Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

Krishnan’s effect in CV Raman Research & Gandhi’s Nobel Prize

Posted by Snapjudge மேல் ஒக்ரோபர் 5, 2006

காந்திஜியும் நோபல் பரிசும்

எஸ். கண்ணன்

நோபல் பரிசு பெற்ற “ராமன் விளைவு’ பற்றி நாம் எல்லோரும் அறிவோம். உலகமே வியந்து பாராட்டிய அந்த “ஒளி விலகல்’ கண்டுபிடிப்பினை “ராமன் – கிருஷ்ணன்’ விளைவு என்றுதான் அழைத்திருக்க வேண்டும். மேலை நாட்டினர் இன்றும் “”ராமன் – கிருஷ்ணன் விளைவு” என்றுதான் அந்தக் கண்டுபிடிப்பை அழைக்கிறார்கள். யார் இந்த கிருஷ்ணன்?

1898-ல் இன்றைய விருதுநகர் மாவட்டத்தின் மேற்குப் பகுதியில் உள்ள வத்திராயிருப்பில் பிறந்தவர். 1961-ல் காலமானார். டாக்டர் கே.எஸ். கிருஷ்ணன் அகம்பாவமும், கர்வமும் கொள்ளாதவராய், பெரிய மனது படைத்தவராய், கூட்டாளி தர்மத்தில் (ராமன் – கிருஷ்ணன்) பொது நன்மையை உத்தேசித்து விட்டுக்கொடுக்கும் மனப்பான்மை உடையவராய், மிகப்பெரிய உதாரண புருஷராய், மகாத்மாவின் மானசீக சீடராய் வாழ்ந்து காட்டியவர். 1947 செப்டம்பர் முதல் 1961 வரை தில்லியில் உள்ள தேசிய இயற்பியல் ஆய்வுக்கூடத்தின் இயக்குநராய்ப் பணி ஆற்றியவர். அவருடைய மறைவுக்குப் பின்னர் அவருடைய குடும்பத்தார் அன்புடன் வழங்கிய மதிப்புறு ஆவணங்கள் புதுதில்லியில் உள்ள தீன்மூர்த்தி பவனில் அமைந்துள்ள நேரு நினைவு நூலகத்தில் இன்றும் பாதுகாக்கப்பட்டு வருகின்றன. அதில் கிடைத்த அரிய செய்தி இதோ!

1947ஆம் ஆண்டின் தொடக்கம். நம் நாடு விடுதலையாகாத காலகட்டம். அப்பொழுது டாக்டர் கே.எஸ். கிருஷ்ணன் அலாகாபாத் பல்கலைக்கழகத்தில் இயற்பியல் துறைத் தலைவராகப் பணியாற்றிக் கொண்டிருக்கிறார். மகாத்மா காந்திக்கு, சமாதானத்திற்கான உலகின் மிகப்பெரிய விருதான “”நோபல் பரிசினை” அளிப்பதற்கு வேண்டிய முயற்சிகளை, டாக்டர் கே.எஸ். கிருஷ்ணன் அமைதியாக, யாருக்கும் தெரியாமல் மேற்கொண்டார்.

இந்த முயற்சி காந்தியடிகளின் காதுக்குக்கூட எட்டவில்லை. நோபல் பரிசுத் தேர்வுக் குழுவில் இருந்த தம் நண்பருக்கு டாக்டர் கிருஷ்ணன் இதுகுறித்து எழுதினார். 1947ஆம் ஆண்டிற்கான உலக அமைதிக்கான நோபல் பரிசினை மகாத்மா பெற வேண்டும் என்பது கிருஷ்ணனின் விருப்பம்.

காந்திஜி குறித்த சிறப்புச் செய்திகளை இந்தியாவின் மீது பற்றுக்கொண்ட வெளிநாட்டவரான ஹொராஸ் அலெக்ஸôண்டர் தயாரித்து ராஜாஜியின் பார்வைக்கும், ஒப்புதலுக்கும் அனுப்பினார். நோபல் பரிசுத் தேர்வுக் குழுவில் டாக்டர் கிருஷ்ணனின் நண்பர் ஒருவர் இருப்பதை ராஜாஜி அறிந்து வைத்திருந்தார். ஆகவே தனக்கு வந்த “”காந்திஜி” பற்றிய குறிப்புகளை 21-02-1947 அன்று டாக்டர் கிருஷ்ணனுக்கு அனுப்பினார்.

டாக்டர் கிருஷ்ணனின் கையெழுத்துடன் தேர்வுக் குழுவிற்கு அவை அனுப்பப்படுதல் சாலச் சிறந்தது என்று ராஜாஜி நினைத்தார். டாக்டர் கிருஷ்ணனும் மிகுந்த மகிழ்ச்சியுடன் தக்க பரிந்துரைகளுடன் தேர்வுக் குழுவிற்கு அனுப்பி வைத்தார். ஆனால், ஏனோ, அவ்வாண்டிற்கான நோபல் பரிசு காந்திஜிக்கு கிட்டவில்லை. “”அஹிம்ஸை” வழியை, சமாதானக் கோட்பாடாக ஏற்றுக் கொள்ள மேலை நாட்டினர் மனம் அப்பொழுது (1947 பிப்ரவரி) இடங் கொடுக்கவில்லைபோலும்! அத்துடன் தன் முயற்சியை டாக்டர் கிருஷ்ணன் விட்டுவிடவில்லை.

1948 ஆம் ஆண்டிற்கான சமாதான நோபல் பரிசுக்கு மகாத்மாவின் பெயரை, பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ள டாக்டர் கிருஷ்ணன் ஆவன செய்தார்.

அது வெள்ளையரிடமிருந்து விடுதலை பெற்றுவிட்ட நேரம்; இந்திய விடுதலை குறித்து உலகமே வியந்து மகாத்மாவைப் பாராட்டிய நேரம். கத்தியின்றி ரத்தமின்றி யுத்தம் செய்து வாங்கிய விடுதலை அல்லவா? அவருடைய “அஹிம்ஸா’ வழியை உலகச் சமுதாயம் அங்கீகரித்த காலகட்டம் அது. நோபல் பரிசுக் குழுவினரும் அவ்வாண்டிற்கான சமாதானப் பரிசினை மகாத்மாவிற்குக் கொடுக்க முடிவு எடுத்திருக்கலாம். அந்தோ பரிதாபம்! 1948 ஜனவரி 30ஆம் நாள் கொடியவன் கோட்ஸேயின் குண்டுக்கு மகாத்மா இரையானார்.

அவ்வாண்டிற்கான (1948) “”சமாதான நோபல் விருது’‘ யாருக்கும் வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத் தகுந்தது. நோபல் பரிசுக் குழுவினர் தம்முடைய அறிக்கையில், “”சமாதானத்திற்கென நோபல் பரிசினை பெறும் நபர் யாரும் உயிருடன் இல்லை” என்று கூறியதிலிருந்தே மகாத்மாவைத் தவிர வேறு யாரையும் அக் குழு சமாதானத்திற்கான நோபல் பரிசுக்குத் தேர்ந்து எடுக்கவில்லை என்பது தெளிவாகிறது. உயிருடன் இருப்பவருக்கே நோபல் பரிசு அளிக்கப்படுகிறது என்பதை அனைவரும் அறிவர்.

மகாத்மா உயிருடன் இருந்திருந்தால் 1948ஆம் ஆண்டிற்கான நோபல் பரிசைப் பெற்றிருப்பார். தேசிய உணர்வு மிகுந்த தமிழரான டாக்டர் கிருஷ்ணனும் மகிழ்ந்திருப்பார். நம் நாடும் மகிழ்ச்சியில் திளைத்திருக்கும்.

பின்னூட்டமொன்றை இடுக