தேவையில்லை புதிய மாநிலங்கள்
கே.வீ. ராமராஜ்
ஆந்திர மாநிலத்திலிருந்து தெலங்கானா பகுதிகளைப் பிரித்து புதிய மாநிலம் உருவாக்க வேண்டும் என்ற கோரிக்கை தற்போது தேசிய அரசியலில் முக்கிய விவாதமாகத் தோன்றியுள்ளது. இந்நிலையில் சுதந்திரத்திற்குப் பிந்திய இந்தியாவில் மொழிவாரி மாநிலங்கள் உருவான சரித்திரத்தைப் பற்றியும் மாநிலங்களைப் பிரித்து புதிய மாநிலங்களை உருவாக்குவது அவசியம்தானா என்பது குறித்தும் அலசி ஆராய வேண்டிய தருணம் இதுவாகும்.
இந்தியாவில் ஆங்கிலேயர் ஆட்சி நடத்திய போதே 1920ஆம் ஆண்டு நாக்பூரில் நடைபெற்ற அகில இந்திய காங்கிரஸ் மாநாட்டில் மொழி அடிப்படையில் மாநிலங்கள் அமைய வேண்டுமென கோரிக்கை எழுந்தது. 1920ஆம் ஆண்டு முதலே காங்கிரஸ் கட்சி அதன் மாநில அமைப்புகளை மொழிவாரி அடிப்படையில் கொண்டிருந்தது. 1938ஆம் ஆண்டிலேயே தெலுங்கு பேசும் மக்களைக் கொண்ட மாநிலம் உருவாக்கப்பட வேண்டுமெனவும் சென்னை நகரமும் இம்மாநிலத்துடன் இணைக்கப்பட வேண்டுமெனவும் கோரி ஆந்திரர்கள் “”மதராஸ் மனதே” என்ற இயக்கத்தைத் தொடங்கினர். 1947ஆம் ஆண்டில் சென்னை சட்டமன்றமும் மொழிவாரி மாநில அமைப்பை ஆதரித்து அறிக்கை வெளியிட்டதைத் தொடர்ந்து தனித் தமிழ் மாநிலக் கோரிக்கையும் வலுவடைந்தது.
1948 ஜூன் 17 அன்று உயர் நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி எஸ்.கே.தர் தலைமையில் மொழிவாரி மாநிலக் குழு அமைக்கப்பட்டது. மொழிவாரி மாநிலம் முக்கியமான பிரச்சினை அல்ல என்றும் மாநிலங்களை நிர்வாக வசதிக்காகவே பிரிக்க வேண்டுமென்றும் அப்படியிருப்பினும் சென்னை, மும்பை போன்ற நகரங்களைச் சிறப்பு மாநிலங்களாக அறிவிக்க வேண்டுமென்றும் இக்குழு பரிந்துரைத்தது. எஸ்.கே.தர் குழுவின் பரிந்துரைகளினால் ஆந்திரத்தில் கோப அலைகள் எழுந்ததைக் கண்டு நேரு, படேல், சீதாராமய்யா ஆகியோரைக் கொண்ட குழுவை இந்தியத் தேசிய காங்கிரஸ் நியமித்தது. மொழிவாரி ஆந்திர மாநிலம் ஏற்படுமாயின் சென்னை ஆந்திரத்துடனும் தமிழகத்துடனும் சேர்க்கப்படாமல் தனித் தகுதி மாநிலமாக இருக்குமென இக்குழுவும் அறிவித்தது. இதனால் புது ஆந்திரத் தலைநகர் உருவாக்க வேண்டும் அல்லது சென்னை இரண்டு மாநிலங்களுக்கும் தலைநகராக விளங்க வேண்டுமென இக்குழு அறிவித்தது. இதனைத் தொடர்ந்து சென்னை மாகாண அரசால் பி.எஸ். குமாரசாமி ராஜா தலைமையில் நிறுவப்பட்ட பகுப்பாய்வுக் குழு சென்னையை ஆந்திரத்தின் தாற்காலிகத் தலைநகராக வைத்துக் கொள்ளக்கூட விரும்பவில்லை.
இந்நிலையில் தெலுங்கு மாநிலத்தை உடனே அமைக்கக் கோரி பல போராட்டங்கள் தொடங்கின. 1951 ஆகஸ்டில் ஆந்திரப் பிரதேச காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் செயலாளர் சுவாமி சீதாராம் உண்ணாவிரதத்தைத் தொடங்கினார். இதனைக் கண்டித்த நேரு தமிழ்நாடு, ஆந்திரம், கர்நாடகம், கேரளம் ஆகியவை எல்லைப் பிரச்சினைகளைப் பேசித் தீர்த்துக் கொள்வதாயின் மொழிவாரி கொள்கையைப் பரிசீலிப்பதாக 1951 செப்டம்பரில் நாடாளுமன்றத்தில் அறிவித்தார். மொழிவாரிக் கோரிக்கைக்கு நேரு அதிக ஆதரவளிக்காததால் 1952ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் ஆந்திரத்தில் காங்கிரஸ் அதிக வெற்றி பெறவில்லை. ஆந்திரத்தை உடனடியாக உருவாக்க பொட்டி ஸ்ரீராமுலு 1952-ல் 67 நாள்கள் உண்ணாவிரதமிருந்து உயிர் விட்டார். இதனைத் தொடர்ந்து சென்னையைத் தவிர தெலுங்கு பேசும் பகுதிகளைக் கொண்டு தனி ஆந்திரம் உருவாக்கப்படும் என 1952 டிசம்பர் 19-ல் அறிவித்து வாஞ்சு குழுவை நேரு நியமித்தார்.
ஆந்திரத்திற்கு புதுத் தலைநகர் ஏற்படும் வரை சென்னை தலைநகராக இருக்குமென வாஞ்சு குழு அறிவித்ததால் தமிழகத்தில் பலத்த எதிர்ப்புக் கிளம்பியது; 1953ஆம் ஆண்டு தெலுங்கு பேசும் மக்களுக்காக சென்னை மாநிலத்தைப் பிரித்து கர்நூலைத் தலைநகராகக் கொண்டு ஆந்திரம் உருவானது. ஆந்திரம் மொழி அடிப்படையில் அமைக்கப்பட்டதும் மற்ற மாநிலங்களும் மொழிவாரி அமைப்பைக் கோரின. 1952ஆம் ஆண்டு பஷல் அலி தலைமையில் சர்தார் கே.எம். பணிக்கர், எச்.என். குன்ஷ்ரு ஆகியோர் அடங்கிய மாநிலச் சீர்திருத்தக் குழுவை மத்திய அரசு நியமித்தது. மொழி அடிப்படையில் மாநிலங்கள் உருவாக்கப்படுதலை இக் குழு ஆதரித்துக் கொடுத்த அறிக்கையைத் தொடர்ந்து 1956 ஜூலையில் மாநில சீர்திருத்தச் சட்டம் இயற்றப்பட்டது.
தெலங்கானா மாநிலம் உருவாக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை 1970களில் எழுப்பப்பட்டது. இதைப் போன்றே மாநிலங்களைப் பிரிக்க வேண்டும் என்று இதுவரை 29 கோரிக்கைகள் ஏற்கெனவே எழுந்துள்ள நிலையில் அரசு எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டியது அவசியமாகும். ஆந்திரத்திலிருந்து சில பகுதிகளைப் பிரித்து தெலங்கானா மாநிலம் உருவாக்கப்பட்டால் அதைப் போலவே ஆந்திரத்தில் சித்தூர், கர்நூல், கடப்பா, ஆனந்த்பூர் மற்றும் கர்நாடகத்தில் பெல்லாரி மாவட்டங்களை இணைத்து ராயலசீமா மாநிலம் உருவாக்க வேண்டும் என சிலர் ஏற்கெனவே கோரி வருகின்றனர். இதைப் போலவே கர்நாடகத்தின் வடக்கு மாவட்டங்களைக் கொண்டு குடகு மாநிலம் அமைக்க வேண்டுமென அவ்வப்போது பேச்சு எழுவது கடந்த சில ஆண்டுகளாக வழக்கமான ஒன்றாக உள்ளது. தமிழகத்திலும் மதுரையைத் தலைநகராகக் கொண்டு தென் தமிழகமும் சென்னையைத் தலைநகராகக் கொண்டு வட தமிழகமும் இரண்டு மாநிலங்களாக உருவாக்கப்பட வேண்டும் என ஓரிரு முறை பேச்சு எழுந்துள்ளது. மகாராஷ்டிர மாநிலத்தில் விதர்ப்பா மாநிலக் கோரிக்கையும் மேற்கு வங்காளத்தில் போடோ மாநிலக் கோரிக்கையும் உத்தரப்பிரதேசத்தில் ஹரித் பிரதேச மாநிலக் கோரிக்கையும் அவ்வப்போது எழுகின்றன. ஏற்கெனவே உள்ள மாநில எல்லைகளை மாற்றி புதிய மாநிலங்களை உருவாக்குவது என்ற கொள்கைகளை ஏற்றுக்கொள்ளத் தொடங்கினால் நாட்டின் ஒற்றுமைக்கும் பாதுகாப்புக்கும் மிகுந்த பாதிப்பு ஏற்படக் கூடும்.
நம் நாட்டின் அடிப்படை அம்சமான தேசிய ஒருமைப்பாட்டிற்கு இப் பிரச்சினை ஊறு விளைவிக்கும் எனலாம். தனி மாநிலம் அமைவதால் மட்டும் ஒரு பகுதி வளர்ச்சி பெற்று விட முடியாது. ஏற்கெனவே பிரிக்கப்பட்டு உருவான ஜார்க்கண்ட், உத்ராஞ்சல் மற்றும் சத்தீஷ்கர் போன்றவை வளர்ச்சிக் குறியீடுகளில் இன்னும் பின்தங்கியே நிற்கின்றன.
மாநிலங்கள் குறைந்த பரப்பளவில் ஏற்படுத்தப்படும்போது தொழில், வேளாண்மை, பொருளாதாரம் உள்ளிட்ட துறைகளில் சில சமயங்களில் வலுவிழக்க நேரிடும். உதாரணமாக தற்போதைய தென்னக மாநிலங்களில் ஒரு பகுதியில் மழை பொய்த்துப் போனாலும் இன்னொரு பகுதியில் உள்ள நீர் வளத்தை வைத்து மாநில அரசுகள் குடிநீர், விவசாயம் போன்ற பிரச்சினைகளைச் சமாளித்துக் கொள்ளலாம்.
மொழிவாரி மாநிலங்கள் நீடிப்பதே தேசிய ஒருமைப்பாட்டிற்கும் சமூக வளர்ச்சிக்கும் உறுதுணையானது. தேசியத்தையும் மாநில ஒற்றுமையையும் வளர்ப்பதற்கு ஏற்ற வகையில் பாடத் திட்டங்களை அரசாங்கங்கள் உருவாக்கி இதற்கான பணிகளில் ஈடுபடும் தன்னார்வ அமைப்புகளை ஆதரிக்க வேண்டும். தென்னகத்திலும் நான்கு மொழிகளுக்கும் நான்கு மாநிலங்கள் என்ற நிலை தொடர அரசியல் கட்சிகள் பாடுபட வேண்டும். மத்திய அரசு மாநிலங்களின் வளர்ச்சிக்கு பாரபட்சமற்ற திட்டங்களைச் செயல்படுத்துவதுடன் மாநில அரசுகள் மாநிலம் முழுவதும் சமமான பார்வையோடு ஆட்சி நடத்துவது அவசியமாகும். மாநிலங்களுக்கு இடையே எல்லைப் பிரச்சினைகளில் மத்திய அரசு தலையிட்டு விரைவில் சமரசத்தை ஏற்படுத்த வேண்டும். மாநில அரசுகள் மாநில அளவில் மக்கள் ஒற்றுமைக் குழுக்களையும் அண்டை மாநிலங்களுடன் இணைந்து அண்டை மாநில நல்லுறவுக் குழுக்களையும் ஏற்படுத்த வேண்டும். தேசிய அளவில் இக்குழுக்களைக் கண்காணித்து, சிறப்பாகச் செயல்பட நெறிப்படுத்தும் அமைப்பு ஒன்றை மத்திய அரசு ஏற்படுத்த வேண்டும். இத்தகைய தேச ஒற்றுமைக் குழுக்களை நாடு முழுவதும் வலைப்பின்னல் போல உருவாக்கிட வேண்டும்.