“ரசனைத் தெய்வம்’
குரு. மனோகரவேல்
“”ரஸத்திலே தேர்ச்சிகொள்” என்று பாரதியார் தனது புதிய ஆத்திச்சூடியில் அறிவுறுத்துவதுபோல், ரசனை உணர்வுக்கும் பயிற்சி அளிக்க வேண்டியுள்ளது.
உண்பதற்கும் உடுப்பதற்கும் நடப்பதற்கும் பேசுவதற்கும் குழந்தைகளுக்குப் பயிற்சி தேவைப்படுவதுபோல், மனிதர்களுக்கு ரசிப்பதற்கும் பயிற்சி அளிப்பதில் தவறில்லை.
தமிழில் உள்ள இலக்கிய வளங்களையும் கலை நுட்பங்களையும் உணர்ந்து அறிந்து ரசித்துப் பெருமிதம் கொண்டவர் டி.கே. சிதம்பரநாதன். “”மாந்தருள் ஒரு அன்னப்பறவை” என்றும் “”ரசிகமணி” என்றும் ரசனை நாயகனாக இருந்த டி.கே.சி குற்றாலத்தில் “”வட்டத்தொட்டி” என்று அமைப்பு ஏற்படுத்தி, ரசனையையும் ஒரு கலையாக வளர்த்தார். அற்புதமானவைகளையெல்லாம் உணர்ந்து உணர்ந்து, வியந்து வியந்து ரசித்தார்.
தமிழின் செம்மையில் ஆழ்ந்து, இலக்கியத்தின் இனிமையில் இசைந்து, கலைகளின் நுட்பத்தில் கனிந்து ரசனை உணர்வை ஒரு வேள்வியாக நடத்தியவர் டி.கே.சி. அவரது வட்டத்தொட்டி அமைப்பில் ராஜாஜி, கல்கி, ஜஸ்டீஸ் மகராஜன், பாஸ்கர தொண்டைமான் போன்ற பேரறிஞர்களுடன் இலக்கியச் சுவையையும் பலவித கலைகளின் ரசனையையும் உரையாடல்களாகவும் கடிதங்களாகவும் வெளிப்படுத்தித் தமிழ்மொழியின் உன்னதத்தை உலகம் உணர்ந்திடச் செய்தவர்.
எந்த ஒரு கலைஞனுக்கும் தனது படைப்பு பிறரால் ரசிக்கப்படுகிறது என்ற நிலையில்தான், தான் படைத்ததன் ஆனந்தப் பயன் பெற முடியும். ஈன்ற பொழுதின் பெரிது உவக்கும் தாயின் நிலை அது.
கவிமணி தேசிக விநாயகம் பிள்ளையின் கவிதைகளில் மிகவும் தோய்ந்து உள்ளத்தைப் பறி கொடுத்தார் ரசிகமணி. குழந்தையுள்ளத்துடன் அவர் குறிப்பிடுகின்றார்: “”கண்ணாரக் காண்பதற்கு ஒரு கவிஞர் கிடைத்துவிட்டார் என்று”. இதை ஊர்ஊராகப் பிரசாரமும் செய்தார். ஓர் இலக்கிய அரங்கில் பேசும்போது, கவிமணியின் பாடல்களைப் பாடிய ரசிகமணி, கவிஞருடைய இதயத்தோடு ஒட்டிப் பாடலோடு கரைந்து விட்டார். பாராட்டுரையைக் கேட்டுக் கொண்டிருந்த கவிமணி அப்படியே உருகிவிட்டார்.
“”என்னைப் போன்ற கவிஞனுக்கு உயிர்மூச்சைக் கொடுப்பது பாராட்டுத்தான். எத்தனையோ கவிக் குழந்தைகளைப் பெற்றுப் போட்டுவிட்டு அவைகளின் அருமை தெரியாமல் இருந்தது. ஆனால் டி.கே.சி. அந்தக் குழந்தைகளை எடுத்துக் குளிப்பாட்டி, உச்சிமோந்து, தலைசீவிப் பொட்டிட்டு, முத்தமிட்டுக் கொஞ்சிக் குலாவும்போதுதான் “நான் பெற்ற குழந்தை இவ்வளவு அழகாயிருக்கிறதா’ எனப் புரிகிறது” என்று சொல்லி, வியப்பும் களிப்பும் அடைந்தார்.
தாவரம் முதல் விலங்கு வரையான பலவித உயிரினங்களை விட மனிதன் உயர்ந்தவனாகக் கருதப்பட நகைச்சுவை உணர்வு போன்று எத்தனையோ அம்சங்கள் காரணம். ஆனாலும் அவை எவற்றுக்கும் அடிப்படைத் தேவை ரசனை உணர்வே.
ரசிக்கின்ற ரசனையின் மூலமாகத்தான் கலைகளும் இலக்கியங்களும் அதற்குத் தகவே மொழியும் பொலிவுறுகின்றது.
ஒவ்வொரு தனிமனிதனும் தன் பெயருக்கு முன் தந்தை பெயரின் முதலெழுத்தைச் சேர்த்துத்தான் தன்னை அறிமுகப்படுத்திக் கொள்கிறான். ரசிகமணி டி.கே. சிதம்பரநாதன் தமிழ் மற்றும் கலை என்பவற்றின் முதலெழுத்துகளையே தன் பெயருடன் சேர்த்து டி.கே.சி. என்றே வைத்துக்கொண்டாரோ எனக் கருதும் வகையில் தமிழைப் பெரிதும் நேசித்தவர். கலைகளை மிகவும் ருசித்தவர்.
அதுமட்டுமல்ல; திருவள்ளுவர் மற்றும் கம்பர் என்ற பெயர்களின் முதல் எழுத்துகளையே, தனது பெயருக்கு முன்எழுத்துகளாகச் சேர்த்திருப்பாரோ என்றும் கருதிடும் வகையில், திருவள்ளுவர் மீதும் கம்பர் மீதும் அவருக்கு ஆழ்ந்த பிடிப்பும் பிணைப்பும் இருந்தது.
திருவள்ளுவரின் அறிவுத்திறத்தை ரசிப்பதற்கு ஒரு கம்பன் வரவேண்டி எழுநூறு ஆண்டுகள் காத்திருந்தோம். கம்பனின் அறிவுத் திறத்தை ரசிப்பதற்கு ஒரு சிதம்பரநாதன் வருவதற்கு ஆயிரம் ஆண்டுகள் கம்பன் காத்திருந்தார் என்று நீதிபதி மகராஜன் ஒரு கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார். ரசிகமணி சிதம்பரநாதனின் கலை நுட்ப, இலக்கிய நுட்ப ரசனையை ரசிப்பதற்கு நாமெல்லோரும் உடனே தொடங்குவோம்.
கிரேக்க – ரோமானிய சமயங்களில் காதல் கலைக்குத் தெய்வங்கள் குறிப்பிடப்படுவதுபோல், இந்திய சமயங்களிலும் மன்மதனைப் போற்றுகின்றோம். அதுபோல் ரசனைக் கலைக்கும் தெய்வமாக டி.கே.சி.யைப் போற்றி மகிழலாம். ரசனைத் தெய்வம் டி.கே.சி. எனலாம்!
(இன்று ரசிகமணியின் 125-வது பிறந்த நாள்)
——————————————————————————————————————————————————–
தமிழுக்கு பெருந்தொண்டாற்றியவர் டி.கே.சி.: வைகோ புகழாரம்
திருநெல்வேலியில் சனிக்கிழமை இரவு நடைபெற்ற டி.கே.சி. விழாவில் கி.ராஜநாராயணன் எழுதிய “அன்னப்பறவை’ நூலை மதிமுக பொதுச்செயலர் வைகோ வெளியிட முதல் பிரதியை பெற்றுக் கொண்டார் நீதிபதி டி.என். வள்ளிநாயகம். உடன் (இடமிருந்து) மதிமுக புறநகர் மாவட்டச் செயலர் ப.ஆ.சரவணன், கொள்கை பரப்புச் செயலர் நாஞ்சில் சம்பத், எழுத்தாளர் மதுரா, இலக்கிய விமர்சகர் தி.க. சிவசங்கரன், டி.கே.சி.யின் குடும்பத்தைச் சேர்ந்த தீப. நடராஜன், குட்டி என்ற சண்முக சிதம்பரம், வழக்கறிஞர் கே.எஸ். ராதாகிருஷ்ணன், மதிமுக மாநகர் மாவட்டச் செயலர் கே.எம்.ஏ. நிஜாம்.
திருநெல்வேலி, நவ.3: தமிழுக்கு பெருந்தொண்டாற்றியவர் டி.கே.சி. என மதிமுக பொதுச் செயலர் வைகோ புகழாரம் சூட்டினார்.
பாளையங்கோட்டை அரசு ஊழியர் குடியிருப்பில் உள்ள மறுமலர்ச்சி மையம் சார்பில் நெல்லை சந்திப்பில் சனிக்கிழமை இரவு சி.ஏ.ஆர். குட்டி என்ற சண்முக சிதம்பரம் தலைமையில் நடைபெற்ற ரசிகமணி டி.கே.சி. விழாவில், டி.கே.சி. குறித்து கி. ராஜநாராயணன் எழுதிய “”அன்னப்பறவை” என்ற நூலை வெளியிட்டு வைகோ மேலும் பேசியதாவது:
டி.கே.சி. இலக்கியம் மட்டுமின்றி எல்லா தளங்களிலும் தீர்க்கமான பார்வை கொண்டவர். அவரது இலக்கிய ஆர்வத்தை போன்றே அவரது வீட்டு விருந்தும் பிரசித்தி பெற்றது. டி.கே.சி. அவரது நண்பரான நீதிபதி மகராஜபிள்ளைக்கு எழுதிய கடிதங்கள் சுவையானவை.
திருநெல்வேலியில் நடைபெற்ற சுயமரியாதை மாநாட்டில் பெரியாரின் படத்தை திறந்து வைத்தவர் டி.கே.சி. அந்த வகையில் பெரியாரின் பேரன்களில் ஒருவரான நான் அவரை குறித்து பேச தகுதி உள்ளது.
அனைவரிடமும் அன்பு பாராட்டியவர் டி.கே.சி. இசைக்கு பெருமை சேர்க்கும் வகையில் தனது வாழ்க்கையை அமைத்துக் கொண்டவர் அவர்.
கம்பரின் ராமாயணத்தில் மொத்தமுள்ள சுமார் 10 ஆயிரத்து 500 பாடல்களில் 1515 பாடல்களை மட்டுமே டி.கே.சி. ஏற்றுக் கொண்டார். அதில் 597 பாடல்களில் திருத்தங்களை செய்தார். அந்த திருத்தங்கள் குறித்த சர்ச்சைகளும் உண்டு.ஆனால், அவர் செய்த திருத்தங்கள் பொருத்தமானவை. அவ்வாறு தமிழுக்கு பெருந் தொண்டாற்றியவர் டி.கே.சி.
இந்த மண்ணில் பிறந்த ரா.பி. சேதுப்பிள்ளை, புதுமைப்பித்தன், அண்ணாமலை செட்டியார் போன்றோருக்கு தொடர்ந்து விழா எடுக்க வேண்டும்.
டி.கே.சி. கல்கியில் எழுதிய கம்பராமாயணம் குறித்த தொடரில் தனக்கு பிடித்த பாடல்களை தேர்ந்தெடுத்து எழுதினார். மகன் மீது தேரை செலுத்தி நீதி செய்தது மனுநீதிச் சோழன் காலம். அதுகுறித்தெல்லாம் டி.கே.சி. கூறியுள்ளார். ஆனால், மகனுக்காக எல்லாவற்றையும் இழப்பது இந்த காலம்.
இலங்கைப் பிரச்னை:போரில் கொல்லப்பட்டவர்களை அவரவர் நம்பிக்கையின்படி அடக்கம் செய்ய அனுமதிக்கும் நடைமுறை புராண காலத்திலேயே இருந்துள்ளது. ஜெனிவா உடன்படிக்கையின்படி, தம்மிடம் பிடிபிட்ட சிங்கள ராணுவ வீரர்களை மிகுந்த மரியாதையுடன் (விடுதலைப் புலிகள்) நடத்துகின்றனர். ஆனால், அனுராதபுரத்தில் நடந்த தாக்குதலில் இறந்த 21 பேரின் சடலங்களை நிர்வாணமாக வைத்து சிங்கள ராணுவத்தினர் கூத்தாடி உள்ளனர். தமிழ்ச் செல்வனுக்கு தமிழும், தமிழர்களும் இருக்கும் இடத்தில் எல்லாம் புகழ் பாடப்படும் என்றார் வைகோ.
வைகோ வெளியிட்ட நூலின் முதல் பிரதியை நீதிபதி டி.என். வள்ளிநாயகம் பெற்றுக் கொண்டு நூலை குறித்து பேசினார்.
விழாவில், டி.கே.சி.யின் குடும்பத்தினரான தீப. நடராஜன், தீப. குற்றாலிங்கம், ராமசாமி, செல்லையா ஆகியோருக்கு பொன்னாடை போர்த்தி கெüரவித்தார் வைகோ.
விழாவில், இலக்கிய விமர்சகர் தி.க. சிவசங்கரன், எழுத்தாளர் மதுரா, நாஞ்சில் சம்பத் ஆகியோர் பேசினர்.
————————————————————————————————————————
நகர்வலம்: ரரசிர்களின் மனதில் ரசிகமணி
ரவிக்குமார்
தங்களின் படைப்புகளால் அடைந்த பெருமையை விடவும், டி.கே.சியால் பாராட்டப்பட்டதன் மூலம் மகிழ்ந்த படைப்பாளர்கள் நிறையப் பேர். இசை, நடனம் என கலையின் எந்த வடிவமாக இருந்தாலும் சரி, அந்தக் கலை, பண்டிதர்களிடம் இருந்தாலும் சரி, பாமரர்களிடம் இருந்தாலும் சரி அதை தன்னுடைய உயர்ந்த ரசனையின் மூலம் உலகுக்கு உரைத்தவர் ரசிகமணி டி.கே.சி. அவரின் நினைவு விழாவை சமீபத்தில், சென்னை, தக்கர் பாபா வித்யாலயா வளாகத்தில் நடத்தியது, மல்லிகை காந்தி கல்வி நிலையத்தின் கலை-இலக்கியப் பிரிவு. விழாவிலிருந்து சில துளிகளைத் தருகிறோம்:
இலக்கியத்தின் பல்வேறுவிதமான கூறுகளையும் அலசி ஆராய்ந்து, படைப்பாளிகளையும் தன்னுடைய ரசிப்புத் திறனால் மகிழ்வூட்டிய டி.கே.சி.யின் நினைவுகளை, தனித் தனியாக சிலரைக் கொண்டு பேசவைத்தது, நிகழ்ச்சிக்கு வந்திருந்த இந்தத் தலைமுறையினரிடமும் டி.கே.சி.யின் ரசிப்புத் திறன் குறித்த ஆவலைத் தூண்டியது.
“”நீட்டலும், குறைத்தலும் மூலம் ஒரு படைப்பைப் பற்றி சொல்வதுதான் ரசிகமணியின் கலைப் பண்பு. அவர் மேல்தட்டு மக்களின் கலை வடிவங்களை பாமரனுக்கும் புரியும் வகையில் எளிமையாகக் கூறிய அதேநேரத்தில், நாட்டுப்புறப் பாடல்களின் மேன்மையைப் பண்டிதர்களும் உணர்ந்துகொள்ளும் வகையில் உரைத்தவர். பொதுவாகவே நாட்டுப்புறப் பாடல்களில் என்ன இருக்கு? என்று கேட்பவர்கள் அதிகம். பொருளாதாரம், காதல், வரலாறு, ஈகை… எல்லாமே நாட்டுப்புறப் பாடல்களில் இருக்கின்றது என்பதை தகுந்த ஆதாரங்களோடு வெளிப்படுத்தி, அந்தப் பாடல்களுக்கு பண்டிதர்களிடத்திலும் மரியாதை வருவதற்குக் காரணமாக இருந்தார். மொத்தத்தில் பாராட்டை ஒரு கலையாகவே செய்தவர் டி.கே.சி.” -என்றார் டி.கே.சியின் கலைப்பார்வை குறித்துப் பேசிய பி. சீனிவாசன்.
“”கற்பனை, மொழித்திறன் எல்லாவற்றிலும் கம்பனை மிஞ்சிய கவிஞன் இல்லை என்பார் டி.கே.சி. கம்ப ரசத்தின் அருமை, பெருமைகளை பாமரனுக்கும் புரியும் வண்ணம் எளிமையாக உரைத்தவர். கம்பனுக்குப் பிறகு, கவிமணி தேசிகவிநாயகம் பிள்ளையின் படைப்புகளை உயர்வாகப் பாராட்டியவர் ரசிகமணி.
வெள்ளைக்கால் சுப்பிரமணிய முதலியாரின் 80-வது பிறந்த நாளுக்காக நடந்த விழாவில், அவரை வாழ்த்தி ஒரு வாழ்த்துப்பா வந்தது. எழுதியவர் பற்றிய குறிப்பும் அதில் இல்லை. ஆனாலும் அந்த வாழ்த்துப்பாவின் அமைப்பையும், அதில் இருந்த உவமைகளையும், இலக்கியத் தரத்தையும் பார்த்து, அந்த வாழ்த்துப் பாவை எழுதியவர் கவிமணி தேசிக விநாயகம் பிள்ளைதான் என்று மிகச் சரியாக அறிவித்தாராம் ரசிகமணி.
ரசிகமணியின் மகனும், கவிஞருமான தீபன் மறைவையொட்டி கவிமணி ஓர் இரங்கற்பாவை எழுதியிருக்கிறார். அந்த இரங்கற்பாவைப் படித்த ரசிகமணி, அந்த துக்கமான தருணத்திலும், “உங்களின் கவிதை எனக்கு உயிர் கொடுத்திருக்கிறது’ என்று கவிமணிக்கு பாராட்டுக் கடிதத்தை எழுதியிருக்கிறார். டி.கே.சியின் பாராட்டும் பண்பை பளிச்சென்று நமக்குக் காட்டும் நெகிழ்ச்சியான நினைவு இது”- என்றார் டி.கே.சியின் கவிதானுபவத்தைப் பகிர்ந்து கொண்ட ராஜாராமன்.
நிகழ்ச்சிக்கு முத்தாய்ப்பாக அமைந்தது டி.கே.சியின் பேரனான தீப. நடராஜனின் பேச்சு.
“”காந்தி மகாத்மா என்றால், டி.கே.சி. மகான். நாட்டுக்கு விடுதலை வாங்கித் தந்தவர் காந்தி; தமிழுக்கு விடுதலை வாங்கித் தந்தவர் டி.கே.சி.
1922-ம் ஆண்டு ராஜாஜி சிறையில் இருக்கிறார். சிறைக்குள் எங்கிருந்தோ கசிந்த நாகஸ்வர ஓசை அவரின் காதில் ஒலிக்கிறது. இப்படியொரு இசையை அனுபவித்து நாம் கேட்டு விட்டோமே என்று நினைத்துக் கொண்டார். இந்த விஷயங்களை ராஜாஜி அவர் எழுதிய “ஜெயில் டைரி’யில் பதிவுசெய்திருக்கிறார். அப்போது டி.கே.சியின் தொடர்பு அவருக்கு ஏற்படவில்லை. டி.கே.சியுடன் ராஜாஜிக்கு ஏற்பட்ட நட்பு, அவரின் ரசனையை வேறு தளத்துக்கு மாற்றியது. “மொழி என்பது இலக்கியத்தில் இல்லை. மக்களின் நாவில் இருப்பது…’ என்னும் டி.கே.சியின் கருத்தை ஏற்றுக் கொண்டதாலேயே தன் பெயரிலிருந்து “இ’யை எடுத்துவிட்டு, “ராஜாஜி’ என்றே தன் பெயரை எழுதினார். மக்களின் பேச்சு வழக்கில் “ராமன்’ என்றே தான் எழுதிய ராமாயணத்தில் குறிப்பிட்டார் ராஜாஜி.
கல்வியில், இசையில், இலக்கியத்தில் இப்படி எந்தத் துறையாக இருந்தாலும் அதிலிருந்த பண்டிதத்தனத்தை தன்னுடைய இயல்பான பாராட்டும் போக்கால் அடியோடு மாற்றியவர் டி.கே.சி.
நாட்டிய மேதை பாலசரஸ்வதியிடம் குற்றாலக் குறவஞ்சிக்கு நாட்டியம் அமைக்கக் கொடுத்தவர் ரசிகமணி டி.கே.சிதான்.” என்றார் நெகிழ்ச்சியுடன் தீப. நடராஜன்.
நிகழ்ச்சியின் இறுதியாக, புகழ்பெற்ற நடனக் கலைஞரான பார்வதி ரவி கண்டசாலாவிடம் நாட்டியம் பயிலும் மாணவிகள் குற்றாலக் குறவஞ்சி நாட்டிய நாடகத்தை கண்களுக்கு விருந்தாக நிகழ்த்தினர்.
தீபாவளிக்கு வந்திருக்கும் புதிய திரைப்படங்கள், சளசளவென விடாமல் மழை பொழிந்துக் கொண்டிருக்கும் ஞாயிற்றுக் கிழமை, விதவிதமான தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்… இவ்வளவையும் பொருட்படுத்தாமல் அந்த நிகழ்ச்சிக்கு வந்திருந்த ரசிகர்களிடம் ரசிகமணி டி.கே.சி. மானசீகமாக உறைந்திருந்தார்!