Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

Musharraf – In the Line of Fire : Memoirs Criticism

Posted by Snapjudge மேல் செப்ரெம்பர் 26, 2006

யோசனைகள் இலவசம்

பாகிஸ்தான் அதிபர் முஷாரப் எழுதி வெளியாகியுள்ள “நெருப்புக் கோட்டினில்: ஒரு நினைவுக் குறிப்பு‘, இந்தியா – பாகிஸ்தான் – காஷ்மீர் பற்றிய பல்வேறு விவாதங்களைப் “பற்ற’ வைத்துள்ளது. காஷ்மீர் பிரச்சினைக்குத் தீர்வாக “தனிப்பட்ட முறையில் தனது யோசனை’ என்று அவர் நான்கு விஷயங்களை அந்த நூலில் குறிப்பிட்டுள்ளார்.

1. பாகிஸ்தானும் இந்தியாவும் உரிமைகோரும் பகுதிகளைப் பரஸ்பரம் விட்டுக் கொடுத்து பேசித் தீர்த்துக்கொள்ளலாம்

2. இப்படியாகத் தீர்மானிக்கப்படும் பகுதியில் இரு நாடுகளும் தங்கள் ராணுவத்தை விலக்கிக் கொள்ள வேண்டும்.

3. இப்பகுதிக்கு தன்னாட்சி அளிக்கவேண்டும்.

4. அந்தத் தன்னாட்சியைப் பாகிஸ்தான், இந்தியா, காஷ்மீர் ஆகிய மூன்று பகுதியினரையும் கொண்ட குழு அமைத்து கண்காணிப்போம்.

பிரச்சினைக்குரிய பகுதிகளை விட்டுக் கொடுத்துத் தீர்மானிக்க முடிந்தாலே இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான பிரச்சினை முடிந்துபோகிறது. அதன் பின்னர் அவரவர் பகுதியில் அவரவர் ஆட்சி தானே அமைந்துவிடும்.

ஆனால் முஷாரப், அதற்கும் மேலே போய், தன்னாட்சி வழங்க வேண்டும், வாருங்கள் மூவரும் ஒன்றாகக் கண்காணிப்போம் என்கிறார். அதாவது – இரண்டு வீடுகளுக்கு இடையில் எல்லைப் பிரச்சினையா? குறுக்கே சுவர் எழுப்பு! இரு நாடுகளுக்கு இடையே எல்லைப் பிரச்சினையா? குறுக்கே ஒரு நாட்டை எழுப்பு!

முஷாரப் சொல்லும் நான்கு யோசனைகளையும் கூட்டிக் கழித்துப் பார்த்தால் ஒரு புதிய நாடு முளைப்பதை உணரலாம். இன்றைய காலக்கட்டத்தில் இந்தியா – பாகிஸ்தான் உறவு என்பது வெறும் காஷ்மீர் எல்லைப் பிரச்சினை என்பதாக இல்லை. இந்தியாவுக்குள் பயங்கரவாதிகள் நுழைவதைத் தடுப்பதுதான் இந்திய நட்புக்கு பாகிஸ்தான் அளிக்கக்கூடிய முதல்மரியாதையாக இருக்க முடியும். ஆனால் அதைப் பற்றி முஷாரப் தனது “சர்வதேச உறவுகள்‘ அத்தியாயத்தில் விவாதிக்கக் காணோம்.

“பாகிஸ்தானில் பயங்கரவாதிகள்’ என அமெரிக்கா, இந்தியா இரு நாடுகளும் குற்றம் சாட்டும்போது இரு நாடுகளுக்கும் இரண்டு விதமான எதிர்வினைகளைத் தருகிறது பாகிஸ்தான்.

மும்பையில் தொடர் குண்டுவெடிப்பு நடைபெற்றதற்கு பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத அமைப்புகள்தான் காரணம் என்று இந்தியா சொன்னபோது வெளியுறவுத்துறை அமைச்சர் மூலம் பாகிஸ்தான் அளித்த கோபமான பதில்: “”இந்தியாவில் எங்கே குண்டு வெடித்தாலும் பாகிஸ்தான் காரணம் என்கிறார்கள்”.

ஆனால், இதே குற்றச்சாட்டுக்கு அமெரிக்காவிடம் பாகிஸ்தான் நடந்துகொள்ளும் விதம் அலாதியானது. நியூயார்க்கில் உலக வர்த்தகக் கட்டடம் அல் காய்தாவால் தாக்கப்பட்டதும், “”பயங்கரவாதத்தை ஒழிக்க (அல்லது பாகிஸ்தானில் பதுங்கியுள்ள பயங்கரவாதிகளை ஒப்படைக்க) ஒத்துழைக்காவிட்டால் நாட்டையே குண்டுபோட்டு அழிப்போம். கற்காலத்துக்குப் போய்விடுவீர்கள்” என்று மிரட்டிய விஷயத்திற்காக, அமெரிக்கா செல்லும் லண்டன் விமானங்களில் குண்டுவெடிக்க நடத்தப்பட்ட சதியை முறியடிக்கத் “துப்பு’ கொடுத்து “நடமாடும் நாயகருக்கு நல்லபிள்ளை நானே’ என்று பேர் வாங்கிக் கொண்டபின்னர், இப்போதுதான் அந்த மிரட்டல் பற்றி மூச்சு விடுகிறார் முஷாரப்.

ஆகையால், பேசிப் பேசித் தீர்த்த பின்னும் ஏதோ ஒன்று குறையுதே என்று இந்தியா கவலை கொள்ளத் தேவையில்லை. உலகம் தோன்றிய நாள் முதலாய் “வல்லவன் வகுத்ததே வாய்க்கால்’.

கெஞ்சினால் மிஞ்சுவர், மிஞ்சினால் கெஞ்சுவர்.

Dinamani Editorial – March 5, 2007

காஷ்மீரில் துருப்புகள்

காஷ்மீரில் துருப்புகளின் எண்ணிக்கையைக் குறைக்க இப்போதைக்குத் திட்டம் எதுவும் கிடையாது என்று பிரதமர் மன்மோகன் சிங் திட்டவட்டமாக அறிவித்துள்ளார்.

ஒருபுறம் ஹுரியத் மாநாட்டுக் கட்சியும் மறுபுறம் காஷ்மீர் மக்கள் ஜனநாயகக் கட்சியும் வீணாகக் கிளப்பியுள்ள சர்ச்சையைத் தொடர்ந்து பிரதமர் இவ்வாறு அறிவிக்க வேண்டியதாயிற்று. ஹுரியத் மாநாட்டுக் கட்சித் தலைவர் உமர் பரூக், காஷ்மீரில் துருப்புகளின் எண்ணிக்கையைக் குறைப்பதற்கு இந்தியா-பாகிஸ்தான் இடையே உடன்பாடு ஏற்பட்டுள்ளதாக ஓர் அறிக்கையில் கூறினார். காஷ்மீரின் மக்கள் ஜனநாயகக் கட்சியோ துருப்புகளின் எண்ணிக்கையைக் குறைக்க வேண்டுமென்று தீவிர இயக்கமே நடத்தி வருகிறது.

இக் கட்சியின் தலைவரான மெஹபூபா, சில நாள்களுக்கு முன்னர் தில்லியில் பல தலைவர்களைச் சந்தித்து துருப்புகளின் எண்ணிக்கையைக் குறைக்க வேண்டும் என்று வற்புறுத்தினார். தவிர, காஷ்மீரில் ராணுவப் படைகளுக்கு வழங்கப்பட்டுள்ள சிறப்பு அதிகாரங்களை விலக்கிக்கொள்ள வேண்டும் என்றும் அவர் கோரி வருகிறார். காஷ்மீரில் நிலைமை முன்னேறியுள்ளதால் துருப்புகளைக் குறைக்கலாம் என்பது அவரது வாதம். இப்படிக் குறைத்தால் தீவிரவாதிகளின் தாக்குதல் குறையும் என்றும் அவர் வாதிக்கிறார். இக் கட்சியின் மூத்த தலைவர் முப்தி முகமது சய்யீத், காஷ்மீரில் துருப்புகள் குறைக்கப்பட வேண்டும் என்பது தங்கள் கட்சியின் அடிப்படைக் கொள்கை என்று வர்ணித்துள்ளார்.

இதில் வேடிக்கை என்னவென்றால், காஷ்மீரில் மக்கள் ஜனநாயகக் கட்சியும் காங்கிரஸýம் சேர்ந்து கூட்டணி அமைத்து ஆட்சி நடத்துகிறது. இக் கட்சிகள் இடையே ஏற்பட்ட உடன்பாட்டின்படி 2002-ம் ஆண்டிலிருந்து முதல் மூன்று ஆண்டுக்காலம் மக்கள் ஜனநாயகக் கட்சியின் தலைவர் முப்தி முகமது சய்யீத் முதல்வராக இருந்தார்.

2005-லிருந்து காங்கிரஸின் குலாம்நபி ஆசாத் முதல்வராக இருந்து வருகிறார். காஷ்மீர் சட்டமன்றத்தின் ஆயுள்காலம் 6 ஆண்டுகளாகும். ஆகவே, அடுத்த ஆண்டு தேர்தல் நடந்தாக வேண்டும். இதை மனத்தில்கொண்டு மக்கள் ஜனநாயகக் கட்சியினர் துருப்புகள் எண்ணிக்கைக் குறைப்பை ஒரு தேர்தல் கோஷமாக ஆக்க, இப்போதிருந்தே குரல் எழுப்ப முற்பட்டுள்ளதாகக் கூறலாம்.

ஆளும் கூட்டணிக்குள்ளாக இருந்துகொண்டு அரசின் நிலைப்பாட்டுக்கு எதிராகச் செயல்படுவது சரியா என அக் கட்சியினர் சிந்தித்ததாகத் தோன்றவில்லை. ஏனெனில், துருப்புகளின் எண்ணிக்கையைக் குறைக்க காலம் இன்னும் கனியவில்லை என முதல்வர் குலாம் நபி ஆசாத் திட்டவட்டமாகக் கூறியுள்ளார்.

வருகிற நாள்களில் மக்கள் ஜனநாயகக் கட்சியினர் தங்களது சுருதியை மாற்றிக் கொள்வார்களா அல்லது மேலும் உரத்தகுரல் எழுப்புவார்களா என்பது தெரியவில்லை. அப்படி அவர்கள் தங்களது இயக்கத்தை முடுக்கிவிட்டால், அது கூட்டணி அரசின் ஸ்திரத்தன்மைக்கு ஊறு விளைவிக்கலாம்.

உள்ளபடி காஷ்மீரில் ராணுவப் படையினர் இரண்டுவிதப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். பாகிஸ்தானின் எல்லையிலிருந்து ஊடுருவல் நடைபெறாதபடி எல்லையைக் காப்பது முதல் பணி. பாகிஸ்தானில் பயிற்சி பெற்ற தீவிரவாதிகளால் காஷ்மீர் மக்களின் உயிருக்கும் உடைமைக்கும் ஆபத்து ஏற்படாதபடி பாதுகாப்பது இரண்டாவது பணியாகும்.

காஷ்மீரில் பயங்கரவாதம் அடியோடு அகன்று விட்டதாகக் கூற முடியாது. காஷ்மீர்ப் பிரச்சினை பற்றி இந்தியா- பாகிஸ்தான் இடையே பேச்சுவார்த்தை நடந்து வந்தாலும் காஷ்மீரில் இன்னும் முழு அமைதி ஏற்பட்டுவிடவில்லை. அப்படிப்பட்ட நிலைமை ஏற்பட்ட பிறகே படைகளின் எண்ணிக்கையைக் குறைப்பது பற்றிச் சிந்திக்க முடியும். பிரதமர் இதைத்தான் எடுத்துக் கூறியுள்ளார்.

பின்னூட்டமொன்றை இடுக