Display of power and the arrogance behind the Govt sponsored conferences: DMK at Nellai
Posted by Snapjudge மேல் திசெம்பர் 6, 2007
பலமல்ல, பலவீனம்!
தொடர்பான முழுமையான செய்தித் தொகுப்பு: DMK youth wing conference in Tirunelveli – Preparations, Arrangements, Details « Tamil News
நெல்லையில் நடைபெற இருக்கும் திமுக இளைஞர் அணி மாநாட்டுக்காகத் தமிழகமே விழாக்கோலம் பூண்டிருப்பதுபோல இருக்கிறது. பார்க்கும் இடமெல்லாம் டிஜிட்டல் பேனர்கள். கண்ணெட்டும் தூரமெல்லாம் கறுப்பு சிவப்பு கொடிகள். சினிமா விளம்பரங்களைப் பின்னுக்குத் தள்ளும் அளவுக்கு சுவரொட்டிகள். ஆளும் கட்சியின் அதிகார மையம் தனது நேரடி மேற்பார்வையில் நடத்தும் மாநாடு என்றால் சும்மாவா பின்னே?
இந்தக் கோலாகலங்களை எல்லாம் பார்க்கும்போது, மனதிற்குள் சற்று நெருடல். சுதந்திரம் பெற்று அறுபது ஆண்டுகள் கடந்துவிட்டன. இதுவரை இந்தியக் குடியரசு 14 நாடாளுமன்றத் தேர்தல்களைச் சந்தித்து விட்டிருக்கிறது. மக்களாட்சி மலர்ந்த ஆரம்ப காலங்களில், அரசியல் கட்சிகள் தங்களது செல்வாக்கை நிலைநாட்டவும், கொள்கைகளை மக்களிடம் எடுத்துச் சொல்லவும், மாநாடு மற்றும் பேரணிகள் தேவைப்பட்டன.
இதுபோன்ற மாநாடுகள் மூலம், தங்களது தொண்டர்களுக்கு எழுச்சி ஏற்படுத்துவதும், மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்துவதும் அப்போது தேவையாக இருந்தது என்பதை மறுப்பதற்கில்லை. அதற்குக் காரணம், இந்த அளவுக்கு ஊடகங்களின் தாக்கம் மக்கள் மத்தியில் இருக்கவில்லை என்பதுமட்டுமல்ல, மக்களிடம் தெளிவான அரசியல் சிந்தனை இல்லாமல் இருந்ததும் முக்கியமான காரணம். இப்போது நிலைமை அதுவல்ல. அடுப்பங்கரைவரை அரசியல் பேசப்படுகிறது என்பதும், ஒவ்வொரு வாக்காளரும் தெளிவான அரசியல் சிந்தனை உடையவராக இருப்பதும் மறுக்க முடியாத உண்மை.
மாநாடு, பேரணி என்கிற பெயரில் பறக்க விடப்படும் கொடிகளுக்குப் பயன்படும் துணிகள் இருந்தால், உடுக்க உடையின்றி அவதிப்படும் தெருவோரவாசிகளின் அவசரத்தேவை பூர்த்தி செய்யப்பட்டுவிடும். போஸ்டர்களுக்காகச் செலவிடப்படும் காகிதம் ஆயிரக்கணக்கான குழந்தைகளின் பாடப்புத்தகத்துக்குப் பயன்படும். டிஜிட்டல் பேனர்களுக்குச் செலவிடும் பணத்தில் மாவட்டம்தோறும் இளைஞர்களுக்கு உடற்பயிற்சி மையம் அமைத்து ஆரோக்கியமான வருங்காலத்துக்கு வழிகோல முடியும்.
இளைஞரணி மாநில மாநாட்டுக்குப் பல கோடி ரூபாய் செலவாகும் என்று சொல்லப்படுகிறது. தமிழகம் முழுவதிலிருந்தும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் நெல்லையை நோக்கித் தொண்டர்களுடன் செல்ல இருக்கின்றன. எத்தனை லிட்டர் டீசல் மற்றும் பெட்ரோல் வீணடிக்கப்படுகிறது என்பது ஒருபுறமிருக்க, அதனால் ஏற்படப்போகும் சுற்றுச்சூழல் பாதிப்பு மறுபுறம். எத்தனை இளைஞர்களின் மனித சக்தி, மாநாடு என்கிற பெயரில் வீணடிக்கப்படப் போகிறது என்பதை யோசித்துப் பார்த்தால், இத்தனை மணித்துளிகளை நம்மைத் தவிர உலகில் வேறு யாராவது வீணடிப்பார்களா என்கிற கேள்வி அலட்டுகிறது.
மற்ற கட்சிகள் டிஜிட்டர் பேனர் வைப்பதற்குத் தரப்படும் தடைகளும், கட்டுப்பாடுகளும் ஆளும் கட்சி மாநாடுக்கு மட்டும் ஏன் தரப்படுவதில்லை என்கிற கேள்வி எழுப்பப்படுகிறது. இந்தக் கேள்வியை எழுப்புபவர்கள் ஆளும் கட்சியாக இருந்திருந்தால், அவர்கள் மட்டும் எப்படி நடந்து கொள்ளப் போகிறார்கள் என்று யோசிக்கும்போது சிரிப்பு வருகிறது. ஆளும் கட்சி, எதிர்க்கட்சி என்கிற வேறுபாடு இல்லாமல் இந்த விஷயத்தில் அனைவருமே குற்றவாளிகள்தான்.
இப்படி கூட்டத்தைக் கூட்டித்தான் தங்களது பலத்தையும் செல்வாக்கையும் நிரூபிக்க வேண்டும் என்று நினைக்கும் இந்த அரசியல் கட்சிகளுக்குத் தன்னம்பிக்கை இல்லாமல் இருப்பதுதான், இப்படி மாநாடு மற்றும் பேரணிகள் கூட்டப்படுவதன் காரணம் என்பது பாமரனுக்குப் புரியத் தொடங்கிவிட்டது. நமது அரசியல் தலைவர்களுக்கு மட்டும் ஏன் இது தெரியவில்லை?
மக்களின் பிரச்னைகளுக்காகப் போராட்டம் நடத்துவதையும், பேரணி நடத்துவதையும் நாம் எதிர்க்கவில்லை. ஒரு ஜனநாயகத்தின் சில நியாயமான பிரச்னைகளை அரசின் கவனத்துக்குக் கொண்டுவர அவை தேவைப்படுகிறது. ஆனால், கட்சி மாநாடு என்கிற பெயரில் இளைஞர்களையும், தொண்டர்களையும், பொதுமக்களையும் இம்சிப்பதை அரசியல்வாதிகள், அதுவும் பொறுப்பான பதவியை வகிப்பவர்கள் தவிர்க்க வேண்டும். இதுபோன்ற மாநாடுகள் பலத்தைக் காட்டவில்லை; பலவீனத்தைத்தான் வெளிச்சம் போடுகின்றன!
————————————————————————————————————————————————————-
மாநாடு நடந்த மைதானத்தின் கதி என்ன?
திருநெல்வேலி, டிச. 28: திருநெல்வேலியில் திமுக இளைஞரணி மாநில மாநாட்டிற்கு பயன்படுத்தப்பட்ட மருத்துவக் கல்லூரி மைதானம் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய ஒரு மாதம் அவகாசம் கேட்டு கல்லூரி முதல்வர் மதுரை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளார்.
பாளையங்கோட்டையிலுள்ள திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மைதானத்தில், திமுக இளைஞரணி மாநில மாநாடு கடந்த டிச. 15, 16-ம் தேதிகளில் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டபோது, அதை எதிர்த்து திருச்சி மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற இளைஞரணிச் செயலாளர் என்.ஆர். சிவபதி, மதுரை உயர்நீதி மன்றக் கிளையில் பொதுநலன் மனுத் தாக்கல் செய்தார்.
அதில் அரசுக் கல்லூரி விளையாட்டு மைதானங்களில் அரசியல் கட்சிக் கூட்டங்கள் நடத்த பயன்படுத்தக்கூடாது என அரசு விதி உள்ளது. இதை மீறி திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி விளையாட்டு மைதானத்தில் திமுக மாநாடு நடைபெறவுள்ளதால் அம்மாநாட்டிற்கு தடை விதிக்க வேண்டும் என அவர் தெரிவித்து இருந்தார்.
இந்த மனுவை விசாரணைக்கு ஏற்ற நீதிமன்றம், சில நிபந்தனைகளுடன் மாநாடு நடத்த கடந்த நவ. 23-ம் தேதி அனுமதி அளித்து உத்தரவிட்டது.
குறிப்பாக மாநாடு முடிந்த பிறகு, விளையாட்டு மைதானம் எப்படி இருந்ததோ அதே அப்படியே சரிசெய்து மீண்டும் ஒப்படைக்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டது.
அறிக்கைத் தாக்கல் செய்ய அவகாசம்: மாநாடு முடிந்த பிறகு, பொதுப்பணித் துறைப் பொறியாளர், கல்லூரி முதல்வர் ஆகியோர் மைதானம் தொடர்பான அறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும்.
கல்லூரி முதல்வர் டிச. 20-ம் தேதி உயர் நீதிமன்ற பதிவுத் துறையிடம் மைதானம் தொடர்பாக தனி அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டு இருந்தது.
மாநாடு முடிந்த நிலையில், மைதானம் தொடர்பான அறிக்கையைத் தாக்கல் செய்ய மேலும் ஒரு மாதம் அவகாசம் கேட்டு கல்லூரி முதல்வர் மதுரை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளார். மாநாடு பந்தல் அகற்றும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இடையில் மழை பெய்ததால் பணியில் தேக்க நிலை ஏற்பட்டது. மாநாட்டு மைதானம் முழுமையாக சரிசெய்யப்பட்ட பின்னர் அதை பார்வையிட்டு அறிக்கை தாக்கல் செய்ய கால அவகாசம் தர வேண்டும் என மனுவில் கேட்டுக் கொண்டுள்ளதாக கல்லூரி முதல்வர் விநாயகம் தெரிவித்தார்.
————————————————————————————————————————————————————-
narayanee said
தி மு க ஆளுங்கட்சியாய் இருப்பதால்,நாணல் போல் சட்டங்கள் வளைக்கப்பட, இது போன்ற பிரம்மாண்டங்கள் அரங்கேறுவதில் வியப்பென்ன?அழகிரி மீது இரண்டு கொலை வழக்குகள் உள்ளன.ஆனால் அது பற்றியெல்லாம் கவலைப்படாமல்,காவலர்கள் புடைசூழ, அவர் , ஒரு மாநில முதல்வர் பங்கேற்கும் இந்தப் பேரணியில் , இந்த மாநாட்டில் கலந்து கொண்டிருப்பது,தார்மீக அடிப்படையில் மட்டும் அல்ல,சட்டப்படியும் கேலிக்குரியதாக ஆகிவிடுகிறது.
அடுத்து, ரூபாய் 3000 கோடி மேல் தமிழக மின்சாரத்துறை நஷ்டம் என்கிறது தினமலர்.அறிவிக்கப்படாத மின்வெட்டுகள் அமுலில் இருக்க, இந்த மாநாடு ஆரம்பகாலப் பணி தொட்டு,பந்தக்கால் இட்ட நேரம் தொட்டு, முடியும் வரை எப்படியெல்லாம் மின் விரையம் ஏற்படுகிறது என்பது ஆண்டவனுக்கு மட்டுமே வெளிச்சம்.ஆள்பவர் கண்களை அதிகாரம் மறைத்தாலும், ஆண்டவன் நீதி நின்று கொல்லாதோ?
அப்படித்தானே அன்று ஒரு ராமச்சந்திரன் தோன்றினார்.
இத்தனை நாளாக இளைஞர் மேல் காட்டாத கவனம், அக்கறை இன்று காட்டத் தோன்றியது ஏன்?
இதற்கான செலவு என்ன?எங்கிருந்து வந்தது?தொண்டர்களும் உடன்பிறப்புகளும்,எப்படி லட்சம், லட்சமாகக் கொட்டுகின்றனர்?இதுவே தி மு க எதிர்க்கட்சியாய் இருந்திருந்தால், இப்படி நடந்திருக்குமா?இதற்குப் பின்னால் இருக்கும் தொழிலதிபர்களுக்குக் கொடுத்த வாக்குறுதி என்ன?
ஒரு நாள் காலம் விடை சொல்லி விடத்தானே போகிறது?
bsubra said
கடகம்: : “நெல்லை மாநாடு – ரெஸ்பெக்ட் தெரியாத மினிஸ்டர்ஸ்…?”