பாஜக தலைவரின் ஆலோசகராக முரளீதர் ராவ் நியமனம்
புது தில்லி, மார்ச் 9: பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் ராஜ்நாத் சிங்கின் ஆலோசகராக முரளீதர் ராவ் நியமிக்கப்பட்டுள்ளார்.
ஆர்எஸ்எஸ் கொள்கைகளில் அதீத ஈடுபாடு கொண்ட முரளீதர் ராவ், சுதேசி ஜாக்ரண் மஞ்ச் அமைப்பின் நிறுவன உறுப்பினர்களில் ஒருவராவார்.
ஏற்கெனவே பாஜக தலைவர் ராஜ்நாத் சிங்கின் ஆலோசகராக பிரபாத் ஜா உள்ளார், அவருடன் இணைந்து முரளீதர் ராவும் ஆலோசகராக செயல்படுவார் என பாஜக வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர்களில் ஒருவராக கடந்த மாதம் சேர்க்கப்பட்ட முரளீதர் ராவ், பொருளாதாரம் சார்ந்த விஷயங்களில் கட்சிக்கு தேவையான ஆலோசனைகளை வழங்குவார்.
மேலும் பாஜகவின் முக்கியத் தலைவர்களில் ஒருவராக விளங்கிய முன்னாள் மத்திய அமைச்சர் பிரமோத் மகாஜனின் மிக நெருங்கிய சகாவாக விளங்கிய சுதன்ஷு மிட்டல், தற்போது பாஜகவின் வடகிழக்கு மாநிலங்களின் இணை பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இத்துடன் எஸ்.எஸ். அலுவாலியாவுக்குத் தேவையான உதவிகளையும் இவர் மேற்கொள்வார் என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அசாம் கண பரிஷத் கட்சியுடன் தொகுதி ஒதுக்கீடு தொடர்பாக உடன்பாடு எட்டுவதில் சுதன்ஷு, மிகச் சிறந்த பணியாற்றியதாக கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.