Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

The case for Mixed member Proportional Representation: Voting and Democracy

Posted by Snapjudge மேல் ஜனவரி 14, 2008

விகிதாசாரப் பிரதிநிதித்துவம்: விவாதம் தேவை

கே.எஸ். இராதாகிருஷ்ணன்

ஜனநாயகத்தில் அதிக வாக்குகள் பெற்றவர்தான் மக்கள் பிரதிநிதியாக விளங்க முடியும் என்ற ஒரு கருத்து இருப்பினும், குறைவான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி வாய்ப்பை இழந்தவர்கள் நாடாளுமன்றத்திற்கோ அல்லது சட்டமன்றத்திற்கோ அங்கீகாரத்துடன் செல்ல முடியாத நிலை இன்றைக்கு இருக்கிறது. இது ஓர் அரசியல் சூதாட்டம்போல் கருதாமல், மக்களுடைய எண்ணங்களைப் பிரதிபலிக்கின்ற நேர்மையான பிரதிநிதிகள் நாடாளுமன்றத்திற்குச் செல்ல விகிதாசாரப் பிரதிநிதித்துவ வாக்கு உரிமை பயன்படும்.

நாடாளுமன்றத்திற்கும், சட்டமன்றத்திற்கும் நடக்கின்ற தேர்தலில் ஆளும் முறைமையையும், தேசிய, பன்னாட்டு அளவில் கடமை ஆற்றவும் ஒரு கட்சியைத் தேர்ந்தெடுப்பதுதான் அரசியல் நடைமுறை ஆகும்.

தொகுதி நலன்கள் ஒரு பக்கத்தில் இருந்தாலும், நாட்டின் முக்கியப் பிரச்னைகள், கொள்கைகள்தான் நாடாளுமன்றத்தில் சட்டமன்றத்தில் ஒலிக்கின்றன. தொகுதிகள் என்பது மக்கள் வாக்குகள் அளிக்கும் வசதிக்காக அமைக்கப்பட்டது.

தற்போதுள்ள நடைமுறையில் ஊரில் செல்வாக்கு உள்ள மனிதர் எளிதாக உருவாக்கப்படலாம். பணபலம், ஆள்பலத்தைக் கையில் வைத்து எளிதில் தேர்தலில் வெற்றி பெறலாம். அரசியலில் தனிநபர் செல்வாக்கையும், புகழ்ச்சியையும் விகிதாசார வாக்கு உரிமை மூலம் களையலாம்.

நாடாளுமன்ற, சட்டமன்றத் தேர்தலில் அரசியல் கட்சிகள் தங்களுடைய கொள்கைகளைத் தேர்தல் அறிக்கையின் முன் வைத்து விகிதாசார வாக்குரிமை முறையில் தேர்தலில் போட்டியிடலாம்.

மாநில அளவில், தேசிய அளவில் அங்கீகரிக்கப்பட்ட கட்சிகள் எல்லாத் தொகுதிகளுக்கும் நிற்காமல் அங்கீகரிக்கப்பட்ட கட்சி சின்னங்கள்தான் வாக்குச்சீட்டில் இருக்கும். இதில் அந்த தனி நபருடைய பெயரோ, முகமோ இல்லாமல், தேர்தல் காலத்தில் சுவரொட்டியில் கட்சிக் கொள்கை, கட்சியின் தலைமையின் பெயர் மட்டுமே பிரசாரத்தில் இருக்கும். அத்தேர்தலில் போடப்படுகின்ற மக்களுடைய ஓட்டு கொள்கை அடிப்படையில் நிச்சயம் இருக்கும்.

அத்தேர்தலில் மக்கள் அளித்த ஓட்டுகளை மொத்தமாக எண்ணி ஒவ்வொரு கட்சிக்கும் கிடைத்த ஓட்டாகக் கருதி விகிதாசார அடிப்படையில் பிரதிநிதித்துவம் வழங்கப்படும். உதாரணத்திற்கு ஒரு கட்சிக்கு 10 நாடாளுமன்றத்திற்கும் 100 சட்டமன்றத்திற்கும் விகிதாசார அடிப்படையில் இடங்கள் கிடைக்கின்றது என்றால், தேர்தல் ஆணையம் குறிப்பிட்ட கட்சியின் தலைமைக்கு நாடாளுமன்ற, சட்டமன்றத்திற்கு முறையாக 10:100 என்ற விகிதாசாரத்தின்படி உறுப்பினர்களை கட்சித் தலைமை தேர்ந்தெடுத்து அனுப்பும்படி தாக்கீது அனுப்பும். அதன் அடிப்படையில், குறிப்பிட்ட கட்சி தலைமை உண்மையான மக்களுடைய பிரதிநிதியாகக் கருதப்படும் நேர்மையானவர்களை 10:100 என்ற அடிப்படையில் நாடாளுமன்ற, சட்டமன்றத்திற்கு எம்.பி., எம்.எல்.ஏ.வாகத் தேர்ந்தெடுத்த பட்டியலை அனுப்ப வேண்டும். அவ்வாறு சிபாரிசு செய்யப்பட்டவர்கள் குறிப்பிட்ட பதவிக்குத் தகுதியுடையவர் ஆவார்கள்.

பொறுப்புக்குத் தேர்ந்தெடுத்து அனுப்புகின்ற பெயர்களை கட்சியின் மேலிடம் முற்றிலும் விவாதித்து, நன்கு பரிசீலனை செய்து அனுப்பப்படும்போது பதவிக்குச் செல்கின்றவர்கள் கட்சிக்கு விசுவாசியாக இருக்கின்ற வகையிலும், தவறு செய்யும் எந்தப் பிரதிநிதியும் கட்சித் தலைமை உடன் அழைக்கும் வாய்ப்பும் அளிக்கப்பட வேண்டும்.

திரும்ப அழைப்பவர்களுக்குப் பதிலாக அதே கட்சியைச் சேர்ந்த வேறு ஒருவரை அனுப்புகின்ற வாய்ப்புகள் இருக்க வேண்டும். உறுப்பினர் பதவிக்காலத்தில் காலமானாலும் வீணாக இடைத்தேர்தல் நடத்தாமல் குறிப்பிட்ட கட்சியிலிருந்து வேறு ஒருவரை அனுப்பலாம்.

இதனால் அரசியல் கிரிமினல்கள், ஊழல் பெருச்சாளிகள் நாடாளுமன்றத்திற்கும், சட்டமன்றத்திற்கும் பொறுப்புக்கு வருவதை எளிதாகத் தடுக்கலாம். அரசியலில் கிரிமினல் குற்றவாளிகள் கலந்துவிட்டனர் என்ற குற்றச்சாட்டு மிகவும் பலமாக இருக்கிறது. சமீபத்தில் நாடாளுமன்றத்தில் வைக்கப்பட்ட வோரா கமிஷன் அறிக்கையும் இந்திய அரசியலில் கிரிமினல் குற்றவாளிகளால் நாடு புரையோடிவிட்டதென்ற நிலையையும் எடுத்துக் கூறியிருக்கிறது. கட்சி மாறும் தடுப்புச் சட்டத்தைவிட விகிதாசார வாக்குமுறை வந்தால் கட்சி மாறுவதை அறவே ஒழித்துவிட முடியும். தேர்தலில் திறமையானவர்கள் நேர்மையானவர்கள் எளிதாக நாடாளுமன்ற, சட்டமன்றத்திற்குச் செல்ல இந்த முறையில் வாய்ப்புகள் இருக்கின்றன.

கட்சிகளின் தேர்தல் காலச் செலவினங்கள், அவசியமற்ற, ஆர்ப்பாட்ட தேர்தல் பிரசாரத்தைக் கட்டுப்படுத்தி, தேர்தல் பிரசாரத்தை எளிமைப்படுத்தலாம். ஓட்டுக்காக பணம் கொடுக்க வேண்டிய நிலை ஏற்படாது. தேர்தல் காலத்தில் கலவரங்கள், மக்களுக்கு ஏற்படும் பீதிகள் இந்த முறையால் தடுக்கப்படலாம்.

1930-ம் ஆண்டு லண்டனில் கூடிய தேர்தல் சீர்திருத்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் மாநாட்டில் விகிதாசார வாக்குரிமை பற்றி விவாதிக்கப்பட்டது. இந்தியா போன்ற பல்வேறு மொழிகள் இனங்கள் கொண்ட சுவிட்சர்லாந்து நாட்டில் விகிதாசார வாக்குரிமை நடைமுறையில் இருக்கிறது. விகிதாசார வாக்குரிமை அயர்லாந்து, ஸ்காட்லாந்து, சுவீடன், இத்தாலி, டாஸ்மேனியா, மால்டர், ஆஸ்திரேலியா போன்ற பல நாடுகளில் இந்த முறை நடைமுறையில் இருக்கிறது.

சுவீடன் நாட்டில் ரிக்ஸ்டேக் தேர்தல் சட்டம் 1920-ன் அடிப்படையில் முனிசிபல் தேர்தல் சட்டம் 1930}ன் அடிப்படையில் விகிதாசார வாக்குரிமை முறை நடைமுறையில் இருக்கிறது.

சுவிட்சர்லாந்தில் பல்வேறு மொழி, தேசிய இனங்கள் இருப்பினும், விகிதாசார வாக்குமுறை அந்நாட்டில் சிறப்பாக 1882-லிருந்து செயல்பட்டு வருகிறது.

விகிதாசார வாக்குரிமை என்பது கணித முறைப்படி வகுப்பதாகும். விகிதாசார வாக்குரிமை ஜனநாயகத்தில் சரியாக இருக்காது என்ற வாதங்கள் ஒரு பக்கத்தில் இருந்தாலும் இதனால் அமைச்சரவையில் ஸ்திரத்தன்மையற்ற நிலை ஏற்படும் என்று கூறப்படுகிறது.

1961-ம் ஆண்டு டிசம்பர் 16}ல் கோவையில் நடைபெற்ற தி.மு.க. பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்டு 17-ம் தேதி கோவை தேர்தல் சிறப்பு மாநாட்டில் அண்ணாவால் வெளியிடப்பட்ட தேர்தல் அறிக்கையில் விகிதாசாரப் பிரதிநிதித்துவ முறை வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். ராம் மனோகர் லோகியாவும் இதையே வலியுறுத்தினார்.

இந்திய சட்டக்கமிஷன் (அளவில்) விகிதாசார முறையைப் பின்பற்றுவதற்கு யோசனை கூறியுள்ளது. ஆயினும், மக்களவைக்கும் மாநிலச் சட்டப் பேரவைகளுக்கும் முற்றிலுமாகப் பட்டியல் முறையில் தேர்தல் நடத்துவதே மிகச் சிறந்தது என்று சட்ட ஆணையம் கருதுகிறது.

ஆனால் நம் நாட்டில் பல அரசியல் கட்சிகள் தங்கள் தேர்தல் வெற்றிக்குத் திட்டங்களையும், கொள்கைகளையும் மட்டுமன்றி, வேட்பாளர்களுக்கு உள்ள செல்வாக்கையும் முக்கியமாகக் கருதுவதால் இந்த முறையை ஏற்க மாட்டா. எனவேதான் சட்டக் கமிஷன் நேரடித் தேர்தல் முறை, விகிதாசார முறையை யோசனையாகக் கூறியுள்ளது.

மக்களவைக்கும் சட்டப் பேரவைகளுக்கும் இப்போதுள்ள தேர்தல் முறையை அப்படியே வைத்துக்கொண்டு, இவற்றில் கூடுதலாக 25 சதவீத இடங்களை உருவாக்கி இந்த இடங்களை பொதுத் தேர்தலில் கட்சிகள் பெறும் வாக்குகளின் விகிதாசார அடிப்படையில் நிரப்ப வேண்டும் என்பது ஆணையத்தின் யோசனை. பொதுத் தேர்தலின்போது இந்தக் கூடுதல் இடங்களுக்குத் தங்கள் வேட்பாளர்களை அரசியல் கட்சிகளின் தனித்தனிப் பட்டியல்களில் அறிவிக்க வேண்டும் என்பது கட்டாயமாக்கப்படும்.

ஜெர்மனியில் இருப்பதுபோல 4 சதவீதம் வாக்குகளுக்குக் குறைவாகப் பெறும் கட்சியைச் சட்டமன்றத்தில் இடம் பெறத் தகுதியற்றதாக அறிவிக்கலாம். இதனால் அரசியல் கட்சிகளின் எண்ணிக்கை வரம்பின்றிப் பெருகுவதை விகிதாசாரப் பிரதிநிதித்துவம் மூலம் தடுக்கலாம். படிப்படியாக இரண்டு அல்லது மூன்று கட்சி முறை உருவாகும்.

விகிதாசாரப் பிரதிநிதித்துவ முறையில் மக்கள் பங்கெடுப்பு முழுமையாக இருக்கும். ஒரு ஓட்டுகூட சிதறாது. மக்களுடைய எண்ணங்களைப் பிரதிபலிக்கின்ற நேர்மையான பிரதிநிதிகள் நாடாளுமன்றத்திற்குச் செல்ல விகிதாசாரப் பிரதிநிதித்துவ வாக்கு உரிமை பயன்படும்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

 
%d bloggers like this: