“மிதப்பை மேல் கண்’
சீத்தலைச் சாத்தன்
தூண்டில்காரனுக்கு மிதப்பை மேல் கண் என்று சொல்வார்கள். ஏன்? மீன் தூண்டிலில் சிக்கி விட்டால் கனம் இழுக்கும். அந்த மீன் தப்பி ஓடுவதற்குள், கண் சிமிட்டும் நேரத்திற்குள் இலாவகமாக இழுத்தால்தான் அவருக்கு தொழில் வெற்றி!
எந்த ஒரு செயலிலும், தொழிலிலும், வடிவமைப்பிலும், வாழ்க்கைப் போராட்டங்களிலும், யார் கண்ணும் கருத்துமாக இருக்கிறார்களோ அவர்கள் தான் வெற்றி பெறுகிறார்கள் என்பது கண்கூடு.
உழைப்பு, திறமை, முயற்சி, ஏன் அதிர்ஷ்டம் இத்தனையுடனும் கண்காணிப்புத் திறனும் வெற்றிக்கு மிகவும் முக்கியம்!
அண்மையில் தெய்வ தரிசனத்துக்காக சென்னையில் இருந்து ஆந்திர அரசின் பேருந்தில் காளகஸ்திக்கு குடும்பத்துடன் சென்றேன். திரும்பி வரும்பொழுது காளகஸ்தி பேருந்து நிலையத்தில் இருந்தவர் சொன்னார். “”இப்பொழுது சென்னைக்குத் தமிழக அரசின் பேருந்துதான் உள்ளது. கட்டணம் கூடுதல். கால்மணி நேரம் கடந்தால் ஆந்திரப் பேருந்து புறப்படும். கட்டணம் குறைவு. ஒரே பாதைதான். பத்து நிமிட இடைவெளியில் சென்னை சேரலாம். நாங்கள் பத்துப் பேர். 40 ரூபாய் மிஞ்சும்” என்றார். உண்மையா என்று பார்க்க தமிழ்நாடு அரசுப் பேருந்தில் ஏறினோம்.
கட்டணம் கூடுதல்தான். சென்னை கோயம்பேடை நான் அடைந்த சில மணித்துளிகளில், அந்த நண்பர் ஆந்திரப் பேருந்தில் குடும்பத்துடன் வந்து இறங்கினார்! சிறு துளியையும் மிதவைக் கண்ணால் கவனிக்கும் அவருடைய கணக்கைப் பாராட்டினேன். அப்படியானால், ஏன் இந்தக் கட்டண ஏற்றத்தாழ்வு? சம்பந்தப்பட்டவர்கள் சீர் செய்ய வேண்டும். காரணம் என்னவாக இருப்பினும் பொதுமக்கள் பாதிக்கப்படக் கூடாது.
திருச்சி நகரத்தில் பெரும்பாலும் தனியார் நகர்ப் பேருந்துகள்தான். சரியான நிறுத்தத்தில் ஓட்டுநர் நிறுத்துகிறார். ஏறும் பயணிகளை உள்ளிருக்கும் பணியாளர் கூவி அழைக்கிறார். நடத்துநர் இன்ன இடம் என்று சொல்லி விடுவது புதுப் பயணிகளுக்கு உதவுகிறது. அதுமட்டுமல்ல. ஒரு பேருந்துக்கு இரு நடத்துநர்கள். கூட்டம் நெரிசல் இருந்தும் பயணக் களைப்பு இல்லை. நம்மிடமே வந்து பயணச் சீட்டு தருகிறார்கள். சென்னையில் பழகிய எனக்கு இது புதுமையாக இருந்தது. விசாரித்த போது தெரிந்தது. வசூலுக்குத் தனிப்படி என்று! சேவை செய்தால் வருவாய் கூடுகிறது!
அதேநேரத்தில் சென்னை ஷேர் ஆட்டோக்களில் பயணித்ததும், அந்த ஆட்டோ ஓட்டுநர்களின் மிதப்பை மேல் கண் பாங்கும் என்னை ஈர்த்தது! பயணிகள் ஏறுகிறார்களோ இல்லையோ, ஒவ்வொரு நிறுத்தத்திலும், யார் பயணம் செய்யக் கூடும் என்று கணித்து கூப்பிடும் திறம் பாராட்டுக்கு உரியது!
ஒரு பதிப்பகத்தார். வளரும் எழுத்தாளர்களின் உள்ளத்தைப் புரிந்து, அவர்களை அவர்களின் எழுத்துகளை, தங்கள் பதிப்பகம் மூலம் “கூட்டு முயற்சியாக’ வெளியிட அழைக்கிறது. எழுத மட்டுமே தெரிந்த எழுத்தாளன், மற்ற நுணுக்கங்கள் தெரியாத நிலையில் அந்தப் பதிப்பகத்தின் மூலம் நூல் வெளியிடுகிறார்! பதிப்பகத்திற்கு வருவாய்! எழுத்தாளனுக்கும் புகழ்! பதிப்பகத்தின் திறன் பாராட்டுக்கு உரியது!
என்னைப் போலவே பங்குச் சந்தை தொழில் புரிபவர், மிகப் பெரிய நிறுவனம். என்னைப் போல் உள்ளவர்கள் இரண்டு டெர்மினல்கள் வைத்திருப்பார்கள். அவரிடம் பத்து டெர்மினல்கள். பணியாளரும் அதிகம். எப்படி நிர்வகிக்கிறார்? பேசிய போது அவர் சொன்ன தொழில் இரகசியம் ஆச்சரியப்பட வைத்தது. மிதப்பை மேல் கண்ணுக்கு இவர்தான் மொத்த உதாரணம். பட்டம் படித்த இளைஞர்கள், யுவதியர். மாதச் சம்பளம் மிகச் சொற்பம்!
அதேசமயம் வாடிக்கையாளரை விட்டுவிடாமலும் புதிய வாடிக்கையாளரைத் தொலைபேசியில் தொடர்பு கொண்டு ஊகச் செய்திகள் அடிக்கடி தெரிவித்தும், அந்தந்த டெர்மினல்களில் அன்றைய வியாபாரத்தைக் கூட்டிக் கொண்டே இருப்பார்கள். காரணம், வியாபாரத்திற்கு ஏற்ப அவர்களுக்கு ஊக்கத்தொகை மிக மிகக் கணிசமான அளவுக்குக் கிடைக்கிறது.
இதனால் கனிவான, பணிவான, உடனுக்குடன் திறமையான சேவைகளைச் செய்து பணம் பார்க்கிறார்கள். நிறுவனத்துக்கும் வருவாய் கூடுகிறது!
மிதப்பை மேல் கண் என்பது சாதாரண சொற்றொடர் அல்ல. உயரத் துடிக்கும் அத்தனை பேருக்கும் வெற்றி பெறச் செய்யும் தாரக மந்திரம் இது!