முதல்வர் மகன் அழகிரி தொடர்பான வன்முறைக்கு அரசு நஷ்ட ஈடு வழங்க உயர்நீதிமன்றம் உத்தரவு
![]() |
![]() |
முதல்வரின் புதல்வர் மு.க அழகிரி |
2000மாவது ஆண்டு செப்டம்பர் மாதத்தில் திமுக தொண்டர்கள் முதல்வர் கருணாநிதியின் மகன் அழகிரியுடன் தொடர்பு வைத்துக்கொள்ளக்கூடாது என்ற அறிவிப்பு வெளியானதை அடுத்து மதுரையில் நிகழ்ந்த வன்முறையின்போது தீக்கிரையான ஒரு தனியார் பேருந்திற்கான இழப்பீட்டை தமிழக அரசு வழங்கவேண்டுமென சென்னை உயர்நீதிமன்றம் உத்திரவிட்டிருக்கிறது.
அப்பேருந்தின் உரிமையாளர்களான தனக்கன்குளம் வெங்கடேஸ்வரா தொழிற்பயிற்சி கழகத்திற்கு 2 லட்ச ரூபாய் இழப்பீட்டை இன்னும் எட்டு வாரங்களுக்குள் செலுத்திவிடவேண்டுமென நீதிபதி சந்துரு கூறியிருக்கிறார்.
அழகிரிக்கும் திமுக தலைவர் கருணாநிதிக்கும் மோதல் முற்றிவந்த நேரத்தில் அழகிரியுடன் தொண்டர்கள் தொடர்பை துண்டித்துக்கொள்ளவேண்டும் என்ற அறிவிப்பு வெளியானது. அப்போது அழகிரி ஆதரவாளர்களின் எதிர்ப்பே பரவலான வன்முறையாக வெளிப்பட்டதாக செய்திகள் கூறின.
வெங்கடேஸ்வரா தொழிற்பயிற்சிக்கழகம் எரிக்கப்பட்ட பேருந்திற்கு வாகன காப்பீடு இல்லை என்று முறையிட்டும் அதற்கு எவ்வித இழப்பீட்டையும் வழங்க தமிழக அரசு முன்வரவில்லை. கடந்த மூன்றாண்டுகளாக அக்கழகத்தின் மனுவிற்கு உயர்நீதிமன்றத்தில் பதில் மனு கூட தாக்கல் செய்யப்படவில்லை. இந்நிலையிலேயே நீதிபதி சந்துரு தனது தீர்ப்பினை அளித்திருக்கிறார்.
அப்போது நிகழ்ந்த வன்முறைகள் குறித்தும், குடிமக்களுக்கு அரசு தகுந்த பாதுகாப்பு அளிக்காதது குறித்தும் நீதிபதி கடும் அதிருப்தியினை தெரிவித்திருக்கிறார். எந்த ஒரு தனிநபரின் பிரச்சினைகளுக்காகவும் மற்ற குடிமக்களின் அடிப்படை உரிமைகள் பாதிக்கப்படக்கூடாது, கும்பல்கள் வன்முறையில் இறங்கும்போது ஒன்றும் செய்ய இயலவில்லை என்று அரசு ஒதுங்கிக்கொள்ளமுடியாது என்று நீதிபதி சந்துரு கூறியிருக்கின்றார்.