Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

Archive for the ‘review’ Category

Ki Parthibharaja’s Kaayatha Kaanagathey – Book Review in Unmai

Posted by Snapjudge மேல் நவம்பர் 13, 2007

நூல்: காயாத கானகத்தே
ஆசிரியர்: கி.பார்த்திபராஜா
வெளியீடு:ராகாஸ் அகமது வணிக வளாகம்,
12/293, இராயப்பேட்டை, நெடுஞ்சாலை,
சென்னை-14.

விலை:ரூ.100/-

தமிழ் நாடகத்தின் ஒரு கூறான இசை நாடகம் பற்றி பெரிய அளவில் ஆய்வுகளோ, பகுதிகளோ இல்லாத நிலையில் பார்த்திப ராஜாவின் காயாத கானகத்தே நூல் இசை நாடகம் பற்றிய ஒரு சிறந்த பதிவாகும்.

தென்மாவட்டங்களில் 20 பகுதி மக்களின் சமூக வாழ்க்கையில் ஓர் அங்கமாக இருந்த இசை நாடகங்கள், காட்சி ஊடகங்களின் ஆக்கிரமிப்பால் அந்த நாடகங்கள் பற்றி நூல்கள் மூலமே. இளைய தலைமுறையினர் அறியக்கூடிய நிலையில், இந்நூல் மிகவும் பயனுள்ள வரவாகும்.
மற்ற நாடகங்கள் போலன்றி இசை நாடக கலைஞர்களுக்கு கற்பனைத் திறனும், நாட்டு நடப்பில் தெளிந்த கண்ணோட்டமும், சமயோசித திறனும் இருந்தால் தான் காட்சிகளில் பரிணமிக்க முடியும்.

நாடக கலைஞர்களின் பங்களிப்பு, அவர்களின் திறன் அவர்களின் வாழ்வியல் நிலைகள் ஆகியவற்றை நடிகர் சங்க அமைப்பாளர்களுடன் இணைந்து தொடர்ந்து நாடகத்தை பார்த்தும், அவர்களுடன் பழகியும் பல சுவையான தகவல்களை தொகுத்தளித்துள்ளார்.

கலைஞர்களின் திறனை வெளிப்படுத்த அவர் மேற்கொண்ட நடை சிறப்புடையது. அவற்றில் ஒரு சில துளிகள். வள்ளி நாடகத்தில் திண்டுக்கல் பகுதியைச் சேர்ந்த ஒரு புகழ்பெற்ற நடிகை தன்னை தர்க்கத்தில் வென்றால் நடிப்புத் தொழிலையே விட்டுவிடுவேன் என்று சவால் விடுவார். அவருடன் நடிப்பதற்கு ராஜபார்ட்டுகளே அஞ்சுவார்கள்.

அவரை வேறு பகுதியைச் சேர்ந்த ஒரு நடிகர் சூழ்ச்சியால் தர்க்கத்தில் வென்றுவிட அதன் பின்னர் அந்த நடிகை அரிதாரம் பூசுவதைவிட்டு நடிப்புத் தொழிலையே விட்டுவிட்டார்.

அதேபோல் சத்தியவான் சாவித்திரி நாடகத்தில் எமன் வேடத்தில் சங்கரதாஸ் சுவாமிகளின் குரலையும், ஆட்டத்தையும் பார்த்த அதிர்ச்சியில் கர்ப்பிணி பெண் ஒருவரின் கரு கலைந்து போனது. அதன்பிறகு அடுத்தடுத்த நாடகங்களில் அவர் எமன் வேடத்தில் வரும்போது கர்ப்பிணிகள் இருந்தால் சபையைவிட்டு வெளியே போய்விட்டு காட்சி முடிந்த பிறகு திரும்பிவரவும் என்ற அறிவிப்பு செய்துள்ளனர்.

அவர் நடித்த பிரகலாதன் நாடகத்தில், இரணியன் வேடம் கட்டி பிரகலாதனாக நடித்த சிறுவனை தூக்கி கீழே வீசியபடி கர்ஜனை செய்த காட்சியை பார்த்த பெண் மூர்ச்சையடைந்தார். அதிலிருந்து அவர் தொடர்ந்து நடிப்பை மேற்கொள்ள மறுத்துவிட்டார்.

அதன் பிறகு அவர் நடிக்கவேயில்லை.

இசை நாடக வரலாற்றில் பெண்களை புறந்தள்ளிவிட்டே தொடங்கியிருந்தது. அதனால் தான் மதுரை ஒரிஜினல் பாய்ஸ் கம்பெனி, பாவலர் பாய்ஸ் கம்பெனி, தேசிகானந்தா பாய்ஸ் கம்பெனி என்ற பெயரிலேயே நாடக கம்பெனிகள் இருந்துள்ளன. பிறகு இசை நாடகங்களில் பெண்கள் பங்கேற்க ஆரம்பித்த பின், ஆண்கள் பெண் வேடமிடும் பழக்கம் குறைந்தது.

அப்படியும் நாடக நடிகைகளுக்கு சமூக அங்கீகாரம் பெரிய அளவில் கிடைத்துவிடவில்லை. சமூகம் தங்களை இழிவாக பார்க்கவில்லை என்றும் கூறும் நடிகைக்கள் கூட அதற்கு காரணம் பொருள் வசதியோடு இருப்பது தான் என்கின்றனர். இக்காலக் கட்டத்தில் தான் பழம்பெரும் நடிகை பாலாமணி அம்மாள் பெண்களைக்-கொண்டே நாடகக் குழுவை நடத்தி வந்துள்ளார்.

அவரது குழுவில் 50-க்கும் மேற்பபட்ட பெண்கள் இருந்துள்ளனர்.

கும்பகோணத்தில் அவர் நடத்திய தாரா சசாங்கம் என்ற நாடகத்தைப் பார்க்க, மாயவரத்திலிருந்து எட்டு மணிக்கு ஒரு ரயிலும், திருச்சியிலிருந்து எட்டரை மணிக்கு ஒரு ரயிலும் புறப்பட்டு கும்பகோணம் சென்று, நாடகம் முடிந்து நள்ளிரவு மூன்று மணிக்கு இருரயில்களும் திரும்பிச் செல்லும். நாடகம் பார்க்கும் ரசிகர்-களுக்காக விடப்பட்ட இந்த ரயிலுக்கு பாலாமணி ஸ்பெஷல் என்றே பெயரிட்டுள்ளனர்.

இன்றைய தமிழ் சினிமா ரசிகத் தன்மை, நடிகர், நடிகைகள் வழிபாடு, ரசிக வெறித்தனம் போன்றவை ஒன்றும் புதியதல்ல. அது ஏற்கனவே நாடக வரலாற்றில் காண முடிகிறது. முழுஇரவு நாடகங்கள் முற்றாக மறைந்துவிட்ட நிலையில், அவற்றை பற்றிய ஒரு தொகுப்பு நூல் இன்றைய தலைமுறையினருக்கு ஒரு வரலாற்றுப் பெட்டகமாகும். இந்த அளவுக்கு களப்பணி செய்து, ஆராய்ச்சி கண்ணோட்டத்தோடு; சுவைபட எழுதப்பட்ட நூல் இது.

நூலாசிரியரின் முயற்சிக்கு பாராட்டுக்கள்.

Posted in Actors, artists, Books, Cinema, Documents, Drama, Fieldwork, Films, History, Incidents, Literature, Movies, music, Paarthibharaja, Parthibharaja, Performance, Research, review, Shows, Stage, Theater, Theatre, Unmai | Leave a Comment »

Tamil Cinema Reviews – Sivappathigaram : Vishal

Posted by Snapjudge மேல் திசெம்பர் 6, 2006

சினிமா சிவப்பதிகாரம்- விமர்சனம்

மனோஜ்கிருஷ்ணா

நம்மை அதிகாரம் செய்து ஆளும் அரசியல்வாதிகளுக்கு இருக்க வேண்டிய தகுதிகள் பற்றிய ஆதங்கம்தான் “சிவப்பதிகாரம்‘.

அழிந்து வரும் நாட்டுப்புறப் பாடல்களை அடுத்து வரும் தலைமுறையினர் ஆராதிக்க வேண்டும் என்பதற்காக ஒரு புத்தகம் எழுத சொந்த கிராமத்துக்கு வருகிறார் பேராசிரியர் ரகுவரன்.

அவருடைய குறிப்பறிந்து குறிப்பெடுக்க உதவிக்கு வருகிறார் அவரிடம் படித்த மாணவர் விஷால். இதற்கிடையில் சட்டப் பேரவைக்குத் தேர்தல் அறிவிக்கப்படுகிறது. பல்வேறு கட்சிகளின் வேட்பாளர்கள் மனு தாக்கல் செய்கிறார்கள். குருவின் உபதேசத்தோடும், குறு வாளின் உதவியோடும் ஆளும் கட்சி, எதிர்க் கட்சி என பேதமுமில்லாமல் மூன்று வேட்பாளர்களை பொது இடங்களில் குத்திக் கொல்கிறார் விஷால். உயிர் பயம் காரணமாக பெரும் எண்ணிக்கையிலான வேட்பாளர்கள் தங்கள் மனுவை வாபஸ் பெறுகிறார்கள்.

தேர்தல் நிறுத்தி வைக்கப்படுகிறது. விஷால் வேட்பாளர்களை ஏன் கொல்கிறார்; இறுதியில் என்ன நடக்கிறது என்பதுதான் கதை.

விஷால் அமைதியாகவும், ஆக்ரோஷமாகவும் நடித்திருக்கிறார். நடிப்பில் முதிர்ச்சி தெரிகிறது. அறிமுக நாயகி மம்தா வழக்கமான கதாநாயகிகளைப் போல் காதல் காட்சிகளிலும், பாடல் காட்சிகளிலும் தன்னுடைய பங்களிப்பை ஆற்றியிருக்கிறார். கஞ்சா கருப்புவின் யதார்த்தமான காமெடியை ரசிக்கலாம். மணிவண்ணன், உபேந்திரா லிமாயே, ஸ்ரீகாந்த் ஆகியோர் யதார்த்தமான நடிப்பையும், சண்முகராஜன் சிறப்பான நடிப்பையும் வெளிப்படுத்தியிருக்கிறார்கள். இவர்களைத் தவிர்த்து படம் நெடுகிலும் வரும் பல புதுமுகங்களின் நடிப்பு கதையோட்டத்துக்கும், காட்சிகளுக்கும் உறுதுணை புரிந்திருக்கிறது.

நடிப்பில் அனைவரையும் முந்துபவர் ரகுவரன்தான். பேராசிரியர் பாத்திரத்தில் நிறைகுடமாய் ஜொலிக்கிறார். தன்னைப் பிடிக்க வரும் போலீசாரிடமும், நீதிமன்றத்தில் பத்திரிகையாளர்களிடமும் இயல்பாய் பேசும் காட்சிகள் சிறப்பு.

விஷால் வைத்திருக்கும் கத்தி வேட்பாளர்களைக் கொல்கிறது என்றால், கத்தியை விடக் கூர்மையான கரு.பழனியப்பனின் வசனம் ரசிகர்களின் மனங்களை வெல்கிறது. இன்றைய அரசியல் சூழ்நிலையில் நாட்டுக்குத் தேவையான நல்ல கருத்துகளை சொல்ல முயன்றதற்காகப் பாராட்டலாம். படத்தில் இடம்பெறும் கல்லூரிக் காட்சிகளில், ஆசிரிய-மாணவ உரையாடல்களில் யதார்த்தம் மிளிர்கிறது. அனைவரிடமும் சிறப்பாக வேலை வாங்கியிருக்கிறார். படத்துக்கு இன்னொரு பலம் வித்யாசாகரின் இசை. பாடல்களிலும், பின்னணி இசையிலும் வித்தியாசம் காட்டியிருக்கிறார். கோபிநாத்தின் ஒளிப்பதிவு கிராமங்களை உயிர்ப்போடு படம்பிடித்திருக்கிறது. குறிப்பாக மதுரை சித்திரைத் திருவிழா காட்சிகள் படம்பிடிக்கப்பட்ட விதம் மிக அருமை.

படத்தின் முதல் பாதியை விட இரண்டாம் பாதி விறுவிறுப்பாகச் செல்கிறது. திரைக்கதையின் வலுக்குறைவால் சில காட்சிகளோடு ரசிகர்கள் ஒன்றமுடியவில்லை என்பதை மறுப்பதற்கில்லை. மூன்று வேட்பாளர்கள் கொல்லப்பட்டவுடன் மாநிலத்திலுள்ள பல வேட்பாளர்கள் தங்கள் மனுவை வாபஸ் பெறுவதும், நாயகன் பொது இடங்களில் வேட்பாளர்களைக் கொன்றுவிட்டு மெதுவாக நடந்து வருவதும் ஏற்புடையதாக இல்லை.

“சிவப்பதிகாரம்’ -சமுதாயத்துக்குத் தேவையான நல்ல கருத்துகளை முன் வைத்த படங்களின் பட்டியலில் இடம் பெறும்.

மனோஜ்கிருஷ்ணா

Posted in Kanja Karuppu, Mamtha, Raghuvaran, review, Shanmugarajan, Shanmukarajan, Sivappathigaram, Sivappathikaram, Tamil Cinema, Tamil Film, Tamil Movies, Vishaal, Vishal | 1 Comment »

Musharraf – In the Line of Fire : Memoirs Criticism

Posted by Snapjudge மேல் செப்ரெம்பர் 26, 2006

யோசனைகள் இலவசம்

பாகிஸ்தான் அதிபர் முஷாரப் எழுதி வெளியாகியுள்ள “நெருப்புக் கோட்டினில்: ஒரு நினைவுக் குறிப்பு‘, இந்தியா – பாகிஸ்தான் – காஷ்மீர் பற்றிய பல்வேறு விவாதங்களைப் “பற்ற’ வைத்துள்ளது. காஷ்மீர் பிரச்சினைக்குத் தீர்வாக “தனிப்பட்ட முறையில் தனது யோசனை’ என்று அவர் நான்கு விஷயங்களை அந்த நூலில் குறிப்பிட்டுள்ளார்.

1. பாகிஸ்தானும் இந்தியாவும் உரிமைகோரும் பகுதிகளைப் பரஸ்பரம் விட்டுக் கொடுத்து பேசித் தீர்த்துக்கொள்ளலாம்

2. இப்படியாகத் தீர்மானிக்கப்படும் பகுதியில் இரு நாடுகளும் தங்கள் ராணுவத்தை விலக்கிக் கொள்ள வேண்டும்.

3. இப்பகுதிக்கு தன்னாட்சி அளிக்கவேண்டும்.

4. அந்தத் தன்னாட்சியைப் பாகிஸ்தான், இந்தியா, காஷ்மீர் ஆகிய மூன்று பகுதியினரையும் கொண்ட குழு அமைத்து கண்காணிப்போம்.

பிரச்சினைக்குரிய பகுதிகளை விட்டுக் கொடுத்துத் தீர்மானிக்க முடிந்தாலே இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான பிரச்சினை முடிந்துபோகிறது. அதன் பின்னர் அவரவர் பகுதியில் அவரவர் ஆட்சி தானே அமைந்துவிடும்.

ஆனால் முஷாரப், அதற்கும் மேலே போய், தன்னாட்சி வழங்க வேண்டும், வாருங்கள் மூவரும் ஒன்றாகக் கண்காணிப்போம் என்கிறார். அதாவது – இரண்டு வீடுகளுக்கு இடையில் எல்லைப் பிரச்சினையா? குறுக்கே சுவர் எழுப்பு! இரு நாடுகளுக்கு இடையே எல்லைப் பிரச்சினையா? குறுக்கே ஒரு நாட்டை எழுப்பு!

முஷாரப் சொல்லும் நான்கு யோசனைகளையும் கூட்டிக் கழித்துப் பார்த்தால் ஒரு புதிய நாடு முளைப்பதை உணரலாம். இன்றைய காலக்கட்டத்தில் இந்தியா – பாகிஸ்தான் உறவு என்பது வெறும் காஷ்மீர் எல்லைப் பிரச்சினை என்பதாக இல்லை. இந்தியாவுக்குள் பயங்கரவாதிகள் நுழைவதைத் தடுப்பதுதான் இந்திய நட்புக்கு பாகிஸ்தான் அளிக்கக்கூடிய முதல்மரியாதையாக இருக்க முடியும். ஆனால் அதைப் பற்றி முஷாரப் தனது “சர்வதேச உறவுகள்‘ அத்தியாயத்தில் விவாதிக்கக் காணோம்.

“பாகிஸ்தானில் பயங்கரவாதிகள்’ என அமெரிக்கா, இந்தியா இரு நாடுகளும் குற்றம் சாட்டும்போது இரு நாடுகளுக்கும் இரண்டு விதமான எதிர்வினைகளைத் தருகிறது பாகிஸ்தான்.

மும்பையில் தொடர் குண்டுவெடிப்பு நடைபெற்றதற்கு பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத அமைப்புகள்தான் காரணம் என்று இந்தியா சொன்னபோது வெளியுறவுத்துறை அமைச்சர் மூலம் பாகிஸ்தான் அளித்த கோபமான பதில்: “”இந்தியாவில் எங்கே குண்டு வெடித்தாலும் பாகிஸ்தான் காரணம் என்கிறார்கள்”.

ஆனால், இதே குற்றச்சாட்டுக்கு அமெரிக்காவிடம் பாகிஸ்தான் நடந்துகொள்ளும் விதம் அலாதியானது. நியூயார்க்கில் உலக வர்த்தகக் கட்டடம் அல் காய்தாவால் தாக்கப்பட்டதும், “”பயங்கரவாதத்தை ஒழிக்க (அல்லது பாகிஸ்தானில் பதுங்கியுள்ள பயங்கரவாதிகளை ஒப்படைக்க) ஒத்துழைக்காவிட்டால் நாட்டையே குண்டுபோட்டு அழிப்போம். கற்காலத்துக்குப் போய்விடுவீர்கள்” என்று மிரட்டிய விஷயத்திற்காக, அமெரிக்கா செல்லும் லண்டன் விமானங்களில் குண்டுவெடிக்க நடத்தப்பட்ட சதியை முறியடிக்கத் “துப்பு’ கொடுத்து “நடமாடும் நாயகருக்கு நல்லபிள்ளை நானே’ என்று பேர் வாங்கிக் கொண்டபின்னர், இப்போதுதான் அந்த மிரட்டல் பற்றி மூச்சு விடுகிறார் முஷாரப்.

ஆகையால், பேசிப் பேசித் தீர்த்த பின்னும் ஏதோ ஒன்று குறையுதே என்று இந்தியா கவலை கொள்ளத் தேவையில்லை. உலகம் தோன்றிய நாள் முதலாய் “வல்லவன் வகுத்ததே வாய்க்கால்’.

கெஞ்சினால் மிஞ்சுவர், மிஞ்சினால் கெஞ்சுவர்.

Dinamani Editorial – March 5, 2007

காஷ்மீரில் துருப்புகள்

காஷ்மீரில் துருப்புகளின் எண்ணிக்கையைக் குறைக்க இப்போதைக்குத் திட்டம் எதுவும் கிடையாது என்று பிரதமர் மன்மோகன் சிங் திட்டவட்டமாக அறிவித்துள்ளார்.

ஒருபுறம் ஹுரியத் மாநாட்டுக் கட்சியும் மறுபுறம் காஷ்மீர் மக்கள் ஜனநாயகக் கட்சியும் வீணாகக் கிளப்பியுள்ள சர்ச்சையைத் தொடர்ந்து பிரதமர் இவ்வாறு அறிவிக்க வேண்டியதாயிற்று. ஹுரியத் மாநாட்டுக் கட்சித் தலைவர் உமர் பரூக், காஷ்மீரில் துருப்புகளின் எண்ணிக்கையைக் குறைப்பதற்கு இந்தியா-பாகிஸ்தான் இடையே உடன்பாடு ஏற்பட்டுள்ளதாக ஓர் அறிக்கையில் கூறினார். காஷ்மீரின் மக்கள் ஜனநாயகக் கட்சியோ துருப்புகளின் எண்ணிக்கையைக் குறைக்க வேண்டுமென்று தீவிர இயக்கமே நடத்தி வருகிறது.

இக் கட்சியின் தலைவரான மெஹபூபா, சில நாள்களுக்கு முன்னர் தில்லியில் பல தலைவர்களைச் சந்தித்து துருப்புகளின் எண்ணிக்கையைக் குறைக்க வேண்டும் என்று வற்புறுத்தினார். தவிர, காஷ்மீரில் ராணுவப் படைகளுக்கு வழங்கப்பட்டுள்ள சிறப்பு அதிகாரங்களை விலக்கிக்கொள்ள வேண்டும் என்றும் அவர் கோரி வருகிறார். காஷ்மீரில் நிலைமை முன்னேறியுள்ளதால் துருப்புகளைக் குறைக்கலாம் என்பது அவரது வாதம். இப்படிக் குறைத்தால் தீவிரவாதிகளின் தாக்குதல் குறையும் என்றும் அவர் வாதிக்கிறார். இக் கட்சியின் மூத்த தலைவர் முப்தி முகமது சய்யீத், காஷ்மீரில் துருப்புகள் குறைக்கப்பட வேண்டும் என்பது தங்கள் கட்சியின் அடிப்படைக் கொள்கை என்று வர்ணித்துள்ளார்.

இதில் வேடிக்கை என்னவென்றால், காஷ்மீரில் மக்கள் ஜனநாயகக் கட்சியும் காங்கிரஸýம் சேர்ந்து கூட்டணி அமைத்து ஆட்சி நடத்துகிறது. இக் கட்சிகள் இடையே ஏற்பட்ட உடன்பாட்டின்படி 2002-ம் ஆண்டிலிருந்து முதல் மூன்று ஆண்டுக்காலம் மக்கள் ஜனநாயகக் கட்சியின் தலைவர் முப்தி முகமது சய்யீத் முதல்வராக இருந்தார்.

2005-லிருந்து காங்கிரஸின் குலாம்நபி ஆசாத் முதல்வராக இருந்து வருகிறார். காஷ்மீர் சட்டமன்றத்தின் ஆயுள்காலம் 6 ஆண்டுகளாகும். ஆகவே, அடுத்த ஆண்டு தேர்தல் நடந்தாக வேண்டும். இதை மனத்தில்கொண்டு மக்கள் ஜனநாயகக் கட்சியினர் துருப்புகள் எண்ணிக்கைக் குறைப்பை ஒரு தேர்தல் கோஷமாக ஆக்க, இப்போதிருந்தே குரல் எழுப்ப முற்பட்டுள்ளதாகக் கூறலாம்.

ஆளும் கூட்டணிக்குள்ளாக இருந்துகொண்டு அரசின் நிலைப்பாட்டுக்கு எதிராகச் செயல்படுவது சரியா என அக் கட்சியினர் சிந்தித்ததாகத் தோன்றவில்லை. ஏனெனில், துருப்புகளின் எண்ணிக்கையைக் குறைக்க காலம் இன்னும் கனியவில்லை என முதல்வர் குலாம் நபி ஆசாத் திட்டவட்டமாகக் கூறியுள்ளார்.

வருகிற நாள்களில் மக்கள் ஜனநாயகக் கட்சியினர் தங்களது சுருதியை மாற்றிக் கொள்வார்களா அல்லது மேலும் உரத்தகுரல் எழுப்புவார்களா என்பது தெரியவில்லை. அப்படி அவர்கள் தங்களது இயக்கத்தை முடுக்கிவிட்டால், அது கூட்டணி அரசின் ஸ்திரத்தன்மைக்கு ஊறு விளைவிக்கலாம்.

உள்ளபடி காஷ்மீரில் ராணுவப் படையினர் இரண்டுவிதப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். பாகிஸ்தானின் எல்லையிலிருந்து ஊடுருவல் நடைபெறாதபடி எல்லையைக் காப்பது முதல் பணி. பாகிஸ்தானில் பயிற்சி பெற்ற தீவிரவாதிகளால் காஷ்மீர் மக்களின் உயிருக்கும் உடைமைக்கும் ஆபத்து ஏற்படாதபடி பாதுகாப்பது இரண்டாவது பணியாகும்.

காஷ்மீரில் பயங்கரவாதம் அடியோடு அகன்று விட்டதாகக் கூற முடியாது. காஷ்மீர்ப் பிரச்சினை பற்றி இந்தியா- பாகிஸ்தான் இடையே பேச்சுவார்த்தை நடந்து வந்தாலும் காஷ்மீரில் இன்னும் முழு அமைதி ஏற்பட்டுவிடவில்லை. அப்படிப்பட்ட நிலைமை ஏற்பட்ட பிறகே படைகளின் எண்ணிக்கையைக் குறைப்பது பற்றிச் சிந்திக்க முடியும். பிரதமர் இதைத்தான் எடுத்துக் கூறியுள்ளார்.

Posted in Army, Azad Kashmir, Bomb Blasts, Book, Criticism, Critique, defence, Defense, External Affairs, Foreign Affairs, In the Line of Fire, India, Kashmir, Military, Mumbai, Musharraf, Pakistan, POK, Prime Minister, Relations, review, Tamil, Terrorism | Leave a Comment »

Empton Magan – Tamil Cinema Movie Review

Posted by Snapjudge மேல் செப்ரெம்பர் 19, 2006

எம் மகன்: விமர்சனம்

மனோஜ்கிருஷ்ணா

தந்தை -மகன் உறவு எப்படி இருக்க வேண்டும் என்பதையும், தந்தையின் கண்டிப்புக்குப் பின்னால் கரிசனம் இருக்கும் என்பதையும் பாசம், காதல், சென்டிமெண்ட், நகைச்சுவை கலந்து ஆபாசமில்லாமல் கூறியிருக்கும் நல்ல படம்.

நாசர் பலசரக்கு கடை வைத்திருப்பவர். அவருடைய மகன் கல்லூரியில் படிக்கும் பரத். கல்லூரி நேரம் போக மீதி நேரத்தில் கடையில் வேலை பார்க்கிறார். சின்ன சின்ன விஷயங்களைக் கூட பெரிதுபடுத்திப் பார்க்கும் தந்தையிடம் அடிக்கடி அடி வாங்குகிறார். இவ்வாறான சூழ்நிலையில் இருக்கும் பரத்துக்கு ஒரே ஆறுதல்… அவருடைய முறைப் பெண்ணின் நினைவுகளே. அவர் கோபிகா. ஆனால் நாசருக்கும், கோபிகாவின் தந்தைக்கும் நீண்ட கால குடும்பப் பகை. ஒரு சந்தர்ப்பத்தில் இரண்டு குடும்பங்களும் சந்திக்க நேரிட… அடுத்து என்ன நடக்கிறது என்பதே கதை.

படத்தில் நாசர் நடிக்கவில்லை. வாழ்ந்திருக்கிறார். அனைவரையும் ஈர்க்கும் அற்புதமான நடிப்பாற்றல்! நாசர் பேசும் இயல்பான வசனங்கள், பாடி லாங்வேஜ் மூலம் அவர் காட்டும் விதவிதமான முக பாவனைகள், அவருடைய ஒப்பனை போன்ற அம்சங்கள் அவரை சிறந்த கலைஞர் என அடையாளம் காட்டுகின்றன.

பரத் நன்றாக நடித்திருக்கிறார். தன்னுடைய வளர்ச்சிக்குக் காரணமாக தந்தையின் உழைப்பை உதாரணமாகக் காட்டும்போதும், கோபிகாவுடனான காதல் காட்சிகளிலும் நல்ல நடிப்பு. நடனக் காட்சிகளிலும், சண்டைக் காட்சிகளிலும் விறுவிறுப்பு காட்டியிருக்கிறார்.

பரத்தின் தாய் மாமனாக வரும் வடிவேலு படத்துக்கு பெரிய பலம். அவர் வரும் அனைத்துக் காட்சிகளிலும் கலகலப்பு. நகைச்சுவையிலும், குணச்சித்திரத்திலும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். யதார்த்தமான நடிப்பில் மிளிர்கிறார் சரண்யா. கோபக்கார கணவருக்குத் தெரியாமல் தாய் வீட்டுக்குச் சென்று தன்னுடைய சொந்த பந்தங்களோடு மனம் விட்டுப் பேசும் காட்சிகள், சாமியாட்ட காட்சிகள் போன்றவை சிறப்பு. கோபிகா கிராமத்துப் பெண்களுக்கேயுரிய சுபாவங்களைத் தன்னுடைய நளினமான நடிப்பால் வெளிப்படுத்தியிருக்கிறார். பரத்தின் கல்லூரித் தோழியாக வரும் கஜாலாவின் நடிப்பில் நல்ல முதிர்ச்சி. தந்தையிடம் தோழமை உணர்வோடு அவர் பேசும் காட்சிகள் சிறப்பு. கோபிகாவின் தந்தையாக வரும் சண்முகராஜன், படத்தில் ஆங்காங்கே தலைகாட்டும் சின்னத் திரை கலைஞர்கள் ஆகிய அனைவரும் யதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்கள்.

பாஸ்கர் சக்தியின் வசனங்கள் ரசிகர்களைப் படத்தோடு ஒன்றச் செய்கின்றன. வித்யாசாகரின் இசையில் “கோலிகுண்டு’, “வர்றாரு’ பாடல்கள் ரசிகர்களைக் கவரும். பின்னணி இசையும் சிறப்பு.

படத்தை சலிப்பூட்டாமல் விறுவிறுப்போடு இயக்கியிருக்கிறார் “மெட்டி ஒலி’ திருமுருகன். ஒவ்வொரு கதாபாத்திரத்தையும் மிக உன்னிப்பாகத் தேர்ந்தெடுத்து அனைவரையும் நன்கு பயன்படுத்தியிருக்கிறார். சாவுக்குக் காத்திருக்கும் “என்னத்த’ கன்னையா சம்பந்தப்பட்ட காட்சிகளில் மனம்விட்டு சிரிக்கலாம். பல காட்சிகளில் “திரைக்கதை வித்தகர்’ கே.பாக்யராஜின் சாயல் தெரிகிறது. இடைவேளைக்குப் பிறகு சிறிய தொய்வு. சில பாடல்கள் படத்தின் வேகத்தைக் குறைப்பதைத் தவிர்த்திருக்கலாம்.

“எம் மகன்’ பெரிய திரையில் வலம் வருவோம் என்ற கனவோடு உலா வந்துகொண்டிருக்கும் சின்னத் திரை கலைஞர்களுக்கு “நம்மாலும் முடியும்’ என்ற நம்பிக்கையை விதைத்திருக்கிறார் திருமுருகன்.

Posted in Bharath, Dinamani, Em Magan, Empton Magan, Ghajala, Gopika, Kollywood, Metti Oli, Movie, Nasser, Picture, review, Tamil, Tamil Cinema, Thirumurugan, Vadivelu | Leave a Comment »

Jeyamohan’s Kaadu – Review by Re Karthigesu in Marathadi

Posted by Snapjudge மேல் செப்ரெம்பர் 14, 2006

காடு

தமிழ்ப் புத்திலக்கிய வரலாற்றில் ஜெயமோகனின் பெயர் நின்று நிலைக்கும் என்பதை இந்தக் கட்டுரையின் ஆதியிலேயே நான் சொல்லிவிட விரும்புகிறேன். “காடு” என்ற அவரின் நாவலுக்கு முன்னுரை எழுதியிருக்கும் வேதசகாய குமார் அவரை “தமிழில் ராட்சசக் குழந்தை ஒன்று பிறந்திருக்கிறது” என வருணித்திருக்கிறார். இது ஒப்புக்கொள்ளக் கூடியதே.

இதன் முதல் காரணம் 2003இல் மட்டுமே தீவிர இலக்கியத்தில் தீவிரமாக இருக்கும் இந்த எழுத்தாளாரின் முக்கிய நாவல்கள் இரண்டு வெளியாகியுள்ளன. இரண்டும் மிகுந்த உழைப்பைக் கொண்டு, தங்கள் கருப்பொருளுக்கேற்ப விவரணைகளை அள்ளிக் கொடுக்கின்றன. அதே ஆண்டில் 5 திறனாய்வு நூல்களையும் பதிப்பித்துள்ளார். இளைஞரான இவர்பைதுவரை ரப்பர் என்னும் நாவல் தொடங்கி, விஷ்ணுபுரம், பின் தொடரும் நிழலின் குரல்கள், கன்னியாகுமரி, காடு, ஏழாம் உலகம் ஆகிய நாவல்களை எழுதியிருப்பதுடன் கொற்றவை என்ற காப்பிய வடிவிலான நாவல் ஒன்றையும் எழுதியுள்ளார். இவை அனைத்துமே புதுத்தமிழ் இலக்கிய இதழ்களாலும் விமர்சகர்களாலும் அணுக்கமாக விமர்சிக்கப்பட்ட நாவல்கள்.

இப்படி எழுதிக் குவிப்பதினாலேயே இவர் சிறந்த எழுத்தாளர் என்று அர்த்தமாகி விடாது. மாத நாவல்கள் எழுதுவோரும், கால வாரி இதழ்களுக்கு எழுதுவோரும் இவரை விட அதிகமாக எழுதிக் குவிக்கிறார்கள். ஆனால் ஜெயமோகனின் எழுத்துக்கள் வணிக லாப நோக்கம் சற்றும் இல்லாத, வாசகனைப் பற்றி அநேகமாக கவலைப் படாத தூய இலக்கிய வடிவங்கள். அதோடு புதிய, தரமான இலக்கியம் என்பது பற்றிய பிரக்ஞை அவருக்கு எப்போதும் இருந்து கொண்டே இருக்கிறது. எழுத்தாளன் என்பதில் பெருமிதமும் விமர்சனங்களைப் பற்றிக் கவலை கொள்ளாத  கர்வமும் உண்டு. இதனாலேயே இவருடைய விமர்சனங்களிலும் மூர்க்கத்தனம் தெரிந்து எழுத்தாளர்களைப் பெரிதும் எரிச்சல் படுத்தியிருக்கிறது. அண்மையில் மலேசியாவில் இவரைக் கண்டவர்கள் இதனை நேரில் அறிந்திருப்பார்கள்.

காடு 474 பக்கங்கள் கொண்ட பெரும் நாவல். காடுகள் பற்றி சில நாவல்கள் தமிழில் உண்டு. காட்டை அழிப்பதைப்பற்றிய சா. கந்தசாமியின் சாயாவனம் அதில் முக்கியமானது. அதில் கத்தநாயகன் காட்டை வெல்கிறான். ஆனால் ஜெயமோகனின் இந்த நாவலில் காடே கதாநாயக அந்தஸ்து பெற்று அனைத்தையும் வெல்கிறது.

நாவலின் எல்லாப் பக்கங்களிலும் நாம் காட்டைச் சந்திக்கிறோம். அதன் மரங்கள், பூச்சிகள், விலங்குகள், மழை, நீரோடைகள், காய்ந்த சருகுகள், மலைகள், பள்ளங்கள், காடுவாழ் மக்கள், அவர்களின் தெய்வங்கள் என அனைத்தும் பார்க்கிறோம். மொத்ததில் காடு அதன் மர்மம், கொடுமை, ஆக்கினை, வீரியம் ஆகிய அனைத்துடனும் சித்தரிக்கப் படுகிறது.

இந்தக் காடு தமிழ்நாட்டு மலையாள எல்லையில் உள்ளது. அதன் மக்கள் அதிக மலையாளம் கலந்த ஒரு மொழி பேசுகிறார்கள். அதில் ஒரு 30 முதல் 40 விழுக்காட்டுச் சொற்கள் எனக்குப் புரியவில்லை. இருந்தும் வாசகப் பயணத்தை அது தடை செய்யவில்லை. கிரிதரன் என்ற ஒரு நாயகன் இருக்கிறான். காட்டில் சாலை அமைக்கும் காண்டிராக்டரிடம் வேலை செய்கிறான். காட்டிலேயே முகாம் அடித்து வாழ்கிறான். அந்த மக்களோடு பழகி ஒரு மலைப் பெண்ணைக் காதலிக்கவும் செய்கிறான்.

ஆனால் ஜெயமோகன் தனது எந்த நாவலிலும் தனது தலைமைப் பாத்திரங்கள் மேல் கருணை உள்ளவர் அல்ல. ஆகவே அந்தக் காதல் ஒன்றுமில்லாமல் போவது மட்டுமன்றி கிரியின் இறுதி நாளில் அவன் பெண்டாட்டியை அடித்து, பிள்ளையால் ஒதுக்கப்பட்டு, சுருட்டுப் பிடித்துக்கொண்டு தனிமையில் வாழும் இயலாமையில்தான் முடிக்கிறார்.

கதையின் செறிவான நிகழ்வுகள் வாசகன் முன்னறிந்து சொல்ல முடியாத திசைகளுக்குள் செல்கின்றன. எப்படி நமது அன்றாட வாழ்விலும் அடுத்து என்ன நடக்கும் என்று சொல்ல முடியாமல் இருக்கிறதோ, அப்படியே இவர் கற்பித்துக் கொண்ட கதயையும் செலுத்துகிறார். இதனால் கதையில் எப்பொழுதும் சோர்வில்லாத திருப்பங்கள் தோன்றிக்கொண்டே உள்ளன.

ஆனாலும் இந்த நாவலில் அவனுடைய இந்த வாழ்வு என்பது முக்கியமானது போல் நமக்குத் தோன்றவில்லை. நாவல் கிரிதரன் பற்றியதல்ல. அவனைச் சுற்றியும் அவன் மனசுக்குள்ளும் காடு நடத்தும் விளையாட்டுக்களே இங்கு முக்கியத்துவம் பெறுகின்றன.

காடு பற்றிய இவ்வளவு விவரணைகளைத் தான் தர முடிந்ததற்கு காட்டுத் துறை வல்லுநர் தியோடோர் பாஸ்கரன் தந்த விளக்கங்கள் உதவியதாக அவர் கூறியுள்ளார். இருப்பினும் கொஞ்சம் சொந்த அனுபவமில்லாமல் இவ்வளவு எழுதி வாசகனையும் அந்தக் காட்டின் அனுபவங்களில் தோய்த்தெடுப்பது முடியாது.

இந்தக் கதையில் ஒரு சிறப்பு அம்சமாக ஒரு காட்டுத் துறை மேலாளரைப் படைத்து அவரை சங்க இலக்கியங்களில் விருப்பமுள்ளவராக்கி சங்க இலக்கிய விருந்தையும் படைத்திருக்கிறார். இடையிடையே கூடுதல் சுவை கூட்டுவனவாகவை அமைகின்றன.

இந்த நாவலைக் கையிலெடுக்கும் வாசகர்கள் இன்னும் இரு சுவைகளுக்கும் தயாராக இருக்க வேண்டும். அதில் ஒன்று காமம். மற்றொன்று நகைச்சுவை. இரண்டும் வலிந்து தரப்படாமல் கதையோடு இணைந்து ஒத்திசைவாகவே வருகின்றன.

காடு தமிழுக்குத் தரப்பட்ட அரிய கொடைதான். புத்திலக்கியம் படைக்க தமிழ் மொழியை எப்படி மிகுந்த நெகிழ்ச்சியோடு கையாளலாம் என்பதற்குச் சிறந்த எடுத்துக்காட்டு.

Posted in Ilakkiyam, Jeyamohan, Kaadu, Kadu, Marathadi, Maraththadi, Novel, Re Karthigesu, ReKa, review, Tamil, Tamil Literature, Yahoo Group | 2 Comments »

Venkat Saminathan reviews PK Sivakumar’s Atlanticukku Appaal

Posted by Snapjudge மேல் ஓகஸ்ட் 2, 2006

பி.கே.சிவகுமாரின் அட்லாண்டிக்குக்கு அப்பால்

வெங்கட் சாமிநாதன்

சில நல்ல விஷயங்களும் தமிழில் நடந்து விடுகின்றன. தமிழ்நாட்டுத் தமிழரால் அல்ல. தமிழ்ச் சூழல் அப்படியெல்லாம் ஒன்றும் அவர்களை உருப்பட விட்டுவிடாது. தமிழ்நாட்டுச் சூழýன் சங்கிýகளை அறுத்துக்கொண்டு வெளிநாட்டில் வாழும் தமிழர்களால். அல்லது புலம் பெயர்ந்த ஈழத் தமிழர்களால். மலேசியாவிýருந்தோ, கனடாவிýருந்தோ அல்லது அமெரிக்காவிýருந்தோ. இணையம் மூலம் தமிழ் கூறும் நல்லுலகை ஒரு குடைக்கீழ் ஒன்றுபடுத்தியிருப்பது சமீபத்தில் நடந்துள்ள நல்ல விஷயங்களில் ஒன்று. இணையம் என்ற ஒன்று இல்லையெனில், அதிலேயே தன் குரலைப் பதிவு செய்து வரும் பி.கே சிவகுமார் என்ன செய்திருப்பார்? அவர் குரலைத் தமிழ்நாட்டு ஊடகங்கள் மூலம் கேட்டிருக்க முடியுமா? இங்கிருக்கும் குழுக்கள் ஒன்றில் அவர் தன்னை இணைத்துக்கொண்டிருப்பாரா, எந்தக் குழுவும் அவரை ஏற்றிருக்குமா? சந்தேகம்தான். அநேகமாக அவர் தம் அலுவலகத்திற்கும் வீட்டிற்குமாகப் பந்தாடப்பட்டிருப்பார். தன் வீட்டு அலமாரிப் புத்தகங்களுடனேயே அவர் உலகம் வேýயிடப்பட்டிருக்கும்.

இணையத்தில் பதிவான அவரது கட்டுரைகள் அட்லாண்டிக்குக்கு அப்பால் என்று தொகுக்கப்பட்டுள்ளது. புத்தகமாக வந்த பிறகுதான் பி.கே. சிவகுமாருடன் எனக்குப் பரிச்சயமாகிறது. இணையத்தில் படித்ததில்லை. என்னுடைய சிரமங்களும் படிந்துவிட்ட பழக்கங்களும் எனக்கு. பழங்காலத்து மன அமைப்பு. இப்போது இத்தொகுப்பு பரிச்சயப்படுத்தும் சிவகுமார் என்னையும் அவரையும் பிரிக்கும் ஒரு தலைமுறைக்கும் மேலான இடைவெளியையும் மீறி ஒரு இதமான சிநேகபூர்வமான மனிதராக அருகில் உணர வைக்கிறது. தமிழ்ச் சூழல் அவரைக் கெடுத்து விடவில்லை. அமெரிக்கா அவரை, ஆளுமையை தமிழரல்லாது வேறெதாவதாகவும் ஆக்கிவிடவில்லை.

தொகுப்பில் உள்ள சிறிதும் பெரிதுமான 45 கட்டுரைகள், இலக்கியம், அரசியல், அமெரிக்க வாழ்க்கை, கவிதை, விவாதங்கள், தமக்குப் பிடித்த கவிஞர்கள் என்று பல விஷயங்கள் பற்றிப் பேசுகின்றன. இப்படி எது பற்றிப் பேசினாலும், சிவகுமாரை மிக அருகில் அடக்கம் என்ற பாவனையில்லா அடக்கத்தோடும் தோழமையோடும் சம்பாஷிக்கும் ஒருவராக உணரலாம்.

அவரது தாத்தா நீதிக் கட்சிக்காரர். திராவிட இயக்க அபிமானி. ஆனந்த போதினி பஞ்சாங்கம் வருடா வருடம் மறக்காமல் வாங்குபவர். அவரிடம் வை.மு. கோபாலகிருஷ்ணமாச்சாரியார் உரை எழுதிய கம்பராமாயணம் முழுதும் அவர் வாசித்த குறிப்புகளுடன் இருந்தது. தந்தையார் தீவிர காங்கிரஸ்காரர். அமெரிக்காவிýருக்கும் பேரன் கேட்க, இரண்டே பாகங்கள்தான் அப்பாவால் அனுப்பப்படுகிறது. “எல்லாவற்றையும் அனுப்பிவிட்டால் தாத்தா ஞாபகத்தில் இங்கு என்ன இருக்கும்?” என்று சொல்கிறார் அப்பா. பேரன் அமெரிக்காவில் இருந்துகொண்டு சிவ வாக்கியர் பாடல்களிலும் கம்பனிலும் ஆழ்கிறார். சிவ வாக்கியரின் நாஸ்திகத்திற்கும் பகுத்தறிவுப் பகலவர்களின் நாஸ்திகத்திற்கும் இடையே உள்ள குணவேற்றுமை சிவகுமாருக்குத் தெரிகிறது. திராவிடக் கட்சிகளின் பொய்மைகளை அமெரிக்காவிýருக்கும் பேரன் உணரமுடிகிறது. தனித் தமிழின் போýத்தனமும், சங்கராச்சாரியாரின் கைது பற்றிக் கருணாநிதியின் சாமர்த்தியமான வார்த்தை ஜாலங்களின் சந்தர்ப்பவாத அரசியலும் தெரிகிறது. தமிழக இடதுசாரிகள் வெளிப்படுத்தும் அரசியýன் இரட்டை நாடகங்கள், ஜெயலýதாவை எதிர்க்கும் தேர்தல் பிரசாரத்தில் வீரப்பனின் கருணாநிதி ஆதரவுப் பேச்சைப் பயன்படுத்திய சன் டிவி, இப்படி இங்கு நடக்கும் எல்லா மாய்மாலங்களையும் மாய்மாலங்களாகவே அவரால் பார்க்க முடிகிறது.

உமாமகேஸ்வரியின் கவிதை அவரை ஈர்த்துள்ளது. தன் ரசனையை அவர் மிக விரிவாகவே எழுதியிருக்கிறார். படிமமும் உருவகமும் அனுபவத்திýருந்து பிறப்பது எங்கு, யோசித்து அடுக்கி ஒட்டவைத்திருப்பது எங்கு எனச் சிவகுமாருக்குத் தெரிகிறது. தமிழ்நாட்டுக் குழுச் சார்புகள், அரசியல் சார்புகள் அவரது வாசிப்பைப் பாதிக்கவில்லை. அவரது ரசனை அவரதே. இது பெரிய விஷயம்.

ஜெயகாந்தனிடம் சிவகுமார் கொண்டுள்ள உணர்வை பக்தி என்று தான் சொல்ல வேண்டும். அரவிந்தன் எழுதிய விமர்சனம் சிவகுமாரை நிறைய கோபப்படுத்தியிருக்கிறது. அரவிந்தன் ஜெயகாந்தனைத் தேர்ந்தெடுத்ததும், எழுதியதும், தன்னிச்சையாக அல்லவே, தூண்டப்பட்டதல்லவா, என்ற சந்தேகம் சிவகுமாருக்கு. ஜெயகாந்தனிடமும் இரைச்சலும் உண்டு, நிசப்தங்களும் உண்டு என்பதும், பல கால கட்டங்களில், பல முறை ஜெயகாந்தன் அசாத்திய துணிவையும், தன் கருத்துச் சுதந்திரத்தையும் உரத்த குரýல் வெளிக்காட்டியிருக்கிறார், என்பதும் உண்மை. அதே சமயம் கருத்துகளையே அனுபவங்களாகவும், பாத்திரங்களாகவும், அவர் எழுத்தில் காண்பதும் உண்மை. சிவகுமாருக்கு, ஜெயகாந்தன் ஒரு நிர்மல, நிர்குண பிரும்மம். மிகுந்த சிநேக பாவத்தோடு நம் அருகே குரல் எழுப்பாது உரையாடிக்கொண்டிருக்கும் சிவகுமார், மூக்கு சிவந்து உதடு துடிப்பது, ஜெயகாந்தன், நேசகுமார் இருவர் பற்றித்தான்.

நேசகுமார் விஷயத்தில், நேசகுமாரின் கிண்டலுக்கும் கோபத்துக்கும் தூண்டுதலாக இருந்த காரணிகளைச் சிவகுமார் மறந்து விடுகிறார். அந்தக் காரணிகளில் சில நேற்று முளைத்தவை எனவும் உண்டு. நூற்றாண்டுகள் பல நீளும் வரலாறும் உண்டு. “உண்மை 7ஆம் நூற்றாண்டு இறைவாக்கிலேயே சொல்லப்பட்டு விட்டது. அதன் பிறகு முற்றுப் புள்ளிதான்” என்று ஒரு குரல், மொராக்கோவிýருந்து ஃபிýப்பைன்ஸின் தெற்குப் பகுதி வரை கேட்கப்பட்டால், என்ன செய்வது? இதை ஒப்புக்கொள்ளாதவர் எல்லாம் காஃபிர், அதற்கு அடுத்த நடவடிக்கை ஜிஹாத் தான் என்றால் என்ன செய்வது? இந்த காஃபிர்களை ஒழித்துக் கட்டினால், ஜன்னத்தில் மதுக்குடத்துடன் தேவகன்னிகைகள் சூழ்ந்துவிடுவார்கள் என்று நம்பினால் என்ன செய்வது? ஸøன்னிகளுக்கு ஷியாக்களும் காஃபிர், அஹ்மதியாக்களும் காஃபிர், முஜாஹித்துகளும் காஃபிர், என்றால் என்ன செய்வது? இவர்கள் எல்லோருக்கும் ஸøஃபிகள் காஃபிர் என்றால் என்ன செய்வது? அப்படி இருக்க செக்யூலரிசம் போதிக்கப்படும் ஒரு ஹிந்துவாகத் தற்செயலாகப் பிறந்துவிட்டவன் என்ன செய்வான்? ஒரு முஸ்லீம் நண்பரைக் கண்டால், ‘ஸôகேப்’, ‘”ஜனாபேவாý, ஸலாம் ஆலே கும்” என்று வாழ்த்த நான் தயார்தான். விடிகாலையில்; ஒரு நாள் எம்.எஸ் சுப்புலட்சுமியின் விஷ்ணு சகஸ்ரநாமம் கேட்டால், மறு நாள் காலை அபீதா பர்வீனின் ஸøஃபி பாட்டுகள் கேட்க நான் தயார். கேட்கிறேன். விரும்பி, ரசித்துக் கேட்கிறேன். ஆனால் “அது பத்தாது, உன் பெயரை அப்துல் ஸமத் என்று மாற்றிக் கொள். கல்மா சொல்லு “லா இல்லாஹ் இல்ýல்லாஹ், முகம்மது ரஸ÷ல் அல்லாஹ்”, சுன்னத் பண்ணிக்கோ” என்று மிரட்டினால் என்ன செய்வது? பாரதி “அல்லா அல்லா” என்று அரற்றினான். பாடினான். அதெல்லாம் சரி, ஆனால், “எங்கள் குழந்தைகள் பள்ளியில் வந்தே மாதரம் பாடாது. அது எங்கள் மதத்திற்கு விரோதம்” என்று சொல்லும் மதத் தலைவரை, அரசியல் தலைவரை என்னென்பது? செக்யூலரிஸம் ஒரு புறம் அடைக்கப்பட்ட பாதையாகாதே (ஸ்ரீன்ப்þக்ங்þள்ஹஸ்ரீ).

ஆனால் சிவகுமார் கோபம் கொள்ளும் இந்த இடங்களில் எல்லாம், வகுப்பு வாத்தியாரிடம் “அவன் மட்டும் என்னைச் சீண்டலாமா சார்?” என்று மூக்கு விடைக்க புகார் செய்யும் இரண்டாம் வகுப்புப் பையனாகத்தான் தோன்றுகிறார். மறுபடியும் ஒரு ஆனால்: “தமிழில் விமர்சனத் துறை வளரவே இல்லை என்று சொல்லலாம்” என்று ஒரு கட்டுரையை ஆரம்பிக்கிறார் சிவகுமார். அப்படி ஒரு பார்வை மிக உயர்ந்த தளத்தில் இருந்து பார்த்தல் சாத்தியமே. அந்த உயர்ந்த தளம் நமக்கு எல்லாம் ஒரு லட்சியமாக இருக்கவேண்டும் என்றும் நாம் விரும்புவேன். ஆனால், அந்த சிகரத்தின் உச்சியிýருந்து பார்த்தால், கைலாசபதி, சிவத்தம்பி, தொ.மு.சி.ரகுநாதன் போன்றவர்கள் எல்லாம் தூரதிருஷ்டிக் கண்ணாடி கொண்டு பார்த்தாலும், ஊறும் எறும்புகளாகவாவது தென்படுவார்களோ?

அப்படியிருக்க, சிவகுமார் சொல்வது போல “அவர்கள் விமர்சனத்தைக் கலையாக வளர்க்க முயன்றவர்களாகத்” தோன்றுவார்களோ? ரகுநாதன் கட்சி சேவகம் செய்து கெட்டவர் என்றால், கைலாசபதி கலை, இலக்கிய உணர்வு கிஞ்சித்தும் இல்லாத, தானும் புரிந்துகொள்ளாத கொள்கை வாய்ப்பாடுகள் மட்டுமே படித்த பணக்கார வீட்டில் பிறந்த வெற்றுப் பண்டிதர். சிவத்தம்பியோ, கைலாசபதி இருந்த வரை அவர் அடி ஒற்றி ஒத்து ஊதிய, இப்போது அதை நியாயப்படுத்தும் பண்டிதர். கலை, இலக்கியத்துக்கும் இவர்களுக்கும் என்ன உறவு? கம்யூனிஸ்டுகளின் இரட்டை நிலை பற்றியும், திராவிட இயக்கங்களின் அடுக்குத் தொடர் வார்த்தை ஜாலங்கள் பற்றியும் நியூஜெர்ஸியிýருந்து உணரக்கூடிய சிவகுமாருக்கு இவர்களின் போýத்தனம் உணரமுடியவில்லையா?

இம்மாதிரிதான் வல்ýக்கண்ணனின் ‘உற்சாகப்படுத்தும்’ விமரிசனம் பற்றியும். சர்வ ஜீவ தயை பாவிப்பவர் வல்ýக்கண்ணன். ஆண்டவன் படைப்பில், ஈ, கொசு, கரப்பான், பல்ý, கள்ளி, கத்தாழை எல்லாமே ஜீவன்கள்தான்; அவை ரக்ஷிக்கப்படவேண்டும் என்று நினைப்பவர் அவர். அவரது பாராட்டுக் கார்டு இல்லாமலேயே அவை உயிர் வாழும் தான். ஆனால் வைக்கோலுக்கும் சேமியாவுக்கும் வித்தியாசம் தெரியாத ரட்சகரை என்ன என்று சொல்வது? என் நண்பர் சொன்னார்: “என் கவிதைத் தொகுப்பை வல்ýக்கண்ணனுக்கும் கொடுக்கலை, தி.க.சி.க்கும் கொடுக்கலை. எதுக்குங்க? ரெண்டு கார்டு உடனே வந்துடும் பாராட்டி”. சிவகுமார், ஆனந்த போதினி பஞ்சாங்கம் பற்றிக் குறிப்பிட்டார். ஆனந்த போதினி, பாம்புப் படம் போட்ட பஞ்சாங்கங்கள் எல்லாம் ஸ்ரீர்ம்ல்ப்ண்ம்ங்ய்ற்ஹழ்ஹ் ஸ்ரீர்ல்ண்ங்ள் அனுப்புவதில்லை. இல்லையெனில் அவற்றிற்கும் வல்ýக்கண்ணன் தன் உற்காகப்படுத்தும் கார்டுகளை வருடா வருடம் அனுப்பியிருப்பார்.

சிவகுமார் தன் அமெரிக்க வாழ்க்கைக் காட்சிகளும் சில தந்துள்ளார். தான் எப்படி கால்பந்து கோச் ஆனார், தன் அலுவலகக் காண்டீன் செஃப், ஜமாய்க்காவில் வந்தவர் எல்லோருடனும் காட்டும் அக்கறையும் அன்னியோன்னியமும், தன் குழந்தையின் பிடிவாதத்தில் அவர் புரிந்துகொண்டது எல்லாவற்றையும் படிக்கும் போது, தமிழ்ச் சமூகத்தையும் அரசியலையும் இலக்கியத்தையும் பற்றிப் பேசும் அதே சிவகுமார் என்றுதான் சொல்ல வேண்டும்.

எல்லாம் சொன்னபிறகு, நான் முதýல் சொன்னேனே, ஒரு உண்மையும், சிநேக பாவமும் கொண்ட நண்பருடன் உரையாடுவது போன்ற மன நிறைவு, சிவகுமாரின் புத்தகத்தில் கிடைக்கிறது என்று. அதில் மாற்றமில்லை. இடையிடையே நாம் சொல்ல மாட்டோமா, “இல்லீங்க நீங்க தெரியாம பேசறீங்க. வெளியூரிலேர்ந்துகிட்டு உள்ளூர் நிலவரம் தெரியாம இருக்கீங்க” என்று? அப்படித்தான் அவர் எழுத்து சில இடங்களில் இருக்கிறது.

தன்னைத் தலைக்குப் பின்னால் ஒரு சுழலும் ஒளிவட்டம் கொண்டவரான ஒரு நினைப்பு, சிவகுமாருக்கு இல்லை. தன்னையே கேý செய்துகொள்ளும் இயல்பினர். தயக்கமில்லாமல், திட்டமிடாமல், பலாபலன் கருதாது மனத்தில் நினைப்பதைச் சொல்ýவிடுகிறார். இந்தக் குணம் எதுவும் அவரைத் தமிழ்ப் புண்ணிய பூமியில் வாழும் தமிழ் எழுத்தாளராக அடையாளம் காட்ட மறுக்கிறது.

நான் நினைத்துப் பார்க்கிறேன். இணையம் என்று ஒன்று இல்லாவிட்டால், சிவகுமாரை நம் ஊடகங்கள் அறிய விட்டிருக்குமா?

þþþþþþþþþþþþþþþþþþþþþþþþþþþþþþþþþþþþþþþþþþþþþþþþþþþþþþþþþþþþþþþþþþþþþþþþþþþþþþþþþþþþþþþþþþþþþþþþþþþþþþþþþþþþþþþþþþþþþþþþþþþþþþþþþþþþþþþþþþþþþþþþþþþþþþþ

அட்லாண்டிக்குக்கு அப்பால்: (பி.கே.சிவகுமார்) கட்டுரைத் தொகுப்பு: எனி இண்டியன் பதிப்பகம், 102, 57, ட.ங.எ. காம்ப்ளெக்ஸ், தெற்கு உஸ்மான் சாலை, தி.நகர், சென்னைþ17 விலை ரூ 120.

Posted in Atlanticukku Appaal, Book, Books, Literature, PK Sivakumar, review, Tamil, Venkat Saminathan | Leave a Comment »