இளைஞர்களின் வேலைவாய்ப்புக்கு ஒரு வழிகாட்டி: கிராமங்களில் “அறிவு விதை’ விதைக்கும் 65 வயது “இளைஞர்’
ப. இசக்கி
திருநெல்வேலி, டிச. 10: கொட்டும் மழையிலும் கொளுத்தும் வெயிலிலும் புத்தகக் கட்டுகளை சைக்கிளில் ஏற்றிக் கொண்டு கிராமம் கிராமமாகச் சென்று விற்பனை செய்து பொருள் ஈட்டி வருகிறார் 65 வயது “இளைஞர்’ ரா.சண்முகவேல் (65).
இதில் என்ன இருக்கிறது? என நினைப்பவர்களுக்கு புதைந்திருக்கும் செய்தி ஒன்றல்ல, இரண்டு உண்டு. “வேலை இல்லை’ என முடங்கி கிடக்கும் சில இளைஞர்களுக்கு, இப்படியும் ஒரு வேலை இருக்கிறது என்பது முதல் பாடம்; தற்போதைய தொலைக்காட்சி யுகத்தில் கிராமத்து மக்களையும் படிக்கத் தூண்டும் வகையில் புத்தம் புது புத்தகங்களை அவர்களது இல்லங்களுக்கே கொண்டு சேர்த்து அறிவுப் பசியாற்றும் ஒரு வகை சேவை என்பது இரண்டாவது பாடம்.
ஒரு பாடத்தையும் போதித்து, “சேவை’யையும் செய்து வருபவர், ஊத்துமலை அருகே உள்ள கீழக்கலங்கல் கிராமத்தைச் சேர்ந்த இடதுசாரி இயக்கத் தொண்டரான ரா.சண்முகவேல்.
விவசாயக் குடும்பத்தில் பிறந்து, பள்ளி படிப்பு மட்டுமே படித்துள்ள இவர், இளம் வயதில் இயக்கப் பணிகளையும், குடும்பத் தொழிலான விவசாயத்தையும் பார்த்து வந்தார். இடதுசாரி இயக்கத்தில் கொண்ட தீவிர பற்றின் காரணமாக, “சோவியத் ரஷ்யா’ வெளியீடுகளுக்கு சந்தாதாரராகி புத்தகங்களைப் பெற்றார். அதைக் கொண்டு உள்ளூரில் ஜீவா படிப்பகத்தைத் தொடங்கினார்.
தொடர்ந்து புத்தகங்கள் மீது ஏற்பட்ட நாட்டத்தால், அருகில் உள்ள கிராமங்களுக்கு சைக்கிளில் சென்று இடதுசாரி சிந்தனை புத்தகங்களை விற்றார். நாள்கள் செல்லச்செல்ல வாடிக்கையாளர்கள் விரும்பிக் கேட்கும் புத்தகங்களையும் வாங்கிக் கொடுத்தார். அதில் ஒரு பிடிப்பு ஏற்படவே அதுவே அவரது நிரந்தர தொழிலாகிவிட்டது.
சண்முகவேல், கிராமம் கிராமமாக சைக்கிளில் சென்று புத்தகம் விற்கத் தொடங்கி 15 ஆண்டுகள் ஆகிவிட்டன. இன்றும் 25 வயது இளைஞர் போல நாளொன்றுக்கு 100 முதல் 120 கி.மீ. தூரம் சைக்கிளில் சுற்றி வந்து புத்தகங்களை விற்பனை செய்து வருகிறார் இந்த “செஞ்சட்டை’ சண்முகவேல். இதில் இவருக்கு மாத வருமானம் ரூ. 3,000 முதல் ரூ. 4,000 வரை கிடைக்கிறதாம்.
“”பாலியல் புத்தகங்கள் தவிர அனைத்து வகை புத்தகங்களையும் வாங்கி விற்கிறேன். ஆசிரியர்கள், பெரிய மனிதர்கள், வீட்டில் இருக்கும் படித்த பெண்கள் என்னிடம் புத்தகங்களை வாங்குவார்கள். நிரந்தர வாடிக்கையாளர்கள் உண்டு. பெண்கள் அதிக புத்தகங்களை வாங்குவார்கள். கடனும் உண்டு, சில வேளைகளில் தள்ளுபடியும் உண்டு. காந்திஜியின் “சத்திய சோதனை’க்கு இன்னும் கிராக்கி உள்ளது.
வாடிக்கையாளர்கள் கேட்கும் புத்தகங்கள் திருநெல்வேலி, மதுரை என எங்கிருந்தாலும் அதையும் வாங்கிக் கொண்டு வந்து கொடுப்பேன். பள்ளி, கல்லூரிகளிலும் விற்பனை செய்வேன்.
புத்தகம் படிப்பதில் ஆர்வம் உள்ளவர்களுக்கு, நகரங்களுக்குச் சென்றால்தான் புத்தகங்கள் கிடைக்கும் என்றல்ல. அவர்களது வீட்டுக்கே புதிய புதிய புத்தகங்களை கொண்டு சேர்க்கிறேன். நேரம் கிடைக்கும் போதெல்லாம் நானும் புத்தகங்களைப் படித்துவிடுவேன். அப்போதுதான் வாடிக்கையாளர்களிடம் பேச முடியும்.
இத் தொழிலை நான் மகிழ்ச்சியுடன் செய்து வருகிறேன். ஒரு குறையும் இல்லை. எனது 2 மகள்களை படிக்கவைத்து திருமணமும் முடித்துவிட்டேன் என் மனைவி லட்சுமி, உள்ளூர் அஞ்சல் நிலையத்தில் கிளை அஞ்சல் அலுவலராகப் பணியாற்றி வருகிறார்.
இத் தொழிலில் நல்ல வருமானம் கிடைக்கிறது. வேலை இல்லை, வேலை இல்லை என சொல்பவர்கள் இப்படி புத்தகங்களை வாங்கி ஊர் ஊராகச் சென்று விற்றாலே நிறைய சம்பாதிக்கலாம். இந்தக் காலத்து இளைஞர்கள் இதுபற்றியெல்லாம் சிந்திக்க வேண்டும்” என மடை திறந்த வெள்ளமாய் பேசிவிட்டு புத்தக விற்பனைக்குப் புறப்பட்டார் சண்முகவேல்.