Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

Center-State Relations: Federal democracy’s principles – Analysis

Posted by Snapjudge மேல் மே 18, 2007

சங்கிலியின் வலிமை அதன் வளையத்தில்

கே.எஸ். இராதாகிருஷ்ணன்

மத்தியில் ஆளும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி மத்திய – மாநில உறவுகளை அறிய தன்னிச்சையாக

  1. இந்திய முன்னாள் தலைமை நீதிபதி எம்.எம். பூஞ்சி தலைமையில்
  2. முன்னாள் உள்துறை செயலாளர்கள் திரேந்திர சிங்,
  3. வி.கே. துகல்,
  4. தேசிய நீதித்துறை அகாதெமியின் இயக்குநர் என்.ஆர். மாதவன் மேனன் ஆகியோரை உறுப்பினர்களாகக் கொண்ட குழுவை நியமித்து இரண்டே ஆண்டுகளில் தனது அறிக்கையை மத்திய அரசுக்கு வழங்குமாறு அறிவுறுத்தியுள்ளது.

மாநிலங்களின் அனுமதி இல்லாமல் மத்திய அரசின் படைகளை நேரடியாக மாநிலங்களுக்கு அனுப்பலாமா

என்று அறியவே பூஞ்சி குழு அமைக்கப்பட்டுள்ளது என்று மத்தியில் ஆளும் காங்கிரஸ் அரசுக்கு ஆதரவு அளிக்கும் இடதுசாரிகளே கருத்து தெரிவித்துள்ளனர். கடந்தகாலத்தில் இம்மாதிரி பிரச்சினைகள் வந்தபோது, ஆந்திர முதல்வர் என்.டி. ராமராவ், ஜோதிபாசு போன்றவர்கள் கண்டித்துள்ளனர். மாநில அரசுகளின் அதிகாரத்தைக் குலைக்கும் வகையில் இம்மாதிரி ஒரு குழுவை அமைத்ததே கண்டனத்துக்கு உரியதாகும்.

மத்திய – மாநில உறவுகளில் எவ்வளவோ பிரச்சினைகள் இருக்கின்றன. அதையெல்லாம் சிந்திக்காமல் மத்திய படைகளைப் பிரிவு 355ன்படி மாநிலங்களுக்கு அனுப்புவது குறித்து ஏன் இந்த அக்கறை? மத்திய அரசு அவசரக் கோலத்தில் பூஞ்சி குழுவை உருவாக்கியிருப்பதில் ஏதோ உள்நோக்கம் இருப்பதாகத் தெரிகின்றது. இதில் பிரச்சினைகள் எழாதவாறு மத்திய அரசு மேலும் சில விஷயங்கள் குறித்து இந்தக் குழு ஆராயும் என்று ஒப்புக்குச் சிலவற்றை வைத்து உள்ளது.

அவை

  • மத்திய – மாநில உறவு குறித்துப் புதிய பரிமாணத்தைக் காணுதல்,
  • உள்ளாட்சி அமைப்புகளுக்கு அதிகாரப் பகிர்வு வழங்கி, மத்திய அரசின் உதவியை மாநிலம் மூலம் இல்லாமல் நேரடியாக உள்ளாட்சிக்கு மேலும் வழங்க வழிவகைகள் காணுதல்,
  • மாநிலங்களிடையே உள்ள வணிகத்திற்கு வரி விதிப்பு முறைகள் காணுதல் போன்றவை; மாநிலங்களின் அதிகாரங்களில் கைவைக்க இப்படியொரு கமிஷன் தேவையா என்பது இன்றைய கேள்வி!

மாநில சுயாட்சி, மாநிலங்களுக்கு அதிக அதிகாரங்கள் என்ற விவாதம் தொடர்ந்து நடைபெறுகின்றது. காங்கிரஸ் கட்சி மாநில சுயாட்சி பற்றி கடந்த 50 ஆண்டுகளில் தெளிவான நிலையில் இல்லாதது மட்டுமல்லாமல், மாநிலங்களினுடைய அதிகாரங்களைப் பறிக்கும் எண்ணத்திலே செயல்பட்டு வந்தது.

11.12.1947 காங்கிரஸ், அரசு அமைப்பு குறித்து இறுதி செய்தபோது, தன்னாட்சி உரிமை கொண்ட மாநிலங்கள் அமையும் எனக் கூறியது. அக்காலத்தில் மாநில காங்கிரஸ் கமிட்டிகளை அந்தந்த மாநிலங்களின் பெயரைச் சொல்லியே அழைத்தது இந்நிலையில்தான்.

நாட்டின் விடுதலைக்குப் பின் பிரதமர் நேரு, காங்கிரஸின் முந்தைய மாநில சுயாட்சி நிலைப்பாட்டிலிருந்து விலகி பலமான மத்திய அரசு எனப் படிப்படியாக நிர்வாகத்தில் கொண்டு வந்தார். அதை படேல், ஆசாத் போன்றோர் விரும்பவில்லை. நாடெங்கும் ஒரே கட்சி ஆட்சி, நேருவின் ஆளுமை போன்றவை அன்றைய சூழலில் மாநில சுயாட்சிக் கோரிக்கையின் வேகத்தைக் குறைத்துவிட்டன.

கேரளத்தில் முதல் காங்கிரஸ் அல்லாத இ.எம்.எஸ். நம்பூதிரிபாட் அரசை ஜனநாயகத்திற்கு விரோதமாக மத்தியிலிருந்த காங்கிரஸ் அரசு கலைத்தது. அன்றைக்குத் தொடங்கிய வேட்டைத் தொழில் ஏறத்தாழ 105 முறை 356-ஐ பயன்படுத்தி மாநில அரசுகளைத் தங்கள் விருப்பத்திற்கு ஏற்ப கவிழ்ப்பது, தங்களுக்கு விருப்பமானவர்களை முதல்வர்களாக ஆக்குவது எனத் தொடர்ந்தது. உச்ச நீதிமன்றத்தில் எஸ்.ஆர். பொம்மை வழக்குக்குப் பின்புதான் இந்த விபரீதத்திற்கு ஒரு பரிகாரம் கிடைத்தது.

அரசியல் அமைப்புச் சட்டத்தை நூறு முறைக்கு மேல் திருத்தங்கள் செய்தபின்பும் கூட மாநிலங்களுக்கு உரிய உரிமைகள் வழங்கப்படவில்லை.

பொதுப்பட்டியலில் உள்ள 47 ஐயும் சேர்த்து மத்திய அரசிடம் 144 அதிகாரங்கள் உள்ளன. மாநிலங்களுக்கு உள்ளது வெறும் 66 அதிகாரங்கள் மட்டுமே, அதிலும் மத்திய அரசு தலையீடு இருக்கும்.

1968ல் கர்நாடகத்தைச் சார்ந்த காங்கிரஸ் தலைவர், நாடாளுமன்ற உறுப்பினர் கே. ஹனுமந்தையா தலைமையில் மத்திய அரசு அமைத்த நிர்வாகச் சீர்திருத்தக் குழுவின் துணைக்குழுவான செட்டல்வாட் குழு அறிக்கை, எஞ்சிய அதிகாரங்களை மாநில அரசுக்கு வழங்க வேண்டும் என்றும், மாநில அரசின் ஒப்புதலோடுதான் முக்கிய திருத்தங்களை அரசியல் அமைப்புச் சட்டத்தில் திருத்த வேண்டும் என்றும், தேசிய முக்கியத்துவமுள்ள பிரச்சினைகளில், மாநிலங்களை ஆலோசித்து மத்திய அரசு முடிவு எடுக்க வேண்டும் என்றும் பரிந்துரைத்தது.

அண்ணா மறைவுக்குப் பின்பு, மத்திய – மாநில உறவுகளைப் பற்றி அறிய அமைக்கப்பட்ட நீதிபதி பி.வி. இராஜமன்னார் தலைமையிலான குழு,

  • மத்திய – மாநில பொது அதிகாரப் பட்டியலில் மாற்றங்கள் வேண்டும்,
  • மாநிலங்களுக்கிடையே கவுன்சில் அமைக்க வேண்டும்,
  • நிதிப் பகிர்வு,
  • திட்டக்கமிஷன் சுயமான அமைப்பாக இருக்க வேண்டும்,
  • ஆளுநர் பதவி ஒழிப்பு,
  • பிரிவு 356 நீக்கம் உள்ளிட்ட பல பரிந்துரைகளைச் செய்தது.

1973 அக்டோபர் 16 மற்றும் 17 ஆகிய தேதியில் அகாலிதளத்தினர் கூடி பஞ்சாபுக்கு பிராந்திய சுயாட்சி வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றினர்.

காமராஜரின் நெருங்கிய சகா நிஜலிங்கப்பா, வீரேந்திர பாட்டீல், இராமகிருஷ்ண ஹெக்டே ஆகியோர் பங்கேற்ற மைசூர் ஸ்தாபன காங்கிரஸ் 1972ல் மாநில சுயாட்சிக்கு ஆதரவாகத் தேர்தல் அறிக்கையை வெளியிட்டது. ஆந்திர முதல்வராக இருந்த என்.டி. ராமராவ் விஜயவாடாவில் காங்கிரஸ் அல்லாத மாநில – தேசியக் கட்சிகளின் தலைவர்களைக் கொண்டு மாநில சுயாட்சி மாநாட்டை நடத்தினார். அதைப்போன்று கோல்கத்தாவில் ஜோதிபாசுவும் நடத்தினார்.

ஸ்ரீநகரில் தேசிய மாநாட்டுத் தலைவர் டாக்டர் பாரூக் அப்துல்லா, காங்கிரஸ் அல்லாத முதல்வர்கள், தலைவர்களை அழைத்து 1983 அக்டோபரில் 59 தலைவர்கள் – 17 அரசியல் கட்சிகள் கலந்துகொண்ட மாநாட்டை நடத்தி “ஸ்ரீநகர் பிரகடனம்’ வெளியிட்டார்.

மாநிலங்களின் உரிமை குறித்து நாளுக்கு நாள் விவாதங்களும் கோரிக்கைகளும் அதிகரிக்க இந்திரா காந்தி, மத்திய – மாநில பிரச்சினைகளைத் தீர்க்க சர்க்காரியா குழுவை 24-3-1983ல் அமைத்தார். 1987 அக்டோபரில் தன்னுடைய இரண்டு தொகுப்பு அறிக்கையை வழங்கியது இந்தக் கமிஷன்.

1990இல் பாரதிய ஜனதா கட்சி மற்றும் இடதுசாரிகளின் ஆதரவோடு வி.பி. சிங் தலைமையில் மாநிலக் கட்சிகள் அடங்கிய கூட்டணி ஆட்சி ஏற்பட்டது. வட்டாரத் தலைவர்களின் செல்வாக்கு தில்லியில் தொடங்கியது.

1996, 1998, 1999, 2004 எனத் தொடர்ந்து மாநிலங்களின் பங்களிப்பால் தில்லியில் மத்திய ஆட்சி தொடர்கிறது. இனிமேல் ஒரு கட்சி ஆட்சி என்பது மத்தியில் சாத்தியமில்லை. இது இப்படி இருக்க, மாநில சுயாட்சிக் கொள்கையைக் கொண்டவர்கள் மத்தியில் அதிகார வர்க்கத்தில் இருக்கும்பொழுது அதைப் பற்றிப் பேசக்கூடத் தயங்குகின்றனர். அதுதான் ஏனென்று புரியவில்லை.

திட்டக் கமிஷன் மற்றும் நிதிக் கமிஷனிடம் தேர்ந்து எடுக்கப்பட்ட மாநில “மாண்புமிகு’ முதலமைச்சர்கள் கருணை வேண்டி கையேந்த வேண்டிய நிலை. திட்டக்கமிஷன் அரசியல் அமைப்பு அங்கீகாரம் இல்லாமல் மத்திய கேபினட் முடிவின்படி அமைக்கப்பட்டது. அது இன்றைக்கு சூப்பர் கேபினட்டாக இருக்கின்றது. நிதிக்குழு மட்டும்தான் அரசியல் அமைப்புச் சட்ட அங்கீகாரம் பெற்றதாகும். நிதிக்குழுவும் திட்டக்குழுவும் மத்திய அரசின் கடைக்கண் பார்வையில்தான் இயங்குகின்றன. ராஜா செல்லையா குழு, காட்கில் கொள்கை ஆகியவற்றின் பரிந்துரைகளும் மத்திய அரசுக்குச் சாதகமாகப் பயன்படுத்தப்பட்டன.

மாநிலங்களில் எடுக்கப்படும் கனிம வளங்கள், தாதுக்கள், பெட்ரோலியம் போன்ற பொருள்களுக்கு மாநிலங்களுக்கு உரிமைத் தொகை வழங்கப்படுவதும் இல்லை.

ஜோதிபாசு, என்.டி. ராமராவ், பாரூக் அப்துல்லா, பிரகாஷ் சிங் பாதல், ராமகிருஷ்ண ஹெக்டே போன்றோர் போர்க்குணத்தோடு இப்பணியில் ஓரளவு அதிகாரங்களைப் பெறுவதில் வெற்றி பெற்றனர்.

பூஞ்சி குழுவினால் தேவையற்ற முறையில் அரசின் கஜானாவைக் காலியாக்க ஓய்வுபெற்றவர்களுக்குப் பணியைக் கொடுக்கும் நன்மையைத் தவிர வேறு எதுவும் நடக்கப் போவது இல்லை.

ஏற்கெனவே இதுவரை மத்திய அரசு இதுகுறித்து இரண்டு குழுக்களும்,

  • தமிழ்நாடு அரசு அமைத்த இராஜமன்னார் குழுவும்,
  • மேற்குவங்கத்து ஜோதிபாசு வழங்கிய வெள்ளை அறிக்கை,
  • ஸ்ரீநகர் மற்றும் விஜயவாடா பிரகடனங்கள்,
  • பெங்களூரில் நடைபெற்ற தென்மாநில முதல்வர்கள் மாநாட்டில் எடுத்த தீர்மானங்களைக் கொண்டே மாநிலங்களுக்கு வழங்க வேண்டிய சுயாட்சித் தன்மையையும், அதிகாரங்களையும் வழங்க இயலும். அப்படி வழங்குவதை விட்டுவிட்டு
  •  மாநில அரசின் கவனத்திற்கு வராமலே மத்திய அரசின் படைகளை அனுப்புவதும்,
  • மாநில அரசிடம் வரிகளை வாங்கவும் இந்தக் குழு அமைத்தது எவ்விதத்திலும் ஏற்புடையது அல்ல.

சங்கிலியின் வலிமை அதன் வளையத்தில் என்பார்கள். மத்திய அரசின் வலிமை, பலமான மாநிலங்கள்தான். இதை ஓரிரு மத்திய ஆட்சியாளர்கள் புரிந்துகொள்ள மறுக்கிறார்கள். மாநிலங்களிடமிருந்து அதிகாரங்களைப் பறிப்பதற்கும், மத்திய அரசிடம் அதிகாரங்களைக் குவிப்பதற்கும் செய்யப்படும் பல்வேறு முயற்சிகளில் ஒன்றுதான் பூஞ்சி குழுவின் தற்போதைய முயற்சி. சர்க்காரியா கமிஷன் பரிந்துரைகளைச் செயல்படுத்துவதை மறந்துவிட்ட மத்திய அரசு, பூஞ்சி குழுவின் அறிக்கையை நடைமுறைப்படுத்தத் துடிப்பதன் ரகசியம் புரியாமல் இல்லை!

(கட்டுரையாளர்: வழக்கறிஞர், சென்னை.)

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

 
%d bloggers like this: