கர்ணல் கருணாவுக்கு 9 மாதம் சிறைத் தண்டனை: பிரித்தானிய நீதிமன்றம் தீர்ப்பு
விடுதலைப்புலிகள் அமைப்பிலிருந்து பிரிந்து சென்ற குழுவின் தலைவரான கர்ணல் கருணா, போலி கடவுச்சீட்டு வைத்திருந்த குற்றச்சாட்டிற்காக பிரிட்டன் நீதிமன்றம் அவருக்கு ஒன்பது மாதம் சிறை தண்டனை வழங்கியுள்ளது.
விநாயகமூர்த்தி முரளிதரன் என்கிற பெயர்கொண்ட இவர் கடந்த நவம்பர் மாதம் இங்கிலாந்தில் கைதுசெய்யப்பட்டார்.
வழக்கு விசாரணையின்போது அரசு தரப்பின் வாதத்தை எடுத்துரைத்த அரசு தரப்பு பாரிஸ்டர், கருணா, கடந்த செப்டம்பர் மாதம் 17ம் தேதி பிரிட்டனுக்குள் கோகில ஹர்ஷ குணவர்த்தன என்ற பெயரில் ராஜிய பாஸ்போர்ட் ஒன்றுடன் நுழைந்தார். இந்த பாஸ்போர்ட்டில் அவருக்கு பிரிட்டனுக்கு வந்து போக ஆறுமாத பலமுறை விஜயம் செய்யும் விசா ஒன்று வழங்கப்பட்டிருந்தது. பாஸ்போர்ட்டில் குறிப்பிடப்பட்ட பெயர் வேறு ஒருவருடைய பெயராக இருந்தாலும், அதில் இருந்த புகைப்படம் கருணாவுடையதாக இருந்தது என்றார்.
இந்த விசா, வனவிலங்கு பாதுகாப்பு குறித்த சர்வதேச மாநாடு ஒன்றில் குறிப்பிட்ட நபர் கலந்துகொள்வதற்காக கோரப்பட்டது என்றும் வழக்குரைஞர் கூறினார்.
பிரிட்டனுக்குள் வந்த கருணா கடந்த நவம்பர் இரண்டாம்தேதி பிரிட்டன் குடிவரவுத் துறையினரால் தடுத்து வைக்கப்பட்டர் என்று கூறிய அரசு வழக்குரைஞர், குடிவரவுத் தடுப்புக்காவலில் இருந்த அவரை, டிசம்பர் 22ம்தேதி, லண்டன் பெருநகரப் போலிசார் அடையாள ஆவணங்கள் மோசடி சட்டத்தின் கீழ் அவரைக் கைதுசெய்து குற்றச்சாட்டை பதிவு செய்தனர்.
போலிசார் கருணாவிடம் நடத்திய விசாரணையின்போது, கருணா தான் ஒரு இலங்கை பிரஜை என்றும், தனக்கு இந்த ராஜிய பாஸ்போர்ட் இலங்கையின் பாதுகாப்பு செயலர் கோத்தாபய ராஜபக்ச அவர்களின் உதவியால் தரப்பட்டது என்றும் கூறியதாகவும், அரசு வழக்குரைஞர் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
இலங்கையிலிருந்து லண்டனுக்கு வரும்போது, கொழும்பு விமான நிலையத்தில், இலங்கையின் குடிவரவு மற்றும் சுங்க இலாகா வழிமுறைகளுக்கு உட்படாமல் தான் விமானத்துக்கு கொண்டுசெல்லப்பட்டதாகவும், விமானத்தில் ஏறும் முன்னர் தனக்கு இந்த ராஜிய பாஸ்போர்ட் தரப்பட்டதாகவும் கருணா லண்டன் போலிஸ் விசாரணையில் தெரிவித்ததாக, அரசு வழக்குரைஞர் தெரிவித்தார்.
ஆனாலும், இந்த பாஸ்போர்ட்டில் தனது புகைப்படம் மட்டுமே இருந்ததை கருணா கண்டதாகவும், மற்ற விவரங்கள் பொருந்தவில்லை என்று அவருக்கு தெரிந்திருந்ததாக கருணா கூறியதாக வழக்குரைஞர் குறிப்பிட்டார்.
தனக்கு ராஜிய பாஸ்போர்ட் வழங்கப்பட்டது குறித்து கருணா போலிசாரிடம் குறிப்பிடுகையில் தான் அரசாங்க அதிகாரியல்ல என்றாலும், இலங்கை அரசால் பாதுகாப்பு வழங்கப்பட்ட ஒருவர் என்று குறிப்பிட்டதாக அரசு வழக்குரைஞர் கூறினார்.
கருணா ஏற்கனவே இந்தக் குற்றத்தை ஒப்புக்கொண்டிருக்கிறார் என்று கூறிய கருணா தரப்பு வழக்குரைஞர் டேவிட் பிலிப்ஸ், ஆனால் போலிசார் மற்ற விடயங்களைப் பற்றி விசாரித்தபோது அவர்களுக்கு எந்தவித தடயமும் கிடைக்கவில்லை என்று நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
தனது கட்சிக்காரருக்கு மனைவி மற்றும் 11, 9 மற்றும் 6 வயதுடைய மூன்று குழந்தைகள் இருப்பதாகவும், கைதுசெய்யப்பட்டபோது அவர் தன்னுடைய வீட்டில்தான் இருந்தார் என்றும் குறிப்பிட்ட பிலிப்ஸ், கருணா இதற்கு முன்னர் சிறைத்தண்டனை பெற்றிருக்கவில்லை, இவ்வாறு தடுத்துவைக்கப்படுவது அவருக்கு ஒரு பயங்கரமான அனுபவமாக இருக்கும் என்றார்.
கருணாவுக்கு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டதை நீதிமன்றத்திலிருந்து அவதானித்திருந்த மணிவண்ணன் தொகுத்து வழங்கும் விரிவான செய்திகளை நேயர்கள் இன்றைய நிகழ்ச்சியில் கேட்கலாம்.
புலிகளின் வாகன தளத்தை விமான குண்டுவீச்சில் அழித்ததாக இலங்கை பாதுகாப்பு அமைச்சகம் கூறுகிறது
![]() |
![]() |
இலங்கையின் வடக்கே விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ள கிளிநொச்சி பிரதேசத்தில் வெள்ளிக்கிழமை காலை விமானப்படையினர் நடத்திய குண்டு வீச்சுத் தாக்குதலில் விடுதலைப் புலிகளின் வாகனப் போக்குவரத்துத் தளம் ஒன்று அழிக்கப்பட்டதாகப் பாதுகாப்பு அமைச்சு அறிவித்திருக்கின்றது.
இதனை மறுத்துள்ள விடுதலைப் புலிகள் மக்கள் குடியிருப்பு ஒன்றின் மீது நடத்தப்பட்ட இந்தத் தாக்குதலில் ஒரு சிவிலியன் கொல்லப்பட்டதாகவும் 5 பேர் காயமடைந்ததாகவும் தெரிவித்திருக்கின்றனர்.
எட்டு குண்டுகள் இப்பகுதியில் வீசப்பட்டதாகவும் இதனால் 12 வீடுகள் சேதமடைந்தும் முற்றாக அழிந்தும் இருப்பதாக விடுதலைப் புலிகள் கூறியிருக்கின்றார்கள்.
இந்த விமானத் தாக்குதலையடுத்து, கிளிநொச்சி பிரதேசத்தில் பதட்டம் நிலவியதுடன், பெரும் எண்ணிக்கையிலான மாணவர்கள் மேலும் குண்டுத் தாக்குதல் நடத்தப்படலாம் என்ற அச்சத்தில் பாடசாலைகளுக்குச் செல்லவில்லை என விடுதலைப் புலிகளின் சமாதான செயலகம் மின்னஞ்சல் வழி அறிக்கையொன்றில் தெரிவித்திருக்கின்றது.
காயமடைந்தவர்களில் 3 பேர் கிளிநொச்சி வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருப்பதாக கிளிநொச்சி மருத்துவமனையின் பதில் மருத்துவ பணிப்பாளர் டாக்டர் பிரசாத்நாயகம் பிரைட்டன் தமிழோசையில் தெரிவித்தார்.
மட்டக்களப்பு உள்ளூராட்சி சபைத் தேர்தல்: வேட்பு மனுத் தாக்கல் முடிவுற்றது
![]() |
![]() |
இலங்கையின் கிழக்கே மட்டக்களப்பு மாவட்டத்தில் எதிர்வரும் மார்ச் மாதம் 10 ம் திகதி நடைபெறவிருக்கும் உள்ளுராட்சி சபைத் தேர்தலில் 6 அரசியல் கட்சிகளும் 22 சுயேச்சைக் குழுக்களும் போட்டியிடுவதாக தேர்தல் திணைக்களம் அறிவித்துள்ளது.
மட்டக்களப்பு மாநகர சபைக்கும் 8 பிரதேச சபைகளுக்கும் 1994ஆம் ஆண்டுக்கு பின்பு நடைபெறவிருக்கும் இத்தேர்தல் மூலம் 101 உறுப்பினர்கள் தெரிவுசெய்யப்படவிருப்பதாகக் கூறும் மாவட்ட உதவித் தேர்தல் ஆணையாளர் டி.கிருஷ்ணானந்தலிங்கம், அரசியல் கட்சிகள் மற்றும் சயேச்சைக் குழுக்கள் சார்பாக 816 பேர் போடடியிடுவதாகக் குறிப்பிடுகின்றார்.
இத்தேர்தலில் போட்டியிடுவதற்காக 23 சுயேச்சைக் குழுக்கள் சார்பாகவும் 7 அரசியல் கட்சிகள் சார்பாகவும் மொத்தம் 61 வேட்பு மனுக்கள் சமர்ப்பிக்கப்படிருந்த போதிலும் பரிசீலனையின் பின்பு 9 வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் மட்டக்களப்பு மாநகர சபைக்கு ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னனி சார்பிலும் ஏனைய சபைகளுக்கு தமது கட்சி சார்பாகவும் போட்டியிடும் அதேவேளை ஈ.பி.ஆர்.எல்.எஃப். பத்மநாபா அணி, ஈ.பி.டி.பி., பிளொட் ஆகிய கூட்டமைப்பு அனைத்து சபைகளுக்கும் சுயேச்சையாக போட்டியிடுகின்றது.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், தேசிய காங்கிரஸ் ஆகிய கட்சிகளும் வேட்பாளர்களை நிறுத்தியுள்ளது.
கெப்பிட்டிகொல்லாவ சடலங்கள்: சனிக்கிழமை பிரேதப் பரிசோதனை
இலங்கை வடமத்திய மாகாணத்தின் அனுராதபுரம் மாவட்டத்தில் உள்ள கெப்பிட்டிகொல்லாவ பகுதியின் குக்கிராமம் ஒன்றில் நேற்று வியாழக்கிழமை கண்டெடுக்கப்பட்ட 16 உடல்களும் நாளை சனிக்கிழமை மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்படும் என கெப்பிட்டிகொல்லாவ வைத்திய அதிகாரி தெரிவித்திருக்கின்றார்.
கைகள் கட்டப்பட்ட நிலையில் அருகருகே இரண்டு புதைகுழிகளில் இருந்து மீட்கப்பட்ட இந்தச் சடலங்கள் இன்னும் அடையாளம் காணப்படவில்லை என கெப்பிட்டிகொல்லாவ பொலிசார் தெரிவித்திருக்கின்றனர்.
நேற்று காலை முதல் இன்று பகல் வரையிலான காலப்பகுதியில் வன்னிப் போர்முனைகளில் இராணுவத்தினர் விடுதலைப் புலிகள் மீது நடத்திய தாக்குதல்களில் 41 விடுதலைப் புலிகள் கொல்லப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ள இலங்கையின் பாதுகாப்பு அமைச்சகம் கெப்பிட்டிகொல்லாவ பகுதியில் கொல்லப்பட்டுள்ள 16 பேரையும் விடுதலைப் புலிகளே கொலை செய்திருப்பதாகக் குற்றம்சுமத்தியுள்ளது.
எனினும் இது குறித்து விடுதலைப் புலிகள் தரப்பிலிருந்து இதுவரையில் தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை. ஆயினும் மணலாறு பகுதியில் தமது பிரதேசத்தினுள் நேற்று வியாழக்கிழமை ஊடுருவ முயன்ற படையினர் மீது விடுதலைப் புலிகள் எதிர்த்தாக்குதல் நடத்தியதை அடுத்து படையினர் பின்வாங்கிச் சென்றதாகவும், மன்னார் பாலைக்குழி பகுதியில் நேற்று காலை முன்னேற்ற முயற்சியில் ஈடுபட்ட இராணுவத்தினருடன் ஏற்பட்ட மோதலில் 3 இராணுவத்தினரும் விடுதலைப் புலி உறுப்பினர் ஒருவரும் கொல்லப்பட்டுள்ளதாகவும் விடுதலைப் புலிகள் தெரிவித்திருக்கின்றனர்.