அமெரிக்க யேல் பல்கலை.யில் தமிழ் விரிவாக்கப் பணி: எழுத்தாளர் காஞ்சனா தாமோதரன் முயற்சி
சென்னை, செப். 12: அமெரிக்காவின் முன்னணிப் பல்கலைக்கழகமான யேல் பல்கலைக்கழகத்தில் தமிழ்த் துறையின் விரிவாக்கப் பணிக்கு அமெரிக்கவாழ் தமிழ் எழுத்தாளர் காஞ்சனா தாமோதரனும் அவரது கணவர் டாக்டர் தாமோதரனும் நன்கொடை வழங்கியுள்ளனர்.
“”இதன்படி இப்பல்கலைக்கழகத்தில் தமிழ் ஆய்வு, கற்பித்தல் பணியுடன், தமிழ் மொழி, அரசியல், சமூகம் குறித்த கூடுதலாகப் பாடங்கள் சேர்க்கப்படும்” என்று காஞ்சனா தாமோதரன் தெரிவித்தார்.
யேல் பல்கலைக்கழகத்துக்கும் தமிழகத்துக்கும் பல தொடர்புகள் உள்ளன.
காலனி ஆதிக்க காலத்தில் சென்னை கோட்டையில் ஆளுநராக இருந்த எலைஹு யேல் என்பவரது பெயரைத் தாங்கியுள்ளது இப்பல்கலைக்கழகம்.
நாற்பது ஆண்டுகளுக்கு முன் தமிழக முன்னாள் முதல்வர் அண்ணாவை அழைத்து கெüவர டாக்டர் பட்டம் அளித்து சிறப்பித்தது யேல் பல்கலைக்கழகம்.
இது மட்டுமின்றி, அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ், கடந்த அதிபர் தேர்தலில் போட்டியிட்ட ஜான் கெர்ரி, முன்னாள் அதிபர் பில் கிளிண்டன், நியூயார்க் செனட்டர் ஹில்லரி கிளிண்டன், நியூயார்க் மாநில ஆட்சியாளர் பட்டாக்கி ஆகியோர் யேல் பல்கலைக்கழகத்தில் படித்தவர்கள்.
வர்த்தக நிபுணரான காஞ்சனா தாமோதரன் யேல் பல்கலைக்கழகத்தில் தமிழ்த் துறையின் வளர்ச்சி குறித்து அப்பல்கலைக்கழக உயர் அதிகாரிகளுடன் அண்மையில் தொடர்ந்து விரிவாக ஆலோசித்தார்.
அதன் பயனாக யேல் பல்கலைக்கழகத்தில் தமிழுக்கான துறையை மேலும் விரிவுபடுத்துவது என்று பல்கலைக்கழகம் உத்தேசித்துள்ளது.
இப்பல்கலைக்கழகத்தில் தமிழ் மொழியியல் வல்லுநராக பேராசிரியர் ஈ. அண்ணாமலை, மானிடவியல் பேராசிரியர் பார்னி பேட் ஆகியோர் தமிழ்சார்ந்த சில ஆய்வுகளை மேற்பார்வையிட்டு வருகின்றனர்.
தற்போது இப்பல்கலைக்கழகத்தில் தொடக்கநிலைத் தமிழ் முதல் உயர்நிலைத் தமிழ் வரை கற்பிக்கப்படுகின்றன.
இனி மொழி, சமூக, அரசியல் குறித்த கூடுதல் பாடங்களும் இனிமேல் சேர்க்கப்படும்.
இப்பல்கலைக்கழகத்தின் தமிழ் வளர்ச்சிக்காக நிதியுதவி அளித்த காஞ்சனா தாமோதரன், “”இந்திய மக்களின் வரிப்பணத்திலும் அமெரிக்க மக்களின் வரிப் பணத்திலும் சிறந்த கல்வியைப் பெற்றவர்கள் நாங்கள். எங்களை வளர்த்த இரு சமுதாயங்களுக்கும் திருப்பி அளிக்கக் கடமைப்பட்டவர்கள்” என்றார்.
காஞ்சனா “தினமணி’, “தினமணி -சிறுவர் மணி’ ஆகியவற்றில் எழுதியுள்ளார். தமிழகத்தில் சுனாமியால் தாக்கப்பட்ட மக்களுக்கு ஆரவாரம் இன்றி உதவியுள்ளார்.