‘Discrepancy among different communities in higher studies should be resolved first’ – Lok Saba Committee
Posted by Snapjudge மேல் மே 2, 2007
உயர் கல்வியை பெறுவதில் பல்வேறு சமூகங்களுக்கு இடையே நிலவும் இடைவெளியை முதலில் சரிப்படுத்த வேண்டும்: நாடாளுமன்ற நிலைக்குழு
புதுதில்லி, மே 3: உயர் கல்வி நிறுவனங்களில் இட ஒதுக்கீடு அளிக்க உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ள நிலையில், இவ் விவகாரம் குறித்து ஆய்வு மேற்கொண்ட மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சகத்துக்கான நாடாளுமன்ற நிலைக்குழு தனது அறிக்கையை மத்திய அரசிடம் அளித்தது.
அதில், உயர் கல்வி நிறுவனங்களில் சேரும் பல்வேறு சமூகங்களைச் சேர்ந்தவர்களுக்கிடையே இடையே நிலவும் இடைவெளிகளை சரிப்படுத்தினால் தான் இட ஒதுக்கீடு என்ற நோக்கத்தின் இலக்கு வெற்றிகரமாக அமையும் என்று கருத்து தெரிவித்துள்ளது.
முன்னதாக, உயர் கல்வி நிறுவனங்களின் இதர பிற்படுத்தப்பட்டோருக்கு 27 சதவீத இட ஒதுக்கீடு அளித்திட உச்ச நீதிமன்றம் அண்மையில் தடை விதித்தது.
மேலும், இட ஒதுக்கீடு தொடர்பாக தேவையான புள்ளி விவரங்கள் ஏதும் அரசால் தாக்கல் செய்யப்படவில்லை எனவும் நீதிமன்றம் கருத்து தெரிவித்தது.
இதுதொடர்பாக நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மறு ஆய்வு மனு மீதும் உச்ச நீதிமன்றம் தனது கருத்து தெரிவிக்கையில், ஏற்கெனவே உச்ச நீதிமன்றம் அறிவித்த தடை நீடிக்கும் என உத்தரவிடப்பட்டது.
அதேவேளையில், நாடாளுமன்ற நிலைக்குழு பல்வேறு மாநிலங்கள், சமூக மக்கள் உள்ளிட்டோரிடம் நடத்திய ஆய்வில் ஏராளமான தகவல்களை திரட்டினர்.
அதன் அடிப்படையில் தயாரிக்கப்பட்ட அறிக்கையை மத்திய அரசிடம் அளிக்கப்பட்டது. அதில், உயர் கல்வி பெறுவதில் பல்வேறு சமூகங்களுக்கு இடையே ஏராளமான இடைவெளிகள் நிலவுகின்றன. இவற்றை சரிசெய்தால் தான் சமூக நீதி முதலில் கிடைக்கும்.
இடைவெளி:
- உயர் கல்வி நிறுவனங்களில் சேர்ந்துள்ள தாழ்த்தப்பட்ட மாணவர்களின் சதவீதம் 6.7 தான்.
- பழங்குடியினரின் எண்ணிக்கை 4.9 சதவீதம்.
- அதேபோல 10 சதவீதத்துக்கும் குறைவான அளவில் பிற்படுத்தப்பட்டோர் உயர் கல்வி நிறுவனங்களில் படிக்கின்றனர்.
இவ்வாறு பல்வேறு சமூகத்துக்குள்ளே உயர் கல்வி சேர்க்கையின்போது நிலவும் இடைவெளியை முதலில் சரிப்படுத்த வேண்டும். அப்போது தான் பிற்பட்டோருக்கு 11-வது திட்டக் காலத்தில் அளிக்க வேண்டிய 15 சதவீத இட ஒதுககீடு அளிக்க இயலும் எனவும் குழு கருத்து தெரிவித்துள்ளது.
மறுமொழியொன்றை இடுங்கள்