இலங்கை ரயில் குண்டுவெடிப்பில் 8 பேர் பலி
இலங்கையின் தலைநகர் கொழும்புக்கு அருகே தெஹிவளையில், ரயிலில் இடம்பெற்ற குண்டு வெடிப்பு ஒன்றில், 8 பேர் கொல்லப்பட்டதுடன், மேலும் 70க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளதாக வைத்திய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பிற்பகலில் சன நெரிசல் மிக்க வேளையில், பயணிகள் பெட்டியில், பொருட்கள் வைக்கும் இடத்தில் வைக்கப்பட்டிருந்த குண்டே வெடித்ததாக இராணுவப் பேச்சாளர் கூறியுள்ளார்.
இந்தத்தாக்குதல் தொடர்பில் விடுதலைப்புலிகள் மீது அரசாங்க அதிகாரிகள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
இது குறித்து இதுவரை விடுதலைப்புலிகள் தரப்பில் இருந்து கருத்து எதுவும் வரவில்லை.
கடந்த மாதம் பேருந்து குண்டு வெடிப்பு ஒன்றில், 20 க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர்.
இதற்கிடையே இலங்கையின் கிழக்கே மட்டக்களப்பு மாவட்டத்தில் ஏறாவூர் என்னும் இடத்தில் காணாமல் போனவர்களை மீட்டுத் தரக்கோரி முஸ்லிம்கள் நடத்தியஆர்ப்பாட்டத்தின் மீது, பொலிஸார் நடத்திய துப்பாக்கிப் பிரயோகத்தில், ஒருவர் கொல்லப்பட்டதாக அங்கிருந்து வரும் செய்திகள் கூறுகின்றன.
மட்டக்களப்பில் முஸ்லிம்கள் கடத்தப்பட்டதில் தனது அமைப்பைச் சேர்ந்தவர் சம்பந்தப்பட்டுள்ளார் என்பதை பிள்ளையான் ஒப்புக்கொண்டார்
மட்டக்களப்பு மாவட்டம் ஏறாவூர் பகுதியில் கடந்த வியாழனன்று முஸ்லிம்கள் இருவர் கடத்தப்பட்ட சம்பவத்தில் தனது அமைப்பைச் சேர்ந்தவர் ஒருவர் சம்பந்தப்பட்டிருந்தார் என்பதை கிழக்கு மாகாண முதல்வர் பிள்ளையான் ஒப்புக்கொண்டார்.
சம்பந்தப்பட்ட அந்த உறுப்பினரை தாங்களே பொலிசாரிடம் ஒப்படைத்துள்ளதாக குறிப்பிட்ட முதல்வர், தனது அமைப்பிலேயேகூட எவரும் சட்டத்தைக் கையிலெடுத்துக் கொள்வதை தான் அனுமதிக்க முடியாது என்று தெரிவித்தார்.
இதேவேளை அந்தப் பகுதியில் கடத்தப்பட்ட முஸ்லிம்களை மீட்டுத்தரக் கோரி ஏறாவூரில் முஸ்லிம்கள் நடத்திய ஆர்ப்பாட்டத்தில், பொலிஸார் துப்பாக்கிப் பிரயோகம் செய்ததில், ஒரு பெண் பலியானதுடன், மற்றுமொருவர் காயமடைந்ததாக அங்கிருந்து வரும் செய்திகள் கூறுகின்றனர்.
கடந்த சில நாட்களில் ஏறாவூர் பகுதியில் 4 முஸ்லிம்கள் கடத்தப்பட்டனர். ஆயினும் அவர்களில் இருவரே இதுவரை மீட்கப்பட்டுள்ளனர்.
மீட்கப்பட்ட இரு முஸ்லிம்களும், தம்மை, முதலமைச்சர் பிள்ளையானின் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் அமைப்பின் உறுப்பினர்களே கடத்தியதாக தெரிவித்திருப்பதாக கூறுகின்ற ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரான ரவூப் ஹக்கீம் அவர்கள், கடத்தப்பட்டு இதுவரை வீடு திரும்பாத மற்ற இருவரது விடயத்தில் கூட தமிழ் மக்கள் விடுதலைப்புலிகளுக்கு தொடர்பிருக்கலாம் என்று குற்றஞ்சாட்டியுள்ளார்.
இந்த விடயம் தொடர்பாக முதலமைச்சர் பிள்ளையானிடம் கேட்டபோதே, இதுவரை விடுவிக்கப்பட்டவர்கள் விடயத்தில் தமது அமைப்பின் உறுப்பினர்கள் சம்பந்தப்பட்டதை ஒப்புக்கொண்ட அவர், ஆனால், இதுவரை விடுவிக்கப்படாதவர்கள் விடயத்தில் தமக்கு சம்பந்தம் எதுவும் கிடையாது என்று கூறினார். அரசியல் நோக்கம் கொண்ட சிலரே இதற்குக் காரணம் என்றும் அவர் குற்றஞ்சாட்டினார்.
இதற்கிடையே, இந்தக் கடத்தல்கள் காரணமாக அந்தப் பகுதியில் பதற்ற நிலை தொடர்ந்து வருகிறது. அதனையடுத்து ஏறாவூர் பகுதியில், இன்று இரவு ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
பொதுமக்கள் குண்டுவெடிப்புகளின் இலக்கானதைக் கண்டித்து வவுனியாவில் ஹர்த்தால்
இலங்கையின் வடக்கே விடுதலைப் புலிகளின் பிரதேசத்தில் பொதுமக்கள் பிரயாணம் செய்த வாகனங்கள் மீது கடந்த வாரம் அடுத்து நடத்தப்பட்ட கிளேமோர் கண்ணிவெடி தாக்குதல்களைக் கண்டித்து திங்களன்று வவுனியாவில் கடையடைப்பும் பணிப் புறக்கணிப்பும் மேற்கொள்ளப்பட்டது.
பாடசாலைகள், அலுவலகங்கள் இயங்கவில்லை. போக்குவரத்து சேவைகளும் பாதிக்கப்பட்டிருந்தன.
கிளிநொச்சி முல்லைத்தீவு மாங்குளம் பிரதேசங்களிலும் இன்று பாடசாலைகள் இயங்கவில்லை என்றும் அங்கு கறுப்பு கொடிகள் கட்டப்பட்டிருந்ததாகவும் வன்னியிலிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் இருக்கும் பிரதேசங்களாகிய மல்லாவி, முறிகண்டி ஆகிய இடங்களில் கடந்த வியாழனன்று அம்புலன்ஸ் வண்டியொன்றின் மீதும் வெள்ளிக்கிழமையன்று சிவிலியன்கள் பிரயாணம் செய்த வண்டி ஒன்றின் மீதும் நடத்தப்பட்ட கிளேமோர் கண்ணிவெடி தாக்குதல்களில் 20 பேர் கொல்லப்பட்டனர், 6 பேர் காயமடைந்தனர் எனபது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையில் வவுனியா மன்னார் மணலாறு மற்றும் முகமாலை போர் முன்னரங்குகளில் இராணுவத்தினர் விடுதலைப் புலிகளுக்கு எதிராகத் தொடர்ந்து மேற்கொண்டு வரும் தாக்குதல்களில் இரு தரப்புக்களையும் சேர்த்து 22 பேர் கொல்லப்பட்டுள்ளதாக இராணுவ அறிக்கைகள் கூறுகின்றன.
மீன்பிடித் தடையை விலக்கக்கோரி மூதூர் மீனவர்கள் ஆர்ப்பாட்டம்
![]() |
![]() |
இலங்கையின் கிழக்கே திருகோணமலை மாவட்டத்தின் மூதூர்
பிரதேசத்தைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான மீனவாகள் இப்பிரதேசத்தில் விதிக்கப்பட்டுள்ள மீன்பிடித் தடையை
விலக்குமாறு கோரி வியாழனன்று ஆர்ப்பாட்டப் பேரணியினை நடத்தினர்.
இந்த ஆர்ப்பாட்டப் பேரணியில் கலந்துகொண்டோர், மீன்பிடித்
தடையயை நீக்குமாறு கோரும் மகஜர் ஒன்றினை ஜனாதிபதியிடம்
கையளிக்குமாறு பிரதேச செயலக அதிகாரிகளிடம் கையளித்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து இந்தப் பிரச்சினைக்கான தீர்வினை செவ்வாய்கிழமையன்று காண்பதாக அதிகாரிகள் ஆர்ப்பாட்டக்காரர்களுக்குத் தெரிவித்துள்ளனர்.
கடந்த பதினாறு தினங்களாகவே தொடரும் இப்பிரச்சினை
தொடர்பாக கருத்துத் தெரிவித்த மீனவர்கள், கடலுக்கு மீன்பிடிக்கச்
செல்லாததினால் தாங்கள் வருமானம் இன்றி பசியால் வாடுவதாக
தெரிவித்துள்ளனர்.