Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

Chennai Sangamam: Tamil Maiyyam Festival – Celebration of Thamizh Heritage, Culture

Posted by Snapjudge மேல் பிப்ரவரி 28, 2007

சென்னை சங்கமம் – ‘நம்ம தெருவிழா’
கேடிஸ்ரீ

‘சென்னை சங்கமம்’ என்ற பெயரில் ஒருவாரகால கலை நிகழ்ச்சிகள் சென்னையில் கடந்த பிப்ரவரி 20ம் தேதி முதல் தொடர்ந்து நடைப்பெற்று வந்தது. தமிழ் மையம் மற்றும் தமிழக அரசின் சுற்றுலா – பண்பாட்டுத்துறை இணைந்து இவ்விழாவை சென்னையில் பல்வேறு இடங்களில் நடத்தியது.

மக்கள் மறந்த நம் பாரம்பரிய கலைகளை – மக்களிடம் இருந்து பிரிந்து போன கலைகளை மீண்டும் மக்களிடமே கொண்டு சேர்க்கின்ற ஒர் அரிய முயற்சியே ‘சென்னை சங்கமம்’.

முன்னதாக ‘சென்னை சங்கமம்’ நிகழ்ச்சியின் தொடக்கவிழா சென்னை ஐஐடி திறந்தவெளி அரங்கில் கடந்த 20ம் தேதி இனிதாக தொடங்கியது. தமிழக முதல்வர் மு. கருணாநிதி அவர்கள் இவ்விழாவை துவக்கி வைத்தார். அன்றைய விழாவில் கிராமிய கலை, பாடல்கள், நடனங்கள் போன்ற கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன.

முதலாக சென்னை சங்கமத்தின் ஒருங்கிணைப்பாளரும், கவிஞருமான கனிமொழி விழாவிற்கு வந்தவர்களை வரவேற்று பேசினார்.

”எங்களுடைய இந்த சங்கே முழங்கு சென்னை சங்கமத்தின் துவக்கம்.. தமிழ்மொழியின் தொன்மையையும், பாரம்பரியத்தையும் வெளிப்படுத்தும் நிகழ்ச்சி. இது கிராமிய, கலை வடிவங்களை உள்ளடக்கியது. கிராமியக் கலைஞர்களின் பெயர் பாட இந்நிகழ்ச்சி ஒரு வெளிப்பாடாக அமையும். உலகத்தை மறந்து யாரும் கை தட்டுகிறார்களா என்பதைக்கூட அறியாமல் கலையையும், தங்கள் படைப்புக்களையும் உயிராக மதிப்பவர்களின் சங்கமம் இது” என்றார்.

விழாவை தொடக்கி வைத்து பேசிய முதல்வர், ” நமது வழித்தோன்றல்கள் நம்மை ஒருபோதும் ஏமாற்றமாட்டார்கள்..” என்று விழாவின் ஒருங்கிணைப்பாளரும், முதல்வரின் மகளுமான கனிமொழியை பாராட்டி பேசியது மட்டுமல்லாமல், பிரம்மாண்டமான அரங்கினை வடிவமைத்த ‘தோட்டா’தரணியையும் பாராட்டினார். மேலும் பழந்தமிழை, பண்பாட்டை, வரலாறை இவ்விழாவின் மூலம் மீண்டும் மக்கள் பார்க்கலாம். இதுமாதிரியான கலை, பண்பாட்டு நிகழ்ச்சிகள் அரங்கேறும் போது மக்கள் அதை வரவேற்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.

விழாவிற்கு வந்தவர்களுக்கு இவ்விழாவின் ஒருங்கிணைப்பாளர் கஸ்பர்ராஜ் அவர்கள் நன்றியை தெரிவித்துக் கொண்டார்.

இவ்விழாவின் ஓர் அங்கமாக ‘நெய்தல் சங்கமம்’ திருவிழா திடல் திறப்புவிழாவும் அன்று நடைபெற்றது. சென்னை மெரீனா கடற்கரையில் உள்ள புகழ்பெற்ற வெலிங்டன் சீமாட்டி திடலில் ‘நெய்தல் சங்கமம்’ வளாகம் அமைக்கப்பட்டது. இவ்வாளகத்தில் கிராமதிருவிழாவில் இடம் பெற்றிருக்கும் அனைத்து அம்சங்களும் இடம் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த கலைஞர்கள் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். மேலும் இவ்வாளகத்தில் கைவிணை பொருட்கள் கண்காட்சி, டூரிங் டாக்கீஸ் எனப்படும் கிராம சினிமா கொட்டகை அமைக்கப்பட்டு அதில் சிறு படங்கள் காட்டப்பட்டன. இதுதவிர பல்வேறு கலைநிகழ்ச்சிகள், வீர விளையாட்டுகள் ஆகியவை நடைப்பெற்றன.

‘நெய்தல் சங்கமம்’ வாளகத்தை தமிழக உள்ளாட்சித்துறை அமைச்சர் மு. க. ஸ்டாலின் திறந்து வைத்தார். விழாவில் பிரபல கர்நாடக இசைபாடகி சுதா ரகுநாதன் மற்றும் தமிழக அமைச்சர்கள் பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

சென்னையின் முக்கிய இடங்களான சென்னை சென்டல் ரயில் நிலையம், சென்னை கோயம்பேடு பேருந்து நிலையம், சென்னை ஏக்மோர் ரயில் நிலையம், சென்னையில் உள்ள பிரபல பூங்காக்கள், ஓட்டல்கள், பள்ளிக்கூடங்கள் என்று சுமார் 60 இடங்களில் இத்தகைய கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது முற்றிலும் புதுமையாக இருந்தது.

தினமும் காலை 6 மணிக்கே நிகழ்ச்சிகள் துவங்கிவிடும். காலை 6 மணிக்கே சென்னை பூங்காக்கள் கர்நாடக இசையினால் நிரம்பி வழிந்தது என்றால் அதுமிகையல்ல. பாம்பே ஜெயஸ்ரீ, நித்யஸ்ரீ, ஓ.எஸ். அருண், தஞ்சை சுப்ரமணியம், அருணா சாய்ராம் என்று பிரபலங்களின் இசைவெள்ளத்தில் மக்கள் நீராடினார்கள்.

காலை 10 மணிக்கு மேல் சென்னை மாநகர பேருந்துகளில் நாட்டுப்புற கலைஞர்கள் பாடல்களை பாடிய வண்ணமும், வாத்தியங்களை வாசித்த வண்ணமும் ஊர்வலமாக வந்த காட்சிகள் அற்புதம். கிராமத்து கலைகள் அத்துணையும் சென்னைக்கே வந்துவிட்டது போல் இருந்தது அந்தக்காட்சிகள்.

மாலை ஆறு மணிக்கு வெலிங்டன் சீமாட்டி திடலில் உள்ள ‘நெய்தல் சங்கமத்தில்’ தப்பட்டா கலைக்குழுவினர், கனியன் கூத்து குழவினரின் கலைநிகழ்ச்சிகளும், கரகாட்டம், மயிலாட்டம் போன்ற நிகழ்ச்சிகளும் நடைபெற்றன.

இலக்கிய ஆர்வலர்களுக்காக சென்னை அண்ணாசாலை அருகில் உள்ள பிலிம்சேம்பர் அரங்கில் ‘தமிழ் சங்கமம்’ என்ற ஓர் இலக்கிய நிகழ்ச்சி தினமும் நடைப்பெற்றது. இதில் தமிழகம் மற்றும் புதுவையைச் சேர்ந்த புகழ்பெற்ற கவிஞர்கள், கதாசிரியர்கள், விமர்சனர்கள், தமிழறிஞர்கள் ஆகியோர் பங்கு பெற்றது சிறப்பு ஆகும்.

சுமார் 1400க்கும் மேற்பட்ட கலைஞர்களுக்கு மேல் ‘சென்னை சங்கமம்’ விழாவில் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

இனி ஆண்டுதோறும் தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாளில் ‘சென்னை சங்கமம்’ நிகழ்ச்சி நடத்தவிருக்கிறார்கள்.

இவ்விழா பற்றி பத்திரிக்கையாளர்களிடம் பேசிய விழா ஒருங்கிணைப்பாளர் கவிஞர் கனிமொழி, ” இனி வரும் காலங்களில் சென்னை சங்கமத்தில் பங்குபெறும் சிறந்த 30 கலைஞர்களை தேர்வு செய்து சென்னையில் நிரந்தரமாக பாரம்பரிய கலைகளை விளக்கும் ஒரு மன்றத்தை உருவாக்க திட்டமிட்டு இருக்கிறோம்.. மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு இவ்விழாவை மக்களே தங்கள் இல்ல விழாவாக மாற்றிக் கொண்டாடுகின்ற வகையில் நாங்கள் வழங்க இருக்கிறோம்..” என்றார்.

அசோக் லைலைண்ட், ரிலையன்ஸ், டிவிஎச், நல்லி, ஸ்ரீ பாலாஜி எஜூகேஷனல் அண்ட் சார்ட்டபிள் டிரஸ்ட், சரவணா ஸ்டோர், போத்தீஸ் உள்ளிட்ட நிறுவனங்கள் இந்நிகழ்ச்சியை இணைந்து வழங்கினார்கள்.


 

 

பாரதியின் புதுமைப் பெண்ணும் பட்டிமன்றப் பேச்சாளர்களும்

– ந. கவிதா

தமிழ்நாடு பண்பாடு மற்றும் சுற்றுலாத் துறையும் தமிழ் மையமும் இணைந்து நடத்திய ‘சென்னை சங்கமம்’ கலாச்சாரத் திருவிழா 20.02.07 முதல் 26.02.07 வரை நடைபெற்றது. எல்லாத் தரப்புப் பார்வையாளர்களுக்குமான விழாவாக இந்நிகழ்வு அமைந்திருந்தது.

கவிஞர் கனிமொழியும் அருட்தந்தை கஸ்பர் ராஜும் இத்திருவிழாவை ஒருங்கிணைத்தார்கள். தமிழகத்தின் பல பகுதிகளிலிருந்தும் கலைஞர்கள் பங்கேற்றார்கள். ஒயிலாட்டம், மயிலாட்டம், தப்பாட்டம், கரகாட்டம், கட்டைக்கால் கூத்து, நையாண்டி மேளம், ஜிம்ளா காவடி ஆட்டம், வில்லுப்பாட்டு, தேவராட்டம் என்று பல்வேறு கிராமியக் கலைகள், கர்நாடக இசை, பரத நாட்டியம், மேற்கத்திய இசை, நாடகங்கள், வழக்காடு மன்றங்கள், கவியரங்குகள் என்று இயல், இசை, நாடகம் ஆகிய மூன்றும் சென்னை சங்கமத்தில் அரங்கேறின.

அடையாறு ஐ.ஐ.டி. வாளகத்தில் மிகப் பிரம்மாண்டமான இந்நிகழ்வின் தொடக்க விழா நிகழ்ச்சிக்கு முதல்வர் மு. கருணாநிதி தலைமையேற்க, சங்கத் தமிழிலிருந்து நவீனத் தமிழ் வரையிலான கவிதைகளை ‘சங்கே முழங்கு’ என்ற நடன நிகழ்ச்சியாகத் தந்தார்கள்.

சென்னை சங்கம நிகழ்ச்சிகள் சென்னையின் பல்வேறு பூங்காக்களிலும் கடற்கரையிலும் அரங்குகளிலும் நடைபெற்றன. கிராமிய நிகழ்த்துகலைகளில் பெண் கலைஞர்களின் பங்கும் மிகக் கணிசமானதாக இருந்தது. தப்பாட்டத்திலும் பெண்கள் தங்கள் தனி முத்திரையைப் பதித்தார்கள். தப்பாட்டம் ஒரு காலகட்டத்தில் ஆண்கள் மட்டுமே பங்கேற்கும் கலையாக இருந்தது நினைவுக்கு வருகிறது. மறக்கப்பட்டுவிட்ட நமது பாரம்பரியக் கலைகள் பலவற்றை மீண்டும் நம் கவனத்திற்குக் கொண்டுவந்த ஒருங்கிணைப்பாளர்களும் கலைஞர்களும் பாராட்டுக்குரியவர்கள்.

இந்நிகழ்வுகளின் ஒரு பகுதியாக ஃபிலிம் சேம்பரில் கவியரங்கங்களும் வழக்காடு மன்றங்களும் நாடக அரங்கேற்றங்களும் நடந்தன. 21.02.07 அன்று ‘பாரதி கண்ட புதுமைப் பெண் கனவா நனவா?’ என்ற தலைப்பில் சாரதா நம்பியாரூரன் தலைமையில் பட்டிமன்றம் நடைபெற்றது. ‘கனவே’ என்ற அணியில் மூவரும் ‘நனவே’ என்ற அணியில் மூவரும் வாதித்தனர்.

‘கனவே’ அணியில் பேசிய பர்வீன் சுல்தானா, பெண் எதிர்கொள்ளும் நிகழ்காலப் பிரச்சினைகளையும் இனி வரும் சவால்களையும் மிக அழகாகச் சுட்டிக்காட்டினார்.

பிடிக்காததைச் செய்யாமலிருப்பது கூடச் சுதந்திரம்தான். தனக்குப் பிடிக்காவிட்டாலும் கணவனுக்காகக் கத்தரிக்காய்க் குழம்பு செய்வது ஒரு வகையில் சுதந்திரத்தை இழப்பதுதானே என்று ஒரு பேச்சாளர் வாதித்தது சுவையாக இருந்தது. கத்தரிக்காய்க் குழம்பிற்கும் பெண் சுதந்திரத்திற்கும் முடிச்சுப் போடப் பட்டிமன்றப் பேச்சாளர்களால்தான் முடியும்.

பாரதி கண்ட புதுமைப் பெண் கனவுதான் என்பதைச் சொல்லப் பெண் சிசுக் கொலை, வரதட்சணை, பெண் ஊழியர்களுக்கு ஊதியம் வழங்குவதில் பாரபட்சம், பெண்மீதான ஒழுக்கத் திணிப்புகள் ஆகியவை மட்டுமே போதும் என்பது இந்த அணியினரின் வாதமாக இருந்தது.

புதுமைப் பெண் பற்றிய கனவு நனவாகத்தான் இருக்கிறது என்ற அணியினர், ஏழு பெண்கள் இன்று மேடையேறிச் சுதந்திரமாகக் கருத்துக்களை முன்வைததுக்கொண்டிருக்கிறோமே, இது பாரதி சொன்ன பேச்சு சுதந்திரமன்றி வேறென்ன என்ற கேள்வியோடு தங்கள் வாதத்தைத் தொடங்கினார்கள். அந்த ஏழு பேரின் சமூக-பொருளாதாரப் பின்னணி பற்றிய அலசல் பெண் சுதந்திரத்தின் நன்மை கருதித் தவிர்க்கப்பட்டது.

சானியா மிர்சாவிலிருந்து கிரண் பேடி வரை எத்தனையோ பெண் சாதனையாளர்களைச் சுட்டிக்காட்டி பாரதி கண்ட கனவு நனவாகித்தான் இருக்கிறது என்று இந்த அணியினர் பேசினார்கள். எங்கோ நடைபெறும் சில கொடுமைகளைச் கொண்டு மொத்தமாகப் பெண்களின் நிலை இதுதான் என்று சொல்ல முடியாது என்பது ‘நனவே’ அணியினரின் கருத்து.

ஆனால் சமூகத்தில் விதிவிலக்குகளாகச் சாதனை புரியும் கல்பனா சாவ்லா போன்றவர்களை மட்டுமே கொண்டு பெண் சமூகம் முழுவதும் சாதனையாளர்கள் நிரம்பியிருப்பதாகச் சொல்ல முடியுமா என்ற கேள்வியைக் ‘கனவே’ அணியினர் முன்வைத்தார்கள்.

நடுவரின் தீர்ப்பு சமரசமாக் இருந்தது. பாரதி கண்ட கனவு நனவாகிக்கொண்டிருக்கிறது; பெண்கள் புதுமைப் பெண்களாக முன்னேற இன்றும் கடக்க வேண்டிய தூரமும் எதிர்கொள்ள வேண்டிய சவால்களும் நிறைய இருக்கின்றன; அந்த இலக்கை அடையும் முயற்சி இன்றைய பெண்களுக்குத் தேவை என்று தீர்ப்பளித்தார் சாரதா நம்பியாரூரன்.

ஒரு பட்டிமன்றத்தில் பொழுதுபோக்கிற்காகவும் பார்வையாளர்களைச் சிரிக்க வைக்கவும் என்னவெல்லாம் இருக்க வேண்டுமோ அத்தனையும் இந்தப் பட்டிமன்றத்திலும் இருந்தது. எத்தனைதான் ஆழ்ந்த சிந்தனைக்குரிய விஷயமாக இருந்தாலும் கூட அதை வெகு சுலபமாகப் பார்வையாளர்களின் பொழுதுபோக்கிற்கான விஷயமாக மாற்றிவிடும் நிலை இந்த மன்றங்களில் நிகழ்வதுண்டு. இந்த நிகழ்விலும் அது இருந்தது.

இருந்தாலும் வெகுஜனத் தளத்தில் இப்படிப்பட்ட பட்டிமன்றங்கள் வெறும் பொழுதுபோக்கிற்கான அம்சங்களாக மட்டுமே மாறிவரும் சூழலில், இந்த மன்றம் அதிலிருந்து சற்றே விலகி யதார்த்த வாழ்வில் பெண் எதிர்கொள்ளும் சிக்கலையும் சவாலையும் பகிர்ந்துகொள்ளும் விதமாக அமைந்தது சற்றே நிறைவைத் தருகிறது.
படங்கள்: சென்னை சங்கமம்

சென்னை சங்கமம் நிகழ்ச்சிகளுக்கு நிதி வழங்கப்பட்டது ஏன்?: கருணாநிதி விளக்கம்

சென்னை, மார்ச் 7: அரசின் கொள்கை அறிவிப்புப்படிதான் சென்னை சங்கமம் நிகழ்ச்சிகளுக்கு நிதிஉதவி அளிக்கப்பட்டது என்று முதல்வர் கருணாநிதி விளக்கம் அளித்துள்ளார்.

முதல்வரின் மகள் கனிமொழி ஒருங்கிணைப்பாளராக உள்ள தமிழ் மையம் சார்பில் நடைபெற்ற சென்னை சங்கமம் நிகழ்ச்சிகளுக்கு அரசு நிதி உதவி அளித்ததற்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இதற்காக தனி அரசாணை பிறப்பிக்கப்பட்டதாகவும் குற்றம்சாட்டப்பட்டது. இந்நிலையில் இது குறித்து முதல்வர் கருணாநிதி அளித்துள்ள விளக்கம்: சென்னை சங்கமம் நிகழ்ச்சிக்கு வழங்கியது போன்ற உதவியை மற்ற அமைப்புகளுக்கும் அரசு வழங்குமா இதற்கு முன்பு இதுபோல் வழங்கியதற்கு முன்மாதிரி உண்டா? என்று கேட்கிறார்கள். இதற்கான விளக்கத்தை சுற்றுலாதுறை செயலாளர் இறையன்பு அளித்துள்ளார்.

சென்னை சங்கமம் நிகழ்ச்சிக்கு முதல் நாளன்று ரூ. 27.17 லட்சத்துக்கு சுற்றுலா துறை விளம்பரம் செய்தது. இதுதவிர விளம்பர பலகைகள் வைக்க ரூ. 80 ஆயிரம் செலவு செய்துள்ளது. தமிழ் மையம் இந்நிகழ்ச்சியை நடத்தப்போவதாக தெரிவித்து, அதற்கு அரசின் அங்கீகாரத்தை கோரியது. அரசும் அனுமதித்தது.

ஏற்கெனவே கடந்த ஆண்டு சுற்றுலா துறையின் கொள்கை குறிப்பில் கலை நிகழ்ச்சிகள் தனியார் பங்கேற்புடன் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படிதான் இந்த நிகழ்ச்சிக்கு உதவி செய்யப்பட்டது. தமிழ் மையத்துக்கு அரசு நிதி வழங்கவில்லை. ஒருங்கிணைப்பு பணிகளுக்கு தான் உதவியது. ஏற்கெனவே தமிழகத்தில் பல்வேறு தனியார் அமைப்புகளுக்கு இதுபோன்று அரசு உதவிய நேர்வுகள் உள்ளன.

திருவையாறு இசை நிகழ்ச்சிக்கு நிதியுதவி, சேலம் ஜெயலட்சுமி கலை பண்பாட்டுக் கழகம் அமைப்பதற்கான நிதியுதவி, குன்னக்குடி வைத்தியநாதனின் அமைப்பான ராக ஆராய்ச்சி மையம் நடத்தும் நிகழ்ச்சிக்கு ஆண்டுதோறும் ரூ. 5 லட்சம், சிதம்பரம் நாட்டியாஞ்சலிக்கு ரூ. 98 ஆயிரம் என பல நிகழ்ச்சிகளுக்கு அரசு உதவி வழங்கி வருகிறது என்று கருணாநிதி கூறியுள்ளார்.

Kalki 11.03.2007

கல்கி – சென்னை சங்கமம்: கலை விழாவா? கழக விழாவா??

ஒரு புறம் பாராட்டு, மறுபடியும் முணுமுணுப்பு. ‘இது கலை
விழா, இல்லையில்லை… இதுகனிமொழி விழா’ என்ற வாதங்கள். கலந்துகொள்ள அழைக்கப்படாதவர்களின் வருத்தம் அழைக்கப்பட்டும் கலந்து கொள்ளாதவர்களின் கோபம் இப்படித்தான்
முடிந்திருக்கிறது சென்னை சங்கமம் விழா.

இதுபற்றி மக்கள் என்ன
நினைக்கிறார்கள்?

பாலாஜி பிரசாத் (திரைப்பட இயக்குநர்): நம்ம பண்பாட்டை கலாசாரத்தையட்டி நடைபெற்ற கலைவிழாக்கள் ரொம்ப அருமையா இருந்திச்சு. எல்லா ஊரிலிருந்தும், அடுத்த
மாநிலத்திலிருந்துகூட இந்த நிகழ்ச்சில கலந்துகிட்ட பார்க்கிறப்ப சந்தோஷமா இருந்திச்சு. நம்மோட அடுத்த தலைமுறைக்கு நம்முடைய பழமையின் அடையாளங்களை அறிமுகம் இது! சென்னை நகரத்துக்குள், தெருவுக்குள், பூங்காவுக்குள் கிராமம் அருமையான கான்செப்ட்.

ஸ்ரீ தங்கலட்சுமி பி.காம். (எஸ்.ஐ.ஜி. கல்லூரி): ஸ்கூல், காலேஜ்
விழாக்களில் பார்க்குற டான்ஸ் தவிர வேறெதுவும் எங்களுக்குத்
தெரியாது. ஆனா இந்த சென்னை சங்கமம் மூலமா கிராமியக் கலைஞரில் இவ்வளவு விஷயங்கள் இருக்கான்று மலைப்பா இருக்கு’’

இது தி.மு.க. விழாவா

யார் பண்ணா என்ன பாஸ்? செய்யுற விஷயம் நல்லா இருக்கிறப்ப பாராட்ட வேண்டியதுதானே! இன்னும் கொஞ்சம் நாள்
எடுத்திருக்கலாம். போதுமான விளம்பரம் இல்லை. அதனால் குறையாகத் தெரியுது.

ஜலதா … (குடும்பத் தலைவி) : சென்னைக்கு வந்து இருபத்தைந்து வருஷமாச்சு எங்க ஊர்ல சின்ன வயசில கோயில் திருவிழாக்களில் இது மாதிரி கலை நிகழ்ச்சிகள் விடிய விடிய நடக்கும். அந்த சந்தோஷம் தனி. அன்னைக்கு அசோக் நகர் பார்க்குக்கு பேரக்குழந்தைகளை அழைச்சுகிட்டுப் போய்ட்டு வந்தேன. பசங்க அதைப் பார்த்துட்டு வந்து அடிச்ச லூட்டி இருக்கே! அப்பப்பா… சென்னைக் குழந்தைகளுக்கு இந்த விழா ரொம்ப அவசியம்.

பி.ராஜ்மோகன் : வருடா வருடம் இது நடத்தப்பட வேண்டும். இதுபோன்ற விழாக்கள் கொண்டாடுவதோடு இல்லாமல் ‘கிராமியக் கலைகளை’ பள்ளி மாணவர்களிடம் நிலைநிறுத்த வேண்டும்.

கே.எஸ்.கோபி: இயந்திர மயமாகிவிட்ட சென்னை போன்ற நகரங்களில் தொலைக்காட்சி மட்டுந்தான்
பொழுதுபோக்காகிவிட்டது. ஆடி ஓடி விளையாட இடம் கிடையாது. ஒரு கிராமத்து பையன் சிட்டிக்கு உந்த எப்படி மலைச்சு போவானா அப்படித் தான் சிட்டி பையன் கிராமத்துக்குப் போனாலும் இந்த இடைவெளியைக் குறைக்க இது போன்ற விழாக்கள் நிச்சயமா உதவும்.

சி.கே.குமார் – முதன்மை பெற்ற காரணம் : யார் இதற்காக முயற்சி செய்தாலும் இந்த அரசு நிச்சயம் உதவியிருக்கும். ஏனென்றால் கலையிலும், இலக்கியத்திலும் ஆர்வமுடையவர் முதல்வர். ஜெயலலிதா ஆட்சியென்றால் கொஞ்சம் தாமதம் ஆகும் அவ்வளவுதான். அவரும் உலகத் தமிழ்மாநாட்டை நடத்தியவர்தான்.

கலையை, பண்பாட்டை, கலாசாரத்தை மக்களிடம் கொண்டு சேர்க்க தொலைக்காட்சி ஒன்று போதுமே? சன் டீ.வி. அதைச் செய்யலாமே?

சென்னை சங்கமம் குறித்து எழுத்தாளர் இந்திரா பார்த்தசாரதி என்ன நினைக்கிறார்?

இதுபோன்ற கலை விழாக்கள் வரவேற்கப்பட வேண்டிய விஷயம். சென்னை சங்கமமும் நன்றாக இருந்ததாகதான் சொல்கிறார்கள். எனக்கு அழைப்பிதழ் அனுப்பாததால் நான் போகவில்லை. கலைஞர்களையும், எழுத்தாளர்களையும், இலக்கியவாதிகளையும் பங்குபெறச் செய்வதற்கு வாய்ப்பு இல்லாவிடாலும் அழைப்பிதழாவது அனுப்பியிருக்கலாம். அவர்கள் அதைச் சரிவர செய்யவில்லை. அங்கங்கே இதுகுறித்த முணுமுணுப்புகள் எழுந்துள்ளன. இதுதவிர குழனமப் பார்மையான அணுகுமுறைகள், அழைப்புகள் இருப்பதாகவும் குறைபடுகின்றனர். எப்படியோ விழா நடந்தேறியுள்ளது.

இப்படிப்பட்ட விழாக்களைத் தொடர்ந்து செய்யப்போகும் அழைப்புகளுக்கு ஒரு நிலையான ‘செட் அப்’ அவசியம். அது அக்கரையோடும், பொதுமையோடும், அனைத்துத் தரப்புகளையும் அரவணைத்துச் செல்லும் தன்மையோடும் அரசு ஆதரவோடும் செயல்பட்டால் இன்னும் சிறப்புறச் செய்ய முடியும்.

சில வருடங்களுக்கு முன் அரசாங்கம் அகாடமிகள் செயல்பாடுகள், செலவினங்கள் மற்றும் நடைமுறைகள் குறித்த ஆய்வறிக்கை ஒன்றைக் கேட்பார்கள். அக்சர் கமிட்டி என்ற பெயரில் எங்ளது
ஆய்வறிக்கையைச் சமர்ப்பித்தோம். நாங்கள் சமர்ப்பித்ததில் அவர்களுக்கு எது தேவையோ அதை எடுத்துக்கொண்டு மற்றதை
விட்டுவிட்டார்கள். ஏனென்றால் மக்களது வரிப்பணம் இது போன்ற அமைப்புகளின் மூலம் செலவிடப்படும்போது அதற்கான வரவு செலவுத் திட்டங்கள் மக்கள்முன் வைக்கப்பட வேண்டியது அவசியம்.

சென்னை சங்கமமும் அதைச் செய்ய வேண்டும்.

மைலாப்பூர் தொகுதி அ.தி.மு.க. எம்.எல்.ஏ. எஸ்.கே. சேகர் : வருஷத்தில் ஒரு நாள் கலைஞர்களை கூட்டி விழா எடுப்ப்தனால் கலை வளர்ந்துவிடாது. கலைஞர்களுடன் நிலைமையும் மாறிவிடாது.
கிராமியக் கலைஞர்களுக்கு வாழ்வளிக்க வேண்டுமென்றால், அந்தவாடி அந்தந்தக் கிராம விழாக்களில் கிராமியக் கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட வேண்டும். அரசு விழாக்களில் இடம்பெற வேண்டும். சென்னை சங்கமத்திற்கு சுமார் 5 கோடி செலவழித்திருப்பதாகச் சொல்கிறார்கள். ஆனால், இதில் பங்குபெற்ற கலைஞர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகதானே இருக்கிறது.

கூரையேறி கோழியடிக்காதவன் வானம் ஏறி வைகுந்தம் போன கதையாகத்தான் இருக்கிறது. இன்றைய கிராமியக் கலைஞன், கலைஞர்களின் வாழ்வும், நிலையும்.

– ச.ந.கண்ணன்

————————————————————————————————————————————————-
“சென்னை சங்கமம்’ நிகழ்ச்சி நிதி: 25 தன்னார்வ நிறுவனங்களுக்கு ரூ.40 லட்சம் உதவி – முதல்வர் வழங்கினார்


சென்னை, ஆக. 7: “சென்னை சங்கமம்’ நிகழ்ச்சி நடத்தியதின் மூலம் கிடைத்த ரூ. 40 லட்சம் தொகை 25 தன்னார்வத் தொண்டு நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டது.

திங்கள்கிழமை அறிவாலயத்தில் நடைபெற்ற விழாவில் இத்தொகைக்கான காசோலையை தொண்டு நிறுவனப் பிரதிநிதிகளிடம் முதல்வர் கருணாநிதி வழங்கினார்.

சென்னையில் உள்ள “தமிழ் மையம்’ என்ற அமைப்பு “சென்னை சங்கமம்’ என்ற கலாசார விழாவை கடந்த பிப்ரவரி 6-ம் தேதி முதல் 16-ம் தேதி வரை சென்னையின் பல்வேறு பகுதிகளில் நடத்தியது. இதில் விளம்பரம் மூலம் கிடைத்த வருவாயில் செலவு போக எஞ்சிய தொகை தன்னார்வத் தொண்டு நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டதாக தமிழ் மையத்தின் நிர்வாக அறங்காவலர் ஜெகத் கஸ்பார் தெரிவித்தார். இது குறித்து அவர் மேலும் கூறியது:

“சென்னை சங்கமம்’ நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளர் முதல்வரின் மகள் கனிமொழி. இந்நிகழ்ச்சியை “தமிழ் மையம்’ நடத்தியது. இந்நிகழ்ச்சியில் 750 கலைஞர்கள் பங்கேற்றனர். சென்னையில் 700 இடங்களில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியை 10 லட்சம் மக்கள் கண்டு களித்தனர்.

தனியார் நிறுவனங்களிடமிருந்து விளம்பரம் மூலம் பெறப்பட்ட தொகை ரூ.2 கோடியே 94 லட்சத்து 54 ஆயிரத்து 900 ஆகும். இதில் நிகழ்ச்சிக்கான செலவுத் தொகை ரூ.2 கோடியே 56 லட்சத்து 27 ஆயிரத்து 895 ஆகும். எஞ்சிய தொகை ரூ.39 லட்சத்து 27 ஆயிரமாகும். தற்போது கூடுதலாக ரூ.73 ஆயிரம் நிதி சேர்க்கப்பட்டு ரூ.40 லட்சத்தை 25 தன்னார்வத் தொண்டு நிறுவனங்களுக்கு முதல்வர் மூலம் அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டது.

முதல் கட்டமாக 5 நிறுவனப் பிரதிநிதிகளுக்கு முதல்வர் வழங்கினார். ஏனைய நிறுவனங்களுக்கு செவ்வாய்க்கிழமை வழங்கப்படும். இந்நிறுவனங்கள் அனைத்துமே குழந்தைகள், பெண்கள் மற்றும் உடல் ஊனமுற்றோர் நலனுக்காகச் செயல்படுபவை.

நகராட்சிப் பள்ளிகளில் கிராமியக் கலை: சென்னையில் உள்ள மாநகராட்சி பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு கிராமியக் கலை பயிற்சி அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதற்கு ரூ.8 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. குறைந்தபட்சம் 200 மாணவர்களுக்கு பயிற்சி அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது என்றார் கஸ்பார்.

மீண்டும் “சென்னை சங்கமம்’: வரும் ஆண்டும் இதுபோன்ற “சென்னை சங்கமம்’ கலை நிகழ்ச்சி நடத்தப்படும் என்று கனிமொழி தெரிவித்தார்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

 
%d bloggers like this: