தமிழகத்தில் ஆன்லைன் வர்த்தகத்தால் பருப்பு உள்ளிட்ட அத்தியாவசிய பொருள்களின் விலை கடுமையாக உயர்வு
கே.வாசுதேவன்
திருநெல்வேலி, செப். 26: தமிழகத்தில் ஆன்லைன் வர்த்தகத்தால் அத்தியாவசிய பொருள்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது.
ஆன்லைன் வர்த்தகத்தால் நமது நாட்டில் தங்கம் மற்றும் வைரம் போன்ற ஆடம்பர பொருள்களில் விலைகள் மட்டும் உயர்ந்து வந்தது. தற்போது மக்களின் அத்தியாவசிய பொருள்களின் விலையும் உயரத் தொடங்கி இருக்கிறது.
ஆன்லைன் வர்த்தகத்தில் ஒரு பொருளின் மதிப்பில் 4 -ல் ஒரு பங்கு பணத்தை செலுத்தினாலே அந்த பொருளை வாங்குபவர் தனக்குரியதாக்கி விடலாம். அதாவது ரூ.1 கோடி மதிப்புள்ள பொருளுக்கு ரூ.25 லட்சம் செலுத்தினாலே அந்த பொருளை வாங்கி விடலாம். இதில் அந்த பொருளை வாங்கியவர், அடுத்தவருக்கு அந்த பொருளை விற்கும்போது தான் அந்த பொருளுக்குரிய முழு பணத்தையும் கொடுக்கின்றார்.
இதையே பெரிய வியாபாரிகள் தங்களுக்கு சாதமாக பயன்படுத்திக் கொண்டு கோடிக்கணக்கான மதிப்புள்ள பொருள்களை சில லட்சங்களை மட்டும் செலுத்தி அந்த பொருளை குடோன்களை விட்டு வெளியேறி விடாதவாறு செய்து விடுகின்றனர். இதேபோல் பல வியாபாரிகள் செய்வதினால் அந்த குறிப்பிட்ட பொருள் சந்தைக்கு வராமல் விலை கடுமையாக உயருகிறது.
இதில் கடந்த 2 மாதங்களில் மட்டும் அத்தியாவசிய பொருள்களின் விலை கிலோவுக்கு ரூ.5 முதல் ரூ.20 வரை உயர்ந்துள்ளது.
பருப்பு வகைகள்
ஆன் லைன் வர்த்தகத்தால் மிகவும் பாதிக்கப்பட்டு இருப்பது பருப்பு வகைகள் தான். ஜூலை மாதத்துக்கு முன்பு வரை கிலோ கடலை பருப்பு ரூ. 34 இருந்தது தற்போது ரூ. 45 ஆக உயர்ந்து உள்ளது. இதே போல் துவரம் பருப்பு, உளுந்தம் பருப்பு, பாசி பருப்பு என்று அனைத்து ரகங்களுமே கிலோவுக்கு ரூ.10 முதல் ரூ.20 வரை உயர்ந்து உள்ளன.
வட மாநிலங்களில் அதிக மழை பெய்ததினாலும் பொதுவாக இந்த மாதங்களில் பருப்புகளின் விலை அதிகரிக்கும். ஆனால், இந்த ஆண்டு பருப்புகளின் இந்த விலை உயர்வுக்கு முக்கிய காரணமாக இருப்பது ஆன்லைன் வர்த்தகம் தான் என்கிறார் திருநெல்வேலியை சேர்ந்த பருப்பு மொத்த வியாபாரி.
இதில் அந்த பொருள் வைத்திருந்த காலத்திற்காக போடப்படும் வட்டி நுகர்வோரிடம் இருந்தே மறைமுகமாக வசூலிக்கப்படுகிறது.
ஆன் லைனால் பருப்பின் விலை உயர்ந்தது போல், தற்போது சீரகம், பூடு, மைதா, ரவை, கடலை மாவு போன்ற பொருள்களின் விலையும் உயர்ந்து உள்ளது. இதில் கடலை மாவு கிலோ ரூ.30-ல் இருந்து ரூ.50 ஆக விலை உயர்ந்து இருக்கிறது.
நடவடிக்கை எடுக்க வேண்டும்
இது குறித்து தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுத்து, ஏழை மக்கள் மேலும் ஏழையாக்க படுவதை தடுக்க வேண்டும் என்பது பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.
அன்புள்ள ஆசிரியருக்கு…: ஆன்லைன் வர்த்தகம்
“ஏறினால் இறங்குவதில்லை’ – தலையங்கம் (17-2-07) படித்தேன்.
பயறு வகைகள் விளைச்சல் முடிந்து, அறுவடையாகி, வழக்கமாக பிப்ரவரி மாதத்திலேயே விற்பனைக்குக் கடைகளுக்கு வருவது வழக்கம். அப்போது பயறு விலை கணிசமாகக் குறைந்திருக்க வேண்டும்.
ஆனால் கடந்த ஆண்டு விலை குறையாததற்கு வடமாநிலங்களில் பெய்த பெருமழையில் பயிர்கள் சேதமடைந்துவிட்டதே காரணம் எனக் கூறப்பட்டது.
இந்த ஆண்டு கனமழை இல்லை. பயிர்களும் சேதமடையவில்லை. அப்படி இருந்தும் விலை குறையவில்லை. எனவே பயறு வகைகள் விலை உயர்வுக்கு ஆன்லைன் வர்த்தகமே காரணம் என பெரும்பாலானவர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.
எனவே மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுத்தால் “ஏறிய விலைகள் இறங்கலாம்’.
கே. சிங்காரம், வெண்ணந்தூர்.
முன்பேர வர்த்தக தடை எதிரொலி: கோதுமை விலை சரிவு; அரிசி விலை மாற்றமில்லை
புதுதில்லி, மார்ச் 2: கோதுமை முன்பேர வர்த்தகத்துக்கு மத்திய அரசு விதித்த தடையைத் தொடர்ந்து, கோதுமை விலை குறையத் தொடங்கியுள்ளது.
முன்பேர வர்த்தகத்தில் அரிசி பரிவர்த்தனை குறைவு என்பதால், அரிசி விலை மாற்றமின்றி அப்படியே நீடிக்கிறது என மொத்த வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஆலைகளுக்கான தாரா கோதுமை விலை குவிண்டாலுக்கு ரூ.1020 -ரூ.1035-ல் இருந்து, ரூ.1000 -1005 ஆகக் குறைந்தது. நாட்டு கோதுமை விலை குவிண்டாலுக்கு ரூ.1390 -ரூ.1590-ல் இருந்து ரூ.1200 -ரூ.1,550 ஆகக் குறைந்துள்ளது.
முன்பேர வர்த்தகத் தடையைத் தொடர்ந்து, இருப்பு வைத்திருப்பவர்களிடம் இருந்து, கோதுமையை வாங்குவதில் மாவு மில்களிடையே சுணக்கம் ஏற்பட்டதால் விலை குறையத் தொடங்கியுள்ளது.