Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

State of Indian Sports Teams – Hockey

Posted by Snapjudge மேல் செப்ரெம்பர் 20, 2006

கனவாய் பழங்கதையாய்…

நமது நாட்டில் கிரிக்கெட் போன்ற குறிப்பிட்ட சில விளையாட்டுகளுக்கு அளிக்கப்படுகின்ற முக்கியத்துவம் மற்ற விளையாட்டுகளுக்குக் கிடைப்பதில்லை. எனவே இயல்பாகவே மற்ற விளையாட்டுகளில் மக்களுக்கு அவ்வளவாக ஆர்வம் இருப்பதில்லை. மொத்தத்தில் விளையாட்டுத் துறைக்கு நாம் கொடுத்து வரும் முக்கியத்துவம் போதாது என்பதை பல சர்வதேசப் போட்டிகளின் முடிவுகளே காட்டி வருகின்றன. சர்வதேச விளையாட்டுப் போட்டிகளில் குட்டி நாடுகள் கூட, தங்கப் பதக்கங்களைப் பெறும்போது, நமது மானத்தைக் காப்பாற்ற ஏதாவது ஒரு பதக்கமாவது கிடைக்காதா என்று சாதாரண இந்தியக் குடிமகன் தொலைக்காட்சிப் பெட்டியின் முன் அமர்ந்து ஏங்கும் நிலையைப் பார்த்திருக்கிறோம். ஆம், நூறு கோடிக்கு மேல் மக்கள் தொகை கொண்ட இந்த நாடு விளையாட்டுகளில் குறிப்பிடத்தக்க, கௌரவமான வெற்றியைப் பெற முடியவில்லை.

நமது தேசிய விளையாட்டான ஹாக்கியில் ஒரு காலத்தில் உலக அளவில் கொடி கட்டிப் பறந்தோம். தயான்சந்த் போன்ற இந்திய வீரர்கள் தங்களின் அபாரத் திறமைகளால் வெற்றிகளை ஈட்டி இந்தியாவின் பெருமையை சர்வதேச அளவில் உயர்த்தினார்கள். ஆனால் தற்போது நிலைமை தலைகீழ்! 1980-ம் ஆண்டில் மாஸ்கோ போட்டிக்குப் பிறகு, ஒலிம்பிக் ஹாக்கி போட்டிகளில் கடந்த 25 ஆண்டுகளாக நம்மால் தங்கப் பதக்கத்தைப் பெற முடியவில்லை.

ஜெர்மனியில் சமீபத்தில் நடந்து முடிந்த ஹாக்கிப் போட்டிகளில், இந்தியா பங்கேற்ற 7 ஆட்டங்களில் 5-ல் தோல்வி அடைந்துள்ளது. ஒரு போட்டி டிராவில் முடிந்தது. ஒரே ஒரு போட்டியில் மட்டுமே இந்தியாவால் வெற்றி பெற முடிந்துள்ளது. இதனால் 12 நாடுகள் பங்கேற்ற இப்போட்டியில் இந்தியா 11-வது இடத்தையே பிடிக்க முடிந்தது. போட்டியின் “கடைசி நிமிடங்களில் இந்திய வீரர்களின் திறமையற்ற ஆட்டமே இந்தியாவின் படுதோல்விக்குக் காரணம்’ என்று குறை கூறியுள்ள இந்திய அணியின் பயிற்சியாளர் பாஸ்கரன், “தவறுகளைத் திருத்திக் கொள்ளாவிட்டால் எதிர்காலத்தில் வெற்றி என்பதே கனவாகி விடும்’ என எச்சரித்துள்ளார். “ஜெர்மனியில் நடைபெற்ற உலகக் கோப்பை ஹாக்கிப் போட்டியில் அடைந்த தோல்விகளை மறந்து விட்டு, தோஹாவில் நடைபெற உள்ள ஆசிய விளையாட்டுப் போட்டியில் கவனம் செலுத்துவோம்’ என்று இந்திய ஹாக்கி கூட்டமைப்பின் செயலாளர் கூறியுள்ளார். இதுபோன்ற வெற்று சமாதானங்கள் நமது எதிர்கால வெற்றிக்கு உதவுமா என்பது ஐயமே.

சமீபகாலமாக விளையாட்டில் புகுந்து வரும் அரசியல் நமது விளையாட்டின் நோக்கத்தையே சிதறடித்து விடுகிறது என்பதைக் கருத்தில் கொள்ள வேண்டும். விளையாட்டு வீரர்களைத் தேர்வு செய்வதில் வெளிப்படைத் தன்மையைக் கடைப்பிடிக்க வேண்டியது அவசியம். அதன் மூலம்தான் நல்ல வீரர்களுக்குத் தொடர்ந்து அணியில் இடம் கிடைக்கும் வாய்ப்பு ஏற்படும். காலத்துக்கேற்ற வகையில் தகுதியும் திறமையும் பெறுவதற்கு இந்தியப் பயிற்சியாளர்கள் மட்டும் போதுமா, வெளிநாட்டுக் “கோச்’சுகளையும் பயன்படுத்திக் கொள்ளலாமா என்பது குறித்து விளையாட்டுத் துறை நிபுணர்கள் கலந்து பேசி முடிவெடுக்க வேண்டும். விளையாட்டுத் துறையில் வெற்றி என்பது ஒரு நாள் முயற்சியில் கைகூடி வந்து விடுவதில்லை. இப்போதே இளம் விளையாட்டு வீரர்களை அடையாளம் கண்டு ஊக்குவித்து, தகுதி படைத்தவர்களுக்கு நல்ல பயிற்சி அளிக்கும்போதுதான் தரமான இந்திய அணியை உருவாக்க முடியும். வெற்றிகளுக்குக் குறுக்கு வழிகள் இல்லை. தொலைநோக்குப் பார்வையுடன் திட்டங்களைத் தீட்டி அதைத் தொடர்ந்து செயல்படுத்துவதன் மூலமே வெற்றியைப் பெற முடியும். இல்லாவிட்டால் ஹாக்கி விளையாட்டில் தயான்சந்த் காலத்து வெற்றிகள் கனவாய் பழங்கதையாய் மட்டுமே இருக்கும்.

பின்னூட்டமொன்றை இடுக