ஓ பக்கங்கள் – 6
நன்றி : குமுதம்
தாத்தாவும் பேரனும் சந்தித்துப் பேசினால் அது பரபரப்பான செய்தியாகும் ஆச்சரியம் தி.மு.க அரசியலுக்கு மட்டுமே உரியது. சன் டி.வி. அதிபர் கலாநிதி மாறன் தன் தாத்தாவான கலைஞர் கருணாநிதியை சுமார் ஓராண்டுக்குப் பிறகு சந்தித்தது அரசியல் திருப்புமுனையாக கருதப்படுகிறது!
பாட்டாளி மக்கள் கட்சி தி.மு.க கூட்டணியில் நீடிக்குமா நீடிக்காதா என்பதை விட அதிக ஆர்வத்துடன் தமிழக அரசியலில் அலசப்படுவது தி.மு.க தலைவர் கலைஞர் கருணாநிதியின் குடும்பங்களுக்குள் நடக்கும் அரசியல்தான். வேறு எந்த அரசியல் கட்சியிலும் இந்த நிலை இல்லை. தி.மு.க.வில் இந்த நிலை இருப்பதற்குக் காரணம் கலைஞரேதான்.
கட்சிக்குள் நெடுஞ்செழியன், அன்பழகன் போன்ற சீனியர்களை ஓரங்கட்டிவிட்டு 1969ல் முதன்முறை அவர் முதலமைச்சரானபோது, அதற்கு பெரும் உதவியாக இருந்தவர் எம்.ஜி.ஆர்தான். சினிமா செல்வாக்கால் பெரும் மக்கள் ஆதரவுடன் இருந்த எம்.ஜி.ஆர் மட்டும் அப்போது தன்னை ஆதரிக்காமல் எதிர்த்திருந்தால், தான் நிச்சயம் முதலமைச்சராகியிருக்க முடியாது என்பது அப்போதே கலைஞருக்குத் தெரியும். அரசியல் சாணக்கியத்தில் வல்லவர் என்று அன்று முதல் இன்று வரை பெயரெடுத்திருக்கும் அவர், தன்னை மேலே தூக்கி வைத்த கையே கீழே இறக்கினால் என்ன செய்வது என்ற கவலையில் அந்தக் கையை பலவீனப்படுத்தும் வேலைகளில் அப்போது இறங்கினார்.
அதில் பலியானவர்தான் இப்போது மணி விழா கொண்டாடிய அவரது மூத்த மகன் மு.க.முத்து.
அருமையான குரல்வளம் உடையவர் முத்து. ஏ.எம்.ராஜா, பி.பி.ஸ்ரீனிவாஸ், எஸ்.பி.பாலசுப்பிரமணியம் குரல்வகைகளைச் சேர்ந்தது முத்துவின் குரல். ஒரு பாடகராகவோ, டப்பிங் கலைஞராகவோ தன் வாழ்க்கையைச் சிறப்பாக அமைத்துக் கொண்டிருக்கும் வாய்ப்பிருந்த முத்துவை, தன் அரசியலுக்காக, எம்.ஜி.ஆருக்கு எதிராக நிறுத்தினார் கலைஞர். சினிமாவில் எம்.ஜி.ஆர் வகித்து வந்த இடத்தை முத்துவைக் கொண்டு கைப்பற்ற அவர் போட்ட திட்டம் படு தோல்வியடைந்தது. முத்து வேறுவிதமான நடிகராகக் கூட சினிமாவில் இடம் பிடித்திருக்க முடியும். ஆனால், அவரை எம்.ஜி.ஆரை இமிடேட் செய்யவைத்து எம்.ஜி.ஆர். இடத்தைப் பிடித்துவிட செய்த முயற்சி அபத்தமான தோல்வியில் முடிந்தது.
தன் 22 வயதிலிருந்து 26 வயது வரை இப்படி திசை மாற்றப்பட்ட முத்துவின் வாழ்க்கையும் திசை மாறி, தனக்கும் பிறருக்கும் வேதனைகளும் வலிகளும் நிரம்பியதாகியது. அதிலிருந்து மீண்டு வந்து அறுபதாம் வயதிலேனும் அவர் அமைதியைப் பெறுவதற்கு அவரது குழந்தைகள் அவருக்கு உதவியிருக்கிறார்கள் என்பது ஒரு மகத்தான ஆறுதல்.
தன் அரசியலுக்காக தன் குடும்பத்தை கலைஞர் பயன்படுத்துவதும், குடும்பம் தன் நலனுக்காக அந்த அரசியலைப் பயன்படுத்திக் கொள்வதும் தொடர் நிகழ்ச்சிகளாகிவிட்டன. இந்த கலாசாரம் தி.மு.கழகத்தில் அவரால் வளர்க்கப்பட்டு ஒவ்வொரு மாவட்டத்திலும் வட்டாரப் பிரமுகர்களின் குடும்பங்களின் அரசியல் நடக்கிறது. இது இதர கட்சிகளுக்கும் பரவிவிட்டது. விளைவாக, இன்று எந்தக் கட்சியிலும் உட்கட்சி ஜனநாயகம் என்பதே இல்லை.
உட்கட்சி ஜனநாயகம் என்பது இல்லாமல் ஆக்கப்பட்டதினாலேதான், கலைஞர் நினைத்தால் ஒரே நாளில் பேரன் தயாநிதி மாறனை எம்.பி.யாக்கி மத்திய அமைச்சராகவும் ஆக்கிவிட முடிந்திருக்கிறது. ஒரே நாளில் தூக்கி எறியவும் முடிகிறது. இன்னொரு நாள் மகள் கனிமொழியை எம்.பி.யாக்க முடிகிறது. ‘தந்தையைக் கொன்ற பிரகலாதா, ஜாக்கிரதை’ என்று எச்சரிக்கைக் கவிதை எழுத முடிகிறது. அடுத்த நாளே தயாநிதியின் அண்ணன் கலாநிதியை பேச்சு வார்த்தைக்கு வர அனுமதிக்கவும் முடிகிறது.
தயாநிதி மாறனை மத்திய அமைச்சர் பதவியிலிருந்து தூக்கியபோது, கட்சி அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து ஏன் நீக்கக்கூடாது என்று காரணம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. அவர் அளித்த விளக்கம் ஏற்கப்பட்டதா இல்லையா என்று எட்டு மாதமாகியும் கட்சி சொல்லவில்லை. அவருடைய எம்.பி. பதவியும் தொடர்கிறது. கூடவே பிரகலாதனே ஜாக்கிரதை என்று அர்ச்சனை ! இன்னொரு மகன் அழகிரியைப் பற்றி அதிகாரபூர்வமாக சொல்ல எதுவும் இல்லை. அவர் கட்சிக்காரரா இல்லையா என்பது அவருக்கும் கலைஞருக்கும் மட்டுமே தெரிந்த ரகசியம்.
குடும்பத்தில் தான் வளர்த்த சிலர் சிறப்பாக வருவதும், சிலர் வீணாகிப் போவதும், சிலர் தன் மார்பிலேயே பாய்வதும் எந்தத் தந்தைக்கும் மாறி மாறி மகிழ்ச்சியும் வேதனையும் தரும் நிகழ்வுகள்தான். கட்சித் தலைவர், குடும்பத் தலைவர் என்ற இரு பாத்திரங்களையும் போட்டுக் குழப்பிக் கொண்டுவிட்ட கலைஞர், இதில் அனுபவித்த உணர்ச்சிகளை அவரே தன் ‘நெஞ்சுக்கு நீதி’ சுயசரிதைத் தொடரில் பகிர்ந்துகொண்டால்தான் முழுமையாக நம்மால் உணர முடியும். ஆனால் அவர் இது பற்றியெல்லாம் அதில் எழுதுவதில்லை.
இன்று தமிழக பத்திரிகைகள் கவனம் எல்லாம் மாறன் சகோதரர்களும் ஸ்டாலினும் ஓரணியில் வருவார்களா ? வந்தால் ஸ்டாலின்அழகிரி ‘தற்காலிகக் கூட்டு’ என்ன ஆகும் ? கனிமொழி யார் பக்கம் ? மறுபடியும் எல்லாரும் ஓரணி ஆகிவிடுவார்களா? என்பது போன்ற அலசல்களில் இருக்கின்றது.
தி.மு.க.வுக்குள் அண்மை வருடங்களில் நடந்து வந்திருக்கும் அதிகாரப் போட்டிகளை கவனித்தால் சில போக்குகள் புரியும். கட்சிக்குள் வைகோவின் வளர்ச்சி ஸ்டாலினுக்கு ஆபத்தானது என்பதால், வைகோ வெளியேற்றப்பட்டார். எம்.ஜி.ஆரை வெளியேற்றியது போல கலைஞர் செய்த இரண்டாவது தவறு இது. வைகோ வெளியேறியதால் சுமார் ஒரு தலைமுறை இளைஞர்களை தி.மு.க இழந்தது. மத்திய அரசியலுக்கு தேவைப்படும் கூட்டணித் தந்திரங்களை கலைஞர் சரியாகப் பின்பற்றும் ஒரே காரணத்தினால்தான் தி.மு.க இன்னும் தப்பிக்கிறது.
முரசொலி மாறன் மறைவுக்குப் பின் தயாநிதியைக் கொண்டு வந்தபோது கலைஞர் போட்ட கணக்கில் தப்பான விஷயம், தனக்கு முரசொலி மாறன் இருந்ததைப் போல ஸ்டாலினுக்கு தயாநிதி இருப்பார் என்ற கணக்குதான். தொடர்ந்து அதே தப்புக் கணக்கை அவர் கனிமொழி விஷயத்திலும் போட்டுக் கொண்டிருக்கிறார். கனிமொழி அரசியலில் நுழையும்போதே கட்சிக்குள்ளும் குடும்பத்துக்குள்ளும் தன் கூட்டணியை அமைத்துவிட்டார். மதுரைக்குப் போய் அழகிரியைச் சந்தித்து ஆசி பெற்றது அதை உணர்த்தியது. மூத்தவர் என்பதற்காக முத்துவைத் தேடிப் போகவில்லை.
உண்மை என்ன ? தயாநிதியும் கனிமொழியும் ஸ்டாலின் தலைமுறைக்காரர்களல்ல. தாங்களே நேரடியாக அதிகாரத்தைச் சுவைக்கும் வாய்ப்பு வரும்போது அதை வேறு யாரோடோ பகிர்ந்து கொள்ளும் பார்வை இந்தத் தலைமுறைக்குக் கிடையாது.
எனவே இன்று தி.மு.க.வுக்குள் தயாநிதியும் சரி, கனிமொழியும் சரி தாங்களே முதலமைச்சர் பதவிக்குத் தகுதியானவர்கள்தான் என்று நம்புகிற, ஆசைப்படக்கூடிய தலைமுறையின் பிரதிநிதிகள். கலைஞர் அந்தப் பதவியில் இருக்கும்வரை காத்திருப்பார்கள். அவருக்குப் பின் ஸ்டாலின் முதலமைச்சர் என்ற நிலை வந்தால் அது அவர்களுக்கு உவப்பானதல்ல. மத்திய அமைச்சர் பதவியால் கிடைத்த செல்வாக்கு, விளம்பரம், புகழ் எல்லாம் தயாநிதியை, மாநில முதலமைச்சர் பதவிக்காக மெல்ல காய் நகர்த்தும்
ஆசையைத் தூண்டின. அதன் விளைவாகத்தான் ஸ்டாலினையும் அழகிரியையும் மேலும் பிரிக்கும் நோக்கத்துடன் ‘தினகரன்’ சர்வே வெளியிடப்பட்டது.அதுவோ எதிர்மறை விளைவை ஏற்படுத்தியது.
கலைஞர் முதுமையினாலும் உடல் நலக்குறைவினாலும் சிரமப்படாமல் வேலைபளுவைக் குறைத்துக் கொள்ள முதலமைச்சர் பதவியை ஸ்டாலினுக்குக் கொடுத்துவிட்டு, தான் கட்சித் தலைவராக மட்டும் இருந்து வழிகாட்டலாமே என்று நான் ‘ஓ’பக்கங்களில் எழுதியதும், அதற்குக் கடும் எதிர்ப்பு கனிமொழியின் ஆதரவாளர்களிடமிருந்துதான் வந்தது. அவர்கள்தான் கண்டனக் கூட்டம் போட்டார்கள். காரணம், என் கட்டுரையின் விளைவாக ஸ்டாலினுக்கு துணை முதலமைச்சர் பதவியை கலைஞர் கொடுத்துவிட்டால் என்ன செய்வது என்ற அச்சம்தான். ஸ்டாலினிடமிருந்தோ அவர் ஆதரவாளர்களிடமிருந்தோ எனக்கு பெரும் கண்டனங்கள் ஏதுமில்லை.
இன்று தி.மு.க.வுக்குள் அதிகாரப் போட்டி பலமாக நடக்கிறது. போட்டி முழுவதும் ஒரு குடும்பத்தினருக்குள்தான். அழகிரி, ஸ்டாலின், தயாநிதி, கனிமொழி என்று நால்வர் போட்டியில் இருக்கிறார்கள். இருப்பதோ இரு பெரும் பதவிகள் மட்டும்தான். முதலமைச்சர் பதவி. கட்சித்தலைவர் பதவி. இப்போது இரண்டையும் ஒருவரே வைத்திருக்கிறார். அடுத்த கட்டத்தில் இது பிரிக்கப்படும் சூழல் வரும். அப்போது யாருக்கு எது? கட்சிக்குள் இதற்கு சிறந்த முன்னுதாரணங்களாக இருப்பவர்கள் கலைஞரும் பேராசிரியரும்தான். பேராசிரியர் கலைஞரை விட மூத்தவர். வயதில் மட்டுமல்ல. அரசியலிலும் மூத்தவர். ஆனால் நம்பர் டூ பதவியை நிரந்தரமாக ஏற்றுக் கொண்டு அரசியலில் நிம்மதி கண்டவர். ஸ்டாலினை தன் முதலமைச்சராகவோ தலைவராகவோ ஏற்கவும் தயாரான மன நிலையில் இருப்பவர் என்று பலமுறை தன் பேச்சுக்களில் உணர்த்தியிருக்கிறார்.அவ்வளவு ‘பக்குவம்‘ வாய்ந்தவர்.
தயாநிதியும் ஸ்டாலினும் கலைஞர், பேராசிரியர் போல திகழலாம். அல்லது கனிமொழியும் அழகிரியும் அது போலத் திகழ முயற்சிக்கலாம். தமிழ்நாட்டை இரு மாநிலங்களாகப் பிரித்துவிட்டால் இரு அணிகளுக்கும் சிறந்த சமவாய்ப்பு கிட்டும்.
எப்படிப் பார்த்தாலும் இன்னும் முப்பது நாற்பது ஆண்டுகளுக்கு தி.மு.க ஆட்சி அமைத்தால், கலைஞர் குடும்ப வாரிசுகளே தலைமைப் பதவிகளில் இருப்பார்கள். தி.மு.கவில் ஓ.பன்னீர்செல்வங்களுக்கான வாய்ப்புகள் மிகக் குறைவு..
இந்த வார கேள்வி
தன் பேரக் குழந்தைகளை தமிழ் கற்பிக்கும் டெல்லி தமிழ்ச் சங்கப் பள்ளிகளில் சேர்க்காமல் ஆங்கில கான்வெண்ட்டில் சேர்த்துப் படிக்க வைத்த குற்றச்சாட்டுக்கு ஆளான பா.ம.க நிறுவனர் ராமதாஸ், தமிழ்நாட்டில் மட்டும் தமிழ் வழிக் கல்வியை ஏற்படுத்திவிடுவார் என்று எப்படி முன்னாள் துணை வேந்தர்கள் வசந்தி தேவி, அவ்வை நடராஜன் போன்றோர் நம்புகிறார்கள் ? வேட்பாளர் சொத்துக் கணக்கு வெளியிடுவது போல தமிழ் வழிக்கல்வி பற்றிப் பேசும் அரசியல்வாதிகள் தங்கள் குடும்பக் குழந்தைகள் யார் யார் எந்தெந்தப் பள்ளிகளில் என்ன படிக்கிறார்கள் என்ற விவரங்களை உடனடியாக வெளியிட முன்வருவார்களா? ஆரம்பக் கல்வியை தமிழ் வழிக் கல்வியாக மாற்றக் கோருபவர்கள், முதல் கட்டமாக தங்கள் வீட்டுக் குழந்தைகளை ஏற்கெனவே தமிழ் மீடியம் இருக்கும் எண்ணற்ற அரசுப் பள்ளிகளுக்கு ஜூன் 1 முதல் மாற்றி அனுப்புவார்களா ? தமிழ் வழிக்கல்வி என்பது ஏழைத் தமிழர்களுக்கு மட்டும்தானா?
இந்த வார பூச்செண்டு
ஹரியானா மாநிலத்தில் நாதுபூர் கிராமத்தில் ஒன்பது வயதுச் சிறுமி மோனாவுக்கு திருமணம் நடத்த பெற்றோர் ஏற்பாடு செய்திருப்பது தெரிந்ததும், அது பற்றி உயர் அதிகாரிகளுக்குத் தகவல் கொடுத்து குழந்தைத் திருமணத்தைத் தடுத்து நிறுத்திய அங்கன்வாடி சூப்பர்வைசர் சீமாகுமாரிக்கு இ.வா.பூச்செண்டு.
இந்த வார குட்டு
சிவாஜியையும் எம்.ஜி.ஆரையும் நையாண்டி செய்து இண்டர்நெட்டில் எழுதியதை திரும்பப் பெறும்வரை எழுத்தாளர் ஜெயமோகனுக்குத் திரையுலகில் பணியாற்ற ஒத்துழைப்புத் தரமாட்டோம் என்று தீர்மானம் போட்டதற்காக நடிகர் சங்கத்துக்கு இ.வா.குட்டு. ஊனமுற்றவர்களை நையாண்டி செய்து காமெடி; பெண்களை இழிவுபடுத்தும் ஆபாச நடனங்கள்; போலீஸ், அரசியல்வாதிகளைக் கேவலப்படுத்தும் காட்சிகள்; என்று ஒட்டு மொத்த சமூகத்தையே இழிவுபடுத்தி திரைப்படங்களை உருவாக்கும் தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள் ஆகியோருக்கு ஒத்துழைப்புத் தரமாட்டோம் என்று அடுத்தபடி அறிவிக்கும் துணிச்சல் நடிகர், நடிகைளுக்கு உண்டா?
இந்த வார சிரிப்பு
தமிழகத்தில் விரைவில் காங்கிரஸ் ஆட்சி அமைக்கும். மத்திய அமைச்சர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன்.
நன்றி : குமுதம்