ஏடன் வளைகுடாவில் கடற்கொள்ளையர்களின் அட்டகாசம் அதிகரிக்கிறது
![]() |
![]() |
சோமாலிய கடற்கரைக்கு அண்மையில் நங்கூரமிட்டுள்ள கடத்தப்பட்ட கப்பல் |
சவுதியின் எண்ணெய்க்கப்பலை கடத்திய கடற்கொள்ளையர்கள் அதனை தற்போது சோமாலியாவின் வடபகுதிக்கு கொண்டு சென்றுள்ளதாக அமெரிக்க கடற்படை கூறுகிறது.
இந்த ஆண்டு சோமாலியாவின் கடற்பரப்பில் நடந்த கடற்கொள்ளையர்களின் தாக்குதல்கள் 92. இந்த சம்பவங்களின் விளைவாக, 36 கப்பல்கள் கடத்தப்பட்டன.
அதிகரித்துவரும் இந்தப்பிரச்சினைக்கு பதில் நடவடிக்கையாக கடந்த மாதம், நேட்டோ சோமாலியாவுக்கு உதவி வழங்கல்களை செய்துவரும் கப்பல்களைப் பாதுகாக்கவென ஒரு நடவடிக்கை அமைப்பை உருவாக்கியது.
ஆனால் இது வரை வழங்கப்பட்ட வளங்கள் இந்தப் பிரச்சினையை சமாளிக்கப் போதுமானவையாகத் தோன்றவில்லை.
இதில் சம்பந்தப்பட்ட கடற்பரப்பு மிகவும் பெரியது – சுமார் ஒரு மில்லியன் சதுர கிலோமீட்டர்களுக்கும் மேலான பரப்பு அது.
![]() |
![]() |
நேட்டோ, இந்த கடற்பரப்பில் நான்கு கப்பல்களை மட்டுமே வைத்துள்ளது. எந்த ஒரு நாளிலும், இந்தப் பகுதியில், 10 வெவ்வேறு சர்வதேச போர்க்கப்பல்கள் மட்டுமே இருக்கின்றன.
அமெரிக்க விமானங்கள் கூடுதலாக வான்வழி கண்காணிப்பில் ஈடுபட்டுவருவது ஓரளவுக்கு பலனளித்திருப்பது போல் தோன்றினாலும் பிரச்சினை இன்னும் தொடர்கிறது.
கடற்கொள்ளைகளை சமாளிப்பது குறிப்பாகவே கடினம், ஏனென்றால், கடற்கொள்ளையர்களின் கப்பல்களை, தாக்குதல் நடப்பதற்கு சற்று முன்னர்வரை, மற்ற கலன்களிலிருந்து பிரித்துப்பார்ப்பது ஏறக்குறைய முடியாத ஒன்று. அந்த சமயத்தில் தடுப்பது என்பது தாமதமான ஒன்றாகத்தான் இருக்கும் என்று பிபிசியிடம் அமெரிக்க கடற்படையின் மூத்த அதிகாரி ஒருவர் கூறினார்.
![]() |
![]() |
கடற்கொள்ளையர் படகு ஒன்று |
இந்தப்பகுதியில் பாரிய கடற்படைகளைக் கொண்ட பிராந்திய சக்திகள் ஏதும் இல்லாததும், சோமாலியாவின் கடற்கரைப்பகுதியில் ஒட்டுமொத்த கட்டுப்பாடற்ற குழப்பம் நிலவுவதும், இந்தப்பகுதியில் கடற்கொள்ளையை நசுக்கும் நடவடிக்கைகளை முடக்குகிறது.
கப்பல் நிறுவனங்கள் தங்களது கப்பல்களில் பாதுகாப்பு பணியாளர்களை வைத்துக்கொள்வது குறித்து பரிசீலிக்கலாம் என்று அமெரிக்க கடற்படைக்காகப் பேசவல்ல ஒரு அதிகாரி கோடிகாட்டியிருந்தாலும், இத்தகைய நடவடிக்கை தங்களது கப்பல் பணியாளர்களுக்கு உள்ள ஆபத்துக்களை அதிகரிக்கவே செய்யும், மேலும் காப்பீட்டு செலவையும் அது அதிகரிக்கும் என்று வர்த்தக கப்பல் துறை அஞ்சுகிறது.
ஆனால், சோமாலி கடற்கொள்ளையர்கள் இந்த ஆண்டு இந்த கப்பல் கடத்தல்கள் மூலமாக 5 கோடி டாலர்கள் சம்பாதிப்பார்கள். இந்த நிலையில், இந்தப் பிரச்சினை முடிந்துவிடும் என்று கருதுவது அடிப்படையில் கடினமாகவே இருக்கிறது.
கடத்தப்பட்ட எண்ணெய்க் கப்பல் சோமாலிய கடற்கரையை அடைந்துள்ளது
சோமாலிய கடற்கொள்ளையர்களால் கடத்திச்செல்லப்பட்ட மிகப்பெரிய எண்ணெய்க் கப்பல் தற்போது சோமாலிய கடற்கரையை சென்றடைந்துள்ளது.
இந்த கடற்கொள்ளையர்களுடன் தாங்கள் தொடர்புகளை ஏற்படுத்தியிருப்பதாக தெரிவிக்கும் இந்த கப்பலின் சொந்தக்காரர்கள், இந்த கப்பலில் இருக்கும் 25 கப்பல் பணியாளர்கள் பத்திரமாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.
சிரியஸ் ஸ்டார் என்று பெயரிடப்பட்டுள்ள இந்தக் கப்பலில், நூறு மில்லியன் டாலர்கள் பெறுமதியான கச்சா எண்ணெய் இருக்கிறது. இந்தக் கப்பலை கடத்திச்சென்றிருப்பவர்கள், இதை விடுவிப்பதற்கு மிகப்பெரும் தொகையை கப்பமாக கேட்ககூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தக் கடத்தலை கண்டித்திருக்கும் சவுதி அதிகாரிகள். பயங்கரவாதத்தை போலவே, கடற்கொள்ளையும் மிகப்பெரிய ஆபத்து என்றும் கூறியுள்ளனர்.
இதற்கிடையே, இந்தப் பிராந்தியத்தில் பயணிக்கும் எல்லா கடற்கலன்களுக்கும் தங்களால் பாதுகாப்பு வழங்க முடியாது என்று அமெரிக்காவின் கடற்படை தெரிவித்துள்ளதுடன், அந்த வழியாக பயணிக்கும் அனைத்து கப்பல்களும் தங்களின் பாதுகாப்புக்கான ஏற்பாடுகளை தாங்களே செய்துகொள்ள வேண்டும் என்றும் கூறியுள்ளது.
இந்த கப்பலை கடத்திச்சென்றுள்ள கடற்கொள்ளையர்கள் இது தவிர 13 கப்பல்களை ஏற்கனவே கடத்தி வைத்திருக்கிறார்கள்.
மற்றுமொரு கப்பலும் கடத்தப்பட்டது
இதற்கிடையே, ஏடன் வளைகுடாப்பகுதியில், 25 மாலுமிகளுடன் சென்ற ஹாங்காங்கில் பதிவு செய்யப்பட்ட, சரக்குக் கப்பல் ஒன்று கடத்திச் செல்லப்பட்டுள்ளதாக சர்வதேச கடல்போக்குவரத்து அலுவலகம் அறிவித்துள்ளது.
ஏடன் வளைகுடாப் பகுதியில் நடந்த மற்றுமொரு சம்பவத்தில், 12 பேர் சென்ற, கிரிபாட்டியில் பதிவு செய்யப்பட்ட, ஒரு மீன்பிடி படகும் கடத்தப்பட்டதாக இந்த அலுவலகம் தெரிவிக்கிறது.
சோமாலியாவில் அமைதிக்கு தடையாக இருப்பவர்கள் மீது நடவடிக்கை
![]() |
![]() |
ஆப்பிரிக்காவின் கிழக்கு பிராந்திய நாடுகளின் கூட்டமைப்பான ஐ சி எ டி, அமைப்பைச் சேர்ந்த வெளியுறவு அமைச்சர்கள் எத்யோப்பியாவில் நடத்திய மாநாட்டில் சோமாலியாவில் அமைதியை மீண்டும் கொண்டுவரத் தடையாக இருப்பவர்கள் மீது குறிப்பிட்ட சில தடைகளை விதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
ஆனால் தடை யார் மீது விதிக்கப்படும் என்று பெயர் குறிப்பிடப்படவில்லை.
புதிய அமைச்சரவை தொடர்பாக பிரதமருடன் சோமாலியாவின் இடைக்கால அதிபர் விரைவாக இணக்கப்பாடு காணவேண்டும் என்பதே இவர்களின் குறி என்று செய்தியாளர்கள் கூறுகின்றனர்.
மேலும் முன்னேறி வரும் இஸ்லாமிய கிளர்சிக்கார்ர்களிடம் இருந்து அரசை பாதுகாக்கும் ஆப்பிரிக்க ஒன்றியப் படைகளை மேம்படுத்துவது என்றும் வெளிநாட்டு அமைச்சர்கள் மாநாட்டில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
லாரண்ட் என்குண்டா படை பின்வாங்கலை அறிவித்துள்ளார்
![]() |
![]() |
காங்கோ கிளர்ச்சிப்படைகள் |
காங்கோ ஜனநாயகக் குடியரசில் இருக்கும் லாரண்ட் என்குண்டா அவர்கள் தலைமையிலான கிளர்ச்சிக்குழு, கிவு பிராந்தியத்தின் கிழக்குப்பகுதியில் தமது தற்போதைய நிலைகளில் இருந்து 40 கிலோ மீட்டர் தூரத்துக்கு பின்வாங்கிச் செல்லப்போவதாக அறிவித்துள்ளது.
காங்கோவுக்கான ஐநா மன்றத்தின் சிறப்பு மத்தியஸ்தராக சென்றுள்ள நைஜீரியாவின் முன்னாள் அதிபர் ஜெனரல் ஒபசாஞ்சோ அவர்களின் அழுத்தத்தை தொடர்ந்து இந்த அறிவிப்பு செய்யப்பட்டிருக்கிறது.
தாங்கள் பின்வாங்கிச்செல்லும் பகுதிகளில் ஐநா மன்றத்தின் அமைதிப்படையினர் காவல்காக்க வேண்டும் என்று என்குண்டா கோரியுள்ளார்.
காங்கோவில் இருக்கும் ஐநா மன்ற படைகளின் மூத்த தளபதி ஜெனரல் பிபின் ராவத் அவர்கள் ஐநா மன்றத்தின் விதிகள் தமது படையினரின் கைகளை கட்டிப்போட்டிருப்பதால், கிளர்ச்சிப்படையினரை தமது படைகளால் தோல்வியுறச்செய்ய முடியாத நிலை இருப்பதாக தெரிவித்த பின்னணியில் இந்த அறிவிப்பு வந்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.