

வெங்கடேஸ்வரா தொழிற்பயிற்சிக்கழகம் எரிக்கப்பட்ட பேருந்திற்கு வாகன காப்பீடு இல்லை என்று முறையிட்டும் அதற்கு எவ்வித இழப்பீட்டையும் வழங்க தமிழக அரசு முன்வரவில்லை. கடந்த மூன்றாண்டுகளாக அக்கழகத்தின் மனுவிற்கு உயர்நீதிமன்றத்தில் பதில் மனு கூட தாக்கல் செய்யப்படவில்லை. இந்நிலையிலேயே நீதிபதி சந்துரு தனது தீர்ப்பினை அளித்திருக்கிறார்.

அப்போது நிகழ்ந்த வன்முறைகள் குறித்தும், குடிமக்களுக்கு அரசு தகுந்த பாதுகாப்பு அளிக்காதது குறித்தும் நீதிபதி கடும் அதிருப்தியினை தெரிவித்திருக்கிறார். எந்த ஒரு தனிநபரின் பிரச்சினைகளுக்காகவும் மற்ற குடிமக்களின் அடிப்படை உரிமைகள் பாதிக்கப்படக்கூடாது, கும்பல்கள் வன்முறையில் இறங்கும்போது ஒன்றும் செய்ய இயலவில்லை என்று அரசு ஒதுங்கிக்கொள்ளமுடியாது என்று நீதிபதி சந்துரு கூறியிருக்கின்றார்.

Posted in DMK, Economy, Govt, Law, Politics, Tamil Nadu | குறிச்சொல்லிடப்பட்டது: , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 1 Comment »

Attorneys threaten to paralyse courts, besiege parliament: Top lawyers Anand & Khan debarred for bribing witness: Guilty of contempt – BMW hit-and-run expose verdict: Bar associations, Lawyers on strike, protest

Posted by Snapjudge மேல் ஓகஸ்ட் 22, 2008

நீதிக்கு தடையாக இருந்த வழக்கறிஞர்களுக்கு தண்டனை

இந்தியாவில், மூத்த வழக்கறிஞர்கள் இரண்டு பேர், ஒரு வழக்கில் முறையான நீதி கிடைப்பதற்குத் தடைக்கல்லாக இருந்ததாகக் கூறி, அவர்களுக்கு டெல்லி உயர்நீதிமன்றம் தண்டனை விதித்திருக்கிறது.

புதுடெல்லியில் கடந்த 1999-ம் ஆண்டு பி.எம்.டபுள்யு. கார் ஒன்று மோதியதில், 6 பேர் கொல்லப்பட்டார்கள். இந்த வழக்கில், காரை ஓட்டிச் சென்ற சஞ்சீவ் நந்தா என்பவர் கைது செய்யப்பட்டார். அவர், ஆயுத முகவர் சுரேஷ் நந்தாவின் மகன்.

அந்த வழக்கில், சுனில் குல்கர்னி என்பவர் முக்கிய சாட்சியாக சேர்க்கப்பட்டார்.

சஞ்சீவ் நந்தா சார்பில், மூத்த வழக்கறிஞர் ஆர்.கே. ஆனந்தும், காவல்துறை சார்பில் மூத்த வழக்கறிஞர் ஐ.யு. கானும் ஆஜரானார்கள்.

அவர்கள் இருவரும் சேர்ந்து, சுனில் குல்கர்னி இந்த வழக்கில் தனது நிலையை மாற்றிக் கொள்ள வேண்டும் என அவரை வற்புறுத்தியபோது, தொலைக்காட்சி சானல் ஒன்றின் சார்பில், அது ரகசியமாகப் படமாக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

டெல்லி உயர்நீதிமன்றம் தானாகவே அந்தப் பிரச்சினையை விசாரணைக்கு எடுத்துக் கொண்டது. அதில், வியாழக்கிழமை தீர்ப்பு வழங்கப்பட்டது.

வழக்கறிஞர்கள் ஆனந்தும், ஐ.யு. கானும் எதிரெதிர் தரப்பு வழக்கறிஞர்களாக இருந்தாலும், இருவரும் ஒன்றாக சேர்ந்து, நீதி வழங்கப்படுவதற்குத் தடைக்கல்லாக செயல்பட்டதாக அவர்களுக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, இரு வழக்கறிஞர்களும் அடுத்த நான்கு மாதங்களுக்கு டெல்லி உயர்நீதிமன்றத்திலும், கீழ் நீதிமன்றங்களிலும் வழக்குகளில் ஆஜராகத் தடை விதிக்கப்பட்டுள்ளது. அத்துடன், மூத்த வழக்கறிஞர்கள் என்ற பதவியை அவர்களிடமிந்து பறிப்பதற்கும் நீதிமனறம் பரிந்துரைத்துள்ளது. அவர்கள் இருவரும் தலா 2 ஆயிரம் ரூபாய் அபராதம் செலுத்த வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.

Posted in Tamil | குறிச்சொல்லிடப்பட்டது: , , , , , , , , , , , , , , , , , , , , , | Leave a Comment »

TN handloom minister NKKP Raja in property row: Victims charge DMK Cabinet holder for abduction

Posted by Snapjudge மேல் ஓகஸ்ட் 1, 2008


அமைச்சர் தூண்டுதலால் கடத்தப்பட்டதாக புகார்:
3 பேர் ஐகோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர்

சென்னை, ஜுலை.30-

அமைச்சரின் தூண்டுதலால் 3 பேர் கடத்தப்பட்டதாக சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. கடத்தப்பட்டதாக கூறப்படும் 3 பேரும் நீதிபதிகள் முன்பு ஆஜர்படுத்தப்பட்டனர்.

கடத்தல்

ஈரோடு மாவட்டம் பெருந்துறையை அடுத்த பள்ளிக்காட்டு தோட்டம் கிராமத்தை சேர்ந்த இளங்கோவன் கேபியஸ் கார்பஸ் மனு ஒன்றை சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்தார். 10 ஏக்கர் நிலத்தை பெறுவதற்காக தனது மாமனார், மாமியார் மற்றும் உறவினர் ஒருவரை கடத்தி சட்டவிரோத காவலில் வைத்திருப்பதாக மனுவில் கூறியிருந்தார்.

கைத்தறித்துறை அமைச்சரின் ஆட்களால் 3 பேரும் கடத்தப்பட்டதாகவும், அவர்களை மீட்டு, ஐகோர்ட்டில் ஆஜர்படுத்தி விடுதலை செய்யவேண்டும் என்றும் மனுவில் கூறியிருந்தார்.

ஐகோர்ட்டில் ஆஜர்

கடத்தப்பட்டதாக கூறப்படும் பழனிச்சாமி, மலர்விழி, சிவபாலன் ஆகியோர் நேற்று ஐகோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர். இவர்களிடம் நீதிபதிகள் ரகசிய விசாரணை நடத்தினார்கள். பழனிச்சாமியும், மலர் விழியும், தங்கள் உறவினர் ஜெகநாதன் சென்னை அடையாறில் வசித்து வருகிறார் என்றும், அங்கு தங்க அனுமதிக்க வேண்டும் என்று நீதிபதிகளிடம் கோரிக்கை விடுத்தனர். இதற்கு நீதிபதிகள் அனுமதி அளித்தனர். இவர்களுக்கு போதிய பாதுகாப்பு வழங்க வேண்டுமென்று உதவி போலீஸ் கமிஷனருக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

இந்த வழக்கில் ஆஜரான சிவபாலனை வீட்டிற்கு செல்ல நீதிபதிகள் அனுமதித்தனர். இதே போன்று இன்னொருவர் கடத்தப்பட்டதாக இளங்கோவன் மனு ஒன்றை தாக்கல் செய்தார். ஏற்கனவே தொடரப்பட்ட வழக்கில் அமைச்சர் என்.கே.கே.பி.ராஜா இன்னும் நோட்டீசு பெறவில்லை என்று கோர்ட்டில் தெரிவிக்கப்பட்டது. அவருக்கு மீண்டும் நோட்டீசு அனுப்ப நீதிபதிகள் உத்தரவிட்டனர். வழக்கு விசாரணையை வருகிற 12-ந் தேதிக்கு நீதிபதிகள் தள்ளி வைத்தனர். தங்களை விடுவிக்கும்போது, இந்த விவரத்தை வெளியில் சொல்லக்கூடாது என்று குண்டர்கள் மிரட்டியதாக மலர்விழியும், பழனிச்சாமியும் மனு ஒன்றை ஐகோர்ட்டில் தாக்கல் செய்தனர்.

நிலத்துக்காக 3 பேர் கடத்தப்பட்டார்களா?
அறிக்கை தாக்கல் செய்ய ஐகோர்ட்டு உத்தரவு

சென்னை, ஜுலை.26-

ஈரோடு மாவட்டம் பெருந்துறையை அடுத்த முள்ளம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் இளங்கோவன். இவர், சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த கேபியஸ் கார்பஸ் மனுவில் கூறியிருப்பதாவது:-

எனது மாமனார் மற்றும் அவரது தம்பிக்கு சொந்தமான 10 ஏக்கர் நிலத்தை அமைச்சர் ஒருவரும், அவருடைய ஆட்களும் கேட்டு மிரட்டி வந்தார்கள்.

நிலத்தை விற்க சம்மதிக்காததால், எனது மாமனார், மாமியார், மைத்துனர் ஆகிய 3 பேரையும், அமைச்சரின் ஆட்கள் கடத்தி சென்று சட்டவிரோதமாக எழுதி வாங்க மிரட்டி வருகிறார்கள். எனது மாமனாரின் தம்பியையும் கடத்த முயற்சித்து வருகிறார்கள். சட்டவிரோத பிடியில் இருக்கும் 3 பேரையும் தேடி கண்டுபிடித்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி விடுதலை செய்யவேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.

இந்த மனுவை நீதிபதிகள் சொக்கலிங்கம், வெங்கட்ராமன் ஆகியோர் விசாரித்தனர். வழக்கு விசாரணையை வரும் திங்கட்கிழமைக்கு நீதிபதிகள் தள்ளி வைத்தனர். போலீஸ் தரப்பில் இந்த வழக்கு தொடர்பான அறிக்கையை தாக்கல் செய்யவேண்டுமென்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Posted in Tamil | குறிச்சொல்லிடப்பட்டது: , , , , | Leave a Comment »

Thuglaq – Cover Image on Congress Govt’s Parliamentary Practices

Posted by Snapjudge மேல் ஜூலை 24, 2008

Thanks: http://aruvaibaskar.blogspot.com/2008/07/blog-post_23.html

Posted in Tamil | குறிச்சொல்லிடப்பட்டது: , , , , , , , , , , , , , , , , , , | 1 Comment »

Arputharaj: Political conferences & Public hassle – Disturbing normal life with Abundant Exuberance

Posted by Snapjudge மேல் ஜூன் 17, 2008

அற்புதராஜுக்கு நன்றி!

அரசியல் கட்சிகள் தங்களது செல்வாக்கை வெளிப்படுத்தவும், தங்கள் பின்னால் ஆயிரக்கணக்கான தொண்டர்கள் இருக்கிறார்கள் என்று அரசியல் தலைவர்கள் தங்களைத் தாங்களே தைரியப்படுத்திக் கொள்ளவும் மாநாடு, பேரணி என்று நடத்தி விடுகிறார்கள். இதனால் எத்தனை லட்சம் ரூபாய்கள் விரயமாக்கப்படுகின்றன, எத்தனை மணிநேர மனித உழைப்பு வீணாகிறது என்பதைப் பற்றி எல்லாம் அவர்கள் கவலைப்படுவதில்லை.

இந்த மாநாடுகளும், பேரணிகளும், பொதுக்கூட்டங்களும் இன்றைய ஊடகப்புரட்சிக்குப் பிறகு தேவைதானா என்பது சந்தேகம்தான். தொலைக்காட்சிப் பெட்டிகள் மூலம் தமிழகத்திலுள்ள 95% மக்களை நேரில் சந்தித்துத் தங்களது கருத்துகளைத் தெரிவிக்கும் வாய்ப்பு ஏற்பட்ட பிறகும் இதுபோன்ற தேசிய விரயங்களில் அரசியல் கட்சிகள் ஈடுபடுவது என்பது எந்த அளவுக்கு நமது தலைவர்கள் பொறுப்பற்ற விதத்தில் செயல்படுகிறார்கள் என்பதைத்தான் எடுத்துக் காட்டுகிறது.

வேடிக்கை என்னவென்றால், அநேகமாக எல்லா அரசியல் கட்சிகளும் தங்களுக்கென தொலைக்காட்சிச் சேனல்களையே வைத்துக் கொண்டிருக்கின்றன என்பதுதான். அந்த தொலைக்காட்சிச் சேனல்களில் தங்கள் முகத்தையே திருப்பித் திருப்பிக் காட்டித் திருப்தி அடைவது மட்டுமல்லாமல், தொலைக்காட்சி வாடிக்கையாளர்களை வேறு வெறுப்படையச் செய்து விடுகிறார்கள். இத்தனையும் போதாதென்று பொதுக் கூட்டங்கள், பேரணிகள், மாநாடுகள் எல்லாம் எதற்கு?

கட்சிக்காரர்களை உற்சாகப்படுத்த என்கிற வாதத்திலும் உண்மை இல்லை. இதுபோன்ற மாநாடுகளில் முக்கால்வாசிப் பேர் பணம் கொடுத்து அழைத்து வரப்படுபவர்கள்தான் என்பதை அந்தக் கூட்டத்தினரைப் பார்த்தாலே தெரியும். ஊர் சுற்றிப் பார்க்க வரும் அப்பாவி மக்கள் சிலர். சாப்பாடும் பணமும் கிடைக்கிறதே என்கிற ஆசையில் வருபவர்கள் பலர்.

அது போகட்டும். கட்சி சாராத நம்மைப் போன்ற பொதுமக்களின் நிலைமைதான் இதுபோன்ற மாநாடுகள் மற்றும் பேரணிகள் நடக்கும்போது மிகவும் பரிதாபம். ஓரிடத்துக்கு நிம்மதியாகப் பயணிக்க முடியாது என்பது மட்டுமல்ல, அந்தந்த ஊர்களில் அன்றாட வாழ்க்கை வேறு பாதிக்கப்பட்டு விடுகிறது. தெருவெல்லாம் இவர்கள் வைக்கும் கட்-அவுட்டுகள், கொடிகள் மற்றும் போஸ்டர்கள் முகம் சுளிக்க வைப்பதுடன், போக்குவரத்துக்கு இடைஞ்சலாகவும் இருக்கின்றன.

பொதுக்கூட்ட மேடைகளுக்கும், “கட்-அவுட்’டுகளுக்கும் ரகசியமாக மின்சாரத்தைத் திருடும் சாகசம் நடப்பது தனிக்கதை.

இந்தப் பேரணிகள் முடிந்த பிறகு வீசி எறியப்படும் உணவுப் பொட்டலங்கள், மதுபான பாட்டில்கள், பீடி, சிகரெட் துண்டுகள், கழிவுகள் என்று அந்த நகரமே நரகமாக்கப்பட்டு விடுகிறது. அதனால் ஏற்படும் சுற்றுச்சூழல் பாதிப்பு ஒருபுறம் இருக்க, நகராட்சி மற்றும் மாநகராட்சித் துப்புரவுத் தொழிலாளர்களுக்குத் தேவையில்லாத அதிகரித்த வேலைப்பளு!

இதற்கெல்லாம் விடிவுகாலம் பிறக்காதா, இந்த அரசியல் கட்சிகளின் பொறுப்பற்ற செயல்களை யாராவது கண்டித்துக் கடிவாளம் போட மாட்டார்களா என்று ஏங்கிய அப்பாவிப் பொதுமக்களின் சார்பில் போர்க்கொடி தூக்கினார் சென்னை ஸ்ரீகஜலெட்சுமி காலனி குடிசைப்பகுதி மக்கள் நல்வாழ்வுச் சங்கத் தலைவரான 72 வயது அற்புதராஜ். அவர் தொடுத்த பொதுநல வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் அளித்திருக்கும் தீர்ப்பு அனைத்துத் தரப்பினரின் ஏகோபித்த கரகோஷ வரவேற்புக்கு உரியது.

உயர் நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதி அசோக் குமார் கங்குலியும், நீதிபதி இப்ராகிம் கலிபுல்லாவும் அளித்திருக்கும் சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பில், ஏழு முக்கிய நிபந்தனைகளை அரசியல் கட்சிகளுக்கு விதித்திருக்கிறார்கள். அதன்படி இனிமேல் இரவு பத்து மணிக்கு மேல் சென்னை போன்ற நகரங்களில் பொதுக்கூட்டங்கள் தடை செய்யப்படுகின்றன. மூன்று மணி நேரத்துக்கு மேல் ஊர்வலங்களுக்கு அனுமதி இல்லை என்பது மட்டுமல்ல, போக்குவரத்துக்கு இடைஞ்சல் இல்லாத வகையில்தான் ஊர்வலங்கள் நடத்தப்படவும் வேண்டும்.

பொதுக்கூட்டம் மற்றும் பேரணிகள் முடிந்ததும் அரசியல் கட்சிகள் தங்களது பேனர்கள் மற்றும் கொடிக் கம்பங்களை உடனடியாக அகற்றும்போது பொதுச்சொத்துகளுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படுத்தக் கூடாது என்கிற கண்டிப்பான உத்தரவும் பிறப்பிக்கப்படுகிறது. அதுமட்டுமல்ல, இதுபோன்ற மாநாடுகள் மற்றும் பேரணிகளுக்கு அனுமதி வழங்கும்போது முன்பணமாக ஒரு தொகை பெறப்பட வேண்டும் என்றும், பொதுச்சொத்துக்குச் சேதம் ஏற்படுமானால் அந்தத் தொகை ஈடாக எடுத்துக் கொள்ளப்பட வேண்டும் என்றும் தீர்ப்பு தெளிவாக்குகிறது.

ஒரு விஷயத்தை மட்டும் தீர்ப்பு ஏனோ விட்டுவிட்டது. இதுபோன்ற மாநாடுகள் மற்றும் பேரணிகள் நடத்தும் கட்சிகளிடமிருந்து சம்பந்தப்பட்ட நகராட்சி மற்றும் மாநகராட்சிகள் துப்புரவுக் கட்டணம் பெற வேண்டும் என்பதுதான் அது.

கடுமையான நிபந்தனைகள் விதிக்கப்பட்டு இதுபோன்ற மாநாடுகள், பேரணிகள் முறைப்படுத்தப்பட வேண்டும்.

Posted in Govt, India, Law, Order, Politics, Tamil, Tamil Nadu | குறிச்சொல்லிடப்பட்டது: , , , , , , , , , , , , , , , , , , , , | Leave a Comment »

Exploiting the power & abusing Minister’s influence: DMK Govt – TR Balu, Poongothai, Arcot Veerasamy

Posted by Snapjudge மேல் மே 15, 2008

அமைச்சர்களின் அதிகார துஷ்பிரயோகம்: முதல்வர் தெளிவுபடுத்துவாரா?-சரத்குமார் கேள்வி

சென்னை, மே 14: தி.மு.க. அமைச்சர்களின் அதிகார துஷ்பிரயோகம் குறித்து முதல்வர் கருணாநிதி தெளிவுபடுத்துவாரா என்று அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுகுறித்து புதன்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை:

ஆட்சிப் பொறுப்பேற்று அமைச்சர்களாக பதவிக்கு வருவதே தங்களுடைய தேவைகளைப் பூர்த்தி செய்துகொள்ளத்தான் என்பதை உறுதிசெய்வது போல, தி.மு.க. அமைச்சர்களின் நடவடிக்கைகள் இருந்து வருகின்றன.

லஞ்ச ஊழல் குற்றச்சாட்டுக்கு ஆளான மின்துறை பொறியாளரான தனது உறவினர் ஜவஹர் மீது எவ்வாறான நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் பூங்கோதை லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரியிடம் பேசியுள்ளார்.

அவர் மீதான குற்றச்சாட்டை துறை நடவடிக்கைக்கு அனுப்பினால் நல்லது என்று அமைச்சரே பரிந்துரை செய்ததாக செய்தி வெளியாகியுள்ளது.

கடலூர் மின்சார நிறுவனத்தின் உரிமையாளர் அமைச்சர் ஆர்க்காடு வீராசாமியின் உறவினர் என்றும், அதனால்தான் கடலூர் மாவட்டத்தில் நிலங்களை கையகப்படுத்துவதில் அமைச்சர் தீவிரமாக செயல்படுகிறார் என்றும் பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் தெரிவித்திருந்தார்.

அதேபோல், மத்திய அமைச்சர் டி.ஆர். பாலு தனது குடும்ப நிறுவனத்துக்கு குறைந்த விலையில் எரிவாயு தர வேண்டும் என்று எரிசக்தித் துறையை வலியுறுத்தினார் என்றும், பிரதமர் அலுவலகம் இதுதொடர்பாக 8 முறை பரிந்துரை செய்துள்ளது என்றும் அண்மையில் செய்தி வெளியாகி நாடாளுமன்றத்தில் மிகப்பெரிய அமளி ஏற்பட்டது.

தனது நிறுவனத்தின் பங்குதாரர்களுக்காகத்தான் உதவி கேட்டதாகவும், பதவியை ராஜிநாமா செய்யமாட்டேன் என்றார். இந்த நிறுவனத்தில் தனது குடும்பத்தினருக்கு எத்தனை சதவீத பங்குகள் உள்ளன என்பதையும் அவர் தெளிவுபடுத்தி இருக்க வேண்டும்.

தி.மு.க.வைச் சேர்ந்த மத்திய, மாநில அமைச்சர்கள் செய்துவரும் அதிகார துஷ்பிரயோகங்களுக்கு மேற்கண்டவை சில உதாரணங்கள் மட்டுமே. இதுபோன்ற பல்வேறு ஊழல்களும், அதிகார துஷ்பிரயோகங்களும் தொடர்ந்து நடைபெற்று வருவதை மக்கள் கவனித்துக் கொண்டுதான் வருகிறார்கள்.

முதல்வர் கருணாநிதிக்கு தெரிந்து இவை நடக்கின்றனவா அல்லது முதல்வரின் கட்டுப்பாட்டில் இவர்கள் இல்லையா என்பது நம்முன் உள்ள கேள்வி.

அமைச்சர் பூங்கோதை, ஜவஹர் தனது அத்தை மகன் என்றும், அவர் ஒருவர்தான் அந்த குடும்பத்தை காப்பாற்ற வேண்டிய நிலையில் இருப்பதால் அப்படி நடந்துகொள்ள நேர்ந்தது என்றார்.

இப்படி தங்களது குடும்ப நலன்களுக்காகவே அதிகார துஷ்பிரயோகம் செய்வது தொடர்கதையாகி வருகிறது.

அமைச்சர் பூங்கோதை மட்டும் ராஜிநாமா செய்து இருக்கும் நிலையில் மற்ற அமைச்சர்களின் நிலை என்ன என்பதை முதல்வர் தெளிவுபடுத்துவாரா?

————————————————————————————————
“வெட்கப்படுகிறேன்’: அமைச்சரின் செயல் குறித்து கருணாநிதி

சென்னை, மே 14: லஞ்சம் வாங்கிய தனது உறவினரைப் பாதுகாக்கும் முயற்சியில் அமைச்சர் ஒருவரே ஈடுபட்டிருப்பது வெட்கப்பட வேண்டிய ஒன்றாகும் என்று முதல்வர் கருணாநிதி தெரிவித்தார்.

பேரவையில் புதன்கிழமை இது குறித்து அவர் பேசியதாவது:

லஞ்சம் வாங்கிய தனது உறவினரைப் பாதுகாக்கும் முயற்சியில் அமைச்சர் ஒருவரே ஈடுபட்டிருப்பது வெட்கப்பட வேண்டிய ஒன்றாகும். இதை நான் ஏற்றுக்கொள்ளவில்லை. இதற்காக நான் வெட்கப்படுகிறேன்.

“”எனது உறவினர் ஜவஹர் மீது நடைபெற்று வரும் விசாரணையின் போக்கில் குறுக்கிட்டு அமைச்சர் என்ற முறையில் என் செல்வாக்கை, அதிகாரத்தை செலுத்த வேண்டும் என்ற உள்நோக்கம் எதுவும் இல்லை. லஞ்ச ஒழிப்பு ஆணையருடன் பேசியபோது ஜவஹர் தொடர்பான விஷயத்தை ஒரு கோரிக்கை என்ற முறையில் பரிசீலிக்கச் சொன்னேன். ஆனாலும் அதனை தவறு என்று இப்போது உணர்கிறேன். அதற்கு பரிகாரமாக எனது அமைச்சர் பதவியை ராஜிநாமா செய்கிறேன்” என்று அமைச்சர் பூங்கோதை எனக்கு எழுதியுள்ளார் என்றார் முதல்வர் கருணாநிதி.

————————————————————————————————
அமைச்சர் பதவியிலிருந்து பூங்கோதை ராஜிநாமா

சென்னை, மே 14: சமூக நலத்துறை அமைச்சர் பூங்கோதை தனது அமைச்சர் பதவியை ராஜிநாமா செய்திருப்பதாகவும், அது ஆய்வில் இருப்பதாகவும் முதல்வர் கருணாநிதி தெரிவித்தார்.

பேரவையில் புதன்கிழமை இந்தப் பிரச்னை குறித்து எதிர்க்கட்சி துணைத் தலைவர் ஓ. பன்னீர்செல்வம் பேசியதாவது:

சமூக நலத்துறை அமைச்சர் பூங்கோதை, லஞ்சப் புகாரில் சிக்கிய தனது நெருங்கிய உறவினரான, மின்வாரியத்தில் பொறியாளராகப் பணிபுரியும் ஜவஹர் என்பவரைக் காப்பாற்றுவதற்காக லஞ்ச ஒழிப்புத் துறை ஆணையர் உபாத்தியாயாவிடம் தொலைபேசியில் பேசியிருக்கிறார்.

அவர்களின் உரையாடல் தொலைக்காட்சிகளிலும், பத்திரிகைகளிலும் வெளிவந்து அனைத்துத் தரப்பு மக்களிடமும் மிகுந்த ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்திய அரசியல் சாசனப்படி நடப்பேன் என்று பதவிப்பிரமாணம் எடுத்துக் கொண்ட அமைச்சர் தனது அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்திருக்கிறார். இதற்கான பரிகாரத்தை சம்பந்தப்பட்ட அமைச்சரே காண வேண்டும் என்றார்.

அதற்கு பதிலளித்து முதல்வர் கருணாநிதி பேசியதாவது:

எதிர்க்கட்சியின் பணி எதுவோ அதனை எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஒ. பன்னீர்செல்வம் அமைதியான முறையில் நிறைவேற்றி உள்ளார். இடித்துச் சொல்ல வேண்டிய எதிர்தரப்பினர் இல்லாவிட்டால் அந்த அரசு தானாகவே கெட்டுவிடும் என்பது வள்ளுவர் வாக்கு.

ஏற்கெனவே ஒட்டுக்கேட்ட விவகாரம் சட்டப் பேரவையில் எழுப்பப்பட்டு அதனை விசாரிக்க விசாரணை கமிஷனும் அமைக்கப்பட்டுள்ளது. விஞ்ஞான வளர்ச்சியில் ஒருவர் பேசுவதை இன்னொருவர் பதிவு செய்வது எளிதாகி இருக்கிறது.

தலைமைச் செயலாளரும், இன்னொரு அதிகாரியும் பேசிக் கொண்டதாகப் பதிவான ஒட்டுக் கேட்பு விவகாரம் விசாரணையில் இருக்கும் போது இடையில் இந்த செய்தி வந்துள்ளது. இதில் ஒரு அமைச்சர் சம்பந்தப்பட்டிருப்பதால் நான் வேதனைப்படுகிறேன்.

எதிர்க்கட்சித் துணைத் தலைவர் கூறியதைப்போல விசாரணை கமிஷனோடு இதையும் சேர்க்கலாமா என்று நாங்கள் யோசித்துக் கொண்டிருக்கும்போது, அவரே தனது ராஜிநாமா கடிதத்தை அனுப்பியிருக்கிறார்.

அமைச்சரின் ராஜிநாமா குறித்து நான் எந்த முடிவையும் எடுக்கவில்லை. அதைப் பற்றி கலந்தாலோசித்துக் கொண்டிருக்கிறேன். அதே நேரத்தில் இந்த ஒட்டுக் கேட்பு விவகாரம் எப்படி நடைபெறுகிறது என்பதை நமது புலனாய்வு அமைப்பு மூலம் ஆராய வேண்டியிருக்கிறது.

இது தொடர்பாக விசாரிக்க விசாரணைக் குழு அமைப்பதா அல்லது ஏற்கெனவே அமைக்கப்பட்டுள்ள விசாரணைக் குழுவில் சேர்ப்பதா என்பது குறித்து யோசித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

————————————————————————————————

விடை கிடைக்காத வினாக்கள்

ஆர்.ஆர்.பி.

பரபரப்பான தி.நகர். மேலும் பரபரப்பான பகல் நேரம். வெள்ளைச் சீருடையில் ஏராளமான போக்குவரத்து போலீஸôர், போதிய இடைவெளியில் இருபுறமும் நிற்கின்றனர். சற்று தள்ளி, நடமாடும் நீதிமன்றம், இரு சக்கர வாகனங்களில் வருபவர்கள் ஆங்காங்கே ஓரங்கட்டப்படுகின்றனர். சிலர் லைசென்ஸ் இல்லாதவர்கள். சிலர் செல்போனில் பேசிக்கொண்டே வாகனம் ஓட்டியவர்கள். சிலர் பெட்ரோல் டேங்க்குக்கு ஹெல்மெட் போட்டவர்கள்.

அத்தனை பேரும் அபராதம் கட்டியாக வேண்டும். அருகிலேயே நடமாடும் நீதிமன்றம் இருப்பதால், காந்தி படங்களைக் காட்டி, தப்பிச் செல்ல முடியாது. சுருங்கச் சொன்னால், சட்டம் தன் கடமையைச் செய்து கொண்டிருக்கிறது.

பார்க்கும்போதே மெய்சிலிர்த்தது. சிந்தனை வேறு பக்கம் திரும்பியது.

முதலிரண்டு “பாரா’க்களைப் படித்ததுமே தெரிந்திருக்கும். சம்பந்தப்பட்டவர்கள் எவரும் பஞ்சமாபாதகங்களைச் செய்தவர்கள் இல்லை என்பது. ஆனால், இவர்கள் அனைவரும் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டுள்ளனர். நூறு சதவீதம் நியாயமான விஷயம்.

மறுபக்கம், தொலைபேசி ஒட்டுக்கேட்பு என்ற பூதம் ஒட்டுமொத்த தமிழகத்தையும் பிடித்து உலுக்கிக் கொண்டிருக்கிறது என்றால், அது மிகைப்படுத்தலாகவே இருக்கும்.

அ.தி.மு.க.வைத் தவிர அந்தப் பிரச்னையைக் கையால் தொடவே எவரும் தயங்குகின்றனர். அவ்வப்போது முனகலாகக் குரல் கொடுக்கும் பா.ம.க.வோ, “எங்கள் ஐயாவின் தொலைபேசியும் ஒட்டுக் கேட்கப்படுகிறது’ என்பதிலேயே குறியாக இருக்கிறதே தவிர, இந்தப் பிரச்னையின் முழு பரிமாணத்தையும் புரிந்துகொண்டதாகத் தெரியவில்லை.

தலைமைச் செயலர் பேச்சிலிருந்து சமீபத்தில் சர்ச்சைக்குள்ளான சமூக நலத்துறை அமைச்சர் பூங்கோதை பேச்சுவரை அத்தனை தொலைபேசி ஒட்டுக்கேட்பு “சிடி’க்களையும் கூர்ந்து கவனித்தால், அனைத்திலும் தமிழக லஞ்சம் மற்றும் ஊழல் ஒழிப்புத் துறை இயக்குநர் உபாத்யாயா இருப்பார். அந்த “சிடி’க்கள் ஒலிபரப்பானபோது கேட்டவர்கள், அவரது குரல் தெள்ளத் தெளிவாக இருப்பதையும், எதிர்முனையில் இருப்பவர்கள் குரல் தெளிவு சற்றுக் குறைவாக இருப்பதையும் கவனித்திருக்க முடியும்.

இதன் மூலம் உறுதியாகும் உண்மை: இந்த உரையாடல்கள் அனைத்தும், ஏ.டி.ஜி.பி., உபாத்யாயா முனையில் பதிவு செய்யப்பட்டவை.

அப்படியானால், அத்தனை சர்ச்சைக்கும் காரணம் அவர் தானா? நிச்சயமாக இல்லை. போலீஸ் துறையில் இருக்கும் அனைவருக்கும் தெரியும் அவரது நேர்மை. நூறு ரூபாய் லஞ்சம் வாங்குவதை விட, பதவியைத் தூக்கி எறிந்துவிட்டு, வீட்டுக்குப் போவதை வீரம் என நினைப்பவர். எந்த ஆதாயத்துக்காகவும் எவர் வீட்டு வாசலிலும் நின்றறியாதவர்.

எனில், இந்த ஒலிப்பதிவு எப்படி நடந்தது? எப்படி வெளியானது? பொதுவாக, உயர்பதவியில் இருக்கும் சில ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., அதிகாரிகள், தாங்கள் நடத்தும் தொலைபேசி உரையாடல்களைப் பதிவு செய்வது வழக்கம். இன்னார், அன்னார் என்ற பேதம் இல்லாமல் எல்லா அழைப்புகளையும் பதிவு செய்வர். முக்கியமானவற்றைச் சேமிப்பர்; தேவையில்லாதவற்றை அழித்துவிடுவர்.

அவ்வாறு உபாத்யாயா சேமித்து வைத்திருந்த தொலைபேசி அழைப்புகள் தான் தற்போது வெளியாகி உள்ளன. இவை பதிவு செய்து வைக்கப்பட்டிருந்த “லேப் – டாப்’பை சர்வீஸ் செய்தவர்கள், உபாத்யாயா அலுவலக ஊழியர்கள் என்ற இருதரப்பில் ஒருவர்தான் இதைச் செய்திருக்க வேண்டும்.

இப்படி வெளிக்கிளம்பிய “சிடி’யைத் தான் மெமரி விட்டா விளம்பரம் போல ஜெயா “டிவி’யில் மணிக்கு நூறு முறை ஒளிபரப்பி வருகின்றனர்.

இது இவ்வாறிருக்க, தொலைபேசி உரையாடல் எப்படி பத்திரிகைகளுக்குச் சென்றது? என்பதைப் பற்றித் தான் உலகம் முழுவதும் கவலைப்பட்டுக் கொண்டிருக்கிறதே தவிர, அந்த “சிடி’யில் இருந்த விஷயங்கள் பற்றி யாரும் கவலைப்படக் காணோம். அதைத்தான் முதல்வரும் விரும்பினார். அதற்காகத்தான், உபாத்யாயாவுடன் தலைமைச் செயலர் மற்றும் முதல்வரின் செயலர் உரையாடல் வெளியானபோது, “அவர்கள் ஒன்றும் தேச விரோதச் செயல்களில் ஈடுபட்டுவிடவில்லையே’ என்றார் முதல்வர்.

லஞ்சம் மற்றும் ஊழல் ஒழிப்புத் துறை இயக்குநரிடம், எந்த இடத்தில் எந்த அதிகாரியை நியமிக்க வேண்டும்? எந்த அதிகாரி எந்த அரசியல்வாதிக்கு உறவினர்? எதிர்க்கட்சித் தலைவர் வழக்கை எப்படி விசாரிக்க வேண்டும்? அவர் பக்கம் நியாயம் இருந்தாலும் அதை எப்படி திசைதிருப்ப வேண்டும்? என்பன போன்ற விஷயங்களை அறிவுறுத்துவது முற்றிலும் மரபு விரோதம்.

அதையும் ஒதுக்கி வைப்போம்.

நேற்று முன்தினம் ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணியன் சாமி வெளியிட்ட “சிடி’ எத்தகையது? சமூக நலத்துறை அமைச்சர் பூங்கோதை, லஞ்ச வழக்கில் கையும் களவுமாக சிக்கிய தனது உறவினரை விடுவிக்க உதவும்படி உபாத்யாயாவைக் கேட்கிறார். “பாவம்… அவர்தான் அந்தக் குடும்பத்தின் ஒரே வருவாய் ஆதாரம்’ என கெஞ்சுகிறார்.

வேறு வருவாய் ஆதாரம் இல்லை எனில் லஞ்சம் வாங்கலாம் என சட்ட மசோதா தாக்கல் செய்வார்போலும். வழக்கு ஆவணங்களை மின்சார வாரியத்துக்கே அனுப்பிவிட்டால் போதுமாம்; அவர் பார்த்துக் கொள்வாராம்.

இதன் மூலம், அங்கேயும் புரையோடிப்போன ஊழலை வெளிச்சம் போட்டுக் காட்டியிருக்கிறார் அமைச்சர் பூங்கோதை. சமூக நலத்துறை அமைச்சரின் சமூக நலம் இந்த அளவில் இருக்கிறது.

முதல்வர் கூறியதுபோல, முந்தைய உரையாடல்கள் தேசவிரோதம் இல்லை என்றே கொண்டாலும், இந்த உரையாடல் எத்தகையது? இதில் சட்ட விரோதம் எதுவும் இல்லையா? லஞ்ச வழக்கில் கையும் களவுமாக கைதானவரை விடுவிக்கக் கோருவது தான் சமூக நீதியா? இதன் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்போகிறார்? பூங்கோதை ராஜிநாமா செய்வாரா? நீக்கப்படுவாரா? அல்லது பதவி உயர்வு வழங்கப்பட்டுவிடுமா?

எந்தக் கேள்விக்கும் பதில் கிடைக்கப்போவதில்லை. தமிழக அரசு இப்போது, வெற்றி முரசு கொட்டும் மூன்றாமாண்டு தொடக்க விழாவில் முனைப்போடு இருக்கிறது. இதற்கெல்லாம் பதில் கிடைக்கும்; நியாயம் பிறக்கும் என “அசடு’ மாதிரி உட்கார்ந்து கொண்டிருக்காமல், ஒழுங்காக ஹெல்மெட் போட்டு, ஒருபோதும் மஞ்சள் கோட்டைத் தாண்டாமல், “சிக்னல்’களை மதித்து நடப்போமாக!

————————————————————————————————

பூங்கோதைக்கு சுவாமி பாராட்டு

சென்னை, மே 14: லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குநரிடம் நடத்திய தொலைபேசி உரையாடலை ஒப்புக்கொண்டு அமைச்சர் பதவியை ராஜிநாமா செய்த பூங்கோதையின் தைரியத்தைப் பாராட்டுவதாக ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார்.

பூங்கோதையை முன் மாதிரியாகக் கொண்டு மத்திய கப்பல் துறை அமைச்சர் டி.ஆர்.பாலுவும் அமைச்சர் பதவியை ராஜிநாமா செய்யவேண்டும் என புதன்கிழமை வெளியிட்ட அறிக்கையில் சுவாமி கேட்டுக் கொண்டுள்ளார்.

————————————————————————————————

பூங்கோதை ராஜிநாமா ஏற்கப்படுமா?

சென்னை, மே. 15: சமூக நலம் மற்றும் சத்துணவுத் துறை அமைச்சர் பூங்கோதையின் பதவி விலகல் கடிதம் ஏற்கப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

தன்னுடைய உறவினரை லஞ்ச ஒழிப்புக் காவல் விசாரணையில் இருந்து காப்பாற்றும் நோக்கில் அத் துறையின் தலைவர் உபாத்யாயாவிடம் தொலைபேசியில் பேசினார் என்ற தகவல் வெளியானதைத் தொடர்ந்து, அமைச்சர் பதவியில் இருந்து விலக பூங்கோதை முன்வந்துள்ளார்.

செவ்வாய்க்கிழமை மதியமே அவர் பதவி விலகல் கடிதம் தந்ததாகத் தெரிகிறது. பூங்கோதையின் பதவி விலகல் கடிதம் தொடர்பாக முதல்வர் கருணாநிதி சட்டப்பேரவையில் புதன்கிழமை தெரிவித்தார்.

ஆனால், பதவி விலகல் கடிதம் இதுவரை ஏற்கப்படவில்லை. பூங்கோதையை நீக்கக் கூடாது என்று தென் மாவட்டங்களைச் சேர்ந்த நாடார் சமூகத்தவர்கள் வலியுறுத்துகின்றனர். அதுமட்டுமின்றி முதல்வருடைய குடும்பத்துக்குள்ளேயே பூங்கோதைக்கு ஆதரவாகக் குரல்கள் எழுந்திருப்பதாகக் கூறப்படுகிறது.

பதவி விலகல் முடிவைக்கூட பூங்கோதை முன்வந்து எடுக்கவில்லை. செவ்வாய்க்கிழமை காலை பத்திரிகையில் அவருடைய பேட்டியைப் பார்த்து கோபம் அடைந்ததால், பூங்கோதையிடம் பதவி விலகல் கடிதத்தை வாங்குமாறு முதல்வர் கூறினார் என்று நம்பகமான தகவல்கள் தெரிவிக்கின்றன.

மூத்த அமைச்சர்கள் மட்டுமே வேறொரு அமைச்சரின் துறை அதிகாரிகளுடன் தேவையைப் பொருத்துப் பேசுவது வழக்கம். மூத்த அமைச்சர்களின் துறையில் தங்களுக்கு ஏதாவது வேலை நடக்க வேண்டுமானால், சம்பந்தப்பட்ட அமைச்சர்களைத்தான் இளைய அமைச்சர்கள் நாடுவது வழக்கம்.

ஆனால், முதல்முறையாக அமைச்சராகியுள்ள பூங்கோதை இந்த வழக்கத்தை மீறியது மட்டுமல்ல, முதல்வரின் கட்டுப்பாட்டில் உள்ள ஐ.பி.எஸ். அதிகாரியிடமே தொடர்பு கொண்டு பேசி, தன் உறவினருக்குச் சாதகமாக நடந்து கொள்ளுமாறு கூறியிருக்கிறார். தன்னுடைய எல்லையிலேயே பூங்கோதை தலையிட்டிருப்பதுதான் முதல்வரின் கோபத்துக்குக் காரணம் என சொல்லப்படுகிறது.

பதவி விலகல் கடிதம் பெற்று, அதையும் அறிவித்துவிட்ட நிலையில், அதை ஏற்றாக வேண்டிய நிர்பந்தத்தில் முதல்வர் இருப்பதாக மூத்த அமைச்சர்கள் சொல்கின்றனர்.

அக் கடிதத்தை ஏற்காமல் போனால், “நேர்மை தவறியதற்காக பூங்கோதை பதவி விலகியபோதிலும், அதை முதல்வர்தான் ஏற்க மறுத்துவிட்டார்’ என்றாகிவிடும். அப்படியொரு சங்கடம் ஏற்படுவதை முதல்வர் விரும்பமாட்டார் என்று அமைச்சர்கள் சிலர் கருதுகின்றனர்.

தொலைபேசி உரையாடல் எப்படி வெளியில் தெரிந்தது என்பதற்கு முக்கியத்துவம் கொடுத்து விசாரிக்க ஆணையிட்டுவிட்டு, பூங்கோதை பதவி விலகலை ஏற்காமல் போகலாம் என்று சொல்லப்பட்டாலும், விசாரணைக்கு ஆணையிட்டாலே, அமைச்சர் பதவி விலகி ஆக வேண்டும் என்ற மரபையும் பின்பற்றியாக வேண்டியிருக்கும்.

பூங்கோதையைக் காப்பாற்றுவதற்காக லஞ்ச ஒழிப்புக் காவல் துறை தலைவர் உபாத்யாயா மீது குற்றச்சாட்டு கூறிடவும் முயற்சிப்பதாகத் தெரிகிறது.

தகவல் வெளியானது எப்படி என்று விசாரிக்கத் தொடங்கினால், தவறு நடக்கக் கூடாது என்பது முக்கியமா? அல்லது நடந்த தவறு வெளியாகாமல் பார்த்துக் கொள்ள வேண்டியது முக்கியமா? என்ற கேள்வியும் எழும்.

இவர் மட்டும் பதவி விலகியது போதாது என்று அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா கூறியுள்ளார். அதிகார துஷ்பிரயோகம் செய்ததை ஒப்புக்கொண்ட மத்திய அமைச்சர் டி.ஆர். பாலு மீதும், காவல் நிலையத்தில் இருந்து கைதிகளை மீட்ட விவகாரத்தில் மாநில அமைச்சர் கே.பி.பி. சாமி மீதும் என்ன நடவடிக்கை என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

பூங்கோதையின் பதவி விலகல் ஏற்கப்படும்போது, மேற்குறிப்பிட்ட இரு கேள்விகளுக்கும் முதல்வர் பதில் தர வேண்டியிருக்கும். அவருக்கு நேரடி அரசியல் அனுபவம் இல்லை என்பது ஒரு குறை. மேல்தட்டு அணுகுமுறையுடன் நடந்து கொள்கிறார் என்பது அவருடைய கட்சியினரின் குற்றச்சாட்டாக இருந்தது.

வியாழக்கிழமை காலையில் அமைச்சரவைக் கூட்டம் நடக்க உள்ளதாகப் பரபரப்பாகப் பேசப்பட்டது. பூங்கோதை பற்றி அதில் முடிவு எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அக் கூட்டமே நடக்காமல் போய்விட்டது.

முதல்வரின் அடுத்த நடவடிக்கையைத் தமிழகம் ஆவலோடு எதிர்பார்த்துக் காத்திருக்கிறது.

Posted in DMK, Govt, India, Law, Politics, Tamil, Tamil Nadu | குறிச்சொல்லிடப்பட்டது: , , , , , , , , , , , , , , , , , , , , , , , | Leave a Comment »