கள் குடித்தால் 10 கிலோ அரிசி இலவசம்: கள்ளுக்கடையில் நூதன அறிவிப்பு
திருவனந்தபுரம்,செப். 27-
கேரள மாநிலம் முகமா பகுதியில் உள்ள துரத்தன் சந்திப்பு பகுதியில் கள்ளுக்கடை ஒன்று உள்ளது. இந்த கள்ளுக்கடையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு விற்பனை அமோகமாக நடந்து வந்தது.
ஆனால் சமீபகாலமாக அந்த பகுதியில் சிக்குன் குனியா நோய் வேகமாக பரவி வருகிறது. இதனால் பலர் இந்த நோயால் பாதிக்கப்பட்டு வீட்டில் முடங்கி கிடக்கின்றனர். அவர்களது சாப்பாட்டுக்கே வழி இல்லாமல் அவர்கள் அவதிப்பட்டு வருகிறார்கள்.
நாளுக்கு நாள் இந்த நோயின் தாக்கம் அதிகரித்து வருவதைத் தொடர்ந்து கள் விற்பனை மிகவும் பாதித்தது.
இதனால் கள்ளு கடையை நடத்தி வரும் கடைக்காரர் நூதன அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். அதில் கள் குடிக்க கடைக்கு வரும் நபர்களுக்கு 10 கிலோ இலவச அரிசி வழங்கப்படும் என்றும் அறிவித்தார்.
இதனால் கடையில் மீண்டும் கூட்டம் அலைமோத தொடங்கியது. வியாபாரம் களை கட்டத் தொடங்கியது. 10 கிலோ அரிசி வாங்கி சென்ற அவர்கள் கள்ளும் குடித்து விட்டு வீட்டில் சில நாட்கள் நிம்மதியாக சாப்பிட்டு பசியை போக்கினர்.
தற்போது கூட்டம் அளவுக்கு அதிகமாக தினமும் அதிகாலை முதலே குவிந்து விடுவதால் குலுக்கல் முறையில் பரிசுக்குரிய நபர்களை தேர்ந்து எடுத்து இலவச அரிசி வழங்கி வரு கிறார்.