Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

Posts Tagged ‘Karuna’

Nov.: Eezham vs Sri Lanka: War Updates: Foreign relations with India – News Updates

Posted by Snapjudge மேல் நவம்பர் 4, 2008


போர் நிறுத்தம் வேண்டும் என்று இலங்கை அரசுக்கு எச்சரிக்கையாகவே தெரிவிக்க வேண்டும் என்று சென்னை அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் தீர்மானம்

தமிழக முதல்வர் மு. கருணாநிதி
தமிழக முதல்வர் மு. கருணாநிதி

இலங்கையில் தொடரும் போரின் காரணமாக தமிழர்கள் பல்வேறு இன்னல்களுக்குள்ளாகிறார்கள், இந்நிலையில் இந்திய மத்திய அரசு போர் நிறுத்தம் தேவை என்பதை வெறும் வேண்டுகோளாக இல்லாமல் இலங்கை அரசுக்கு எச்சரிக்கையாகவே தெரிவிக்கவேண்டும் என்று கூறும் தீர்மானம் இன்று சென்னையில் கூடிய அனைத்துக் கட்சித்தலைவர்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது.

இத்தீர்மானத்தை பிரதமர் மன்மோகன் சிங்கிடம் நேரில் வலியுறுத்துவதெனவும் முடிவெடுக்கப்பட்டதாக, கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களிடம் முதல்வர் கருணாநிதி தெரிவித்தார்.

என்னவிதமான நடவடிக்கையினை மத்திய அரசிடம் இருந்து எதிர்பார்க்கிறீர்கள் என்ற கேள்விக்கு அவர் நேரடியாக பதிலளிக்க மறுத்துவிட்டார். எல்லாவற்றையும் விவாதிப்போம் என்று மட்டும் அவர் கூறினார்.

வேறொரு கேள்விக்கு பதிலளிக்கையில் கருணாநிதி இதுவரை இலங்கைத்தமிழர் நிதிக்கு 37 கோடி ரூபாய் இதுவரை திரண்டிருப்பதாகவும், பத்துகோடி ரூபாய்க்கான நிவாரணப் பொருட்கள் இலங்கைக்கு அனுப்பப்பட்டிருப்பதாகவும், அவையெல்லாம் முறையாகவே இலங்கைத்தமிழர்க்கு விநியோகிக்கப்படுவதாகவே தமக்கு செய்திகள் வந்திருப்பதாகவும் கூறினார்.

தமிழகத்தில் உள்ள இலங்கைத்தமிழ் அகதிகளுக்கு பல்வேறு வசதிகள் செய்துகொடுக்கப்படுவதாகவும் முதல்வர் கூறினார்.

இன்றைய கூட்டத்தினை அ இ அ தி மு க, ம தி மு க, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், மற்றும் தே மு தி க உள்ளிட்ட கட்சிகள் புறக்கணித்தன.

இதனிடையே இலங்கையில் போர் நிறுத்தம் கோரி, இன்று இந்திய கம்யூனிஸ்ட், மதிமுக, புதிய தமிழகம் உள்ளிட்ட கட்சிகள் இணைந்து மாநில அளவில் மத்திய அரசு அலுவலகங்கள் முன் மறியல் போராட்டம் நடத்தின.

இவை குறித்த மேலதிக தகவல்களை நேயர்கள் இன்றைய நிகழ்ச்சியில் கேட்கலாம்.


கிழக்கு வன்செயல்கள் குறித்து தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் மீது குற்றச்சாட்டு

கிழக்கு இலங்கையில் இலங்கை அரசுக்கு ஆதரவான ஆயுதக்குழுவாக கூறப்படும் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் அமைப்பினர் தொடர்ச்சியான கொலைகள் மற்றும் கடத்தல்களில் ஈடுபடுவதாக மனித உரிமைகள் அமைப்பான ஹியூமன் ரைட்ஸ் வாட்ச் அமைப்பு குற்றஞ்சாட்டியுள்ளது.

விடுதலைப்புலிகள் அமைப்பில் இருந்து பிரிந்துவந்து தனியாக செயற்படும் இந்த அமைப்பினர் கடந்த செப்டம்பர் மற்றும் ஒக்டோபர் மாதங்களில் 30 கொலைகள் மற்றும் 30 ஆட்கடத்தல்களில் சம்பந்தப்பட்டுள்ளதாகவும் அந்த மனித உரிமைகள் அமைப்பு குற்றஞ்சாட்டியுள்ளது.

கடத்தப்பட்டவர்களில் பெரும்பாலானோர் சிறார்களாவர்.

ஆனால், தமது பிராந்தியத்தில், கொலைகளும், ஆட்கடத்தல்களும் குறைந்துவருவதாகக் கூறுகின்ற கிழக்கு மாகாண அமைச்சரான எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் அவர்கள், அவற்றை முற்றாக தடுப்பதற்கான முயற்சிகளில் தாம் ஈடுபட்டுள்ளதாக தெரிவித்தார்.

இது குறித்த அமைச்சர் ஹிஸ்புல்லாவின் செவ்வியை நேயர்கள் இன்றைய நிகழ்ச்சியில் கேட்கலாம்.


மட்டக்களப்பில் இன்று மாத்திரம் 9 பேர் பலி

இலங்கையின் கிழக்கே மட்டக்களப்பு மாவட்டத்தில் இன்று இடம்பெற்ற வெவ்வேறு தாக்குதல் சம்பவங்களில் 9 பேர் வரை கொல்லப்பட்டதாக அங்கிருந்துவரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இன்று இரவு 7.30 மணியளவில் களுவாஞ்சிக்குடிக்கு அருகே எருவில் பகுதியில் உள்ள ஓய்வு பெற்ற கிராம அதிகாரி ஒருவரின் வீட்டுக்குள் நுழைந்த ஆயுததாரிகளினால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டில், அந்த அதிகாரியான சாமித்தம்பி திருச்செல்வம், அவரது மகன் மற்றும் தாயார் ஆகியோர் கொல்லப்பட்டுள்ளார்கள்.

மேலும் களுவாஞ்சிக்குடிப் பகுதியில் இடம்பெற்ற மற்றுமொரு துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில், சந்தைகுத்தகைதாரர் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார்.

இதேவேளை இன்று காலை எருவில் கோடைமேடு அணைக்கட்டோரம், இராணுவ மோட்டார் சைக்கிள் தொடரணி மீது நடத்தப்பட்ட கிளெமோர் தாக்குதலில் இரண்டு இராணுவ சிப்பாய்கள் கொல்லப்பட்டதாக பாதுக்காப்புத்தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தச் சம்பவத்தை அடுத்து, குறுமண்வெளி மற்றும் எருவில் பகுதியில் பாதுகாப்புத்தரப்பினரால் சுற்றிவளைப்புத்தேடுதல் நடத்தப்பட்டு பலர் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டதாக கூறப்படுகிறது.

இப்படி அழைத்துச் செல்லப்பட்டவர்களில் நூற்றுக்கு மேற்பட்டோர் களுவாஞ்சிக்குடி பொலிஸ் நிலையத்தில் தொடர்ந்தும் தடுத்து வைக்கப்பட்டிருப்பது குறித்து உறவினர்களால் தனது கவனத்துக்கு கொண்டுவரப்பட்டதாக நாடாளுமன்ற உறுப்பினர் அரியநேந்திரன் தெரிவித்துள்ளார்

இதற்கிடையே படுவான்கரையில் கரவெட்டிபகுதியில் இன்று நண்பகல் விசேட அதிரடிப்படையினரால் நடத்தப்பட்ட சுற்றிவளைப்புத்தேடுதலின் போது, அவர்களினால் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 3 இளைஞர்கள் கொல்லப்பட்டுள்ளார்கள்.

பாதுகாப்பு தரப்பினருடனான மோதலின் போது கொல்லப்பட்டதாகக்கூறப்படும் இந்த மூவரும் விடுதலைப்புலிகள் அமைப்பைச் சேர்ந்தவர்கள் என்று பாதுகாப்புத்தரப்பு கூறுகிறது.

சடலங்கள் மட்டக்களப்பு வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளன.


வட இலங்கையில் கனமழை மற்றும் வெள்ளம்

இலங்கையின் வடக்கே பெய்து வருகின்ற அடைமழை காரணமாக போரினால் இடம்பெயர்ந்துள்ளவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்திருக்கின்றனர்.

வன்னி்ப்பிரதேசத்தில் போர்ச்சூழலில் சி்க்கியுள்ள மக்களுக்கான நிவாரண உணவு விநியோக பணிகளும் மழை காரணமாகப் பாதிக்கப்பட்டிருப்பதாக அவர்கள் கூறுகின்றார்கள்.

கிளிநொச்சி மாவட்டம் கண்டாவளை பகுதிகயில் தாழ்ந்த நிலப்பிரதேசத்தில் அடைக்கலம் புகுந்திருந்த இடம்பெயர்ந்த குடும்பங்கள் தங்கியிருந்த கூடாரங்களுக்குள் மழை நீர் புகுந்துள்ளதையடுத்து, சுமார் மூவாயிரம் குடும்பங்கள் பாடசாலைகளிலும் பொது இடங்களிலும் தங்க வைக்கப்பட்டு சமைத்த உணவு வழங்கப்பட்டு வருவதாக கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் என்.வேதநாயகன் தெரிவித்தார்.

யாழ் மாவட்டத்தில் நான்கு நாட்களாகப் பெய்து வரும் கடும் மழை காரணமாக பருத்தித்துறை, காரைநகர், கரவெட்டி, சண்டிலிப்பாய் ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளில் பாதிக்கப்பட்டுள்ள 458 குடும்பங்கள் பாடசாலைகளிலும், பொது இடங்களிலும் தங்க வைக்கப்பட்டுள்ளதாக யாழ் செயலக அதிகாரிகள் தெரிவித்திருக்கின்றார்கள்.

யாழ் குடாநாட்டுப் பகுதி எங்கும் வெள்ளக்காடாகக் காட்சியளிப்பதாகவும், மழை காரணமாக இன்று பாடசாலைகளில் கல்விச் செயற்பாடுகள் பாதிக்கப்பட்டு, மாணவர்கள் வேளைக்கே வீடுகளுக்கு அனுப்பி் வைக்கப்பட்டதாகவும் அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கிழக்கில் பணிக்கு திரும்புவது குறித்து மருத்துவர்கள் ஆலோசனை

இலங்கையின் கிழக்கே அண்மையில் சிங்கள மருத்துவர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டதையடுத்து பெரும்பாலான மருத்துவர்கள் அங்கு தமக்கு பாதுகாப்பு இல்லை என்கிற காரணத்தினால் கடந்த சில தினங்களாக பணிக்கு வராமல் இருந்தனர்.

இந்நிலையில் இது குறித்து விவாதிக்க இலங்கை அரசு மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் உயர்மட்டக் கூட்டம் ஞாயிறன்று கொழும்பில் நடைபெற்றுள்ளது. அதில் சில தீர்மானங்கள் எடுக்கப்பட்டு திங்கட்கிழமையன்று சுகாதாரத் துறை செயலரை சந்திக்கவுள்ளார்கள் மருத்துவ அதிகாரிகள்.

ஞாயிறன்று நடைபெற்ற கூட்டத்தில் விவாதிக்கப்பட்ட விடயங்கள் குறித்து சங்கத்தின் பேச்சாளரான டாக்டர் சிவப்பிரியனிடம் கேட்ட போது, கூட்டத்தில் பாதுகாப்பு, விசேஷ கொடுப்பனவுகள், காப்புறுதிகள் போன்ற விடயங்கள் குறித்து தீர்மானித்து இருப்பதாகவும், இருந்தப் போதிலும் திங்கட்கிழமையன்று நடைபெறும் கூட்டத்தில் தான் இறுதி முடிவு எடுக்கப்படும் என்றும் கூறினார்.

இது குறித்த மேலதிக செய்திகளை இன்றைய நிகழ்ச்சியில் கேட்கலாம்


இலங்கையின் கிழக்கில் விவசாயிகளுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்படுவதாக புகார்

விவசாயி
விவசாயி

இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் விவசாயத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளுக்கு சில பிரதேசங்களில் இன்னமும் பாதுகாப்பு தரப்பினரால் கட்டுப்பாடுகளும் நிபந்தனைகளும் விதிக்கப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கிழக்கு மாகாணம் முழுமையாக விடுவிக்கப்பட்டதாக அரசாங்கம் அறிவித்திருந்தாலும், இப்படியான கட்டுப்பாடுகள் மற்றும் நிபந்தனைகள் காரணமாக தமது சொந்த வயல்களுக்கு சுதந்திரமாகச் சென்று தங்கியிருந்து வேளான்மைச் செய்கையில் ஈடுபடக் கூடிய சூழ்நிலை இன்னமும் ஏற்படவில்லை என பொதுவாக அப்பிரதேச விவசாயிகள் மத்தியில் கவலை வெளியிடப்பட்டுகின்றது.

குறிப்பாக மட்டக்களப்பு மாவட்டம் மாதுறு ஓயா நீர்ப்பாசனத் திட்டத்தின் கீழ் விவசாயச் செய்கையில் ஈடுபட்டுள்ள விவசாயிகளைப் பொறுத்த வரை, பிரதான வீதியிலுள்ள இராணுவ முகாமில் புகைப்படங்களுடன் விபரங்களைப் பதிந்து விசேட அனுமதிப் பத்திரம் பெற்றுக் கொள்ள வேண்டும் என்ற நடைமுறை பாதுகாப்பு தரப்பினரால் அமுல்படுத்தப்படுகின்றது.

இந் நடைமுறை காரணமாக அனுமதிப்பத்திரமின்றி வயல் நிலங்களுக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக கூறும் அப்பிரதேச விவசாயிகள், வயலில் தங்கியிருப்பது உழவு மற்றும் எரிபொருட்களை எடுத்தச் செல்வது, வேலையாட்களை அழைத்துச் செல்வது தொடர்பாகவும், பாதுகாப்பு தரப்பினரால் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடுகின்றனர்



இந்திய நிவாரணப் பொருட்கள் செஞ்சிலுவைச் சங்கத்திடம் கையளிப்பு

இந்திய உதவிப் பொருட்களை வழங்கும் இந்தியத் தூதர்
இந்திய உதவிப் பொருட்களை வழங்கும் இந்தியத் தூதர்

இலங்கை போரில் பாதிக்கப்பட்ட வன்னிப்பகுதி தமிழர்களுக்கு இந்தியாவிலிருந்து அனுப்பப்பட்ட நிவாரணப்பொருட்களை, இலங்கைக்கான இந்திய தூதர் அலோக் பிரசாத் அவர்கள், தலைநகர் கொழும்பில் வியாழக்கிழமையன்று வைபவரீதியாக கையளித்தார்.

இந்த நிகழ்வின்போது பேசிய அலோக் பிரசாத் அவர்கள், ஆயிரத்து அறுநூற்று எண்பது டன் நிவரணப்பொருட்கள் சர்வதேச செஞ்சிலுவை சங்கத்திடம் கையளிக்கப்படுவதாகக் கூறினார்.

இந்த நிவாரண பொட்டலங்களில் உலர் உணவு, உடைகள் மற்றும் சுகாதாரத்திற்கு தேவைப்படும் பொருட்கள் இருப்பதாகக் கூறிய அவர்
கூடுதலான நிவாரணப் பொருட்கள் தேவைப்பட்டால், அது பற்றி பரிசீலிக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

இந்தியாவி்ல் இருந்து அனுப்பப்பட்ட உணவுப் பொருட்கள்
இந்தியாவி்ல் இருந்து அனுப்பப்பட்ட உணவுப் பொருட்கள்

இந்த நிவாரணப்பொருட்களை பெற்றுக்கொண்ட சர்வதேச செஞ்சிலுவை சங்கத்தின் தலைவர் பால் காஸ்டெல்லா அவர்கள் இந்தியாவுக்கு நன்றி தெரிவித்தார். இப் பொருட்கள் அங்கேயுள்ள மக்களின் தேவையை ஒரளவு பூர்த்தி செய்யும் என்றும் அவர் தெரிவித்தார்.

அதேவேளை, இந்த நிவாரணப்பொருட்கள் இலங்கை அரசின் ஒத்துழைப்புடன் தான் விநியோகிக்கப்படும் என்று கூறினார் இலங்கை அரசின் அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் நாயகம் எஸ் பி திவாரட்ண அவர்கள்.


புலிகளின் முன்னரங்க நிலையை கைப்பற்றியதாகக் கூறுகிறது இராணுவம்

விடுதலைப் புலிகளின் ஒரு முன்னரங்க நிலை
விடுதலைப் புலிகளின் ஒரு முன்னரங்க நிலை

இலங்கையில் பல நாட்கள் தொடர்ந்த சண்டைகளின் பின்னர் யாழ் குடா நாட்டில், விடுதலைப்புலிகளினால் மிகவும் கடுமையாக பாதுகாக்கப்பட்ட, தூர வடக்கில் இருக்கின்ற அவர்களது நிலை ஒன்றை தாம் கைப்பற்றியயிருப்பதாக இலங்கை இராணுவம் கூறியுள்ளது.

ஆங்காங்கே பங்கர்களைக் கொண்ட 8 கிலோ மீட்டர் நீளமான மணற் சுவரை கைப்பற்றுவதற்கான இந்தச் சண்டையில், பத்து இராணுவச் சிப்பாய்களும், 50 விடுதலைப்புலிகளும் கொல்லப்பட்டதாக இராணுவத்தின் சார்பில் பேசவல்ல ஒருவர் தெரிவித்துள்ளார்.

அதே நேரம், மோதல்களால் இடம்பெயர்ந்த இரண்டரை லட்சம் மக்களுக்கான உதவிகளை இராணுவத்தினர் தடுத்ததாக சர்வதேச அபய ஸ்தாபனம் கூறிய குற்றச்சாட்டை இலங்கை அரசாங்கம் மறுத்துள்ளது.

நான்கு உதவி வாகனத்தொடரணிகள் அண்மையில் அனுப்பப்பட்டதாகவும், அதில் கடைசியாக சென்றதில், 600 தொன்கள் உணவுப்பொருட்கள் அனுப்பப்பட்டதாகவும், பிபிசிக்கான செவ்வியில், இலங்கை வெளியுறவுத்துறைச் செயலர் பாலித கோகன்ன தெரிவித்துள்ளார்.

சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் நிலைமைகளை கவனித்து வருவதாகவும், அங்கு மக்கள் பட்டினி நிலைமையயை அண்மித்துள்ளார்கள் என்பதற்கான எந்த சமிக்ஞையும் கிடையாது என்றும் அவர் கூறினார்.

சோதனைச் சாவடி: பேச்சுவார்த்தையில் ஈடுபட ஐசிஆர்சி வலியுறுத்தல்

இலங்கையில் விடுதலைப் புலிகளுக்கும் படையினருக்கும் நடைபெறும் மோதல்களின் காரணமாக, இந்த இரு தரப்பினரின் கட்டுப்பாட்டில் இருக்கும் பகுதிகளுக்கு இடையே மக்கள் கடந்து செல்ல ஏதுவாக இருக்கும் ஒரு இடம் குறித்து விவாதிக்க, ஒரு நடுநிலையான மத்தியஸ்தர் என்கிற வகையிலும் இருதரப்பினரின் நம்பிக்கையை பெற்றவர்கள் என்கிற வகையிலும் இது தொடர்பில் அவர்கள் பேசுவதற்கான ஏற்பாடுகளை தாங்கள் செய்துவருவதாக சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் கூறியுள்ளது.

இந்த இரு தரப்பாரின் கட்டுப்பாட்டில் இருக்கும் பகுதிகளுக்கு இடையே சென்று வரும் பொதுமக்கள், மருத்துவ வாகனங்கள், உணவு வண்டித் தொடர்களின் பயணம் மற்றும், மோதல்களின் காரணமாக இருதரப்பிலும் உயிரிழப்பவர்களின் உடல்களை பெற்றுக் கொள்வது போன்ற பல விடயங்கள் தொடர்பாக இரு பக்கமும் சென்று வருவதற்கு பாதுகாப்பான ஒரு வழிமுறையை கண்டறிவது அவசியமாகிறது என்றும் அந்த அமைப்பு கூறியுள்ளது.

அவ்வாறு கடந்து செல்வதற்கு ஏற்ற இடம் எது, திறந்திருக்கும் நேரம், ஒருவர் மற்றவர்களின் பகுதிகளுக்கு சென்று வருவதற்கான நடைமுறைகள் ஆகியவை குறித்து இலங்கை அரசும் விடுதலைப் புலிகளும் இணக்கப்பாடு காண வேண்டும் என்றும் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் தெரிவித்துள்ளது.

ஓமந்தை சோதனைச் சாவடி வழியாக சென்று வரும் பொதுமக்கள் மற்றும் வாகனங்களுக்கு பாதுகாப்பு உறுதிபடுத்தப்படாத வரையில் தம்மால் அங்கு பணிக்கு செல்ல இயலாது என்று அந்த அமைப்பின் தலமையகம் கூறியுள்ளது.

எனினும் ஓமந்தை சோதனைச் சாவடியில் தாங்கள் கடமையில் இல்லாவிட்டலும் இலங்கையில் நடைபெறும் மோதல்களினால் வன்னிப் பகுதியில் சிரமங்களை எதிர் கொள்ளும் மக்களுக்கு நாங்கள் அளித்து வரும் பாதுகாப்பும் உதவி நடவடிக்கைகளும் பாதிப்படையவில்லை என்றும் சர்வதேச செஞ்சிலுவை சங்கம் அறிவித்துள்ளது.


இலங்கை அரசு வன்னிப் பகுதிகளுக்கு நிவாரணம் கிடைக்காமல் தடுக்கிறது என்று அம்னெஸ்டி அமைப்பு குற்றச்சாட்டு

அம்னெஸ்டி அமைப்பின் சின்னம்
ம்னெஸ்டி அமைப்பின் சின்னம்

இலங்கையின் வடக்கே விடுதலைப்புலிகள் கட்டுப்பாட்டில் இருக்கும் வன்னிப்பிரதேசத்தில் தற்போது நடக்கும் மோதல்களால் இடம்பெயர்ந்துள்ள சுமார் 3 லட்சம் மக்களுக்கு மனித நேய நிவாரண உதவி கிடைக்காமல் தடுக்கும் கொள்கையை இலங்கை அரசு உடனடியாகக் கைவிடவேண்டும் என்றும் சர்வதேச மனித உரிமை அமைப்பான அம்னெஸ்டி இண்டர்னேஷனல் வலியுறுத்தியிருக்கிறது.

பருவ மழை தொடங்கும் நிலையில், குறைந்தது 20,000 குடும்பங்களாவது மழையிலிருந்து பாதுகாத்துக்கொள்ள உறைவிடம் இன்றி இருப்பதாக அது கூறியிருக்கிறது.

புலிகள் மீதும் கண்டனம்

இடம் பெயர்ந்த ஒரு குடும்பம்
இடம் பெயர்ந்த ஒரு குடும்பம்

வன்னிப்பகுதியில் மூன்றில் இரண்டு பங்கு பொதுமக்கள் தங்களது வீடுகளிலிருந்து இடம்பெயர்ந்து, விடுதலைப்புலிகள் கட்டுப்பாட்டுப்பிரதேசத்தில் முகாம்களில் தற்போது வாழ்ந்துவருவதாகவும், விடுதலைப்புலிகள் இம்மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேறுவதை தடுக்கும் வண்ணம் ஒரு கடுமையான அனுமதி முறையை அமல்படுத்தியிருப்பதாகவும் அம்னெஸ்டி கூறியிருக்கிறது.

விடுதலைப்புலிகளின் இந்த நடைமுறைகள், அரசு படைகளுக்கு எதிராக சிவிலியன் மக்களை ஒரு பாதுகாப்பு அரணாக வேண்டுமென்றே பயன்படுத்தும் நோக்கிலானவை போல் தோன்றுவதாக அது கூறியிருக்கிறது.

இந்திய அரசு அனுப்பியுள்ள உணவுப்பொருட்கள் அரசு சாரா நிறுவனங்களின் உதவியின்றி , உதவி மிக அதிகமாகத் தேவைப்படும் மக்களைச் சென்றடைகிறது என்று உறுதிப்படுத்த முடியாது என்று கூறும் அம்னெஸ்டி, வன்னியில் சிக்குண்டுள்ள மக்களின் தேவைகளைப் பற்றி கணிப்பீடு செய்து , அங்கு உணவு மற்றும் பிற பொருட்கள் முறையாக விநியோகிக்கப்படுகின்றன என்பதை உறுதி செய்ய, இலங்கை அரசும் , விடுதலைப்புலிகள் இயக்கமும் சர்வதேச கண்காணிப்பாளர்களை அங்கு அனுமதிக்கவேண்டும் என்று கோரியிருக்கிறது.



தமிழர் புனர்வாழ்வுக் கழக அமைப்பின் பணத்தை அரசுடமையாக்கியது இலங்கை

புலிகளுக்கு உதவுவதாக டிஆர்ஓ மீது குற்றச்சாட்டு
புலிகளுக்கு உதவுவதாக டிஆர்ஓ மீது குற்றச்சாட்டு

விடுதலைப்புலிகள் அமைப்புக்கு சார்பானதென்று குற்றஞ்சாட்டப்படும் தமிழர் புனர்வாழ்வு கழகத்தின் நிதியான சுமார் 71 மில்லியன் ரூபாய்களை பயங்கரவாத சட்டத்தின் கீழ் முடக்கிவைப்பதாக கடந்த 2006 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் அறிவித்த இலங்கை மத்திய வங்கி, அந்தநிதியை இப்போது அரசுடைமையாக்குவதாக செவ்வாய்க்கிழமை அறிவித்திருக்கிறது.

இலங்கையில் ஓர் அரச சார்பற்ற தொண்டு நிறுவனமாக இயங்கிவந்த தமிழர் புனர்வாழ்வுக் கழகம் மோதல்களினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான மனிதாபிமான பணிகளுக்கு என்று கூறி நிதி சேகரிப்பு நடவடிக்கைகளைச் சர்வதேச ரீதியாக மேற்கொண்டு வந்தது.

ஆனால் சர்வதேச ரீதியில் பல்வேறு நாடுகளில் கிளைகளை அமைத்து பாதிக்கப்பட்ட மக்களிற்கான மனிதாபிமான பணிகளுக்கு என்று கூறி பல்வேறு சர்வதேச அரசசார்பற்ற நிறுவனங்களிடமிருந்தும், நிதிஅமைப்புக்களிடமிருந்தும், தனியாரிமிருந்தும் இந்த அமைப்பு சேகரித்த பெருமளவு நிதி நாட்டில் பயங்கரவாத நடவடிக்கைகளை ஊக்கப்படுத்தவே பெரிதும் பயன்படுத்தப்பட்டுவருவதாக புலனாய்வு அறிக்கைகளை மேற்கோள் காட்டி இலங்கை மத்திய வங்கி கடந்த 2006 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் இந்த அமைப்பு இலங்கை மத்திய வங்கியில் வைத்திருந்த நிதிகளை முடக்கியிருந்தது.

அத்துடன் தடைசெய்யப்பட்ட தமிழர் புனர்வாழ்வ கழகத்துடனோ, அல்லது அதனது உறுப்பினர்களுடனோ நிதி ரீதியான தொடர்புகளிலோ அல்லது பரிமாற்றங்களிலோ ஈடுபடுவது ஒரு கிரிமினல் குற்றமாகும் என்றும் மத்திய வங்கி பொதுமக்களிற்கு எச்சரித்திருக்கிறது.


இலங்கை இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வு முயற்சிகளில் த.தே.கூட்டமைப்பையும் இணைக்க வேண்டும் என்கிறார் ரணில்

இலங்கை இனப் பிரச்சினைக்கு அரசியல் ரீதியாக தீர்வு காணப்பட வேண்டும் என்றும், அந்த முயற்சியில், தமிழ் தேசியக் கூட்டமைப்பையும் இணைத்துக் கொள்ள வேண்டும் என்றும் இலங்கை எதிர்க்கட்சித் தலைவரும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவருமான ரணில் வி்க்ரமசிங்கே அவர்கள் வலியுறுத்தியுள்ளார்.

கடந்த வாரம் இலங்கை ஜனாதிபதி இந்தியாவுக்கு விஜயம் செய்த நிலையில், மூன்று நாள் பயணமாக திங்கட்கிழமை புதுடெல்லி சென்ற ரணில் விக்ரமசிங்கே அவர்கள், இலங்கை நிலவரம் தொடர்பாக அங்கு பல்வேறு தலைவர்களைச் சந்திக்கத் திட்டமிட்டுள்ளதாகத் தெரிவித்தார்.

திங்கட்கிழமை இரவு பாஜகவின் மூத்த தலைவர்களில் ஒருவரான யஷ்வந்த் சின்ஹாவைச் சந்தித்து இலங்கை நிலவரம் குறித்து நீண்ட ஆலோசனை நடத்தினார். இன்று காலை, பாஜகவைச் சேர்ந்த முன்னாள் வெளியுறவு அமைச்சரும், மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ஜஸ்வந்த் சிங்கை சந்தித்துப் பேசினார்.

பின்னர் செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்த ரணில் விக்ரமசிங்கேவிடம், விடுதலைப் புலிகள் போர் நிறுத்தத்துக்குத் தயார் என அறிவித்திருந்தாலும், போர் நிறுத்தத்துக்கு வாய்ப்பில்லை என்று கடந்த வாரம் இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் புதுடெல்லியில் திட்டவட்டமாக அறிவித்திருப்பது பற்றி கேட்டபோது, “ஜனாதிபதி ராஜபக்ஷ அவர்களைச் சந்தித்து, இனப் பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காண்பதற்கான முயற்சிகளை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டேன். இரண்டு பிரதான கட்சிகளும், தமிழ் தேசியக் கூட்டமைப்பும் இணைந்து செயல்பட வேண்டும். ஏற்கனவே அனைத்துக் கட்சிக் குழுவில் இடம்பெற்றுள்ள முஸ்லிம் கட்சிகளுடன் ஆலோசனை நடத்த வேண்டும். ஆனால், தமிழ் தேசியக் கூட்டமைப்பையும் உள்ளே கொண்டுவர வேண்டும். அதன் பிறகு, இலங்கையில் அனைத்து சமூகத்தினரும் ஏற்றுக் கொள்ளக்கூடிய தீர்வை எட்டுவதற்கான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.
உடனடியாக கவனிக்கப்பட வேண்டிய பிரச்சினை, போரினால் இடம்பெயர்ந்த பொதுமக்களைப் பாதுகாப்பது எப்படி என்பதுதான். அவர்களுக்கு எல்லா வசதிகளும் கிடைக்க வேண்டும்’’ என்றார் ரணில் விக்ரமசிங்கே அவர்கள்.

போர் நிறுத்தத்துக்கு தற்போது வாய்ப்பு இருப்பதாக தான் எதிர்பார்க்கவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.

இந்திய வெளியுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜியைச் சந்திக்கத் திட்டமிட்டிருப்பதாகவும், பிரதமரைச் சந்திக்கும் திட்டம் எதுவும் இல்லை என்றும் இலங்கை எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்கே அவர்கள் தெரிவித்தார்.



கிழக்கு மாகாண வரவு செலவுத்திட்டம் நிறைவேற்றப்பட்டது

கிழக்கு மாகாண சபை அமர்வு
கிழக்கு மாகாண சபை அமர்வு

இலங்கையின் கிழக்கு மாகாணம் உருவாக்கப்பட்ட பின்னர், அந்த மாகாணத்துக்கான 2009 ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத்திட்டப் பிரேரணை இன்று அங்கு நிறைவேற்றப்பட்டுள்ளது.

அடுத்த வருட மாகாண செலவீனங்களுக்காக 15,000 மில்லியன் ரூபாய்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக மாகாண அமைச்சரவையின் பேச்சாளரான எம். எல். ஏ. எம். ஹிஸ்புல்லா தெரிவித்துள்ளார்.

இதற்கான பிரேரணை மாகாண முதலமைச்சரும், நிதி அமைச்சருமான சிவநேசதுரை சந்திரகாந்தனினால், சமர்ப்பிக்கப்பட்டதாகவும் அவர் கூறினார்.

அதேவேளை கிழக்கு மாகாணத்துக்கான நிதியை வரிகள் போன்றவற்றின் மூலம் திரட்டுவதற்கான நிதிச் சட்டமும் இன்று அங்கு நிறைவேற்றப்பட்டதாகவும் ஹிஸ்புல்லா தெரிவித்தார்.


மாங்குளத்தை கைப்பற்றியதாக இலங்கை இராணுவம் அறிவிப்பு

இலங்கையின் வடக்கே விடுதலைப்புலிகளின் முக்கிய நிலைகளில் ஒன்றாகக் கூறப்படும் மாங்குளம் பகுதியை தாம் கைப்பற்றியுள்ளதாக இலங்கை இராணுவத்தினர் இன்று அறிவித்துள்ளனர்.

கடந்த சனிக்கிழமை மற்றுமொரு முக்கிய பிரதேசமான பூநகரியைக் கைப்பற்றியதை அடுத்து, இன்று யாழ் குடாநாட்டை இலங்கையின் தென்பகுதியுடன் இணைக்கும் ஏ 9 பாதையில் அமைந்துள்ள மாங்குளத்தையும் இலங்கை இராணுவத்தினர் கைப்பற்றியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நேற்றைய தினம் மாங்குளம்- ஒட்டிசுட்டான் வீதியில் சில பகுதிகளை கைப்பற்றிய இலங்கை இராணுவத்தினர் இன்று மாங்குளம் நகரை முற்றாக தமது கட்டுப்பாட்டில் கொண்டுவந்ததாக இலங்கை பாதுகாப்பு அமைச்சு வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

இலங்கை இராணுவத்தளபதி சரத்பொன்சேகா
இலங்கை இராணுவத்தளபதி சரத்பொன்சேகா

இது தொடர்பாக இலங்கை இராணுவத்தளபதி சரத்பொன்சேகாவும் இலங்கையின் அரசாங்க தொலைக்காட்சியில் தோன்றி அறிவித்தார்.

மாங்குளத்துக்கு அப்பால் 10 கிலோமீட்டர் தொலைவில் உள்ள பணிக்கன்குளம் பகுதியையும் இராணுவத்தினர் இன்று கைப்பற்றியுள்ளதாகவும் இராணுவத்தளபதி அறிவித்தார்.

இந்த இராணுவ நடவடிக்கைகள் குறித்து இலங்கையின் இராணுவ ஆய்வாளர்களில் ஒருவரான பத்திரிகையாளர் இக்பால் அத்தாஸின் செவ்வியை நேயர்கள் இன்றைய நிகழ்ச்சியில் கேட்கலாம்.


மட்டக்களப்பில் சிங்கள மருத்துவ அதிகாரி கொலை

மருத்துவத்துறை ஊழியர்களின் போராட்டம்
மருத்துவத்துறை ஊழியர்களின் போராட்டம்

இலங்கையின் கிழக்கே மட்டக்களப்பு மாவட்டம் வவுணதீவு பிரதேசத்திலுள்ள நாவற்காட்டில் நேற்றிரவு சிங்கள வைத்தியரொருவரும் மற்றுமொருவரும் அடையாளம் தெரியாத ஆயுததாரிகளினால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.

வைத்தியர் சுட்டுக் கொல்லப்பட்டதையடுத்து மாவட்டத்திலுள்ள அரசாங்க வைத்தியசாலைகளில் கடமையாற்றி வந்த சிங்கள வைத்தியர்கள் அங்கிருந்து வெளியேறத் தொடங்கியதால், அங்கு வைத்திய சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

கொலையைக் கண்டித்துப் போராட்டம்
கொலையைக் கண்டித்துப் போராட்டம்

கண்டி மாவட்டம் கம்பளையைச் சேர்ந்த 26 வயதான எஸ்.டபிள்யு பாலித பத்மகுமார என்னும் மருத்துவர் அரசினர் வைத்தியசாலை வளாகத்திற்குள்ளும், அடுத்தவர் அவரது வீட்டில் வைத்தும் சுட்டுக் கொல்லப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

வைத்தியர் கொல்லப்பட்ட சம்பவத்தைக் கணடித்தும், சுகாதார மற்றும் வைத்திய சேவை ஊழியர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தக் கோரியும் மட்டக்களப்பு நகரில் இன்று குறிப்பிட்ட மருத்துவத்துறைசார்ந்த ஊழியர்களும் அதிகாரிகளும் கலந்து கொண்ட ஆர்ப்பாட்டமொன்று நடைபெற்றது.

கொலையைக் கண்டித்துப் போராட்டம்

போதனா வைத்திசாலையிலிருந்து மாத்திரம் 62 சிங்கள வைத்தியர்கள் வெளியேறுவதனால் 60 சத வீதம் அங்கு வைத்திய சேவை பாதிக்கப்பட்டுள்ளதாக அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

இந்தக் கொலை தொடர்பாக விசாரணை நடைபெற்று வருவதாகக் கூறும் பொலிசார் கொலையாளிகளோ அதற்கான பின்னணியோ இதுவரை கண்டறியப்படவில்லை என்கின்றனர்.


நிவாரணப் பொருட்கள் அடங்கிய முதல் இந்திய கப்பல் கொழும்பில்

இலங்கையின் வடப்பகுதியில் மோதலினால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக இந்தியாவில் திரட்டப்பட்ட நிவாரண பொருட்கள் அடங்கிய முதல் கப்பல் கொழும்புவிற்கு வந்தடைந்துள்ளதாக இந்திய தூதரக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சுமார் 1700 டன் எடை உள்ள இந்தப் பொருட்கள் இந்திய கப்பல் போக்குவரத்துக் கழகத்திற்கு சொந்தமான கப்பல் மூலமாக வந்துள்ளதாகவும், இந்த பொருட்களையும் இறக்கும் பணி திங்கட்கிழமை ஆரம்பிக்கும் என்றும் தூதரகத் தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன.

இந்த பொருட்கள் வன்னியில் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு இலங்கை அரசின் அணுசரனையுடன், சர்வதேச செஞ்சிலுவை சங்கத்தின் ஊடாக விநியோகிக்கப்படும் என்றும் இந்திய தூதுரக அதிகாரிகள் கூறுகிறார்கள்.

இந்த நிவாரணப் பொருட்கள் விநியோகம் தொடர்பாக நாளை திங்கட்கிழமை, இந்திய தூதரகத்தில், சர்வதேச செஞ்சிலுவை சங்க பிரதிநிதிகள் மற்றும் இந்திய அதிகாரிகளுடன் ஆலோசனை நடைபெறவிருப்பதாகவும், இலங்கை அரசின் அத்தியாவசிய சேவைகள் ஆணையர் திவாரட்ண பிபிசியிடம் தெரிவித்தார்.

மேலும் சர்வதேச செஞ்சிலுவை சங்கத்தினரின் கிடங்கில் பொருட்களை தாங்கள் இறக்குவதற்கு திட்டமிடுவதாகவும், அங்கிருந்து லாரிகள் மூலம் வவுனியாவிற்கு பொருட்கள் எடுத்து செல்லப்பட்டு, கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவுக்கு பொருட்கள் எடுத்து செல்லபடும் என்றும் அவர் கூறினார். மேலும் இந்த விநியோகம் சர்வதேச செஞ்சிலுவை சங்கத்தின் மேற்பார்வையில் நடைபெறும் என்றும் அவர் கூறினார்.


இலங்கையின் கிழக்குப் பகுதியில் இன்னமும் பாதுகாப்பு குறித்த கவலைகள் நிலவுகின்றன

இலங்கை இராணுவம்
இலங்கை இராணுவம்

இலங்கையின் கிழக்குப் பகுதியை விடுதலைப் புலிகளிடமிருந்து மீட்டுவிட்டதாக அரசு அறிவித்த பிறகு அங்கு மாகாண சபை தேர்தல்தல்கள் நடைபெற்று அங்கு ஜனநாயக முறையில் தேர்தெடுக்கப்பட்டுள்ள அரசு பதவியேற்று ஆறுமாதங்களாகின்றன.

இந்த மாகாண சபையின் முதல் வரவு செலவுத் திட்டம் எதிர்வரும் செவ்வாய்கிழமையன்று தாக்கல் செய்யப்படவுள்ளது. இந்நிலையில் அங்கு பாதுகாப்பு தொடர்பான கவலைகள் இன்னமும் தொடரவே செய்கின்றன என்று மாகாண சபை உறுப்பினர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.

இந்த ஆறு மாதகாலத்தில், கிழக்கு மாகான சபையின் நடவடிக்கைகள் எவ்வாறு இருந்துள்ளன, மாகாணத்தில் அபிவிருத்தி மற்றும் அதிகாரப் பரவலாக்கம் என்ன நிலையிலுள்ளன என்று பல்கட்சி உறுப்பினர்கள் வெளியிடும் கருத்துக்களை உள்ளடக்கி எமது மட்டக்களப்புச் செய்தியாளர் உதயகுமார் வழங்கும் செய்திக் குறிப்பினை இன்றைய நிகழ்ச்சியில் கேட்கலாம்.


இலங்கைத் தமிழர் பிரச்சினை குறித்து ஆலோசிக்க இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கூட்டம்

கம்யூனிஸ்ட்கள்
கம்யூனிஸ்ட்கள்

இலங்கைத் தமிழர் பிரச்சினையில் அடுத்த கட்டமாக தமிழகத்திலிருந்து என்ன செய்யலாம் என்பது குறித்து விவாதிக்க இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நாளை திங்கட்கிழமை சென்னையில் அனைத்துக் கட்சிகூட்டம் ஒன்றைக்கூட்டி இருக்கிறது.

தமிழக கட்சிகளின் ஒருமித்தக் கோரிக்கையான போர் நிறுத்தத்திற்கு வாய்ப்பில்லை என்று இலங்கை அதிபர் மஹிந்த ராஜபக்சே திட்டவட்டமாகக் கூறியிருக்கும் நிலையில், அடுத்த கட்டநடவடிக்கை குறித்து முடிவெடுக்கவே நாளைய கூட்டம் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநில செயலர் தா.பாண்டியன் கூறி இருக்கிறார்.

ஆனால் எத்தனை கட்சிகள் நாளைய கூட்டத்தில் கலந்துகொள்ளும் என்பது தெளிவாக இல்லை. இது குறித்து கோவையில் செய்தியாளர்கள் கேட்டபோது முதல்வர் கருணாநிதி அந்தக்கூட்டத்திற்கும் திமுகவிற்கும் தொடர்பில்லை என்று மட்டும் கூறினார்.

இதனிடையே தமிழக காங்கிரசின் முக்கிய தலைவர்களில் ஒருவரான ஜி.கே.வாசன் காங்கிரசார் ராஜீவைக் கொன்ற விடுதலைப்புலிகளை மறக்கவும் இல்லை, மன்னிக்கவும் இல்லை எனக் கூறி இருக்கிறார்.

விடுதலைப்புலிகள் மீதான தடையினை நீக்கக் கோரும் கட்சிகளை தமிழக மக்கள் நிராகரிப்பார்கள் என்றும் அவர் தெரிவித்தார்.

பூநகரியை கைப்பற்றியதாக அரசு அறிவிப்பு

இரண்டு தசாப்தங்களிற்கும் மேலாக தமிழீழ விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டிலிருந்த பிரதான நகரான பூநகரியை தமது படையினர் இன்று சனிக்கிழமை காலை கைப்பற்றியிருப்பதாக இலங்கை அரசு அறிவித்திருக்கிறது.

இது தொடர்பில் கருத்துவெளியிட்டுள்ள பாதுகாப்பமைச்சு, வடக்கில் கொழும்பு-கண்டி ஏ-9 பிரதான வழங்கற் பாதைக்கு மேற்காக மன்னாரிலிருந்து கரையோரமமக ஏ-32 பாதைவழியாக கடந்த சிலமாதங்களாக முன்னேற்ற நகர்வுகளில் ஈடுபட்டிருந்த துருப்பினர் பூநகரிக்கு தெற்குப்புறமாகவுள்ள சதுப்பு நிலங்களைத்தாண்டி வெள்ளிக்கிழமையிரவு பூநகரி-பரந்தன் பீ-69 பாதையில் நல்லூரிற்கு அடுத்துவுள்ள பிரதேசங்களை கைப்பற்றியதாகவும், அதன் பின்னர் சுமார் பீ-69 வீதியில் சுமார் 10 கிலோமீற்றர் வரை நகர்ந்த படையினர் இன்று பொழுது புலரும் முன்னரே பூநகரியின் நகர்ப்பகுதியினை படையினர் அடைந்ததாகவும் தகவல் வெளியிட்டுள்ளது.

ஆனாலும் அந்தப் பகுதியில் புலிகளின் கடுமையான எதிர்த்தாக்குதலிற்குப் படையினர் முகம் கொடுத்ததாகவும், ஆங்காங்கே உக்கிர மோதல்கள் இந்தப் பகுதியில் இன்னமும் இடம்பெற்று வருவதாகவும் தெரிவித்திருக்கிறது.

இதேவேளை, சனிக்கிழமை காலை ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ வாசஸ்தலமான அலரி மாளிகையில் இடம்பெற்ற விசேட தேசிய பாதுகாப்பு கவுன்சிலில் இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சரத் பொன்சேகா பூநகரியைப் படையினர் கைப்பற்றிய செய்தியை ஜனாதிபதியிடம் உத்தியோகபூர்வமாகத் தெரிவித்திருக்கிறார்.

இதன் பின்னர், தேசிய தொலைக்காட்சியூடாக நாட்டு மக்களிற்கு உரையாற்றிய முப்படைகளின் தளபதியும், பாதுகாப்பு அமைச்சரும், ஜனாதிபதியுமாகிய மஹிந்த ராஜபக்ஷ புலிகள் தமது ஆயுதங்களைக் கீழேவைத்துவிட்டு, தனது அரசுடன் பேச்சுக்களில் ஈடுபட முன்வரவேண்டும் என்றும் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனிடம் வேண்டுகோள் விடுப்பதாகவும் தெரிவித்தார்.

முப்படையினரிற்கும், நாட்டுமக்களிற்கும் தனது நன்றியைத் தெரிவித்துக்கொண்ட ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ புலிகள் அவ்வாறு ஆயுதங்களைக் கீழேவைத்துவிட்டு சரணடைவதே அதன் தலைவர் பிரபாகரன் தமிழ் மக்களிற்குச் செய்யக்கூடிய பாரிய சேவையாக இருக்கும் என்றும் தெரிவித்திருக்கிறார்.


ரகு கொலையில் விடுதலைப் புலிகளுக்கு தொடர்பில்லை – கிழக்கு மாகாண முதலமைச்சர்

ரகு உடலுக்கு அஞ்சலி
ரகு உடலுக்கு அஞ்சலி

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சியில் தலைவராக குறிப்பிடப்பட்டுள்ள ரகு எனப்படும் குமாரசாமி நந்தகோபனின் படுகொலைக்கும் விடுதலைப் புலிகளுக்கும் தொடர்புகள் இருப்பதாக தான் கருதவில்லை என கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தன் கூறியிருக்கின்றார்.

முதலமைச்சரின் பிரத்தியேக செயலாளராகவும் சேவையாற்றிய ரகு எனபப்டும் குமாரசாமி நந்தகோபன் வெள்ளிகிழமை கொழும்பிற்கு வெளியே ஆயுததாரிகளினால் சுட்டுக் கொல்லப்பட்டார்.இவரது பூதவுடல் சனிக்கிழமை மட்டக்களப்பு மகாஜனா கல்லூரி மண்டபத்தில் பொமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்தது.

அங்கு நடை பெற்ற இரங்கலுரையின் போது இதனை தெரிவித்த மாகாண முதலமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தன், சம்பவம் இடம்பெற்ற இடத்தை நேரில் சென்று தான் பார்வையிட்ட சமயம் அங்கு புலப்பட்ட சில விடயங்களை அடிப்படையாகக் கொண்டே இதனை தான் தெரிவிப்பதாகவும் குறிப்பிட்டார்


இலங்கை வரவுசெலவு திட்டம் நிறைவேற்றப்பட்டது

இலங்கை நாடாளுமன்றம்
இலங்கை நாடாளுமன்றம்

இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் நாடாளுமன்றில் கடந்த வாரம் சமர்ப்பிக்கப்பட்ட அவரது அரசின் நான்காவது வரவுசெலவுத் திட்டத்தின் இரண்டாவது கட்ட வாசிப்பு மீதான வாக்கெடுப்பு சனிக்கிழமையன்று 42 மேலதிக வாக்குகளுடன் நிறைவேற்றப்பட்டிருக்கிறது.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அரசின் நான்காவது வரவுசெலவுத்திட்டம் கடந்த 6ம் திகதி நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கபட்டதனையடுத்து இதன் மீதான விவாதம் கடந்த ஒருவாரகாலமாக நாடாளுமன்றத்தில் இடம்பெற்று வந்தது.

அதன் இரண்டாம் கட்ட வாசிப்பு மீதான வாக்கெடுப்பு சனிக்கிழமை மாலை இடம்பெற்றபோது, 225 உறுப்பினர்களைக் கொண்ட சபையில் இதற்கு ஆதரவாக 127 வாக்குகளும், எதிராக 85 வாக்குகளும் அளிக்கப்பட்டன.

ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக்கூட்டமைப்புடன் சேர்ந்து ஜே.வி.பியிலிருந்து பிரிந்து சென்ற விமல் வீரவன்ச தலைமையிலான தேசிய சுதந்திர முன்னணி, ஜாதிக ஹெல உறுமய, இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் இதற்கு ஆதரவாகவும், பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி, ஜே.வி.பி, மற்றும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு போன்ற கட்சிகள் இதற்கு எதிராக வாக்களித்தன.

பாராளுமன்றத்தில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவினால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள வரவுசெலவுத்திட்டத்தின்பிரகாரம் அடுத்த ஆண்டில் அரசின் உத்தேச மொத்தவருமான 855 பில்லியன் ரூபாய்களாகவும், உத்தேச மொத்தச் செலவு 1191.67 பில்லியன் ரூபாய்களாகவும், இதனால் துண்டுவிழும் தொகை 336.67 பில்லியன் ரூபாய்களாகவும் காட்டப்பட்டிருந்தது.

கடந்த அக்டோபர் முற்பகுதியில் அரசினால் பாராளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டிருந்த உத்தேச மதிப்பீட்டின்படி அடுத்த ஆண்டிற்கான உத்தேச பாதுகாப்பு செலவினங்களாக சுமார் 177.1 பில்லியன் ரூபாய்களாக காட்டப்படிருக்கிறது. கடந்தவருடம் மேற்கொள்ளப்பட்டிருந்த உத்தேச பாதுகாப்பு செலவினங்கள் 166.44 பில்லியன் ரூபாய்களுடன் ஒப்பிடும்போது இது சுமார் 7 சதவீத அதிகரிப்பாகும்.

வரவு செலவுத்திட்டத்தின் மூன்றாவது கட்ட வாசிப்பு மீதான விவாதம் மீதான வாக்கெடுப்பு எதிர்வரும் டிசம்பர் 8ம் திகதி இடம்பெறவிருக்கிறது.

முதலில் பயங்கரவாதம் ஒழிக்கப்படவேண்டும் -இலங்கை ஜனாதிபதி

இலங்கை இனப் பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காண்பதற்கு முன்னதாக, பயங்கரவாதத்தை ஒழித்துக்கட்ட வேண்டும் என்றும், விடுதலைப் புலிகளை ராணுவ நடவடிக்கைகள் மூலம்தான் ஒடுக்க வேண்டும் என்றும் இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் தெரிவித்துள்ளார்.

வியாழக்கிழமை புதுடெல்லியில் நடைபெற்ற வங்காள விரிகுடா நாடுகளுக்கிடையிலான பல்முனை தொழில்நுட்ப மற்றும் பொருளாதார ஒத்துழைப்பு மாநாட்டில் பேசும்போதும், பின்னர் செய்தியாளர்களிடம் பேசும்போதும் அவர் இந்தக் கருத்தை வெளியிட்டார்.

ஏழு நாடுகளைக் கொண்ட பிம்ஸ்டெக் எனப்படும் அந்தக் கூட்டமைப்பின் மாநாட்டில் பேசிய மஹிந்த ராஜபக்ஷ அவர்கள், “கடந்த இருபது ஆண்டுகளுக்கும் மேலாக, விடுதலைப் புலிகளின் கொடூரமான நடவடிக்கைகளால் ஜனநாயக ரீதியான வாழ்க்கை முறையில் இலங்கை கடும் சவால்களைச் சந்தித்து வருகிறது. அப்படிப்பட்ட குழுக்களை ராணுவ நடவடிக்கை மூலம்தான் கையாள வேண்டும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. அதே நேரத்தில், பயங்கரவாதிகள் தங்கள் நடவடிக்கைகளுக்கு நியாயம் சேர்ப்பதற்காக எந்த காரணத்தை அடிப்படையாகக் கூறுகிறார்களோ, அந்தப் பிரச்சினைகளை அரசியல் ரீதியாகத் தீர்க்க வேண்டும். நாங்கள் அரசியல் தீர்வு காண்பதற்கான வழியில் உறுதியாகச் சென்று கொண்டிருக்கிறோம்’’ என்றார் இலங்கை ஜனாதிபதி.

பயங்கரவாதிகளின் கடத்தல் நடவடிக்கைகளைத் தடுக்க வங்காள விரிகுடா பகுதியில் கண்காணிப்பைத் தீவிரப்படுத்த வேண்டும் என்று அவர் வேண்டுகோள் விடுத்தார்.

இருதரப்பு ஆலோசனைகள்

பிற்பகலில், மன்மோகன் சிங்கும் மஹிந்த ராஜபக்ஷ அவர்களும் இருதரப்புப் பிரச்சினைகள் தொடர்பாக தனியாக ஆலோசனை நடத்தினார்கள். சுமார் 30 நிமிடங்கள் நடந்த இந்தச் சந்திப்பின்போது, இலங்கை அரசு எடுத்துவரும் நடவடிக்கைகள் தொடர்பாக மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் விவரித்ததாகத் தெரிகிறது. அதே நேரத்தில், இந்தியத் தரப்பில் மனிதாபிமானப் பிரச்சினைகள் தொடர்பாக கவலைகள் தெரிவிக்கப்பட்டதாக அரசு வட்டாரங்கள் கூறுகின்றன. தமிழ்நாட்டில் உள்ள அரசியல் கட்சிகள் மத்திய அரசிடம் தெரிவித்த கவலைகளையும் ராஜபக்ஷ அவர்களிடம் மன்மோகன் சிங் எடுத்துரைத்ததாகத் தெரிகிறது.

இந்தச் சந்திப்பு குறித்து பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மஹிந்த ராஜபக்ஷ அவர்களிடம், போர் நிறுத்தத்துக்குத் தயார் என விடுதலைப் புலிகள் அறிவித்திருப்பது குறித்துக் கேட்டபோது, “கடந்த 20 ஆண்டுகளாக போர் நிறுத்த ஒப்பந்தங்கள் ஏற்பட்டுள்ளன. ஒவ்வொரு முறையும் விடுதலைப் புலிகள் அதைப் பயன்படுத்தி, ஆயுதங்களைக் கொள்முதல் செய்வதுடன், தங்களது ஆட்களுக்கும் பயிற்சி கொடுத்து, திருப்பித் தாக்குதல் நடத்தியிருக்கிறார்கள். பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண நாங்கள் தயார். ஆனால் அதற்கு முன்னதாக அவர்கள் தங்களது ஆயுதங்களைக் கீழே போட வேண்டும்’’ என்றார் ராஜபக்ஷ் அவர்கள்.

இந்தப் பிரச்சினைக்கு எப்படித் தீர்வு காணப் போகிறீர்கள் என்று கேட்டபோது, “ முதலில் பயங்கரவாதத்தை ஒழித்துக்கட்ட வேண்டும். அதன் பிறகு அரசியல் தீர்வு காண வேண்டும். பயங்கரவாதத்தை அடுத்த சந்ததிக்கு நாம் கொடுக்கக் கூடாது’’ என்றார் இலங்கை ஜனாதிபதி.

தமிழர்களின் பாதுகாப்பு குறித்து இந்தியப் பிரதமரிடம் உறுதி அளித்தீர்களா என்று கேட்டபோது, “பிரதமருக்கு மட்டுமல்ல, இந்த உலகத்துக்கே சொல்லிக் கொள்கிறோம். தமிழர்களை நாங்கள் பாதுகாப்போம். அவர்களுக்கு எந்தத் தீங்கும் நடக்காது. எங்கள் மக்களை நாங்கள் பாதுகாக்கிறோம். அது எனது கடமை’’ என்றார் மஹிந்த ராஜபக்ஷ அவர்கள்.

இந்திய மீனவர்கள் படகுகள் மூலம் விடுதலைப் புலிகளுக்கு ஆயுதங்களைக் கடத்துவதாக ஏற்கெனவே மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் குற்றம் சாட்டியிருந்தார். அதுபற்றி இந்தியப் பிரதமரிடம் எடுத்துக் கூறியதாகவும் தெரிவித்தார்.

தமிழக உதவிப் பொருட்கள் இலங்கை அரசு மூலமே வினியோகம்

இலங்கைத் தமிழர்களுக்கு திரைப்பட நட்சத்திரங்கள் உட்பட பலர் நிதி வழங்கியுள்ளனர்
இலங்கைத் தமிழர்களுக்கு திரைப்பட நட்சத்திரங்கள் உட்பட பலர் நிதி வழங்கியுள்ளனர்

மனிதாபிமான அடிப்படையில் இந்தியா அனுப்பும் நிவாரணப் பொருட்களை வரவேற்பதாகத் தெரிவித்த அவர், அந்தப் பொருட்கள் சர்வதேச அமைப்புக்கள் மூலம் அனுப்பப்படும் என்றும், இறுதி முனையில் இலங்கை அரசு அவற்றைப் பெற்று மக்களுக்கு விநியோகிக்கும் என்றும் கூறினார்.

இதனிடையே, தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஸ்ரீகாந்தா மற்றும் சிவாஜிலிங்கம் ஆகிய இருவரும் இன்று புதுடெல்லியில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்கள். அப்போது, விடுதலைப் புலிகளை ராணுவ நடவடிக்கை மூலம் ஒடுக்கிய பிறகு, இனப் பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காணப்படும் என இலங்கை ஜனாதிபதி பிம்ஸ்டெக் மாநாட்டில் பேசியது குறித்துக் கருத்துத் தெரிவித்த ஸ்ரீகாந்தா, “அப்படிச் சொல்வதன் மூலம் அரசியல் தீர்வு காண்பதாக இலங்கை அரசு சொல்வது பாசாங்கு, ஏமாற்று நாடகம் என்பது தெளிவாகிறது’’ என்றார்.



சம்பூர் பாதுகாப்பு வலயத்தின் எல்லைகளில் மாற்றம்

சம்பூர் பகுதி
சம்பூர் பகுதி

இலங்கையின் கிழக்கே திருகோணமலை மாவட்டம் மூதார் கிழக்கு மற்றும் சம்பூர் அதியுயுர் பாதுகாப்பு வலயங்கள் தொடர்பாக ஏற்கனவே இலங்கை ஜனாதிபதியினால் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலில் திருத்தங்களை செய்யும் வகையில் மற்றுமொரு அறிவித்தல் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

இதன் காரணமாக பாதுகாப்பு வலயங்களின் எல்லைகள் மாற்றம் செய்யப்பட்டுள்ளது

2008 ம் ஆண்டு மே மாதம் வெளியிடப்பட்ட அறிவித்தலின் படி 11 கிராம சேவையாளர்கள் பிரிவுகளிலுள்ள 25 கிராமங்கள் உள்ளடக்கப்பட்டிருந்தது.புதிய திருத்தத்தின் படி சம்பூர் கிழக்கு,சம்பூர் மேற்கு, கூனித்தீவு, கடற்கரைச்சேனை, நவரட்னபுரம் ஆகிய 5 கிராம சேவையாளர் பிரிவுகளைச் சேர்ந்த 9 கிராமங்கள் கொண்டுவரப்பட்டுள்ளது.

இந்த திருத்தமானது ஏற்கனவே மீள் குடியமர்த்தப்பட்டுள்ள யுத்த அகதிகளுக்கு ஆறுதல் அளித்தாலும் இது வரை மீளக் குடியமர்த்தப்படாத குறிப்பிட்ட பகுதிகளைச் சேர்ந்த சுமார் 1700 குடும்பங்கள் தமது இருப்பிடங்களையும் காணிக்ளையும் இழக்கச் செய்வதாக மூதூர் கிழக்கு இடம் பெயர்ந்தோர் நலன்புரிச் சங்கத்தின் தலைவரான குமாரசாமி நாகேஸ்வரன் தமிழோசையிடம் கூறினார்.

இலங்கையின் போர் நிறுத்தத்தை வலியுறுத்தி தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம்

இலங்கையில் போர் நிறுத்தம் ஏற்பட வேண்டும் எனக் கோரும் ஒரு தீர்மானம் இன்று(புதன்கிழமை) தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.

தமிழக முதல்வர் கருணாநிதி அவர்கள் முன்மொழிந்த இந்தத் தீர்மானம் சட்டமன்றத்தில் நடைபெற்ற விவாதத்துக்கு பிறகு ஏகமனதாக நிறைவேறியது.

இலங்கையின் தமிழர்கள் படும் இன்னல்களுக்கு தீர்வு காண உடனடியாக அங்கு போர் நிறுத்தம் ஏற்பட வேண்டும் என தமிழக சட்டமன்றத்தின் தீர்மானம் கூறியுள்ளது.

அங்கு ஒரு தரப்பினர் போர் நிறுத்தத்துக்கு தயார் என்று அறிவித்துள்ள நிலையில், இலங்கை அரசும் அவ்வாறான ஒரு நிலைப்பாட்டை எடுக்க வேண்டும் எனவும் அந்தத் தீர்மானம் கோரியுள்ளது.

போர் நிறுத்தம் ஏற்பட்டு பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டு இனப்பிரச்சினைக்கு தீர்வு காண இலங்கை அரசு முன்வர வேண்டும் எனவும் தமிழக சட்டமன்றத் தீர்மானம் வலியுறுத்தியுள்ளது.

இந்தியாவின் மத்திய அரசும் தனது செல்வாக்கை பயன்படுத்தி போர் நிறுத்தம் ஏற்பட உதவ வேண்டும் எனவும் தமிழக முதல்வரால் முன்மொழியப்பட்டு ஏகமனதாக நிறைவேறிய தமிழக அரசின் தீர்மானத்தில் கூறப்பட்டுள்ளது.


ஓமந்தை சோதனைச் சாவடியிலிருந்து தற்காலிகமாக ஐசிஆர்சி விலகல்

ஓமந்தை சோதனைச் சாவடி
ஓமந்தை சோதனைச் சாவடி

இலங்கையின் வடக்கே ஏ-9 சாலையில் அமைந்துள்ள ஓமந்தை சோதனைச் சாவடியில் தமது பணிகளை தற்காலிகமாக நிறுத்துவதாக சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் அறிவித்துள்ளது.

இது குறித்து பிபிசியிடம் தெரிவித்த அந்த அமைப்பின் பேச்சாளரான அலெக்ஸாண்ட்ரா மட்டியேவிச் அவர்கள் அந்தப் பகுதியில் செவ்வாய்கிழமை(11.11.08)அன்று நடைபெற்ற சில சம்பவங்களே காரணம் என்று தெரிவித்தார்.

எனினும் அவை என்ன சம்பவங்கள் என்கிற தகவலுக்குள் தாம் செல்ல விரும்பவில்லை என்றும் அவர் கூறினார்.

திங்கட்கிழமையன்று அந்தப் பகுதியில் இடம் பெற்று வரும் ஆயுத மோதல்கள் அதிகரித்தன என்றும், அதன் காரணமாக அந்த வழியாக பயணிக்கும் பொதுமக்கள் மற்றும் தமது பணியாளர்களின் பாதுகாப்பு இல்லாத நிலை தோன்றியதாலேயே இவ்வாறான ஒரு முடிவை தாங்கள் எடுக்க வேண்டி வந்தது என்றும் தெரிவித்தார்.

தாங்கள் மீண்டும் அங்கு பணிக்கு திரும்பும் முன்னதாக இலங்கையின் பாதுகாப்பு படையினர் மற்றும் விடுதலைப் புலிகள் ஆகியோரிடமிருந்து புதிய பாதுகாப்பு உத்திரவாதங்களை பெறவேண்டியுள்ளது என்றும் சர்வதேச செஞ்சிலுவைச் சங்க பேச்சாளர் அலெக்ஸாண்ட்ரா மட்டியேவிச் கூறினார்.


இலங்கையில் மனித உரிமைகள் நிலமைகள் மோசமாக உள்ளன

சுனிலா அபேசேகர
சுனிலா அபேசேகர

இலங்கையில் மனித உரிமை மீறல்கள் மிகவும் அதிகரித்து காணப்படுகின்றன என்று சர்வதேச மனித உரிமைகள் அமைப்பான ஹ்யூமன் ரைட்ஸ் வாட்சின் விருதை வென்றுள்ள சுனிலா அபேசேகர கருத்து வெளியிட்டுள்ளார்.

இது குறித்து பிபிசியின் சந்தேஷ்யவுக்கு வழங்கிய ஒரு பிரத்தியேகப் பேட்டியில், இலங்கையின் தமிழர்கள் அனைவருமே தீவிரவாதிகளாக பார்க்கப்படும் நிலை உள்ளது என்றும் தெரிவித்தார்.

இலங்கையில் நடைபெறும் மனித உரிமை மீறல் செயல்கள் பன்னாட்டு பார்வைக்கு பெரிய அளவில் வருவதில்லை என்றும், தமக்கு கிடைத்திருக்கும் விருதின் மூலமாக உலகத்துக்கு அவை தெரிய வரும் வாய்ப்பு உள்ளதாகவும் அவர் கருத்து கூறியுள்ளார்.

தாம் மட்டுமல்லாமல் இலங்கையின் நட்பு நாடாகிய ஜப்பான் போன்ற நாடுகளும், ஐக்கிய நாடுகள் அமைப்பும் கூட இது குறித்து சுட்டிக் காட்டியுள்ளார்.

மனித உரிமைகள் மீறல் தொடர்பான கருத்துக்களை வெளியிடுபவர்களையும் தீவிரவாதிகளாக வர்ணிக்கும் போக்கும் அங்கு காணக் கூடியதாக இருக்கிறது என்றும் சுனிலா அபேசேகர அவர்கள் தெரிவித்தார்.

தமிழக சட்டமன்றத்தில் இலங்கைத் தமிழர் விவகாரம்

இலங்கைத் தமிழர் நிலை குறித்து பல்வேறு கட்சித்தலைவர்களும் இன்று தமிழக சட்டமன்றத்தில் தங்கள் கவலையினைத் தெரிவித்தனர்.

ஐந்து நாள் குளிர்காலக் கூட்டத்தொடரின் இரண்டாம் நாளான இன்று, கேள்வி நேரம் முடிந்தவுடன் இலங்கைத்தமிழர் பிரச்சினை குறித்து தாங்கள் கொடுத்திருந்த கவன ஈர்ப்புத் தீர்மானங்கள் என்னவாயிற்று என்று பல தரப்புக்களிலிருந்தும் கேள்விகள் எழுந்தன.

பேரவைத்தலைவர் ஆவுடையப்பன் நேரடி பதில் எதுவும் தராததனால் அவையில் கூச்சல் அதிகரித்தது. பின்னர் முதல்வர் கருணாநிதியின் வேண்டுகோளின்பேரில் கட்சித்தலைவர்கள் சுருக்கமாக பேச அனுமதிக்கப்பட்டனர்.

விடுதலைப்புலிகள் போர் நிறுத்தத்திற்குத் தயார் என்று அறிவித்தும், இலங்கை அரசு அவ்வாறு செய்ய முன்வராமல் பொதுமக்கள் பல்வேறு இன்னல்களுக்குள்ளாகும் வண்ணம் போரைத் தொடர்கிறது, இந்நிலையில் அதனையும் போர் நிறுத்தத்திற்கு ஒப்புக்கொள்ளுமாறு மத்திய அரசுதான் மஹிந்தா அரசை நிர்ப்பந்திக்க வேண்டுமென இன்று பேசிய கட்சித்தலைவர்கள் வலியுறுத்தினர்.

காங்கிரஸைச் சேர்ந்த ஞானசேகரன் இலங்கைத்தமிழர் இன்னல்கள் களையப்படவேண்டுமென்பதில் மாற்றுக் கருத்தில்லை ஆனால், அதை ஒரு சாக்காக வைத்துக்கொண்டு, தமிழகத்தில் விடுதலைப்புலி ஆதரவாளர்கள் தங்கள் விருப்பம்போல் செயல்பட அனுமதிக்கப்படக் கூடாதென்றார்.

முதலமைச்சர் கருத்தெதுவும் தெரிவிக்கவில்லை. இலங்கைப் பிரச்சினை குறித்த தீர்மானம் எப்போது விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படும் என பேரவைத்தலைவர் தெரிவிக்கவில்லை.


தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் அலுவலகத்தின் மீது தாக்குதல்

மட்டக்களப்பு மாவட்டத்தில் மங்கிகட்டு என்னும் இடத்தில் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகளின் அலுவலகம் ஒன்றில் நேற்று இடம்பெற்ற மோதலில், இருவர் கொல்லப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றார்கள்.

அந்த அலுவலகத்தில் இருந்த 4 பேர் ஏனையவர்கள் மீது தாக்குதல் நடத்திவிட்டுச் சென்றுள்ளதாக பொலிஸ் சார்பில் பேசவல்ல ஒரு அதிகாரி தெரிவித்துள்ளார்.

ஆனால், விடுதலைப்புலிகளினாலேயே இந்தத்தாக்குதல் நடத்தப்பட்டதாக தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவரான நாடாளுமன்ற உறுப்பினர் கருணா என்ற விநாயகமூர்த்தி முரளிதரன் கூறியுள்ளார்.

இந்த அலுவலகத்தின் மீது தாம் தாக்குதல் நடத்தியதாக உறுதிப்படுத்தியுள்ள விடுதலைப்புலிகள், சில ஆயுதங்களும் அங்கிருந்து மீட்கப்பட்டதாக தெரிவித்துள்ளனர்.

இவைகுறித்த மேலதிக தகவல்களை நேயர்கள் இன்றைய நிகழ்ச்சியில் கேட்கலாம்.


போர் நிறுத்தம் இல்லை என்கிறது இலங்கை அரசு

இலங்கை அமைச்சர் மைத்ரிபால சிறிசேன, விடுதலைப்புலிகள் தமது ஆயுதங்களைக் கையளிக்கும் வரையில் அந்த இயக்கத்துடன் தொடர்பு வைத்துக்கொள்ளபோவதில்லை, போர் நிறுத்தமும் செய்துகொள்ளப்போவதில்லை என்று நாடாளுமன்றத்தில் கூறியிருக்கிறார்.

ஜேவிபியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் இன்று வரவு செலவுத்திட்ட விவாதத்தின் போது, விடுதலைப்புலிகளின் அரசியல்துறைப்பொறுப்பாளர் நடேசன் தமது அமைப்பு யுத்த நிறுத்தத்துக்கு தயாராக இருப்பதாக கூறியிருப்பது குறித்து கேள்வியெழுப்பிய போதே, மூத்த அமைச்சரும் சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் செயலருமாகிய மைத்திரிபால சிறிசேன மேற்கண்டவாறு கூறியிருக்கிறார்.

அதேவேளை தமிழக முதல்வர் கருணாநிதி அவர்கள், விடுதலைப்புலிகள் போர் நிறுத்தத்துக்கு தயார் என்று கூறியிருக்கும் நிலையில், இலங்கை அரசும் போர் நிறுத்தத்துக்கு வருமாறு அழுத்தம் கொடுக்கும் முயற்சிகளை இந்திய அரசு மேற்கொள்ளவேண்டும் என்று கோரியிருக்கிறார்.

இவை குறித்த மேலதிக தகவல்களை நேயர்கள் இன்றைய நிகழ்ச்சியில் கேட்கலாம்.


கிராஞ்சி பகுதியை கைப்பற்றியதாக இலங்கை இராணுவம் அறிவிப்பு

இலங்கை இராணுவத்தினர்
இலங்கை இராணுவத்தினர்

இலங்கையின் வடக்கே கிளிநொச்சி மாவட்டத்தின் மேற்குக் கரையோரப்பகுதியில் உள்ள கிராஞ்சி என்ற முக்கிய இடத்தை இலங்கை இராணுவத்தினர் இன்று விடுதலைப் புலிகளிடமிருந்து கைப்பற்றியிருப்பதாகப் இலங்கை பாதுகாப்பு அமைச்சகம் கூறியிருக்கின்றது.

கடும் சண்டைகளின் பின்னர் இந்தப் பகுதி வெற்றிகொள்ளப்பட்டுள்ளதாகவும் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்திருக்கின்றது. எனினும் இது குறித்து விடுதலைப்புலிகளிடமிருந்து உடனடியாகத் தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.

இதேவேளை, கிளிநொச்சி அக்கராயன்குளம் பகுதியில் இடம்பெற்ற சண்டைகளின்போது கொல்லப்பட்ட விடுதலைப் புலிகளின் 7 சடலங்கள் இன்று வவுனியா வைத்தியசாலையில் வைத்து சர்வதேச செஞ்சிலுவைக் குழுவினரிடம் கையளிக்கப்பட்டுள்ளதாக வவுனியா பொலிசார் தெரிவித்துள்ளனர். இந்தச் சடலங்கள் உடனடியாகவே ஓமந்தை சோதனைச்சாவடி ஊடாக விடுதலைப் புலிகளிடம் ஒப்படைப்பதற்காகக் கொண்டு செல்லப்பட்டதாக செஞ்சிலுவைக்குழு வட்டாரங்கள் தெரிவித்தன.

இதனிடையில் வன்னிப்பிரதேசத்தில் யுத்தச் சூழல் காரணமாக இடம்பெயர்ந்துள்ள மக்களுக்கு விநியோகிப்பதற்காக 47 ட்ரக் வண்டிகளில் அத்தியாவசிய உணவுப் பொருட்கள் இன்று எடுத்துச் செல்லப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இவற்றில் உலக உணவுத் திட்டத்தின் ட்ரக் வண்டிகள் கூடுதலாக இடம்பெற்றிருந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இந்திய உதவிப்பொருட்கள் இந்த வாரத்தில் இலங்கை வருகை

இலங்கையின் வன்னிப்பகுதியில் தற்போது ஏற்பட்டுள்ள மோதல்கள் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள தமிழ் சிவிலியன்களுக்கு இந்தியாவினால் அனுப்பப்படவுள்ள நிவாரண உதவிப்பொருட்கள் இவ்வாரமளவில் இலங்கை வரவிருப்பதாகவும், அவை சர்வதேச செஞ்சிலுவைக் குழுவினூடாக பாதிக்கப்பட்ட மக்களிற்கு பகிர்ந்தளிக்கப்படவிருப்பதாகவும் இலங்கைக்கான இந்தியத்தூதரக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்திய நிவாரணப்பொருட்களில் சுமார் 1000 டன்களை ஏற்றிய முதலாவது கப்பல் இவ்வாரம் கொழும்பு வரவிருப்பதாகவும் அவை இலங்கை அரசின் ஒத்துழைப்புடன் சர்வதேச செஞ்சிலுவைக் குழுவினூடாக பாதிக்கப்பட்ட வன்னிப்பகுதி மக்களிற்கு விநியோகிக்கப்பட ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அந்த இராஜதந்திர வட்டாரங்கள் தெரிவித்தன.

இதேவேளை இந்த நிவாரப்பொருட்கள் அனுப்பப்படுவது குறித்து மேலதிக தகவல்களைப் பெறுவதற்காக கடந்த வாரம் தமிழ் நாடு சென்ற இலங்கை சர்வதேச செஞ்சிலுவைக் குழு அதிகாரியொருவர் இவை பாதிக்கப்பட்ட மக்களின் தேவைகளையும், பாரம்பரியங்களையும் பிரதிபலிப்பதாகவும், நல்ல நிலையிலுள்ள இந்தப் பொருட்கள் சர்வதேச நியமங்களிற்கு அமைவாக இருப்பதாகவும், அதன் ஊடக அதிகாரி சரசி விஜேரட்ண பி.பி.சி தமிழோசையிடம் தெரிவித்தார்.


கருணா அமைப்பினர் பொலிஸ் மற்றும் சிவில் பாதுகாப்பு படைகளில் இணைவதற்கு மாறுப்பட்ட கருத்துக்கள்

த.ம.வி.பு தலைவர் கருணா
த.ம.வி.பு தலைவர் கருணா

தனது அமைப்பைச் சேர்ந்த உறுப்பினர்கள் இலங்கையின் பொலிஸ் மற்றும் சிவில் பாதுகாப்பு படைகளில் இணைக்கப்படுவார்கள் என்று தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவரான நாடாளுமன்ற உறுப்பினர் கருணா தெரிவித்திருந்தார்.

இது தொடர்பில் தான் ஏற்கனவே பேச்சுவார்த்தைகளை நடத்தி வருவதாகவும் அவர் பிபிசி சிங்கள சேவையிடம் தெரிவித்திருந்தார்.

ஆனால், முன்னர் விடுதலைப்புலிகள் அமைப்பில் இருந்து பிரிந்துவந்த தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் அமைப்பின் உறுப்பினர்களை அரசாங்க பொலிஸ் படையில் சேர்ப்பது குறித்து பல்வேறுபட்ட அரசியல் கட்சிகளின் உறுப்பினர்கள் மற்றும் ஏனையோர் மத்தியில் இருந்து மாறுபட்ட கருத்துக்கள் வெளியிடப்பட்டுள்ளன.

இவை குறித்து இன்றைய நிகழ்ச்சியில் கேட்கலாம்.


இலங்கையின் வடக்கே தொடரும் மோதல்

இலங்கை இராணுவத்தினர்
இலங்கை இராணுவத்தினர்

இலங்கையின் வன்னி போர்முனைகளில் கிளிநொச்சிக்கு மேற்கே உள்ள அக்கராயன்குளம் பகுதியை முழுமையாகக் கைப்பற்றியுள்ள படையினர் மேற்குக் கரையோரப் பகுதியாகிய பூனகரியை நோக்கி முன்னேறி வருவதாகப் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்திருக்கின்றது. இதேவேளை கிளிநொச்சி நகருக்குத் தெற்கில் உள்ள பாரதிபுரம் மற்றும் கிழக்கில் உள்ள களமுனைகளிலும் இராணுவத்தினர் விடுதலைப் புலிகளுக்கு எதிரான தாக்குதல்களில் ஈடுபட்டிருப்பதாகவும் பாதுகாப்பு அமைச்சகம் கூறியிருக்கின்றது.

எனினும் இதுபற்றி விடுதலைப் புலிகள் தரப்பிலிருந்து உடனடியாகத் தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.

இதற்கிடையே, வடக்கே வவுனியா தோணிக்கல் பகுதியில் சனிக்கிழமை இரவு இடம்பெற்ற குண்டுவெடிப்பு சம்பவம் ஒன்றில் இளைஞன் ஒருவர் கொல்லப்பட்டுள்ளதாக வவுனியா பொலிசார் தெரிவித்திருக்கின்றனர்.

சனிக்கிழமை இரவு 10 மணியளவில் தனியார் கல்வி நிலையம் ஒன்றில் குண்டு ஒன்றைப் பொருத்திக்கொண்டிருந்த போதே இந்த குண்’டு வெடிப்புச்சம்பவம் நிகழ்ந்துள்ளதாகவும் இதில் கொல்லப்பட்டவர் வவுனியாவில் உள்ள அரச திணைக்களத்தி்ன் சாரதியாகப் பணியாற்றிய ஒருவர் என்றும், இவர் அண்மையில் முல்லைத்தீவு பகுதியில் இருந்து இங்கு இடம் மாற்றம் பெற்று வந்ததாகவும் பொலிசாரின் ஆரம்ப விசாரணைகளில் தெரியவந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதே நேரம் ஞாயிற்றுக்கிழமை மதியம் பரந்தன் பகுதியில் நடைபெற்ற வான் தாக்குதலில் ஐந்து சிவிலியன்கள் காயமடைந்து தர்மபுரம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.


வகுப்பறையில் இயங்கும் மருத்துவமனைகள்

இலங்கையின் வடக்கே விடுதலைப்புலிகளின் கட்டு்ப்பாட்டுப் பிரதேசத்தில் இடம்பெயர்ந்துள்ள மக்களுக்கான வைத்திய சேவைகளை ஆற்றி வருகின்ற மருத்துவ மனைகள் பாடசாலை கட்டிடங்களிலேயே இயங்கி வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

வகுப்பறைகள் நோயாளர்களின் விடுதிகளாக மாற்றப்பட்டிருக்கின்றன. இவற்றில் கல்வி கற்ற மாணவர்களுக்கு பாடசாலைக்கு அருகிலேயே அதிகாரிகள் கொட்டில்களில் வகுப்பறைகளை அமைத்திருப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

தர்மபுரம், விசுவமடு ஆகிய இடங்களி்ல் உள்ள பாடசாலை வளவுகளில் பாடசாலைகளும் மருத்துவமனைகளும் இணைந்து செயற்பட்டு வருகின்றன. இவற்றிற்குத் தனித்தனியான நுழைவாயில்கள் அமைக்கப்பட்டு, பாடசாலை சமூகத்துடன் இணைந்து இரண்டு நிறுவனங்களையும் அதிகாரிகள் முடிந்த அளவில் சிறப்பாகச் செயற்படுத்தி வருவதாக கிளிநொச்சி பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பளார் டாக்டர் ரீ.சத்தியமூர்த்தி தெரிவிக்கின்றார்.

இதுபற்றிய மேலதிக விபரங்களடங்கிய வவுனியா செய்தியாளர் பி. மாணிக்கவாசகம் அவர்களின் செய்திப்பெட்டகத்தை நேயர்கள் இன்றைய நிகழ்ச்சியில் கேட்கலாம்.



அக்கராயன்குளத்தை பிடித்துவிட்டதாக இராணுவம் அறிவிப்பு

வெப் ஜெனரல் சரத் பொன்சேகா
வெப் ஜெனரல் சரத் பொன்சேகா

கிளிநொச்சி நகருக்கு மேற்கே உள்ள விடுதலைப் புலிகளின் முக்கிய தளமாகிய அக்கராயன்குளம் பகுதியை முழுமையாக இராணுவம் கைப்பற்றியிருப்பதாக பாதுகாப்பு அமைச்சகம் அறிவித்திருக்கின்றது.

மேலும் இலங்கையின் வடக்கே மாங்குளம் பகுதியில் புதிதாக தரையிறக்கப்பட்டுள்ள இராணுவ அணி, அங்கிருந்து ஏ9 வீதியை நோக்கி முன்னேறுவதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டிருப்பதாகவும், இந்த முயற்சியின்போது பனிக்கன்குளம் பகுதியில் இராணுவத்தினருக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் நேற்று பல மணித்தியாலங்கள் உக்கிர சண்டைகள் நடைபெற்றதாகவும் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்திருக்கின்றது.

இந்தச் சண்டைகளின் பின்னர் படையினர் நடத்திய தேடுதலின்போது மோதல்களில் கொல்லப்பட்ட விடுதலைப் புலிகளின் 7 சடலங்கள் இராணுவத்தி்னரால் கைப்பற்றப்பட்டிருப்பதாகவும் பாதுகாப்பு அமைச்சகம் கூறியிருக்கின்றது.

எனினும் வியாழக்கிழமையன்று பனிக்கங்குளம் சண்டைகள் பற்றியோ, அக்கராயன்குளம் பகுதி படையினர் வசமாகியுள்ளது பற்றியோ விடுதலைப் புலிகள் தரப்பிலிருந்து உடனடியாகத் தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.

இதற்கிடையில், வவுனியாவுக்கு வெள்ளிக்கிழமை காலை விஜயம் செய்த இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் சரத் பொன்சேகா வன்னிக்கள முனைகளின் தற்போதைய நிலைமைகள் குறித்து வன்னிப்பிராந்திய ஆயுதப்படைகளின் தளபதி மேஜர் ஜெனரல் ஜகத் ஜயசூரியவுடனும், முக்கிய களமுனைத் தளபதிகளுடனும் விரிவாகக் கலந்துரையாடியிருப்பதாகவும் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்திருக்கின்றது



முல்லைத் தீவில் மருத்துவ உதவிப் பொருள் தட்டுப்பாடு

இலங்கையின் வடக்கே இராணுவத்திற்கும் வி்டுதலைப் புலிகளுக்கும் இடையில் கடும் சண்டைகள் நடைபெற்று வருகின்ற வன்னிப்பிரதேசத்தில் யுத்தச்சூழலில் சிக்கியுள்ள மக்களுக்குரிய அத்தியாவசிய உணவுப் பொருட்கள் அனுப்பிவைக்கப்பட்டு வருகின்றபோதிலும், அப்பிரதேசத்தில் உள்ள வைத்தியசாலைகளுக்கு உரிய மருந்துப்பொருட்கள், எரிபொருள் என்பன போதிய அளவில் இன்னும் சென்றடையவில்லை எனக் கூறப்படுகின்றது.

முல்லைத்தீவு மாவட்டத்திற்கு வவுனியாவில் இருந்து 2 லொறிகளில் அனுப்பிவைக்கப்பட்ட மருந்துப் பொருட்கள் ஓமந்தை சோதனைச்சாவடியிலிருந்து திருப்பி அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக அந்த மாவட்டத்தின் பதில் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளரும், தொற்றுநோய்த்தடுப்பு அதிகாரியுமாகிய டாக்டர் ஒஸ்மான் சாள்ஸ் அவர்கள் கூறுகின்றார்.

முல்லைத்தீவு மாவட்டப் பொது வைத்தியசாலையுடன், புதுக்குடியிருப்பு, மூங்கிலாறு ஆகிய இடங்களில் 2 பிரதேச வைத்தியசாலைகளும், அத்துடன் மேலும் 5 சிறிய வைத்தியசாலைகளும் பற்றாக்குறைகள், சிரமங்களுக்கு மத்தியிலேயே இயங்கிவருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

அந்த மாவட்டத்தில் நிலவுகின்ற எரிபொருள் பற்றாக்குறை காரணமாக இந்த வைத்தியசாலைகளின் உள்நோயாளர்களுக்கான விடுதிகளில் இரவில் சில மணித்தியாலங்கள் மாத்திரமே மின்சார வெளிச்சம் வழங்கப்படுவதாகவும், அதன் பின்னர் அரிக்கன் விளக்குகள் மற்றும் மெழுகுவர்த்தி வெளிச்சத்திலேயே வைத்திய சேவைகள் இடம்பெறுவதாகவும் டாக்டர் சாள்ஸ் தெரிவிக்கின்றார்.


‘இலங்கைக்கான இந்திய உதவிப் பொருட்கள் தூதரகம் மூலமாக சர்வதேச உதவி அமைப்புகளிடம் வழங்கப்படும்’

இலங்கைத் தமிழர்களுக்கு வழங்கப்படும் நிவாரணப் பொருட்கள் அனைத்தையும், கொழும்பிலுள்ள இந்தியத் தூதுர்தான் பெற்றுக்கொள்வார் என்று இந்திய அரசு கூறியுள்ளதாக தமிழக அரசு தெரிவிக்கிறது.

இந்த நிவாரணப் பொருட்கள் கொழும்பு சென்றடைந்த பிறகு சர்வதேச செஞ்சிலுவை சங்கம் மற்றும் ஐக்கிய நாடுகளின் அமைப்புகள் மூலம் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு வழங்கப்படும் என்று இந்திய வெளியுறவுச் செயலரின் கடிதத்தில் தெளிவுபடுத்தப்பட்டுள்ளதாக தமிழக அரசு கூறியுள்ளது.

இது தொடர்பில் தமிழ்நாட்டில் எழுந்த ஐயங்கள் காரணமாக இந்தியப் பிரதமரிடம் விளக்கம் கேட்டு தமிழக முதல்வர் திங்கட்கிழமையன்று எழுதிய கடிதத்துக்கு பதிலாக, இந்திய வெளியுறவு அமைச்சக செயலரிடமிருந்து தமிழக அரசின் தலைமைச் செயலருக்கு வந்துள்ள கடிதத்தில் இந்தத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது என்று தமிழக அரசின் செய்திக் குறிப்பு கூறுகிறது.


‘இலங்கையின் வடக்கே கடற்புலித் தளங்கள் மீது விமானப் படையினர் குண்டுவீச்சு’

இலங்கையின் வடக்கே யாழ் குடாநாட்டின் கிழக்குப் பகுதியில் உள்ள வெற்றிலைக்கேணியிலும், கட்டைக்காடு பகுதியிலும் அமைந்திருந்த விடுதலைப் புலிகளின் இரண்டு கடற்புலித் தளங்கள் மீது விமானப்படையினர் குண்டுவீசி அழித்துள்ளதாகப் பாதுகாப்பு அமைச்சகம் கூறியிருக்கின்றது.

புலனாய்வுத் தகவல்களின் அடிப்படையில் இந்த இலக்குகள் மீது சரியான தாக்குதல்கள் நடத்தப்பட்டதாகவும் கட்டைக்காடு தளம் மீதான தாக்குதலையடுத்து, அது தீப்பற்றி எரிந்ததாகவும் விமானப்படைப் பேச்சாளர் விங் கமாண்டர் ஜானக்க நாணயக்கார தெரிவித்திருக்கின்றார்.

இதற்கிடையில் மாங்குளம் பகுதியில் விடுதலைப் புலிகளுக்கு எதிரான தாக்குதல்களில், மேலும் ஒரு புதிய இராணுவ தாக்குதல் அணியொன்று களமிறக்கப்பட்டிருப்பதாகவும், இந்த அணிக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையி்ல் வன்னிவிளாங்குளம் பகுதியில் மோதல்கள் இடம்பெற்றதாகவும் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்திருக்கின்றது.

தொண்டமான்நகர், புதுமுறிப்பு, செல்வாநகர் உட்பட்ட பிரதேசங்கள் மீது இராணுவத்தினர் எறிகணை தாக்குதல்களை நடத்தியதாகவும், இதனால், 16 வீடுகளும், 18 கடைகளும் அழிவுக்குள்ளாகியிருப்பதாகவும் விடுதலைப் புலிகள் தெரிவித்திருக்கின்றனர்.


டி.எம்.வி.பி. உட்கட்சி முரண்பாடுகள் தீவிரமடைகின்றன

இலங்கையிலே தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் அமைப்பிற்குள் பிள்ளையான் அணியினருக்கும் கருணா அணியினருக்கும் இடையில் உட்கட்சி விரிசல்களும் முரண்பாடுகளும் முற்றிவருவதாகத் தெரிகிறது.

அக்கட்சியின் மாகாண சபை உறுப்பினரான பிரதீப் மாஸ்டர், தனது அரசியல் அலுவலகத்தை கருணா ஆதரவாளர்கள் தாக்கியுள்ளதாக குற்றம்சாட்டியுள்ளார்.

கருணா ஆதரவாளரான எறாவூர் பிரதேச சபை உறுப்பினர் அன்புமணி தலைமையில் வந்த ஆயுததாரிகளே தனது அலுவலகத்தைத் தாக்கி அங்கிருந்தவர்களை விரட்டியடித்ததாக அவர் தெரிவித்தார்.

ஆனால் கருணாவின் உத்தரவின் பேரில் அன்புமணி தலைமையில் சென்றவர்கள் அவ்வலுவலகத்தில் ஒழுக்காற்று நடவடிக்கையைதான் மேற்கொண்டிருந்தனர் என்று அம்பாறை மாவட்ட டி.எம்.வி.பி. பொறுப்பாளர் இனியபாரதி தெரிவித்துள்ளார்.

பிரதீப் மாஸ்டர் மற்றும் இனியபாரதி ஆகியோரின் செவ்விகளை நேயர்கள் செய்தியரங்கத்தில் கேட்கலாம்.


Posted in Politics, Tamil | குறிச்சொல்லிடப்பட்டது: , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | Leave a Comment »

Attack on UNP Headquarters in Anuradhapura Sri Lanka takes the Life Of Major General Janaka Perera, his Wife & 26 Others – Tamil Tiger rebel commander TMVP Karuna in parliament, JVP going to Court

Posted by Snapjudge மேல் ஒக்ரோபர் 7, 2008

அநுராதபுரத்தில் தற்கொலை குண்டுத் தாக்குதல்; முன்னாள் இராணுவ அதிகாரி ஜானக்க பெரேரா உட்பட 28 பேர் பலி

இலங்கையின் வடமத்திய மாகாணத் தலைநகராகிய அநுராதபுரத்தில் திங்களன்று காலை இடம்பெற்ற நாட்டின் முக்கிய எதிர்க்கட்சியாகிய ஐக்கிய தேசியக் கட்சியின் அலுவலகத் திறப்பு விழா வைபவம் ஒன்றில் நடத்தப்பட்ட தற்கொலை குண்டுத் தாக்குதலில் மாகாண மட்டத்திலான முக்கிய அரசியல்வாதிகள் 3 பேர் உட்பட 28 பேர் கொல்லப்பட்டிருக்கிறார்கள்.

வடமத்திய மாகாண சபையின் புதிய எதிர்க்கட்சித் தலைவராகிய முன்னாள் இராணுவ அதிகாரியாகிய மேஜர் ஜெனரல் ஜானக்க பெரேராவும் அவரது மனைவியாரும், மேலும் இரண்டு மாகாண சபை உறுப்பினர்களும் இந்தத் தாக்குதலில் கொல்லப்பட்டிருப்பதாக அநுராதபுரம் பொலிசார் தெரிவித்திருக்கின்றனர்.

இந்தச் சம்பவத்தில் தொலைக்காட்சி நிலையம் ஒன்றின் உள்ளுர் செய்தியாளராகிய ரஷ்மி மஃறூப் அவர்களும் கொல்லப்பட்டிருப்பதாக அறிவிக்கப்பட்டிருக்கின்றது.

மேலும் 84 பேர் இந்தச் சம்பவத்தில் காயமடைந்திருக்கின்றார்கள். காயமடைந்தவர்கள் அநுராதபுரம் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும், அவர்களில் 15 பேர் தீவிர சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டிருப்பதாகவும் அநுராதபுரம் மருத்துவமனை பணிப்பாளர் தெரிவித்திருக்கின்றார்.

ஜானக்க பெரேரா

வடமத்திய மாகாண சபையின் புதிய எதிர்க்கட்சித் தலைவராகிய மேஜர் ஜெனரல் ஜானக்க பெரேரா அவர்களுக்கான புதிய அலுவலகத் திறப்பு விழா நடைபெற்று முடிந்து, முக்கியஸ்தர்கள் ஒன்றுகூடி பேசிக்கொண்டிருந்தபோது அங்கு அவசர அவசரமாகக் கூட்டத்தினுட்புகுந்து வந்துசேர்ந்த தற்கொலைக் கொலையாளியே இந்தக் குண்டுத் தாக்குதலை நடத்தியிருப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இந்தத் தாக்குதலை விடுதலைப் புலிகளே நடத்தியிருப்பதாகப் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்திருக்கின்றது. எனினும் இது குறித்து விடுதலைப் புலிகள் தரப்பிலிருந்து தகவல்கள் எதுவும் உடனடியாக வெளியாகவில்லை.


இலங்கை தமிழர்கள் பாதிப்புகுள்ளாவது குறித்து இந்திய அரசு கரிசனை

இலங்கையின் வடபகுதியில் இடம்பெறும் தற்போதைய மோதல்களில் தமிழ் பொதுமக்கள் பலியாவது அதிகரித்துவருவதாக விபரித்து, அது தொடர்பாக புதுதில்லிக்கான இலங்கை துணைத் தூதரை அழைத்து, அவை தொடர்பிலான தமது கரிசனைகளை இந்தியா வெளியிட்டுள்ளது.

இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே.நாரயணனுக்கும், இலங்கை இராஜதந்திரியான பாலித கனேகொடவுக்கும் இடையிலான இந்தச் சந்திப்பில், இலங்கை பெரிய அளவில் சுயகட்டுப்பாட்டைக் கடைப்பிடிக்க வேண்டும் என்றும், சிறுபான்மை தமிழ் மக்களிடையே அதிகரித்துவரும் பாதுகாப்பற்ற உணர்வுகளைப் போக்க முயற்சி செய்ய வேண்டும் என்றும் கேட்கப்பட்டதாக அதிகாரபூர்வ அறிக்கை ஒன்று கூறுகின்றது.

வடக்கில் தற்போது நடக்கும் இலங்கை படையினருக்கும், விடுதலைப் புலிகளுக்கும் இடையிலான மோதல்களில் இரண்டு லட்சத்துக்கும் அதிகமான மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர்.

இரு நாடுகளையும் பிரிக்கும் பாக்குநீரிணை பகுதியில், இலங்கை கடற்படையினர் என்று கூறப்படுபவர்களால், இந்திய மீனவர்கள் மீது நடத்தப்படும் தாக்குதல்கள் தொடர்வதாகவும் இந்திய அதிகாரிகள் கடுமையான கவலையை வெளியிட்டுள்ளனர்.

இவ்விவகாரம் குறித்து தெற்காசிய அரசியல் விவகார ஆய்வாளரான ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகப் பேராசிரியர் சஹாதேவன் வழங்கும் ஆய்வுக் செவ்வியை நேயர்கள் கேட்கலாம்.

பிரதமருடன் தமிழக முதல்வர் தொலைபேசி உரையாடல்

முன்னதாக, தமிழக முதல்வர் கருணாநிதி இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கை தொலைபேசியில் தொடர்புகொண்டு இலங்கைத் தமிழர் பாதிக்கப்பட்டுவருவது குறித்து இந்திய அரசு இலங்கைத் தூதரை அழைத்து தனது கவலையையும் கண்டனத்தையும் வெளிப்படுத்த வேண்டும் என்று கோரியிருந்தார்.

இலங்கை இனப்பிரச்சினையில் இந்தியா தலையிட்டு போர்நிறுத்தத்தை வலியுறுத்த வேண்டுமென்று கோரி தமிழக மக்கள் இந்தியப் பிரதமருக்கு தந்தி அனுப்ப வேண்டுமென கருணாநிதி ஞாயிறன்று அறிக்கை வெளியிட்டிருந்தார்.

ஞாயிறன்றைய அறிக்கையிலும் திங்களன்றைய தொலைபேசி உரையாடலிலும் இலங்கையில் நடப்பதை ‘இனப்படுகொலை’ என்று கருணாநிதி வருணித்திருப்பது குறிப்பிடத்தக்கது.


கருணா நாடாளுமன்ற உறுப்பினராக நியமனம்

கருணா

கருணா அம்மான் என்று அழைக்கப்படுகின்ற தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவரான விநாயக மூர்த்தி முரளிதரன், நாட்டை ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார்.

ஆளும் கூட்டணியில் அங்கம் வகித்திருந்த ஜே.வி.பி. என்றழைக்கப்படும் மக்கள் சுதந்திர முன்னணி கட்சியின் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினரான வசந்த சமரசிங்க வடமத்திய மாகாண சபைத் தேர்தலில் போட்டியிடுவதற்காக தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்ததால் உருவான வெற்றிடத்திற்கே தற்போது கருணா நியமிக்கப்பட்டுள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினராக தான் நியமிக்கப்பட்டுள்ளது குறித்து கருணா தெரிவிக்கும் கருத்துகளை நேயர்கள் செய்தியரங்கத்தில் கேட்கலாம்.


இலங்கை கிழக்கு பல்கலைக்கழகத்தில் விரிவுரைகள் மீண்டும் ஆரம்பம்

கிழக்கு பல்கலைக்கழகம்

இலங்கையின் கிழக்கு பல்கலைக்கழகத்தில் சிங்கள மாணவர் ஒருவரின் படுகொலையை அடுத்து கடந்த ஒன்றரை மாதங்களாக இடைநிறுத்தப்பட்டிருந்த விரிவுரைகள் திங்களன்று மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

வர்த்தக முகாமைத்துவ பீடத்தின் இறுதியாண்டு மாணவர் ஒருவர் கடந்த ஆகஸ்ட் மாதம் 21ஆம் திகதி இரவு பல்லைக்கழக வளாகத்திற்குள் அடையாளம் தெரியாத ஆயுததாரிகளினால் சுட்டுக் கொல்லப்பட்டதை அடுத்து பாதுகாப்பு காரணங்களுக்காக மறுஅறிவித்தல் வரை அனைத்து விரிவுரைகளும் இடைநிறுத்தப்பட்டிருந்தன.

இப்பல்கலைக்கழகத்தில் அனுமதிக்கபட்டிருந்த சகல சிங்கள மாணவர்களும் தற்காலிகமாக வேறு பல்கலைக்கழகங்களில் இடம்பெயர்ந்த மாணவர்களாக அனுமதி பெற்றுள்ளதாக உபவேந்தர் கலாநிதி என்.பத்மநாதன் தமிழோசைக்கு தெரிவித்தார்.

திங்களன்று பல்கலைகழகத்திற்கு சமூகமளித்திருந்த மாணவர்கள் பொலிசாரின் சோதனையோடு அடையாள அட்டை சமர்ப்பித்து பதிவுசெய்த பின்பே உள்ளே செல்ல அனுமதிக்கப்பட்டதாக மாணவர்கள் தெரிவிக்கின்றனர்.

இருப்பினும் திங்களன்று மாணவர் வரவு குறைவாகவே இருந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

Posted in DMK, Law, Politics, Tamil, Tamil Nadu | குறிச்சொல்லிடப்பட்டது: , , , , , , , , , , , , , , , , | Leave a Comment »

Breakaway LTTE, TMVP leader Karuna back in Colombo; US ‘concerned’ over Sri Lanka rights, attacks on media; Victor Perera the new Governor of the Northern Province

Posted by Snapjudge மேல் ஜூலை 3, 2008

சுயவிருப்பத்துடன் இலங்கை திரும்பினேன்: கருணா

முறைகேடுகள் இல்லாமலும், தனது விருப்பின் பேரிலும்தான் பிரித்தானியாவில் இருந்து இலங்கைக்கு திரும்பியதாக தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவரான கருணா தெரிவித்துள்ளார். தனது மக்களுக்கு தான் செய்ய வேண்டிய பணிகளைக் கருத்தில் கொண்டு தான் நாடு திரும்பியதாக அவர் குறிப்பிட்டார்.

கிழக்கு மாகாண முதலமைச்சர் பதவி தனக்கு கிடைக்க வேண்டும் என்று தான் விரும்பவில்லை என்றும் பிள்ளையான் அப்பதவியில் இருப்பதை தான் வரவேற்பதாகவும் அவர் கூறினார்.

வடக்கில் நடந்துவரும் மோதல்களுக்கும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் எதுவித சம்பந்தமும் கிடையாது; இராணுவத்துக்கு தமது அமைப்பினர் உதவுவார்கள் என்று கூறப்படுவதில் உண்மை இல்லை என்று அவர் குறிப்பிட்டார்.

தமிழோசைக்கு பிரத்தியேகமாக செவ்வியொன்றை வழங்கிய கருணா அவர்கள், கிழக்கு மாகாணத்தில் அவசரமாக தேர்தல் நடத்தப்பட்டதன் காரணத்தினால் தமது அமைப்புக்கு மேலும் கிடைத்திருக்க வேண்டிய ஆசனங்கள் கிடைக்காமல் போனதாகக் கூறியனார்.

இருந்தபோதிலும் தமது அமைப்பு இந்த தேர்தலில் வெற்றி பெற்றது குறித்தும், தனது கட்சியைச் சேர்ந்த பிள்ளையான் முதலமைச்சராக தேர்ந்தெடுக்கப்பட்டது குறித்தும் தான் மகிழ்ச்சியடைவதாகவும் கூறினார்.

முதல்வர் சிவநேசத்துரை சந்திரகாந்தன் கருத்து

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் அமைப்பின் கட்சித் தலைவராக கருணா நீடிப்பார் என்று கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தன் தெரிவித்தார்.

கருணா அவர்கள் தன்னுடன் தொலைபேசியில் தொடர்புகொண்டு தனது வருகையைத் தெரிவித்ததாகவும், தனக்கு வேலைப்பளு அதிகமாக இருப்பதால் பின்னர் சந்திப்பதாக கருணாவிடம் தெரிவித்துள்ளதாகவும் முதல்வர் கூறினார்.

இவர்களது செவ்விகளை நேயர்கள் செய்தியரங்கத்தில் கேட்கலாம்.


இலங்கைக்கு திருப்பி அனுப்பப்பட்டார் கருணா

விடுதலைப் புலிகள் அமைப்பிலிருந்து பிரிந்து சென்று தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் எனும் அரசியல் கட்சியைத் தொடங்கிய கர்ணல் கருணா பிரித்தானியாவில் குடிவரவு தடுப்பு முகாமிலிருந்து இலங்கைக்கு நேற்று(புதன்கிழமை) திருப்பியனுப்பப்பட்டுள்ளார்.

இந்தத் தகவலை இலங்கையிலுள்ள பிரிட்டிஷ் தூதரகத்துக்காக பேசவல்ல அதிகாரியான டோமினிக் வில்சன் தமிழோசையிடம் உறுதி செய்தார்.

கருணா இலங்கை திரும்பியுள்ளதை தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் அமைப்பின் பேச்சாளர் ஆசாத் மௌலானாவும் உறுதி செய்துள்ளார்.

வேறு பெயரிலான ஒரு கடவுச்சீட்டுடன் பிரித்தானியவுக்குள் நுழைந்த வழக்கில் பிரித்தானிய அரசால் கைது செய்துபட்ட கருணா அவர்களுக்கு ஒன்பது மாதம் சிறைத் தண்டனையும் விதிக்கப்பட்டது. சிறைத் தண்டனை முடிவடைந்த பின்னர் அவர் குடிவரவு தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்தார்.

இதற்கிடையே கருணா இலங்கை திரும்பிவிட்டாலும், அவருக்கு முதலமைச்சர் பதவி வழங்கப்பட மாட்டாது என்று அவரது தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் அமைப்பின் சார்பில் பேசவல்ல ஒருவர் தெரிவித்துள்ளார்.

இவை குறித்த மேலதிக தகவல்களை இன்றைய நிகழ்ச்சியில் கேட்கலாம்.


இலங்கைக் கடற்பரப்பரப்பில் நுழைந்த பல நூறு இந்திய மீன்பிடிப் படகுகள் விசாரணையையடுத்து விடுவிப்பு

இராமேஸ்வரத்தில் நிறுத்திவைக்கப்பட்டுள்ள இந்திய மீனவர்களின் படகுகள்
இராமேஸ்வரத்தில் நிறுத்திவைக்கப்பட்டுள்ள இந்திய மீனவர்களின் படகுகள்

இலங்கைக் கடற்பரப்பின் மன்னார் பகுதியில் அத்துமீறி மீன்பிடித்துக் கொண்டிருந்ததாகக் கூறப்படும் பல நூறு இந்திய மீன்பிடி படகுகளை இலங்கைக் கடற்படையினர் நேற்றுமாலை கைதுசெய்து, பலமணிநேர தீவிர விசாரணைகளின் பின்னர் விடுவித்திருக்கிறார்கள்.

இது குறித்து பி.பி.சி தமிழோசையிடம் கருத்துவெளியிட்ட இலங்கைக் கடற்படைப் பேச்சாளர் கமாண்டர் டி.கே.பி. தசநாயக்க, நேற்று, புதன்கிழமை பிற்பகல் மூன்று மணியளவில் விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டிலுள்ள விடத்தல்தீவு பகுதியை நோக்கி இந்த இந்திய மீன்பிடி படகுகள் சென்று கொண்டிருந்தவேளை, நெடுந்தீவிற்கு மன்னாருக்கும் இடைப்பட்ட கடற்பகுதியில் வைத்து கடற்படையினரால் சுற்றிவளைக்கப்பட்டு, தலைமன்னார் கடற்கரைக்கு சுமார் இரண்டு கிலோமீட்டர் தொலைவில் வைத்து இவர்கள் மீது கடுமையான சோதனை மேற்கொள்ளப்பட்டதாகத் தெரிவித்தார்.

இலங்கை கடற்படையின் ரோந்துப் படகு ஒன்று
இலங்கை கடற்படையின் ரோந்துப் படகு ஒன்று

இதன்பின்னர் சுமார் இரவு 10 மணியளவில் இதில் 299 இந்திய படகுகள் விசாரணையின் பின்னர் விடுவிக்கப்பட்டதாகவும், எஞ்சிய ஒரு படகில் திசையறிகாட்டிபோன்ற கருவிகள் காணப்பட்டதால், மேலதிக சோதனைக்காக அது தடுத்து வைக்கப்பட்டு பின்னர் இன்று காலை அதுவும் விடுவிக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

இந்தச் சோதனை நடவடிக்கைகளின்போது இந்திய மீனவர்களிடமிருந்தோ அல்லது அவர்களுடைய படகுகளில் இருந்தோ சந்தேகத்திற்கிடமான பொருட்கள் ஏதும் கைப்பற்றப்படவில்லை என்று தெரிவித்த கடற்படைப் பேச்சாளர் கமாண்டர் டி.கே.பி. தசநாயக்க, இந்திய மீனவர்கள் இவ்வாறு அத்துமீறி இலங்கைக் கடற்பரப்பில் மீன்பிடித்துவருவது இலங்கையின் தேசிய பாதுகாப்பிற்கு மிகவும் அச்சுறுத்தலாக விளங்கிவருவதாகவும் தெரிவித்தார்.

இலங்கைப் படையினர் இந்திய மீனவர்களைக் கைது செய்ததை கண்டிக்கும் இராமேஸ்வரம் மீனவர் சங்கத்தின் தலைவரான போஸ் அவர்கள், ஆனால், தமது மீனவர்கள் இலங்கைப் பகுதிக்குள் சென்று மீன்பிடிப்பதையும் ஒப்புக்கொள்கிறார்.

இது குறித்த போஸ் அவர்களின் செவ்வியை நேயர்கள் இன்றைய நிகழ்ச்சியில் கேட்கலாம்


ஓய்வுபெற்ற பொலிஸ் மா அதிபர் வடக்கு மாகாண ஆளுனராகப் பதவியேற்பு

விக்டர் பெரேரா பதவியேற்கும் காட்சி
விக்டர் பெரேரா பதவியேற்கும் காட்சி

இந்த வார முற்பகுதியில் இலங்கை பொலிஸ் மா அதிபர் பதவியிலிருந்து ஓய்வுபெற்ற விக்டர் பெரேரா அவர்கள் வடக்கு மாகாணத்தின் ஆளுனராக பதவிப் பிரமாணம் செய்துகொண்டிருக்கிறார்.

இரண்டு தசாப்தங்களுக்கும் மேலாக இணைந்திருந்த வடகிழக்கு மாகாணம், நீதிமன்றத் தீர்பொன்றின் பின்னர் இருவேறு மாகாணங்களாகப் பிரிக்கப்பட்டதன் பின்னர் வடக்கு மாகாணத்திற்கென தனியொரு ஆளுனர் நியமிக்கப்படிருப்பது இதுவே முதல் தடவையாகும்.

இதற்கு முன்னர் தற்போது கிழக்கு மாகாண ஆளுனராகப் பணிபுரிந்துவரும் முன்னாள் கடற்படை அதிகாரி ரியர் அட்மிரல் மொஹான் விஜேவிக்ரமவே வடக்கு மாகாண ஆளுனராகவும் கடமையாற்றிவந்தார்.


இலங்கை மனித உரிமை நிலவரம் குறித்து அமெரிக்கா கவலை

ஊடகங்கள் மீதான அழுத்தம் அதிகரிப்பதாக கவலை

இலங்கையின் மனித உரிமை நிலவரம் தமக்கு மகிழ்சியளிக்கவில்லை என்று அமெரிக்கா இலங்கையிடம் கூறியுள்ளது.

இலங்கையின் மனித உரிமைச் சூழல் குறித்தும் ஊடகங்கள் மீதான அழுத்தங்கள் குறித்தும் அமெரிக்கா அதிகமாக கவலைப்படுவதாக, ஆசிய விவகாரங்களுக்கான அமெரிக்க உதவிச் செயலரான இவான் பைஜன்பாம், இலங்கைக்கு மேற்கொண்ட விஜயத்தின் முடிவில் தெரிவித்துள்ளார்.

அதே நேரத்தில், தங்களின் பாதுகாப்பு குறித்து உடகவியலாளர்கள் எழுப்பிய பிரச்சினைகளை ஆராய்வதற்காக ஒரு அமைச்சகக் குழு அமைக்கப்பட்டதையும் அவர் சுட்டிக் காட்டியுள்ளார்.

இலங்கையின் வளர்ச்சிக்காக அமெரிக்கா தொடர்ந்து உதவும் என்றும் பைஜன்பாம் தெரிவித்துள்ளார்.


ஓமந்தை சோதனைச் சாவடி மூடப்பட்டுள்ள நிலையில் பயணிகள் எதிர்கொள்ளும் சிரமங்கள் – பெட்டகம்

பாதை திறக்காத நிலையில் பயணத்தின் பாதிவழியில்…

இலங்கையின் வடக்கே விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்திற்கும் இராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ள வவுனியாவுக்கும் இடையிலான ஓமந்தை சோதனைச்சாவடி 3 ஆவது நாளாக இன்றும் திறக்கப்படவில்லை.

இதனால் பொதுமக்கள் போக்குவரத்து மற்றும் வன்னிப் பகுதிக்கான அத்தியாவசிய பொருட்களின் விநியோக நடவடிக்கைகள் என்பனவும் பாதிக்கப்பட்டிருக்கின்றன.

வன்னிப்பிரதேசத்திற்குச் செல்வதற்காக வவுனியாவில் சுமார் 700க்கும் மேற்பட்டவர்கள் காத்திருக்கின்றார்கள்.

கையிலிருந்த பணம் செலவழிந்துவிட்டதனால் சாப்பிடவும் வழியில்லை செலவுக்கும் வழியில்லை என இவர்கள் வவுனியா செயலக அதிகாரிகளிடம் முறையிட்டதை அடுத்து, விடுதிகளில் தங்கியிருப்பவர்களுக்கு உணவு வழங்குவதற்கான நடவடிக்கைகளை OFFER என்ற தொண்டு நிறுவனத்தின் உதவியோடு அரச அதிகாரிகள் மேற்கொண்டுள்ளனர்.

போக்குவரத்தின்மை காரணமாக கிளிநொச்சி முல்லைத்தீவு மாவட்டங்களில் நிவாரண விநியோக நடவடிக்கைகள் பாதிக்கப்படும் அபாயம் எழுந்துள்ளதாக அங்குள்ள அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

Posted in Govt, India, Law, Order, Politics, Tamil, Tamil Nadu | குறிச்சொல்லிடப்பட்டது: , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | Leave a Comment »

Pillaiyan appointed CM as LTTE strikes in Colombo – Hisbullah parts company in protest

Posted by Snapjudge மேல் மே 17, 2008

புதுப்பிக்கப்பட்ட நாள்: 15 மே, 2008

கிழக்கு மாகாண முதல்வராகப் பதவியேற்றார் பிள்ளையான்

இலங்கையின் கிழக்கு மாகாண சபை முதல்வராக தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் அமைப்பைச் சேர்ந்த பிள்ளையான் என்றழைக்கப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்கள் வெள்ளிக்கிழமை மாலை பதவியேற்றிருக்கிறார். நிதி, திட்டமிடல், சட்டம்-ஒழுங்கு, மாகாண சபை நிர்வாகம், புனர்வாழ்வு, மீள்குடியேற்றம் மற்றும் பல துறைகளுக்கு பிள்ளையான் பொறுப்பேற்றுள்ளார்.

வேறு மூன்று அமைச்சர்களும் இந்த வைபவத்தில் பதவிப் பிரமாணம் செய்துகொண்டுள்ளனர்.

துரைரட்ணம் நவரத்தின ராஜா வரதன் விவசாயம், கிராமிய கைத்தொழில் அபிவிருத்தி மற்றும் மீன்பிடி அமைச்சராகியுள்ளார்.

கல்வி கலாச்சாரம், காணி அபிவிருத்தி மற்றும் போக்குவரத்து போன்ற துறைகளுக்கான அமைச்சராக விமலவீர திஸ்ஸநாயக பதவியேற்றார்.

மீரா சாஹிப் உதுமான் லெப்பே வீதி அபிவிருத்தி, நீர்ப்பாசனம் போன்ற துறைகளுக்கு பொறுப்பேற்றார்.

பிள்ளையான் தலைமையிலான அரசுக்கு ஆதரவளிக்க முஸ்லிம் உறுப்பினர்கள் மூவர் மறுப்பு

இதனிடையே, கிழக்கு மாகாணசபைக்கு பிள்ளையான் அவர்கள் முதல்வராக நியமிக்கப்படுவதற்கு, ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் சார்பில் போட்டியிட்டு மட்டக்களப்பு மாவட்டத்திலிருந்து வெற்றி பெற்ற மூன்று முஸ்லிம் உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார்கள்.

எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா, ஏ.எஸ்.ஜவாஹர் சாலிஹ் மற்றும் எம்.எஸ்.சுபேர் ஆகியோர் கிழக்கு மாகாண சபை ஆளுநருக்கு எழுதியுள்ள கடித்தத்தில் தாங்கள் மூவரும் தனியொரு குழுவாக செயல்படப்போவதாக குறிப்பிட்டுள்ளனர்.

தங்கள் குழுவுக்கு ஹிஸ்புல்லாவே செயலர் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

பிள்ளையான் தலைமையில் அமைகின்ற அரசுக்கு தங்களுடைய ஆதரவு கிடையாது என்று தமிழோசைக்கு வழங்கிய செவ்வியில் ஹிஸ்புல்லா குறிப்பிட்டார்.

சுழற்சி முறையில் தமிழ் முஸ்லிம் இனங்களிலிருந்து முதலமைச்சர் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்று கூறப்படுகின்ற யோசனையில் தனக்கு உடன்பாடு இருந்தாலும், அதிக பிரதிநிதிகளைப் பெற்றிருப்பது முஸ்லிம்கள் என்பதால் தன்னையே முதலில் முதல்வராக நியமிக்க வேண்டும் என்று அவர் தெரிவித்தார்.

ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்து ஒருவர் முஸ்லிமாகும் நிலை வந்தால் அதனை தான் முழுமையாக ஆதரிப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.



இலங்கை கடற்படையினரின் தாக்குதல்களில் இந்திய மீனவர்கள் சிக்கிக்கொள்ளும் விவகாரம்: வெளியுறவுத்துறையை அணுகி மீனவர்கள் முறையிட வேண்டுமென உச்சநீதிமன்றம் உத்தரவு

இந்தியா இலங்கைக்கு இடையிலான கடல்பரப்பில் மீன் பிடிக்கச் செல்லும் தமிழக மீனவர்கள் மீது இலங்கைக் கடற்படை தொடர்ந்து தாக்குதல் நடத்துவதாகவும், இதிலிருந்து தங்களுக்குப் பாதுகாப்பு அளிக்க இந்திய நடுவணரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரியும், இந்திய உச்சநீதிமன்றத்தில் தமிழக கடலோர விசைப்படகு மீனவர் நல சங்கம் வெள்ளியன்று வழக்கு ஒன்றைத் தொடர்ந்துள்ளது.

அது தொடர்பாக உச்சநீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவில் மீனவர்கள் முதலில் இந்திய வெளியுறவுத் துறையிடம் இவ்விவகாரத்தை முறையிட்டு நடவடிக்கை கோரவேண்டும் என்று கூறியுள்ளது.

நீதிமன்றத்தில் வைக்கப்பட்ட கோரிக்கை குறித்தும், உச்சநீதிமன்ற உத்தரவு குறித்தும், தமிழக கடலோர விசைப்படகு மீனவர் நல சங்கத்தின் பொதுச் செயலர் போஸ் தமிழோசைக்கு வழங்கிய செவ்வியை நேயர்கள் செய்தியரங்கத்தில் கேட்கலாம்.


கொழும்பு தற்கொலைத் தாக்குதலில் 9 பேர் பலி

இலங்கையின் தலைநகர் கொழும்பில் இன்று நடந்த தற்கொலைக் குண்டுத்தாக்குதல் ஒன்றில், குறைந்தது 8 பொலிஸ்காரர்களும், இரண்டு பொதுமக்களும், தற்கொலையாளியும் உட்பட 11 பேர் கொல்லப்பட்டதாக இராணுவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

நகரின் சன சந்தடி மிக்க வணிகப் பகுதியில், பொலிஸாரின் பஸ் ஒன்றுடன், தற்கொலையாளி தனது மோட்டார் சைக்கிளை மோதி வெடிக்கவைத்ததாக, இராணுவத்தின் சார்பில் பேசவல்ல ஒருவர் தெரிவித்துள்ளார்.

பொலிஸார் உட்பட 90 க்கும் அதிகாமனோர் இதில் காயமடைந்ததாக, வைத்தியசாலை மற்றும் பொலிஸ் வட்டாரங்கள் கூறுகின்றன.

விடுதலைப்புலிகளால் நடத்தப்பட்ட கோழைத்தனமான தாக்குதல் என்று கூறி ஜனதிபதி மஹிந்த ராஜபக்ஷ இதனைக் கண்டித்துள்ளார்.

இது குறித்து விடுதலைப்புலிகள் தரப்பில் இருந்து உடனடியாக கருத்துக்கள் எதுவும் வெளிவரவில்லை.


Posted in Govt, Tamil | குறிச்சொல்லிடப்பட்டது: , , , , , , , , , , , , , , , , , , , | Leave a Comment »

May 9 – Sri Lanka Updates: Eezham, LTTE

Posted by Snapjudge மேல் மே 10, 2008

புதுப்பிக்கப்பட்ட நாள்: 12 மே, 2008

கிழக்கு மாகாண முதலமைச்சர் யார்?

கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் ஆகக்கூடுதலான இடங்களைப் பெற்று வெற்றி பெற்றுள்ள ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பங்காளிக்கட்சிகளில், எந்தக் கட்சி ஆகக்கூடுதலான இடங்களை பெற்றுள்ளதோ, அந்தக் கட்சிக்கே முதலமைச்சர் பதவியை வழங்குவது என்று தேர்தலுக்கு முன்னதாக உடன்பாடு காணப்பட்டதாக அந்தக் கூட்டமைப்பின் செயலாளரான அமைச்சர் சுசில் பிரேம் ஜயந்த் தெரிவித்துள்ளார்.

கிழக்கு மாகாண சபைக்கான முதலமைச்சர் யார் என்று தமிழோசையின் சார்பில் கேட்கப்பட்டதற்குப் பதிலளித்த அமைச்சர் சுசில் பிரேம் ஜயந்த் அவர்கள், இந்த உடன்பாட்டின் அடிப்படையில், தமது கூட்டமைப்பின் பங்காளிக்கட்சிகளின் தலைவர்களின் சந்திப்பில் முதலமைச்சர் யார்?, என்ற இறுதி முடிவு எடுக்கப்படும் என்று குறிப்பிட்டார்.

இந்த விடயம் குறித்து இந்தத் தேர்தலில் வெற்றிபெற்ற முஸ்லிம் உறுப்பினர்களில் ஒருவரான எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் அவர்கள் கூறுகையில், கிழக்கு மாகாணத்தைப் பொறுத்தவரையில், தமிழர்கள் மற்றும் முஸ்லிம்கள் இடையே எந்த சமூகத்தைச் சேர்ந்தவர்கள் அதிக இடங்களைப் பெறுகிறார்களோ, அவர்களில் ஒருவரே முதலமைச்சராக நியமிக்கப்படுவார் என்று முன்னமே உடன்பாடு ஏற்பட்டிருந்ததாகவும், ஆகவே முஸ்லிம்களே இந்தத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் சார்பில் அதிகம் வெற்றிபெற்றதால், தானே முதலமைச்சராக நியமிக்கப்பட வேண்டும் என்றும் கூறினார்.

இவர்கள் இருவரும் தமிழோசைக்கு வழங்கிய செவ்விகளை நேயர்கள் இன்றைய நிகழ்ச்சியில் கேட்கலாம்.


கிழக்கு மாகாணத் தேர்தல் மோசடியானது என்கிறார் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்

வாக்கு மோசடியின் அடிப்படையிலேயே கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு வெற்றிபெற்றதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சந்திரநேரு சந்திரகாந்தன் தெரிவித்துள்ளார்.

கிழக்கு மாகாண சபைத்தேர்தல் முடிவுகள் குறித்து தமிழோசையிடம் பேசிய அவர், இந்த தேர்தலில் மக்கள் சுதந்திரமாக வாக்களிக்க அனுமதிக்கப்படவில்லை என்றும் குறிப்பிட்டார்.

மக்களின் அபிலாசைகள் மறுக்கப்பட்ட நிலையில், மக்கள் விரும்பாத நிலையிலுமே இந்தத் தேர்தல் நடத்தப்பட்டதாகவும் அவர் கூறினார். அவரது முழுமையான செவ்வியை நேயர்கள் இன்றைய நிகழ்ச்சியில் கேட்கலாம்.


இலங்கையில் கிழக்கு மாகாண சபைக்கு நடந்த தேர்தலில் மத்தியில் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டணி வெற்றிபெற்றுள்ளது.

மட்டக்களப்பு, அம்பாறை, திருகோணமலை ஆகிய மூன்று மாநிலங்களையும் சேர்த்து மாகாண சபையில் உள்ள 37 இடங்களுக்கு (போனஸ் இடங்கள் 2 உள்ளடங்க) நடந்த இத்தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டணிக்கு 20 இடங்களும், முக்கிய எதிர்க் கட்சியான ஐக்கிய தேசிய கட்சித் தலைமையிலான எதிர்க்கட்சி கூட்டணிக்கு 15 இடங்களும், தமிழ் ஜனநாயக தேசிய முன்னணி ஒரு இடமும், ஜே.வி.பி. எனப்படும் மக்கள் விடுதலை முன்னணி ஒரு இடமும் பெற்றுள்ளன.

மாவட்ட அளவில் தேர்தல் முடிவுகள் பின்வருமாறு:

மட்டக்களப்பு

  • ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டணி – 6
  • ஐக்கிய தேசியக் கட்சி கூட்டணி – 4
  • தமிழ் ஜனநாயக தேசியக் கூட்டணி – 1

அம்பாறை

  • ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டணி – 8
  • ஐக்கிய தேசியக் கட்சி கூட்டணி – 6

திருகோணமலை

  • ஐக்கிய தேசியக் கட்சி கூட்டணி – 5
  • ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டணி – 4
  • மக்கள் விடுதலை முன்னணி – 1

மாகாண அளவில் முக்கியக் கட்சிகளின் வாக்கு வீதம்

  • ஐக்கிய தேசியக் கட்சி கூட்டணி – 52.21%
  • ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டணி – 42.38%
  • மக்கள் விடுதலை முன்னணி – 1.59%
  • தமிழ் ஜனநாயக தேசியக் கூட்டணி – 1.30%

இருபது ஆண்டுகளுக்கு பின்னர் இலங்கையில் கிழக்கு மாகாண சபைக்கு தற்போது தேர்தல்கள் நடந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

இலங்கை கிழக்கு மாகாண சபைக்கான தேர்தல்கள் முடிவடைந்துள்ளன

இலங்கையில் கிழக்கு மாகாண சபைக்கான தேர்தல்கள் முடிவடைந்துள்ளன. கிழக்கு மாகாணத்திற்கு தேர்தல் நடத்தி அதிகாரத்தை அளிப்பதன் மூலம் கிழக்கு மற்றும் வடக்கில் தனி நாடு கோரி வரும் விடுதலைப் புலிகளுக்கு முட்டுக்கட்டை போட முடியும் என அரசாங்கம் எண்ணுகிறது.

இந்தத் தேர்தலில் கடந்த 2004 ம் ஆண்டு விடுதலைப் புலிகள் அமைப்பில் இருந்து பிரிந்து சென்ற தமிழ் மக்கள் விடுதலை புலிகள் அமைப்பை சேர்ந்த வேட்பாளர்களும் பங்ககேற்றுள்ளனர். இவர்கள் அதிபர் மஹிந்த ராஜ பக்ஷ அவர்களின் ஆளும் கட்சியின் கூட்டணியில் சேர்ந்து பிரச்சாரம் மேற்கொண்டனர்.

இன்றைய தேர்தலின் போது ஆங்காங்கே வன்முறைகள் இடம்பெற்றதாகவும், வாக்காளர்கள் அச்சுறுத்தப்பட்டதாகவும் எதிர்கட்சி தலைவர் ரவூஃப் ஹக்கீம் குற்றம் சாட்டியுள்ளார். அத்தோடு தங்களுடைய குற்றச்சாட்டுகளை காவல்துறையினர் ஏற்கவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

ஆனால் இந்தக் குற்றச்சாட்டுகளை ஆளும் கட்சியை சேர்ந்த அமைச்சர் நஜீப் ஏ மஜீத் மறுக்கிறார்.


திருகோணமலையில் கடற்படை கப்பல் மூழ்கடிப்பு

இச்சம்பவம் திருகோணமலையில் நடந்துள்ளது
இச்சம்பவம் திருகோணமலையில் நடந்துள்ளது

இலங்கையின் கிழக்கே துறைமுக நகரான திருகோணமலையில் கடற்படைக்கு சொந்தமான சரக்குக் கப்பல் ஒன்றை விடுதலைப் புலிகள் வெடிவைத்து மூழ்கடித்துள்ளனர்.

கிழக்கு மாகாண சபைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஆரம்பிப்பதற்கு சில மணி நேரம் முன்பாக இந்தச் சம்பவம் நடந்துள்ளது.

இலங்கை கடற்படை சார்பாகப் பேசவல்ல தளபதி தஸ்ஸநாயக இச்சம்பவம் பற்றிக் குறிப்பிடுகையில், புலிகளின் தற்கொலைப் படையைச் சேர்ந்த ஒருவர் நீருக்குள் மூழ்கி கப்பலுக்கடியில் வெடிவைத்துள்ளார் என்று தாங்கள் நம்புவதாகவும் ஆனால் இந்தச் சம்பவத்தில் ஆட்சேதம் எதுவும் ஏற்படவில்லை என்றும் தெரிவித்தார்.

வட இலங்கையில் மோதலில் ஈடுபட்டுவரும் அரச படையினருக்கான வெடிப்பொருட்கள் மற்றும் ஆயுதங்கள் அந்தக் கப்பலில் இருந்ததாக விடுதலைப் புலிகள் கூறுகின்றனர்.

இந்தக் கப்பல் மூழ்கடிக்கப்பட்ட சம்பவம் மற்றும் கிழக்கு மாகாண சபைத் தேர்தல் வாக்குப்பதிவு நிலவரம் குறித்த செய்திகளை நேயர்கள் இன்றைய தமிழோசையில் கேட்கலாம்.


இலங்கையின் வடக்கில் தொடரும் மோதல்

இலங்கை இராணுவத்தினர்
இலங்கை இராணுவத்தினர்

இலங்கையின் வடக்கே முல்லைத்தீவு மாவட்டம் நெடுங்கேணிக்கு வடக்கே விமானப்படை விமானங்கள் சனிக்கிழமை பிற்பகல் நடத்திய குண்டுவீச்சுத் தாக்குதலில் விடுதலைப் புலிகளின் எறிகணை வீச்சு பீரங்கி நிலையொன்று அழிக்கப்பட்டுள்ளதாகத் இலங்கை அரசின்தேசிய பாதுகாப்புக்கான ஊடகத் தகவல் மையம் தெரிவித்திருக்கின்றது.

இந்தப் பகுதியிலிருந்து விடுதலைப் புலிகள் மணலாறு பிரதேசத்தில் உள்ள சிங்ளக் கிராமங்கள் மீது எறிகணை தாக்குதல்களை நடத்தி வருவதனாலேயே இந்த நிலைமீது படையினர் தாக்குதல் நடத்தியதாக அந்த ஊடகத் தகவல் மையம் கூறியிருக்கின்றது. எனினும் இந்தத் தாக்குதல் குறித்து விடுதலைப் புலிகள் உடனடியாகத் தகவல் எதனையும் வெளியிடவில்லை.

இதனிடையில் மன்னார் கறுக்காய்க்குளம் பகுதியில் இராணுவத்தினருடன் வெள்ளிகிழமை இடம்பெற்ற உக்கிர சண்டைகளில் கொல்லப்பட்ட இராணுவத்தின் 5 சடலங்கள் உறவினர்களிடம் கையளிக்கப்படுவதற்காக சர்வதேச செஞ்சிலுவைக் குழுவினரிடம் சனிக்கிழமை ஒப்படைக்கப்பட்டதாக விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, மன்னார் கறுக்காய்க்குளத்திற்கு அடுத்துள்ளதாகத் தெரிவிக்கப்படும் ஆலங்குளம் பகுதியில் நேற்று விடுதலைப் புலிகளுடன் பல மணித்தியாலங்கள் இடம்பெற்ற கடும் சண்டைகளில் 33 விடுதலைப் புலிகளும் 8 இராணுவத்தினரும் கொல்லப்பட்டிருப்பதாகப் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்திருக்கின்றது. விடுதலைப் புலிகள் வசமிருக்கும் இந்தப் பிரதேசத்தில் ஒரு சதுர கிலோ மீட்டர் பரப்பளவான பகுதியை வெள்ளிகிழமை இடம்பெற்ற இந்தச் சண்டைகளின்போது படையினர் கைப்பற்றியிருப்பதாகவும் பாதுகாப்பு அமைச்சு கூறியிருக்கின்றது.

புதுப்பிக்கப்பட்ட நாள்: 10 மே, 2008 – பிரசுர நேரம் 16:59 ஜிஎம்டி

மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுகள் தொடர்பாக கருணா மீது வழக்கு தொடர போதிய ஆதாரம் இல்லை என பிரித்தானிய அரசு தரப்பு கூறியுள்ளது

கருணா மீது மேலதிக வழக்குகளை தொடருவதற்கான போதிய ஆதாரங்கள் கிடையாது என்று பிரித்தானிய அரச வழக்கு தொடுப்பு சேவை கூறியுள்ளது.

விடுதலைப்புலிகள் இயக்கத்திலிருந்து பிரிந்து சென்ற கருணா என்ற வினாயகமூர்த்தி முரளீதரன், பிரிட்டனில் அடையாள ஆவணங்கள் சட்டத்தின் கீழ் கடந்த ஆண்டு கைதுசெய்யப்பட்டு, ஒன்பது மாதங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டு, அதில் ஒரு பகுதிக் காலத்தை கழித்த நிலையில், கடந்த வியாழனன்று சிறையிலிருந்து விடுதலை செய்யப்பட்டார்.

விடுதலை செய்யப்பட்ட பின்னர் அவரை குடிபுகல் துறை தடுப்புக்காவலில் வைத்துள்ளதாக தகவல்கள் வந்திருக்கின்றன. இந்த நிலையில் அவர் இலங்கையில் போர்க்குற்றங்கள் இழைத்தார் மனித உரிமைகள் மீறலில் ஈடுபட்டார் என்ற குற்றச்சாட்டுகளை எழுப்பிய மனித உரிமை அமைப்புகள் அவர் மீது இந்த குற்றச்சாட்டுகள் குறித்து விசாரிக்க வேண்டும் என்று குரல் எழுப்பியிருந்தன.

ஆனால் பிரிட்டனின் அரசு வழக்கு தொடுப்பு துறையான கிரவுன் பிராசிக்யூஷன் சர்வீஸ், கருணா மீது மேலும் எந்த ஒரு குற்றச்சாட்டுகள் தொடர்பாகவும், வழக்கு தொடர்ந்து தண்டனை வாங்கித் தருமளவுக்கு யதார்த்த ரீதியான வாய்ப்புகளைத் தரும் ஆதாரம் போதிய அளவில் இல்லை என்று லண்டன் பெருநகர காவல் துறைக்கு அறிவுறுத்தியிருப்பதாக பிபிசி தமிழோசைக்குக் கூறியிருக்கிறது.

எனவே இந்த நிலையில், கருணா இலங்கைக்கு திருப்பி அனுப்பப்படும் சாத்தியக்கூறு அதிகமாகியிருக்கிறது.

பிரிட்டிஷ் அரசின் இந்த முடிவு குறித்து மனித உரிமை அமைப்பான அம்னெஸ்டி இண்டர்னேஷனல், ஏமாற்றம் தெரிவித்திருக்கிறது. இன்று அது வெளியிட்ட ஒரு செய்திக்குறிப்பில், சித்ரவதை செய்தது, பணயக்கைதிகளை பிடித்து வைத்திருந்தது, சிறார்களை படையில் சேர்த்தது, சிறார்களை போரில் பயன்படுத்தியது உள்ளிட்ட போர்க்குற்றச்சாட்டுகள் தொடர்பாக ஒரு உடனடியான, முழுமையான, பக்கச்சார்பற்ற மற்றும் சுதந்திரமான விசாரணையை சர்வதேச சட்டப்படி பிரிட்டன் நடத்தவேண்டும் என்று கூறியிருக்கிறது.


அம்பாறையில் குண்டுவெடிப்பு; 11 பேர் பலி

குண்டு வெடித்த சமயத்தில் விடுதியில் கூட்டம் அதிகம் இருந்தது

இலங்கையில் சனிக்கிழமையன்று தேர்தல் நடக்கவுள்ள கிழக்கு மாகாணத்தின் மாவட்டங்களில் ஒன்றான அம்பாறையில், வெள்ளியன்று இடம்பெற்ற குண்டு வெடிப்பு ஒன்றில் 11 பேர் கொல்லப்பட்டும் 24 பேர் காயமடைந்தும் இருப்பதாக வைத்திய அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

அம்பாறை நகரத்தில் பேருந்து நிலையத்துக்கு அருகே உள்ள சிட்டி கபே என்னும் உணவு விடுதியிலேயே இந்த குண்டு வெடித்ததாக இலங்கை இராணுவத்தின் சார்பில் பேசவல்ல பிரிகேடியர் உதய நாணயக்கார கூறியுள்ளார்.

கொல்லப்பட்டவர்கள் மற்றும் காயமடைந்தவர்களில் பலர் அந்த விடுதியில் அமர்ந்திருந்தவர்கள் என்று கூறப்படுகிறது.

இது பார்சல் குண்டாக இருக்கலாம் என்று பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.


மன்னார் மாவட்டத்தில் உக்கிர சண்டை

இலங்கையின் வடமேற்கே மன்னார் மாவட்டம் கட்டுக்கரைக் குளத்திற்கு வடக்கே உள்ள ஆலங்குளம் பகுதியில் இராணுவத்தினருக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் இடம்பெற்ற உக்கிர சண்டைகளில் குறைந்தது 33 விடுதலைப்புலிகளும் 3 இராணுவத்தினரும் கொல்லப்பட்டுள்ளதாகப் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்திருக்கின்றது. இந்த மோதல்களில் 5 படையினர் காணாமல் போயிருப்பதாகவும் பாதுகாப்பு அமைச்சு கூறியிருக்கின்றது.

வெள்ளியன்று விடுதலைப் புலிகளின் பலம் பொருந்திய முன்னரங்கு பகுதிகளை உடைத்துக்கொண்டு முன்னேறுவதற்காக இராணுவத்தினர் பல முனைகளில் மேற்கொண்ட இராணுவ நடவடிக்கையின்போது இரு தரப்பினருக்கும் மோதல்கள் மூண்டதாகப் பாதுகாப்பு அமைச்சகம் விடுத்துள்ள அறிக்கையொன்றில் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.

படையினருக்கு உதவியாக எம்.ஐ 24 ரக தாக்குதல் உலங்கு வானூர்தியும் தாக்குதல் விமானங்களும் விடுதலைப் புலிகளின் இலக்குகள் மீது தாக்குதல்கள் நடத்தி அவர்களுக்கு சேதங்களை ஏற்படுத்தியதாகக் கடற்படை அதிகாரிகள் தெரிவித்திருக்கின்றனர்.

மன்னார் கறுக்காய்க்குளம் பகுதியில் வெள்ளியன்று இராணுவத்தினருடன் கடும் மோதல்கள் இடம்பெற்றதாகத் தெரிவித்துள்ள விடுதலைப் புலிகள், இராணுவத் தரப்பில் 30க்கும் மேற்பட்ட படையினர் கொல்லப்பட்டதாகவும், 5 இராணுவத்தினரின் சடலங்களையும், இராணுவ தளபாடங்களையும் தாங்கள் கைப்பற்றியிருப்பதாகத் தெரிவித்துள்ளனர்.

மன்னார் மாவட்டம் அடம்பன் நகரப்பகுதியை இன்று காலை 9 மணியளவில் இராணுவத்தினர் கைப்பற்றியிருப்பதாகத் தேசிய பாதுகாப்புக்கான ஊடகத் தகவல் மையம் தெரிவித்திருக்கின்றது.

பல மணித்தியாலங்கள் விடுதலைப் புலிகளுடன் இப்பகுதியி;ல் நடைபெற்ற சண்டைகளில் குறைந்தது 15 விடுதலைப் புலிகள் கொல்லப்பட்டதாகவும், இராணுவ தரப்பில் 2 படையினர் கொல்லப்பட்டு, மேலும் 7 பேர் காயமடைந்ததாகவும் அந்த ஊடகத் தகவல் மையம் கூறியிருக்கின்றது.

மன்னார் கட்டுக்கரைக்குளத்திற்கு வடக்கே அடுத்தடுத்து அமைந்துள்ள ஊர்களான ஆலங்குளம் மற்றும் கறுக்காய்க்குளம் பகுதியில் இருதரப்பினருக்கும் இடம்பெற்ற இந்தச் சண்டைகள் பற்றிய தகவலை விடுதலைப் புலிகளின் படைத்துறைப் பேச்சாளர் இராசையா இளந்திரையன் பிபிசி தமிழோசையிடம் உறுதிப்படுத்தினார்.

அவர் தெரிவித்த மற்ற விபரங்கள் அடங்கிய செய்திக் குறிப்பினை நேயர்கள் செய்தியரங்கத்தில் கேட்கலாம்.


இலங்கையின் கிழக்கே துறைமுக நகரான திருகோணமலையில் கடற்படைக்கு சொந்தமான சரக்குக் கப்பல் ஒன்றை விடுதலைப் புலிகள் வெடிவைத்து ழூழ்கடித்துள்ளனர்.

கிழக்கு மாகாண சபைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஆரம்பிப்பதற்கு சில மணி நேரம் முன்பாக இந்தச் சம்பவம் நடந்துள்ளது.

இலங்கை கடற்படை சார்பாகப் பேசவல்ல தளபதி தஸ்ஸநாயக இச்சம்பவம் பற்றிக் குறிப்பிடுகையில், புலிகளின் தற்கொலைப் படையைச் சேர்ந்த ஒருவர் நீருக்குள் மூழ்கி கப்பலுக்கடியில் வெடிவைத்துள்ளார் என்று தாங்கள் நம்புவதாகவும் ஆனால் இந்தச் சம்பவத்தில் ஆட்சேதம் எதுவும் ஏற்படவில்லை என்றும் தெரிவித்தார்.

வட இலங்கையில் மோதலில் ஈடுபட்டுவரும் அரச படையினருக்கான வெடிப்பொருட்கள் மற்றும் ஆயுதங்கள் அந்தக் கப்பலில் இருந்ததாக விடுதலைப் புலிகள் கூறுகின்றனர்.

இந்தக் கப்பல் மூழ்கடிக்கப்பட்ட சம்பவம் மற்றும் கிழக்கு மாகாண சபைத் தேர்தல் வாக்குப்பதிவு நிலவரம் குறித்த செய்திகளை நேயர்கள் இன்றைய தமிழோசையில் கேட்கலாம்.

Posted in Govt, Politics | குறிச்சொல்லிடப்பட்டது: , , , , , , , , , , , , , | Leave a Comment »