அரசியல் உள்நோக்கத்துடன் சிக்குன்-குனியா விவகாரத்தைப் பெரிதுபடுத்துகிறார் ஜெ.: சுகாதாரத்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். குற்றச்சாட்டு
சென்னை, செப். 22: அரசியல் உள்நோக்கத்துடன் சிக்குன் குனியா விவகாரத்தைப் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பெரிதுபடுத்துவதாக தமிழக சுகாதார அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் கூறினார்.
தமிழகத்தில் சிக்குன் குனியா காய்ச்சலால் உயிரிழப்பு ஏற்படவில்லை என்றும் அவர் கூறினார்.
இதுகுறித்து சென்னையில் அவர் நிருபர்களிடம் கூறியது:
மதுரை மத்திய தொகுதி இடைத்தேர்தல் மற்றும் உள்ளாட்சித் தேர்தலில் திமுக அரசைப் பற்றி குறை கூற வேறு விஷயம் இல்லை. எனவே, அதிமுகவும் அதன் தோழமைக் கட்சிகளும் சிக்குன் குனியா விவகாரத்தைப் பெரிதுபடுத்துகின்றன.
ஜெயலலிதா புதன்கிழமை வெளியிட்ட பட்டியலில் உள்ள அனைவரும் சிக்குன் குனியா தவிர பிற காரணங்களால் உயிரிழந்தவர்கள் என்று தெரியவந்துள்ளது. மாவட்ட ஆட்சியர்கள் மூலம் அவர்கள் எவ்வாறு உயிரிழந்தனர் என்பது குறித்து கண்டறியப்பட்டுள்ளது.
நாமக்கல்லில் சிக்குன் குனியாவால் உயரிழந்ததாகக் கூறப்படும் வெங்கடாசலத்துக்கு கல்லீரல் புற்றுநோய் இருந்துள்ளது. அதன் காரணமாகவே உயிர் இழந்துள்ளார்.
சிக்குன் குனியாவால் மாநிலத்தில் பல பகுதிகள் பாதிக்கப்பட்டுள்ளன. பல இடங்களில் வைரஸ் காய்ச்சல்களும் சிக்குன் குனியா என்று தவறாகக் கூறப்படுகிறது.
மாநிலத்தில் இதுவரை 60 ஆயிரம் பேர் வரை சிக்குன் குனியாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்றவர்கள்.
சிக்குன் குனியாவைக் கட்டுப்படுத்த மாநில அரசு அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது. இந்த மாத இறுதிக்குள் சிக்குன் குனியா காய்ச்சல் கட்டுப்படுத்தப்படும்.
அமெரிக்காவிலுள்ள நோய்க் கட்டுப்பாட்டு மையம் சிக்குன் குனியாவால் இறப்பு ஏற்படாது என்று தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
885 கிராமங்களில் மருத்துவ முகாம்கள்: மாநிலம் முழுவதும் 885 ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் 5,310 கிராமப்புற மருத்துவமனைகளில் மருத்துவ முகாம்கள் தினமும் நடத்தப்பட உள்ளன. இத்திட்டத்துக்கு தமிழக அரசு ரூ. 11 கோடி ஒதுக்கியுள்ளது.
காய்ச்சல், மஞ்சள் காமாலை, தாய்-சேய் நலம், சர்க்கரை நோய், கண் குறைபாடுகள் குறித்து இதில் பரிசோதிக்கப்படும். இப்பணியில் 35 ஆயிரம் சுகாதாரப் பணியாளர்கள் ஈடுபடுத்தப்படுவர்.
சிக்குன் குனியா காய்ச்சல் குறித்து பரிசோதிக்க சீனாவிலிருந்து சோதனைக் கருவிகள் கொண்டுவரப்பட்டுள்ளன. அதன் பயனைப் பொறுத்து அதிக அளவில் இக்கருவிகள் இறக்குமதி செய்யப்படும்.
ஜெர்மனியிலிருந்து கொசுப்புகை கருவிகள்: ஜெர்மனியிலிருந்து ரூ. 2.7 கோடியில் கொசுக்களை அழிக்கும் புகைக் கருவிகள் வாங்கப்பட்டுள்ளன என்றார்.