கோதபய ராஜபக்ஷ கூறியதாகத் தெரிவிக்கப்படும் கருத்துகளுக்கு இலங்கை ஊடக அமைப்புகள் எதிர்ப்பு
 |
|
கோதாபய ராஜபக்ஷ |
இலங்கை பாதுகாப்புச் செயலர் கோதாபய ராஜபக்ஷ கூறியதாகக் கூறப்படும் கருத்துக்களுக்கு இலங்கையின் ஊடக அமைப்புக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
இலங்கையின் வடக்கே இராணுவத்துக்கு விடுதலைப் புலிகளுக்கும் இடையே நடக்கும் மோதல்கள் குறித்து பக்கசார்பற்ற முறையில் செய்திகளை வெளியிடுவதற்கு பாதுகாப்பு செயலரின் பேச்சு அச்சுறுத்தலாக உள்ளதாக ஊடக அமைப்புகள் கருதுகின்றன.
பத்திரிக்கையாளர் கீத் நோயார் கடத்தப்பட்டு அடித்துத் துன்புறுத்தப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்திருந்த இரண்டு மூத்த பத்திரிக்கையாளர்களை கோதாபய ராஜபக்ஜசே தன்னைக் காணவருமாறு பணித்ததாக ஐந்து ஊடக குழுமங்கள் ஒரு அறிக்கையில் கூறியுள்ளன.
அரசாங்க ஊடகத்தில், இராணுவம் மற்றும் இராணுவத் தலைவர்களின் செயல்பாடுகள் குறித்த விமர்சனங்கள் ஏற்புடையவையல்ல என்று பாதுகாப்பு ஆலோசகருடனான இந்தச் சந்திப்பின்போது இவர்களுக்கு கூறப்பட்டதாகவும், அவர்களின் உயிர் பாதுகாப்பு குறித்து இலைமறைகாயாக அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதாகவும் ஊடக குழுமங்கள் தெரிவித்துள்ளன.
யாழ்ப்பாணத்தில் செய்தியாளர் வெட்டிக் கொலை
இலங்கையின் வடக்கே யாழ்ப்பாணம் கல்லுண்டாய்வெளியில் புதன் மாலை 4.30 மணியளவில் சக்தி தொலைக்காட்சி சேவையின் யாழ் மாவட்ட செய்தியாளராகிய 32 வயதுடைய பரநிருபசிங்கம் தேவகுமாரன் அடையாளம் தெரியாத ஆட்களினால் வெட்டிக் கொல்லப்பட்டுள்ளதாக யாழ்பபாணம் பொலிசார் தெரிவித்திருக்கின்றனர்.
இவருடன் சென்றதாகக் கூறப்படும் யாழ்ப்பாணம் செயலக சிற்றூழியராகிய 38 வயதுடைய மகேந்திரன் வரதன் என்பவர் படுகாயமடைந்து யாழ் வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டு அங்கு இறந்ததாகவும் பொலிசார் தெரிவித்திருக்கின்றனர்.
சம்பவ இடத்தைப் பார்வையிட்டு விசாரணை நடத்திய மல்லாகம் மாவட்ட நீதிபதியின் உத்தரவையடுத்து, செய்தியாளர் தேவகுமாரனின் சடலம் யாழ் போதனா வைத்தியசாலைக்குக் கொண்டுசெல்லப்பட்டுள்ளது.
இலங்கை பொலிசாரால் கைதுசெய்யப்பட்டுள்ள இந்திய மீனவர்கள் தடுப்புக் காவலில்
இலங்கையின் வடமேற்குக் கடற்பரப்பில் கச்சதீவுக்கு அருகில் செவ்வாய் இரவு தலைமன்னார் கடற்படையினரால் கைதுசெய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்படும் 23 இந்திய மீனவர்களை வியாழன் வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு மன்னார் மாவட்ட நீதிமன்றம் புதனன்று உத்தரவிட்டிருக்கின்றது.
இலங்கைக் கடற்பரப்பில் 4 படகுகளில் அத்துமீறி பிரவேசித்து மீன்பிடித்தமைக்காகவே இவர்கள் கைதுசெய்யப்பட்டிருப்பதாக தலைமன்னார் பொலிசார் தெரிவித்திருக்கின்றார்கள்.
தங்கச்சிமடம், இராமேஸ்வரம், பாம்பன் ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த இவர்கள் நாளை மீண்டும் நீதிமன்றத்தில் நிறுத்தப்படுவார்கள் எனவும் பொலிசார் கூறியிருக்கின்றனர்.
இதேவேளை, இரண்டு வாரங்களுக்கு முன்னர் தலைமன்னார் கடற்பரப்பில் கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டிருந்த 13 இந்திய மீனவர்களையும் மன்னார் மாவட்ட நீதிமன்றம் நேற்று விடுதலை செய்திருக்கின்றது.
இவர்களை கொழும்பு மீரிஹானையில் உள்ள இடைத்தங்கல் முகாமுக்கு அனுப்பி அங்கிருந்து அவர்களை அனுப்பிவைப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறும் மன்னார் மாவட்ட நீதிமன்றம் அதிகாரிகளுககு உத்தரவிட்டிருக்கின்றது.
மட்டக்களப்பில் தமிழர்-முஸ்லிம் இடையிலான பதற்றத்தைத் தணிப்பது தொடர்பில் கூட்டம்
 |
|
கிழக்கு மாகாண முதல்வர் |
இலங்கையின் கிழக்கே கடந்த சில தினங்களாக வழமைநிலை பாதிக்கப்ப்டுள்ள மட்டக்களப்பு மாவட்டம் ஏறாவூர் பிரதேசத்தில் வியாழன் முதல் வழமைநிலையை ஏற்படுத்தவது என புதன் மாலை பொலிஸ் நிலையத்தில் மாகாண முதலமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தன் கலந்துகொண்ட கூட்டம் ஒன்றில் முடிவுசெய்யப்பட்டுள்ளது.
மத்திய அமைச்சர் அமீர் அலி, மாகாண சபை உறுப்பினர்கள், சமய சமூக பிரமுகர்கள் மற்றும் பாதுகாப்பு அதிபாரிகள் உட்பட பலரும் இக்கூட்டத்தில் கலந்துகொண்டனர்.
ஏறாவூர் எல்லைப் பிரதேசமான ஆறுமுகத்தான் குடியிருப்பில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளினால் அமைக்கப்பட்டுவரும் காவலரனை அகற்றுமாறு முஸ்லிம்களினால் முன்வைக்கப்பட்ட கோரிக்கையை முதலமைச்சர் ஏற்றுக்கொண்டதாகவும், ஆறுமுகத்தான் குடியிருப்பிலிருந்து இடம்பெயர்ந்துள்ள தமிழர்கள் அச்சமின்றி மீளக் குடியமர்வதற்கான பாதுகாப்பு உத்தரவாதத்தை முஸ்லிம் பிரதிநிதிகள் வழங்கியதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
சமாதானத்தை வலியுறுத்தி கொழும்பில் பெண்கள் பேரணி
இலங்கை தலைநகர் கொழும்பில் புதனன்று நூற்றுக்கணக்கான பெண்கள் அமைதிப் போராட்டமொன்றில் ஈடுபட்டனர்.
நாட்டில் நடந்துவரும் கொடிய யுத்தத்தினை நிறுத்தவேண்டும், அரசும் தமிழீழ விடுதலைப் புலிகளும் சமாதானத்தை நிலைநிறுத்த புரிந்துணர்வுடன் செயற்படவேண்டும், அதிகரித்துச் செல்லும் வாழ்க்கைச் செலவைக் கட்டுப்படுத்த வேண்டும், உலக மயமாக்கல் அடிமைத் தனத்திற்கு பணியக்கூடாது போன்ற பல கோரிக்கைகளை முன்வைத்து, சம்பந்தப்பட்ட தரப்பினர்மீது அழுத்தத்தினைப் பிரயோகிக்கும் நோக்கில் போராட்டம் நடத்தப்பட்டது.
சமூக நீதிக்கான பெண்கள் இயக்கம், சமாதானம் மற்றும் நிலையான அபிவிருத்திக்குமான மக்களுக்கிடையிலான கலந்துரையாடல் போன்ற அமைப்புக்களின் ஏற்பாட்டில் கொழும்பு விகாரமகாதேவி பூங்காவிற்கு எதிரில் இடம்பெற்ற இந்த அமைதிப் பேரணியில் நாட்டின் பல பாகங்களிலிருந்தும் நூற்றுக்கணக்கானோர் பதாதைகளைத் தாங்கிய வண்ணம் கலந்துகொண்டனர்.