Funding change hurts Sarva Shiksha Abhiyan – Secondary education for all
Posted by Snapjudge மேல் ஜூன் 27, 2007
அனைவருக்கும் கல்வி
பத்தாவது ஐந்தாண்டுத் திட்டத்தில் தொடங்கப்பட்ட மிக நல்ல திட்டங்களில் “அனைவருக்கும் கல்வி’ முதன்மையானது. “சர்வ சிக்ஷா அபியான்’ என்கிற பெயரில் அறிவிக்கப்பட்ட இந்த “அனைவருக்கும் கல்வி’ திட்டத்தின் மூலம், பள்ளிக்கூடம் இல்லாத கிராமமே இல்லை என்கிற நிலைமையும், பள்ளிக்குச் செல்லாத குழந்தைகளே இல்லை என்கிற லட்சியமும் நிறைவேற வேண்டும் என்பதுதான் திட்ட கமிஷனின் நோக்கம்.
மத்திய அரசு 75 விழுக்காடும், மாநில அரசு 25 விழுக்காடும் இந்தத் திட்டத்துக்காக ஆண்டுதோறும் அவரவர் நிதிநிலை அறிக்கையில் ஒதுக்கீடு செய்வது என்பதுதான் “அனைவருக்கும் கல்வி’ திட்டம் அறிவிக்கப்பட்டது முதல் தொடர்ந்த நடைமுறை. ஆனால் இப்போதைய 11-வது திட்டத்தில் இந்தப் பங்கீட்டில் திட்டக் கமிஷன் மாற்றம் செய்திருக்கிறது. மத்திய அரசும், மாநில அரசுகளும் சம பங்கு ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்பது திட்டக் கமிஷனின் புதிய தீர்மானம்.
கடந்த சில ஆண்டுகளாக இந்த “அனைவருக்கும் கல்வி’ என்கிற திட்டத்தின் மூலம் கிராமப்புறங்களில் பள்ளிக்கூட வசதிகள் பெருகி வருகின்றன. அதுமட்டுமல்ல, பல புதிய பள்ளிக்கூடங்கள் ஊராட்சி அமைப்புகளால் நிறுவப்பட்டு அந்தந்த பஞ்சாயத்துகள் மேற்பார்வையில் செயல்படத் தொடங்கியுள்ளன. 11-வது திட்டத்தில், நமது திட்டக் கமிஷன் செய்திருக்கும் மாற்றம் பல மாநிலங்களைத் திகைப்பில் ஆழ்த்தி இருப்பது மட்டுமல்லாமல், இந்தத் திட்டத்தைத் தொடர்ந்து நடத்த முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறது.
குஜராத், உத்தரகண்ட், ஹரியாணா மற்றும் கேரளம் ஆகிய நான்கு மாநிலங்கள் தவிர மற்ற மாநிலங்கள் இந்த “அனைவருக்கும் கல்வி’ திட்டத்துக்கான நிதி ஆதாரங்களை ஒதுக்கவில்லை. அந்தந்த மாநிலங்கள் செயல்படுத்தும் இலவசத் திட்டங்களுக்கும், அவர்கள் மக்களுக்கு அறிவித்திருக்கும் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்குமே போதிய நிதியாதாரம் இல்லாமல் மாநில அரசுகள் தடுமாறும் நிலைமை. நடைமுறைப்படுத்திக் கொண்டிருக்கும் திட்டத்துக்கு அதிக நிதியை ஒதுக்க மாநிலங்கள் தயங்குவது புரிகிறது.
கல்வி அறிவு இல்லாமை என்பதுதான் இந்தியாவின் மிகப் பெரிய பலவீனமாக இருந்து வருகிறது. எழுதப் படிக்கத் தெரியாத மக்கள் இன்னமும் கணிசமாக இருந்து வருகிறார்கள் என்பது மட்டுமல்ல, அவர்களில் பலர் அவரவர் குழந்தைகளைப் பள்ளிக்கூடங்களுக்கு அனுப்பாமலும் இருக்கிறார்கள். பொருளாதார நிலைமை மட்டுமன்றி அருகில் பள்ளிக்கூடங்கள் இல்லாமையும் அதற்குக் காரணம்.
அப்படியே பள்ளிக்கூடங்கள் இருந்தாலும், முறையான கட்டடங்கள் இல்லாமல் இன்னும் மரத்தடியில் பாடம் நடத்தும் பள்ளிகள் ஆயிரக்கணக்கில் நாடு முழுவதும் இருக்கின்றன. கரும்பலகை இல்லாத பள்ளிகள் கூட இருப்பதாக மற்ற மாநிலங்களில் இருந்து செய்திகள் வருகின்றன. “அனைவருக்கும் கல்வி’ திட்டம் அமல்படுத்தப்பட்ட பிறகு, கரும்பலகை போன்ற அடிப்படைத் தேவைகள் அநேகமாக எல்லாப் பள்ளிகளுக்கும் கிடைக்க வழிகோலப்பட்டது. இந்தத் திட்டத்தைத் தமிழகம், கேரளம் போன்ற மாநிலங்கள் முறையாகப் பயன்படுத்தி கிராமப்புற கல்வியில் வளர்ச்சியை ஏற்படுத்தவும் செய்தன.
இந்த நிதியாண்டில் மத்திய அரசு “அனைவருக்கும் கல்வி’ திட்டத்துக்காக 21 ஆயிரம் கோடி ரூபாயை ஒதுக்கி இருக்கிறது. இரண்டரை மாதங்கள் கடந்தும் இன்னும் பல மாநிலங்கள் அவர்களது பங்காக 50 விழுக்காடு அளிக்காமல் இருக்கின்றன. அதற்கான ஒதுக்கீடு அவரவர் நிதிநிலை அறிக்கையில் இல்லவே இல்லை.
மத்திய அரசு இந்த விஷயத்தில் மாநில அரசுகளின் பிரச்னையைப் புரிந்துகொண்டு பழைய முறைப்படி தனது பங்குக்கு 75 விழுக்காடு நிதியை ஒதுக்க முன்வரவேண்டும். மாநில அரசுகள் அதிக நிதி தரவில்லை என்பதற்காக இதுபோன்ற நல்லதொரு திட்டம் தொய்வடைவதோ, நடைபெறாமல் இருப்பதோ சரியல்ல. “அனைவருக்கும் கல்வி’ என்பது இந்தியாவின் லட்சியமாக இருக்கும்போது, இந்த விஷயத்தை மத்திய அரசு அலட்சியமாக எதிர்கொள்வது முறையல்ல!
——————————————————————————————————————
ஆட்டம் காணும் ஆரம்பக் கல்வி
மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடும்போது நிச்சயமாகத் தமிழகம் கல்வியின் தரத்திலும் சரி, கல்விக்கூடங்களின் எண்ணிக்கையிலும் சரி முன்னணியில்தான் இருக்கிறது. இப்படி ஆறுதல்பட்டுக் கொள்வதால், நாம் கல்வித்துறையில் உலகத்தரத்தை எட்டிவிட்டோம் என்பது அர்த்தமல்ல.
இன்னும் அத்தனை கிராமங்களிலும் ஆரம்பப் பள்ளிக்கூடங்கள் அமைந்தபாடில்லை. முழுமையாக அத்தனை குழந்தைகளையும் பள்ளிக்குக் கொண்டுவந்து எழுத்தறிவிக்க முடிந்துவிட்டதா என்றால் அதுவும் இல்லை. நமது பள்ளிக்கூடங்களாவது அடிப்படை வசதிகளுடன் அமைந்தவையா என்றால், இன்னும் பெரும்பாலான பள்ளிகளுக்கு முறையான கட்டடங்கள்கூட இல்லை.
“சர்வ சிக்ஷா அபியான்’ எனப்படும் “அனைவருக்கும் கல்வி’ என்கிற மத்திய அரசின் திட்டப்படி கடந்த ஆண்டு மட்டும் ரூ. 15,000 கோடி ரூபாய் நமது நிதியறிக்கையில் ஒதுக்கப்பட்டிருந்தும், முப்பது சதவிகிதம் பள்ளிக்கூடங்களில் பெண் குழந்தைகளுக்குத் தனியான கழிப்பறைகள் இல்லாத அவல நிலை. இது அகில இந்திய நிலைமை. தமிழகத்தின் நிலைமை இந்த விஷயத்தில் கொஞ்சம் பரவாயில்லை, அவ்வளவுதான்.
தமிழகத்தில் மட்டும் ஐந்து முதல் பதினெட்டு வயதான குழந்தைகளின் எண்ணிக்கை சுமார் ஒன்றரைக் கோடி என்று சொல்லப்படுகிறது. இவர்கள் அனைவருக்கும் முறையான கல்வி அளிக்கப்பட வேண்டுமானால், குறைந்தது 14,300 பள்ளிக்கூடங்கள் தேவை. அந்தப் பள்ளிக்கூடங்களில் அடிப்படை வசதிகளை முழுமையாகச் செய்துதர வேண்டுமானால் அதற்கான நிதியாதாரம் மாநில அரசிடம் இல்லை.
அரசின் நேரடிப் பார்வையில் இயங்கும் பள்ளிகள் மற்றும் நகராட்சி, மாநகராட்சி, பஞ்சாயத்து பள்ளிகள் என்று ஏற்பட்டிருப்பவை போதிய இடவசதியும் அடிப்படை சுகாதார வசதியும் பெற்றிருக்கின்றனவா என்றால் இந்த விஷயத்திலும் நிலைமை திருப்திகரமாக இல்லை. தனியார் பள்ளிகள் நன்கொடை வசூலிப்பதில் காட்டும் அக்கறையைப் பள்ளிகளைப் பராமரிப்பதில் காட்டுவதில்லை என்கிற குற்றச்சாட்டுகளும் உண்டு.
நாளைய சமுதாயம் என்று உலகெங்கிலும் தனி கவனத்துடன் செயல்படும் கல்வித்துறை, இந்தியாவில் மட்டும் போதிய கௌரவத்துடனும் மரியாதையுடனும் தகுந்த முக்கியத்துவத்துடனும் செயல்படவில்லை என்பது மறுக்க முடியாத உண்மை. ஆசிரியர்கள் தரம் தாழ்ந்து விட்டனர் என்று குறை கூறும்போது நாம் மறந்துவிடும் உண்மை, அந்த ஆசிரியர்களின் சமூக அந்தஸ்தை அங்கீகரிக்காமல்விட்டதும், மாணவர்கள் அவர்களுக்குத் தரவேண்டிய மரியாதையைக் குறைத்ததும் நாம்தான் என்பதை. அரை நூற்றாண்டு காலத்துக்கு முன்னால் ஆசிரியர்களுக்குத் தரப்பட்ட மரியாதை என்ன என்பதை நினைத்துப் பார்த்தால், கல்வி ஏன் தரம் தாழ்ந்திருக்கிறது என்பதற்குக் காரணம் புரியும்.
காமராஜர் முதலமைச்சராக இருந்த காலம் முதல், குக்கிராமம் வரை அடிப்படைக் கல்வி சென்றடைய வேண்டும் என்றும், எந்தவொரு குழந்தையும் கல்வி அறிவு பெறாமல் இருந்துவிடலாகாது என்றும் எல்லா முதலமைச்சர்களும் அவரவர் பங்கிற்குக் கல்வி வளர்ச்சிக்கு முக்கியத்துவம் அளித்தனர் என்பது உண்மை. ஆனால், கல்வித்துறையில் அரசியல் தலையீடுகளை அவர்களால் தடுத்து நிறுத்த முடியாமல் போனதால்தான் கல்வியின் தரமும், ஆசிரியர்களின் தரமும் குறைந்தது என்பதும் மறுக்க முடியாத உண்மை.
அதேபோல, முந்தைய தலைமுறையில், கல்விக்கூடங்களுக்கு நன்கொடை அளிப்பது, கல்விச்சாலைகள் ஏற்படுத்துவது என்பதெல்லாம் தர்மமாகக் கருதி செய்யப்பட்டது. இப்போது, கல்வி என்பதே வியாபாரம் என்று கருதப்படுகிறது. இந்தப் போக்கு விபரீத விளைவுகளை ஏற்படுத்திவிடும் என்பது மட்டுமல்லாமல், கல்வியின் அடிப்படை நோக்கத்தையே கேள்விக்குறியாக்கிவிடும்.
நாளைய இந்தியா, இன்றைய கல்வித்துறையின் கையில்தான் இருக்கிறது. அதிலும் குறிப்பாக ஆரம்பப் பள்ளிக்கூடங்கள்தான் நாளைய இந்தியாவின் அடித்தளங்கள். அந்த அடித்தளம் ஆட்டம் காண்பதுபோலத் தெரிகிறது. ஆட்சியாளர்கள் உடனடியாக விழித்துக் கொள்ளாவிட்டால், நாளைய தலைமுறையின் சாபத்தை நாம் சுமக்க நேரிடும்!
மறுமொழியொன்றை இடுங்கள்