Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

Archive for the ‘Dinamani’ Category

Economic upliftment for the needy – Dinamani Editorial

Posted by Snapjudge மேல் மார்ச் 25, 2008

ஏழைகளின் எதிரி யார்?

“”இந்தியா அடைந்துவரும் பொருளாதார வளர்ச்சியால் பணக்காரர்களுக்குத்தான் லாபம் என்று பேசுகிறவர்கள் ஏழைகளுக்கு எதிரிகள்” என்று மதுரையில் ஒரு கல்லூரி விழாவில் பேசுகையில் காட்டமாக விமர்சித்திருக்கிறார் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம்.

சிதம்பரம் எப்போதும் வார்த்தைகளை அளந்து பேசுபவர்; மாற்றுக் கருத்துகளை முன்வைக்கும்போதுகூட தனிப்பட்ட தாக்குதல்களைத் தொடுக்காமல், தனது கருத்தை ஆழமாகப் பதிவு செய்யும் சொல்லாற்றல் மிக்கவர். அப்படிப்பட்டவர் கோபமாகப் பேசியிருப்பதற்குக் காரணம், பேசியவர்கள் மீது உள்ள கோபம் அல்ல; நல்ல நடவடிக்கைகளை இப்படியே தொடர்ந்து விமர்சித்து, எதிர்த்துக் கொண்டிருந்தால் நாடு முன்னேற வேறு என்னதான் வழி என்ற ஆதங்கம்தான். அப்படி விமர்சிக்கும் “”இடதுசாரிகளை” பெயர் குறிப்பிடாமல்தான் அவர் விமர்சித்தார் என்பது கவனிக்க வேண்டிய ஒன்று.

இந்தியாவில் ஒட்டுமொத்தப் பொருளாதார வளர்ச்சி 9% என்ற அளவை நெருங்கிக் கொண்டிருந்தாலும் நாட்டு மக்களில் கணிசமானவர்கள் வறுமைக் கோட்டுக்கும் கீழேதான் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்.

இந்த உண்மைகளை அறியாதவர் அல்ல சிதம்பரம். எந்தத் துறை மூலமாவது நாட்டுக்கு வருமானம் கிடைத்தால்தான் அதை வறுமை ஒழிப்புத் திட்டங்களுக்கும், பொருளாதாரக் கட்டமைப்பை ஏற்படுத்துவதற்கும் பயன்படுத்த முடியும். இயற்கை வளங்கள் அனைத்தையும் அரசே தன் பொறுப்பில் எடுத்துக் கொண்டு, பொருளாதார நடவடிக்கைகளைத் தீர்மானித்து வழிநடத்துவது கம்யூனிச நாட்டில் சாத்தியம். கலப்புப் பொருளாதார முறைமையே சிறந்தது என்று நம் முன்னோடிகள் தேர்வு செய்துவிட்டதால் அதே பாதையில் நாமும் போயாக வேண்டும்.

ஏழைகளுக்காக, சுரண்டப்படுகிறவர்களுக்காகக் குரல் கொடுப்பதில் இடதுசாரிகள் முன்னே நிற்கிறார்கள் என்பதில் சந்தேகமே இல்லை. ஆனால், பிரச்னை தீரவும், வளமை பெருகவும் உருப்படியான நல்ல யோசனைகளை அவர்கள் கூறுவதும் இல்லை, அவர்கள் ஆட்சி செய்யும் மாநிலங்கள் மூலம் மற்றவர்களுக்கு உணர்த்துவதும் இல்லை என்பது மறுக்கப்படாத உண்மை. கேரளத்தில் மத்திய அரசின் உர நிறுவனத்தைத் தவிர அரசுத் துறையிலோ, தனியார் துறையிலோ அமைந்துள்ள மிகப்பெரிய தொழிற்சாலை என்ன?

மேற்கு வங்கத்தை எடுத்துக் கொண்டால் நிலச் சீர்திருத்தத்தில் முன்னோடியாக விளங்குகிறது என்பதோடு சரி. மின்னுற்பத்தி, சுகாதாரம், போக்குவரத்து, கல்வி, பாசன வசதி ஆகிய துறைகளில் அது பின்தங்கியே இருக்கிறது.

தென் மாநிலங்களைப் போல தகவல் தொழில்நுட்பத்தில் மேற்கு வங்கம் வளரவில்லை. மகாராஷ்டிரம், கர்நாடகம், குஜராத் போல தொழில் வளர்ச்சியில் செழிக்கவில்லை. மருத்துவ வசதிகளும் தரமான மருத்துவமனைகளும் இல்லாததால்தான் வங்காளிகளும் வட-கிழக்கு மாநிலத்தவர்களும் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனைகளுக்கு நூற்றுக்கணக்கில் வந்து சிகிச்சை பெற்றுத் திரும்புகின்றனர்.

“”ஒப்பந்த அடிப்படையில் தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்தும் நிலைமை கூடவே கூடாது. அது தொழிலாளர்களின் நிரந்தர வேலையைப் பறித்து, அவர்களை கூலி அடிமைகளாக்கிவிடும், சுரண்டலுக்கு அளவே இருக்காது” என்று இடதுசாரிகள் எதிர்க்கின்றனர். அதில் உண்மை இல்லாமல் இல்லை.

 • மேற்கு வங்கத்தில் அரசுத்துறையில் ஒப்பந்த அடிப்படையில் வேலைக்கு அமர்த்தப்பட்டுள்ள தொழிலாளர்கள் எண்ணிக்கை 19.42%;
 • தனியார் துறையில் அந்த எண்ணிக்கை வெறும் 13.69% தான்.
 • கேரளத்தில் அரசுத்துறையில் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிவோர் 7.71%,
 • தனியார் துறையில் 5.39%.
 • தமிழ்நாட்டில் அரசு நிறுவனங்களில் பணிபுரியும் ஒப்பந்தத் தொழிலாளர் எண்ணிக்கை 8.58%,
 • தனியார் துறையில் 11.35%.

இதிலிருந்து நாம் புரிந்துகொள்வது, இடதுசாரிகள் தாங்கள் வலியுறுத்தும் வறட்டு சித்தாந்தங்களைத் தங்களுடைய மாநிலங்களில்கூட அமல் செய்வதில் அக்கறை இல்லாமல் இருக்கிறார்கள் என்பதே.

இந் நிலையில் நிதி அமைச்சர் சிதம்பரத்துக்கு அவர்கள் மீது கோபம் வருவது நியாயம்தானே?

Posted in Budget, Chidamabram, Chidambaram, Chidhambaram, Chithambaram, Communism, Communist, Communist parties, Communist Party of India, Communist Party of India-Marxist, Communists, Cong, Cong (I), Cong(I), Congress, Congress (I), Congress Party, Congress(I), CPI, CPI (M), CPI(M), CPI(ML), CPI-ML, CPM, Dinamani, Economy, Editorial, Finance, GDP, Needy, Op-Ed, Poor, Prices, Rich, Wealthy | Leave a Comment »

What is behind DMK’s war of words with Congress? – Dinamani ‘Ajathasathru’

Posted by Snapjudge மேல் பிப்ரவரி 15, 2008

கருணாநிதி கோபப்படுவது ஏன்?

 அஜாத சத்ரு

காங்கிரஸ் கட்சியில் தமிழ்நாடு பொறுப்பாளர் அருண்குமார் தற்செயலாக சென்னை விமான நிலையத்தின் தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்தைச் சந்தித்தும், அவருடன் ஒன்றாக விமானத்தில் பயணித்ததும் ஒரு சர்வ சாதாரணமான நிகழ்வு.

இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, நீங்கள் விஜயகாந்துடன் அரசியல் பேசினீர்களா என்கிற நிருபர்களின் கேள்விக்கு, “ஆமாம், அரசியல் பேசினோம். என்ன பேசினோம் என்பதை நேரம் வரும்போது வெளியிடுகிறேன்’ என்று சர்வசாதாரணமாக தமிழ்நாடு காங்கிரசின் மேலிடப் பொறுப்பாளர் சொன்ன பதிலிலும் எந்தவித அதிசயமோ ஆச்சரியமோ இருப்பதாகத் தெரியவில்லை.

ஆனால், இதை ஏதோ விபரீதமாகவும், அருண்குமார் இமாலயத் தவறு செய்துவிட்டது போலவும் திமுக தலைமை சித்திரிக்க முயல்வது ஏன் என்பதுதான் பலரையும் புருவத்தை உயர்த்த வைத்திருக்கிறது. திமுக தலைவர் கருணாநிதியின் உத்தரவோ, வழிகாட்டுதலோ இல்லாமல், திராவிடக் கழகத் தலைவர் கி. வீரமணியிடமிருந்து முதல் கண்டனம் வந்திருக்காது.

“”அருண்குமார் ஒரு பார்ப்பனர். அவர் மரியாதை நிமித்தம் முதல்வர் கருணாநிதியைச் சந்திக்காத நிலையில் விஜயகாந்தை மட்டும் சந்தித்துப் பேசுவது எப்படி?” என்கிற விதத்தில் கி. வீரமணியின் காட்டமான அறிக்கையால் விஷயம் முடிந்துவிட்டது என்று நினைத்தால், திமுகவின் நிர்வாகக் குழு தனது தீர்மானத்தில், காங்கிரசுக்கு எச்சரிக்கையும், அறிவுரையுமாகத் தனது ஆதங்கத்தைக் கொட்டித் தீர்த்திருக்கிறது.

இந்த அளவுக்கு திமுக ஒரு சாதாரண சம்பவத்தைப் பெரிதுபடுத்துவானேன்? அருண்குமார், விஜயகாந்த் சந்திப்புக்கு அந்த அளவுக்கு முக்கியத்துவம் உண்டா?

“”தலைவர்கள் சந்தித்துக் கொள்வது, பேசுவது என்பது சாதாரணமான விஷயம். சமீபத்தில் தேசிய வளர்ச்சிக் குழுக் கூட்டத்தில் முதல்வர் கருணாநிதியும், குஜராத் முதல்வர் நரேந்திர மோடியும் சந்தித்துக் கொண்டார்களே! இல. கணேசன் அடிக்கடி முதல்வர் கருணாநிதியைச் சந்திக்கத்தானே செய்கிறார்? இது அரசியலுக்கு அப்பாற்பட்ட மரியாதைநிமித்த சந்திப்புகள். இதற்கெல்லாம் கோபப்பட்டால் எப்படி?” என்று கேட்ட காங்கிரஸ் பிரமுகர் ஒருவர் இன்னொரு சம்பவத்தையும் குறிப்பிட்டார்.

1998 நாடாளுமன்றத் தேர்தலின்போது, மதுரையிலிருந்து சென்னை வரும் விமானத்தில் அன்றைய முதல்வராக இருந்த கருணாநிதி, முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மற்றும் த.மா.கா. தலைவர் ஜி.கே. மூப்பனார் ஆகிய மூவரும் வந்ததாகவும், திமுக கூட்டணியில் இருந்தபோதும் த.மா.கா. தலைவர் மூப்பனார் ஜெயலலிதாவிடம் சிரித்துப் பேசியதை முதல்வர் கருணாநிதி விமர்சிக்கவில்லை என்றும் தெரிவித்தார்.

கருணாநிதி பயப்படுவது ஏன் என்று புரியாமல் குழம்பும் காங்கிரசார்தான் அதிகம். “”யார் யாரைச் சந்தித்துப் பேசினாலும், காங்கிரஸ் கட்சியைப் பொருத்தவரை, சோனியா காந்தி என்ன முடிவெடுக்கிறார் என்பதைப் பொருத்துத்தான் கூட்டணி அமையும். பிறகு ஏன் இப்படி அலட்டிக் கொள்ள வேண்டும்?” ~ இப்படிக் கேட்பது மூத்த சட்டமன்ற உறுப்பினர் ஒருவர்.

விஜயகாந்தை முன்னிலைப்படுத்தி ஒரு கூட்டணிக்குக் காங்கிரஸ் சம்மதிக்கப் போவதில்லை. அதுமட்டுமல்ல, தேமுதிக – காங்கிரஸ் கூட்டணி என்பது திமுக மற்றும் அதிமுக அமைக்கும் கூட்டணிகளுக்கு மாற்றாகவோ, அந்த அளவுக்கு பலமானதாகவோ இருக்க முடியாது என்பது பச்சைக் குழந்தைக்குக்கூடத் தெரியும். இடதுசாரிகள் சேர்ந்தால் ஒருவேளை அந்தக் கூட்டணி பலம் பெறலாம். ஆனால் அதற்கான வாய்ப்பு இருப்பதாகத் தெரியவில்லை.

“”எங்களைப் பொருத்தவரை நாங்கள் திமுகவுடன் கூட்டணி என்பதில் தெளிவாக இருக்கிறோம். இடதுசாரிகள் நிச்சயமாகக் காங்கிரசுடன் எந்தவிதக் கூட்டணியும் வைக்கப் போவதில்லை” என்கிறார் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைவர் டி.கே. ரங்கராஜன். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நிலையும் அதுதான் என்று உறுதிப்படுத்துகிறார் டி. ராஜா.

காங்கிரஸ், திமுகவின் தோழமைக் கட்சியாகத் தொடரும் என்பதில் மற்றவர்களுக்கு இருக்கும் நம்பிக்கை ஏன் முதல்வர் கருணாநிதிக்கு மட்டும் இல்லை?

காங்கிரஸ் வாக்கு வங்கி என்பது எப்போதுமே திமுகவை ஏற்றுக்கொள்வதில்லை. திமுக எதிர்ப்பு என்பது இந்த காங்கிரஸ் அனுதாபிகளின் ரத்தத்தில் ஊறிய விஷயம்” என்று தெரிவிக்கிறார் மூத்த காங்கிரஸ் தலைவர் ஒருவர்.

சோனியா காந்தியைக் கடுமையாக விமர்சித்ததன் மூலம் காங்கிரஸ் அனுதாபிகளின் வெறுப்பை ஜெயலலிதா சம்பாதித்துக் கொண்டதால்தான் அவர்கள் திமுகவை ஆதரிக்க முற்பட்டிருக்கிறார்களே தவிர, அடிப்படையில் அவர்கள் திமுகவைவிட அதிமுகவுடனான கூட்டணியைத்தான் விரும்புவார்கள் என்கிறார் அவர். அந்தப் பிரமுகர் சொல்வதில் உண்மை இல்லாமல் இல்லை.

காங்கிரசைப் பதவியிலிருந்து இறக்கிய கட்சி என்கிற கோபமும், காமராஜரைத் தோற்கடித்த கட்சி என்கிற வெறுப்பும் பழைய தலைமுறை காங்கிரஸ்காரர்களுக்கு எப்போதுமே உண்டு. அதனால்தான், நாடாளுமன்றத் தேர்தல்களில் திமுக, காங்கிரஸ் கூட்டணி பெறும் அளவுக்கு சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற முடிவதில்லை.

1980 நாடாளுமன்றத் தேர்தலில் திமுக – காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெற்றதையும், அதைத் தொடர்ந்து நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் தோல்வி அடைந்ததையும், சுட்டிக்காட்டிய திமுக பிரமுகர் ஒருவர், கடந்த நாடாளுமன்ற மற்றும் சட்டமன்றத் தேர்தலையும் உதாரணம் காட்டினார். நாடாளுமன்றத் தேர்தலில் 40 இடங்களிலும் வெற்றி பெற்ற ஐக்கிய முற்போக்குக் கூட்டணி, சட்டமன்றத் தேர்தலில் அந்த அளவுக்கு வெற்றி பெறவில்லை என்பது மட்டுமல்ல, திமுகவுக்குப் பெரும்பான்மை கிடைக்கவில்லை என்பதும் குறிப்பிட வேண்டிய விஷயம் என்கிறார்.

முதல்வர் கருணாநிதியின் பயம் அதுதான். இதுபோன்ற சந்திப்புகள், யூகங்களுக்கு இடமளிக்கும் என்பதால், காங்கிரஸ் வாக்கு வங்கியில் பிளவு ஏற்படும் வாய்ப்பு இருக்கிறது. சோனியா காந்தி இருக்கும்வரை தனது தனிப்பட்ட நெருக்கத்தின் மூலம் கூட்டணி தொடர்வதில் எந்தவிதத் தடையும் இருக்காது என்று முதல்வர் கருணாநிதிக்குத் தெரியும். ஆனால், காங்கிரசின் வாக்கு வங்கி முழுவதுமாகக் கூட்டணிக்குச் சாதகமாக இல்லாமல் போனால், கூட்டணி தொடர்ந்தும் பயனில்லாமல் போய்விடும்.

காங்கிரஸ் வாக்கு வங்கி சிதறி, அடுத்து வரும் நாடாளுமன்றத் தேர்தலில் மீண்டும் அதிமுக பலமடைந்து விட்டால்? அப்படியொரு நிலைமை ஏற்பட்டால், மத்தியில் ஆட்சி அமைக்க காங்கிரஸ் கட்சி அதிமுகவின் தயவை நாடாது என்று என்ன நிச்சயம்?

கருணாநிதிக்கு ஏன் கோபம் வருகிறது என்பது இப்போது புரிகிறதா?

Posted in Ajathasathru, Alliance, Andhra, Andhrapradesh, AP, Arunkumar, Coalition, Cong, Cong (I), Cong(I), Congress, Congress (I), Congress Party, Congress(I), Dinamani, Dismiss, DK, DMDK, DMK, Govt, JJ, Karunanidhi, Karunanidhy, Karunanidi, Karunanithi, Modi, Sonia, support, Veeramani, Vijaiganth, Vijaikanth, Vijayaganth, Vijayakanth | Leave a Comment »

Margazhi Carnatic Music Concert Season special updates – Dinamani: Charukesi

Posted by Snapjudge மேல் ஜனவரி 11, 2008

“சீசன்’ சிந்தனைகள்

சாருகேசி

தனி ஆவர்த்தனத்தின்போது எழுந்து வெளியே செல்வோரின் எண்ணிக்கை கணிசமாகக் குறைந்திருக்கிறது என்பது உண்மையே. அதற்குப் பல கலைஞர்களும் அவ்வப்போது விடுத்த வேண்டுகோள்கள் (அல்லது நாசூக்கான மிரட்டல்கள்) ஒரு காரணமாக இருக்கக்கூடும். ஆனால் உமையாள்புரம் சிவராமன், மன்னார்குடி ஈசுவரன், திருச்சி சங்கரன் ஆகியோர் வாசிக்கும் “தனி’ போல மற்ற மிருதங்க வித்துவான்களின் வாசிப்பு இதமாக இருக்கிறது என்று சொல்ல முடியவில்லை.

சம்பர் சங்கீத மழை ஒரு வழியாக ஓய்ந்துபோய்விட்டாலும், மழைச்சிதறல் போல இங்கேயும் அங்கேயுமாக நடன நிகழ்ச்சிகள் ஜனவரியில் சில சபாக்களில் தொடரும்.

கிருஷ்ண கான சபாவில் பொங்கல் நாதசுர இசைவிழா மட்டும்தான் இனி குறிப்பிடத்தகுந்த நிகழ்ச்சி. நாலு நாளைக்குத் தொடர்ந்து நாதசுர இசை இங்கே மட்டும்தான் கேட்க முடியும். இந்த நாதசுர இசை விழாவில், ஒரு சிறந்த நாதசுர மேதைக்கு “சங்கீத சூடாமணி’ விருது கூடக் கொடுக்கத் தொடங்கினார்களே, பிறகு நிறுத்திவிட்டார்களோ? அப்படி நிறுத்தப்பட்டிருந்தால் அது வருத்தத்துக்குரியதுதான்.

நாதசுர இசை என்னும்போது, எல்லாச் சபா இசைவிழா துவக்க நாளிலும் நாலு மணி சுமாருக்கு நாதசுர வித்துவான் ஒருவரின் மங்கள இசை நிகழ்ச்சி கட்டாயம் இருக்கும். (பெரும்பாலும் இதில் நாதசுர வித்துவான்கள் சோரம்பட்டி சிவலிங்கமோ, மாம்பலம் சிவாவோதான் பங்கு கொள்வார்கள்.) மங்கள இசை வாசிக்கிற நாதசுர வித்துவான், ஐந்தரை அல்லது ஆறு மணி வரை மேடையில் வாசித்துக் கொண்டிருப்பார். விழாவுக்குத் தலைமை வசிக்கும் பிரமுகர் வந்து சேர்ந்ததும் ஒரு வினோத பரபரப்பு உண்டாகும். மேடையில் நாதசுர இசை வழங்கிய வித்துவானுக்கு பாட்டை முடித்துக் கொள்ள சைகை மூலம் குறிப்பாக உணர்த்தப்படும். அவரும் நிறுத்திக் கொண்டுவிடுவார். அதற்குப் பிறகு அவர் அவசரமாக மேடையிலிருந்து வெளியேறுவார். (அல்லது மேடைக்குள் மறைந்து போவார்.) “அன்செரிமோனியஸ்’ என்பதற்குக் கண்கூடாக ஒரு நிகழ்ச்சியை உதாரணம் காட்ட வேண்டுமென்றால், இதைவிட வேறு ஒன்று இருக்க முடியாது. சில நாதசுர ரசிகர்கள் அரங்கிலிருந்து எழுப்பும் கரவொலியோடு அந்த நிகழ்வு நிறைவடையும். அத்தனை நேரம் மங்கள இசை வாசித்தாரே, அவருக்கு மேடையில் மரியாதை செய்து, முறையாக அனுப்பி வைத்தால் என்ன என்று கேட்கத் தோன்றுகிறது.

தனி ஆவர்த்தனத்தின்போது எழுந்து வெளியே செல்வோரின் எண்ணிக்கை கணிசமாகக் குறைந்திருக்கிறது என்பது உண்மையே. அதற்குப் பல கலைஞர்களும் அவ்வப்போது விடுத்த வேண்டுகோள்கள் (அல்லது நாசூக்கான மிரட்டல்கள்) ஒரு காரணமாக இருக்கக்கூடும். ஆனால் உமையாள்புரம் சிவராமன், மன்னார்குடி ஈசுவரன், திருச்சி சங்கரன் ஆகியோர் வாசிக்கும் “தனி’ போல மற்ற மிருதங்க வித்துவான்களின் வாசிப்பு இதமாக இருக்கிறது என்று சொல்ல முடியவில்லை. சிகை கலைந்து, நிலை குலைந்து, கிட்டத்தட்ட ஒருவித ரயில் அல்லது விமான விபத்துபோல ஒரு பயங்கர சத்தத்தை அந்தத் “தனி’யின் போது உண்டாக்கிவிட்டால், அது “தனி’யே அல்ல என்று நினைக்கிறார்களோ என்னவோ? ஆனால், உப-பக்கவாத்தியமான கஞ்சிரா அல்லது கடம் அல்லது மோர்சிங் வாசிக்கிறவருக்கு அந்தத் “தனி’யின் போதுதான் ஏதோ கொஞ்சம் வாய்ப்புக் கிடைக்கிறது. இல்லை என்றால், வயலின் கலைஞர் வாசிக்கும்போதுகூட உப பக்கவாத்தியக் கலைஞர்களை வாசிக்க பெரும்பாலான மிருதங்க வித்துவான்கள் பெருந்தன்மையோடு இடம் கொடுப்பதில்லை. சில இளம் வித்துவான்கள் உரிமை எடுத்துக் கொண்டு ஒரு கை பார்ப்பது வேறு விஷயம்.

ரசிகர்களுக்கு நாகரிகம் கருதி சில கட்டுப்பாடுகள் வலியுறுத்தப்படுவது போல், மேடை நாகரிகம் கருதி சில கட்டுப்பாடுகளைக் கொண்டு வரலாம். குறிப்பாக, ஒரு ட்ரேயில் நாலு காபியை காண்டீனிலிருந்து எடுத்துக்கொண்டு ஒருவர் வருவது. ஏதோ அந்த இரண்டு மணி நேரத்தில் மேடையில் குடிக்கிற காபியில்தான் அவர்களுக்கு உயிரே இருப்பது போலவும், அது இசை வழங்கிக்கொண்டிருக்கிற முக்கிய கலைஞருக்குத் துளியும் இடைஞ்சல் இல்லை என்பது போலவும் நடந்து கொள்வது வருத்தத்துக்குரியது. இசை நிகழ்ச்சியின் கவுரவத்தைப் பாதிக்கிறது என்பதைப் பக்கவாத்தியக் கலைஞர்கள் உணர்ந்தால் சரி.

கச்சேரி தொடங்கிவிட்டால், மைக் அறை நோக்கிக் கலைஞர்கள் காண்பிக்கும் சைகைகள், புதிய பரதநாட்டிய முத்திரை வகையைச் சேர்ந்தவை. ஒழுங்கான ஃபீட்பேக் வசதி செய்து கொடுக்கப்பட்டுவிட்டால், பாதி பிரச்னை தீர்ந்துவிடலாம்.

ஒரு பாட்டு முடிந்த பிறகுதான் எழுந்துசெல்ல வேண்டும் என்று ரசிகர்களிடம் வேண்டுகோள் வைக்கப்பட்டாலும், நிரவலின்போதோ, சுவரப் பிரஸ்தாரத்தின்போதோ எழுந்து போவதையும் சிலர் ஒரு வழக்கமாகவே கொண்டிருக்கிறார்கள். அதைத் தடுப்பது சிரமம்தான்.

சீசனின் விழா நடக்கும் சபாக்களுக்கு வருகிற ரசிகர்கள் பிற மாதங்களில் கச்சேரிகளுக்கு வரும் வழக்கமான ரசிகர்களிடமிருந்து முற்றிலும் மாறுபட்டவர்களாக இருக்கிறார்கள். ஊர் முழுக்க ஓர் உற்சவம்போல நடத்தப்படும்போது உண்டாகிற உத்வேகம் உந்தித் தள்ளுவது போன்று, ரசனையைப் பிற மாதங்களில் வெளிக் காட்டிக் கொள்ள விரும்பாத ரசிகர்கள் சீசனில் மட்டும் சபாக்களில் வந்து இசைவிழாவை ரசிக்கிறார்கள். வருடத்துக்கு ஒரு முறை கர்நாடக இசை கேட்டு, தங்களை சார்ஜ் செய்து கொண்டால் போதும் என இவர்கள் நினைக்கலாம்!

இந்த ராகம்-தாளம்-பல்லவியை எப்போது “மேன்மேமரி’ (கட்டாயம்) என்று சீசன் கச்சேரிகளுக்கு வலியுறுத்தினார்களோ அப்போது அதன் தனித்தன்மையும் போய்விட்டது. 20,30 நிமிடத்தில் ராகம்-தாளம்-பல்லவி பாடிவிட்டு, “அப்பாடா, பல்லவி பாடியாகிவிட்டது!’ என்று கடனை நிறைவேற்றுகிற அளவுக்கே இசைக்கலைஞர்கள் இதற்கு இடம் கொடுத்திருக்கிறார்கள். நொம்தனம் நொம் என்று என்னவோ ஒரு பதத்தை வைத்துக்கொண்டு சரியான இம்சையாக்கி விடுகிறார்கள். (அதிலும் பல்லவிக்கு அதிகபட்சம் முருகா வா, சண்முகா வா, வடிவேலவா வாதான். வேறு எந்தக் கடவுளும் இவர்கள் ஏவலுக்கு வரமாட்டார்கள் போலும்!) ராகம்-தாளம்-பல்லவியை சோலோ வயலின் அல்லது வீணைக்கு விட்டுவிடலாம்.

பாட்டை ஆரம்பித்தவுடன் ரசிகர்களிடையே அது என்ன ராகம் என்று அறிந்துகொள்ளும் ஆவல் தோன்றியிருப்பது நல்ல அறிகுறி. எஸ்.கண்ணன் தொகுத்து, “நல்லி’ வெளியிட்டிருக்கும் இந்தக் குட்டிப் புத்தகம் கிட்டத்தட்ட எல்லா ஹேன்ட்பேக்கிலிருந்தும் பாட்டுத் தொடங்கியவுடன் வெளிப்பட்டு, அலசப்படுவது இயல்பாகிவிட்டது.

சஞ்சய் சுப்பிரமணியம், டி.எம்.கிருஷ்ணா நிகழ்ச்சிகள் சம்பிரதாய சுத்தமாகவும், கனமான கச்சேரிகளாகவும் எல்லா வகையிலும் ரசிகர்களைத் திருப்திப்படுத்தும்படியாகவும் இருந்தது என்று நண்பர்களின் கருத்துக் கணிப்புகள் தெரிவிக்கின்றன. இவர்களுக்கு மனப்பூர்வமான வாழ்த்துகள்.

எழுத்தாளர் இந்திரா பார்த்தசாரதி நாரத கான சபாவில் எல்லா மாலை நேரக் கச்சேரிகளுக்கும் தவறாமல் வந்திருந்து கேட்டார். வெளிநாட்டில் வசிக்கும் இரா.முருகன், நித்யஸ்ரீயின் கச்சேரி கேட்ட கையோடு, ஞானானாம்பிகா கான்டீனில் சூடாக அடை சுவைத்துக் கொண்டிருந்தார். பாம்பே ஜெயஸ்ரீயின் கச்சேரியை (அதிலும் சுனாதவினோதினி ராகம்-தாளம்-பல்லவியையும் துக்கடாக்களையும்) ரசித்துக் கேட்டுக்கொண்டிருந்தார் இயக்குநர் வசந்த்.

இத்தனை கச்சேரிகளையும் ஊர் முழுக்கப் போய்க் கேட்டுவிட்டு, ஆங்கில விமர்சனங்களைப் படித்தீர்களானால் “இதுக்குத்தானா இத்தனை பாடு!’ என்று கேட்கத் தோன்றும். அது பாட்டுக்கு அது, இது பாட்டுக்கு இது!

Posted in Arts, Carnatic, Chaarukesi, Charukesi, Classical, Concert, Culture, Dinamani, Heritage, Margazhi, music, Musicians, Performances, Performers, Saarukesi, Saba, Sabha, Sarukesi, Season, Shows, Singers, Special, Stage | 1 Comment »

Media distortion of News by Dinamalar & Thinamani: Viduthalai

Posted by Snapjudge மேல் ஜனவரி 10, 2008

நாட்டு நடப்பு: சோ – மோடி – பார்ப்பன ஏடுகள்

தினமலர்

பொதுத்தொண்டில் மிக நீண்ட காலம் பணியாற்றி பல்வேறு தியாகத் தழும்புகளைப் பதக்கங்களாக ஏற்றுப் பொலிவுறும் இந்தியக் கம்யூனிஸ்டுக் கட்சியின் முதுபெரும் தலைவர் ஆர். நல்லகண்ணு அவர்களுக்கு தமிழக அரசின் சார்பில் அம்பேத்கர் விருது வழங்கியிருப்பதானது அனைத்துத் தரப்பினரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

ஆனால், தினமலர் பார்ப்பனப் புத்தி அதனை எப்படி பார்க்கிறது? எப்படி செய்தி வெளியிடுகிறது?
நல்லகண்ணு அவர்களுக்கு அம்பேத்கர் விருது என்று மற்ற ஏடுகள் எல்லாம் தலைப்புக் கொடுத்திருக்க, தினமலர் எப்படி செய்தியை வெளியிடுகிறது? நல்லகண்ணுக்கு தமிழக அரசு ரூ.ஒரு லட்சம் என்று தலைப்புக் கொடுக்கிறது.
விருதையும், அண்ணல் அம்பேத்கரையும் பின்னுக்குத் தள்ளி, பணத்தை முன்னுக்கு வைக்கிறது தினமலர்!

செத்து சுடுகாடு போன பிறகும் ஆண்டுதோறும் திதி என்ற பெயரால் பணம் பறிக்கும் கருமாதிப் புத்தி தினமலரைவிட்டு எப்படிப் போகும்? அது அவர்களின் ரத்தத்தில் ஊறிய விஷயமாயிற்றே!


தினமணி

சோ ஏற்பாடு செய்துள்ள நிகழ்ச்சி ஒன்றில், குஜராத் முதலமைச்சர் நரேந்திரமோடி பங்கு கொள்கிறாராம். அது சென்னை – காமராசர் அரங்கில் நடைபெறுகிறதாம். மோடி பங்கேற்கும் நிகழ்ச்சிக்கு காமராசர் அரங்கை எப்படி வாடகைக்கு விடலாம் என்ற பிரச்சினைபற்றி எழுத வந்த தினமணியின் வைத்தியநாத அய்யர்வாள் சந்தடி சாக்கில் கந்தகப்பொடி தூவும் தம் நச்சு வேலையின் கொடுக்கைத் துருத்திக் காட்டியிருக்கிறார்.

பெரியார் திடலில் அனைத்து நிகழ்ச்சிகளையும் நடத்த அனுமதிப்பதுபற்றி சொல்லிவிட்டு, திராவிடர் கழகத்தைப்போல காங்கிரஸ் கட்சி வியாபார நோக்கத்துடன் செயல்படக்கூடாது என்று சில காங்கிரஸ்காரர்கள் சொன்னதுபோல செய்தியாக வெளியிடுகிறது தினமணி.

அறிவு நாணயம் தினமணிக்கு இருக்குமானால், அப்படி சொன்னவர்களின் பெயர்களை வெளியிட வேண்டாமா?
துக்ளக் பேக்கரியில் தயாரிக்கப்பட்ட இந்தப் பார்ப்பன ரொட்டியான வைத்தியநாதய்யர் தினமணியின் ஆசிரியராக வந்ததுமுதல் துக்ளக்கின் மறுபதிப்பாகவே தினமணியை மாற்றிக் காட்டிவிட்டார். தன்னுடைய அந்தரங்க வெறுப்பை காங்கிரஸ் பேரால் ஏற்றிக் கூறுகிறார்.

மெமோரியல் ஹாலில் தந்தை பெரியார் பேசுவதற்கு இடம் தர முடியாது என்று சொன்ன நேரத்தில், யார் வேண்டுமானாலும் தங்கள் கருத்துகளைத் தாராளமாகக் கூறக்கூடிய பொதுமன்றம் ஒன்றை அமைக்கவேண்டும் என்று கருதிய தந்தை பெரியாரால் உருவாக்கப்பட்டதுதான் நடிகவேள் எம்.ஆர். ராதா மன்றம். இது திராவிடர் கழகத்தின் கொள்கை உறுதியையும், எந்தக் கருத்தையும் எதிர்கொள்ளும் துணிவையும் பறைசாற்றும். கடவுளையும், பக்தியையும் வியாபாரப் பொருளாக்கிய கூட்டம் அல்லவா? அதனால்தான் எதையும் வியாபாரக் கண்கொண்டு பார்க்கிறது.

இதுபற்றிப் பல தடவை விளக்கிக் கூறப்பட்ட பின்னரும், வைத்தியநாத அய்யர்கள் தங்கள் பூணூல் தனத்தைக் காட்டிக்கொண்டு இருப்பது அவாளின் பிறவிக்கோணல்புத்தி என்பதைத் தவிர வேறு எதுவாக இருக்க முடியும்?
சோவை அனுமதிப்பவர்கள் மோடியை அனுமதிப்பதில் என்ன தயக்கம்? சோவைப்போல் மோடியைத் தூக்கி வைத்து ஆடுபவர்கள் யாராவது இருக்கிறார்களா?

பார்ப்பனீய – இந்துத்துவா வெறியில் மோடி விஷம் என்றால், திருவாளர் சோ ராமசாமி அந்த விஷத்தின் ஊற்றாயிற்றே!

குஜராத்தில் சிறுபான்மை மக்களை வேட்டையாடிய மோடியை இடுப்பில் தூக்கி வைத்துக்கொண்டு சோ கொஞ்சியதுபோல, வேறு யாராவது அவ்வளவுப் பச்சையாக வெறித்தனமாக நடந்துகொண்டது உண்டா?
ஆற அமரச் சிந்தித்தால் இதன் ஆழமும், அகலமும் நன்கு புரியுமே!

Posted in Ambedkar, BJP, Cho, Communist, Communist parties, Communist Party of India, Communist Party of India-Marxist, Communists, Community, Cong, Cong (I), Cong(I), Congress, Congress (I), Congress Party, Congress(I), CPI, CPI (M), CPI(M), CPI(ML), CPI-ML, CPM, Dhinamalar, Dhinamani, Dinamalar, Dinamani, distortion, DK, Gujarat, Journals, Magazines, Magz, Media, Modi, MSM, Nallakannu, News, Newspapers, papers, RSS, Thinamalar, Thinamani, Veeramani, Vidudhalai, Viduthalai, Vituthalai, Zines | Leave a Comment »

Charukesi: Ramanujar & Muthusamy Dikshithar – Dinamani Theater Reviews

Posted by Snapjudge மேல் ஜனவரி 1, 2008

ராமானுஜரும், முத்துசாமி தீட்சிதரும்

ராமானுஜர் மதப்புரட்சி செய்த மகான். சாதிப் பாகுபாடுகளைத் தாண்டி எல்லோரையும் சமமாகப் பார்த்த சன்னியாசி.

எழுத்தாளர் இந்திரா பார்த்தசாரதி எழுதிய ராமானுஜர் தமிழ் நாடகத்தின் ஆங்கில வடிவத்தை, சென்னைப் பல்கலைக்கழக ஆங்கிலத்துறை மாணாக்கர் சிலர், பேராசிரியர் ரஜானியின் இயக்கத்தில் நடித்தார்கள். ஆனால் ராமானுஜர் வேடத்தில் நடித்தவர் அம்ருதா கரயில் என்கிற இளம்பெண். குற்றவியல்துறை மாணவி. ஓர் ஆண் கூடவா ராமானுஜர் வேடத்தை ஏற்க முன்வரவில்லை என்ற கேள்வி ஒருபுறம் இருக்கட்டும். ராமானுஜர் வேடமேற்ற பெண் திருப்திகரமாக நடித்தார் என்பது மட்டும் நமக்குப் போதும்.

நாடக வடிவின் நூலைப் பெற்றுக்கொண்ட திருக்காட்டுப்பள்ளி சட்டமன்ற உறுப்பினர் ரவிக்குமார், இந்திரா பார்த்தசாரதியின் இருபது வருட நண்பராம். அவர் பேச்சு நவீன இலக்கியவாதியின் உரைபோல இருந்ததே தவிர, அரசியல்வாதியின் “நடை’யாக இருக்கவில்லை.

தன் வீட்டுக்கு வந்த விருந்தாளியை, அவர் அந்தணர் அல்லாதவர் என்பதற்காக மனைவி அவரைத் திண்ணையில் அமரச் செய்து அமுது படைத்ததற்காக, ராமானுஜர் அவளுடன் தன் வாழ்க்கையையே முறித்துக்கொண்டு விடுகிற நிகழ்ச்சி ஒன்று நடக்கிறது.

தனக்கு எதிர்க் கருத்துக்களைக் கொண்ட பலரையும் மனம் மாறச் செய்து வெல்ல முடிந்த ராமானுஜரால், மனைவியின் மனத்தை மாற்ற முடிந்திருக்காதா? அவர் அப்படிச் செய்திருக்க வேண்டுமா என்ற கேள்வியை, நூலை வெளியிட்ட “ஹிந்து’ ஆசிரியர் ரவியும், சட்டமன்ற உறுப்பினர் ரவிக்குமாரும் எழுப்பினர். தம் உரையில் இந்திரா பார்த்தசாரதி இதற்கு பதில் ஏதும் தரவில்லை. “நாடகத்தைப் படைத்தேன்’ அத்தோடு என் பணி முடிந்தது என்றார்.

மொழிபெயர்ப்பில், குறிப்பாக பல நூற்றாண்டுகளுக்கு முன் வாழ்ந்த ஒரு மகானின் வரலாறு பற்றிச் சொல்லும்போது, ஆங்கிலத்தில் எத்தகைய சொற்-சங்கடங்கள் எழுகின்றன என விவரித்தார் பேராசிரியர் ஸ்ரீமான். இவர் ஆங்கில மற்றும் அயல்நாட்டு மொழிகள் பல்கலைக்கழகத்தில் ஆங்கிலப் பேராசிரியர். (ஆனால் மொழியாக்கம் தமக்குத் திருப்தி அளித்ததாகவே இந்திரா பார்த்தசாரதி அங்கீகரித்துவிட்டார்.)

ஆக்ஸ்ஃபோர்டு யுனிவர்சிடி பிரஸ்ஸின் இந்திய படைப்புகளின் ஆங்கில மொழிபெயர்ப்பு நூல்களை வெளியிடும் பணியை மேற்கொண்டிருக்கும் மினி கிருஷ்ணன் உரை “மினி உரை’ என்றால், நூலுக்கு நீண்ட முன்னுரை வழங்கியிருக்கும் ஆங்கிலப் பேராசிரியர் சி.டி.இந்திரா, இந்த நூல் வெளிவர, தாம் தில்லி வரை சண்டை போட்டுவிட்டு வந்த சரித்திரத்தை சாங்கோபாங்கமாக “மாக்ஸி உரை’யாக நிகழ்த்தினார். (நமக்குப் பொறுமையைச் சோதித்த பேச்சுதான். ஆனால் அவருடைய ஆதங்கத்தை இந்த இடத்தில் வெளியிடாமல் வேறு எங்கே, எப்போது வெளியிடுவார், பாவம்!)

“நந்தன் கதை’ போலவே “ராமானுஜரு’ம் இந்திரா பார்த்தசாரதியின் மனித சாதியிடையே பிரிவு காணலாகாது என்ற சிந்தனையை வெளிப்படுத்தும் படைப்பு. தமிழில் இந்த நாடகத்தை விரைவில் மேடையில் பார்க்கும் வாய்ப்புக் கிடைக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டிருக்கிறது.

கர்நாடக இசையின் சரித்திரத்தில், மூன்று கிறிஸ்துவர்களுக்கு முக்கிய இடம் உண்டு. ஒருவர் ஆபிரகாம் பண்டிதர். இன்னொருவர் மாயூரம் வேதநாயகம் பிள்ளை. மூன்றாமவரைப் பற்றி அதிகம் அறிந்திருக்க வாய்ப்பில்லை.

அவர்தான் ஏ.எம்.சின்னசாமி முதலியார் என்கிற கத்தோலிக்க கிறிஸ்தவர். “சங்கீத சம்பிரதாய பிரதர்சினி’ என்ற தெலுங்கு நூலை வெளிச்சத்துக்கு கொண்டு வர தன் உடல், பொருள் ஆவி அனைத்தையும் கொடுத்த அந்நாளைய அரசு ஊழியர். ஆங்கிலேய ஆட்சியில், செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் பணிபுரிந்த இந்த அபூர்வ மனிதரைப் பற்றிய காலை நேரச் சொற்பொழிவு ஒன்றில், இணையற்ற ஆங்கிலப் பேச்சாளர் வி.ஸ்ரீராம் தொகுத்து அளித்த விவரங்கள் இதுவரை யாரும் அறியாதவை.

“சங்கீத சம்பிரதாய பிரதர்சினி’ நூல் இசை மாணாக்கர்களுக்கு தேவையான ராக லட்சணங்களையும், ஸ்வரங்களையும், கமகங்களையும் அறிமுகப்படுத்தும் நூல். இவருக்குத் துணை நின்றவர் முத்துசாமி தீட்சிதரின் சகோதரர் பாலுசாமி தீட்சிதரின் மகன் சுப்பராம தீட்சிதர். ஒருசமயத்தில் எட்டயபுர சமஸ்தான வித்துவானாக இருந்தவர். (இவரைக் குறித்து மகாகவி சுப்பிரமணிய பாரதியார்கூட ஒரு பாடல் புனைந்திருக்கிறார்.)

மின்சாரம் கிடையாது, கம்ப்யூட்டர் கிடையாது, நவீன அச்சுக்கோக்கும் எந்திரம் கிடையாது. இத்தனை “கிடையாது’-களுக்கும் இடையே, மனைவியின் உடல்நிலை மிகவும் மோசமாகி, சென்னையை விட்டுப் புறநகர் போய் வசிக்கும் சூழ்நிலையிலும், சின்னசாமி முதலியார் மனம் தளர்ந்துவிடவில்லை. பென்ஷன் தொகை எல்லாம்கூட நூலுக்காகச் செலவிடுகிறார். கடன் ரூ.28000-த்தைத் தாண்டி விடுகிறது. மனைவியின் நகைகளை எல்லாம் விற்றுவிடுகிறார். ஆனால் அவர் குறிக்கோள் எல்லாம் எப்படியாவது நூல் வெளியாக வேண்டும் என்பதே.

கர்நாடக இசையின் பங்களிப்பில் பங்கு கொண்ட அத்தனை வாக்யேக்காரர்களின் பாடல்களையும் திரட்டி, அவற்றை ஆங்கில இலைக்கலைஞர்களும் பாடும் அல்லது வாசிக்கும் வகையில் ஸ்டாஃப் நொட்டேஷன் செய்து பரப்ப இவர் எடுத்துக் கொண்ட முயற்சி இவ்வளவு, அவ்வளவு அல்ல. “”ஜெயதேவர், புரந்தரதாசர், நாராயண தீர்த்தர், அருணாசலக் கவி ஆகியோரின் பாடல்களைவிட, நவீன ஓரியண்டல் இசை என்று எடுத்துக் கொண்டால், தியாகராஜ சுவாமிகளின் பாடல்களுக்குத்தான் முதல் இடம்’ என்று தன் கருத்தை வெளியிட்டிருக்கிறார். ஐரோப்பிய வயலின் இசைக் கலைஞர்களைக் கொண்டு, நொட்டேஷன்-களின்படியே இசைக்கச் செய்து வெற்றி கண்டவர் இவர்.

முத்துசாமி தீட்சிதரின் கிருதிகளை வெளியே கொண்டு வர, சின்னசாமி முதலியார் பட்டபாடு இருக்கிறதே, அது “சங்கீத சம்பிரதாய பிரதர்சினி’ அச்சில் கொண்டு வர அவர் பட்ட பாட்டைப் போலவே உருக்கமானது.

இறுதியில் சுப்பராம தீட்சிதர் பணியாற்றிய எட்டயபுரம் சமஸ்தான மன்னரின் உதவியோடு, அங்கேயே அச்சகம் நிறுவச் செய்து, 1906-ல் சுப்பராம தீட்சிதரே அந்த நூலை வெளியிடும் சமயம், சின்னசாமி முதலியார் காலமாகிவிடுகிறார். ஆனால் அதற்காகப் பாடுபட்ட தன் நண்பரின் நினைவுக்கு அந்த நூலை சமர்ப்பணம் செய்திருக்கிறார் சுப்பராம தீட்சிதர்.

முத்துசாமி தீட்சிதரின் பாடல்களை, அவர் தமது பிரதம சீடர்களான தஞ்சை நால்வர்களுக்கும், தேவதாசிகளுக்கும், நாதஸ்வர வித்துவான்களுக்கும் கற்றுக்கொடுத்தார். அதனால் ராமானுஜர் போலவே, முத்துசாமி தீட்சிதரும் சாதியுணர்வு தாண்டி நின்ற மேதை எனலாம்.

சாருகேசி

Posted in Authors, Books, Carnatic, Chaarukesi, Charukesi, Classical, Dikshithar, Dinamani, Drama, Indira Parthasarathy, Indra Parthasarathy, IPa, IPaa, Literature, music, Muthusami, Muthusamy, Oxford, publications, Publishers, Ramanujam, Ramanujan, Ramanujar, Reviews, Saarukesi, Sarukesi, Shows, Stage, Tamil, Theater, Theatre, Translations, Works, Writers | Leave a Comment »

Tamil Cinema 2007 – Top Films, Notable Movies, Flashback, Star Actors: Dinamani Manoj Krishna

Posted by Snapjudge மேல் ஜனவரி 1, 2008

சண்டே சினிமா

ஃப்ளாஷ் பேக் 2007

மனோஜ்கிருஷ்ணா


தமிழ் சினிமாவைப் பொருத்தவரை 2007-ம் வருடம், ஒரு கொண்டாட்ட வருடம். ஒரு மினி ஃப்ளாஷ்பேக்…     

2007-ம் ஆண்டில் 10 மொழி மாற்றுப் படங்கள் உள்பட சுமார் 107 தமிழ்ப் படங்கள் வெளியாகின. அவற்றில் 100 நாள்களைத் தாண்டிய 11 படங்களில் சில, ரசிகர்களாலும் சில, சம்பந்தப்பட்ட நடிகர்களாலும் திரையரங்குகளாலும் ஓட்டப்பட்டுள்ளன. 50 க்கும் மேற்பட்ட படங்கள் 50 நாள்களைக் கடந்து தயாரிப்பாளர்களுக்கும் நடிகர்களுக்கும் மினிமம் கியாரண்டி தந்தன.

உச்ச நட்சத்திரம்!

2007-ம் ஆண்டில் மிகப் பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கிய படம் ரஜினிகாந்தின் “சிவாஜி’. காஸ்ட்யூம், ஸ்டைல் என பல அம்சங்களில் ரஜினிகாந்த் மிக அழகாகத் தோற்றமளித்தப் படங்களில் இதுவும் ஒன்று. பல சர்ச்சைகளுக்கு மத்தியில் வெளிவந்த இந்தப் படம், இதுவரை தமிழ் சினிமாவில் மிக அதிக விலைக்கு விற்பனையான திரைப்படம் என்ற புகழைப் பெற்றது. இதுவரை இல்லாத அளவுக்கு அதிகத் திரையரங்குகளில் வெளியிடப்பட்ட படமும் இதுதான். “சிவாஜி’க்கு வெற்றியா அல்லது வீரமரணமா என்பது இன்னும் மர்மமாகவே உள்ளது.

உலக நட்சத்திரம்!

2007-ம் ஆண்டில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இன்னொரு படம் கமல்ஹாசனின் “தசாவதாரம்’. தமிழ் சினிமாவின் மிகப் பெரிய பட்ஜெட் படமும் இதுவே (சுமார் 70 கோடி). ஆனால் உலகத் தரத்திலான “பெர்ஃபெக்ஷன்’ இருக்க வேண்டும் என்பதற்காக படத்தின் வேலைகள் நீடித்து படம் வெளியாகவில்லை. ஒரு தமிழ் நடிகர் முதல்முறையாக 10 வித்தியாசமான வேடங்களில் நடிக்கும் இந்தப் படத்தைப் பற்றிய எதிர்பார்ப்பு இன்னும் நீடிக்கிறது. 14 மொழிகளில் வெளியாகவுள்ள இந்தப் படத்தின் வியாபாரமும் பெரிய அளவில் பேசப்பட்டு வருகிறது.

சிறப்பு நட்சத்திரம்!

“அடாவடி’, “பெரியார்’, “கண்ணாமூச்சி ஏனடா’, “ஒன்பது ரூபாய் நோட்டு’ என நான்கு படங்களிலும் வித்தியாசமாக நடித்து 2007-ம் ஆண்டில் அதிகப் படங்களில் கதாநாயகனாக நடித்தவர் என்ற பெயரைப் பெறுகிறார் சத்யராஜ். குறிப்பாக, “பெரியார்’, “ஒன்பது ரூபாய் நோட்டு’ படங்களுக்காக விருது பெற்றால் அது செய்தியல்ல; பெறாவிட்டால்தான் அது செய்தி.

சிரிப்பு நட்சத்திரம்!

கடந்த சில ஆண்டுகள் போலவே 2007-ம் ஆண்டும் அதிகப் படங்களில் நடித்த நகைச்சுவை நாயகன் வடிவேலு. எப்படிப்பட்டக் கதையாக இருந்தாலும் இவருடைய காமெடி தங்களது படத்தில் இடம்பெற்றால் போதும் படம் தப்பித்து விடும் என்று பல முன்னணி நடிகர்களும் தயாரிப்பாளர்களும் நம்பிக்கை வைத்துள்ளனர். இவருடைய கால்ஷீட் கிடைக்காததால் பல படங்களின் படப்பிடிப்பையே தள்ளி வைக்கும் அளவுக்கு 2007-ல் பிஸியாக இருந்தவர்.

நம்பிக்கை நட்சத்திரம்!

கணேசனுக்குப் பிறகு மிகப் பெரிய அளவில் வரவேற்பைப் பெற்ற ஓர் அறிமுக நடிகர் இவராகத்தான் இருக்கும். இவர் கார்த்தி. அமீரின் இயக்கத்தில் இவர் அறிமுகமான “பருத்தி வீரன்’ படத்தின் விஸ்வரூப வெற்றி இவருடைய அடுத்த படத்தைப் பற்றிய எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. 375 நாள்களை நோக்கி (சென்னையில்) ஓடிக்கொண்டிருக்கும் “பருத்தி வீரன்’ மெகா ஹிட்டுக்குப் பிறகு அவருக்கு வந்த பல பட வாய்ப்புகளை ஏற்றுக்கொள்ளாமல் உரிய கதையைத் தேர்ந்தெடுத்து நடித்துக்கொண்டிருப்பது தமிழ் சினிமாவில் அவருக்கென ஒரு நிரந்தர இடத்தைப் பிடிப்பார் என்ற நம்பிக்கையை அளிக்கிறது.

தொடர் நட்சத்திரம்!

2007-ம் ஆண்டு “ஆழ்வார்;, “கிரீடம்’, “பில்லா’ என மூன்று படங்களில் நடித்துள்ளார் அஜித். முதலாவது தோல்வியையும் இரண்டாவது மினிமம் கியாரண்டியையும் மூன்றாவது அவருக்குரிய மார்க்கெட்டையும் ஓபனிங்கையும் தொடர்ந்து தக்க வைத்துக்கொள்ளுமளவுக்கான வெற்றியையும் அடைந்துள்ளது.

சுடர் நட்சத்திரம்!

“போக்கிரி’, “அழகிய தமிழ்மகன்’ என 2007-ல் இரண்டு படங்களில் நடித்துள்ளார் விஜய். முதலாவது வெற்றியையும் இரண்டாவது ஓரளவே வரவேற்பையும் பெற்றுள்ளன. தயாரிப்பாளர்கள் விரும்பும் கமர்ஷியல் ஹீரோவாகத் திரையுலகில் தொடர்ந்து நீடித்துக்கொண்டிருப்பது அவருடைய பலம்.

துருவ நட்சத்திரம்!

“கற்றது தமிழ்’, “ராமேஸ்வரம்’ படங்களில் வித்தியாசமாக நடித்து பலருடைய பாராட்டுகளைப் பெற்றுள்ள ஜீவா, புதிய முயற்சிகளுக்கு அளிக்கும் ஆதரவைப் பாராட்டலாம். கமர்ஷியல் ஹீரோவாக வரவேண்டும் என்று கங்கணம் கட்டிக்கொண்டிருப்பவர்களின் பாணியைப் பின்பற்றாமல் தனக்கென ஒரு பாணியைத் தேர்ந்தெடுத்து வித்தியாசமான இளம் நடிகராகத் திகழ்கிறார்.

ஒளிர் நட்சத்திரம்!’

வில்லன், குணச்சிர நாயகன் என 2007-ல் ஏழு படங்களில் நடித்துள்ள பிரகாஷ்ராஜ், தான் தயாரிக்கும் படங்களின் மூலமாகவும் ரசிகர்களின் எதிர்பார்ப்புக்குரியவராக இருக்கிறார். பெரும்பாலான படங்களின் வெற்றிக்கு இவருடைய பங்களிப்பும் ஒரு காரணம். சினிமாவை நேசிக்கும் இவர், கமல்ஹாசன் போலவே தான் சம்பாதிக்கும் பணத்தைத் திரைப்படத் துறையில் முதலீடு செய்வது வரவேற்கத்தக்க சிறப்பான விஷயம்.

பெண் நட்சத்திரம்!

2007-ம் ஆண்டின் மிகச் சிறந்த நடிகை என்று ஜோதிகாவைக் குறிப்பிடலாம். “மொழி’ படத்தில் வாய் பேச இயலாத காது கேட்கும் திறன் அற்ற பெண்ணாக வந்து தன்னுடைய கண்களாலும் முகபாவனைகளாலும் அபாரமான நடிப்புத் திறனை வெளிக்காட்டியவர். திருமணத்துக்குப் பிறகு நடிக்காதது அவருடைய சொந்த விருப்பம் என்றாலும் அவரை என்றும் ஆதரிக்க ரசிகர்கள் தயாராக இருக்கும் அளவுக்கு தன்னுடைய கடைசிப் படத்தில் கலைக்கு மரியாதை செய்திருக்கிறார்.

வெள்ளி நட்சத்திரங்கள்!

விஷால் “தாமிரபரணி’, “மலைக்கோட்டை’ என இரண்டு வெற்றிப் படங்களில் நடித்து கமர்ஷியல் ஹீரோ அந்தஸ்தைத் தக்க வைத்துக்கொண்டிருக்கிறார். ஆனால் ஒரே பாணியிலான நடிப்பு, இன்னொருவரைப் போல காப்பியடிக்கும் காட்சிகள் போன்றவற்றைத் தவிர்க்காவிட்டால் திரைத்துறையில் தனித்துவம் காட்ட முடியாது.

சரத்குமார் “பச்சைக்கிளி முத்துச்சரம்’, “நம் நாடு’ அர்ஜுன் “மணிகண்டா’, “மருதமலை’, தனுஷ் “பரட்டை என்கிற அழகுசுந்தரம்’, “பொல்லாதவன்’, பரத் “கூடல் நகர்’, “சென்னைக் காதல்’ என தலா இரண்டு படங்களில் நடித்துள்ளனர்.

சூர்யா “வேல்’ படத்திலும் ஜெயம்ரவி “தீபாவளி’ படத்திலும் நடித்துள்ளனர்.

விக்ரம், சிம்பு ஆகியோர் படங்கள் எதுவும் வெளிவரவில்லை.

கடந்த ஆண்டு “தீபாவளி’, “கூடல்நகர்’, “ஆர்யா’, “ராமேஸ்வரம்’ என நான்கு படங்களில் நடித்து அதிகப் படங்களில் நடித்த கதாநாயகி என்ற பெயரைப் பெறுகிறார் பாவனா. அனைத்துப் படங்களிலும் வழக்கமான நடிப்புதான்.

“போக்கிரி’, “ஆழ்வார்’, “வேல்’ என மூன்று படங்களில் நடித்துள்ளார் அஸின். “வேல்’ படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார்.

“சிவாஜி’க்குப் பிறகு ஸ்ரேயாவின் மார்க்கெட் அதிகமாகி, அவரைத் தங்களுடைய படங்களில் நடிக்க வைப்பதற்கு முன்னணி நடிகர்களும் பெரிய தயாரிப்பு நிறுவனங்களும் விரட்டிக்கொண்டிருக்கின்றன. அவர் பாலிவுட், ஹாலிவுட் அதிக சம்பளம் தந்தால் கோலிவுட் என்ற கொள்கையில் இருக்கிறார்.

நமீதா வழக்கம் போல அழகு காட்டி தன்னுடைய மார்க்கெட்டைத் தக்க வைத்திருக்கிறார். “பருத்தி வீரன்’ படத்தில் மிகச் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்திய ப்ரியாமணிக்கு விருதுகள் காத்திருக்கின்றன. நல்ல கதையை விட்டுவிட்டு நளினமான காஸ்ட்யூம் பக்கம் இவருடைய பார்வை திரும்பியிருக்கிறது. இயக்குநரைப் பொருத்து நடிப்பாற்றலை உயர்த்திக்கொள்ளலாம். “பில்லா’வில் ஹாலிவுட் நடிகைகள் ஏஞ்சலினா ஜோலி, ஹாலே பெர்ரி ஆகியோரைப் போல காஸ்ட்யூமில் முதல்முறையாக அளவுக்கு அதிகமாக க்ளாமர் காட்டியிருக்கிறார் நயன்தாரா. ஒரு சாரார் ரசித்ததை மட்டும் கணக்கில் கொள்ளாமல் இன்னொரு சாரார் முகம் சுளித்தைதயும் கருத்தில் கொள்ளலாம்.

இசை நட்சத்திரங்கள்!

2007-ம் ஆண்டில் 11 படங்களுக்கு இசையமைத்து முன்னணியில் இருக்கிறார் யுவன்ஷங்கர் ராஜா. அனைத்துப் படங்களிலும் ஹிட் பாடல்களைக் கொடுத்திருந்தாலும் மண்வாசனையுடன் கூடிய “பருத்தி வீரன்’ முதலிடத்தைப் பிடிக்கிறது. இவரையடுத்து ஸ்ரீகாந்த் தேவா 9 படங்களுக்கு இசையமைத்துள்ளார். தேவா 8 படங்களிலும் பரத்வாஜ், இமான், சபேஷ்முரளி ஆகியோர் தலா நான்கு படங்களிலும் இசையமைத்துள்ளனர். ஏ.ஆர்.ரஹ்மான் மூன்று படங்களுக்கு ஹிட் பாடல்களைத் தந்துள்ளார். மேடைகளில் இசை நிகழ்ச்சிகள் நடத்தி வரும் பார்வையற்ற இசைக் கலைஞர் கோமகன் “முதல்முதலாய்’ என்ற படத்துக்கு முதல்முறையாக இசையமைத்தது குறிப்பிடத்தக்கது. பிரபல கர்நாடக இசைக் கலைஞர் லால்குடி ஜெயராமன் “சிருங்காரம்’ படத்துக்கு முதல்முறையாக இசையமைத்ததும் குறிப்பிடத்தக்கது.

நட்சத்திரத் திருமணங்கள்

பரபரப்பை ஏற்படுத்திய நடிகர் ஸ்ரீகாந்த் -வந்தனா ஆகியோரின் திருமணம் மட்டுமல்லாமல், திரையுலகை மகிழ்வித்த இன்னும் சில நட்சத்திரத் திருமணங்கள்…

நடிகர் ஜீவா-சுப்ரியா, நடிகை மாளவிகா-சுமேஷ், நடிகை பூமிகா-பரத் தாகூர், பாடகர் விஜய் யேசுதாஸ்-தட்சணா, நடிகர், நடன இயக்குநர் நாகேந்திரபிரசாத்-ஹேமலதா, நடிகர் நரேன்-மஞ்சு ஹரிதாஸ்

உதிர்ந்த நட்சத்திரங்கள்!

2007 உண்மையிலேயே திரையுலகில் மிகப் பெரிய இழப்புகளையும் சந்தித்தது. நடிகர் விஜயன், நடிகை ஸ்ரீவித்யா,நடிகை ஜோதி, நடிகர் குட்டி, இயக்குநர் ஜீவா, நடிகர் ஏ.கே.சுந்தர், இசையமைப்பாளர் எல்.சுப்பிரமணியம், வீன்ஸ் பிக்சர்ஸ் நிறுவனர் கோவிந்தராஜன், விஜயம் கம்பைன்ஸ் பழனிச்சாமி, தயாரிப்பாளர் ஏ.எல்.எஸ்.கண்ணப்பன், நடிகை லட்சுமியின் தாயாரும் பழம்பெரும் நடிகையுமான ருக்மணி, நடன இயக்குநர் வாமன் என்று பல வருடங்கள் ரசிகர்களின் இதய சிம்மாசனத்தில் கோலோச்சிய பலர் உதிர்ந்தனர். திரையுலகம் வருந்தியது.

வால் நட்சத்திரம்…

ஒரு சினிமாவைப் பற்றிய முறையான மதிப்பீட்டைக் காட்டிலும் சினிமாவே மிக முக்கியமானது. சினிமாவின் தலைவிதி, மக்கள் ரசனையைப் பொருத்தே அமைகிறது. அதற்குப் பொறுப்பானவர்கள் நாம்தான்.

மக்களின் ரசனையைக் கலை வளர்க்கிறது. வளர்ந்துவிட்ட அந்த மக்கள் ரசனை, கலையின் வளர்ச்சியைக் கோருகிறது. மற்ற எந்தக் கலையைக் காட்டிலும் சினிமாவுக்கு இந்த விஷயம் பல மடங்கு பொருந்தும்.

சினிமா ஒரு கூட்டுப் படைப்பாக இருப்பதால் எவ்வளவு பெரிய மேதைகளாக இருந்தாலும் தங்களுடைய காலகட்டத்தில் நிலவும் ரசனை மற்றும் முக்கிய விஷயங்களைத் தங்களுடைய படைப்புகளில் பதிவு செய்தல் அவசியம். இல்லாவிட்டால் அந்தக் கலைஞனும் கலைப் படைப்பும் அழிந்துவிடக் கூடிய சாத்தியக்கூறுகள் அதிகம்.

“மக்கள் விரும்புகிறார்கள் நாங்கள் என்ன செய்ய’ என்று சப்பைக் காரணம் கட்டி மலிவான படங்களைத் தராமல் மக்களின் ரசனையை உயர்த்தும் படங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க சம்பந்தப்பட்ட கலைஞர்களும் தயாரிப்பாளர்களும் முன்வர வேண்டும்.

அதேபோல திரைத்துறையில் கடும் முயற்சிக்குப் பிறகு வாய்ப்பு கிடைக்கப் பெறும் புதியவர்கள், சமுதாயத்தில் ஒரு மாற்றத்தை நிகழ்த்தக் கூடிய வலிமைதான் தங்களுக்கு வாய்ப்பாகக் கிடைத்திருக்கிறது என்பதை உணர்ந்து தங்களது படைப்பில் கவனம் செலுத்தினால் “உலகத் தரம், உலகத் தரம்’ என்ற பதம் மறைந்து “தமிழ்த் தரம்’ என்ற வரம் வாய்க்கப் பெறும்.

மனோஜ்கிருஷ்ணா

Posted in 2007, Actors, Ajith, Cinema, Dinamani, EVR, Films, Flashback, Kamal, kamalahasan, Kamalahassan, Kamalhasan, Kamalhassan, ManojKrishna, Movies, Periyaar, Periyar, Rajini, Rajiniganth, Rajinikanth, Rajnikanth, Shivaji, Sivaji, Stars, Vadivel, Vadivelu, Vijai, Vijay | Leave a Comment »

Display of power and the arrogance behind the Govt sponsored conferences: DMK at Nellai

Posted by Snapjudge மேல் திசெம்பர் 6, 2007

பலமல்ல, பலவீனம்!

தொடர்பான முழுமையான செய்தித் தொகுப்பு: DMK youth wing conference in Tirunelveli – Preparations, Arrangements, Details « Tamil News

நெல்லையில் நடைபெற இருக்கும் திமுக இளைஞர் அணி மாநாட்டுக்காகத் தமிழகமே விழாக்கோலம் பூண்டிருப்பதுபோல இருக்கிறது. பார்க்கும் இடமெல்லாம் டிஜிட்டல் பேனர்கள். கண்ணெட்டும் தூரமெல்லாம் கறுப்பு சிவப்பு கொடிகள். சினிமா விளம்பரங்களைப் பின்னுக்குத் தள்ளும் அளவுக்கு சுவரொட்டிகள். ஆளும் கட்சியின் அதிகார மையம் தனது நேரடி மேற்பார்வையில் நடத்தும் மாநாடு என்றால் சும்மாவா பின்னே?

இந்தக் கோலாகலங்களை எல்லாம் பார்க்கும்போது, மனதிற்குள் சற்று நெருடல். சுதந்திரம் பெற்று அறுபது ஆண்டுகள் கடந்துவிட்டன. இதுவரை இந்தியக் குடியரசு 14 நாடாளுமன்றத் தேர்தல்களைச் சந்தித்து விட்டிருக்கிறது. மக்களாட்சி மலர்ந்த ஆரம்ப காலங்களில், அரசியல் கட்சிகள் தங்களது செல்வாக்கை நிலைநாட்டவும், கொள்கைகளை மக்களிடம் எடுத்துச் சொல்லவும், மாநாடு மற்றும் பேரணிகள் தேவைப்பட்டன.

இதுபோன்ற மாநாடுகள் மூலம், தங்களது தொண்டர்களுக்கு எழுச்சி ஏற்படுத்துவதும், மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்துவதும் அப்போது தேவையாக இருந்தது என்பதை மறுப்பதற்கில்லை. அதற்குக் காரணம், இந்த அளவுக்கு ஊடகங்களின் தாக்கம் மக்கள் மத்தியில் இருக்கவில்லை என்பதுமட்டுமல்ல, மக்களிடம் தெளிவான அரசியல் சிந்தனை இல்லாமல் இருந்ததும் முக்கியமான காரணம். இப்போது நிலைமை அதுவல்ல. அடுப்பங்கரைவரை அரசியல் பேசப்படுகிறது என்பதும், ஒவ்வொரு வாக்காளரும் தெளிவான அரசியல் சிந்தனை உடையவராக இருப்பதும் மறுக்க முடியாத உண்மை.

மாநாடு, பேரணி என்கிற பெயரில் பறக்க விடப்படும் கொடிகளுக்குப் பயன்படும் துணிகள் இருந்தால், உடுக்க உடையின்றி அவதிப்படும் தெருவோரவாசிகளின் அவசரத்தேவை பூர்த்தி செய்யப்பட்டுவிடும். போஸ்டர்களுக்காகச் செலவிடப்படும் காகிதம் ஆயிரக்கணக்கான குழந்தைகளின் பாடப்புத்தகத்துக்குப் பயன்படும். டிஜிட்டல் பேனர்களுக்குச் செலவிடும் பணத்தில் மாவட்டம்தோறும் இளைஞர்களுக்கு உடற்பயிற்சி மையம் அமைத்து ஆரோக்கியமான வருங்காலத்துக்கு வழிகோல முடியும்.

இளைஞரணி மாநில மாநாட்டுக்குப் பல கோடி ரூபாய் செலவாகும் என்று சொல்லப்படுகிறது. தமிழகம் முழுவதிலிருந்தும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் நெல்லையை நோக்கித் தொண்டர்களுடன் செல்ல இருக்கின்றன. எத்தனை லிட்டர் டீசல் மற்றும் பெட்ரோல் வீணடிக்கப்படுகிறது என்பது ஒருபுறமிருக்க, அதனால் ஏற்படப்போகும் சுற்றுச்சூழல் பாதிப்பு மறுபுறம். எத்தனை இளைஞர்களின் மனித சக்தி, மாநாடு என்கிற பெயரில் வீணடிக்கப்படப் போகிறது என்பதை யோசித்துப் பார்த்தால், இத்தனை மணித்துளிகளை நம்மைத் தவிர உலகில் வேறு யாராவது வீணடிப்பார்களா என்கிற கேள்வி அலட்டுகிறது.

மற்ற கட்சிகள் டிஜிட்டர் பேனர் வைப்பதற்குத் தரப்படும் தடைகளும், கட்டுப்பாடுகளும் ஆளும் கட்சி மாநாடுக்கு மட்டும் ஏன் தரப்படுவதில்லை என்கிற கேள்வி எழுப்பப்படுகிறது. இந்தக் கேள்வியை எழுப்புபவர்கள் ஆளும் கட்சியாக இருந்திருந்தால், அவர்கள் மட்டும் எப்படி நடந்து கொள்ளப் போகிறார்கள் என்று யோசிக்கும்போது சிரிப்பு வருகிறது. ஆளும் கட்சி, எதிர்க்கட்சி என்கிற வேறுபாடு இல்லாமல் இந்த விஷயத்தில் அனைவருமே குற்றவாளிகள்தான்.

இப்படி கூட்டத்தைக் கூட்டித்தான் தங்களது பலத்தையும் செல்வாக்கையும் நிரூபிக்க வேண்டும் என்று நினைக்கும் இந்த அரசியல் கட்சிகளுக்குத் தன்னம்பிக்கை இல்லாமல் இருப்பதுதான், இப்படி மாநாடு மற்றும் பேரணிகள் கூட்டப்படுவதன் காரணம் என்பது பாமரனுக்குப் புரியத் தொடங்கிவிட்டது. நமது அரசியல் தலைவர்களுக்கு மட்டும் ஏன் இது தெரியவில்லை?

மக்களின் பிரச்னைகளுக்காகப் போராட்டம் நடத்துவதையும், பேரணி நடத்துவதையும் நாம் எதிர்க்கவில்லை. ஒரு ஜனநாயகத்தின் சில நியாயமான பிரச்னைகளை அரசின் கவனத்துக்குக் கொண்டுவர அவை தேவைப்படுகிறது. ஆனால், கட்சி மாநாடு என்கிற பெயரில் இளைஞர்களையும், தொண்டர்களையும், பொதுமக்களையும் இம்சிப்பதை அரசியல்வாதிகள், அதுவும் பொறுப்பான பதவியை வகிப்பவர்கள் தவிர்க்க வேண்டும். இதுபோன்ற மாநாடுகள் பலத்தைக் காட்டவில்லை; பலவீனத்தைத்தான் வெளிச்சம் போடுகின்றன!

————————————————————————————————————————————————————-
மாநாடு நடந்த மைதானத்தின் கதி என்ன?

திருநெல்வேலி, டிச. 28: திருநெல்வேலியில் திமுக இளைஞரணி மாநில மாநாட்டிற்கு பயன்படுத்தப்பட்ட மருத்துவக் கல்லூரி மைதானம் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய ஒரு மாதம் அவகாசம் கேட்டு கல்லூரி முதல்வர் மதுரை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளார்.

பாளையங்கோட்டையிலுள்ள திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மைதானத்தில், திமுக இளைஞரணி மாநில மாநாடு கடந்த டிச. 15, 16-ம் தேதிகளில் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டபோது, அதை எதிர்த்து திருச்சி மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற இளைஞரணிச் செயலாளர் என்.ஆர். சிவபதி, மதுரை உயர்நீதி மன்றக் கிளையில் பொதுநலன் மனுத் தாக்கல் செய்தார்.

அதில் அரசுக் கல்லூரி விளையாட்டு மைதானங்களில் அரசியல் கட்சிக் கூட்டங்கள் நடத்த பயன்படுத்தக்கூடாது என அரசு விதி உள்ளது. இதை மீறி திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி விளையாட்டு மைதானத்தில் திமுக மாநாடு நடைபெறவுள்ளதால் அம்மாநாட்டிற்கு தடை விதிக்க வேண்டும் என அவர் தெரிவித்து இருந்தார்.

இந்த மனுவை விசாரணைக்கு ஏற்ற நீதிமன்றம், சில நிபந்தனைகளுடன் மாநாடு நடத்த கடந்த நவ. 23-ம் தேதி அனுமதி அளித்து உத்தரவிட்டது.

குறிப்பாக மாநாடு முடிந்த பிறகு, விளையாட்டு மைதானம் எப்படி இருந்ததோ அதே அப்படியே சரிசெய்து மீண்டும் ஒப்படைக்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டது.

அறிக்கைத் தாக்கல் செய்ய அவகாசம்: மாநாடு முடிந்த பிறகு, பொதுப்பணித் துறைப் பொறியாளர், கல்லூரி முதல்வர் ஆகியோர் மைதானம் தொடர்பான அறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும்.

கல்லூரி முதல்வர் டிச. 20-ம் தேதி உயர் நீதிமன்ற பதிவுத் துறையிடம் மைதானம் தொடர்பாக தனி அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டு இருந்தது.

மாநாடு முடிந்த நிலையில், மைதானம் தொடர்பான அறிக்கையைத் தாக்கல் செய்ய மேலும் ஒரு மாதம் அவகாசம் கேட்டு கல்லூரி முதல்வர் மதுரை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளார். மாநாடு பந்தல் அகற்றும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இடையில் மழை பெய்ததால் பணியில் தேக்க நிலை ஏற்பட்டது. மாநாட்டு மைதானம் முழுமையாக சரிசெய்யப்பட்ட பின்னர் அதை பார்வையிட்டு அறிக்கை தாக்கல் செய்ய கால அவகாசம் தர வேண்டும் என மனுவில் கேட்டுக் கொண்டுள்ளதாக கல்லூரி முதல்வர் விநாயகம் தெரிவித்தார்.
————————————————————————————————————————————————————-

Posted in abuse, Alagiri, Alakiri, Anbalagan, Anbalakan, Anbazagan, Anbazhagan, Anbazhakan, Arcot, Arcot N Veerasamy, Arcot Veerasami, Arcot Veerasamy, Bribery, Bribes, Conference, Corruption, Dinamani, DMK, Economy, Elections, Electricity, Kanimoli, Kanimozhi, Kanimozi, Karunanidhi, Karunanidhy, Karunanidi, Karunanithi, kickbacks, Law, M Karunanidhi, M karunanidhy, M karunanithi, Media, MK, MK Alagiri, MK Alakiri, MK Azhagiri, MK Azhakiri, MK Stalin, MSM, MuKa, MuKa Alagiri, MuKa Stalin, Nellai, Op-Ed, Order, Politics, Polls, Poor, Power, Prices, Procession, Rich, Stalin, State, Tirunelveli, voter, Votes, Waste, Youth | 2 Comments »

Indian Freedom Fighters: Joseph George – Pazha Athiyaman in Dinamani Kathir

Posted by Snapjudge மேல் திசெம்பர் 3, 2007

முகங்கள்: “”மாறாமல் இருப்பது மைல்கல்லும் மதியீனனும்தான்!”

மோதிலால் நேரு, காந்தி, நேரு, ராஜாஜி, பெரியார் போன்ற பெருந்தலைவர்களின் பேரன்புக்குப் பாத்திரமான இந்திய அளவில் காங்கிரஸ் இயக்கத்துக்காகப் பாடுபட்ட தலைவர் ஜோசப் ஜார்ஜ். வரலாற்று மாணவர்களின் பார்வைக்கும் சிக்காமல் காணாமல் போய்விட்ட இவரைப் பற்றி சமீபத்தில் ஆய்வு நூல் ஒன்றை வெளியிட்டிருக்கிறது காலச்சுவடு பதிப்பகம். எழுதியிருப்பவர் அகில இந்திய வானொலியின் நிகழ்ச்சி (திருப்பதி) அமைப்பாளர் பழ. அதியமான். எழுத்தாளர் வ.ரா. வின் படைப்புகளை ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்றதும் எழுத்தாளர் தி.ஜ.ர. பற்றி இவர் எழுதிய நூல் சாகித்ய அகாதமியால் வெளியிடப்பட்டிருப்பதும் இவருடைய சிறப்புகள். அவரைச் சந்தித்தோம்.

இந்திய விடுதலை வரலாற்றில் ஜோசப் ஜார்ஜின் இடம்?

மைய நீரோட்ட அரசியலில் கிறித்துவர்களின் பங்கேற்பு அவ்வளவாக இல்லை. இந்தக் குறையைத் தீர்த்து வைப்பதாக இருக்கிறது ஜார்ஜ் ஜோசப்பின் இந்திய விடுதலைப் போராட்டப் பங்களிப்பு. மகாத்மா காந்தி, “”ஜார்ஜ் ஜோசப் என்னுடைய நெருக்கமான தோழர்களுள் ஒருவர். நான் எரவாடா சிறையில் ஓய்வெடுத்துக் கொண்டிருந்தபோது யங் இந்தியாவின் ஆசிரியர். அதற்கு முன்னால் என் விருப்பப்படி (மோதிலால் நேருவின்) “தி இண்டிபென்டன்ட்’ பத்திரிகையின் ஆசிரியர். நாட்டுக்காக வருமானமுள்ள வழக்கறிஞர் தொழிலைத் துறந்தவர். சிறை சென்றவர். உற்சாகமுள்ள நாணயமான தேசியத் தொண்டர்.” இது ஜார்ஜ் ஜோசப் வாழும் காலத்திலேயே காந்தி (1929)யிடமிருந்து அவருக்குக் கிடைத்த பாராட்டு.

காந்தி பாராட்டிய அளவுக்கு முக்கியத்துவம் வாய்ந்த ஜோசப், தீவிர அரசியல்வாதியாக, தொழிற்சங்கவாதியாக, வழக்கறிஞராக தமிழக தேசிய அரசியலில் 25 ஆண்டு காலம் செயல்பட்டார். ஆலைத் தொழிலாளர், குற்றப் பரம்பரையினர், வரதராஜுலு நாயுடு மீதான வழக்கு போன்றவற்றில் ஜார்ஜ் ஜோசப்பின் பணி மிகுதி. வ.ரா. சொன்னது போல ஜோசப்பும் ராஜாஜியும்தான் 1910-லிருந்து 1938 வரை ஏறக்குறைய 25 ஆண்டுகாலம் தமிழக காங்கிரசின் வேலைத் திட்டங்களை யோசித்துத் தீர்மானித்தனர். 100 ஆண்டுகால காங்கிரஸ் வாழ்க்கையில் நான்கில் ஒரு பகுதி. ஆனால் ஜார்ஜ் ஜோசப் என்றால் யார் என்று கேட்கும்படிதான் நிலைமை இருக்கிறது.

ஜோசப் பரவலாக அறியப்படாததற்கு விடுதலைக்கு முன்பே மறைந்துவிட்டதுதான் காரணமாக இருக்குமா?

அப்படித் தோன்றவில்லை. பாரதி, சத்தியமூர்த்தி, வ.உ.சி. போன்றவர்கள்கூட சுதந்திரத்துக்கு முன்பு இறந்தவர்கள்தானே? ஜார்ஜ் ஜோசப் சிறுபான்மைச் சமூகத்தில் பிறந்ததும் அரசியல் வாரிசோ, குடும்ப வாரிசோ தொடர்ந்து அவரைப் பற்றிச் சமூகத்தில் பேச்சலைகளை உருவாக்காததும் காரணங்களாக இருக்கலாம். ஆனால் சரியாக மனசாட்சிப்படி செயல்பட்டால் காலம் கடந்தாவது அறிவுலகத்திலாவது நினைக்கப்படுவார்கள் என்பது ஓர் உண்மை.

தன் நிலைப்பாடுகளைத் தொடர்ந்து மாற்றிக் கொண்டிருந்தார் ஜோசப்… காந்திக்கு நெருக்கமாக இருந்து பின்பு அவருடன் முரண்பட்டு நீதிக்கட்சியில் இணைந்து செயல்பட்டு மீண்டும் காங்கிரஸில் தன்னை இணைத்துக் கொண்டவர். இந்த மாற்றங்கள் அவருடைய செல்வாக்கைக் குறைத்திருக்குமா?

இருக்கலாம். கருத்துகளை அடிக்கடி மாற்றிக் கொண்டிருந்தவர் என்றொரு கருத்து உண்டு. அதைப் பற்றி வ.ரா. இப்படிச் சொல்கிறார்: “”மைல் கல்லும் மதியீனனும்தான் மாறாம இருப்பாங்க”.

ஜோசப் அறிவாளி. காந்தி கருத்தை மாற்றிக் கொள்ளவில்லையா? கலப்பு மணத்துக்கு முதலில் காந்தி ஒப்புக் கொள்ளவில்லையே. சுதேசா- கிருபளானி கலப்பு மணத்துக்கு உடனே வா ஒப்புக் கொண்டார் காந்தி?

“மாஸ்கோவில் மழை பெய்தால் மதுரையில் குடை பிடிப்பார்கள் கம்யூனிஸ்டுகள்’ என்ற புகழ் பெற்ற பத்திரிகை வாசகத்தை கம்யூனிஸ்டுகளுக்கு எதிராக எழுதின மாஜினி பிறகு கம்யூனிஸ்ட்டாக மாறவில்லையா? மாறுவது, முரண்படுவது அறிவுக்கு இயல்பு. ஜோசப்பின் முரண்பாடுகளைத் தவறென்று சொல்ல முடியாது.

அப்படி மாறுவதற்கு அவருக்குப் போதுமான காரணங்கள் இருந்தனவா?

காந்தி, நேரு ஆகியோருடன் நெருக்கமாக இருந்த ஒருவர், அவர்கள் படுவேகமாக அரசியல் களத்தில் செல்வாக்குடன் வளர்ந்து வருவதைக் கண்டும் ஜோசப் அவர்களுக்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்தார். அதில் அவருடைய சுயநலம் இருந்திருக்க வாய்ப்பில்லை. அது அப்போதைய அரசியல், சமூக சூழ்நிலையைப் பொறுத்தே அமைந்திருந்தது. சில நேரங்களில் அறிவுப் பூர்வமாகவும் சில நேரங்களில் உணர்ச்சிபூர்வமாகவும் அவர் முடிவெடுத்திருக்கிறார்.

குற்றப் பரம்பரையினர் என்று ஆங்கிலேய ஆட்சியில் சட்டத்தின் பிடியில் சிக்கித் தவித்தவர்களுக்கு ஜோசப் பாடுபட்டது குறித்து?

குற்றப் பரம்பரையினருக்கு ஜோசப் அனுசரணையாகச் செயல்பட்டது பற்றி இந்த நூலில் மிகக் குறைவான தகவல்களே தந்திருக்கிறேன். அவர் மறைந்து 70 ஆண்டுகள் ஆன பின்பும் மதுரையில் இருக்கும் அவருடைய கல்லறையில் நினைவு தினத்தன்று குறிப்பிட்ட பிரிவினர் அஞ்சலி செலுத்தி வருகிறார்கள். அதிலிருந்தே அவர்களுக்கு ஜோசப் எந்த அளவுக்குப் பாடுபட்டிருக்கிறார் என்பதை உணர முடிகிறது.

Posted in 1947, Adhiaman, Adhiyaman, Athiaman, Athiyamaan, Athiyaman, Biography, Biosketch, British, Congress, Dinamani, Faces, Fighters, Freedom, Gandhi, Gandi, George, Independence, India, Joseph, Joseph George, Kaalchuvadu, Kalchuvadu, Kathir, Mahathma, Mahatma, Pazha Athiyaman, people, Research, Unknown | 1 Comment »

La Sa Ra: Lalgudi Saptharishi Ramamirtham: Anjali, Memoirs, Reviews

Posted by Snapjudge மேல் ஒக்ரோபர் 31, 2007

——————————————————————————————————————————————

எழுத்தாளர் லா.ச.ரா. மறைந்தார்

சென்னை, அக். 30: “லாசரா’ என்று அழைக்கப்படும் எழுத்தாளர் லா.ச. ராமாமிருதம் (92) சென்னை அம்பத்தூர் தனியார் மருத்துவமனையில் செவ்வாய்க்கிழமை (அக்.30) அதிகாலையில் காலமானார். அவர் இரு தினங்களாக உடல் நலம் இல்லாமல் இருந்தார்.

அவருக்கு மனைவி ஹேமாவதி, எழுத்தாளர் லா.ரா. சப்தரிஷி உள்ளிட்ட நான்கு மகன்கள், ஒரு மகள் உள்ளனர்.

பெங்களூரில் 1916-ம் ஆண்டு அக்டோபர் 30-ம் தேதி பிறந்த லா.ச.ரா.வின் பூர்விகம் லால்குடி.

ஆரம்ப காலத்தில் அவர் எழுதிய 5 கதைகள் “மணிக்கொடி’ இதழில் பிரசுரமாகி சிறப்புப் பெற்றன.

மனித மனத்தின் மெல்லிய பக்கங்களைத் தனக்கே உரித்தான பாணியில் எழுதி, எழுபதாம் ஆண்டுகளில் இளைய தலைமுறை எழுத்தாளர்களுக்குத் தூண்டுகோலாய் அமைந்த லா.ச.ரா. தனது 92-வது பிறந்த நாளிலேயே மறைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

 • லா.ச.ரா. எழுதிய “சிந்தாநதி’ நாவலுக்கு 1989-ம் ஆண்டு சாகித்ய அகாதெமி விருது கிடைத்தது.
 • உலகக் கவிஞர்கள் மன்றத்தின் கெüரவ விருது (1982),
 • தமிழக அரசின் கலைமாமணி விருது,
 • காஞ்சி சங்கராசாரியார்கள் இணைந்து அளித்த “கதாரஸன் சதுரஹ’ என்ற விருது,
 • இலக்கியச் சிந்தனை விருது (1995),
 • அக்னி அட்சர விருது (1992),
 • 1997-ல் வானவில் பண்பாட்டு மையத்தின் பாரதி விருது ஆகியவை இவருக்குக் கிடைத்த சிறப்புகள்.

17 வயதில் அவர் “தி எலிபென்ட்’ என்ற தலைப்பில் ஆங்கிலத்தில் எழுதிய கதைதான் முதலில் பிரசுரமானது.

லா.ச.ரா. எழுதிய 300க்கும் மேற்பட்ட சிறுகதைகள், 6 புதினங்கள், 6 கட்டுரைத் தொகுப்புகள் வெளியாகியுள்ளன. அவர் “அமுதசுரபி’ இதழில் “தி பாய் ப்ரெண்ட்’ என்று எழுதியதே அவரது கடைசி கதையாகும்.

மத்திய அரசின் பஞ்சாப் நேஷனல் வங்கியில் பணியாற்றி மேலாளராக ஓய்வு பெற்றவர் லா.ச.ரா.

அவரது மகன் சப்தரிஷியின் வீட்டு முகவரி: ஏ 6, அட்சயா ஹோம்ஸ், சரஸ்வதி நகர், திருமுல்லைவாயல் (சேகர் ஸ்டோர்ஸ் அருகில்), சென்னை -62. தொலைபேசி: 26375470, செல்: 94444 97502.
——————————————————————————————————————————————

சிந்தாநதி சகாப்தம்: – அசோகமித்திரன்

சென்ற திங்கள்கிழமை 29-ம் தேதி மறைந்த லா.சா.ராமாமிர்தம், 1916-ல் லால்குடியில் பிறந்தார். அன்று கீழ்மத்திய வகுப்பினருக்குக் கிடைத்த எளிய படிப்பை வைத்துக் கொண்டே அவர் ஆங்கிலத்தில் எழுத முயன்றார். அன்று அவருடைய பெரிய ஆதரிசம் இளம் அமெரிக்க எழுத்தாளர் ஹெமிங்க்வே. ஆனால், விரைவில் அவருடைய உண்மையான சாதனம் “தமிழ்’ என்று தெரிந்து விட்டது.

அதன்பின் 50 ஆண்டு காலம் லா.சா.ரா. வியந்து ஆராதிக்கத்தக்க தமிழ் எழுத்தாளராக விளங்கினார்.

சிறுகதைகள் எழுதிவந்த அவரை அவருடைய 50-வது வயதில் சென்னை வாசகர் வட்டம் “புத்ர’ என்ற நாவல் எழுத வைத்தது. அதன்பின் அவர் இரு நாவல்கள் எழுதினாலும் அவருடைய இலக்கியச் செல்வாக்கு சிறுகதை வடிவத்தில் இருந்தது.

அவருக்கு 1989-ல் “சாகித்ய அகாதெமி விருது’ பெற்றுத் தந்த சுயசரிதை “”சிந்தாநதி” தினமணி கதிரில் தொடராக வந்தது.

ஒரு விதத்தில் லா.சா.ரா. அவர்கள் ஆயுள் முழுக்க ஓர் அம்பாள் உபாசகராக இருந்திருக்கிறார். தன் அன்னை மீது அவர் கொண்டிருந்த ஆழ்ந்த பக்தி அவருடைய பல படைப்புகளில் வெளிப்பட்டிருக்கிறது. அன்பு, சாந்தம், பரிவு, தியாகம் ஆகிவற்றுடன் கோபம், சாபம், ரெüத்திரம் எனப் பல அம்சங்கள் உள்ளடக்கியது அவருடைய தாய் உபாசனை.

தமிழ் வரையில் இந்து மத தெய்வங்களை அவர் போல இலக்கியக் குறியீடாக பயன்படுத்தியவர் எவருமே இல்லை எனலாம். அதேபோல இந்தியத் தத்துவச் சொற்களையும் அவர் போலக் கையாண்டவர் தமிழில் கூற முடியாது. இக் குறியீடுகள் தவிர அவருடைய படைப்புகளில் இறுக்கமான கதையம்சமும் இருக்கும். ஒரு முற்போக்கு விமரிசகர் இவரையும், இன்னொரு எழுத்தாளரான மெüனியையும் இணைத்து மேலோட்டமாகக் குறிப்பிட்டதைப் பலர் திருப்பி எழுத நவீன தமிழ் இலக்கிய உலகில் ஒரு விசித்திரமான பிரிவு ஏற்பட்டது. அது இரு எழுத்தாளர்களுக்கும் நியாயம் இழைக்காததுடன் அத்தகைய விமரிசகர்களுக்குப் படைப்புகளுடன் நேரிடைப் பரிச்சயம் இல்லை என்றும் தெரியப்படுத்தி விடும்.

லா.சா.ரா.வின் சிறுகதைகளைப் பத்திரிகையில் படித்து அவரைத் தேடிப் போய் அவரை நூல் வடிவத்தில் வாசகர்களுக்கு அளித்தப் பெருமை கலைஞன் மாசிலாமணி அவர்களைச் சேரும். சுமார் 7 ஆண்டுகள் முன்பு லா.சா.ரா.வைக் கெüரவிக்கும் விதத்தில் அவருடைய ஆயுட்காலப் படைப்பிலிருந்து தேர்ந்தெடுத்து ஒரு ரீடர் கலைஞன் பதிப்பகம் வெளியிட்டது. லா.சா.ரா.வுக்கு இருந்த இலக்கியச் செல்வாக்குக்கு இணையாக அவருக்கு பரிசுகள், விருதுகள் அளிக்கப்படவில்லை.” சிந்தாநதி’ என்ற படைப்புக்கு அளிக்கப்பட்ட சாகித்ய அகாதெமி விருது கூட மிகவும் காலம் கடந்து அளிக்கப்பட்ட ஆறுதல் பரிசு.

லா.சா.ரா.வின் படைப்புகள் பல இந்திய மற்றும் அயல் மொழிகளில் மொழியாக்கம் செய்யப்பட்டுப் பல இலக்கியத் தொகுப்புகளில் இடம் பெற்றிருக்கின்றன. குறிப்பாக சிகாகோ பல்கலைக்கழகம் வெளியிட்ட “மஹஃபில்’, பெங்குவின் நிறுவனத்தார் வெளியிட்ட “நியூ ரைட்டிங் இன் இந்தியா’ செக் மொழியில் அவரை மொழியாக்கம் செய்த கமீல் ஜீவலபில் என்ற தமிழ் ஆய்வாளர் சுதந்திர இந்தியாவின் முக்கிய எழுத்தாளர்களில் ஒருவராக லா.சா.ரா.வைக் கருதினார்.

நூற்றுக்கு மேற்பட்ட சிறந்த சிறுகதைகள் லா.சா.ரா. எழுதியிருந்தாலும் அவருடைய “பாற்கடல்’ என்ற படைப்பைத் தலையாயதாகக் கூறுவார்கள். அவருடைய “புத்ர’ மற்றும் “அபிதா’ நாவல்கள் மொழிநடையால் தனித்துச் சிறந்து விளங்கும். கட்டுரை நூல் “சிந்தாநதி’ அவருடைய இயல்பானக் குறியீட்டு நடையில் பிரமிக்கத்தக்க விதத்தில் எழுதப்பட்டிருக்கும். லா.சா.ரா. எழுதிய காலத்தில் உயரிய நவீன தமிழ்ப் படைப்பிலக்கியம் புதுமைப்பித்தன், க.நா.சுப்பிரமணியன், கு.ப.ராஜகோபாலன் என்று ஒரு அணியும் கல்கி, ஜெயகாந்தன், விந்தன் என்றொரு அணியுமாக இருந்தது. இரண்டிலும் அடங்காதது லா.ச.ரா. ஒரு தனிப்பாதையில் எழுதினார். அவருடன் ஒரு சகாப்தம் முடிவுக்கு வருகிறது.
——————————————————————————————————————————————

தூக்கமே! நீ அதிருஷ்டசாலி! – லா.ச.ராமாமிருதம் :: appusami.com

தூக்கமே, நீ இலாதுபோனால் துக்கங்களுக்கு முடிவு ஏது? மறதி எனும் மருந்து தந்த மாபெரும் மருத்துவம் அல்லவா நீ?

உன் வருகை தெரிகிறது; ஆனால் நீ வந்தது அறியேன்; அறிய நீ விடுவதில்லை.

நான் விழித்திருக்கையிலேயே நீ இழைத்த மருந்தை என் கண் சிமிழில் எப்போது வழித்தாய்? இமைமீது உன் முத்தத்தின் மெத்துதான் இறுதியாக நான் அறிந்தது. என் கண்ணுக்குள் நீ வைத்த மையில் யாவும் மறைந்த இழைவில் நானும் மறைந்தபின் என் கண்ணுக்குள் நீ வந்து புகுந்தது எப்போ? வந்து அங்கு நீ என் செய்கிறாய் என்று நான் அறிய முடியுமா?

உன்முகம் ஆசைமுகம். எப்போதும் மறைவு முகம் எதிர்ப்பட்டு விட்டால் உண்மை உரு தெரிந்துவிடும் என்ற பயமா?

நான் தேடியோ, நீயாக வந்தோ, எப்படியோ நேர்ந்து விடுகிறாய்.

நினைவோடு உன்னை நான் சிந்திக்க நேர்கையில் உன்மை நான் நினைப்பது எப்படி எப்படியோ. தினப்படி உன் மடியில் என்னைத் தாலாட்டு மறுதாய்.

ஆணுக்குப் பெண், பெண்ணுக்கு ஆண், நினைவுக்கு வைப்பாட்டி நீ மானம் அறியாதவரேயில்லை.

மரணத்தின் தன்மையைக் கரணத்தில் ஊட்டும் உபதேச மோனகுரு.

உயிருக்கு காவல். மரணத்தின் தாதி.

என் துயரங்கள் மறக்க உன்னைத் தேடுகிறேன். ஆனால் நீ வந்ததும் உன்மை மறந்து விடுகிறேன். நீ வந்ததும் என்னையே எனக்கு நினைப்பில்லை. உன்னை நினைவில் நிறுத்துவது எப்படி? உன் நன்றி நான் உன்னை மறந்தாலும் என்னை நீ மறப்பதில்லை. இதுவே என் பெருமை, என் வாழ்வு. நன்மையின் தன்மையே இதுதான். இருவர் ஞாபகத்தை அது நம்பியில்லை, ஒருவர் செய்கையில் வேரூன்றி விட்டபின்.

உனை நான் மறந்தாலும், உனக்கு என் நினைவிருக்க, நீ என் சுமைதாங்கி.

நினைவும் மறதியும், விழிப்பும் தூக்கமும் மாறி மாறி இரவு குவிந்த கண் மலரிதழ், செம்முலாம் உன் கண்டு விரிகையில், இன்றைய விழிப்பில் பிறந்த வண்ணங்கள் கூட்டி நேற்றைய நினைப்பில் வரைந்த சித்திரம் ஒளியும் நிழலுமாய் உலகம் தக தக அழகுகள் வீசி காக்ஷ¢ விரியுதம்மா. எல்லாம் இன்பமயம். உடலும் மனமும் லகுவும் லயமுமாய் சிறுத்தையின் சோம்பல் முறித்தெழுகின்றன.

– நன்றி கணையாழி
——————————————————————————————————————————————

லா.ச.ராமாமிர்தம்

– மதுசூதனன் தெ.|பிப்ரவரி 2002

தமிழ்ப் புனைகளத்தில் ‘லா.ச.ரா’ என்ற பெயர் நிலைத்துவிட்டது. தமிழ்ச் சிறுகதை மரபு தனக்கான பயணிப்பில் நின்று கொண்டிருந்த போது தனது திறன்கள் மூலம் படைப்புலகில் புதுமைகளை கொண்டு வந்தவர்.

”பொதுவாக ஒரு தத்துவசாரமும் உக்கிரமான ஆத்மதாபமும் என் எழுத்தின் உள்சரடாக ஓடுவதே என் தனித்துவம்” என்று தன்னைப் பற்றிய சுய அறிமுகத்தில் குறிப்பிடுகிறார்.

லால்குடியில் பிறந்த ராமாமிருதம் 1937ல் எழுதத் தொடங்கி தனக்கென தனிப்பாணி ஒன்றை அமைத்துக் கொண்டார். தனது பதினைந்து பதினாறாவது வயதில் எழுத ஆரம்பித்த அவரது வேகம் லாசராவுக்கு ஓர் தனித்தன்மை கொண்ட ஓர் எழுத்துநடையைக் கொடுத்துள்ளது. சிறுகதை, கவிதை, நாவல்கள், கட்டுரைகள் என பல களங்களிலும் இயங்கியவர். ஆனாலும் எழுதிக் குவித்தவர் அல்ல. ஆனால் அவர் எழுதியவை ஆழமும் அழகும் தனிச்சிறப்பும் கொண்டவை.

‘சாதாரணமாகவே நான் மெதுவாக எழுது பவன். ஆனால் சதா எழுதிக் கொண்டிருப்பவன்’ என்ற கொள்கையை வரித்துக் கொண்டிருந்தவர். மேற்கத்திய இலக்கியங்களில் அதிகம் நாட்டம் கொண்டிருந்தார். அவரது பாத்திரங்கள் பல அவராகவே ஆகி, வார்த்தையாக, கவிதையாக, துடிப்பும் வெடிப்புமாகப் பேசு கின்றது. பேசிக் களைத்தால் சிந்திக்கின்றது. அதுவும் களைப்பாகும் போது, அடிமனம் விடு விப்படைந்து திசையின்றி ஓடுகிறது. வாசக அனுபவத்தில் பல்வேறு சிதறல்களை மனவுணர்வுகளை, மனநெருக்கடிகளை, புதிய உணர்திறன்களை கிளறிவிடுகிறது.

சூழ்நிலைகளில் பாத்திரவார்ப்புகளில் அவற்றின் உணர்ச்சித் தீவிரங்களில் சொல்லா மலே உணர்த்தும் நளினம் கதை முழுவதும் இயல்பாகவே இருக்கும். நனவோடை, மன ஓட்டம், சுயஅமைவு கதையோட்டத்தின் கூட்டமைவுக்கு உயிர்ப்பாக உள்ளன. வாசகர் களின் கற்பனை அனுபவத்துக்கு அப்பால் புதிய தெறிப்புகளாக புதிய உணர்த்திறன்களாக லா.ச.ரா எழுத்துக்கள் உள்ளன.

லாசராவின் சிறுகதைகள், நாவல்கள், கட்டுரைகள் யாவும் மனிதமனத்துடன் ஆத்மவிசாரணையை வேண்டி நிற்கும் படைப்புகளாகவே உள்ளன. லாசராவின் படைப்புலகு, எழுத்து நடை, தமிழ்ப்புனை கதை மரபின் வளர்ச்சிக்கான ஊக்கிகளாக அமைந்துள்ளன. அன்பு, காதல், தியானம், தியாகம் இவற்றின் அடிசரடாக லாசராவின் உலகம் இயங்கி புதிய வாழ்வியல் மதிப்பீடு களை நமக்கு வழங்கிச் செல்கின்றன.

நானே என்னைத் தேடிக் கொண்டிருக்கிறேன்
இதற்கு எழுத்து எனக்கு வழித்துணை
ஒருவனுக்கு அவன் பக்தி
ஒருவனுக்கு அவன் ஞானம்
ஒருவனுக்கு அவன் குரு
அதுமாதிரி எழுத்து எனக்கு வழித்துணை
ஒரு சமயம் அது என் விளக்கு
ஒரு சமயம் சம்மட்டி
ஒரு சமயம் கம்பு
ஒரு சமயம் கத்தி
ஒரு சமயம் கண்ணாடி

இவை லாசாராவுக்கு மட்டுமல்ல அவரது படைப்புகளுடன் பரிச்சயம் கொள்ளும் வாசகர்களுக்கும் நேர்வது.

லாசராவின் சில படைப்புகள்:

சிறுகதைகள்: ஜனனி, தயா, அஞ்சலி, அலைகள், கங்கா

நாவல்கள்: அபிதா, கல்சிரிக்கிறது, புத்ரா

நினைவுகள்: சிந்தாநதி, பாற்கடல்

கட்டுரைகள்: முற்றுப்பெறாத தேடல், உண்மையான தரிசனம்

மதுசூதனன்
———————————————————————————————————————————-

தனிமையின் நிறம்
எஸ். ராமகிருஷ்ணன்
குற்றாலத்தின் தேனருவிக்குப் போகின்ற வழியில் உள்ள ஒரு பாறை இடுக்கில் படுத்துக்கிடந்த வயதானவர் ஒருவரைக் கண்டேன். அழுக்கேறிய உடையும், பிசுக்குப் பிடித்த தலையும், பிரகாசிக்கும் கண்களும் கொண்டவராக இருந்தார். யாருமற்ற மலையின் மீது அவர் எப்படி வாழ்கிறார் என்று ஆச்சர்யமாக இருந்தது. அவர் அருகில் உட்கார்ந்துகொண்டு, ‘‘எப்படித் தனியாக வாழ்கிறீர்கள்? நீங்கள் சாமியாரா?’’ என்று கேட்டேன்.

அவர் சிரித்தபடி, ‘‘நான் சாமி இல்லை. சாதாரண ஆசாமி. இங்கே இருப்பது பிடித்திருக்கிறது. தங்கிவிட்டேன். நான் தனியாக வாழவில்லை. இத்தனை மரங்கள், பறவைகள், அணில்கள், எறும்புகள் என ஒரு பெரிய உலகமே என்னைச் சுற்றி இருக்கிறதே!’’ என்றார். தவறு என்னுடையது என்பது போலத் தலைகுனிந்தேன். அவர் சிரித்தபடியே தொடர்ந்து சொன்னார்…
ÔÔசூரியனையும் சந்திரனையும் போல் தனிமையானவர்கள் உலகில் வேறு யாருமே கிடையாது. மனிதனுடைய பெரிய பிரச்னை அடுத்த மனிதன் தான். கூடவே இருந்தாலும் பிடிக்காது. இல்லாவிட்டாலும் பயம்!ÕÕ

அருவியை விடவும், என்னைச் சுத்த மாக்கின இந்தச் சொற்கள். வாழ்வின் நுட்பங்களை ஞான உபதேசங்களாக வாசிப்பதைவிடவும் வாழ்ந்து கண்டவனின் நாக்கிலிருந்து கிடைக்கும் போதுதான் நெருக்கமாக இருக்கிறது.

தனியாக இருப்பது பயமானது என்ற எண்ணம் குழந்தையிலிருந்தே நம்முள் ஊறத் துவங்கிவிடுகிறது. உண்மையில் தனிமை பயமானதா? நிச்சயமாக இல்லை. தனிமை ஒரு சுகந்தம். அதை நுகர்வதற்குத் தேவை மனது மட்டுமே!

சில நாட்களுக்கு முன், கடற்கரையில் இரவில் அமர்ந்திருந்தேன். குழந்தை விளையாடிப் போட்ட பலூன் ஒன்றை கடல் அலை இழுத்துக்கொண்டு இருந்தது. பலூன் உள்ளே போவதும் கரையேறுவது மாக ஒரு நாடகம் நடந்துகொண்டே இருந்தது. ஆச்சர்யமாக இருந்தது. இவ்வளவு பெரிய கடலால் இந்தச் சிறிய பலூனை ஒன்றுமே செய்ய முடியவில்லை. எவ்வளவு பெரிய அலைகளின் கைகளால் நீட்டிப் பிடித்தாலும், பலூன் தண்ணீரில் மிதந்துகொண்டுதான் இருக் கிறது. ஆனால், அலைகள் சலிப்புற்று நிறுத்துவதேயில்லை.

நம் தனிமையும் இந்த பலூன் போல அலைக்கழிக்கப்பட்டுக்கொண்டே இருந்தாலும், தன்னியல்பு மாறாமல் இருந்துகொண்டே இருக்கிறது. வீட்டில் யாருமற்றுப் போன நேரங்களில்தான் நாம் தனிமையாக இருப்பதாக உணர் கிறோம். அது நிஜமானது இல்லை. ஒவ்வொரு நிமிஷமுமே நாம் தனிமை யானவர்கள்தான்!

நாம் பார்க்கும் காட்சியை, நாம் பார்த்த விதத்தில் இன்னொருவர் பார்ப்பதில்லையே! சாப்பிடும்போது, தண்ணீர் குடிக்கும்போது, படிக்கும் போது, உறங்கும்போது என எப்போ துமே தனிமையாகத்தான் இருக்கிறோம். ஆனால், அதை அறிந்துகொள்வதில்லை. இயற்கையின் முன் மட்டும்தான் தனிமையின் வாசனையை நம்மால் நுகர முடிகிறது. பிரமாண்டமான மலையின் உச்சி யில் நின்றபடி சூரிய அஸ்தமன காட்சியை ஒருமுறை கண்டேன்.

பறவை சிறகடித்துக்கொண்டு இருப்பது போல, மேற்கு வானில் சூரியன் அசைந்து அசைந்து உள்ளே ஒடுங்குவதைக் கண் டேன். பார்த்துக்கொண்டு இருந்த போதே, வெளிச்சம் மறைந்து இருட்டு கசிந்து வரத் துவங்கி, கண்முன் இருந்த பள்ளத்தாக்கும், மரங்களும் காணாமல் போகத் துவங்கின. அதுவரை இல்லா மல், இருட்டின் நெருக்கத்தில்தான் நான் தனியாக இருக்கிறேன் என்ற பயம் எழும்பத் தொடங்கியது. ஆச்சர்யமாக இருந்தது. நம் தனிமையை மறைக்கும் கைகள் சூரியனுடையவைதானா?

தனிமையாக இருப்பது என்றவுடனே மற்றவர்களை விட்டு விலகிப் போய்விடுவது என்று நம் மனதில் தோன்றுகிறது. இரண்டும் ஒன்றல்ல. தனியாக இருப்பது என்பது மாறாத ஒரு நிலை. எத்தனை ஆயிரம் நிறைந்த கூட்டத்திலும்கூட நாம் தனியாள்தானே! கடலில் நீந்துகிறோம் என்றால், கடல் முழுவதுமா நீந்துகிறோம்? ஆறடிக்குள்தானே? அப்படி, வாழ்விலும் பகுதி அனுபவத்தை முழு அனுபவமாக மாற்றிக்கொண்டு விடுகிறோம்.

பௌத்த ஸ்தல மான சாஞ்சியில் ஒரு பிக்குவைச் சந்தித்தேன். அவர் நேபாளத் திலிருந்து நடந்தே வந்திருக்கிறார். அவரது பையில் பௌத்த சாரங்கள் அடங்கிய புத்தகம் இருந்தது. அந்தப் புத்தகத்தில் உலர்ந்து போன அரச மர இலை ஒன்றை வைத்திருந்தார். ‘எதற் காக அந்த இலை?’ என்று கேட்டேன்.

அவர் அமைதியான குரலில், ‘ஒரே மரத்தில் ஆயிரக்கணக்கான இலைகள் இருக்கின்றன. ஒவ்வொரு இலையும் ஒரு வடிவத்தில் இருக்கிறது. ஒரு நேரம் அசைகிறது… ஒரு நேரம் அசைய மறுக்கிறது. ஒரு இலை காற்றில் எந்தப் பக்கம் அசையும் என்று யாருக்காவது தெரியுமா? அல்லது, எப்போது உதிரும் என்றாவது தெரியுமா? இலை மரத்திலிருந்தபோதும் அது தனியானது தான். மரத்திலிருந்து உதிர்ந்த பிறகும் அது தனியானதுதான். உலகில் நாமும் அப்படித்தானே வாழ்கிறோம்! அதை நினைவுபடுத்திக்கொள்ளத்தான் இந்த இலை’ என்றார். மரத்தடியிலிருந்து பிறக்கும் ஞானம் என்பது இதுதானோ என்று தோன்றியது.
ஒரு வெளிநாட்டுக்காரன் புகைப்படம் எடுத்துக்கொள்வதற்காக அந்த பிக்குவை அருகில் அழைத்தான். அவர் எழுந்து ஒரு எட்டு நடந்துவிட்டு, மண்டியிட்டு தலையால் பூமியை வணங்கினார். திரும் பவும் மறு எட்டு வைத்துவிட்டு, அதே போல் தலையால் பூமியை வணங்கினார். எதற்காக அப்படி நடந்துகொள்கிறார் என்று எவருக்கும் புரியவேயில்லை.
அவர் சிரித்தபடியே, ‘பூமி எத்தனை பெரிதானது! மனித கால்களால் அதை முழுவதும் சுற்றி நடந்து, கடந்து விட முடியுமா என்ன? அதை விடவும் பேருண்மை என்ன இருக்கிறது? அதை புரிந்துகொண்டதால்தான் இப்படிச் செய்கிறேன்’ என்றார்.

‘இப்படி நடந்தேதான் நேபாளத் திலிருந்து வந்தீர்களா?’ என்று வெள்ளைக் காரன் கேட்க, ‘இதில் ஆச்சர்யப் படுவதற்கு என்ன இருக்கிறது? பத்து வயதிலிருந்து நான் இப்படித்தான் எங்கு போனாலும் நடந்தே போகிறேன். தற்போது எனக்கு வயது எழுபதாகிறது’ என்றார் பிக்கு.
பிக்கு என்னைக் கடந்து போய்விட்ட பிறகும், அவரது புத்தகத்தில் மறைந்திருந்த இலை மனதில் படபடத் துக்கொண்டே இருந்தது. ஒரு இலை காற்றில் எந்த பக்கம் அசையும், எப்போதும் உதிரும் என்பது ஏன் இன்று வரை ஆச்சர்யமாக இல்லை? தனிமையை இதைவிட வும் எளிமையாக விளக்க முடியுமா, என்ன?

புறநானூற்றுப் பாடல் ஒன்றில், இறந்து போன தன் தலைவனைப் பிரிந்த துக்கத்தில் தலைவி, ‘தேர்ச் சக்கரத்தில் ஒட் டிய பல்லியைப் போல அவரோடு வாழ்ந்து வந்தேன்’ என்கிறாள். எத்தனை நிஜமான வார்த்தை! தேர்ச் சக்கரத்தில் ஒட்டிக் கொண்ட பல்லி, தன் இருப்பிடத்தை விட்டு நகர்வதே இல்லை. ஆனாலும், தேரோடு எத்தனையோ தூரம் பயணம் செய்திருக் கிறது. எத்தனையோ மேடு பள்ளங்களைக் கடந்து போயிருக் கிறது. பெண்ணின் தீராத் தனிமையை விளக்கும் கவித்துவ வரிகள் இவை.

தனிமை உக்கிரம் கொள்ளும்போது அதை நாம் எதிர்கொள்ள முடியாமல் எதற்குள்ளாவாவது மூழ்கிக்கொண்டு விடுகிறோம். பெரும்பான்மை குடும்பங் களில் பெண்கள் இருப்பு இப்படித்தான் இருக்கிறது. அவர்கள் தங்களுக்குத் துணை வேண்டும் என்பதற்காகத் திருமணம் செய்துகொண்டு ஒருவரோடு வாழத் துவங்கி, அந்தத் துணை ஏற்படுத்தும் வலியையும் நெருக்கடியையும் தாங்கிக் கொள்ள முடியாமலும், அதை விட்டு விலகி தனது வாழ்வை எதிர்கொள்ள முடியாமலும் அல்லாடுகிறார்கள்.

ஏதோ சில அரிய நிமிஷங்கள்தான் அவர்களை, தான் யாருடைய மனை வியோ, சகோதரியோ, தாயோ இல்லை; தான் ஒரு தனியாள் என்று உணர்த்து கின்றன. அந்த நிமிஷம் கூடப் பார்த்துக் கொண்டிருக்கும்போதே புகையென மறைந்துவிடுகிறது.

வாழ்வு அனுபவங்களை உன்னத தரிசனங்கள் போல, கவிதையின்மொழியில் கதைகள் ஆக்கியவர் லா.ச.ராமாமிருதம். அவரது கதைகள் இசை யைப் போல நிசப்தமும், தேர்ந்த சொற்களின் லயமும் கொண்டவை. சொல்லின் ருசியைப் புரிய வைக்கும் நுட்பம் கொண்டது அவரது எழுத்து. லா.ச.ரா&வின் ‘கிரஹணம்’ என்ற கதை, ஒரு பெண் தன் தனிமையை உணரும் அபூர்வ கணத்தைப் பதிவு செய்துள்ளது.

கதை, சூரிய கிரஹணத்தன்று கடலில் குளிப்பதற் காகச் செல்லும் கணவன்&மனைவி இருவரைப் பற்றியது. மனைவி கடலில் குளிக்கப் பயந்து போய் வரமாட்டேன் என்கிறாள். கணவன் கட்டாயப்படுத்தி அழைத்துப் போகிறான். பயந்து பயந்து தண்ணீரில் இறங்குகிறாள். ஒரு அலை அவள் மேல் விழுந்து கணவன் கையிலிருந்து அவளைப் பிடுங்கிக் கடலினுள் கொண்டு போகிறது.

மூச்சடைக்கிறது. ஒரு நூலளவு மூச்சு கிடைத்தால்கூடப் போதும் என்று போராடுகிறாள். அலை புரட்டிப் போடுகிறது. மூச்சுக் காற்று கிடைக்கிறது. தன்னை யாரோ காப்பாற்றியிருப்பது புரிகிறது. அவள் கைகளைப் பிடித்துக் கொண்டு யாரோ ஒருவன் சிரித்தபடி நிற்கிறான். யார் அவன், எப்படி இவ் வளவு உரிமையாக கையைப் பிடித்துக் கொண்டு இருக்கிறான் என்று யோசிப்ப தற்குள் இன்னொரு அலை வந்து அவளை உள்ளே இழுத்துப் போகிறது.
அவள் தண்ணீருள் திணரும் நிமிஷத்துக்குள், தான் ஒரு பெண்ணாகப் பிறந் ததுதான் இத்தனைத் துயரத்துக்குக் காரணம் என்று அவளுக்குப் புரி கிறது. தனது ஆசைகளை, தாபங்களை மறைத்துக்கொண்டு எத்தனை காலம் வாழ்ந்து வந்திருக்கிறோம், தனது சுயம் வாசிக்கப்படா மல் வீணயின் தந்தியில் புதைந்துள்ள இசை யைப் போல தனக்குள் ளாகவே புதைந்து போய்க் கிடப்பது புரிகிறது.

அதே ஆள் திரும்பவும் அவளைப் பிடித்து இழுத்துக் காப்பாற்றுகிறான். அவளது கணவன் சிறு தொந்தி தெறிக்க, பதறி ஒடி வருகிறார். காப்பாற்றியவன் சிரித்தபடியே, ‘இந்த அம்மா சாக இருந் தாங்க. நல்ல வேளை, நான் பார்த்துக் காப்பாற்றினேன்’ என் கிறான். அதுவரை நடந் தது அவளுக்குள் புதைந்து போய், அவள் பயம் கரைந்து வெறிச் சிரிப்பாகிறது. சிரிப்பு காரணமற்ற அழுகை யாக மாறி, ‘என்னை வீட்டுக்கு அழைச்சிட் டுப் போயிடுங்கோ!’ என்று கத்துகிறாள் என்ப தாக கதை முடிகிறது.

கிரஹணம் பிடித்தது போல வாழ்வில் இப்படிச் சில சம்பவங் கள் கடக்கின்றன. ஆனால், இந்த நிமிஷங் கள்தான் வாழ்வின் உண்மையான அர்த்தத் தைப் புரிய வைக் கின்றன.
சில வேளைகளில் தோன்றுகிறது… பிரமாண்டமான கடல் கூட தனிமையாகத் தானே இருக்கிறது! அதுவும் தனது தனி மையை மறைத்துக் கெள்வதற்குத்தான் இப்படி அலைகளை வீசி ஆர்ப்பாட்டம் செய்துகொண்டு இருக் கிறதோ?

‘அலைகளைச் சொல்லிக் குற்றமில்லை, கடலில் இருக்கும் வரை’ என்கிற நகுலனின் கவிதை வரிகள்தான் நினைவுக்கு வருகின்றன!

சாகித்ய அகாடமி பரிசு பெற்ற லா.ச.ராமாமிருதம் தனித்துவமான கதை சொல்லும் முறையும், கவித்துவமான நடையும் கொண்ட அரிய எழுத்தாளர். அவரது கதைகள் இயல்பான அன்றாட வாழ்வின் சித்திரங்களாகும். ஆனால், அதன் அடிநாதமாக மெய்தேடல் ஒன்று இடைவிடாமல் ஒலித்துக்கொண்டே இருக்கிறது. ஒரு சிற்பியைப் போல சொற்களைச் செதுக்கி உருவாக்கும் கவித்துவ சிற்பங்கள் என இவர் கதைகளைச் சொல்லலாம். அபிதா, பச்சைக்கனவு, பாற்கடல், சிந்தா நதி, த்வனி, புத்ரா போன்றவை இவரது முக்கிய நூல்கள். இவரது கதைகள் ஆங்கிலம், பிரெஞ்சு, ஜெர்மனி உள்ளிட்ட பல முக்கிய மொழிகளில் மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளன. தமிழ் உரைநடையில் லா.ச.ரா. நடை என தனித்துவமானதொரு எழுத்து முறையை உருவாக்கிய பெருமை இவருக்குண்டு. வங்கிப் பணியிலிருந்து ஓய்வு பெற்ற லா.ச.ராமாமிருதம் தற்போது சென்னை, அம்பத்தூரில் வசித்து வருகிறார்.

விகடன் ——————————————————————————————————————————————

லா ச ராமாமிருதம் – கலாச்சாரம் ஒரு கதைச் சிமிழுக்குள்

வெங்கட் சாமிநாதன்

லா ச ரா எழுத ஆரம்பித்த முப்பதுகளின் பின்பாதியில் இருந்தே இடைப்பட்ட நாற்பத்தைந்து வருட காலத்தில் அவரது எழுத்துலகம் அவரது வீட்டையும் வெளியுலகத்தையும் விட்டு வெளியே கால் வைத்ததில்லை. ராமாமிருதத்துக்கு இந்த வட்டத்துக்கு வெளியே உள்ள உலகம் இல்லாத உலகம்தான். அவர்கள் உலகிலேயே காலம் உறைந்து விட்டது போலத் தோன்றும். ஆனால் அவர் கதைகளில் குடும்பப் பாசங்கள், தளைகள், பிரிவுகள், என்ற குறுகிய உலகின் உள்ளேயே நாம் காலத்தின் பிரவாஹத்தைப் பார்க்கிறோம்.

அவர் எழுத்தில் காணும் நனவோடை உத்தி ஜேம்ஸ் ஜாய்ஸிடம் இருந்து பெறப்பட்டதாகச் சொல்லப் பட்டாலும் ராமாமிர்தம் ஜாய்சின் எழுத்தையும் உத்தியையும் ஆபாசம் என்று உதறி விடுவார்.

டச்சு சைத்ரீகர் வான்கோ தனது சகோதரர் தியோவுக்கு எழுதிய கடிதங்கள் ஒன்றில் ஜப்பானிய உக்கியோயி கலைஞர்களைப்பற்றி எழுதுகிறார்: “தன் வாழ்க்கை முழுதும் அவன் ஒரு புல் இதழைத்தான் ஆராய்கிறான்: ஆனால் எல்லா தாவரங்களையும், மிருகங்களையும், பட்சிகளையும், மனித உருவங்களையும் அவனால் வரைந்துவிட ஒரு புல் இதழின் ஆராய்வில் சாத்யமாகிறது. இதற்குள் அவன் வாழ்க்கையே முடிந்து விடுகிறது. அவனுடைய ஆராய்ச்சி மேற்செல்ல முடியாது வாழ்க்கை முடிந்து விடுகிறது. ஏனெனில் வாழ்க்கை மிகக் குறுகியது.”

ரவீந்திரநாத் டாகூரின் கவிதை ஒன்றில் உலகத்தைச் சுற்றிக்காணும் ஆசையில் ஒருவன் மேற்கொண்ட நீண்ட பயணத்தில் எண்ணற்ற மலைகள், நதிகள், தேசங் கள் கடந்து கடைசியில் களைப் புற்றுத் தன் வீடு திரும்புகிறான்.

திரும்பியவன் கண்களில் முதலில் பட்டது, அவன் குடிசையின் முன் வளர்ந்திருந்த புல் இதழின் நுனியில் படிந்து இருந்த பனித்துளி. அவன் சுற்றிவந்த உலகம் முழுதையும் அப்பனித்துளியில் கண்டு அவன் ஆச்சரியப் பட்டுப் போகிறான். சுற்றிய உலகம் முழுதும் அவன் காலடியிலேயே காணக்கிடக்கிறது.

லா.ச.ராமாம்ருதம் எழுத ஆரம்பித்த முப்பதுகளின் பின் பாதியிலிருந்தே, இடைப்பட்ட நாற்பத்தைந்து வருட காலத்தில் அவரது எழுத்துலகம் அவரது வீட்டையும் குடும்பத்தையும் விட்டு வெளியே கால் வைத்ததில்லை. அவர் எழுதியதெல்லாம் அந்த குடும்ப எல்லைக்குட்பட்ட உலகைப்பற்றித்தான், அதன் என்றென்றுமான குடும்ப பாசங்களும், உறவுகளும் குழந்தைகள் பிறப்பும், வீட்டில் நிகழும் மரணங்களும், சடங்குகளும்,பெண்களின் ஆளுமை ஓங்கி உள்ள உறவுகளும்தான் அவரது கதைகளின் கருப்பொருள்களாகியுள்ளன. அம்மாக்களும் மாமியார்களும் நிறைந்த உலகம் அது. அந்த மாமியார்களும் அம்மாக்களாக உள்ளவர்கள்தான்.

ராமாம்ருதத்திற்கு இந்த வட்டத்திற்கு அப்பால் உள்ள உலகம் இல்லாத உலகம்தான். இந்த வட்டத்திற்கு வெளியே சமூகத்தில், வெளி உலகில் நிகழ்ந்துள்ள நிகழும் எதுவும், சமூக மாற்றங்கள், தேசக் கிளர்ச்சிகள், போர்கள், புரட்சிகள், எதையும் ராமாம்ருதமோ, அவர் கதைகளின் பாத்திரங்களோ, கேட்டிருக்கவில்லை போலவும் அவற்றோடு அவர்களுக்கு ஏதும் சம்பந்தமில்லை போலவும் அவர்கள் உலகிலேயே காலம் உறைந்து விட்டது போலவும் தோன்றும். ஆனால் அவர் கதைகளில் குடும்பப் பாசங்கள், தளைகள், பிரிவுகள் என்ற குறுகிய உலகினுள்ளேயே நாம் காலத்தின் ப்ரவாஹத்தையும் பார்க்கிறோம்.

முப்பதுகளிலிருந்து அவருடைய கதைகளில் திரும்பத் திரும்ப வரும் காட்சிகளும், பாத்திரங்களும் 1890களைச் சேர்ந்தவைகளாகக் கூட இருக்கலாம். ஆனால் அந்த உறவு களின் உணர்வுகளையும், பாசங்களையும், ராமாம்ருதம் தனது தூரிகையில் தீட்டிவிடுகையில், அவற்றிலிருந்து எழும் மன உலகத் தேடல்களும் தத்துவார்த்த பிரதிபலிப்புகளும் 1990களில் வாழும் நம்மைப் பாதிக்கின்றன. 2090-ல் வாசிக்கக்கூடும் ஒரு வாசகனின் மன எழுச்சிகளும் அவ்வாறு தான் இருக்கும் என்று நாம் நிச்சயித்துக்கொள்ளலாம்.

கண்கள் ப்ரகாசிக்க, குறும்புப் புன்னகையுடன் ராமாம்ருதம் நம்மைக் கேட்கக்கூடும், “ருஷ்ய புரட்சியும் வியட்நாம் யுத்தமும் புல்லின் மீது படிந்திருந்த பனித்துளியை என்ன செய்தன? அது எம்மாற்றமும் அடைந்ததா? அல்லது பனித் துளிதான் உலகத்தில் நிகழும் எண்ணற்ற மாற்றங்களை, அது செர்னோபிள்ளிலிருந்து கிளம்பிய அணுப்புகை நிறைந்த மேகங்களேயாக இருந்தாலும், தன் பனித்திரைக்குள் ப்ரதிபலிக்கத்தான் தவறிவிட்டதா?” இந்த அகங்காரம் நிறைந்த தனிமைக்கு நாம் தலை வணங்கித்தான் ஆகவேண்டும். இத்தனிமை கலைஞனாக சுய ஆராய்வில் தனது ஆளுமைக்கும் நேர்மைக்கும், ஏற்ப அவர் தேர்ந்தெடுத்துக்கொண்டது.

ஏனெனில் ராமாமிர்தம் அவர் காலத்திய சரித்திர நிகழ்வு களோடும் இலக்கிய நிகழ்வுகளோடும் வாழ்பவர். அவர் தனது மத்தியத்தர பிராமணக் குடும்பப் பிணைப்புகளையும் பாசங்களையும் பற்றியே எழுதுபவராக இருக்கலாம். ஆனால் அவர் அறிந்த அவருக்கு முந்திய சமஸ்க்ருத, ஆங்கில, தமிழ்ச்செவ்விலக்கியங்களுக்கெல்லாம் அவர் வாரிசான காரணத்தினால் அவற்றிற்கெல்லாம் அவர் கடமைப் பட்டவர்.

லா.ச.ராமாம்ருதம் பிதிரார்ஜாதமாகப் பெற்ற இந்தக் குறுகிய கதை உலகத்தை அவர் மிகக்கெட்டியாக பற்றிக் கொண்டுள்ள தகைமையைப் பார்த்தால் அதை ஏதோ மதம் என எண்ணிப் பற்றியுள்ளது போல் தோன்றும். அவர் எழுத்தில் காணும் நனவோடை உத்தி ஜேம்ஸ் ஜாய்ஸிட மிருந்து பெறப்பட்டதாகச் சொல்லப்பட்டாலும், ராமாம் ருதம் ஜாய்ஸின் எழுத்தையும் உத்தியையும் ஆபாசம் என்று உதறி விடுவார். அது போக ஜாய்ஸின் நனவோடை உத்தி துண்டாடப்பட்ட சப்த நிலயில் காண்பதற்கு எதிராக ராமாம்ருததின் நனவோடை உருவகங்களின், படிமங்களின் சப்த பிரவாஹம் எனக் காணலாம். (புத்ர பக். 9-10) க.நா.சுப்ரமண்யம் லா.ச.ராமாம்ருதத்தின் எழுத்துக்களைப் பற்றி விசேஷமான கருத்து ஒன்றைச் சொல்லி யிருக்கிறார்.

அதாவது, ராமாம்ருதம் இவ்வளவு வருஷங்களாக ஒரே கதையைத்தான் எழுதிக்கொண்டிருக்கிறார் என்று க நா.சு. சொல்கிறார். ராமாம்ருதமும் இதைச் சந்தோஷத்துடன் ஒப்புக்கொள்வார். “நான்தான் நான் எழுதும் கதைகள், என்னைப்பற்றித்தான் என இவ்வளவு நாளும் தம்பட்டம் அடித்துக்கொண்டிருக்கிறேன்,” என்பார். சாஹித்திய அகாடமி பரிசு வாங்கிய சிந்தாநதி க்கு இணை என்று சொல்லத்தக்க, அதற்கு முந்திய புத்தகமான பாற்கடல் மிகவும் குறிப்பிடத்தக்க விசேஷமான புத்தகம்.

லா.ச.ராமாம் ருதம் பாற்கடலைத் தன் குடும்பத்தைக் குறிக்கும் உருவக மாகப் பயன்படுத்துகிறார். பாற்கடல்- இல் ராமாம்ருதத்தின் குடும்பத்தினதும் அவர் மூதாதையரதும் மூன்று தலைமுறை வரலாற்றை, வருஷவாரியாக அல்ல, அவ்வப்போது நினைவு கூறும் பழம் சம்பவத் துணுக்குகளாக எழுதிச்செல்கிறார். அதில் அவர் நமக்கு அறிமுகப்படுத்தும் ஆண்கள், பெண்கள் எல்லோரும் நம்மில் வெகு ஆழமாகப் பதிபவர்கள்.

அவர்கள் எல்லோர்களுக்கிடையில் அவரது பாட்டனாரும் விதவையாகிவிட்ட அத்தைப்பாட்டியும்தான் காவிய நாயகர்கள் எனச் சொல்லத்தக்கவர்கள். பாற்கடல் ராமாமிர்தத்தின் வாலிப வயது வரையிலான நினைவுகளைச் சொல்கிறது. இதற்குப் பிந்திய கால நினைவுகளைத் தொகுத்துள்ள சிந்தா நதி ராமாம்ருதம் தன் எல்லா எழுத்துக்களிலும் தன்னைப் பற்றியும் தன் குடும்பத்தினரைப் பற்றியுமே எழுதி வந்துள்ளார் என்பதற்குச் சாட்சிமாக நிற்கிறது. அவர்கள் எல்லோருமே அவரது போற்றுதலுக்கும் வணக்கத்துக்கும் உரியவர்களாக இருக்கிறார்கள். அவர் வீட்டில் நடக்கும் நிகழ்ச்சிகள் பலவும் ஒரு தேர்வில் அதில் இடம்பெறு கின்றன.

இவற்றைப் பற்றி நினைக்கும் போதெல்லாம் ராமாம்ருதம் பெரும் திகைப்புக்கும் ஆச்சர்யத்துக்கும் உள்ளாவார். நாற்பது வருடங்களாக அவர்களைப் பற்றி, கிட்டத்தட்ட நூறு கதைகளிலும், மூன்று நாவல்களிலும் எழுதிய பிறகும் கூட, இன்னமும் அவர்களைப் பற்றிய அவரது சிந்தனை வற்றிவிடவில்லை, அப்பிரமையிலிருந்து அவர் இன்னும் விடுதலை பெறவில்லை என்றுதான் அவருக்குத் தோன்றுகிறது.

மற்ற எவரையும் விட, அவரது குடும்பத் தெய்வமான பெருந்திரு, அவருடைய தாத்தா, கொள்ளுப் பாட்டி, பின் அவரது பெற்றோர்கள், இவர்க ளனைவரும் அவர் மீது அதிகம் செல்வாக்கு கொண்டுள்ள னர். இவர்கள்தான் அவருக்கு ஆதரிசமாக இருக்கின்றனர். இவர்களிலும் கூட குடும்பத் தெய்வமான பெருந்திருவும் அவருடைய பாட்டியும்தான் அவர் சிந்தனைகளை அதிகம் ஆக்கிரமித்துக் கொண்டுள்ளனர். அவரது தாத்தா ஒரு கவிஞராக இருந்திருக்கிறார். அவர்களது குடும்ப தெய்வம் பெருந்திரு பற்றி அவருக்குத் தோன்றியதையெல்லாம் அவர் கவிதைகளாக எழுதி நிரப்பிய நோட்டுப் புத்தகங்கள் எல்லாம் அலமாரியில் அடுக்கி வைக்கப்பட்டுள்ளன.

அவரைத் தவிர வேறு யாரும் அவற்றைத் தொடுவது கிடையாது. எழுதுவது என்ற காரியம், இன்னொருவருக்குச் சொல்ல என்று இல்லாமல், அதை ஒரு தியானமாகக் கருதுவது, எழுதுவதைக் கவிதைப் பாங்கில் எழுதுவது, சக்தி பூஜையும், வாழ்வையும் மரணத்தையும்கொண்டாடுவது போன்ற ராமாம்ருதத்தின் இயல்புகள் அனைத்தும் அவரது பாட்டனாரிடமிருந்து அவர் பெற்றார் போலும். இதைச் சாதாரணமாகச் சொல்லி விடக் கூடாது. அடிக்கோடிட்டு வலியுறுத்த வேண்டிய விஷயம் இது. ராமாம்ருதத்தின் எழுத்தில் காணும் அனேக விசேஷமான அவருக்கே உரிய குணாம்சங்களை அது விளக்கும். ராமாம்ருதம்தான் எவ்வளவு பக்தி உணர்வுகொண்டவர் என்பதோ, அதை எவ்வளவுக்கு வெளியே சொல்வார் என்பதோ நமக்குத் தெரியாது.

ஆனால் ,அவரது கதைப் பாத்திரங்கள் மற்றவரையும் தம்மையும் உக்கிர உணர்ச்சி வசப்பட்ட வேதனைக்கு ஆட்படுத்துவதிலிருந்தும், ராமாமிருதத்தின் பேனாவிலிருந்து கொட்டும் வெப்பமும், சக்தி மிகுந்த வார்த்தைகளும், குடும்பத்தைத் தாம்தான் தாங்கிக் காப்பது போன்று, அதற்கு உயிர்கொடுப்பதே தாம்தான் என்பது போன்றும், குடும்பத்தின் ஏற்றம் இறக்கங்களுக் கெல்லாம் தாம்தான் அச்சு போன்றும் இயங்கும் பெண் பாத்திரங்களின் ஆக்கிரம சித்தரிப்பும், (ராமாம்ருதம் தன் உள்மன ஆழத்தில், தென்னிந்திய சமூகமே அதன் நடப்பிலும் மதிப்புகளிலும் இன்னமும் தாய்வழிச் சமூகம்தான் என்ற எண்ணம் கொண்டவராகத் தெரிகிறது) திரும்பத் திரும்ப அவர் கதைகளில் காட்சி தரும் புஷ்பங்கள், குங்குமம், சடங்கு வழிப்பட்ட ஸ்னானங்கள், அக்னி, சாபங்கள், ஆசீர்வாதங் கள், நமஸ்காரங்கள், – எல்லாமே சக்தி ஆராதனை சம்பந்தப் பட்டவை – எல்லாமே அவர் எழுத்துக்களில் நிறைந்து காணப் படுவதும், அவரது குடும்பத்தின் தேவி வழிபாடு தலைமுறை தலைமுறையாகத் தொடர்ந்து வருவதன் இலக்கியவெளிப் பாடுதான் ராமாம்ருதத்தின் எழுத்து என்று எண்ணத் தோன்றுகிறது. அவரது எழுத்துக்களில் மிகச்சக்தி வாய்ந்த தும், பரவலாகக் காணப்படுவதுமான கருப்பொருள் மரணம் தான்.

இந்த சக்தி வாய்ந்த கரு அவரை மிகவும் கவர்ந்துள்ளது போலும். அவர் இந்த விஷயத்திற்குத்தான் தன் எழுத்துக்களில் அவர் திரும்பத் திரும்ப வருகிறார்,. இந்த நித்திய உண்மை அவரை ஆட்கொள்ளும் போதெல்லாம் அவர் தன்னை இழந்தவராகிறார். முரணும் வேடிக்கையும் என்னவென்றால், மரணத்தில்தான் ஒருவன் வாழ்க்கையின் மகத்துவத்தை அறிந்துகொள்கிறான்.

ராமாம்ருதம் கதை சொல்லும் பாங்கே அவருக்கேயான தனித்வம் கொண்டது. அவருடைய பாத்திரங்கள் நிச்சயம் நாம் அன்றாட சாதாரண வாழ்க்கையில் காணும் சாதாரண மனித ஜீவன்கள்தான். ஆனால் ராமாம்ருதம் கதைகளில் அவர்கள் உணர்ச்சிகளின் கொந்தளிப்பில் கொதிநிலையில் அறிமுகமாகிறார்கள். அவர்கள் ஒருவரை ஒருவர் வருத்திக் கொண்டு வேதனைப்படுகிறார்கள். அவர்கள் வாழ்க்கையில் நேர் எதிர்முனை நிலைகளில்தான் வாழ்கிறார்கள். அது சந்தோஷம் தரும் வேதனை. வேதனைகள் தரும் சந்தோஷமும்தான் அது. பெரும்பாலும் பின்னதே உண்மை யாகவும் இருக்கும்.

எல்லாம் தடித்த கோடுகளில் வரையப் பட்ட சித்திரங்கள். இத்தகைய அறிமுகத்திற்குப் பிறகு ராமாம்ருதம் நம்மை அப்பாத்திரங்களின் அடிமனப் பிரக்ஞைகளின் பாதைகளுக்கு, அவை அகன்ற சாலைகளோ, குறுக்கு ஒற்றையடிப் பாதைகளோ, சந்துகளோ, அவற்றின் வழி அவர்தான் இட்டுச்செல்கிறார். இவை கடைசியில் பிரபஞ்ச விஸ்தாரத்திற்கு இட்டுச்சென்று அவற்றின் இயக்கத்தின் அங்கங்களாகத்தான், மனித ஜீவன்களின் மற்ற உயிர்களின் இயக்கங்களும் சொக்கட்டான் காய்களாக விதிக்கப்பட்டுள்ளன, விதிக்கப்பட்டதை ஏற்று அனுபவிப்பது தான் என்று சொல்கிறார் போலும்.

இந்நிலையில் ராமாம்ருதத்தின் பாத்திரங்களின் உணர்வுகளின் மனச் சலனங்களின் குணத்தையும் வண்ணங்களையுமே பிரபஞ்சப் பின்னணியும் ஏற்பதாகத் தோன்றுகிறது. இதில் எது எதன் பின்னணி, எது எதன் பிரதிபலிப்பு என்று சொல்வது கடினமாகிவிடும். இது ஒரு பிரம்மாண்ட அளவிலான சலனங் களின், உணர்வுகளின் இசைத்தொகுப்பு.

தரங்கிணி என்னும் அவரது ஒரு சிறுகதைத் தொகுப்பை ‘பஞ்சபூதக் கதைகள்’ என்கிறார் ராமாம்ருதம். அதன் ஒவ்வொரு கதையிலும் பிரதானமாக ஒருபெண்ணின் வாழ்க்கையைத் தீர்மானிப்பது, அதன் ஒவ்வொரு முக்கிய திருப்பத்தையும் பின்னிருந்து பாதித்து மறைமுகமாக நடத்திச் செல்வது பஞ்ச பூதங்களில் ஒன்று. ஒவ்வொரு கதையிலும் ஒன்று, நீர், அக்னி, ஆகாயம், பூமி, காற்று இப்படி.

அந்தந்தக் கதையில் திரும்பத் திரும்ப வரும் படிமம்,பெண்ணின் அலைக்கழிக்கும் மன உளைச்சல், வாழ்க்கையின் ஒவ்வொரு அடிவைப்பையும் தீர்மானிக்கும் சக்தி அந்தப் பூதங்களில் ஒன்றாக இருக்கும். இத்தொகுப்பு, ராமாம்ருதத்தின், எழுத்துத்திறனுக்கும், தரிசனத்திற்கும் சிறந்த அத்தாட்சி. ஆனால் இந்தக் குணங்களை ராமாம்ருதத்தின் எல்லா எழுத்துக்களிலும் காணலாம். நினைவலைகள், சொற் சித்திரங்கள், படிமங்கள் எல்லாம் அவருடைய கதை சொல்லும் வழியில் வெள்ளமெனப் பெருக்கெடுக்கும்.

அவை மனித பிரக்ஞை நிலையின் வெவ்வேறு அடுக்குகளில், படிகளில், முன்னும் பின்னுமாக, மேலும் கீழுமாகப் பாயும். அடிமன நினைவோட்டமாக ஒரு கணம் இருக்கும் ஒன்று அடுத்த கணம் விஷம் கக்கும் சொல்லம்புகளாக பிரக்ஞை நிலையில் உருக்கொள்ளும். அன்றாட வாழ்க்கையின் மனித மன தர்க்கத்திற்கும், காரண காரிய சங்கிலித்தொடர் புரிதலுக்கும், சாவதானமான நின்று நிதானித்த மன ஆராய்வுகளுக்கும் இங்கு இடம் இருப்பதில்லை.

பிரக்ஞை நிலையில் அவர்கள் இரு கோடிகளில் எதிரும் புதிருமாக நின்று வெறிபிடித்துக் கனல் கக்குவதைப் பார்க்கிறோம். ஏன் இப்படி நடந்துகொள்கிறார்கள்? ஒரே பதில், அவர்கள் அப்படித்தான் விதிக்கப்பட்டிருக்கிறார்கள். கிரேக்கத் துன்பியல் நாடகப் பாத்திரங்களைப் போல. விதிக்கப்பட்ட அந்த முடிவுக்குத்தான் அவர்கள் விரைந்துகொண்டிருப்பார் கள்.

ராமாம்ருதத்தின் உலகம் தரும் அசாதாரண மாயமும் மிகுந்த பிரயாசையில் சிருஷ்டிக்கப்பட்ட வார்த்தைகளுமான உலகில், சாதாரண அன்றாட சம்பவங்கள் கூட வாழ்க்கையின் மிக முக்கியத் திருப்பங்களாகின்றன, வெடித்துச் சிதறும் நாடகார்த்த விசேஷம் கொள்கின்றன. சாதாரண மனிதப் பாத்திரங்கள், காவியரூபம் தரித்துக் கொள்கின்றன. சாதாரண அன்றாட வார்த்தைகள் தெய்வ அசரீரி வாக்கு களாக மயிர் கூச்செரியும் சக்தி பெற்றுவிடுகின்றன. எல்லோருமே ஏதோ பேய் பிடித்தவர்களைப் போலப் பேசு கிறார்கள், நடந்துகொள்கிறார்கள். அம்மன் கோயில்களில் காணும் காட்சிபோல. தலைவிரித்த பெண் கால் சம்மட்டி யிட்டு தரையிலமர்ந்திருக்கும் விரித்த தலையும் உடலும் வெறி பிடித்து ஆடக் காணும் காட்சி.

ஏன், ராமாம்ருதமே கூட, எழுதும் போதும், நண்பர்களுடன் பேசும் போதும், சின்ன கூட்டங்களில் கிட்ட நெருக்கத்தில் பேசும்போதும் அவர் உணர்வு மேல் நிலைப்பட்ட மனிதர்தான். அவர் தன் எழுத்துக்கள் பற்றிப் பேசும் போது கூட அவரிடமிருந்து வரும் வார்த்தைகள் அவர் கதைகளின் பாத்திரங்கள் பேசும் பாணியில்தான் இருக்கும். ஒரே சமயத்தில் பயப்படுத்தும், ஆசீர்வதிக்கும், அன்பு பொழியும், அழகிய சிருஷ்டி மனத்தில் இருக்கும் ஊர்த்துவ தாண்டவம்தான் அது. அட்டகாசமான, உடைகளும் தோற்றமும் கொண்டு தன்னை மறந்து உணர்ச்சி வசப்பட்டு ஆடும் தெய்யம் போல.

அல்லது உயர்த்திப் பிடித்த நீண்ட வாளுடன் தாக்கத் தயாராக வந்தது போன்று கோயில் இருளில் அங்குமிங்கும் பலத்த அடி வைப்புகளுடன் எண்ணெய் விளக்கின் ஒளியில் பகவதி அம்மனின் முன் நடந்து வரும் வெளிச்சப்பாடு போல. வெளித்தோற்றத்தில் பயமுறுத்தும் உடைகளும் ஆட்டமும் கொண்ட தெய்யம்தான் பக்தி கொண்டு சூழும் மக்களை ஆசீர்வதிக்கும் தெய்யம், தாயின் மடியிலிருந்து குழந்தையை வாங்கிக்கொண்டு கனிவோடு ஆசீர்வதிக்கும்தெய்யமும். உணர்வு திரும்பிய வெளிச்சப் பாடு, பழைய சாதுவான மனிதன்தான். ராமாம்ருதமும் சிரித்த முகத்துடன் மெல்லிய குரலில் பேசும் சாது மனிதர்தான்.

அவர் எழுத்துக்களை மா த்திரம் படித்து மனதில் கற்பனை செய்துகொண்டிருக்கும் மனிதரா இந்த ராமாம்ருதம் என்று வியக்கத் தோன்றும். அவரது குலதெய்வம் பெருந்திருவும் அவரது கொள்ளுப்பாட்டி லOEமியும் இன்னும் அவரைப் பிடித்தாட்டத் தொடங்க வில்லை. இரண்டு உணர்வு நிலைகளில் நாம் காணும் வெளிச்சப்பாடு போலச் சாதுவாக சிரித்த முகத்துடன் காணும் ராமாம்ருதமும்.

என்னதான் உணர்ச்சிகளின் வெப்பங்களும், சில்லிட வைக்கும் படிமங்களும் ராமாம்ருதத்தின் எழுத்துக்களில் நிறைந்திருந்த போதிலும் அவர் எழுத்து அதன் சாரத்தில் மனிதனையும் அவன் தெய்வ நிலைக்கு உயரும் நினைப்புகளையும் கொண்டாடும் எழுத்துத்தான். கடந்த ஐம்பது வருடங்கள் நீண்ட தன் எழுத்து முயற்சிகளில் ராமாம்ருதம் தனக்கென ஒரு மொழியையும் நடையையும் சிருஷ்டித்துக் கொண்டுள்ளார்.

அது அவரை மற்ற எல்லா எழுத்தாளர்களிடமிருந்து வேறுபடுத்தும். அவரது கதை ஏதும் ஒன்றின் ஆரம்ப சில வரிகளின், வாக்கியத்தின் சொற்களையும் சொற்றொடர்களையும் படித்த மாத்திரத்தி லேயே அவற்றை எழுதியது யாரென்றுதெரிந்துவிடும். படிப்பவருக்கு ராமாம்ருதத்தைப் பிடிக்கிறதா இல்லையா எனபது ஒரு பிரச்சினையே இல்லை. படிக்கத் தொடங்கிய துமே அவரது நடையும் மொழியும் அவரை அடையாளப் படுத்திவிடும். ஒரு பாரா எழுதி முடிப்பதற்கு ராமாம்ருதத் திற்கு சில மணி நேரமாவது ஆகிவிடும். ஒரு கதை எழுதி முடிக்க சில மாதங்கள்.

ஐம்பது ஐம்பத்தைந்து வருடங்கள் நீளும் அவரது எழுத்து வாழ்க்கையில் இதுகாறும் அவர் எழுதியிருப்பது ஒரு நூறு கதைகளே இருக்கும். ஆனால் அவருக்கென ஒரு வாசகர் கூட்டம், அவரை வழிபடும் நிலைக்கு வியந்து ரசிக்கும் ஒரு வட்டம் அவருக்கு உண்டு. அவருடைய சொல்லாட்சிக்கும் மொழிக்கும் மயங்கி மது வுண்ட நிலையில் கிறங்கிக்கிடக்கும் வட்டம் அது. ராமாம்ருதத்தின் கதைகளை மொழிபெயர்த்தல் என்பது சிரம சாத்தியமான காரியம்தான். அவரது மொழியும் நடையும் அவருக்கே உரியதுதான். எந்தத் திறமைசாலியின் மொழி பெயர்ப்பும் போலியாகத்தான் இருக்கும்.

ராமாம்ருதத்திற்கு மொழி என்பது ஒரு வெளியீட்டுச் சாதனம் மாத்திரம் அல்ல, வெளியீட்டுக் காரியம் முடிந்த பிறகு அது ஒன்றுமில்லாமல் போவதற்கு. அவருக்கு ஒவ்வொரு சொல்லும் ஒரு வடிவம், ஒரு ஆளுமை, கலாசார உறவுகளும் காட்சிப் படிமமும் கொண்ட ஒன்று. அதை ராமாம்ருதம் ‘த்வனி’ என்கிறார். இவ்வளவு சிக்கலும் கலவையுமாக சிருஷ்டிக்கப்பட்டுள்ள சொல் எப்படி இன்னொரு மொழியில் பெயர்க்கப்படும்? மொழிபெயர்ப்பில், ராமாம்ருதத்தின் தமிழ்ச்சொற்கள் அதன் மற்ற பரிமாணங்களை, அதன் முழு ஆளுமையை இழந்து நிற்கும். இதன் விளைவு, மொழிபெயர்க்கப்பட்ட ராமாம் ருதம் அதன் சாரத்தில் தமிழர் அறிந்த ராமாம்ருதமாக இருக்கப் போவதில்லை.

ராமாம்ருதத்தின் உரைநடை எவ்வகைப்படுத்தலுக்கும் அடங்காதது. அதை உரைநடை என்று கூறக் காரணம் அது உரைநடை போல் எழுதப்பட்டிருக்கும் காரணத்தால்தான். இல்லையெனில் அதைக் கவிதை என்றுதான் சொல்ல வேண்டும். அதில் நிறைந்திருக்கும் படிமங்கள், குறியீடுகள், உருவகங்கள்ம் பின் அது இயங்கும் சப்த லயம் காரணமாக அதைக் கவிதை என்று சொல்லவேண்டும். ஆனால் லயம் என்பது சங்கீதத்தின் லயமாகவும் இருக்கக் கூடும்.

ஏனெனில் அனேக சமயங்களில் அவர் சிருஷ்டிக்கும் சூழல் இசை உணர்வை எழுப்பும் அவரது உரை இசையின் லயத்தை உணர்த்திச் செல்வது போல. ஒரு வேளை ராமாம்ருதம் மொழி யந்திரத்தனமாக அர்த்தமற்ற உபயோகத்தினால் நச்சுப்படுத்தப்பட்டதால், அதன் இழந்த அர்த்தச்செறிவையும் உக்கிரத்தையும் அதற்குத் திரும்பப் பெற்றுத் தரும் முயற்சியாகவும் இருக்கலாம். நெருப்பு என்று சொன்னால் வாய் வெந்து போகவேண்டும் என்று கூட அவர் ஒரு இடத்தில் சொல்லியிருக்கிறார்.

திரும்ப பல இடங்களில் அவர் சொற்கள் வேதங்களின் மந்திர உச்சாடனம் போலவும் ஒரு நிலைக்கு உயர்கிறது.

குறிப்பாக ரிக் வேதம். அதன் கவித்வ சொல்லாட்சியும், இயற்கையும் மனிதனும் அதில் கொண்டாடப்படுவதும், மனிதனுக்கும் இயற்கைக்கும் இடையேயான பரஸ்பர பிணைப்பை உணர்த்துவதும், அது தரும் பிரபஞ்ச தரிசன மும், இவை எல்லாவற்றோடும் அதில் முழுதுமாக விரவி யிருக்கும் கவித்வமும். ராமாம்ருதம் சமஸ்கிருதம் அறிந்தவ ரில்லை. பின் இவை அத்தனையையும் அவர் எங்கிருந்து பெற்றார்? நிச்சயமாக அவரது தாத்தாவிடமிருந்து, குடும்பப் பாரம்பரியத்தில் வந்த பிதிரார்ஜிதம்.

ராமாமிருதத்தின் எழுத்துக்களில் புராணங்களும் தொன்மங்களும் நிறைந்திருக்கும். காப்ரியேல் கார்ஸியா மார்க்வேஸின் நாவல்கள், பாப்லோ நெருடாவின் கவிதை, மச்சுப் ப ¢ச்சுவின் சிகரத்திலிருந்து- வில் இருப்பது போல. ஆனால் ராமாம்ருதத்தின் எழுத்தில் அது ரிக் வேத உச்சாடனமாகத் தொனிக்கும்.வெளித் தோற்றத்தில் ஏதோ பாட்டி கதை போலவிருக்கும் ஒன்றில் ஒரு கலாசாரத்தின் பிரவாஹத்தையே கதை என்னும் சிமிழுக்குள் அவரால் எப்படி அடைத்துவிட முடிகிறது! அதுதான் ராமாம்ருதத்தின் கலை செய்யும் மாயம்.

ராமாம்ருதம் கடந்த ஐம்பது ஆண்டுகளாக ஒரு பிடிவாதத்தோடு சொல்லிவரும் இக்கதைகள், ஒரு பாமர நோக்கில் நவீனத்துமற்றதாக, ·பாஷனற்றதாகத் தோன்றலாம். ஆனால் ராமாம்ருதம் இம்மாதிரியான கவலை ஏதும் இல்லாதே தொடர்ந்து எழுதி வருகிறார். சமீப தமிழ் இலக்கியத்தில் பாட்டி கதைகள் என்ற தோற்றம் தரும் ·பாஷன் அற்ற எழுத்துக்களைப் பிடிவாதமாக ஐம்பதாண்டுகள் எழுதிக்கொண்டு, வழிபாடு என்றே சொல்லத்தக்க ஒரு ரசிகர் கூட்டத்தை மது உண்ட கிறக்கத்தில் கிடக்கும் வாசகர் கூட்டத்தை, வேறு எந்த எழுத்தாளரும் பெற்றது கிடையாது.

கொஞ்சம் யோசித்துப் பார்த்தால் இது பற்றி ஆச்சரியப்பட வேண்டியதில்லை. மேற்கத்திய சிற்ப, சித்திர வரலாற்றில் தாயும் குழந்தையும் என்றென்றும் தொடர்ந்து வரும் படிமம். இன்றைய ஹென்றி மூர் வரை. நாம் வரலாற்றுக்கு முந்திய காலத்திற்கும் அதன் தெரிய வந்த ஆரம்பங்களுக்கே கூட, திரும்பிப் போகலாம். ஆ·ப்ரிக்க மரச்சிற்பங்களானாலும் சரி, மொஹஞ்சாதாரோவின் சுதை மண் சிற்பங்களானாலும் சரி. மனித மனத்தின் ஆழங்களில் உறைந்திருக்கும் தாய்த்தெய்வ வழிபாடு எத்தனையோ ரூபங்களில் தொடர்கிறது, 1990 களில் கூட.

(ஆங்கில மூலம்: Cultural Encapsulation, Indian Literature, No. 138, July-August 1990, Sahitya Akademi, New Delhi.)

——————————————————————————————————————————–

Thinnai: “லா.ச.ரா என்கிற கைவினைஞர் :: மலர்மன்னன்”
———————————————————————————————————————————
Thinnai: “லா.ச.ரா. (92) சொற்களின் சூத்ரதாரி :: எஸ். ஷங்கரநாராயணன்”

(லா.ச.ரா. கடந்த 30 அக்டோபர் 2007ல் தமது பிறந்த நாளன்று காலை நான்கு பத்து மணி அளவில் காலமாகி விட்டார். அவரது சிறப்புச் சிறுகதைத் தொகுதியை 1986ல் ஐந்திணைப் பதிப்பகம் வெளியிட்டது. லா.ச.ரா. நூலுக்கு முதன்முதலாய் வெளிநபர் முன்னுரை தந்தது என அமைந்தது இந்த நூலில்தான். அந்த முன்னரையை நான் எழுதினேன். விதவிதமான சாவிகளின் கொத்து என அட்டைப்படம் வடிவமைத்ததும் நான்தான். ஓவியம் திரு சரண். இன்றைய திரைப்பட இயக்குநர்.

சிறப்புச் சிறுகதை இரண்டாம் தொகுதிக்கு அவரது மகன்கள் லா.ரா.கண்ணன், லா.ரா.சப்தரிஷி இருவரும் முன்னுரை தந்தார்கள். இவை தவிர வேறுநபர் முன்னுரை என லா.ச.ரா. அனுமதித்ததேயில்லை. லா.ச.ரா.வுக்கு நன்றி.)


மு ன் னு ரைஇந்தத் தொகுப்பின் முதல் வாசகனாக அமைவதில் எனக்கு நியாயமான மகிழ்ச்சியும் பெருமையும் உண்டு.>>

எழுத்தாளர்களில் லா.ச.ரா. வித்தியாசமானவர். தனித்தன்மை மிக்கவர். நனவோடை உத்தியை முதலில் தமிழுக்கு அறிமுகம் செய்தவர் லா.ச.ரா.

பொதுவாக இவர் கதைகள் எளிமையானவை அல்ல, இவை எளிமையான கருக்களைக் கொண்டிருந்த போதிலும். லா.ச.ரா. தான் வாழ்ந்த வாழ்க்கையை, தான் உணர்ந்தபடி எழுதுகிறார். அல்லது தான் கண்ட, கேட்ட ஒரு வாழ்க்கையைத் தன் வாழ்க்கையாய் உணர்ந்து எழுதுகிறார். பொதுவாக கற்பனைகளுக்கு உண்மையின் சாயத்தைப் பூசிப் படைக்கிற எழுத்தாளர்கள் மத்தியில், தன் தீட்சண்யம் மிக்க ஞானத்தினால், கலாபூர்வமான ரசனைமிக்க கண்ணோட்டத்தினால், மொழி ரீதியான வளமான அறிவினால், லா.ச.ரா. உண்மையை அதன் தீவிரம் விலகாமல் கற்பனையையொத்த அழகும் மெருகும் சேர்த்து வழங்குவதில் பெருத்த வெற்றி பெறுகிறார்.

இவர் கதைகள் என நினைத்ததும் சட்டென்று ‘வித்துக்கள்’ சிறுகதை ஏனோ நினைவில் குதிக்கிறது. பள்ளிக்கூட நாட்களில் ‘My dog’ என ஒரு கவிதை வாசித்திருக்கிறேன். நல்லதொன்றும் செய்யாத, உதவியொன்றும் செய்யாத, பெரிதும் துன்பங்களையே விளைவித்து வந்த ஒரு நாய்பற்றிய அந்தக் கவிதையில், பத்தி பத்தியாக அந்த நாயின் உபத்திரவங்களையும், அதனால் தான் அனுபவித்த துன்பங்களையும் சொல்லிக்கொண்டே வருகிற கவிஞன் கடைசியில் இப்படிச் சொல்வான் – ‘And though my dog is as bad as bad can be, I cant leave my dog for all the treasures of the sea.’

உலகத்தின் பெரிய செல்வமான அன்பு எவ்வித எதிர்பார்ப்பும் இல்லாதது. சுயநலமற்றது. லா.ச.ரா.வின் ‘வித்துக்கள்’ மிகுந்த துஷ்டத்தனங்கள் நிறைந்த தன் குழந்தைகளை நேசிக்கிற ஒரு தாயின் கதை. சில வருடங்களுக்கு முன் ‘சாவி’ வார இதழில் (என நினைக்கிறேன்) படித்த கதை, என் மனதில் ஆழப் பதிந்துவிட்டது.

இன்னொரு கதை – தலைப்பு நினைவில் இல்லை. ‘த்வனி’ தொகுதியில் படித்ததாக நினைவு. வங்கியில் இவர் மேனேஜராக இருந்தபோது ‘அலுவல் நேரம்’ முடிந்தபின் ஒரு மனிதன் லாக்கரிலிருந்து நகைகளை எடுத்துச் செல்ல வருகிறான். மரணப்படுக்கையில் தன் மருமகன் இருப்பதாயும், கடைசியாய் இவன் மகளை மிகுந்த அலங்காரங்களுடன் பார்க்க விரும்புவதாகவும் கூறி நகைகளை எடுத்துப் போகிறான். அதன் பிறகான இவர் மன சஞ்சலங்கள், முகந் தெரியாத அந்த மனிதர்கள் மீதான இவர் பரிவு, கவலை… யாவும் செறிவுடன் அமைந்திருந்தன. பிறகு அந்த நகைகளை லாக்கரில் வைக்க அந்த மனிதன் வரவில்லை. அவரும், அவன் வராதிருப்பதே நல்லது, அவன் வந்து ஏதேனும் மோசமான முடிவைச் சொன்னால் தன்னால் தாள முடியாது, என்று நினைக்கிறதாக அந்தக்கதை முடியும். மனிதாபிமானம் மிக்க இந்தச் சிறுகதை, என்னால் மறக்க முடியாத லா.ச.ரா.வின் கதைகளில் ஒன்று.

பிறகு ‘பா ற் க ட ல்.’ ஒரு கூட்டுக்குடும்பத்தின் அழகினை இவ்வளவு சிறப்பாக நான் வேறு யாரிடமும் வாசித்ததில்லை. பல பகுதிகளாகத் தன் கதைகளைப் பிரிக்கிற லா.ச.ரா. இதை ஒரே வீச்சில் அமைத்ததும் கதையோட்டத்தில் குறிப்பிடத்தக்க வெற்றியை இவருக்குப் பெற்றுத் தந்தது. ஜனனி, இதழ்கள், கங்கா, த்வனி, மீனோட்டம், பச்சைக்கனவு, உத்தராயணம் (காலரீதியான வரிசை அல்ல) என்கிற இவரது தொகுதிகளில் ‘பச்சைக்கனவு’ மிகவும் சிறப்பானதாக நினைக்க முடிகிறது.

இந்தச் சிறப்புச் சிறுகதைகள் லா.ச.ரா.வே தேர்ந்தெடுத்த கதைகள். முதல் தொகுதி இது. இதில் இடம்பெற்றுள்ள எட்டு கதைகளில் ‘குரு-ஷேத்திரம்’ ஒரு பிரமிக்கத்தக்க சாதனை என்று தோன்றுகிறது. ஒருமுறை நேரில் சந்தித்துப் பேசிக்கொண்டிருந்தபோது இந்தக் கதையின் சில பகுதிகளை இருபது, இருபத்தோரு முறைகள் திருத்தி எழுதியதாய் லா.ச.ரா. என்னிடம் கூறினார்.

‘குரு-ஷேத்திரம்’ ஒரு திருடனின் மனமாற்றம் பற்றிய கதை. வைரங்களை வாரியிறைத்திருக்கிறார் லா.ச.ரா. குறியீடுகளும் சங்கேதங்களும் மிகுந்த கலைநயத்துடன், வார்த்தைகளின் ஓசைநயத்துடன், தத்துவங்களின் தரிசனத்துடன் வெளியாகின்றன.

எத்தனையோ முறை திருடிவிட்டு, திருட்டுக் கொடுத்தவனுடன் சேர்ந்து பொருளைத் தேடுவதாய் நாடகமாடியிருக்கிற திருடன், தான் திருடிய ஒருவன் கோவில் குளத்தில் தற்கொலை செய்துகொண்டதைக் கண்டு திடுக்கிடுகிறான். மனசாட்சியின் முதல் விழிப்பு. (”எந்த மானத்தைக் காப்பாற்ற இந்தப் பணத்தை நம்பியிருந்தானோ? அந்தப் பணத்தை இழந்ததால், உயிரைத் துறக்கும் அளவுக்கு உயிர்மேல் நம்பிக்கை இழந்தவன். உயிரினும் பெரிதாய் நம்பிக்கை வைத்து, சாவிலும் அவன் வணங்கிய அது எது?” – பக்/83) சிந்தனையின் முதல் உயிரிப்பு.

தன் தாயை, மனைவியை அந்தக் கணத்தில் அவன் நினைத்துப் பார்க்கிறான். அவர்களை நடுத்தெருவில் நிறுத்திவிட்டு தான் பிரிந்து வந்த தன் தவறை உணர்கிறான்.

கதை முழுதும் யதார்த்தத் தளத்தில் நிகழவில்லை எனினும் படிப்படியான அவன் மனமாற்றங்களை ஊடுசரமாய்ப் பற்றிக்கொண்டே வரமுடிகிறது இடையே அற்புதமான தரிசன வரிகள். ”எதையுமே கொல்லாமல் அனுபவிக்க முடியாதா? ஏன் இப்படி பிள்ளைக்கறி தின்றுகொண்டே இருக்கிறோம்?” – பக்/90. ”உலகம் முழுதும் ஒரு உயிர். ஒரே உயிர்தான். அதன் உருவங்கள்தாம் பல்வேறு.” பக்/91.

வாழ்வின் விஷம்போன்ற பொருளாசையை இவன் இன்னும் துறக்கவில்லை என்கிற விதத்தில், பெட்டியைப் பாம்பு பாதுகாக்கிற கதை கனவாக வருகிறது. மனசாட்சியின் உருவோங்குதலில் ”என் எண்ணங்களை நானே நூற்று, என்மேலேயே பின்னிக்கொண்டு, அவை இன்னதெனக்கூடப் புரியாது அவைகளில் சிக்குண்டு தவித்து இரையாகிக் கொண்டிருக்கிறேன்.” – பக்/99. ”வீட்டில் பெண்டு ஒண்டியாய் இருக்கையில், ஒரு அன்னியன் பேசாமல் உள்ளே புகுந்து, கதவைத் தாழிட்டுக்கொண்டாப்போல் பயம் என் உள்ளத்தில்.” – பக்/101. ”என் வீடு காலியானதும், அதில் என் குரல் எழுப்பிய எதிரொலிகளே என்னை எழுப்பியிருக்கின்றன.” – பக்/101.

அவன் மீண்டும் தன் மனைவியையும், குழந்தையிடமும் சென்றடைவதுவரை கதை ஒரு கவிதையின் நளினத்துடன் அற்புதமாய்ச் செல்கிறது.

‘தாட்சாயணி’ கதையைப் படிக்கையில் இவரது இன்னொரு கதை ‘அபூர்வ ராகம்’ நினைவுக்கு வருகிறது. ”சில விஷயங்கள் சிலசமயம் நேர்ந்து விடுகின்றன. அவை நேரும் முறையிலேயே அவைகளுக்கு முன்னும் பின்னும் இல்லை. அவை நேர்ந்ததுதான் உண்டு. அவை நேர்ந்த விதம் அல்லாது வேறு எவ்விதமாயும் அவை நேரவும் முடியாது. நேர்வது அல்லாமலும் முடியாது.” – பக்/71. இதே தன் கருத்தை ‘அபூர்வ ராகம்’ னகதையிலும் வலியுறுத்துகிறார். சங்கீதம் பற்றிய தன் ஆழ்ந்த ரசனையை இந்தக் கதைகளில் முன்வைக்கிறார் லா.ச.ரா. பாத்திரங்கள் மென்மையும் மூர்க்கமும் ஒருங்கே பெற்று வார்த்தைகளின் சிறப்பில் பொலிகின்றன.

லா.ச.ரா. பெண்களை மிக மதிக்கிறார். படித்தவர்களாக, தெளிவானவர்களாக அவர்களை அவர் சித்தரிக்கிறார். இந்தக் கதைகள் எழுதப்பட்ட காலகட்டத்தையும், இந்தக் கதைகள் நிகழ்கிற காலத்தையும் வைத்துப் பார்த்தால் லா.ச.ரா.வின் இந்தத் தன்மையின் சிறப்பு புரியும்.

லா.ச.ரா. தன் கதைகளில் உத்திகளை மிகத் திறமையாய்க் கையாள்கிறார். உவமைகளை மிகுந்த லாவகத்துடன் வெளிப்படுத்துகிறார். ”மெத்தைஉறை போன்ற அங்கி அணிந்த பாதிரி” என்பார். ”மழையில் நனைந்ததில் மார்பில் கொலுசு” என்பார். ”இறந்த பிணத்தின் கண்ணில் பளிங்கு ஏறியிருந்தது” என்பார். இவையெல்லாம் எங்கோ படித்திருந்தும் மனதில் தளும்புகின்றன.

இந்தத் தொகுதியில் ”தலையை இளநீர்போல முடிந்தாள்.” – ”வயிற்றில் பசி தேளாய்க் கொட்டிற்று.” – ”கேசுக்கு அலையும் போலிஸ்காரன் கவனிப்பது போல கவனித்தாள்.” – ”கற்கண்டுக் கட்டிகள்போல் நட்சத்திரங்கள்.” ”தலையில் சுருள்சுருளான மோதிரக் குவியல்.” – என்பனபோன்ற ஏராளமான ஜாலங்கள் மனதை நிறைக்கின்றன.

‘இதழ்கள்’, ‘கொட்டுமேளம்’ இரண்டுமே நீண்ட கதைகள். ‘இதழ்கள்’ ஒரு மனிதன் உறவுக்கிளைகள் ஒவ்வொன்றாய் இழப்பதைச் சொல்லி, அவன் தனிமை ஆழப்பட்டு வருவதை விஸ்தரித்து, அவனது நம்பிக்கை சிதையச் சிதைய உடல் வற்றிவருவதை விவரித்து அவன் மரணத்துடன் முடிகிறது. ‘கொட்டுமேளம்’ முழுக்க யதார்த்தத் தளத்தில் அமைந்த கதை. இளம்விதவையான தன் சகோதரியை நேசிக்கிற சகோதரன் கதாநாயகன். கதை சகோதரியின் பார்வை சார்ந்தது. தன் மனைவி அன்புவழிப்பட்ட பொறாமைரீதியாய் அவர்கள் இருவரையும் பற்றி அவதூறாய்ப் பேசிப் பிறந்தகம் செல்கிறாள். ஊரே மூக்கும் காதும் வைத்துப் பேசுகையில் பொறுமையாய் இவர்கள் வெற்றி பெறுகிற கதை. குழந்தை பிறந்ததும் குழந்தையைக் கூட்டிக்கொண்டு மீண்டும் கதாநாயகனின் மனைவி வீட்டுக்குள் வந்து, (”இத்தனை மதில்கள் எழும்பிய இடத்தில் தொங்குவதற்கு இடம்தேடி அலையும் வெளவால் போன்று…” -பக்/86) மன்னிப்பு கேட்கிறாள். பிறகு அந்தக் குழந்தையின் கல்யாணத்தோடு விதவையின் வாழ்வு முடிகிறதாக கதை முடிகிறது.

‘கஸ்தூரி’, ‘மண்’ திருப்பம் சார்ந்த கதைகள். சொல்நேர்த்தியால் சிறப்பு பெறுகின்றன.

‘பச்சைக்கனவு’ ஒரு வித்தியாசமான கதைதான். இளம் வயதில் கண்ணிழந்த ஒரு குருடன் பற்றிய கதை. கண் இருக்கையில் அவன் கடைசியாய்க் கண்ட நிறம் பச்சை. அக்காரணம் பற்றியே அந்த வர்ணம் மனதைக் கெட்டியாய்ப் பற்றிக்கொண்டு விட்டது. (பக்/5) அதிலிருந்து தான் கேள்விப்படுகிற உணர்கிற பொருட்களுக்கெல்லாம் பச்சை வர்ணமே அமைந்திருப்பதாய்க் கற்பனை செய்துகொள்வது இவனுக்குப் பிடிக்கிறது. லா.ச.ரா.வின் சிறப்பான ஒரு விஷயம் என்னவென்றால், பாத்திரங்களூடே திடீரென்று வாழ்க்கை பற்றிய தரிசனங்களை மிக நெருக்கமாய் நுணுக்கமாய்த் தெரிவிக்க முடிவதுதான்.

‘பச்சைக்கனவு’ கதையில் குருடனின் நினைவோட்டமாக, ”தூங்குவதற்கும் விழித்திருப்பதற்கும் என்ன வித்தியாசம்? எனக்கு இரண்டும் ஒன்றாயிருக்கிறது. எப்பவும் இருள்தான். வெய்யில் உடலில் உறைத்தால் அது பகலா? அப்புறம் வெய்யிலில்லாது, தெருக் கொறடில் நான் கட்டிலில் படுத்துவிட்டால் அது இரவா? இப்பொழுது நான் தூங்குவதாக அர்த்தமா? தூக்கம் நிஜமா? விழிப்பு நிஜமா?” – பக்/14. என்று அற்புதமாய் இவரால் எழுத முடிகிறது.

‘இதழ்கள்’ கதையில் தன் சகோதரனை இழந்த நோயாளி இப்படி நினைக்கிறான். ”சந்துருவின் அகாலமான திடீர் மரணம் தேவலையா? அல்லது நாளுக்கு நாள் அல்லது ஒரு கணக்கில் மூச்சுக்கு மூச்சு ஒருதுளியாய்ச் சுயநினைவோடு என் பிராணனை நான் விட்டுக்கொண்டிருக்கும் இந்நிலை தேவலையா? இம்மரணத்தில் நோயின் அவஸ்தை ஒருபக்கமிருக்கட்டும். இதில் எங்கோ ஒரு மூலையில் ஒருவிதமான அவமானம் ஒளிந்துகொண்டு ஊமையாய் உறுத்துகிறது.” – பக்/ 139-140.

கொட்டுமேளம் கதையிலும் இப்படி ஓரிடத்தை ரசிக்க முடிந்தது. ஜானாவின் மன்னி, தன் கணவனையும், ஜானாவையும் பற்றி அவதூறு பேசிப் பிறந்தகம் செல்கிறாள். பிறந்தவீட்டில் இவள் கணவனை விட்டுவிட்டு வந்த துக்கம்கூடத் தெரியாமலேயே வளைய வருகிறாள். பிறகு அவளுக்கும் அவள் தாயாருக்கும் முதல்பிணக்கு எப்படி ஏற்படுகிறது தெரியுமா? ஜானாவிடம் யாரோ இதுபற்றி இப்படிச் சொல்கிறார்கள். ”ஏன்டி, மருமான் முழிமுழியாப் பேசறானாமே! நான் கேள்விப்பட்டேன். உன் மன்னிக்குப் புதுசா தங்கை பிறந்திருக்காம். அதிலேருந்து என்னமோ கசமுசப்பாயிருக்காம்.” – பக்/180.

‘தரிசனம்’ இந்தத் தொகுப்பிலேயே தனித்தன்மை வாய்ந்தது. ஏனோ திருமணம் குதிராமல் தடைப்பட்டு வருகிற பெண்களை நினைத்த இவர் சோகம், மிகுந்த கலைநயத்துடனும் கவிதையின் அழத்துடனும் வெளிப்பட்டுள்ளது. ”எதிர்வீட்டில் ஒரு பெண் வயது முப்பத்திரெண்டாம். இன்னும் கல்யாணம் ஆகவில்லையாம்… அவளை அவள்பயிலும் வீணையின் இசையாய்த்தான் அறிவேன். தன் ஆவியின் கொந்தளிப்பை வீணையில் ஆஹ¤தியாய்ச் சொரிகிறாள்… நாட்டில் பெண்களுக்குக் குறைவில்லை. பிள்ளைகளுக்கும் குறைவில்லை. ஆனால் தாலிமுடி ஏன் விழுவதில்லை?” – பக்/112. ”கன்யாகுமரி காஷாயினி… காத்திருப்பது என்றால் என்ன? இங்கு இத்தனை அழகும் அங்கு அத்தனை செளரியமும், ஒன்றுடன் ஒன்று ஒன்றாக ஏங்கி, வறட்டுக் கெளரவத்தில் வியர்த்தமாகப் போவதுதானா? கப்பல்களைக் கவிழ்த்த கதைகளைத் தன்னுள் அடக்கிய மூக்குத்தி உண்மையில் கல்யாணம் ஆகாமல் காத்திருக்கும் கன்னிகளின் ஏக்கம் ஒன்றுதிரண்ட கண்ணீர்ச் சொட்டு.” (பக்/117)

லா.ச.ரா.வின் ஒவ்வொரு கதையும் சிறப்புச் சிறுகதைதான். லா.ச.ரா.வின் சொற்செட்டும், கற்பனை அழகும், கவிதை மனமும் மிகுந்த சுவையும், அதேசமயம் கருத்துச் செறிவும் நிரம்பியவை.

எங்களைப்போன்ற இன்றைய இளைய எழுத்தாளர்களுக்கு லா.ச.ரா.வும், ஜானகிராமனும் தவிர்க்க முடியாத ஆதர்சங்கள். இருவரது கதைகளையும் தொடர்ந்து ஐந்திணைப் பதிப்பகம் வெளியிட்டு வருவது மகிழ்ச்சியோடு பாராட்டப்பட வேண்டிய விஷயம்.

1) லா.ச.ரா. மரபுரீதியான பழக்கவழக்கங்களை தம் கதைகளில் ஆதரித்தார். எனினும் அவைகளை மரபை உதறிய புது முறைகளில் சொன்னார்.

2) தமிழ்மொழிக்கு வளம் சேர்த்த எழுத்தாளர்களில் கட்டுரைகளுக்கு சுந்தர ராமசாமியையும், கதைகளுக்கு லா.ச.ரா.வையும் சொல்லியாக வேண்டும்.

3) லா.ச.ரா. உணர்வுகளின் மைக்ராஸ்கோப். சொற்களின் சூத்ரதாரி. இவர் கதைகள் வார்த்தைகளின் விஸ்வரூபம். லா.ச.ரா.வின் உலகம் குறுகியது என்று கூறுபவர்களால்கூட அது ஆழமானது என்பதை மறுக்க முடியாது.

எஸ். ஷங்கரநாராயணன்
சென்னை 101
10.12.1986
(ஐந்திணை பதிப்பகம் – லா.ச.ரா.வின் சிறப்புச் சிறுகதைகள் – முதல் தொகுதி.)

>>>

லா.ச.ரா.வுடன் நட்பு (அடுத்த இதழில்)
————————————————————————————————————————

By Era Murugan in RKK:
ஒரே கதையைத்தான் லா.ச.ர வெவ்வேறு நடைகளில் எழுதுகிறார் என்று கு.அழகிரிசாமி ஒரு தடவை சொன்னார்

இந்தக் குற்றச்சாட்டு கி.ராஜநாராயணனைக் குறித்தும் உண்டு. பிரபஞ்சன் சொன்னதாக நினைவு.

லா.ச.ராவை ‘அழுகுணிச் சித்தர்’ என்பார் க.நா.சு.

இ.பா சார் சொன்னபடி, அவர் ஒரு தலைமுறையின் கல்ட் ஃபிகர். ‘புத்ர’வும் ‘சிந்தாநதி’யும் அவர் பெயரை எக்காலத்துக்கும் சொல்லிக் கொண்டிருக்கும் – கல்ட் பிகர்கள் அடுத்த அடுத்த தலைமுறைகளுக்கு எடுத்துப் போகப்படுவதில்லை என்றாலும்.

சென்னை புத்தகக் கண்காட்சியில் (1998 என்று நினைவு) அவரைச் சந்தித்தபோது என்னிடம் சொன்னார் – “கதை நன்றாக வரும்வரை அதை விடாதே. திரும்பத் திரும்ப சோம்பல்படாது எழுது. என் வீட்டுக்கு வா, காண்பிக்கிறேன், புத்ரவுக்கு எத்தனை டிராப்ட் ட்ரங்குப் பெட்டியில் வைத்திருக்கிறேன் என்று”.

அவர் பட்ட கஷ்டம் நாம் படத்தேவையில்லாமல் செய்துவிட்டது டெக்னாலஜி. கம்ப்யூட்டரில் எழுதுவதால், அடித்தலும் திருத்தலும் ஒட்டுதலும் வெட்டுதலும் புதிதாக நுழைத்தலும் நாலே கீபோர்ட் விசைகள் மூலம் நடத்திவிட முடிகிறது. ஆனால் அந்த ‘சிரமத்தை’க்கூட எடுத்துக்கொள்ள எத்தனை எழுத்தாளார்கள் முயல்கிறார்கள் என்பதுதான் கேள்வி.

புத்ர-வை நாவலோடு அங்கங்கே அவர் டூடுல்ஸாகக் கிறுக்கிச் சேர்த்த படங்களுக்காகவும் நினைவு வைத்திருக்கிறேன்.வாசகர் வட்டம் (லட்சுமி கிருஷ்ணமூர்த்தி) கிட்டத்தட்ட ஐம்பது வருடம் முன்னால் நூல் பதிப்பில் செய்த அழகான புதுமை அது.

அன்புடன்
இரா.மு

Thinnai: “லா.ச.ரா.வின் பாற்கடலும் போர்க்களமும் :: பா. உதயகண்ணன்”

Thinnai: “லா.ச.ரா பற்றிய ஷங்கரநாராயணனின் கட்டுரை – மற்றும் அவர் கடிதம் தொடர்பாக.. :: மகேஷ்.”

Thinnai: “லா.ச.ரா. நினைவாக ஒரே ஒரு நாற்காலி :: ம.ந.ராமசாமி”

————————————————————————————————————————————————–

முகங்கள்: எழுத்தையே சங்கீதமாக்க முயற்சித்தவர்!

ந.ஜீவா

“எழுத்து எனது சொந்த ஆத்மார்த்தம்’, “எனக்காகவே நான் எழுதுகிறேன், அதில் பிறர் தன்னை அடையாளம் காண முடிந்தால் அதுவே பெரிய விஷயம்’ என்றெல்லாம் கூறியவர் மறைந்த எழுத்தாளர் லா.ச.ராமாமிர்தம். கடந்த அக்டோபர் மாதம் 30 ஆம் நாள் நம்மை விட்டுப் பிரிந்த எழுத்தாளர் லா.ச.ரா.வுக்கு வயது 91.

அவரைப் பற்றிய ஓர் ஆவணக் காட்சிப் படம் ஒன்றை இயக்கியிருக்கிறார் இயக்குநர் அருண்மொழி.

அவள் அப்படித்தான், ஏழாவது மனிதன், கருவேலம்பூக்கள், மோகமுள் போன்ற தமிழின் குறிப்பிடத்தக்க திரைப்படங்களில் பணியாற்றியவர் அருண்மொழி. காணிநிலம், ஏர்முனை ஆகிய படங்களை இயக்கியவர்.

தற்போது எல்.வி.பிரசாத் ஃபிலிம் & டிவி அகாதெமியில் ஆசிரியராகப் பணியாற்றும் அவரைச் சந்தித்தோம்.

லா.ச.ரா.வைப் பற்றிய ஆவணப்படம் எடுக்கும் எண்ணம் எப்படி வந்தது?

நான் லா.ச.ரா.வைப் பற்றிய ஆவணப் படம் எடுப்பதற்குக் காரணம் அவருடைய எழுத்து எனக்கு ரொம்பப் பிடிக்கும். அவருடைய கவித்துவமான நடை என்னை மிகவும் கவர்ந்தது. எனவே அவருடைய “கழுகு’ கதையை தொலைக்காட்சிக்காகப் படமாக்க வேண்டும் என்று 1992 இல் அவரை முதன்முதலாகச் சந்தித்தேன். அப்போதிருந்து அவருக்கும் எனக்கும் தொடர்பு ஏற்பட்டது. லா.ச.ரா.வைப் பற்றிய ஆவணப்படம் எடுப்பதற்கு எனக்கு ஆர்வம் வந்ததற்கு இன்னொரு காரணம் அவரது சொந்த ஊரான லால்குடிக்கு அருகேதான் எனது சொந்த ஊரும்.

அவருடைய “கழுகு’ கதையைப் படமாக்கினீர்களா?

நான் கழுகு கதையைப் படமெடுக்கலாம் என அவரை அணுகிய போது அதற்கு அவர் அனுமதி கொடுக்கவில்லை.

“என் கதையைப் படமெடுக்காதீங்க…என் கதையைப் படமெடுத்து நஷ்டம் அடையாதீங்க’ என்று எடுத்த எடுப்பிலேயே கூறிவிட்டார். அவருடைய கதை படமாகும்போது மாறிவிடும் என்பதனால் அப்படிக் கூறுகிறாரோ என்று நினைத்தேன். அவரும், “கதையின் ஜீவன் படமாக்கும்போது வீணாகிவிடும்’ என்றார். நான் திரைக்கதையை அவரிடம் காட்டுகிறேன் என்றெல்லாம் கூறிப் பார்த்தேன். அவர் அதற்கு ஒத்துக் கொள்ளவில்லை. மேலும் எனக்கு அந்த ஆண்டு அந்தக் கதையைப் படமாக்குவதற்கான அப்ரூவல் தூர்தர்ஷனில் கிடைக்கவில்லை.

ஆனால் அந்தக் கதையை வேறொருவர் எடுத்தார். ஆனால் லா.ச.ரா., “அந்தப் படத்துக்கும் தனது கதைக்கும் எந்தத் தொடர்புமில்லை’ என்றார்.

லா.ச.ரா.வுக்கு சினிமாவைப் பற்றிய நல்ல அபிப்ராயங்கள் இருந்தனவா? உங்களைப் படமெடுக்க எப்படி அவர் அனுமதித்தார்?

எனக்கும் எல்லாருக்கும் தெரிந்த லா.ச.ரா. ஓர் எழுத்தாளர் என்பதுதான். ஆனால் அவரைச் சந்தித்துப் பேசிய போது அவர் உலகத்தரம் வாய்ந்த ஏராளமான திரைப்படங்களின் ரசிகர் என்பது தெரியவந்தது. 1940 – 50 காலகட்டங்களில் வெளிவந்த தரமான படங்களின் ரசிகர் அவர். ஃபிராங் காப்ராவின் படங்களை எல்லாம் பார்த்து அணுஅணுவாக ரசித்திருந்தது தெரிய வந்தது.

உலகத்தரம் வாய்ந்த படங்களைப் பார்த்து ரசித்த லா.ச.ரா.விற்கு தமிழ்த் திரைப்படங்களில் அவ்வளவு பரிச்சயமில்லை. லா.ச.ரா. தொலைக்காட்சியில் கூட தமிழ் சினிமா பார்க்கமாட்டார் போலிருக்கிறது. 96 – 98 ஆம் ஆண்டில் கமல்ஹாசனைப் பற்றி அவரிடம் பேசினேன். அதற்கு அவர், “கமல்ஹாசனா? யார் அவர்? என்ன பண்றார்?’ என்று கேட்டார். இத்தனைக்கும் கமல்ஹாசன் லா.ச.ரா.வின் தீவிர ரசிகர். அதற்குப் பின் கமல்ஹாசனோடு அவருக்குத் தொடர்பிருந்ததா என்று எனக்குத் தெரியாது. வயோதிகத்தின் காரணமாக ஒருவேளை அப்படி அவர் பேசினாலும் பேசியிருக்கக்கூடும் என்று நினைக்கிறேன்.

அவரை ஆவணப்படம் எடுக்கப் போகிறேன் என்று சொன்ன போது, “உங்களுக்காக நான் நடிக்க எல்லாம் முடியாது. வேண்டுமானால் இயல்பா நான் இருக்கறதை படம் எடுத்துக்கங்க’ என்றார்.

லா.ச.ரா.பற்றிய ஆவணப்படத்தில் என்ன காட்சிகள் இடம் பெற்றிருக்கின்றன?

அதற்குப்பின் பலமுறை க்ருஷாங்கினியுடன் அவர் வீட்டுக்குப் போயிருக்கிறேன். டைனிங் டேபிள் முன் உட்கார்ந்து க்ருஷாங்கினிக்கு அவர் அளித்த பேட்டிகளைப் படமெடுத்தேன். அதன்பின் லா.ச.ரா. பங்கெடுத்த ஐந்து இலக்கியக் கூட்டங்களைப் பதிவு செய்தேன். அக்கூட்டங்களில் சிட்டி, ஜெயகாந்தன், அசோகமித்திரன் போன்றோர் லா.ச.ரா.வைப் பாராட்டிப் பேசிய நிகழ்வுகளைப் படமெடுத்தேன். இதுதவிர வண்ணநிலவன், ஞானக்கூத்தன் ஆகிய இருவரையும் லா.ச.ரா.வின் நினைவுகளைப் பகிர்ந்து கொள்ளச் செய்து அதையும் படமாக்கியிருக்கிறேன். லா.ச.ரா.வை அவர் வீட்டில் படமெடுக்கும் போதெல்லாம் அவருடைய துணைவியாரும், மகளும் ரொம்ப ஒத்துழைப்புக் கொடுத்துப் படமெடுக்க உதவினார்கள்.

தான் ஓர் எழுத்தாளனாக இருப்பது பற்றி அவர் எண்ணம் எப்படி இருந்தது?

“நான் சம்பாத்தியத்துக்குத் தொழில் வச்சிருக்கேன். எழுத்தை வியாபாரம் பண்ணலை. முத்திரைக் கதையெல்லாம் எழுதமாட்டேன். நான் எழுத்தில் பரிசோதனைகள் பண்றேன்’ என்பார்.

எழுத்தாளர் தி.ஜானகிராமனைப் பற்றி உயர்ந்த அபிப்ராயம் உடையவராக இருந்தார் லா.ச.ரா. “தி.ஜானகிராமன் சங்கீதக்காரனைக் கதாபாத்திரமாக வைத்து எழுதுகிறார். நான் எழுத்தையே சங்கீதமாக்க முயற்சிக்கிறேன்’ என்பார்.

லா.ச.ரா.விடம் உங்களைக் கவர்ந்த பண்பு?

பணத்தைப் பெரிதாக எண்ணாத மனிதர். 1996 இல் இருந்து 2000 க்குள் அவர் மூன்று வாடகை வீடுகள் மாறிவிட்டார்.

அவர் ஒருவரிடம் ஏதோ பேசணும் என்பதற்காகப் பேசமாட்டார். நாம் ஒரு குறிப்பிட்ட விஷயத்திற்காக அவரைப் பார்க்கப் போனால் அது பற்றி மட்டுமே அவர் பேசுவார். அதுபோல அவரின் ரசிகர் யாராவது நம்மோடு வந்து அவருடன் பேச ஆவலாக இருந்தாலும் அதைப் பற்றியெல்லாம் அவர் கண்டு கொள்ளமாட்டார். அவருடன் பேச அவர் இன்னொரு நாள்தான் வரவேண்டும். நேரம் பற்றிய அப்படியொரு விழிப்புணர்வு அவருக்கு இருந்தது.

மேலும் அவரைப் பாராட்ட வேண்டும் என்பதற்காக எதையாவது சொல்லி அவரைப் பாராட்டிவிட முடியாது. வாசகர்கள் யாராவது அவரை அரைகுறையாகப் படித்துவிட்டுப் பாராட்டினால் லா.ச.ரா.கேட்கும் நுட்பமான கேள்விகளுக்குப் பதில் சொல்ல முடியாமல் விழிக்க நேரிடும்.

பிற எழுத்தாளர்களைப் பற்றி ஆவணப்படம் எதுவும் எடுத்திருக்கிறீர்களா?

நான் லா.ச.ரா.வை மட்டும் ஆவணப்படம் எடுக்கவில்லை. நகுலனைப் பற்றிய ஆவணப்படமும் எடுத்திருக்கிறேன்.

எப்படி லா.ச.ரா.வை நீண்டகாலமாகப் பதிவு செய்து ஓர் ஆவணப்படத்தை உருவாக்கியிருக்கிறேனோ அதைப் போல பிற எழுத்தாளர்களையும் பதிவு செய்துவருகிறேன்.

கோவை ஞானியை நிறையப் பதிவு செய்திருக்கிறேன். எழுத்தாளர் ராஜம் கிருஷ்ணன், இன்குலாப், இலங்கை இலக்கிய விமர்சகர் கா.சிவத்தம்பி ஆகியோரைப் பற்றிய பதிவுகள் என்னிடம் உள்ளன. மேலும் சில காட்சிகளை எடுத்தால் இவற்றையெல்லாம் ஆவணப்படங்களாக மாற்றிவிடலாம்.

கவிஞர் பழமலய், எழுத்தாளர் கி.ராஜநாராயணன் ஆகியோரையும் படமெடுக்க ஆசை உள்ளது.

ந.ஜீவா

Posted in 2437706, Academy, Anjali, Author, Awards, Biography, Biosketch, Blogs, Books, Critic, Critique, dead, Dhinamani, Dinamani, Faces, Fiction, Kadhir, Kathir, La Sa Ra, Lalgudi, Lalkudi, LaSaRa, Life, Literature, Manikkodi, Manikodi, Memoirs, Novels, people, Poems, Poet, Prizes, Puthra, Putra, Raamamirtham, Ramamirtham, Reviews, Sahithya, Sahithya Academy, Sahitya, Sahitya Academy, Saptharishi, Sindhanathi, Sindhanathy, Sinthanathi, Tamil, Tamil Blogs, Thinamani, Writer | 8 Comments »

Famous People & Tidbits – Life Incidents: Sunday Dinamani

Posted by Snapjudge மேல் ஒக்ரோபர் 22, 2007

துணுக்குத் தோரணம்

பொறுமையாளன்

“”சின்ன வயதில் எனக்குப் பெரிதும் பொறுமை கிடையாது. திருமணத்திற்குப் பின்தான் நான் பொறுமையாளன் என்று பலராலும் பாராட்டப்பெற்றேன். பொறுமை பொலிவது உண்மையானால், அது இயற்கையில் அரும்பியதாகாது. அது கமலாம்பிகையினின்று இறங்கிக் கால் கொண்டது என்றே சொல்வேன்”- என்று சுயவிமர்சனம் செய்துகொண்டவர் தமிழ்த்தென்றல் திரு.வி.க., அமைதிக் கொள்ள வைத்த கமலாம்பிகை யார் தெரியுமா? அவர் மனைவி.

மதிநுட்பம் இல்லாத மாநிலம்?

எஃப்.ஏ. தேர்வில் முதல் மாணவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார் பீகாரைச் சேர்ந்த அந்த மாணவர். இதற்கு மாதம் இருபத்தைந்து ரூபாய் உபகாரச் சம்பளமாக வழங்கியது கல்லூரி. இந்த உதவித் தொகை தொடர்ந்து பல ஆண்டுகள் அவருக்குக் கிடைத்து வந்தது. பின்னர் பி.ஏ. தேர்விலும் முதல் மாணவராகத் தேர்வானார். உபகாரச் சம்பளம் மாதம் தொண்ணூறு ரூபாயாக உயர்த்தித் தரப்பட்டது.

இவ்வாறு முதல் மாணவராகவே படிப்பில் தேர்ச்சி பெற்றுக் கொண்டே அந்த மாணவர் வந்ததில் ஒரு சிறப்பு உண்டு. அந்தக் காலகட்டத்தில் பீகார் மாநிலம் வங்காள மாநிலத்தில் சேர்ந்திருந்தது. பீகார் மாநில மாணவர்கள் எல்லோரும் கொல்கத்தா பல்கலைக் கழகத்தில்தான் சேர்ந்து படிக்க வேண்டும்.

வங்க மொழி பேசுவோர் பீகாரிகளைப் படிப்பறிவு இல்லாதவர்கள், மதிநுட்பம் இல்லாதவர்கள் எனப் பேசுவார்கள். இப்படி கேவலமாய்ப் பார்ப்பதை மாற்றியமைக்க வேண்டும் என்ற வெறியோடுதான் அந்த மாணவர் படித்து முதல் மாணவராக வந்திருக்கிறார்.

அந்த மாணவர் யார் என்றுதானே கேட்கிறீர்கள்? இந்தியாவின் முதல் குடியரசுத் தலைவர் டாக்டர் ராஜேந்திரபிரசாத்.

கோர்ட்டுக்குப் போன குதிரை!

நீதிமன்றத்திற்கு தினமும் இராஜாஜி தனது குதிரை வண்டியில் செல்வது வழக்கம். ஒருநாள் நீதிமன்றத்திற்குப் புறப்படும்போது வண்டியில் பூட்டிய குதிரையின் மீது புழுதியும் சாணமும் படிந்திருப்பதைக் கண்டார். குதிரையைக் குளிப்பாட்டி வரும்படி கூறினார்.

வண்டிக்காரன் குதிரையைக் குளிப்பாட்டி வண்டியில் பூட்டினான். இராஜாஜி ஏறி அமர்ந்தார். குதிரைக்காரன் ஏறி உட்கார்வதற்குள் குதிரை வண்டியை இழுத்துக் கொண்டு ஓடத் தொடங்கிவிட்டது. இராஜாஜியால் ஒன்றும் செய்யமுடியவில்லை. ஏதாவது ஓர் இடத்தில் குதிரை களைப்படைந்து நிற்கத்தானே போகிறது என்ற நம்பிக்கையில் அமைதியாக உட்கார்ந்துவிட்டார்.

குதிரை ஓடி கடைசியாக ஓரிடத்தில் போய் நின்றது. அது எந்த இடம் தெரிந்தால் ஆச்சரியப்படுவீர்கள். அது இராஜாஜி வழக்கமாகச் செல்லும் நீதிமன்றம்.

பிரதமரைச் சந்திக்க மறுத்த ஜனாதிபதி?

மும்பை நேரு விஞ்ஞான மையத்தில் அப்துல்கலாம் உரையாற்றிக் கொண்டிருந்தார். அப்போது எஸ்.எல்.வி செயற்கைக்கோள் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்ட நேரம். “”பிரதமர் இந்திரா காந்தி தங்களைச் சந்திக்க விரும்புகிறார். நாம் இருவரும் சேர்ந்து சென்று சந்திக்கலாம்” என்று இஸ்ரோ தலைவர் தவான், அப்துல்கலாமை அழைத்தார்.

கலாம் செல்வதற்குத் தயங்கினார். தவான் காரணம் கேட்டதற்கு கலாம் சொன்னார்: “”நான் எப்போதும்போல் சாதாரண நீலவண்ணச் சட்டையே அணிந்திருக்கிறேன். கால்களுக்குப் பூட்சுகள் இல்லை. செருப்புகள்தான் அணிந்துள்ளேன். இந்தக் கோலத்தில் பிரதமரைச் சந்திக்கத் தயக்கமாக இருக்கிறது” என்றார்.

அதற்கு தவான், “”உடையைப் பற்றி கவலைப்படாதீர்கள். வெற்றி என்கிற பேரழகான ஆடையை நீங்கள் அணிந்திருக்கிறீர்கள்” என்று கூறி பிரதமரிடம் அழைத்துச் சென்றார்.

பற்று அற!

“”என்ன செய்கிறாய்?” என்று வேதனையோடு கேட்ட தாய்க்கு சாதாரணமாகச் சொன்னான் சிறுவன் “”வேறொன்றுமில்லை, என்னுடைய மெட்ரிகுலேஷன் சான்றிதழ்களை எரிக்கிறேன்”

“”ஏன் இப்படிச் செய்கிறாய்?” என்று கேட்ட தாய்க்குச் சொன்னான்: “”இவற்றால் ஒன்றும் பயனில்லை. அம்மா, சூர்யாஜி போன்று பந்தக் கயிறுகளை அறுக்கவேண்டும். ஆசைகளை வேரிலேயே களைய வேண்டும். எனது அகங்காரம் ஒழிய வேண்டும்” என்றான் சிறுவன்.

சரி.. யார் அந்த சூர்யாஜி?

மராட்டிய சிவாஜியின் தளபதியான தானாஜி தம்பி.

சிம்மகட் என்ற பகுதியில் நடந்த யுத்தத்தில் தொடர்புடையவன். போரின் போது உறுதியான கயிற்றைக் கோட்டைமேல் கட்டிவிட்டு, அக்கயிற்றைப் பிடித்துக் கொண்டு போர் வீரர்கள் கோட்டை மேல் ஏறிக் கடந்துகொண்டிருந்தனர். கடுமையாகப் போரிட்ட தானாஜியின் வீரர்கள் களைப்பு அடைந்தனர். தன் வீரர்கள் பின்வாங்கிவிடுவார்களோ என்று தானாஜி பயந்தார். அப்போது தானாஜியின் தம்பியான சூர்யா, “”அஞ்ச வேண்டாம். கயிற்றை முன்பே அறுத்து விட்டேன். இனி வீரர்கள் திரும்பிச் செல்லமுடியாது. போரிட்டுத்தான் தீரவேண்டும்” என்றார்.

சரி… இந்தக் கதையைத் தன் தாயிடம் சொன்ன அந்த சிறுவன் யார் என்று தெரியுமா? வினோபா பாவே.

Posted in APJ, Bave, Bengal, Bhave, Bihar, Dinamani, Education, Faces, Famous, Freedom, Horse, Incidents, Independence, Indira, Indira Congress, Indira Gandhi, Indra, Indra Congress, Indra Gandi, Kalam, Kalyanasundaram, Kalyanasundaranar, Kalyanasuntharam, Kalyanasuntharanar, Life, Maharasthra, Marathi, people, President, Rajaji, Rejendra Prasad, Shivaji, Sivaji, State, ThiruViKa, Vinoba, Vinobha, Vinobha Bhave, War, WB | குறிச்சொல்லிடப்பட்டது: , | Leave a Comment »

VOC Chidhambaram Pillai’s Son – Reminiscences from the History: Dinamani Kathir

Posted by Snapjudge மேல் ஒக்ரோபர் 1, 2007

நினைவலைகள்

செக்கிழுத்த செம்மல் வ.உ.சிதம்பரம் பிள்ளையின் மகன் வ.உ.சி.சுப்பிரமணியம். இவர் தொழிலாளர் நல ஆய்வாளராகப் பணியாற்றினார். அப்போது ஒரு மளிகைக் கடைக்காரர் விதிமுறைப்படி நடந்துகொள்ளவில்லை. பலமுறை எச்சரித்தும் அவர் திருந்தவில்லை. கடைசிமுறை எச்சரிக்கையாக, “”இனி விதிமுறைப்படி நடந்துகொள்ளாவிட்டால் சட்டப்படி நடவடிக்கை எடுப்பேன்” என்று கடுமையாக எச்சரித்தார். இதனால் ஆத்திரமடைந்த மளிகைக் கடைக்காரர் காவல்நிலையத்தில் வ.உ.சி.சுப்பிரமணியம் லஞ்சம் கேட்பதாகப் புகார் செய்தார். அந்தப் புகாரின் அடிப்படையில் காவல்துறை அதிகாரி சுப்பிரமணியத்தை காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினார். கேட்கப்பட்ட கேள்விகள் அனைத்திற்கும் நிதானமாகவும் பொறுமையாகவும் பதிலளித்தார் சுப்பிரமணியம். ஒருகட்டத்தில் சொந்தவூர் பற்றி பேசுகிறபோது, “”தூத்துக்குடியைச் சேர்ந்த ஒட்டப்பிடாரம்” என்று பதலளித்தார். அதைக்கேட்ட காவல் அதிகாரி, “”அது வ.உ.சிதம்பரனார் பிறந்த ஊராயிற்றே” என்றிருக்கிறார். அப்போதுதான் சுப்பிரமணியம், “”வ.உ.சியின் மகன்தான் நான்” என்று சொல்லியிருக்கிறார். பதறிப்போன அதிகாரி, சுப்பிரமணியத்திடம் தவறுக்கு வருத்தம் தெரிவித்துக்கொண்டு “போலீஸ் சல்யூட்’ அடித்து அனுப்பிவைத்திருக்கிறார்.

Posted in Arrest, Chidhambaram, Dinamani, Famous, Freedom, History, Humbleness, Humility, Incidents, Independence, Influence, Police, Ship, Son, VOC | 4 Comments »

Eraa Murugan: Dinamani Kathir Series: No.40 Rettai Theru

Posted by Snapjudge மேல் செப்ரெம்பர் 22, 2007

ஞாபகம் வருதே…: நெ.40, ரெட்டைத் தெரு

இரா. முருகன்

என்னமோ தெரியவில்லை, பெருமாள் கோவில் எப்போதும் அமைதியில் மூழ்கியிருக்கும். தொடர்ந்து அவதாரம் எடுத்து முடித்த அசதியோடு ஓய்வெடுக்க எங்கள் ஊரைத்தான் பெருமாள் தேர்ந்தெடுத்ததால் பண்டிகை, நாதசுவரம், அதிர்வேட்டு எல்லாம் வேணாம் என்று சொல்லிவிட்டு விச்ராந்தியாகச் சாய்ந்து படுத்துவிட்டதாகக் கேள்வி.

சிவனோ உற்சாகப் பிரியராக ஒன்று முடிந்து அடுத்த கொண்டாட்டத்துக்குத் தயாராகிக் கொண்டிருப்பார். முக்கியமாக மார்கழி வந்தால் போதும். மாதம் பிறக்க இரண்டு நாள் முந்தி வக்கீல் குமாஸ்தா வெங்கடேசனுக்குக் கனவிலோ அல்லது அவர் சதா சுமந்து கொண்டு நடக்கிற ஹோ அண்ட் கோ டைரியில் கொட்டை எழுத்தில் போட்டோ ஞாபகப்படுத்தி, பட்டு உத்தரீயத்தைத் தேடவைப்பார். வெங்கடேசன் அந்தப் பழைய உத்தரீயத்தை தியாகி டெய்லர் கடைக்கு எடுத்துப் போகும்போது கூடவே போகிற எங்களுக்கு வெண்பொங்கல் வாசனை மனதில் மிதந்து வரும்.

“அடுத்த வருஷமாவது புது முண்டாசு வாங்கிடுங்க, சாமிகளே. ஊசி நுழைய எடமே இல்லாமே ஒட்டுப்போட்ட நூல்தான் முழுக்க இருக்கு’, தியாகி டெய்லர் எப்படியோ தையல் இயந்திரத்தில் அந்தப் பட்டு உத்தரீயத்தை முன்னாலும் பின்னாலும் இழுத்துப் பிடித்து கிழிசலை அடைத்துத் தருவார். “பொழச்சுக் கிடந்து எங்க வக்கீலய்யாவுக்கு நல்லதா நாலு கேசு வரட்டும் பார்க்கலாம்’ குமாஸ்தாவுக்கு நம்பிக்கை இருந்தது.

மார்கழி விடிகாலையில் தலையில் அந்தப் பட்டுத் துணியை கம்பீரமான முண்டாசாகக் கட்டிக் கொண்டு மீசை இல்லாத பாரதியார் மாதிரி வெங்கடேசன் சிவன் கோவில் சந்நிதானத்துக்கு முன்னால் நிற்பார். திருப்பள்ளி எழுச்சியும், திருவெம்பாவையும் ஒவ்வொரு பாட்டாகப் பாடி நிறுத்த, சுந்தரேசக் குருக்கள் பின்னால் வளைந்த காலை உந்தி திருவாச்சி விளக்கில் தீபாராதனை கொளுத்தி சிவனுக்குக் காட்டுவார். மடைப்பள்ளியில் வெண்பொங்கல் தயாராகிற வாடை சுகமாகக் காற்றில் மிதந்து வர, நாங்கள் திருவெம்பாவை கவுண்ட்-டவுனில் கவனமாகக் கன்னத்தில் போட்டுக் கொண்டு காத்திருப்போம். விடியற்காலம் சீக்கிரம் கிளம்ப வேண்டியிருப்பதால், சில நாள் குளிக்காமல் பிரசாதம் வாங்கப் போன குற்றத்துக்காகவும் இப்படிக் கன்னத்தில் போட்டுக் கொள்வது உண்டு.

“”போற்றி எல்லா உயிர்க்கும்” வெங்கடேசன் கடைசி திருவெம்பாவை பாடி முடிப்பார். உத்தரீயத்தை அவிழ்த்து ஜாக்கிரதையாக மடித்து அஞ்சால் அலுப்பு மருந்து பெயர் எழுதிய துணிப்பையில் அடைத்துக் கொண்டிருக்கும்போது கோவில் மடைப்பள்ளி சுயம்பாகி மாதேசுவரன் ஒரு வெங்கலப் பாத்திரத்தில் ஆவி பறக்க வெண்பொங்கலை, மேலே ஒரு செம்புத் தட்டால் மூடி எடுத்து வருவான். பிளாஷ் போட்டோ எடுக்கிறதுபோல் அரை வினாடிக்கும் குறைவாக அந்தத் தட்டைத் தூக்கிப் பிடித்து சிவனுக்கு உள்ளே இருக்கிற நைவேத்தியத்தைக் காட்டி டப்பென்று உடனே மூடிவிடுவான் மாது. உள்ளே இருந்தபடிக்கே கையை நீட்டிச் சிவனோ, குருக்களோ, முண்டாசை அவிழ்த்த திருப்பாவை குமாஸ்தாவோ தட்டோடு பிடுங்கிக்கொண்டு போய்விடலாம் என்ற பயம் காரணமாக இருக்குமோ என்னமோ.

உபயதாரர்களுக்கு ஆளுக்கு இரண்டு கட்டி பொங்கல். காளாஞ்சியாக வெற்றிலை, பாக்கு, ரொம்பவே கனிந்த இத்தணூண்டு பூவன் பழம், தினசரிப் பத்திரிகையை நீளவாக்கில் கிழித்து மடித்த பொட்டலத்தில் விபூதி, குங்குமம், பூமாலையில் நறுக்கிய நாலு ஜவந்திப்பூ எல்லாம் வழங்கும் வரை பொறுமையாகக் காத்திருப்போம். இலை நறுக்கில் வைத்து மாது எங்கள் கையில் தொப்பென்று போடுகிற அந்தப் பொங்கலின் ருசி வாழ்க்கையில் அப்புறம் வேறு எந்தப் பொங்கலிலும் கிடைத்தது இல்லை.

மார்கழி மாதம் பஜனைக் கோஷ்டிகளின் மாதம். முதல் பஜனை, கோவில் தாற்காலிக நிர்வாகி கந்தன் ஃபான்ஸி ஸ்டோர் ராமநாதன் வகையறாக்கள் கோவில் வாசலில் இருந்து தொடங்கி ஊர் முழுக்கச் சுற்றி வலம் வருவது. சிரஸ்தார் சேஷன், ரிடையரான வாத்தியார் சிவராமன், ஸ்டாம்ப் வென்டர் தாத்தா போன்ற “அறுபது பிளஸ்’ ஆத்மாக்களின் இந்த கோஷ்டியில் யாராவது ஒருத்தரே கையில் ஜால்ராவோடு லாகவமாக பிடியரிசிப் பெட்டியையும் வயிற்றோடு கட்டித் தூக்கிக்கொண்டு நடப்பார். ஒவ்வொருத்தரும் இழுக்கும் ராகம் ஒவ்வொரு திசைக்குமாகப் பறக்க, வேற்றுமையில் ஒற்றுமையாக “நாதன் நாமத்தை நான் மறவேனே, மறவேனே’ என்று இந்த கோஷ்டி ஒரு தேவாரத்தை உண்டு இல்லை என்றாக்கி முடித்து அடுத்த பயமுறுத்தலுக்குத் தயாராகும். பாதிப் பாட்டில் ராமநாதன் தனி சுருதியில் “ஹரி ஹரி’ என்று சத்தமாகச் சொல்வார். யார் வீட்டு வாசலிலோ அரிசி போடத் தயாராக யாரோ நிற்கிறதாக அர்த்தம். பிடியரிசிப் பெட்டிக்காரர் நாதன் நாமத்தில் மூழ்கி இருந்தால், அடுத்த வேண்டுகோள் “ஹரிசி-வா, ஹரிசி-வா’ என்று இன்னும் இரைச்சலாக வரும். இந்த இரைச்சல் இல்லாவிட்டால் தினசரி திருவெம்பாவை பாடிமுடித்ததும் கையில் வந்து விழும் பொங்கல் அளவு கம்மியாகிவிடலாம்.

“அரிசி’ பஜனைக்கு அடுத்தது ராஜூத் தெரு பஜனை. இந்தத் தெருவில் சகலரும் சதா தெலுங்கில் மாட்லாடிக் கொண்டிருப்பார்கள். காரம் மணம் குணம் நிறைந்த பட்டணம் பொடி, பெப்ஸ் என்ற இருமல் மாத்திரை வில்லை, கோரோஜனை (அப்படி என்றால் என்ன?) என்று கலந்து கட்டியாக விற்கும் கங்காராஜ் அண்ட் கோ கடைக்காரர், எந்தக் காலத்திலேயோ பிரிண்டிங்க் பிரஸ் நடத்திய ஹிட்லர் மீசைப் பெரியவர், பம்புசெட் மோட்டார் ரிப்பேர் கடை முதலாளி என்று சங்கீதத்தோடு எந்த விதத்திலும் தொடர்புபடுத்திப் பார்க்கமுடியாத பெரிசுகள் மார்கழி வந்தால் தெப்பக்குளத்தில் குளித்துவிட்டு, நெற்றி முழுக்க நாமத்தைப் போட்டுக் கொண்டு கிளம்பிவிடுவார்கள். நாலு ஆர்மோனியம், சிப்ளாக்கட்டை, அப்புறம் பிரம்மாண்டமாக ராமர் பட்டாபிஷேகப் படம். அதன் மேல் சன்னமான பட்டுத்துணி- திருவெம்பாவை குமாஸ்தா முண்டாசு மாதிரி கிழிசல் இல்லாதது- அலங்காரமாக வழிந்தபடி இருக்கும். அழகான தெலுங்கில் அற்புதமாகப் பாடியபடி இந்த ராஜூத் தெரு மனிதர்கள் நாலு வீதி சுற்றி முடிக்க நடுப்பகல் ஆகிவிடும். இந்தத் தன்னார்வக் குழுக்களோடு போட்டி போட தாசில்தார் பஜனை கோஷ்டி வந்து சேர்ந்தது. ஆர்.டி.ஓ. ஆபிசில் எங்கேயோ இருந்து ஒரு தாசில்தாரை ஊருக்கு டிரான்ஸ்பர் செய்துவிட்டார்கள். குழந்தை குட்டி இல்லாத அந்த மனுஷர் ஆபீசில் சிவப்பு நாடா சுற்றிய ஃபைல்களை அப்படியும் இப்படியும் நகர்த்திய நேரம் போக, மிச்சப் பொழுதெல்லாம் பாடுவதிலேயே குறியாக இருந்தார். “பரிபாலித முதுகுந்தா, வேணும் தயை, நந்த நந்தன நந்தன முடிதன, அருள்வாய்’ என்று தமிழா, இல்லை பாலி, சுமத்ரா பாஷையா என்று முடிவாகச் சொல்ல முடியாத மொழியில் கீச்சுக் குரலில் பாடியபடி ஆபீஸ் விடுமுறையான ஞாற்றுக்கிழமைகளில் தாளத்தைத் தட்டிக் கொண்டு நகர்வலம் வருவார் இவர். தனியாக வந்தால் பிரச்சனை இல்லை. தாசில்தார் என்பதால் அவர் ஆபீசில் டவாலி சேவகர் தொடங்கி, லோயர், அப்பர் டிவிஷன் குமாஸ்தாக்கள், டென்-ஏ-ஒன் என்ற டெம்பரவரி கிளார்க்குகளில் பலபேரும் தாசில்தாருக்குப் பின்னால் மரியாதையான இடைவெளி கொடுத்துக் கூடவே நடந்து வருவார்கள். “மூன்றாவது சம்பளக் கமிஷன் தீர்ப்பை நடப்பாக்கு’ என்று அரசாங்கத்திடம் முறையிடும் என்.ஜி.ஓ. ஊர்வலம் மாதிரி இருக்கும் இது.

தாசில்தார் பதவி மாறிப் போகும்போது ரயில்வே ஸ்டேஷன் கொள்ளாத கூட்டம் இனிமேல் அவர் திரும்பி வரமாட்டார் என்று தீர்மானப்படுத்திக் கொண்ட என்.ஜி.ஓக்கள் “நந்த நந்தன நந்தன முனிதன’ என்று கையைத் தட்டிப் பாடியபடி திரும்பிப் போய்க் கொண்டிருந்தார்கள்.

———————————————————————————————————————————

Sunday September 23 2007

ரெட்டைத் தெருவுக்கும் சாப்பாட்டுக்கும் அப்படி ஒரு பிணைப்பு. ஒன்றுக்கு மூன்றாக மெஸ்கள் தெருவில் அங்கங்கே இடத்தைப் பிடித்து நாள் முழுக்கச் சுகமான சாப்பாட்டு வாடையைப் பரப்பியபடி இருக்கும். தெரு மத்தியில் கர்னாடக சங்கீத மெஸ். சாப்பிட வருகிறவர்களுக்கு ஆகாரத்துக்கு முந்தியோ, அப்புறமோ ஒரு கீர்த்தனை சொல்லிக் கொடுக்கிற ஏற்பாடோ அல்லது சங்கீதம் கேட்டபடி சாம்பார் சாதத்தை ஒருகை பார்க்க வசதியோ எல்லாம் இல்லை. வீட்டம்மா மூணு வேளை சாப்பாடு போடுகிற மெஸ் நடத்தினாள். அவங்க வீட்டுக்காரர் பாட்டு வாத்தியார். திண்ணையில் சுருதிப் பெட்டியோடு உட்கார்ந்து சரிகம என்று ஸ்வரம் இழுத்துப் பாடச் சொல்லிக் கொடுத்தார். ஆத்திரம் அவசரத்துக்கு சங்கீதக்காரர் சமையல்கட்டில் பொடிமாஸ் செய்ய வாழைக்காயை அரிவாள்மணையில் நறுக்கிக் கொண்டிருப்பார். ஆனாலும், அவர் வீட்டுக்காரி திண்ணையிலோ, உள்கட்டிலோ பாட்டுப் பாடிக் கேட்டதில்லை.

என் அம்மாவுக்கு அடுப்புப் பக்கம் போகக் கூடாத நேரம், பாட்டியம்மா “ஒருபொழுது’ உபவாசம், திடுதிப்பென்று உறவினர் வருகை போன்ற நேரங்களில் கையில் இரண்டு எவர்சில்வர் தூக்குகளோடு மெஸ் படியேற என்னைத்தான் அனுப்புவார்கள். “ஓரகத்தியோட பேத்தி. ராமேஸ்வரத்திலே மட் ஒய்பா இருக்கா. உனக்கு அக்கா முறை ஆகணும்டா குழந்தே. மிஸ்ஸிலே போய் புது ஈடா நாலு இட்லி வாங்கி வா’. பாட்டி, மெஸ்ûஸ மிஸ்ஸôக்கி… மிட் ஒய்பை மட் ஒய்ப் ஆக்கினாலும் கர்னாடக சங்கீத மெஸ் இட்லியைப் பார்த்த மாத்திரத்திலேயே “உளுந்து போதாது’, “சரியா வேகலை’ போன்ற அழுத்தமான விமர்சனங்களை முன்வைத்துவிடுவாள். நானூறு பக்க நாவலைப் படிக்காமலேயே கிண்டிக் கிழித்துத் தோரணம் கட்டும் இந்தக் கால இலக்கிய விமர்சகர்களுக்கு அவளே முன்னோடி. ஆனாலும் மெஸ் இட்லிக்கும் அவளுக்கும் ஒரு லவ்-ஹேட் ரிலேஷன்ஷிப் இருந்தது. விமர்சகர்களும் இலக்கியமும் போல.

மெஸ் நடத்த பஞ்சாயத்து போர்ட் அனுமதி வாங்கவில்லை என்று ஒரு தடவை ஆபீசர் ஒருத்தர் வந்து தக்காளி ரசத்தையோ, தண்ணீர் ஏகத்துக்கு விளம்பிய அவரைக்காய் சாம்பாரையோ கண்ணாடிக் குடுவையில் அடைத்துக் கொண்டிருந்ததாக சீதரன் சொன்னான். இலையில் சாதத்தோடு சுடச்சுட வார்த்துப் பிசைந்து விழுங்க வேண்டிய சங்கதியை எல்லாம் சயின்ஸ் வாத்தியார் பிராணவாயு தயாரிக்கிற மாதிரி குடுவையில் நிரப்பிப் பரிசோதித்துக் கொண்டிருப்பார்களா என்று தெரியவில்லை. ஆனாலும், சீதரன் அறிக்கை வெளியான ஒரு வாரத்தில் பஞ்சாயத்து ஆபீசிலிருந்து கூட்டமாக சைக்கிள்களில் வந்திறங்கிய ஒரு கூட்டம் கர்னாடக சங்கீத மெஸ்ஸில் புகுந்தது. தம்புராவையும் இலைக்கட்டையும் ஒரு பக்கமாக நகர்த்திவிட்டு அவர்களுக்குக் கல்யாண சாப்பாடு மாதிரி பரபரப்பாகப் பரிமாறிக் கொண்டிருந்தபோது, நாலு இட்லி, கெட்டி சட்னிக்காக நான் மணிக்கணக்கில் காத்திருக்க வேண்டிப் போனது.

சங்கீத மெஸ் தவிர இன்னொரு நட்சத்திர மெஸ்ஸýம் தெருவில் உண்டு. நட்சத்திரம் என்றால் த்ரீ ஸ்டார், ஃபைவ் ஸ்டார் அந்தஸ்து என்று அர்த்தம் இல்லை. சினிமா நட்சத்திரம் கிருஷ்ணையா நடத்திய மெஸ்ஸôக்கும் அது. “வஞ்சிக்கோட்டை வாலிப’னா அல்லது “மிஸ்ஸியம்மா’வா என்று தெரியாது. நான் சினிமா பார்க்க ஆரம்பிப்பதற்கு முந்தைய ஏதோ ஒரு ஜெமினி கணேசன் படம். ஜெமினி பி.பி.சீனிவாஸ் குரலில் ஏக்கத்தோடு பாடுவார். அப்புறம் மனதில் பதிந்த கதாநாயகியைப் படம் வரைய உட்காரும்போது வர்ணம், பிரஷ் போன்ற சமாச்சாரங்கள் இல்லாதது தெரியும். “யாரங்கே!’ அவர் கையைத் தட்ட, ஒரு தட்டில் வர்ணப்பொடி, தேங்காய்மட்டை பிரஷ் எல்லாம் வைத்து எடுத்துக் கொண்டு, சின்னதாக உச்சிக்குடுமியோடு கிருஷ்ணையாதான் கம்பீரமாக நடந்துவருவார்.

கட்டை, குட்டையாக, குடுமி, கடுக்கன் அலங்காரத்தோடு கிருஷ்ணையா மெஸ் வாடிக்கையாளர்களோடு எப்போதும் ஒரு பத்து வருடங்களுக்கு முந்திய தமிழ் சினிமா அல்லது அரசியல் பற்றி உரக்கப் பேசிக்கொண்டிருக்க, அவர்கள் கோதுமை ரவை, உப்புமா, கோதுமை சப்பாத்தி, கோதுமை தோசை என்று பத்திய போஜனமாக உள்ளே தள்ளிக் கொண்டிருப்பார்கள். நீரிழிவு வியாதி உள்ளவர்களுக்காக மட்டும் நடத்தும் மெஸ்úஸô என்னமோ தெரியாது, நான் போனபோதெல்லாம் “இட்லி தீர்ந்து போச்சு; ரவாதோசை வேணும்னா போடச் சொல்றேன்’. கிருஷ்ணையா ஜெமினி கணேசன் மாதிரி உள்ளே பார்த்துக் கைதட்டுவார். “மெஸ்ஸியம்மா’ தலை சமையலறை இருட்டுக்கு வெளியே ஒரு வினாடி தட்டுப்பட்டு மறையும். “பக்தவத்சலம் ஆட்சியிலே அரிசிக்கு ஆலாப் பறக்க வேண்டியிருக்கு. ராஜாஜி திரும்ப வரணும்’. கிருஷ்ணையா மெஸ்ஸில் ராஜாஜி என்ன, அறிஞர் அண்ணாவே வந்து ரூபாய்க்கு மூணுபடி அரிசி கொடுத்தாலும், ரவா உப்புமாதான் கிடைக்கும்.

இந்த இரண்டு மெஸ் தவிர தெருக் கோடியில் பொரிகடலைக் கடைக்கு எதிரில் செல்லூரார் மெஸ் உண்டு. பக்கத்தில் மாஜிஸ்டிரேட் கோர்ட்டுக்கு வரும் கட்சிக்காரர்களுக்காக, பிரத்யேகமாக கல்தோசையும், உளுந்து வடையும், சுண்டலும் விற்கிற இந்த மெஸ், கோர்ட் விடுமுறை காலத்தில் தூங்கப் போய்விடும். பள்ளிக்கூடம் அரைப் பரீட்சை, முழுப் பரீட்சைக்கு அடைத்து லீவு விடுவதுகூடத் தாமதமாகலாம். கோர்ட், வக்கீல் ஆபீஸ் போன்ற பெரியவர்கள் புழங்கும் இடங்கள் நாள் நட்சத்திரம் தவறாமல் வெகேஷனுக்காக அடைத்துப் பூட்டப்படுவது வாடிக்கை.

பஞ்சாயத்து போர்ட் பிரசிடென்டாக இருந்த அண்ணவாரு ராதாகிருஷ்ணன் ரெட்டைத் தெருவாசிதான். அவர் மெஸ் எதுவும் வைக்கவில்லை. ஆனால், காந்திவீதியில் ஏழெட்டு பெஞ்ச் போட்டு உடுப்பி ஓட்டல் என்று நடத்திக் கொண்டிருந்தார். பெரியவர்கள் காப்பி குடிக்கப் படியேறும் இடம் இது. நாலு வீட்டில் தோசைக்கு அரைத்து, குடிதண்ணீர் கொண்டுவந்து ஊற்றி வரும் சொற்ப வருமானத்தில் காலத்தை ஓட்டிக்கொண்டிருந்த குட்டி கிருஷ்ணனின் அம்மா இறந்தபோது அவனும் வீட்டுக்காரியும் அதே நாலுவீட்டிலும் அண்டையிலும் தகனத்துக்காக யாசகம் வாங்கிய பணத்தோடு படியேறிய இடம் இந்த ஓட்டல். அக்கம் பக்கத்துப் பெரியவர்கள் இதை இளக்காரமாகச் சொல்லும்போது பாட்டியம்மா சொல்வாள்- “பாவம், அகப்பை நோக்காடு. குத்தம் சொல்லக் கூடாது’.

மெஸ்கள், ஓட்டலைவிட ரெட்டைத் தெருக்காரர்களை அதிகம் ஆகர்ஷித்த சாப்பாட்டுக்கடை ஒன்றும் உண்டு. சிவன்கோயில் தெரு முனையில், கங்காராஜ் அண்ட் கோவுக்கு அடுத்து இடிந்து விழுந்து கொண்டிருக்கும் பழைய வீட்டுத் திண்ணையில், ராமராயர் பகல் நேரத்தில் பஜ்ஜிக்கடை போடுவார். மதியம் கோர்ட் இடைவேளியின்போது குதிரை வண்டியில் வீட்டுக்குப் போகிற வக்கீல்கள், சைக்களில் கேஸ்கட்டோடு வருகிற குமாஸ்தாக்கள், பள்ளிக்கூட வாத்தியார்கள் என்று ஒரு பெரிய கூட்டம் ஊரில் உண்டு. காலையில் எட்டு மணிக்கு இலை போட்டுச் சாப்பிட்டுவிட்டுப் போகிற விநோதப் பழக்கம் உள்ளவர்கள்.

மதியம் பட்டப் படைக்கிற வெய்யிலில் ராமராயர் எண்ணெய்ச் சட்டி வைத்து காரசாரமாக உற்பத்தி செய்து தள்ளுகிற பஜ்ஜி தவலைவடை, மற்றும் சுவியன், போளி வகையறாக்கள் அடுப்பை விட்டு வெளியே வந்த நிமிடமே எண்ணெய் கசிய பழைய தினசரியில் சுற்றி பரபரப்பாகச் சாப்பிட்டு முடிக்கப்படும். அருகருகே நின்று அன்னியோன்னியமாகப் பேசியபடி மிளகாய் பஜ்ஜி சாப்பிட்ட வக்கீல்கள் அந்தக் காரம் குரலில் வழிய மாஜிஸ்ட்ரேட் கோர்ட் படியேறி எதிரும் புதிருமாகப் பொறிபறக்க வாதிடும்போது, ராமராயர் எண்ணெயைத் தூக்குப் பாத்திரத்தில் வழித்து ஊற்றிவிட்டு, மீதித் தவலைவடையைப் பிரம்புத் தட்டில் பரத்திக்கொண்டு, ஊருணிப் பக்கம் முன்சீப் கோர்ட்டை நோக்கி நடப்பார். அங்கேயும் நீதியை நிலைநாட்டத் தன்னாலான ஒத்தாசையைச் செய்கிற அவசரம் நடையில் தெரியும்.

———————————————————————————————————————————————-

ஞாபகம் வருதே…: நெ.40, ரெட்டைத் தெரு

இரா. முருகன்

பங்குனி மாதம் பிறந்தால் சிவன் கோவிலில் கொடி ஏற்றுவார்கள். இது சுதந்திர தினத்துக்கு ஹெட்மாஸ்டர் ஏற்றி, பத்து நிமிஷம் காந்தி, நேரு என்று பேசிவிட்டு, வரிசையில் நிற்க வைத்து ஆரஞ்சு மிட்டாய் கொடுத்து அனுப்புகிற சமாச்சாரமில்லை. சிவன் கோவிலில் நடக்கும் பங்குனி உத்திரத் திருவிழாவுக்கான கொடி. சிவனுக்கு இல்லை, சுப்பிரமணிய சுவாமிக்குத்தான் பத்து நாள் உற்சவம், திருக்கல்யாணம் அப்புறம் தேர். கிட்டத்தட்ட முழு வருடப் பரீட்சை லீவோடு இது சேர்ந்து வருவதால், பத்து நாளும் வீட்டில் இருக்கும் நேரத்தைவிட திருவிழா மண்டகப்படி நடக்கிற இடங்களில் சுற்றுகிறதுதான் அதிகமாக இருக்கும்.

பங்குனி உத்திரக் கொடியேற்றியதும், உள்ளூர்காரர்கள் வெளியூர்ப் பயணம் எல்லாம் வைத்துக் கொள்ளக் கூடாது என்று எந்தக் காலத்திலேயோ எழுதாத சட்டம் இருந்ததாகத் தெரிகிறது. ஆனால் ஊருக்குப் போகாமல் இருக்க முடியாது. முக்கியமாக அப்பா. போட் மெயில் என்ற ராமேஸ்வரம் எக்ஸ்பிரசில் வந்து இறங்கி, கான்வாஸ் பையோடு வீட்டுவாசல்படி ஏறுகிறவராகத்தான் அவர் இன்னும் என் நினைவுகளில் இருக்கிறார். அவர் அடுத்தபடி ஆபீஸ் டூர் போக ஆயத்தமாகும்போது கோவில் கொடியேற்றியிருக்கும் என்பதால், வீட்டில் ரேழிக்குப் பக்கத்து காமிரா அறையில் எப்போதும் ஒரு துணிப்பையில் ஒரு பழைய கதர் வேட்டி, கைவைக்காத பனியன், குற்றாலத் துண்டு அடைத்துத் தயாராக வைத்திருக்கும். அதாவது கோவில் உற்சவத்துக்கு முன்பே அவர் பிரயாணம் போகத் தயாராகி, ஊரின் எல்லையில் மூட்டை முடிச்சைக் கொண்டு சேர்த்துவிட்டாராம். அது எப்படி, குனிந்தால் தலை இடிக்கிற எங்கள் வீட்டு அறைக்குள் ஊர் எல்லை வந்து நுழைந்தது என்று தெரியாது.

பங்குனி உத்திரத்தின் பொழுது பத்து நாளும் சாமி புறப்பாடு உண்டு. சாயந்திரம் ஓலையைக் கொளுத்தி தெருத் தெருவாக இழுத்துப் போவதற்கு பையன்களுக்குள் உக்கிரமான போட்டி நடக்கும். சாமி வரும் தெருவைச் சுத்தப்படுத்தவாம் இது. கொளுத்திய ஓலையோடு பீடித் துண்டு, பல்பொடி மடித்த காகிதம் ரேஷன் அரிசி வாங்கினதற்கான ரசீது, ஜெயவிலாஸ் பஸ் டிக்கட் என்று தெருவோடு கிடக்கும் சகலமானதும் புகையைக் கிளப்பி எரிந்து கதம்ப வாடையைக் கிளப்பும்.

முதல் இரண்டு நாள் மண்டகப்படி உற்சவமும் சாமி புறப்பாடும் சாதாரணமாகத்தான் இருக்கும். பரம்பரை பரம்பரையாக சீரோடு வாழ்ந்து நொடித்துப் போன குடும்பங்கள் வீம்புக்காக இன்னும் விடாமல் நடத்துகிற உற்சாகம். ஒற்றைத் தீவட்டி, நிறைய இடம் விட்டுக் கட்டிய பூமாலை சார்த்திய பழைய பல்லக்கு, நகரா என்கிற ஒற்றை மேளம், சாமி பல்லக்கோடு கூட வேகுவேகுவென்று நடக்கிற குருக்கள் வீட்டுக் கடைசிப் பையன் என்று அதிசிக்கனமாக நடந்தேறும். இந்த ஊர்வலங்களுக்கு அப்புறம் காந்திவீதி, நேருவீதி வியாபாரிகள் போட்டி போட்டுக்கொண்டு பெரிய தோதில் தினசரி மண்டகப்படி நடத்த ஆரம்பிப்பார்கள்.

மண்டகப்படி நடக்கிற இடத்தில் கூரைக் கொட்டகை போட்டு ராத்திரி சரியாக ஏழு மணிக்கு கச்சேரி வாடிக்கையாக இடம்பெறும். ஒரு வருடம் திருச்சியிலிருந்து நகாஸ் என்று ஒரு பாடகர் வந்து சீர்காழி, டி.எம்.எஸ் பாட்டு நாலைந்து பாடினார் சட்டென்று “சிங்காரவேலனே தேவா’ என்று அச்சு அசலாக எஸ்.ஜானகி குரலுக்குத் தாவி, தொடர்ந்து மூக்கை விரலால் பொத்திக் கொண்டு காருகுறிச்சி அருணாசலத்தின் நாதசுவர இசையையும் எடுத்து விட்டாரே பார்க்கலாம்! விசில் சத்தம் காதைப் பிளந்தது. இன்னொரு தடவை, அருமையாக ஆர்மோனியம் வாசித்தபடி “ஆடாது அசங்காது வா கண்ணா’ பாடிய பித்துக்குளி முருகதாஸிடம் “சம்பூர்ண ராமாயணம்’ படத்தில் ராவணன் பாடுகிற ராகமாலிகை பாடச்சொல்லித் துண்டுச் சீட்டு யாரோ அனுப்பியபோது அவர் முடியாது என்று மறுத்துவிட்டார்.

ஒருதடவை ஜவுளிக்கடைக்காரர்கள் மண்டகப்படிக்கு போலீசில் அனுமதி வாங்கி, நடுத்தெருவை அடைத்து வெள்ளைத்திரை வைத்து “நீலக்கடலில் நிம்மதியான உலகம்’ சினிமா போட்டார்கள். இங்கிலீஷ் படம். கடலுக்கு அடியில் எடுத்தது. வெள்ளைக்காரர்கள் சுறாமீனையும், திமிங்கிலத்தையும் காட்டி பேசிக்கொண்டே இருந்தார்கள். அதற்கும் சிவன்கோவில் திருவிழாவுக்கும் என்ன சம்பந்தம் என்று தெரியவில்லை. என்றாலும் தியேட்டருக்கு வெளியே சினிமா, அதுவும் ஓசியில் என்பதால் சாயந்திரம் நாலுமணியிலிருந்து அந்தப் பிராந்தியமே அமளிதுமளிப்பட்டது. படத்தை அவ்வப்போது புரஜக்டரில் ரீல் மாற்ற நிறுத்தி, “புகையிலை வாங்கினால் காதித விசிறி இனாம்’ என்று அறிவிப்பு வேறே. புகையிலை விற்று, படம் முடிந்து ஊர்வலம் கிளம்ப சாமியும் பொறுமையாக ரதத்தில் காத்துக் கொண்டிருந்தார் பாவம்.

மண்டகப்படி விசேஷங்கள் முடிந்து ராத்திரி ஒன்பது மணிக்கு சாமி புறப்பாடாகும்போது, முன்னால் கரக ஆட்ட கோஷ்டி நையாண்டி மேளத்தோடு ஆர்ப்பாட்டமாகக் கிளம்பிப் போகும், நிறையப் பவுடர் ஒற்றி, ஜிகினாவை புருவத்தைச் சுற்றி ஒட்டிக் கண்மை இட்ட அந்தப் பெண்கள் கையில் தவறாது கைக்கடியாரம் காணப்படும். ஒவ்வொரு தெருமுனையிலும் பத்து நிமிடம் நிறுத்தி “மாமா மாமா மாமா’, “எலந்தப்பழம்’ போன்ற ஜமுனாராணி, எல்.ஆர். ஈஸ்வரி பாட்டுகளுக்குத் தலையில் கரகத்தோடு வியர்த்து வடிந்து அவர்கள் நடனமாடுவார்கள்.

புதிதாகத் தார் போட்ட தெரு நடுவில் வைத்த ஒரு ரூபாய்க் காசைத் தலையில் வைத்த கரகம் நழுவாமல் குனிந்து, கண் இமையால் பற்றி எடுப்பதைப் பார்க்க என்னமோ பாவமாக இருக்கும். “லஜ்ஜை கெட்ட கூத்தா இருக்கே’, முழுக்கப் பார்த்து முடிந்த பெரியவர்கள் மேல் துண்டைப் போர்த்திக்கொண்டு நடக்கும்போது நாங்கள் நாதசுவர கோஷ்டி பின்னால்.

தெருமுனையில் நின்று ராகம் இழுத்து வெளியூர் நாதசுவர கோஷ்டிகள் வாசிக்கும். எல்லாருக்கும் பிடித்த “தாமரை பூத்த தடாகமடி’, “கற்பகவல்லி நின் பொற்பதங்கள்’ போன்றவை கூட்டம் அதிகமான நாலுதெரு சந்திப்புகளில் வாசிக்கப்படும். ஒருதடவை தாளக்காரப் பையனை (எம் வயசுதான் அவனுக்கு) தூக்கக் கலக்கத்தில் தப்புத்தாளம் போட்டதற்காக நடுராத்திரி நேரத்தில் நாதசுவரக்காரர் பேயறை அறைந்ததைப் பார்த்தபின் நாதசுரம் கேட்கப் போகவே பிடிக்கவில்லை.

சலவைக்காரர்கள் மண்டகப்படி விசேஷமானது. முழுக்க முழுக்க பூவால் நிறைத்து அலங்கரித்த புஷ்பப் பல்லக்கில்தான் உலா. பல்லக்கு தெருவுக்கு வருவதற்கு முன்பே தூக்கலான பூவாடை எங்கும் நீக்கமற நிறைந்து நிற்கும். மல்லிகை, ரோஜா, இருவாட்சி, தாழை, முல்லை, சம்பங்கி, பிச்சிப்பூ, கனகாம்பரம் என்று தழையத் தழையக் கட்டி ஊர்ந்து வரும் பல்லக்குக்கு முன்னால் சுந்தரேசுவரக் குருக்கள் மேல் துண்டால் மூக்கை சற்றே பொத்தியபடி நடப்பார்.

பூவாசனை தாங்காது ஒருதடவை தலைசுற்றி நடுத்தெருவில் விழுந்துவிட்டதற்கு அப்புறம் இது. இந்த மண்டகப்படிக்கு நன்கொடை வசூல் செய்து சீட்டுக் குலுக்கல் நடத்தி, சருவப்பானை, எவர்சில்வர் டிபன்காரியர் பரிசாகத் தருவது வழக்கம். ராமன் லாண்டரி குடும்பத்தில் யாருக்காவது வருடாவருடம் பரிசு கிடைக்கும். அநேகமாக டிபன் காரியராகவே அது இருக்கும்.

தேருக்கு முந்தைய நாள் சாயந்திரம் கோவிலில் பருப்புத் தேங்காய், அக்னி வளர்த்து ஹோமம், ஆரத்தி, மஞ்சள், குங்குமம், நலுங்குப் பாட்டு எல்லாம் சேர, திருக்கல்யாண உற்சவம் மங்களகரமாக நடக்கும். கல்யாணம் முடிந்த சுவாமி தம்பதி சமேதராக உலா போவது வரிசையாக மின்சார பல்ப் மாட்டிய ரதத்தில். முன்னால் நீண்டு போகும் இரண்டு வரிசையாக, கழியில் பளிச்சென்று எரியும் டியூப்லைட் மாட்டி வயர் இழுத்துப் பிடித்துக்கொண்டு நடப்பார்கள். தூரத்திலிருந்து பார்க்கும்போது சகாயமாதா கோவில் திருவிழாவா, சுப்பிரமணிய உற்சவமா என்றே தெரியாது. எதற்குத் தெரியணும்? எல்லாமே சந்தோஷம்தான்.

——————————————————————————————————————–

Kathir – Oct 7 2007

பங்குனி உத்திரக் கொடி ஏற்றி பத்தாவது நாள் தேரோட்டம். ஸ்கவுட் மாஸ்டர் லூர்துசாமி வாத்தியார் பள்ளிக்கூட வாசலில் காக்கி நிஜார், தொப்பி, விசில் சகிதமாக நடுப்பகலுக்கே ஆஜராகிவிடுவார். சாரணர் இயக்கத்தில் இருக்கப்பட்ட பிள்ளைகள் எல்லாம் அவர் தலைமையில் பொதுஜன சேவைக்குக் கிளம்பும் நேரம் இது. தினசரி ஒரு நல்ல காரியமாவது செய்து குறிப்பேட்டில் எழுதி சபையில் படிக்கவேண்டிய கடமை சாரணர்களுக்கு உண்டு. ஒருதடவை முதல் பெஞ்சில் இருந்த நாலு பையன்களும், “அரண்மனை வாசல் பக்கம் போக்குவரத்து நெரிசலுக்கு இடையே வயதான ஒரு பெண்மணியைச் சாலையைக் கடக்க உதவினேன்’ என்று ஒரே குறிப்பு எழுதியிருந்தார்கள். என்ன விஷயம் என்று வாத்தியார் விசாரிக்க, “அந்தப் பாட்டியம்மா தெருவைக் கடக்க மாட்டேன்னு அடம் பிடிச்சாங்க’ என்று காரணம் சொன்னார்கள்.

சாரணர்கள் பள்ளி வாசலில் லெஃப்ட் ரைட் போட்டு, விசில் ஊதிக்கொண்டு, கயிற்றில் விதவிதமாக முடிச்சுப் போட்டு அவிழ்த்து தேர்க்காலத்தில் ஊர்ப் பாதுகாப்புக்குத் தயாராகிக்கொண்டிருக்கும்போது, வீட்டில் இரண்டு விஷயம் இல்லாமல் போயிருக்கும். முதலாவது மின்சாரம். தேர் பிரம்மாண்டமாக நகர்ந்து எட்டு வீதியும் சுற்றித் தேரடிக்கு வரும்வரை, முன் ஜாக்கிரதையாகத் தேரோடும் வீதிகளில் மின்சார சப்ளை நிறுத்தப்பட்டிருக்கும். இன்னொரு சப்ளை நிறுத்தம் நல்லையா நடத்துவது. காலையில் அவர் வீடுவீடாகச் சந்தாதார்களுக்கு வினியோகிக்கிற தினசரி பத்திரிகை, வாரப் பத்திரிகை சமாச்சாரங்கள் அன்று வீட்டு வாசலில் வந்து விழாது. குடும்பத் தொழிலான பழவியாபாரத்திற்காகத் தேரடியில் கடைபோட்டு, நல்லையா கால்பரப்பி உட்கார்ந்து பலாப்பழத்தை எண்ணெய் தடவிய கத்தியால் அறுத்துக் கொண்டிருக்கும்போது, வென்னீர் குடித்த வக்கீல்கள் முந்தியநாள் பேப்பரைத் திரும்பப் படித்தபடி மனதில் நல்லையாவைக் குற்றவாளிக் கூண்டில் ஏற்றி இங்கிலீஷில் விசாரித்துக் கொண்டிருப்பார்கள். காலையில் பேப்பர் படித்து, காலைக் கடன் முடித்து, கிரமமாக நாளைத் தொடங்குவது தடைப்பட்ட கஷ்டம் அவர்களுக்கு.

கோயிலை ஒட்டிய தேரடியில் மரத் தேரைக் கழுவித் துடைத்து, ஜமுக்காளங்களை உருட்டி நீளமாகத் தழைகிற தோரணங்களை மாட்டி, பூவும், வாழையிலை, மாவிலையுமாக அலங்காரம் செய்யப்படும். நல்லையா கடையோடு நாலைந்து வளையல் கடை, கோலிசோடா கடை, பலூன்கடை என்று வரிசையாகத் தெருவோரமாக முளைத்திருக்கும். மலிவுவிலை சர்பத் கடையில் மூன்று பைசா நாணயங்கள் அலுமினியப் பாத்திரத்தில் தண்ணீரில் மிதந்தபடி சர்பத் விலையைச் சொல்லிக்கொண்டிருக்கும். சுதந்திர இந்தியா அதற்கு முன்போ பின்போ வெளியிட்ட வேறு எந்தக் காசும் மிதந்ததில்லை. கடையில் நீட்டினால், கண்ணாடி கிளாஸில் சாக்ரின் ஜாஸ்தியான, ஐஸ்கட்டி போட்ட சர்பத்தும் அப்புறம் மூணு பைசாவுக்குக் குடிக்கக் கிடைக்கவில்லை. சர்பத் கடைக்குப் பக்கத்தில் பொட்டல்வெளியில் கலர் கலராகக் கண்ணாடி வைத்து, சீரியல்செட் விளக்குப்போட்ட வண்டி. கரடு கரடாகத் திரண்ட கையும் காலுமாகக் கதாயுதத்தைத் தூக்கியபடி பயில்வான் தோரணையோடு நிற்கிற பீமசேனன் படம். எண்ணெயோ டால்டாவோ கசிந்து வழிகிற அல்வாவை மலைபோல் குவித்து வைத்துக்கொண்டு, “தேகபலம் தரும் பீமபுஷ்டி அல்வா சாப்பிடுங்கள்; வலிமைக்கு விலை இருபத்தைந்து பைசா மட்டுமே’ என்று சோனியாக ஒருத்தர் தொடர்ந்து கையில் ஒலிபெருக்கி வைத்து முழங்கிக் கொண்டிருப்பார். முறுக்குமீசை தவிர அவருக்கும் பீமசேனனுக்கும் வேறு ஒற்றுமை இருக்காது. அவ்வப்போது இருபத்தைந்து பைசா செலவில் உடனடியாகப் பீமசேனனாக உத்தேசித்து யாராவது காசை நீட்ட, பக்கத்தில் வைத்த ஒரு வாளால், அல்வா மலையிலிருந்து லாவகமாக ஐந்து சென்டிமீட்டர் நீள, அகலம் மற்றும் இரண்டு சென்ட்டிமீட்டர் கனத்தில் ஒரு துண்டை வெட்டி பூவரச இலையில் வைத்து அல்வாக்காரர் தருவார். வாங்கிச் சாப்பிட்டவர்கள் இலையை விட்டெறிந்துவிட்டு கம்பீரமாகப் பார்த்தபடி நடப்பார்கள். ஒரு இருபத்தைந்து காசு வீட்டுப் பெரியவர்கள் கொடுத்திருந்தால் நான் இன்னேரம் பயில்வானாகியிருப்பேன்.

ஊரில் தேரோட்டம் என்றால் எப்படியோ மாஸ்கோவில் செய்தி தெரிந்து, ஆளனுப்பித் தெப்பக்குளம் பக்கம் பனந்தட்டி வைத்து அடைத்து சோவியத் புத்தகக் கடை போட்டுவிடுவார்கள். வழுவழு காதிதம். புரட்டினால் சுகமான வாடை. ஐந்து ரூபாய்க்கு லெனின் வாழ்நாள் முழுக்க எழுதியது, பேசியது சகலமும் ஏழெட்டு வெல்வெட் தலையணை சைஸ் புத்தகமாகக் கிடைக்கும். பீமபுஷ்டி அல்வா வாங்க இருபத்தைந்து பைசா கொடுக்காத வீட்டில் லெனினுக்காக ஐந்து ரூபாய் எப்படிப் பெயரும்?

சுற்றி ஏழெட்டு கிராமத்திலிருந்து புறப்பட்டு, தாரை தப்பட்டை முழங்க வடம் பிடிக்க வருகிற கூட்டத்தோடு உள்ளூர்வாசிகளும் சேர, சாயந்திரம் ஐந்து மணிக்கு அதிர்வேட்டு சத்தம் காதைப் பிளக்கும். தேர் நிலையிலிருந்து நகர்ந்தாச்சு. இனி நாலு ஐந்துமணி நேரம் கழித்து அது நிலைக்குத் திரும்புவரை தேரடி வெறுமையாக, விடுமுறை விட்ட பள்ளிக்கூடம் போல் சுரத்தே இல்லாமல் இருக்கும். அப்போது போனால் அல்வா, பலாச்சுளை, சோவியத் புத்தகம் எல்லாம் இன்னும் மலிவாகக் கிடைக்கும் என்று பரவலாக நம்பிக்கை நிலவினாலும் யாரும் போவதில்லை.

தேர் ரெட்டைத் தெருவை அடைத்துக்கொண்டு ஆரவாரத்துக்கு நடுவே ஆயிரம் கைகள் வடம் பிடித்து இழுக்க மெல்ல நகரும்போது வீட்டுப் படியில் நின்றபடி ஒருவினாடி சாமி தரிசனம். பெரிசுகள் கன்னத்தில் போட்டுக்கொண்டு வேல் வேல் என்று கூட்டத்தோடு உரக்க முழங்கும் நேரம் பார்த்துச் சத்தம் போடாமல் கூட்டத்தில் கலந்து விடலாம். பின்னால் ஐநூறு பேர் தள்ள, முன்னால் இன்னொரு ஐநூறு பேர் மெல்ல நகர, கடகடத்து வரும் பெரிய மரச் சக்கரங்களைப் பார்த்தபடி, தேர்வடத்தை ஒரு வினாடி தொட்டு இழுத்து யாரோ பெரியவர்கள் அணைத்து அப்பால் அனுப்ப, அந்தப் பெரிய ஜனசமுத்திரத்தில் ஒரு துளியாகக் கரைவதில் இருக்கும் மகிழ்ச்சி இன்னொரு தடவை கிடைக்க என்ன வேணுமானாலும் தரலாம்.

நகர்கிற தேரில் இரண்டு புறத்திலும் நின்று கையை அசைத்து வடம் பிடிக்கும் கூட்டத்தை முன்னே செலுத்திக் கொண்டிருப்பவர்கள் பெரும்பாலும் ரிடையர்ட் போலீஸ்காரர்களாக இருப்பார்கள்.. அவர்கள் பின்னால், தேரில் உட்கார்ந்தபடியே நாதசுரம் வாசித்து வருகிற நடேசன் நாயனக்காரர். பக்கத்தில், இரைச்சலுக்கு நடுவிலும் டமடம என்று தவிலை முழக்கியபடி கருப்பையாப் பிள்ளைவாள். “அளவா லேகியம் சாப்பிட்டா அம்சமா வாசிக்கலாம்’ என்று தவில்காரர் எங்களிடம் ஒருதடவை தேரோட்டம் முடிந்து சொன்னார். பீமபுஷ்டி அல்வா இல்லையாம் அது.

தேர் சிவன்கோவில் தெரு திருப்பத்தில் நிற்கும். குறுகிய திருப்பம். அது முடிவது வக்கீல் சுப்பண்ணா வீட்டு வாசலில். இன்னும் இருபது அடியில் அடுத்த கடைசித் திருப்பம். அது கடந்தால் தேரடிதான். இந்த வளைவில் தேரைக் கொண்டுவர, இரண்டு பக்கத்திலும் வடம் பிடித்து இழுப்பவர்கள் நீண்ட வரிசையாக சுப்பண்ணா வீட்டு முன்வாசல் கடந்து, கூடம் வரை நுழைந்து பிடியை விடாமல் இழுக்க, தேர் தளுக்கும் மினுக்குமாகத் திரும்பும். ஊர் முழுக்க சுப்பண்ணா வீட்டுக் கூடத்தில் ஐந்து நிமிடம் கூடவதும், அப்புறம் வந்த சுவடே தெரியாமல் அந்த இடம் திரும்ப அமைதியாவதும் வருடம் ஒருமுறை நடப்பது. சுப்பண்ணா காலமானபோது, “தேர்க்கூட்டம்தான்’ என்றார்கள் கலையாமல் அங்கே நின்ற கூட்டத்தைப் பார்த்தவர்கள்.

போனவருடம் ஊருக்குப் போனபோது தேரடியைப் பார்த்தேன். தேர் உளுத்துப்போய் நின்று கொண்டிருந்தது. அது நகராது. வக்கீல் வீட்டு வாசல் கடந்து வடம் பிடித்து இழுக்கக் கூட்டம் வராது. சின்ன வாசலும் நாலு மாடியுமாக அங்கே புதுக் கட்டடம் எழும்பி நிற்கிறது.
——————————————————————————————————————–

ஞாபகம் வருதே…: நெ.40, ரெட்டைத் தெரு

Sunday October 14 2007 00:00 IST

உங்களது பிஎஸ்என்எல் செல்பேசியில் நாளைய பஞ்சாங்க குறிப்புகளை இன்றே பெற தினம் ஒரு ரூபாய் மட்டுமே!

ராத்திரிக் கச்சேரி நடத்தும்போது பேங்க் ஏஜெண்ட் கிட்டு தவறி விழுந்ததற்கு இரண்டு மாதம் கழித்து ஊரில் சங்கீத சபா தொடங்கப்பட்டது. இப்படிச் சொன்னால் புரியாது. பேங்கு ஏஜெண்ட்டில் ஆரம்பிக்கலாம். கி.பி. ஆயிரத்துத் தொள்ளாயிரத்து அறுபதுகளில் வங்கி மேனேஜர்கள் என்ன காரணத்துக்காகவோ ஏஜெண்ட்கள் என்று அழைக்கப்பட்டார்கள். தொளதொளவென்ற பேண்ட் மாட்டிக்கொண்டு, சதா சிடுசிடுத்த முகத்தோடு இவர்கள் கிளார்க்கு, கேஷியர், டைப்பிஸ்ட் வகையறாக்களை கட்டி மேய்த்தபடி நாள்முழுக்க பேங்குக்குள் சுற்றிவருவார்கள். ராத்திரி ஏழுமணி போலத் தட்டுச் சுற்று வேட்டிக்கு மாறித் தெருமுனையில் ஜமா சேர்த்துக் கொண்டு வெற்றிலை போட்டபடி வம்பு பேசுவார்கள். பேங்க் ஏஜெண்ட் கிட்டு ராத்திரி ஜமா சேர்த்துக் கொண்டு சிவன்கோயில் தெருவில் தன் வீட்டு வாசலில் உட்கார்ந்து கீர்த்தனம் பாடுவது வழக்கம். “பால கனகமய’ என்று தொடங்கி சுவரம் பாடி முடிப்பதற்குள் கூட இருக்கப்பட்ட நண்பர்களான பள்ளிக்கூட ஹெட்மாஸ்டரோ அல்லது எதிர்வீட்டு டாக்டரோ, கோடிவீட்டு என்ஜீனியரோ, “”அடானாவிலே இந்த சஞ்சாரம் வரலாமோ” என்று சந்தேகத்தைக் கிளப்புவார்கள். வெற்றிலைக்குச் சுண்ணாம்பு தடவியபடி, கட்டைக் குரலில் அடானா அதிகாரமாகத் தொடரும்.

ஏஜெண்ட் வீடு நல்ல உயரமான வீடு. அகலமான ஐந்து வாசல்படி. இரண்டு பக்கத்திலும் யானை முகம் போல சின்னதாகச் சுவர்கள் படிகளை அணைத்து, கோயில்

மண்டபவாசல் போல உயர்ந்திருக்கும். கச்சேரி செய்கிற ஏஜெண்ட் ஒரு பக்கத்துப் படிச் சுவர் உச்சியிலும், விமர்சகர்கள் எதிர்வசத்திலும் உட்கார்ந்திருப்பது வாடிக்கை. ராக ஆலாபனையின்போது ஐந்தாம்படி ஓரத்திலிருந்து தவறிப் பக்கத்துப் பள்ளத்துக்குள் விழுந்துவிட்டார் ஏஜெண்ட். நல்லவேளை அடி பலமாக இல்லை. டாக்டர் உடனே போட்டுவிட்ட பெரிய பிளாஸ்திரியோடு முழங்காலுக்கு பேண்டை சுருட்டி மடித்துவிட்டுக்கொண்டு பத்துப் பதினைந்து நாள் சுற்றிவந்தார் அவர். நல்ல சங்கீதத்தைக் கேட்டு ரசிக்க ஊரில் நூறு பேராவது தேறுவார்கள் என்று அவருக்கும் சகபாடிகளுக்கும் அப்போது தோன்றியிருக்கலாம். சென்னையிலிருந்து ரிடையராகி வந்த காலேஜ் பிரின்சிபாலும் மெட்ராஸ் சபா நடவடிக்கைகளைப் பற்றி விலாவாரியாக எடுத்துரைத்து உற்சாகப்படுத்த, உள்ளூர் சங்கீத சபா சீக்கிரமே உதயமானது.

“மாசம் ஒரு கச்சேரி… அரியக்குடி.. செம்மங்குடி, குன்னக்குடின்னு வரிசையா வரப்போறாங்க. குடும்ப பாஸ் பத்து ரூபாய்தான்.’ ஊரின் பொதுநலத் தொண்டன் குப்பன் நிதானத்தில் இருக்கிற சாயங்கால நேரங்களில் வீடுவீடாக நோட்டீஸ் வினியோகிக்க, கொஞ்சம் பின்னால் ஏஜெண்ட், ஹெட்மாஸ்டர், டாக்டர், என்ஜீனியர் ஜமா தொடர்ந்து வந்து, சந்தா சேர்த்தது. இப்படி ஊர்ப் பெரிய மனுஷர்கள் எல்லா வீட்டில் நுழைந்து அழைக்க, நடுத்தெருவிலும், சிவன்கோவில், பெருமாள் கோவில் தெருக்களிலும் கிட்டத்தட்ட எல்லாக் குடும்பங்களும் சபா அங்கத்தினராகி விட்டார்கள். பஜ்ஜி ராயர் கூட மைசூர் செüடையா வயலின் கச்சேரி வைக்க வேணும் என்ற நிபந்தனையோடு, எகனாமி கிளாஸ் டிக்கட் எடுத்தார்.

சபா ஆரம்பித்த உடனே இப்படி வெளியூர் பெரிய கைகளை மேடையேற்ற அவகாசம் இல்லை என்பதால் முதல் மாத நிகழ்ச்சிகள் உள்ளூர் மற்றும் பக்கத்து ஊர்த் திறமைகளோடு தொடங்கின. ஹைஸ்கூல் ஆடிட்டோரியம்தான் சபா அரங்கு. நாயனம் நடேசனும், அவருடைய மருமகனான பக்கத்து ஊர்க் கோவில் நாதசுவரம் கிருஷ்ணனும் சேர்ந்து “கற்பகவல்லி நின் பொற்பதங்கள்’ பிடிக்க, கருப்பையா பிள்ளைவாள் மற்றும் அவர் சகலை முழக்கிய ஸ்பெஷல் தவுல் மற்ற சத்தத்தை எல்லாம் விழுங்கி ஆடிட்டோரியத்தை ஆட்டங்காண வைத்தது. பாலக்காட்டிலிருந்து குடியேறிய கல்யாண சமையல் தாணு மாஸ்டர் மகள் ஓமனக்குட்டி பாட்டு கற்றுக்கொண்டு ஆலப்புழை ஆகாசவாணியில் பாடப் போனாள். குரல் சரியில்லை என்று திருப்பி அனுப்பி விட்டதாகக் கேள்வி. மங்கள வாத்தியத்துக்கு அப்புறம் ஓமனக்குட்டி கச்சேரி. நலுங்கு, நவராத்திரி, வளைகாப்பு என்று எங்கே கூப்பிட்டாலும் ஓமனக்குட்டி “பாவயாமி ரகுராமம்’ தான் பாடுவாள். சபாவிலும் அவள் வழக்கம்போல் கண்ணை இறுக்க மூடிக்கொண்டு ராமன் பிறப்பில் ஆரம்பித்து பட்டாபிஷேகத்தை நோக்கி மிக மெதுவாக ராகமாலிகையாக நகர, சபையில் பொறுமை போனது. இந்த வேகத்தில் போனால் கச்சேரி முடிந்து அடுத்து ஆவலாக எல்லாரும் காத்திருக்கும் நிகழ்ச்சி தொடங்க விடிகாலை ஆகிவிடும். பேசாமல் கர்னாடக சங்கீத மெஸ்கார அண்ணாவையே பாட வைத்திருக்கலாம். ஆனால் அவருக்குப் பாடிக்கொண்டே வாழைக்காய் நறுக்க அரிவாள்மணையும் தேவை.

ஒருவழியாகத் தாடகை வதத்தோடு ஓமனக்குட்டியின் கச்சேரி ஒத்திவைக்கப்பட, காதைப் பிளக்கிற கரகோஷம். அடுத்தபடியாக, ஹைஸ்கூல் ஆசிரியரும், நாடக கர்த்தாவுமான கே.ஆர்.என் சார் எழுதி உள்ளூர் மக்களே முழுக்கப் பங்கு பெற்ற “விடை இல்லாத கேள்விகள்’ சமூக நாடகம் ஆரம்பம். பாங்க் ஏஜெண்ட் மகன் நரேந்திரபாபு கதாநாயகனாகக் காதலித்தபடி மேடையில் குறுக்கும் நெடுக்குமாக அலைய, பள்ளிக்கூடத்தில் எனக்கு நாலைந்து வருடம் சீனியரான கிருஷ்ணகுமார் தலையில் டோபா முடியோடு காதலியாகக் கீச்சென்று வசனம் பேசினான். கதாநாயகிக்கு இரட்டை வேடம் என்பதால், ஜிக்கி பாடிய “சின்னப் பெண்ணான போதிலே’ இசைத்தட்டுக்கு நடனம் வேறே சுழன்று சுழன்று ஆட, அடுத்த கைத்தட்டல் கதாநாயகியைப் பெண் பார்க்க ஹீரோ குடும்பத்தோடு வரும் காட்சியில் ஏஜெண்ட், டாக்டர், என்ஜீனியர் ஆகியோர் கவுரவ நடிகர்களாக மேடையில் தோன்றி ராத்திரி ஒன்பது மணி சுமாருக்கு, ஆறி அவலாய்ப்போன ராயர் கடை பஜ்ஜியும் சொஜ்ஜியும் சாப்பிட்டபோது உற்சாகத்தின் எல்லைக்கே ரசிகர்கள் போயிருந்தார்கள்.

அடுத்தடுத்த “மாதக் கச்சேரிகளுக்கு ஆல் இந்தியா ரேடியோவில் பகல் நேரத்தில் அரைமணி நேரக் கச்சேரி செய்யும் வித்துவான்கள் வரிசையாக வரவழைக்கப்பட்டார்கள். செம்பை எங்கே, காருகுறிச்சி எங்கே என்று குரல் கேட்டு அலுத்துப் போய் உள்ளூர் ரசிகப்பெருமக்கள் ரேடியோவில் கேட்ட குரல்களை முகங்களோடு தரிசிக்கப் பழகிக் கொண்டார்கள். வானொலியில் கச்சேரி செய்வதோடு, அகில பாரத நாடகங்களில் “சிம்மாத்திரி, இந்தக் கடல் புறத்திலே உன் குரல் எனக்கு மட்டும் கேட்கிறதே’ என்று ஆந்திரக் கடலோரத்திலும், “பஜாஜ் சாப், ஹோலிக்கு வர்ணத் தண்ணீரை என்மேல் தெளிக்காதீங்க, நான் கருப்பாகவே இருந்துட்டுப் போறேன்’ என்று தில்லி குடியிருப்பிலும் குரலால் வசனம் பேசி நடந்த ஒரு வித்வான்-கம்-நடிகர் கச்சேரிக்கு வந்தபோது, வழக்கத்தைவிடப் பத்து பேர் கூடுதல். அப்போது ஹைஸ்கூல் ஆடிட்டோரியம் கிட்டாமல், பத்தாம் கிளாஸ் “ஏ’ மற்றும் “பி’ பிரிவுகளுக்கு இடையே இருந்த மர ஸ்கிரீன்களை நகர்த்திவிட்டு, பிதகோரஸ் தியரம் எழுதி விளக்கியிருந்த கரும்பலகைக்குக் கீழே கச்சேரி நடந்தது.

வாங்கிய டிக்கெட் வீணாக வேண்டாம் என்பதற்காக இந்தக் கச்சேரிகளுக்கு என் வீட்டிலிருந்து நானும் மற்ற வீடுகளிலிருந்து அதேபடி கூட்டாளிகளான பையன்களும் மட்டுமே கட்டாயமாக அனுப்பப்படுவது அதிகரித்தது. “ப்ரோவோ பாரமா’, “தேவி ப்ரோவ சமயமிதே’, “நன்னு ப்ரோவ நடாசி வச்சிதிவோ’ என்று கச்சேரிக்குக் கச்சேரி கேட்டு, ஏதோ ஒரு மொழியில் “ப்ரோவுதல்’ என்றால் கடவுள் சம்பந்தப்பட்ட விஷயம் என்ற முடிவுக்கு நாங்கள் வந்தபோது சங்கீத சபா ஓய்ந்து போயிருந்தது.

அப்புறம் ஒரு ராத்திரி பாங்க் ஏஜெண்ட் திரும்ப வீட்டு வாசல்படி முகப்பில் “ஆத்மாராமா ஆனந்த ரமணா’ என்று கச்சேரி செய்வதைப் பார்த்தோம். டாக்டரும், என்ஜீனியரும் அவருக்கு இரண்டு பக்கத்திலும் பாதுகாப்பாக உட்கார்ந்திருந்தார்கள். அவர்கள் எதிர்ப்பக்கம் உட்கார்ந்திருந்தால், அடுத்த சங்கீத சபா ஆரம்பிக்கப்பட்டிருக்கலாம்.

———————————————————————————————————————————————-

Sunday October 28 2007 00:00 IST

ஞாபகம் வருதே…: நெ,40 ரெட்டைத் தெரு

இரா. முருகன்

காலையில் பிரேயர் முடிந்து பள்ளிக்கூடம் தொடங்கியபோதே சண்டை ஆரம்பித்துவிட்டது. எலிமெண்டரி ஸ்கூல் என்பதால் சின்னப் பசங்களைச் சரியாகப் பிரார்த்தனை செய்யப் பயிற்சி தர, தினசரி ஒரு வாத்தியார் முதலில் பாட, பிள்ளைகள் தொடர்ந்து பாடுவது வழக்கம். நாலாவது வகுப்பு ஆசிரியர் கிருஷ்ணன் சார், “விவேகானந்தா உன்னை நான் மறவேன்’ என்று அன்றைக்குப் பாட நாங்கள் திரும்ப அதேபடி பிரார்த்தித்து விட்டு வகுப்பில் வந்து உட்கார்ந்தோம். மர ஸ்கிரீனுக்கு அந்தப் பக்கம் கனகவல்லி டீச்சர் எடுக்கும் ஐந்தாம் கிளாஸ்.

வகுப்பைச் சத்தம் போட விட்டுவிட்டு, நாலாங் கிளாஸ் உள்ளே கோபமாக எட்டிப் பார்த்தார் டீச்சரம்மா. “விவேகானந்தா உம்மை நாம் மறவோம்’ தான் சரியான பாட்டு என்பது அவருடைய வாதம். “வாத்தியாரே தப்பாச் சொல்லிக் கொடுத்தா, பிள்ளைங்க என்னத்தை ஒழுங்கா படிக்கும்?’ டீச்சர் இரைய, கிருஷ்ணன் சாருக்கோ சரியான பதில் கோபம். “உங்க வேலையைப் பார்த்துக்கிட்டுப் போங்க டீச்சர். தஞ்சாவூர் கிராமத்துலே வீட்டுக்காரம்மா புருஷனைக் கூப்பிடற மாதிரி விவேகானந்தரை நீர், உம்மைன்னு அரை மரியாதையோட கூப்பிடக் கூடாது; ஆண்டவன் போல ஒருமைதான் சரி’. கிருஷ்ணன் தஞ்சாவூர்க்காரர். நாலாம் கிளாஸ் வாத்தியார் என்பதால், ஐந்தாம் கிளாஸ் எடுக்கும் உள்ளூர் கனகவல்லி டீச்சரோடு ஒப்பிட்டால் ஒரு தட்டு கீழேதான்.

பள்ளி கரஸ்பாண்டெண்ட் சோமநாதன் சாவகாசமாக வீட்டில் பூஜை புனஸ்காரம் முடித்து சாப்பாட்டுக்கு அப்புறம் வாயில் தாம்பூலத்தோடு குடைபிடித்துக் கொண்டு பன்னிரண்டு மணி சுமாருக்கு நுழைந்தார். அவர் தலையைக் காணும் வரைக்கும். நாலாம் கிளாசிலும், ஐந்தாம் கிளாசிலும் அரைகுறையாகப் பாடம் நடந்தபடி இருக்க, “உம்மை’யா, “உன்னை’யா வாக்குவாதம் ஆவேசமாகத் தொடர்ந்தது. கிடைத்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி, நாங்கள் அவ்வப்போது ஒருவிரல், இரண்டு விரல் சைகைகளால் அனுமதி வாங்கி ஸ்கூல் வாசலில் கொடுக்காப்புளி வாங்க ஓடினோம்.

இந்தக் கொடுக்காப்புளி என்பது கொஞ்சம் வினோதமான தாவரவகை. இதை யார் வீட்டிலும் சமையல் செய்து பரிமாறிப் பார்த்ததில்லை. கொத்துக் கொத்தாக அவரைக்காய் மாதிரி கூறு கட்டி பள்ளிக்கூட வாசலில் கொடுக்காப்புளி விற்கிற பங்காரம்மா எங்கள் தலையைப் பார்த்ததும் “அரிசி இருக்கா?’ என்று ஆவலாக விசாரிப்பார். அரிசியோ குருணையோ கொடுத்தால், காசுக்குக் கிடைப்பதைவிட கொஞ்சம் அதிகமாகக் கொடுக்காப்புளி கிடைக்கும். அரிசிக்கு தமிழ்நாடு ஆலாகப் பறந்த நேரம் அது. எலிக்கறி சாப்பிடச் சொல்லி கவர்மென்ட் சிபாரிசு செய்ததாகக் கூடக் கேள்வி.

ரேஷன் அரிசி போதாமல், கொடுக்காப்புளிக்கும், ஈச்சம் பழத்துக்கும், இலந்தைப் பழத்துக்கும் அரை உழக்கு அரிசி பண்டமாற்று கிடைக்காதா, ஒருவேளை கஞ்சிக்கு வழிபிறக்காதா என்று ஊரைச் சுற்றியிருந்த கிராமப்புறத்து ஏழைகள் அலைந்து கொண்டிருந்தார்கள். கிருஷ்ணஜயந்திக்கு நாவல்பழம் வாங்க என்று பாட்டியம்மா கொஞ்சம் அரிசி எடுத்துவைப்பது உண்டு. ஆனாலும் கொடுக்காப்புளி வாங்க அரிசி எல்லாம் பள்ளிக்கூடம் போகிறபோது கிடைக்காது.

பாட்டியின் கிராம்புப் பையிலிருந்து மணக்க மணக்க கிளப்பிய ஓட்டைக் காலணா என்ற பழைய பைசா ரெண்டு, நல்லெண்ணெய் வாங்கி மீதி சில்லறையாகக் கிடைத்து வீட்டில் கொடுக்க “மறந்து’ புது ஒற்றை நயா பைசா இரண்டு என்று பங்காரம்மாவிடம் கொடுத்தால், ஒரு சின்னக் குவியல் கொடுக்காப்புளி கைமாறும். ஒவ்வொன்றாக உரித்து வாயில்போட, இனிப்பும் துவர்ப்புமாக சுவர்க்கம் தட்டுப்படும். நிஜார் பாக்கெட்டில் மீதி கொடுக்காப்புளியை அடைத்துக் கொண்டு மூன்றாம் வகுப்பு வழியாக உள்ளே ஓடினால் ஸ்தானிஸ்லாஸ் சார் வழிமறிப்பார்.

“கண்ட கருமாந்திரத்தையும் தின்னு வயத்தைக் கெடுக்கவா ஸ்கூலுக்கு வந்தீங்க’ என்ற கூச்சலோடு பதுக்கிக் கொண்டு வந்ததை கஸ்டம்ஸ் அதிகாரி போலப் பிடித்து ஓரமாக வைப்பார். ஸ்கூல் விட்டதும் ஜன்னலுக்கு வெளியே விட்டெறியவாம். அறிவியல் பாடப் புத்தகத்தில் “உடலுக்கு நலம் தரும் கீரை, வெண்டை, தக்காளி, வாழை’ வகையறாக்களோடு கொடுக்காப்புளியையும் புத்தகம் போட்டவர்கள் சேர்த்திருந்தால் எவ்வளவு நன்றாக இருந்திருக்கும். “தினசரி பிரேயருக்கு முன்னால் ஒரு கொத்து கொடுக்காப்புளி சாப்பிட்டுவிட்டுத்தான் வரவேண்டும்’ என்று உத்தரவாகி, சாப்பிடாதவர்களை ஸ்டானிஸ்ஸôஸ் வாத்தியார் தண்டித்திருப்பார். (வாத்தியார் தட்டிப் பறித்த சரக்கை எல்லாம் விட்டெறிவதில்லை என்றும் வீட்டுக்கு எடுத்துப் போய் முழுக்கச் சாப்பிடுகிறார் என்றும் வதந்தி நிலவியதும் உண்மைதான்.)

எந்த கிளாஸ் ஆக இருந்தாலும் ஸ்தானிஸ்லாஸ் சார் தான் கைத்தொழில் ஆசிரியர். காதி போர்ட் கடையில் பளபள என்று பித்தளைச் சக்கரம் அடியில் மின்ன, மேலே நீளும் இரும்புக் குச்சியின் ஓரத்தில் அழகான வளைசலோடு வரும் தக்ளி கிடைக்கும். பதினாலு பைசாதான் விலை. எடுத்துக் கொடுக்க ஒருத்தர், தக்ளியை விட நீளமான காகித பில் போட ஒருத்தர், சரிபார்த்துக் கையெழுத்துப் போட ஒருத்தர், காசு வாங்கிக்கொண்டு வாங்கின பொருளைக் கையில் கொடுக்க இன்னொருத்தர் என்று இந்த பதினாலு காசு வியாபாரத்துக்குக் கடையில் நாலு பேர் இருப்பார்கள்.

தக்ளியில் நூற்கப் பஞ்சு இரண்டு பைசாவுக்கு ஒல்லியான கொடுக்காப்புளிக் கொத்து மாதிரி கங்காராஜ் கடையில் பில் இல்லாமல் கிடைக்கும். வாத்தியார் அழகாக தன்னுடைய பழைய தக்ளியில் சன்னமான நூல் நூற்பார். “இப்படி நூத்தே ரெண்டு மாசத்திலே நெஞ்ச வேட்டி’ என்று தன் வேட்டியைக் காட்டுவார். வழிமறித்துப் பறித்த கொடுக்காப்புளி கொடுத்த பலத்தில் நெய்ததாக இருக்கலாம். கொஞ்சம் பழுப்பேறி, ஒன்றிரண்டு இடத்தில் ஒட்டுப்போட்டு இருக்கும் அது.

கதர்க் கடையில் பாரதி புத்தகம் கிடைக்கிறது என்றும், எல்லாரும் உடனே வாங்கி வகுப்புக்கு எடுத்துவர வேண்டும் என்றும் உத்தரவானது. இதுவும் பதினாலு பைசாதான் விலை. என்ன காரணமோ, காதி, கதர்க்கடை விற்பனை சமாச்சாரங்களுக்கு இப்படிப் பதினாலு பைசா விலையை சர்க்கார் விதித்திருந்தது. கூட்டமாகப் போய், பில் போடுகிற, காசு வாங்குகிற சடங்கு எல்லாம் முடிந்து கையில் அந்தப் பதினாலு காசு பாரதி பாட்டுப் புத்தகம் கிட்டியது. அதன் அழகைச் சொல்ல சட்டென்று வார்த்தை வரமாட்டேன் என்கிறது. மொத்தம் பத்து பாட்டு. கனமான தாளில், பல வர்ணத்தில் ஒவ்வொரு பாட்டோடும் கோபுலு வரைந்திருந்த அழகான படங்கள். எதை எதையோ சேர்த்து வைத்த நான் அந்தப் பொக்கிஷத்தைச் சேர்த்து வைக்கத் தவறிவிட்டேன். பக்தவத்சலம் சர்க்காரை இந்த ஒரு புத்தகத்துக்காகவே, அரிசி சர்க்கரை ரேஷன், இந்தி திணிப்பை எல்லாம் மீறிப் பொறுத்துக் கொள்ளலாம்.

முழுவருடப் பரீட்சைக்கு நாலு நாள் முன்னால் நாலாங் கிளாஸ் மர ஸ்கிரீனுக்குப் பின்னால் இருந்து எட்டிப்பார்த்து கனகவல்லி டீச்சர் சொன்னார்- “”பசங்களா, அடுத்த செவ்வாய்க்கிழமை கல்யாணம். கோவில்லே வச்சு. வந்துடுங்க”. அவருக்குத்தான் கல்யாணம். மாப்பிள்ளை யார் என்று நாச்சம்மை கேட்டபோது, “உங்க சார்தான்’ என்றாள் டீச்சர் வெட்கத்தோடு சிரித்தபடி.

கோபுலு படம் போட்ட பாரதியார் பாட்டுப் புத்தகம் போல கனகவல்லி டீச்சர் முகம் அப்போது அழகாக இருந்தது. சம்பிரதாயமான பத்திரிகை வைத்து அழைக்காமல், அதுவும் சின்னப் பிள்ளைகள் கல்யாண விசேஷங்களுக்கு ஆஜராவது வீட்டில் தடை செய்யப்பட்டிருந்ததால், கல்யாணத்துக்குப் போகமுடியவில்லை. ஆனாலும் அடுத்த வாரச் சந்தை தினத்தில் காய்கறிப் பையோடு டீச்சர் வீட்டில் நுழைந்தோம். “கல்யாணக் கணக்கு எழுதின எம்ப்ளது பக்க நோட்டு எங்கே?’ வாத்தியார் தேடிக் கொண்டிருந்தார். “எம்ப்ளது இல்லே, எண்பது’ என்றாள் டீச்சர் அழுத்தந் திருத்தமாக. “உம்மை நாம் மறவோம்’ மாதிரி இன்னொரு போர் தொடங்கும் அபாயம் தட்டுப்பட்டது. ஆனால், ரெண்டு பேரும் சேர்ந்து சிரித்துக் கொண்டே “வாங்கடா பசங்களா’ என்றார்கள்.

———————————————————————————————————————————————-

ஞாபகம் வருதே…: நெ. 40, ரெட்டைத் தெரு

Sunday November 4 2007 00:00 IST

பழைய தெரு முனையில் திரும்பும்போதே சிரிப்புச் சத்தம் காதில் விழும். எல்லோரும் பெண்கள். எனக்கு ஏழெட்டு வயசு பெரிய மூத்தவளில் இருந்து, கிட்டத்தட்ட என் வயதில், பாவாடை சட்டை போட்ட கடைக்குட்டி வரை மொத்தம் ஆறுபேர். வீட்டுத் தோட்டத்தில் கிணற்றடிப் பக்கம் துணி துவைத்துக் கொண்டும், செடிகளுக்குத் தண்ணீர் ஊற்றியபடியும், வாளியில் சேந்திய தண்ணீரை மேலே தெளித்து விளையாடிக் கொண்டும் ஒரே நேரத்தில் அதில் நாலு பேராவது தட்டுப்படுவார்கள். ஒல்லியாக, வளர்த்தியாக, கண்ணில் மையும், தினசரி தலைகுளித்து நீண்ட தலைமுடியுமாகச் சிரிக்கும் முகங்களை ஒரு வினாடி அவசரமாகப் பார்த்து, சட்டென்று பார்வையை நேராகத் திருப்பித் தெருமுனையைக் கடப்பது வழக்கம்.

ஒரே வீட்டில் அடுத்தடுத்துப் பிறந்த ஆறு பெண்கள். ஊரில் சவுகரியமாக ஆறு புஷ்பம் என்று ஒற்றைப் பெயரில் அவர்களைக் கூப்பிடப் பழகியிருந்தார்கள். பழைய தெருமுனையிலே, “அதாம்பா ஆறு புஷ்பம் வீட்டுக்குப் பக்கம்’ என்பதுபோல் அடையாளம் சொல்கிற தகவல்கள் சகஜமாகப் பரிமாறிக் கொள்ளப்பட்டன. அப்பா இல்லாத வீடு. ஆறு பெண்களையும் வளர்த்து ஆளாக்கும் அம்மா பெயர் என்ன? அவர்கள் ஒவ்வொருத்தியின் பெயர்தான் என்ன? யாரும் யாரையும் கேட்டதில்லை.

ஆனாலும் எனக்குக் கொஞ்சம் தெரியும். அதாவது கடைக்குட்டிப் பெண் பெயர் மட்டும். “”லட்சுமி, பராக்குப் பார்த்தபடி பல் தேய்ச்சு பேஸ்டை முழுங்கிடாதே. அப்புறம் பல்ப் போட்ட மாதிரி குடல் எரியும்”. தென்னை மரப் பக்கம் நின்று பல் விளக்கிக் கொண்டிருந்தவளிடம், துணி துவைத்துக் கொண்டிருந்த மூத்த அக்கா சத்தமாகச் சொன்னபோது நான் திரும்பிப் பார்த்தேன். லட்சுமி வாயெல்லாம் பேஸ்ட் நுரையோடு பெரிய கண்ணால் என்னைப் பார்த்துச் சிரித்தாள். முழங்காலுக்குக் கீழே தாழ்கிற அரைநிஜார் அணிந்த ஒரு பன்னிரண்டு வயதுச் சோனிப் பையன் முதன்முதலாக குறுகுறுப்பு என்றால் என்ன என்று புரிந்து கொண்ட வினாடி அது.

ஆறு புஷ்பம் வீட்டில் மெஸ் நடத்தினார்கள். காலை நேரத்தில் தாவணி முந்தானையை இழுத்து, இடுப்பில் செருகிக் கொண்டு அம்பாரமாகக் குவித்த பத்துப் பாத்திரங்களைக் கழுவுகிறதும், தோட்டத்தில் கத்தரி, வெண்டை, கீரை பயிர் செய்வதும், தென்னை மரத்துக்குத் தண்ணீர் ஊற்றுவதும் மெஸ் சம்பந்தப்பட்டவை. நான் சொன்னபோது குண்டுராஜூ கள்ளச் சிரிப்புச் சிரித்தான். எட்டாம் கிளாசில் படித்தாலும் எனக்கு நாலு வயது சீனியர். அவனுடைய சைக்கிள் செயின் கழன்று போய் ஆறு புஷ்பம் வீட்டுக்கருகில் குனிந்து உட்கார்ந்து அதை மாட்டிக் கொண்டிருக்க, பின் சீட்டில் சவாரி செய்துவந்த நான் வார்த்தை சொல்லிக் கொண்டிருந்தேன். ” நீ குழந்தைப் பிள்ளைடா’. குண்டுராஜூ சைக்கிள் நேரானதும் சிரிப்புச் சத்தம் கேட்கும் கிணற்றடியைப் பார்த்தபடி இருந்தேன். லட்சுமியைப் பார்க்க ஆசை இருந்தும் அடக்கிக் கொள்ள வேண்டிப் போனது.

பாட்டியம்மா இட்லி வாங்கி வர அனுப்பிய ஒரு ராத்திரியில் கர்னாடக சங்கீத மெஸ் மட்டுமில்லாமல் ரெட்டைத் தெரு முழுக்க மின்சாரம் காணாமல் போயிருக்க, நான் சட்டென்று தீர்மானமெடுத்து பழைய தெருப் பக்கம் திரும்பினேன். ஆறு புஷ்பம் மெஸ்ஸில் விளக்கு எரிந்து கொண்டிருந்தது. “ராஜா மகள், ரோஜா மலர், என் ஆசை நிறைவேறுமா’ என்று கொஞ்சம் பழைய சினிமாப் பாட்டு வீட்டுக்குள் இருந்து வந்தது. “நாலு இட்லி, வெங்காயம் போடாத சட்னி’ லட்சுமியிடம் இதைச் சொல்வதை மனதில் ஒத்திகை பார்த்தபடி படியேறினேன். “”என்னடா தம்பி வேணும்?” எதிர்ப்பட்டது மூத்த அக்கா.. கிராம்பு மென்றபடி வந்து நின்றாள். பாவாடை தாவணியில் இல்லாமல் பாந்தமாகச் சேலை உடுத்தியிருந்தாள் அவள்.

ஹைஸ்கூலுக்குப் புதிதாக வந்த விஸ்வநாதன் வாத்தியார் உள்ளே வந்ததும், என்னைப் பார்த்து முறைத்தபடி(அப்படித்தான் நினைத்தேன்) கூடத்துக்குப் போனதும், ஆறில் ஒரு புஷ்பம் ஏதோ சொல்ல ரெண்டு பேரும் உரக்கச் சிரித்ததும், கிராம போனில் ஓய்ந்திருந்த ராஜா மகள் திரும்ப ஆசை நிறைவேறுமா என்று கேட்க ஆரம்பித்ததும் அப்புறம் நடந்தவை. “”விஸ்வநாதன் சார் ஆறு புஷ்பம் மெஸ்ஸிலே சாப்பிட்டு முடிச்சு நடுராத்திரிக்குத்தான் காந்திவீதியிலே தன்னோட ரூமுக்குத் திரும்பிப் போறார்” இதைச் சொல்லும் போதும் குண்டு ராஜூ கள்ளச் சிரிப்புச் சிரித்தான். அந்த வருஷ நவராத்திரி நேரத்தில் ஆறில் மூத்தவள், ராஜா சவுண்ட் சர்வீஸ் குருநாதனைக் காதல் கல்யாணம் செய்து கொண்டு ரெட்டைத் தெருக் கடைசி “வரதன் ஸ்டோர்’ வீடுகள் ஒன்றில் குடியேறினாள். வீடுவீடாகப் போய் நவராத்திரிக் கொலுவுக்கு அழைக்கிற தெருப் பெண்கள் தன் வீட்டுப் படியேறாததை அவள் கிராம்பு மென்றபடி ஜன்னல் வழியே பார்த்துக் கொண்டிருந்த போது பின்னால் சன்னமாக ராஜா மகள் கேட்டது. சரஸ்வதி பூஜை சமயத்தில் அந்தப் பாட்டு எங்கள் வீட்டுக்கு ஏதிரே ரேடியோ ரிப்பேர்கார புஷ்பவனம் வீட்டுத் திண்ணையில் கரகரவென்று கேட்க ஆரம்பித்து , குரல்வளையை நெரித்தாற் போல் கிரீச்சிட்டுப் பாதியில் நின்றது. “பழைய ரேடியோ கிராம். இதுக்கு ஸ்பேர் பார்ட் கிடைக்காது. ரிப்பேர் கொஞ்சம் கஷ்டம்தான்.’ புஷ்பவனம் மாமா சொல்ல, அவள் கிராம போன் பெட்டியை சணல் பையில் அடைத்து எடுத்து வைக்க நான் உதவி செய்தேன். கிராம்பு மணக்காமல் சிரித்தாள் அக்கா.

அப்புறம் ஒரு நாள் நேருவீதி காதர் கடையில் ஜாமென்ட்ரி பாக்ஸ் வாங்கிக் கொண்டிருந்த போது ஆறில் இன்னொரு புஷ்பம் சைக்கிளில் வந்து இறங்கியதைப் பார்த்தேன். பெண்கள் ஓட்டுகிற அந்த சைக்கிளை “கல்யாணப் பரிசு’ திரும்ப டூரிங் தியேட்டருக்கு வந்த போது, “வாடிக்கை மறந்ததும் ஏனோ’ என்று பாடியபடி சரோஜாதேவி ஓட்டிப் பார்த்திருக்கிறேன். நேரில், அதுவும் என்னைவிட நாலைந்து வயது மட்டும் பெரிய பெண் ஒருத்தி லாவகமாக ஓட்டிவந்து நிறுத்திவிட்டு, காதர் கடைக்கு அடுத்த பேன்சி ஸ்டோரில் “ரெமி ஸ்நோ, டால்கம் பவுடர் தாங்க’ என்று கேட்டு வாங்கியது ஏதோ கனவில் நடக்கிறது போல் இருந்தது. அப்படியே அடுத்த தங்கப்பன் பழக்கடையிலும் நுழைந்து அவன் கொடுத்த பணத்தைக் கைப்பையில் வைத்தபடி நோட்டுப் புத்தகத்தில் குறித்துக் கொண்டாள். “சித்தையா கம்பெனி’ என்ற லேவாதேவி கடையில் கடன் வசூல் உத்தியோகமாம். ஒரு பெண் படியேறிக் கேட்டால் வராத கடனும் வசூலாகும் என்பதால் சித்தையா அந்தக் காலத்திலேயே பெண் ஊழியர்களை நியமித்தது ஆறு புஷ்பம் வீட்டில் இருந்து தொடங்கியது.

வெய்யில் காலத்தில் பாட்டியம்மா அப்பளம் இடுவது வழக்கம். வருடம் தவறாமல் தானே செய்துவந்த இந்தக் காரியம், அவள் சுகவீனப்பட்ட காரணத்தால் காண்ட்ராக்டில் விடப்பட்டது. செல்லூர் மெஸ்ஸம்மாதான் சப்ளையர்.””உள்ளங்கையைவிடச் சித்தெ பெரிசா, சுட்டா சிவக்காம, பொறிச்சா எண்ணை குடிக்காம, நல்ல வட்டமா வரணும், பெரண்டைச் சாறு தூக்கலா வேணும்”. அப்பள உற்பத்திக்கு டிசைன் ஸ்பெசிபிகேஷன் கொடுத்த பாட்டியம்மாளிடம், “”தனியாப் போட கஷ்டம். கூட யாரையாவது சேத்துக்கறேன்” என்றாள் செல்லூரம்மா. அவளுடைய அசிஸ்டென்ட் ஆறு புஷ்பங்களின் அம்மா என்பது பாட்டிக்குத் தெரியாது.

சாத்தப்பன் ஊருணிப் பக்கம் நான் குரங்குப் பெடலில் சைக்கிள் ஓட்டிப் போன போது முன்னால் இரண்டு பேர் நடந்து கொண்டிருந்தார்கள். ஆறாவது புஷ்பம் லட்சுமியும் அவள் அம்மாவும் . லட்சுமி தாவணி போட்டிருந்தாள். அவள் கொத்தாக அள்ளிக் கையில் வைத்திருந்தது, பக்கத்துக் கரட்டுப் பூமியில் பறித்த பிரண்டை. “”ஊரெல்லாம் தெரிய தூக்கிட்டு வரணுமாடீ. இதை தாவணிக்குள்ளே மறைச்சுக்கோயேன்” அவளுடைய அம்மா சொன்னாள். “”நீயே உன் புடவைத் தலைப்புலே கத்திக்கோ. என்னைப் பெத்த வயத்துலே பிரண்டை அடைச்சுக்கலாம்” லட்சுமி பிரண்டையை அம்மாவிடம் கொடுத்த போது நான் சைக்கிள் மணியை அடித்து வழிகேட்டு அவர்களைக் கடந்து போனேன். அம்மாவும் பெண்ணும் சிரிக்கும் சத்தம் பின்னால் கேட்டபடி இருந்தது. அது சிரிப்பில்லை என்று தெரிய அப்புறம் எத்தனையோ காலமானது.

———————————————————————————————————————————————-

Sunday November 18 2007 00:00 IST

ஞாபகம் வருதே…: நெ.40, ரெட்டைத் தெரு

இரா. முருகன்

வாழ்க்கையிலேயே முதல் தடவையாகப் பேண்ட் போட்டுக் கொண்டபோது சத்திய சோதனை ஏற்படும் என்று எதிர்பார்க்கவில்லை. பத்து வயதுப் பையன்களுக்கு, இடுப்புக்கு மேலே வார் வைத்த நிஜார்தான் அனுமதிக்கப்பட்ட உடுப்பு. ஆனாலும், தீபாவளி நேரத்தில் அழுது புரண்டு அடம் பிடித்து புது பேண்ட்டுக்கான அனுமதி வீட்டில் கிடைத்தபோது என்னைவிட சந்தோஷப்பட்டவர் குருசாமி டெய்லராகத்தான் இருக்கவேண்டும். ஊரில் பேண்ட் போடுகிறவர்கள் சொற்பம். அவர்களும் மதுரைக்குப் போய்த் தைத்து வாங்கி வந்துவிடுவது வழக்கம். குருசாமி டெய்லருக்கு பேண்ட் தைத்துப் பழக சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொடுத்தது நான்தான். என்னை நிற்கவைத்து இஞ்ச் டேப்பால் காலில் ஆரம்பித்து கழுத்தைச் சுற்றிக்கூட ஏகப்பட்ட அளவெடுத்துக் குறித்துக்கொண்டு, கெட்டியான பைஜாமா போல் தைத்து எடுத்து வந்து கொடுத்தார். இடுப்பிலிருந்து கால்வரை நீண்டு வந்த அதன் பெயர் பேண்ட்தான்.

“”யார்கிட்டே பேண்ட் இருக்கு?” பள்ளிக்கூட ஆண்டுவிழாவுக்கு மூன்று வாரம் முன்னால் கிருஷ்ணன் சார் வகுப்பில் விசாரித்தபோது நான் பெருமையோடு இரண்டு கையையும் உயர்த்த, சாயந்திரம் நாகப்பன் வாத்தியாரைப் பார்க்கச் சொன்னார் அவர்.

“”இதான் வரவேற்புரை. சொல்லி, நிகழ்ச்சியை நீதான் ஆரம்பிச்சு வைக்கறே.” நாகப்பன் நாலாக மடித்த ஒரு காகிதத்தை நீட்டினார். சென்னையில் ஏதோ பத்திரிகை ஆபீசில் ப்ரூஃப் ரீடர் என்ற உத்தியோகத்திலிருந்தாராம். “மதராஸில் ஜலக் கஷ்டம்’ என்று பத்திரிகையில் வழக்கமாக எழுதுகிற தொழிலாக இருக்கலாம் அது. வேலை பிடிக்காமலோ என்னமோ, டீச்சர் டிரெயினிங் போய் வாத்தியாரானவர்.

காகிதத்தைப் பிரித்துப் பார்த்தேன். “இன்று மார்ச் பதினைந்து! 1963-ம் ஆண்டு வெள்ளிக்கிழமை!! மாலை ஆறு மணி! வருக… வருக..வரவேற்கிறேன் உங்களை!’ என்று இரண்டு பக்கத்துக்கு இருந்தது அந்த வரவேற்புரை. இப்படி வார்த்தைக்கு வார்த்தை ஒற்றை, ரெட்டை, சமயத்தில் மூன்று ஆச்சரியக் குறிகளை எப்படி உச்சரிப்பது என்று தெரியவில்லை. லேசாக, நடுவாந்திரம், அதிகமாக என்று பல தினுசில் ஆச்சரியப்பட மார்ச் பதினைந்தாம் தேதியில் என்ன விசேஷம் என்றும் புரியவில்லை. பத்திரிகையில் “மதராஸில் ஜலக் கஷ்டம்’ கூட ஒரு ஆச்சரியத்தோடுதான் முடிந்ததாக நினைவு. அந்த ஆச்சரியகரமான வரவேற்புரை பாடத்தை விடச் சீக்கிரமாக மனப்பாடம் செய்யப்பட்டு, கடகடவென்று சொல்ல இரண்டே நாளில் நான் தயார் ஆனேன்.

தினசரி சாயந்திரம் பள்ளிக்கூடம் விட்டதும் நாலரை மணிக்கு ஒத்திகை. வருஷம் தவறாமல் “நேரு மாமா, ரோஜாவின் ராஜா, பஞ்சசீலம்’ என்ற வார்த்தைகளோடு ஒரு பாட்டு இருக்கும். அந்தந்த வருடம் பிரபலமான சினிமாப்பாட்டு மெட்டில் இதையும் நாகப்பன் சார்தான் எழுதிக்கொடுப்பார். அந்த வருடம் “பாட்டுப் பாடவா, பார்த்துப் பேசவா’ மெட்டில் நேரு மாமா வந்தார். இந்தப் பாட்டை கோஷ்டி கானமாக ஆமினா, கனகவல்லி, முத்தம்மா டீச்சர்கள் இசைக்க, நாலாவது மற்றும் ஐந்தாவது வகுப்புப் பெண்கள் கையைக் கோர்த்துக்கொண்டு வட்டமாகச் சுற்றி வந்து இப்படியும் அப்படியுமாகக் குதிப்பார்கள். எல்லோர் தலையிலும் கட்டாயமாக வளையல்கடையில் வாங்கிய பிளாஸ்டிக் ரோஜாப்பூவும் கழுத்தில் ரோல்ட் கோல்ட் நெக்லசும் இருக்கும். ஆடத் தேர்ந்தெடுத்ததுமே இந்த இரண்டையும் வீடுகளில் வாங்கச் சொல்லி, துணிப்பையில் போட்டுப் பெயர் எழுதிப் பள்ளிக்கூட மர அலமாரியில் அட்டனெஸ் ரிஜிஸ்தர்கள், சாக்பீஸ் டப்பாக்களோடு வைத்துவிடுவது வழக்கம்.

ஆண்டு விழாவுக்கு நாள் நெருங்க நெருங்க, பள்ளிக்கூடத்தில் பரபரப்பு அதிகமாகும். கடைசி நாலைந்து நாள் பாடம் நடத்துகிற நேரத்தை விட ஆண்டு விழா தயாரிப்புதான் முக்கிய வேலையாகிவிடும். பெரிய மூங்கில் தட்டிகளைத் தரையில் படுக்கப் போட்டு, மேலே வெள்ளைக் காகிதத்தைப் பசை காய்ச்சி ஒட்டி உலரவைத்துக் கொண்டிருப்பார் கிருஷ்ணன் சார். பசை காய்ச்ச, காகிதம் எடுக்க, கிட்டு கடையில் வாத்தியாருக்குக் கும்பகோணம் சீவலும் வெற்றிலையும் வாங்கிவர என்றமாதிரி எடுபிடி காரியங்கள் செய்வதில் வரும் இன்பம் சொல்லிமாளாது. அப்புறம் மண்சட்டியில் பச்சை, சிவப்பு, நீலம், மஞ்சள் என்று கிருஷ்ணன் சார் சொல்லியபடிக்கு வர்ணம் கரைக்கிற வேலை. கரைத்து வைத்த வர்ணத்தோடு பார்த்துக் கொண்டிருக்க, அவர் பென்சிலால் மூங்கில்தட்டியில் ஒட்டிய காகிதத்தில் காந்தி, பாரதி, மண்டி போட்டுக் கைகுவித்து வணங்குகிற பெண்கள் என்று படம் வரைவார். படத்தில் ஈஸ்ட்மென் கலரில் வர்ணம் பூசுகிற வேலை அடுத்தது. எல்லாப் படத்திலும் கைவிரல்கள் உடம்போடு ஒட்டாமல் கொடுக்காப்புளிக் கொத்து மாதிரி நீண்டிருப்பதோடு, எல்லா முகத்திலும் கனகவல்லி டீச்சர் போல் மூக்கு நீளமாக இருக்கும். அந்த வருடம் வரையப்பட்ட ஜான் கென்னடி பச்சை பேண்ட், நீலக் கோட்டோடு கனகவல்லி டீச்சர் மாதிரிப் பல்லைக் கடித்துக்கொண்டு சிரித்தார்.

ஆண்டு விழாவுக்கு ஒரு நாள் முந்தி உடுப்பு ஒத்திகை என்று சொல்லி ஆட, பாட, நடிக்கத் தேவையான உடுப்பு, உபகரணங்களோடு நிகழ்ச்சிகள் சரிபார்க்கப்படும். வாத்தியார், டீச்சர்கள், ஹெட்மாஸ்டர், கரஸ்பாண்டெண்ட் போன்றவர்கள் நிறைந்த சபை அது. புதுத்துணி வாடையடிக்கும் நீலப்பாவாடையோடு நேருமாமா பெண்கள் ஆடும்போது, டீச்சர்களின் இசைக்குழுவுக்குத் தபலாவில் தாளம்போட கெüரவ வித்வானாக, பாலாம்பா டீச்சரின் தம்பி அரிசிக்கடை சாமிநாதன் அழைக்கப்பட்டிருந்தார். அவருக்குக் கொஞ்சம் காது மந்தம் என்பதால், பாலாம்பா டீச்சர் கையை உயர்த்தித் தாழ்த்தி தாளம் பாட்டோடு நடக்க ஒத்தாசை செய்தார். அங்கவஸ்திரத்தைத் தார்பாய்ச்சிக் கட்டிக்கொண்டு கிரிதரன் கடெüயேழு வள்ளல்களில் ஒருவரான குமணன் ஆகத் தமழுக்குத் தலைகொடுக்க நாலு திசையிலும் எச்சில் தெறிக்கச் சூளுரைத்தான். அடுத்த காட்சியில் காதிதக் கூழால் செய்த தலையைத் தாம்பாளத்தில் வைத்து எடுத்துக்கொண்டு புலவனாக குண்டுராஜா வரவேண்டும். அவசரமாக நடந்து வேட்டி தடுக்க, அவன் கையில் பிடித்த தலை தரையில் விழுந்து உள்ளேயிருந்து தேங்காய்மட்டை எட்டிப் பார்த்தது. உடனடியாகக் காகிதப்பசை காய்ச்சித் தலை ஆப்பரேஷனுக்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது.

“”வரவேற்புரை யாரு, வா இங்கே.” படபடப்போடு போய் நின்றேன். “”டிரஸ் எங்கேடா?” அவசரமாகக் குனிந்து பார்த்தபோது, “”அசடே, பேண்ட் எங்கேன்னு கேக்கறேன்.” என்னத்தைச் சொல்ல? டிரஸ் ரிகர்சலுக்கு எல்லாம் பேண்ட் தரமுடியாது என்று வீட்டில் கட்டாயமாகச் சொல்லி அனுப்பப்பட்டிருந்தது. “அப்புறம் அதைத் திரும்பத் துவைக்கணும். இஸ்திரி போடணும், ஆண்டு விழாவுக்குன்னு ஏற்னவே ஒருரூபா அழுதாச்சு. இன்னும் பணம் செலவழிக்க முடியாதுன்னு போய்ச் சொல்லு’ சொல்ல முடியாது. “”சலவைக்கடையிலே இருந்து நாளைக்குத்தான் கிடைக்கும் சார்” வாழ்க்கையில் பொய் சொல்வது கூட ஆரம்பப் பள்ளிக்கூடத்தில் தான் ஆரம்பமாகிறது.

“இன்று மார்ச் பதினைந்து! 1963-ம் ஆண்டு! வெள்ளிக்கிழமை!’. நான் கடைசி ஒத்திகையாக ஆச்சரியப்பட ஆரம்பிக்கக் குரலே எழும்பவில்லை. பாலாம்பா டீச்சர் ஸ்கூல் தோட்டத்திலிருந்து திம்ஸ்கட்டையை எடுத்து வந்து முன்னால் நிறுத்தினார். “”இதான் மைக் அப்படீன்னு நினைச்சு உரக்கப் பேசு. சபைக் கூச்சம் ஓடிப்போகும்.” கட்ட மைக்குக்கு முன்னால் நின்று அன்றைக்குக் கத்த ஆரம்பித்ததுதான்.

அப்புறம் பேங்கில் வேலைபார்த்தபோது, பாலாம்பா டீச்சரின் பென்ஷனை அவர் வீட்டிலேயே போய்ப் பட்டுவாடா செய்யவேண்டி வந்தது. நடமாட முடியாமல் படுத்த படுக்கையாகக் கிடந்தார் டீச்சர். “”வாடா வா, பென்ஷன் பணமா? காதுலே விழறது. மெதுவாச் சொல்லேன். கடப்பாறையை முழுங்கினியா சின்ன வயசிலே?” டீச்சர் பொக்கைவாயால் சிரித்தபடி செல்லமாகத் தலையில் குட்டினார். “”கடப்பாறை இல்லே, திம்ஸ்கட்டை” என்றேன் அவர் காதில் விழாமல் மெதுவாக.

———————————————————————————————————————————————-

ஞாபகம் வருதே…: நெ.40, ரெட்டைத் தெரு

இரா. முருகன்

அந்த வீட்டைச் சாவு சுற்றிச் சுற்றி வந்தது. அப்படித்தான் நினைத்தோம். வருடம் தவறாமல் அங்கே யாராவது செத்துப் போனார்கள். பள்ளிக்கூடம் விடுமுறை விட்ட குளிர்கால ராத்திரியில் திடீரென்று அழுகைச் சத்தம் கேட்டால், வேதமய்யா வீடுதான் உடனடியாக மனதில் வரும். பெரும்பாலும் அது சரியாகவும் இருக்கும்.

அரண்மனை மாதிரி வீடு என்று சொல்வது வேதமய்யா வீட்டைப் பொறுத்தவரை பாதி பொருந்தும். பாழடைந்த அரண்மனை அது. வேதமய்யா என்ற ஒருத்தரை நாங்கள் மட்டுமில்லை; எங்கள் வீட்டுப் பெரிசுகளிலும் அநேகமாகப் பலபேர் பார்த்தது இல்லை. மூன்று தலைமுறைக்கு முன்னால் திவானாக இருந்தவராம். பாட்டி சின்ன வயதில் அம்பலப்புழையிலிருந்து வரும்போது மலையாளத்தில் அவளுடைய அம்மா, அப்பா பற்றி சம்சாரித்து, மிட்டாய் கொடுப்பாராம் வேதமய்யா. அவ்வளவு பழைய காலத்து மனுஷர். அவருக்கு அப்புறம் வாரிசு அருகிப் போனது. மிஞ்சியவர்களுக்குள் சண்டை, நிலபுலங்கள் கடனுக்காக அடமானம் வைத்து முழுகியது, வருமானக் குறைவு என்று அடுத்தடுத்த தலைமுறைகளில் இறங்குமுகமாகி, நான் பார்க்கும்போது இழுத்துப் பறித்துக்கொண்டு இறுதி மூச்சு விட்டபடி கிடந்தது வேதமய்யா வீடு.

வீடு முழுக்க பாட்டி, தாத்தா என்று வயதானவர்கள். கரண்ட் பில் கட்டாததால் ப்யூûஸப் பிடுங்கிப் போனதற்குப் பிறகு ராத்திரி லாந்தர் வெளிச்சம் முணுக் முணுக்கென்று அலைபாய வீட்டிலிருந்து இருமல் சத்தமும், வென்னீர் கேட்கிறதும், கொல்லைப் பக்கம் கையைப் பிடித்துக் கூட்டிப் போகச் சொல்லி மன்றாடுவதும் கேட்கும். “”கொஞ்சம் பொறுக்கணும். புனர்பாகமா சாதம் வடிச்சாறது”. வலது பக்கம் கோணலாகச் சாய்ந்த கழுத்தோடு அலமேலு கீச்சுக்கீச்சென்று இரைவதும் காதில் விழும். வேதமய்யாவின் பேரனுக்கோ, பேத்திக்கோ பிறந்த பெண் அலமேலு.

ராத்திரி தூங்கத் திண்ணையில் படுக்கை விரிக்கும்போது “”அத்தே, எங்களை விட்டுப் போய்ட்டீங்களா” என்று அலமேலு குரல் கேட்டால் அந்த வீட்டில் ஒரு இருமல் சத்தம் ஓய்ந்து போனதாக அர்த்தம். நடுராத்திரி வரை ஒற்றை பெட்ரோமாக்ஸ் வெளிச்சத்தில் பாடை முடைகிறவர்கள் உரக்கப் பேசியபடி இருப்பார்கள். விடிகாலையிலோ அல்லது இருட்டு பிரியும் முன்னரோ பிணம் எடுத்தபிறகு, பஞ்சாயத்து குழாயில் தகர வாளியில் பிடித்த தண்ணீரை செங்கல் உதிர்ந்த வீட்டுத் திண்ணையில் வீசிவீசி அலமேலு கழுவும்போது அவள் கழுத்து இன்னும் கோணலாக, தோளால் வாயைப் பொத்தியபடி அழுதுகொண்டிருப்பாள். ஒரு வருடம் மார்கழியில் வேதமய்யா வீட்டில் பத்து நாளைக்கு ஒன்றாக ராத்திரிச் சாவு தொடர, அந்த வீட்டு வாசலைக் கடந்து போகவே இனம் புரியாத மிரட்சியாக இருந்தது. ஆனாலும், வீட்டில் தொடர்ந்து இருமித் துப்பி வென்னீர் கேட்க இன்னும் ஆட்கள் இருந்தார்கள்.

கோணல் கழுத்தம்மா பொங்கலுக்கு முந்திய போகிப் பண்டிகை நாள் பகல் நேரம் எங்கள் வீட்டுப் படியேறி வந்தாள். கூடவே விசித்து விசித்து அழுதபடி அவளுடைய மகள் விமலியும். கொஞ்சம் பயத்தை எழுப்பும் பூனைக் கண் விமலிக்கு. ரெண்டாம் கிளாசில் படிக்கிறவள். பாதிப் பள்ளிக்கூடம் நடக்கும்போதே பைக்கட்டைத் தூக்கிக்கொண்டு வீட்டுக்கு வந்துவிடுவாள். யாரும் ஒன்றும் சொல்வதில்லை.

“”உங்க வீட்டுக்கு வந்த பொங்கல் வாழ்த்தை இவ அவசரப்பட்டுப் பிரிச்சுட்டா. பம்பாய்லேருந்து வந்ததா நெனப்பு. இருக்கியா செத்தியான்னே கேக்காதவங்க வாழ்த்து எல்லாம் அனுப்ப மாட்டாங்கன்னு இந்த மூதேவிக்குத் தெரியலை”. நான் பார்த்துக் கொண்டிருக்க அலமேலு விமலி முதுகில் பலமாக அடிக்க, அந்தப் பெண் இன்னும் தீனமாக அழுதாள். பாட்டி சமாதானப்படுத்தி போளி கொடுத்து அனுப்பினாள்.

எப்போதாவது ரகு வாசல் படியில் உட்கார்ந்திருப்பான். கோணல் கழுத்தம்மா மகன். எங்கேயோ ஹாஸ்டலில் இருக்கிறதாகச் சொன்னார்கள். ரொம்பவே பூஞ்சையான உடம்பு. குண்டு ராஜூ வயசு அவனுக்கு. கொஞ்ச நாள் அவன்கூட இங்கேதான் படித்தானாம். நானும் ராஜூவும் அவனைக் கடந்து போகும்போது, “”பம்பாய்க்குப் போகலாமா?” என்று ராஜூவைக் கேட்பான். “”சாப்பிட்டு வந்துடரேன். அப்புறம் ராத்திரி போட்மெயில்லே போகலாம்” என்றபடி ராஜூ என்னை இழுத்துப் போவான்.

ஒரு சாயந்திரம் நாங்கள் தெருவில் பந்தும் மட்டையுமாகச் சுறுசறுப்பாக இருந்தோம். ரகு வீட்டு வாசலில் உட்கார்ந்து “”லண்டன் போகணும், டெல்லி போகணும், மெட்ராஸ் போகணும்” என்று உரக்கச் சொல்லிக் கொண்டிருந்தான். கோணல் கழுத்தம்மா விமலிக்காக ஒரு பென்சிலை இரண்டாக நறுக்கியபடியே, ஒவ்வொரு ஊர்ப் பேர் சொல்லியானதும், “”நாளைக்குப் போகலாம்” என்று உத்திரவாதம் கொடுத்துக் கொண்டிருந்தாள். “”பம்பாய் போகணும். வேணாம். அப்பா அயோக்கியன் கிட்டே போக வேணாம்” ரகு திடீரென்று குரலை உயர்த்தி அழ, அலமேலு அவனை மெல்ல உள்ளே கூட்டிப் போனதைப் பார்த்தோம். அந்தி சாய, அப்புறம் விளையாடவில்லை.

அன்றைக்கு ராத்திரிதான் ரகு செத்துப் போனது. கோணல் கழுத்தம்மாவும், விமலியும் கதறி அழுத சத்தம் இரண்டு தெருமுனை தாண்டிக் கேட்டிருக்கும். வழக்கம்போல் பாங்க் சுந்தரராமன் தான் பிணம் தூக்க வந்தது. ஏதோ பாங்கில் வேலை பார்த்து, மோசடி கேசில் ஜெயிலுக்குப் போய்த் திரும்பி, பிழைப்புக்காகப் பிணம் தூக்குவது என்றாகிப்போனது சுந்தரராமனுக்கு. “”சந்தானம் தாயாரை எரிச்சுட்டு வந்தா. நடுராத்திரியிலே வெட்டியான் வந்து வீட்டுக் கதவைத் தட்டற சத்தம். பாதியிலே அணைஞ்சு போச்சு. இன்னும் கொஞ்சம் விறகு வேணுமாம். ராத்திரியிலே விறகுக்கடை நாயக்கரை எழுப்பி…” சுந்தரராமன் எங்கள் வீட்டுத் திண்ணைப் பக்கம் புகையிலை போட்டபடி சக பிணம் தூக்கிகளிடம் சொல்லி உரக்கச் சிரித்தது அந்த ராத்திரியில் கலவரமாக மனதில் பதிந்துவிட்டது. அடுத்த நாள் காலை ஈரமாக இருந்த வெற்று வாசல் படியைப் பார்த்து “”பாவம்டா ரகு” என்றான் குண்டுராஜூ.

ரகு போன அடுத்த இரண்டு வருடங்களில் அந்த வீட்டிலிருந்து இன்னும் சிலர் இறுதிப் பயணமானார்கள். வீடு கிட்டத்தட்டக் காலியாகி, அலமேலுவும், விமலியும் மட்டும் அரிக்கேன் விளக்கு வெளிச்சத்தில் வளைய வந்து கொண்டிருந்தார்கள். விமலி சூட்டிகையான பெண். ஆனாலும் திடீர் திடீரென்று அழ ஆரம்பித்துவிடுவாள். கோணல் கழுத்தம்மா இருமிக்கொண்டே அவளைச் சமாதானப்படுத்துவாள்.

அதற்கும் அடுத்த வருடம் பொங்கலுக்கு அடுத்த நாள் ராத்திரி விமலி அழுத சத்தம் அந்த வீட்டிலிருந்து கேட்டது. கோணல் கழுத்து அலமேலு செத்துப் போனதாகத் தெரிந்தது. திரும்பவும் பாங்கு சுந்தரராமன் சிரிப்பு. பெட்ரோமாக்ஸ் வெளிச்சம், பாடை முடைவது, இன்னும் கொஞ்சம் அழுகை, தூக்கிப் போகிறவர்கள் குரல், இனம் புரியாத சோகம். காலையில் அந்த வீட்டுத் திண்ணையை அலம்ப யாரும் இல்லை.

விமலியை யாரோ பம்பாய் கூட்டிப் போனார்கள். “”அவ அப்பனை வளைச்சுப்போட்ட படுபாவி இந்தக் குழந்தையை வேலைக்காரியா வச்சுக்காம சொந்தப் பொண்ணா வளர்க்கணுமே, அம்புலப்புழை கிருஷ்ணா”, பாட்டி மனமுருகப் பிரார்த்தித்தாள்.

எத்தனையோ வருடம் கழித்து ராத்திரியில் தாமதமாக தில்லியிலிருந்து பம்பாய் புறப்பட்ட விமானத்தில் “விமலி ரங்னேகர்’ என்ற பெயர் அட்டை குத்திய ஏர்ஹோஸ்டûஸப் பார்த்தேன். பூனைக் கண்ணி. “”பூல் கயீரே” (மறந்து போச்சு) என்று யாரிடமோ சொல்லிக் கொண்டிருந்தாள். அவள் விமலியாக இருக்கலாம். இல்லாமலும் இருக்கலாம். விமலி என்றால் கட்டாயம் ஊரை மறந்திருப்பாள். மறப்பதில்தான் அவளுக்கு மகிழ்ச்சி. நினைப்பதில் எனக்கு இருப்பதுபோல.

———————————————————————————————————————————————-

ஞாபகம் வருதே…: நெ.40, ரெட்டைத் தெரு

“என்னப்பனே, என் அய்யனே, பார்வதியாளின் பாலகனே, பன்னிருகை வேலவனே’ என்று உரத்த குரலில் பெங்களூர் ரமணியம்மாள் பாடும் இசைத்தட்டு எங்கேயாவது ஒலிக்கக் கேட்டால் இப்போதும் முதுகுத் தண்டில் ஒரு நடுக்கம் ஏற்படும். கூடவே கத்திரி வெய்யில் காய்கிற ஒரு மத்தியானப் பொழுது மனதில் விரியும். வீங்கின கன்னமும், அவமானமும், அடக்க முடியாத அழுகையுமாகப் பகல் சாப்பாட்டுக்கு அதோ, வீட்டுக்கு நடந்து கொண்டிருக்கிற பள்ளிக்கூடப் பையன் நான்தான்.

புது வாத்தியார். ராஜமன்னார்சாமி என்று போலீஸ் இன்ஸ்பெக்டர் போல் பெயர். உயரமும், பெரிய மீசையும், சிவந்த கண்ணைக் கடந்து வழியும் சிடுசிடுப்பும். அடி வயிற்றிலிருந்து வருகிறது போன்ற சத்தமுமாக அவர் போலீஸ்காரர்போல்தான் இருந்தார். வகுப்புப் படியேறி உள்ளே வந்தவர் இரண்டாம் பெஞ்சில் நேரே எனக்கு முன்னால் வந்து நின்றார். மரியாதைக்காக நான் எழுந்திருக்க முயற்சி செய்வதற்குள் என் கன்னத்தில் இடி போல் அவர் கை இறங்கிய சத்தம் கிளாûஸக் கடந்து சாத்தப்பன் ஊருணிக்கரையில் எதிரொலித்திருக்கும்.

” பட்டன் போடுடா, திருட்டு ராஸ்கல்’ அடிக்கு மேல் அடுத்த அவமானமாக ஒரு வசவு. திருட்டு ராஸ்கல் நான்.

திங்கள் கிழமை என்பதால் காலையில் அவசரமாகச் சீருடையை எடுத்து மாட்டிக் கொண்ட போது , வெள்ளைச் சட்டையில் கழுத்துக்குப் பக்கத்துப் பொத்தான் உதிர்ந்து போயிருந்தது. காலை நேர அவசரத்தில் யாரிடம் ஊசியில் நூல் கோர்த்து, விபூதிச் சம்படத்துக்குள் வெள்ளை பட்டனைத் தேடி எடுத்து (வீட்டில் ஏனோ அங்கேதான் பொத்தான், ஊசி போன்ற சமாச்சாரங்களைச் சேமித்து வைப்பார்கள்) தைத்துக் கொடுக்கும்படி கெஞ்ச முடியும்? பாட்டியம்மா சரியென்று அதுவரை ருத்ராட்சத்தை உருட்டிய ஸ்கோரை “சம்போ அம்பத்துரெண்டு’ என்று உரக்கச் சொல்லிக் கொண்டு உதவிக்கு வருவாள். அவளுக்கு ஊசியில் நூல் கோர்க்க ஒத்தாசை செய்து தைத்து முடிப்பதற்குள் சாயந்தரமாகிப் பள்ளிக்கூடம் முடிந்துவிடும். பாதியில் நிறுத்திய அவளுடைய “சம்போ’ ஸ்கோர் ஆயிரத்தெட்டைத் தொட அரைவாசி தூரம் பின் தங்கி இன்னும் ஐந்நூற்று இரண்டிலேயே நிற்கும். முடிக்காமல் சாப்பிட மாட்டாள் அவள்.

சேஃப்டி பின் குத்திப் போகலாம் என்றால் அம்மா வேண்டும். அவள் கழுத்துச் சங்கிலியில் கோர்த்து வைத்து, தேவையானால் எடுத்துக் கொடுத்து அடுத்த நாள் ஞாபகமாகத் திரும்பப் பெறும் வஸ்து அது. பள்ளிக்கூடம் கிளம்பும் நேரத்தில் அம்மா பூஜையில் மும்முரமாக இருந்ததால் அதுவும் முடியாமல் போனது. எல்லாம் சேர்ந்து பகல் பன்னிரண்டு மணி சுமாருக்கு எனக்கு வாழ்க்கையிலேயே முதல் முறையாகத் திருட்டு ராஸ்கல் பட்டத்தை போலீஸ்கார வாத்தியாரிடம் வாங்கிக் கொடுத்ததோடு மட்டுமில்லாமல் கன்னத்தையும் வீங்க வைத்துவிட்டது. அல்பமான பொத்தான் அது.

“சினிமாவுக்குப் போனா, உலகமே மறந்துடுமாடா நாயே’. ராஜமன்னார்சாமி கர்ஜித்த போது கண் இருண்டு வந்தது. இதெல்லாம் கனவு. இதோ முடிந்து எழுந்து பாயைச் சுருட்டி வைத்துவிட்டுப் பல் தேய்க்கப் போக வேண்டியதுதான் என்று மனம் சமாதானம் சொன்னது. ஆனால் அது கனவில்லை என்பது முதுகை வளைத்து அடித்த அடியாக விழுந்தது. வகுப்பில் கிட்டத்தட்ட முதல் அல்லது இரண்டாம் இடத்தில் இருக்கப்பட்ட ஒரு சாதுப் பையனை கூடப் படிக்கிறவர்கள் வில்லனைப் போல் பார்க்க ஆரம்பிப்பதைவிடப் பெரிய தண்டனை வேறே இல்லைதான்.

“”இந்த ஸ்கவுண்ட்ரல் நேத்துக்கு சாயந்திரம் சாத்தப்பன் ஊருணிக் கரை மேட்டிலே ஒரு தடியனோடு சைக்கிள் கேரியர்லே உட்கார்ந்து டென்ட் கொட்டகைக்குப் போய்ட்டு இருக்கான். நான் எதிர்த்தாப்பலே வரதை பாக்கறான் ராஸ்கல். இறங்கி மரியாதையோட சல்யூட் அடிச்சு குட் ஈவினிங் சார்னு சொல்லணும்னு தெரியலை. கால்மேல் கால் போட்டுக்கிட்டு துரை மாதிரிப் பார்த்துட்டுப் போறான். ரவுடிப்பயல்”

ஆக, அதுதான் குற்றப்பத்திரிகை. முந்தின நாள் சாயந்திரம் குண்டுராஜாவோடு டென்ட் கொட்டகையில் சினிமா பார்க்கப் போன போது இவர் எதிர்ப்பட்டது உண்மைதான். ஓடுகிற சைக்கிளில் இருந்து குதிக்கப் பயமாக இருந்ததால் உட்கார்ந்தபடியே கடந்து போனதும் உண்மைதான். அத்தனை பெரிய குற்றமா அது?

பைக்கட்டைத் தோளில் மாட்டியபடி வீட்டுக்கு நடந்தபோது உலகமே விலகிப்போய் என்னை வேடிக்கை பார்க்கிறதாகப் பிரமை. காது மடலிலிருந்து கால்வரை உஷ்ணம் பரவித் தகிக்க ஆரம்பித்தது. திருட்டு ராஸ்கல், நாய், புழுத்த நாய், ரவுடி, அர்த்தம் புரியாத ஸ்கவுன்ட்ரல். இதுக்கு அப்புறம் என்ன வாழ்க்கை மிச்சம் இருக்கிறது?

புதிதாகப் போட்ட தார் வெய்யிலில் உருகி அங்கங்கே திட்டுத் திட்டாகக் கசிந்திருந்த சந்தைக் கடை வீதி. யார் வீட்டிலோ கல்யாணமோ, பூப்புனித நீராட்டுவிழாவோ கோலாகலமாக நடக்கிறது. “மொய் எழுதியவர்கள் சாப்பிட்டுப் போகவும்’ என்று ஒலி பெருக்கியில் அறிவிப்பு. தொடர்ந்து பெங்களூர் ரமணியம்மால் இசைத்தட்டில், “என்னப்பனே..என் ஐயனே’ என்று குஷியாகத் தொடங்க, எனக்குத் திரும்ப அழுகை உச்சத்துக்கு வந்தது. “ஸ்கவுன்ட்ரல் என்றால் என்ன?’

அப்போது காய்ச்சலில் விழுந்தவன்தான். பத்துநாள் பள்ளிக்கூடம் போகமுடியவில்லை. டாக்டர் சர்டிபிக்கேட்டேடும், மனசு முழுக்க நடுக்கத்தோடும் பள்ளிக்கூடம் திரும்பியபோது, அங்கே ஒரு பெரிய ஸ்டிரைக் தொடங்கியிருந்தது. காந்திவீதி சப்பாத்தி ஸ்டால் கைலாசம் மாஸ்டர் மகன் மனோகரனை, பள்ளி நூலகத்துக்கு முன்னால் செம்மண்ணும் சரளைக் கல்லும் பரவிய பாட்மின்டன் பந்து விளையாட்டு மைதானம் முழுக்கத் துரத்தித் துரத்தி அடித்திருக்கிறார், ராஜமன்னார்சாமி. வகுப்பு நடக்கும் போது அவனைக் குடிக்கத் தண்ணீர் கொண்டு வரச் சொன்னாராம். வலது கையில் இல்லாமல் இடது கையில் தம்ளரைப் பிடித்துச் சிந்தியபடி எடுத்து வந்ததாகக் குற்றச்சாட்டு. ஒரு சின்னப் பையனை வயிற்றில் மிதித்து, தலைமுடியைப் பற்றி இழுத்துச் சுவரில் மோதி, இரண்டு கன்னத்திலும் ஒரே நேரத்தில் பொறிபறக்க அறைந்து, புரட்டிப் புரட்டி அடித்து – சாடிஸ்ட் என்ற வார்த்தைக்கு ராஜமன்னார்சாமி வாத்தியார் என்று இன்றைக்கும் அர்த்தம் எனக்கு.

ஸ்கூல் ஆடிட்டோரியம் பக்கம் நிறுத்தியிருந்த மன்னார்சாமியின் சைக்கிளைச் சின்னாபின்னமாக்கினார்கள் மாணவர்கள். வேலிகாத்தான் செடி முள்ளால் டயர் பங்சர் ஆக்கப்பட்டது. இருப்பதிலேயே பெரிய முள்ளை குண்டுராஜுவுக்குக் காட்டியது நான்தான். ஊரில் ஒரு சுவர் விடாமல், “தேளுக்குக் கொடுக்கில் விஷம்’ என்று தொடங்கி அவரைத் திட்டும் கரிக்கட்டி வாசகங்கள் எழுதப்பட்டன. ஷாஜஹானின் அத்தா அசன் ராவுத்தர், வக்கீல் வெங்கடேசன், பாங்க் மேனேஜர் போன்ற ஊர்ப் பிரமுகர்களின் கோஷ்டி பள்ளிக்கூடத்துக்குப் போய் பயங்கரவாதி வாத்தியார்கள் பிள்ளைகளின் கல்வி, மனநல வளர்ச்சிக்குத் தடையாக இருப்பதைப் பற்றி ஹெட்மாஸ்டரிடம் விவாதிக்க, அடுத்த மாசம் ராஜமன்னார்சாமி அம்பேல்.

“”வீட்டில் கொள்ளையடிக்க வந்தவனைச் சுட்டுக் கொன்ற ஓய்வுபெற்ற போலீஸ் சூப்பிரிண்டென்ட்” என்று சமீபத்தில் பத்திரிகையில் ஒரு புகைப்படம் பார்த்தேன். ராஜமன்னார்சாமி ஜாடையில் இருந்த அவர் சுட்டுக் கொன்றது நிஜமாகவே கொள்ளைக்காரனையா என்று தெரியாது.
———————————————————————————————————————————————-

ஞாபகம் வருதே…: நெ. 40, ரெட்டைத் தெரு

Sunday December 9 2007 00:00 IST
காத்திருக்க வேண்டும். வீட்டுப் பெரியவர்கள் சினிமா நோட்டீசை ஆழமாக அலசி ஆராய்ந்து கொண்டிருப்பார்கள். ஐந்து நிமிடம் முன்னால் தான் ஜெயராம் தியேட்டர் விளம்பர வண்டிக்குப் பின்னால் ஓடி கெஞ்சிக் கேட்டு வாங்கியது. சினிமா பார்க்கப் போவதற்கான அனுமதி கிட்டுவது இந்த நோட்டீஸ் சமர்ப்பிக்கப்படுவதில்தான் ஆரம்பமாகும். சில சினிமாப் படங்களின் பெயர்களைப் பார்த்ததுமே, வீட்டு சென்சார் கமிட்டி அனுமதியளிக்க மறுத்துவிடும். “காதலிக்க நேரமில்லை’ நோட்டீசைக் கையிலேயே வாங்க மாட்டேன் என்று சொல்லிவிட்டாள் அம்மா. முருகன் மேல் பாட்டு, பாரதி பாட்டு என்று சீர்காழி கோவிந்தராஜன் பாடிய எத்தனையோ கானங்கள் திருச்சி வானொலி மூலம் வீட்டுக்குள் சர்வ சுதந்திரமாக நுழையும்போது, “காதலிக்க நேரமில்லை’ என்று குஷியாகப் பாடியபடி அவர் உள்ளே வரத் தடை விதிக்கப்பட்டது.

பொதுவாக பீம்சிங் எடுத்த “பா’ வரிசைப் படங்கள் உடனடியாக ஏற்றுக்கொள்ளப்படுவதோடு, தியேட்டருக்குப் போவதற்கான நாள் குறிப்பதும் தொடங்கும். ” நான் வீட்டுக்கு வெளியே இருப்பேன்’. “நிக்கற நேரம்; திடீர்னு வந்து தொலையும்’ என்று அம்மா, அத்தை, சித்தி வகையறாக்கள் சங்கேத பாஷையில் பேசித் தீர்மானிக்கும் நாள் வரை சினிமாவை கொட்டகைக்காரர்கள் மாற்றாமல் இருக்க வேண்டும். இது தவிர, பள்ளிக்கூடத்தில் பரீட்சையை ஒட்டி வரும் எல்லாப் படங்களும் பாரபட்சமில்லாமல் நிராகரிக்கப்படும். போக முடிவெடுத்த தினத்தில் பத்து நிமிடம் சேர்ந்தாற்போல் நாலு தூற்றல் போட்டாலும் மறு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்படுவதும் உண்டு. தியேட்டருக்குள் குடை பிடித்தபடி படம் பார்க்கவேண்டிய அவசியம் இல்லை என்று எடுத்துச் சொன்னாலும், பத்து வயசுப் பையன் சொல்வது யார் காதிலும் ஏறாது. இதுதவிர, வாரநாள் பொதுவாக சினிமா பார்க்க விலக்கு என்பதால் சனி அல்லது ஞாயிற்றுக் கிழமைகள் சிலாக்கியமானவை.

எல்லாம் சரியாக இருந்து ஒன்பது கிரகமும் எதிர்பார்த்தபடி சஞ்சரித்தால், சாயந்திரம் சரியாக ஐந்து மணிக்கு உப்புமா கிண்டி முடித்து (ராத்திரி வந்து சாப்பிட), சீரக வென்னீர், ரஸ்க், பொரி, கடலை உருண்டை இத்யாதிகளோடு தியேட்டருக்குப் படையெடுப்பு நிகழும். தியேட்டரில் முதல் இருபது வரிசை பின்னால் சாய வசதி இல்லாத மொட்டை பெஞ்ச். அதற்கு முப்பத்தைந்து காசு டிக்கெட். அடுத்து இருபது வரிசை சாய்மானம் உள்ள பெஞ்ச். அறுபத்தைந்து பைசா டிக்கெட். அப்புறம் இரண்டு வரிசை மர நாற்காலி. ஒரு ரூபாய்க்கு அங்கே தொடர்ந்து மூட்டைப்பூச்சி கடிக்கிற வசதி இருப்பதால் தூங்காமல் பரபரப்பாகப் படம் பார்க்கலாம். நடுத்தரக் குடும்பம் என்பதால், அறுபத்தைந்து பைசா பெஞ்ச் தான் தேர்ந்தெடுக்கப்படுவது வாடிக்கை.

நான் மன்றாட வேண்டிய அவசியம் இல்லாமல், பாட்டியம்மா தன் அதிகாரத்தைப் பயன்படுத்தி அதிரடியாகத் தேர்ந்தெடுக்கும் படங்களும் உண்டு. டி.எம்.எஸ். பாடி நடித்த “அருணகிரிநாதர்’, “பட்டினத்தார்’ மாதிரி. அருணகிரிநாதர் முதல் சீனில் டி.எம்.எஸ். “ஆட வேண்டும் மயிலே’ பாடும்போது பின்னாலேயே அவரைப் பிடித்து இழுத்துக் கொண்டு நிற்கும் ஒல்லியான நபரை அத்தை காட்டி, “”யார்னு தெரியுதா? கலைவாணர் பிள்ளையாக்கும்” என்றாள். பாட்டி அப்புறம் என்.எஸ்.கே. கோலப்பன் வரும் சீனில் எல்லாம் சிரித்து, வாய் சுளுக்குகிற சந்தத்தில் டி.எம்.எஸ். “முத்தைத் தருபத்தித்திரு’ என்று இடைவேளைக்குப் பிறகு திருப்புகழ் பாடும்போது தூங்கிவிட்டாள்.

அம்பலப்புழையிலிருந்து அத்தை வந்தபோது கே.ஆர். விஜயா அறிமுகமான “கற்பகம்’ ஓடிக்கொண்டிருந்தது. “அத்தைமடி மெத்தையடி’ என்று பாடியபடி பேபி ஷகீலாவைக் கொஞ்சிக்கொண்டிருந்த கே.ஆர். விஜயாவைப் பார்த்து “ஆனாலும் ரொம்பப் பூஞ்சையான தேகவாகு இந்தப் பொண்ணுக்கு. புதுசா நடிக்க வந்தா, சாப்பாடெல்லாம் சரியாப் போடறதில்லே போலேயிருக்கு’ என்று பாட்டி விசனப்பட்டாள். அதே படத்தில் “பக்கத்து வீட்டுப் பருவ மச்சான்’ என்று பாடியாடியபடி (“”யேது கண்றாவி. இப்படியும் பாட்டா”) சாவித்திரி வந்தபோது, “பூசினாற்போல’ சாவித்திரி இருப்பதற்கு, அவர் சினிமாவில் நீண்டநாளாக இருப்பதே காரணம் என்பது பாட்டியம்மாவின் வாதம். விஜயா பிற்காலத்தில் கனமான கதாபாத்திரமானதைப் பார்க்க அவளுக்கு வாய்க்கவில்லை. சாவித்திரி மெலிந்து நலிந்துபோன சோகமும் அவள் அறியாதது.

வீட்டுக் காவலோடு இப்படிச் சினிமா பார்க்கிற நிலை மாறியது அதற்கு இரண்டு மூன்று வருடம் கழித்துத்தான். சந்தைக் கடைக்குப் போகிறது போல், பெரிய பையன்களோடு சேர்ந்து போக அனுமதி கிடைத்தது. மொட்டை பெஞ்ச் டிக்கெட்தான் எல்லோருக்கும். எம்.ஜி.ஆர் படம் என்றால் தங்கப்பா மரக்கடை சண்முகத்தோடு போவது வாடிக்கை. “”புத்தன் ஏசு காந்தி பிறந்தது பூமியில் எதற்காக, தோழா?” என்று மழையில் நனைந்தபடி எம்.ஜி.ஆர் பாடிக்கொண்டு வரும்போது கூடவே பரிதாபமாக நடந்து வரும் கூட்டத்தில் ஒவ்வொரு துணை நடிகர் பெயரையும் (ஆட்டுக்குட்டி தவிர) அவனால் சொல்ல முடியும். “எங்க வீட்டுப் பிள்ளை’யில் “நான் ஆணையிட்டால்’ பாடுகிறபோது, எந்த அடியில், எந்தப் படியில் எம்.ஜி.ஆர் எப்படித் திரும்பி நின்று சவுக்கைச் சுழற்றுவார் என்பதைப் பதினாறாம் வாய்ப்பாடு போல ஒப்பிப்பான் அவன்.

சிவாஜியின் “கப்பலோட்டிய தமிழன்’ வந்தபோது பள்ளிக்கூடத்திலேயே காசு வசூலித்து ஒரு சனிக்கிழமை மதியம் கூட்டிப் போனார்கள். படத்தைப் பார்த்துவிட்டு “”நான் பார்த்த திரைப்படம்” என்று வீட்டுப்பாடமாகக் கட்டுரை எழுதி எடுத்துவரச் சொல்லி உத்தரவு போடப்பட்டதால், அந்த அற்புதமான படத்தை பாடப் புத்தகத்தைப் படிக்கிற ஜாக்கிரதையோடு பார்க்க வேண்டிப் போனது. வீட்டுப் பாடமாக எழுதி எடுத்துப் போனது என்னமோ “சம்பூர்ண ராமாயணம்’ பற்றிய கட்டுரைதான். ஏழெட்டு வருடம் முன்னால் இதேபடி உத்தரவு கிடைத்த யாரோ எழுதி, அடுத்தடுத்து வரும் இளைய தலைமுறைக்குப் புத்தம் புதிய காப்பியாகக் கைமாறிக் கொண்டிருந்தது அது.

அபூர்வமாக ஒரு இந்திப் படம்- ராஜ்கபூர் நடித்த “அரவுண்ட் த ஓர்ல்ட்’ ஊர்க் கொட்டகைக்கு வந்து சேர்ந்தது. “”உலகம் பூராக் காட்டறாங்க” என்று குண்டுராஜூ வீடுவீடாக சிபாரிசு செய்து கூட்டம் சேர்த்து படம் பார்க்கப் போனோம். இந்தியன் நியூஸ்ரீலில் புல்லாங்குழல் சோகமாக ஒலிக்க “பீகாரில் பஞ்சம்’, “ஒரிசாவில் வெள்ளம்’. அதுமுடிந்து, மெட்ரோ நியூஸ் ரீலில் சிங்கம் கர்ஜித்து, எலிசபெத் மகாராணி ஆஸ்திரேலியா பயணம். நாலு மாதம் முன்னால் பார்த்தபோதும் அவர் ஆஸ்திரேலியா போய்க் கொண்டிருந்தார். அப்புறம் ராஜ்கபூர் படம் ஆரம்பமானது. உலகத்தைச் சுற்றிப் பார்ப்பதைவிட கப்பலுக்குள் சுற்றிச் சுற்றி வந்து சாதனாவைப் பாட்டுப் பாடிக் காதலிப்பதில்தான் ராஜ்கபூர் ஆர்வமாக இருந்தார். ரொம்ப சிக்கனமாக உடுத்திய இரண்டு பெண்கள் ஹவாய் கடற்கரையில் காற்று வாங்கியபடி படுத்திருக்க, அந்த ரீலை மட்டும் திரும்பப் போடச் சொல்லி ஏகப்பட்ட கைகள் உயர்ந்தன.

படஇடைவேளையில் முதல் தடவையாக “டிரயிலர்’ என்ற ஐந்து நிமிட குட்டிச் சினிமா. இதுவும் இந்திப் படத்துக்காகத்தான். இண்டெர்வெல் நேரத்தில் “காது வளர்த்து, ஒட்ட வைக்க நுட வைத்தியசாலை’ கலர் ஸ்லைட் தான் வழக்கமாகப் போடப்படும். டிரயிலருக்கான கூச்சல் எழவே, காது வளர்த்து பாம்படம் போட வசதி செய்கிற விளம்பரம் போய், யாஹூ என்று டிரயிலரில் அவசரமாக ஷம்மி கபூர் தாவிக் குதித்தார்.

அதென்னமோ, அப்பாவுக்கும் சினிமாவுக்கும் ஏழாம் பொருத்தம். அவர் ஊருக்கு வரும்போதெல்லாம் பூலோக ரம்பை தான் ஓடிக்கொண்டிருக்கும். ஜெயராம் தியேட்டர்காரர்கள் சொந்தத்தில் தேசல் பிரிண்ட் வாங்கி அவ்வப்போது இரண்டு சினிமாவுக்கு நடுவே இட்டு நிரப்ப உபயோகமானது அது. “நாலு வருஷமா பூலோக ரம்பை ஓடறது நம்ம ஊர்லே தாண்டா. ஹரிதாஸ் கூட மதுரை சிந்தாமணியிலே ஒரு வருஷம்தான் ஓடினது” என்றார் அப்பா.
———————————————————————————————————————————————-

Sunday December 16 2007 00:00 IST

ஞாபகம் வருதே…: நெ.40, ரெட்டைத் தெரு

இரா. முருகன்
“ரோஜா மலரே ராஜகுமாரி, ஆசைக் கிளியே அழகிய ராணி’, நடு மத்தியானத்திலோ, ராத்திரியிலோ இந்தக் குரல் கேட்டால், “144 தடையுத்தரவு’ என்று தெரிந்துபோகும்.

என்னைப் பள்ளிக்கூடத்தில் போட்டபோது வெளியான பாட்டு இது என்று அம்மா சொல்லியிருக்கிறாள். ரோஜா மலர்களும், ராஜா மகள், ராஜகுமாரிகளும் இசைத்தட்டாகச் சுழன்ற காலம் முடிந்திருந்தாலும், தட்சிணா சவுண்ட் சர்வீஸில் புது ரிக்கார்ட் வாங்குவது வழக்கமில்லை. கடையின் பெயரைச் சரியாகச் சொன்னால் -தட்சிணா ஜூவல்லர்ஸ் அண்ட் சவுண்ட் சர்வீஸ். பெயரில் முதல் பாதியான நகைக்கடை தட்சிணா ஆச்சாரியார் வீட்டு வாசல் திண்ணையில் ஒரு சின்ன கண்ணாடி ஷெல்ப். கண்ணாத்தாள் கோயிலுக்கு நேர்த்திக் கடனாகச் செலுத்த வெள்ளியில் செய்த சிறு “கண்மலர்’கள், பெண்கள் கால்விரலில் மாட்டுகிற மிஞ்சி, வெள்ளிக் கொலுசு, சின்னப் பெண் குழந்தைகளுக்கு உடுப்பும் நகையுமான அரசிலை என்று அடுக்கியிருந்த அந்த நகைக்கடைக்கு எப்போதாவது யாராவது வியாபாரம் செய்ய வருவதுண்டு. நகை ஷெல்ப் பக்கத்தில் இரண்டு கூம்பு ஒலிபெருக்கி கவிழ்த்து வைத்திருக்கும். மேலே அடைசலாக வயர்ச் சுருளும் பிடுங்கிப் போட்ட மைக்கும் சுவருக்கு அடுத்து உட்கார்ந்திருக்கும். “ரோஜா மலரே ராஜகுமாரி’ மற்றும் சில பழமையான இசைத்தட்டுகள் திண்ணையைக் கடந்து தட்சிணா ஆச்சாரியார் வீட்டு ஹாலில் மேஜை மேல் தூசிக்கு நடுவே போலீஸ்காரர் வரவுக்காகக் காத்திருக்கும்.

ரொம்பவே அமைதியான ஊர் எங்களுடையது என்றாலும் பக்கத்தில் எங்கேயாவது திருவிழா நேரத்தில் சண்டை, வயல் தகராறு, கோஷ்டி மோதல் என்று அவ்வப்போது நிலைமை உருவாகும்போது, உடையார் ஊருணி போலீஸ் ஸ்டேஷனில் ஊர் அமைதியைப் பாதுகாக்க முடிவெடுக்கப்படும். அதன்படி, காரியரில் சணல் கயிற்றால் லாட்டிக் கம்பை வைத்துக் கட்டிய பழைய ஹெர்குலிஸ் சைக்கிளில் ஒரு போலீஸ்காரர் வேகுவேகுவென்று ரெட்டைத் தெரு தட்சிணா சவுண்ட் சர்வீஸ் வாசலில் வந்து இறங்குவார். ஊரில் வேறு எத்தனையோ சவுண்ட் சர்வீஸ் இருந்தாலும் இந்த விஷயமாக ஏதாவது சர்க்கார் உத்தரவுப்படி இது இருக்கக்கூடும். காந்தி வீதி மாயழகு டீ ஸ்டாலில் ஆச்சாரியாரின் அசிஸ்டெண்ட் ராசப்பன் வாங்கி வந்த டீயைக் குடித்தபடி கான்ஸ்டபிள் காத்திருக்க, சவுண்ட் சர்வீஸ் மைக்குக்கு உயிர் வந்து உய்ங்ங்ங்க் என்று நாலைந்து விசிலடிக்கும். பிறகு பி.பி. சீனிவாஸ் ராஜகுமாரிக்கு அழைப்பு விடுப்பார். போலீஸ்காரர் சைக்கிளில் ஏறித் திரும்பப் போகும்போது பாட்டு முடிந்துபோய், ராசப்பன் தொண்டையைக் கனைத்துக் கொண்டு படிக்க ஆரம்பித்திருப்பான் -“”இதனால் அறிவிப்பது என்னவென்றால் ஊரில் 144 தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஐந்து நபர்களுக்கு மேற்பட்டவர்கள் கூட்டமாக நிற்பதும், பேசுவதும், நடப்பதும் சட்டப்படி குற்றமாகும். மக்கள் அமைதி காக்கும்படி வேண்டப்படுகிறார்கள்”. பத்து நிமிடம் கழித்து, ஒரு குதிரை வண்டிக்குக் கூம்பு ஒலிபெருக்கி அலங்காரம் செய்து, உள்ளே உட்கார்ந்து ராசப்பன் சர்க்கார் அறிவிப்பையும், ரோஜா மலரே ராஜகுமாரியையும் ஒலிபரப்பியபடி நகர்வலம் வருவான்.

சமயத்தில், பக்கத்து கிராமத்தில் காதுகுத்து வைபவத்துக்குப் போய்விட்டு தட்சிணா ஆச்சாரியார் போலீஸ் ஸ்டேஷன் பக்கம் பஸ் இறங்கும்போதே வழிமறித்து 144 தடையுத்தரவு காகிதத்தைக் கொடுப்பதுண்டு. அப்போது அவர் வேகவேகமாக தேசத் தொண்டு செய்யும் முனைப்போடு தன் வீட்டுக்கடைக்கு நடந்து வருவார். திடீரென்று தன் இடது தோள் வலதை விட அரை அடி தாழ்ந்து போயிருப்பதாகத் தோன்ற சட்டென்று அதை உயர்த்தி விட்டுக் கொள்வார். நாலடி நடப்பதற்கு ஒருமுறை இப்படித் தோள் உயரும். “”ஆச்சாரியார் ஆர்மியிலே இருந்தா, தோள்லே பிடிச்ச துப்பாக்கி நிமிசத்துக்கு ரெண்டு பேரைத் தன்பாட்டிலே சுட்டுத் தள்ளியிருக்கும், அதுவும் நம்ம ஆளாயிருக்கும்’ என்பான் மாயழகு. பழைய பட்டாளக்காரன் அவன்.”

ரெட்டைத் தெரு தட்சிணா சவுண்ட் சர்வீஸ் பெரும்பாலும் சர்க்கார் காரியத்துக்காகப் பயன்படுத்தப்பட்டதென்றால், காந்தி வீதி, நேரு வீதி, சவுண்ட் சர்வீஸ்கள் ஏனைய தனியார், பொது நிகழ்ச்சிகளுக்காக ஒலிபெருக்கி சேவை வழங்கின. புதிய பொரட்டா ஸ்டால் திறப்பு, ஜவுளிக்கடை ஆரம்பம் போன்ற நிகழ்ச்சிகள் சர்வமத பிரார்த்தனை கீதங்களோடு தொடங்குவது வழக்கம். விடிகாலையிலேயே சீர்காழி, “வினாயகனே, வினை தீர்ப்பவனே’ என்று வேகவேகமாகப் பாடி முடிப்பார். பிறகு கனகம்பீரமாக “இறைவனிடம் கையேந்துங்கள்’ என்று நாகூர் ஹனீபா. இன்று தொடங்கப்பெறும் புதிய நிறுவனத்தின் பெருமைகள் குறித்து சவுண்ட் சர்வீஸ்காரரின் சிறப்புச் சொற்பொழிவு முடிந்து அவருடைய சொத்தான பத்துப் பாட்டும் திரும்பத் திரும்ப நாள் முழுக்க ஒலிபரப்பாகி ஊரை இரைச்சலிலும் மகிழ்ச்சியிலும் ஆழ்த்தும், நடுநடுவே கடை விளம்பரத்தோடு இலங்கை வானொலி ஸ்டைலில் நேரமும் சொல்லப்படும்.

சினிமாப் பாட்டுகளின் உலகம் தனியானது. சவுண்ட் சர்வீஸ் உலகமும்தான். செல்வம் சவுண்ட் சர்வீஸ்காரருக்கு “கட்டித் தங்கம் வெட்டியெடுத்து’ பாட்டில் அப்படி ஒரு ஈடுபாடு. ஒலிபெருக்க தேவை இல்லாதபோதுகூட சும்மா கட்டித் தங்கம் வெட்டிக் கொண்டிருப்பார். கணபதி சவுண்ட் சர்வீஸ் சதா “நான் பேச நினைப்பதெல்லாம் நீ பேச வேண்டும்’ என்று கோரிக்கை விடுத்துக் கொண்டிருக்கும். “மாபெரும் சபைகளில் நீ நடந்தால் உனக்கு மாலைகள் விழவேண்டும்’ என்று தனக்குப் பிடித்த இடத்தில் எம்.ஜி.ஆர் படப்பாடலைத் தொடங்குவதில் ராஜா சவுண்ட் சர்வீஸ்காரருக்கத் தனி உற்சாகம். சிவப்பு ஸ்பீக்கர் ஜீவா சவுண்ட் சர்வீசில் எம்.பி. சீனிவாசனின் அபூர்வமான “சின்னச் சின்ன மூக்குத்தி’ அடிக்கடி தட்டுப்படும். மதுமதி இந்திப் படத்தில் சலீல் சவுத்ரியின் “ஆஜாரே பரதேசி’. மற்றும் அவர் இசையமைத்த மலையாள செம்மீனில் “கடலினக்கரெ போனாரே’ போன்ற கானங்களை ஒலிபரப்பி எங்கள் ரசனையை மொழி கடக்க வைத்தது இந்த சவுண்ட் சர்வீஸ்தான்.

டேப் ராஜமாணிக்கம் குரல் விசேஷமானது. “”உன்னைப்போல் ஒருவர் உண்டோ உழைப்பாலே உயர்ந்தவரே” என்று அவர் பாடினால் அது காங்கிரஸ் கட்சி பொதுக்கூட்டத்துக்கான அழைப்பு. பெருந்தலைவர் காமராஜ் பற்றிய பாட்டு அது. ராஜமாணிக்கம் “கேளுங்கள் தரப்படும், தட்டுங்கள் திறக்கப்படும்’ என்று தொடங்கினால் மேரி அச்சகம் திறப்புவிழா அல்லது திரவியம் ஸ்டூடியோ துவக்கம்.

அரண்மனை வாசலில் அரசியல் பொதுக்கூட்டம் என்றால் ராஜமாணிக்கம் பாட்டோடு, ஊர்கிற காரில் இருந்து சரமாரியாக பிட் நோட்டீஸ்கள் ஜன்னல் வழியாக வீசப்படும். “திருக்குறள் முனுசாமி அவர்களின் திருக்குறள் நகைச்சுவை தேசியச் சொற்பொழிவு கேட்க வருக’ என்று ஒரு நோட்டீஸ் இன்னும் நினைவில் இருக்கிறது. “கல்லக்குடி கொண்ட கருணாநிதி வாழ்கவே’ பாட்டோடு விளம்பர வண்டி போனால், அனேகமாக தீப்பொறி ஆறுமுகம் கூட்டம் அல்லது மலையாளத் தமிழில் கேரளசுந்தரம் பிரசங்கம். கம்யூனிஸ்ட் மீட்டிங் என்றால் டி.எம்.எஸ். ஈஸ்வரி குரலில் “ஒன்று எங்கள் ஜாதியே’ அல்லது சீர்காழியின் “எல்லோரும் எல்லாமும் பெறவேண்டும்’ ஒலிக்கும். அறந்தை நாராயணனோ, மூத்த தோழர் எம்.ஆர். வெங்கட்ராமனோ மேடையில் பேசப்போவதில் பாதியை தெருக்கோடியில் நோட்டீஸ் கொடுப்பவர்களே பேசி முடித்துவிடுவார்கள்.

பாலு சவுண்ட் சர்வீஸ்காரர் எட்டு ரிக்கார்ட் “வாராய் என் தோழி வாராயோ’ வாங்கி வைத்திருந்தும் போதவில்லை என்று குறைப்படுவார். தை பிறந்தால் ஊர் முழுக்கக் கேட்டது எல்.ஆர். ஈஸ்வரி குரல்தான். தமிழ்நாட்டில் லட்சக்கணக்கான மணப்பெண்களுக்குப் பிரியமான கல்யாணத் தோழி அவர். தை மாதத்திற்கு முந்திய மார்கழிக்குக் குடிபெயர்ந்து இன்னும் அவர் எல்லா ஊரிலும் அதிகாலையில் கோயில் தோறும் மாரியம்மன் பாட்டாக வலம் வந்து கொண்டிருக்கிறார். எங்கள் ஊர் பாலு சவுண்ட் சர்வீஸ் பற்றி சாவகாசமாக விசாரித்துச் சொல்கிறேன்.

———————————————————————————————————————————————-

Sunday December 16 2007 00:00 IST

ஞாபகம் வருதே…: நெ.40, ரெட்டைத் தெரு

இரா. முருகன்
“ரோஜா மலரே ராஜகுமாரி, ஆசைக் கிளியே அழகிய ராணி’, நடு மத்தியானத்திலோ, ராத்திரியிலோ இந்தக் குரல் கேட்டால், “144 தடையுத்தரவு’ என்று தெரிந்துபோகும்.

என்னைப் பள்ளிக்கூடத்தில் போட்டபோது வெளியான பாட்டு இது என்று அம்மா சொல்லியிருக்கிறாள். ரோஜா மலர்களும், ராஜா மகள், ராஜகுமாரிகளும் இசைத்தட்டாகச் சுழன்ற காலம் முடிந்திருந்தாலும், தட்சிணா சவுண்ட் சர்வீஸில் புது ரிக்கார்ட் வாங்குவது வழக்கமில்லை. கடையின் பெயரைச் சரியாகச் சொன்னால் -தட்சிணா ஜூவல்லர்ஸ் அண்ட் சவுண்ட் சர்வீஸ். பெயரில் முதல் பாதியான நகைக்கடை தட்சிணா ஆச்சாரியார் வீட்டு வாசல் திண்ணையில் ஒரு சின்ன கண்ணாடி ஷெல்ப். கண்ணாத்தாள் கோயிலுக்கு நேர்த்திக் கடனாகச் செலுத்த வெள்ளியில் செய்த சிறு “கண்மலர்’கள், பெண்கள் கால்விரலில் மாட்டுகிற மிஞ்சி, வெள்ளிக் கொலுசு, சின்னப் பெண் குழந்தைகளுக்கு உடுப்பும் நகையுமான அரசிலை என்று அடுக்கியிருந்த அந்த நகைக்கடைக்கு எப்போதாவது யாராவது வியாபாரம் செய்ய வருவதுண்டு. நகை ஷெல்ப் பக்கத்தில் இரண்டு கூம்பு ஒலிபெருக்கி கவிழ்த்து வைத்திருக்கும். மேலே அடைசலாக வயர்ச் சுருளும் பிடுங்கிப் போட்ட மைக்கும் சுவருக்கு அடுத்து உட்கார்ந்திருக்கும். “ரோஜா மலரே ராஜகுமாரி’ மற்றும் சில பழமையான இசைத்தட்டுகள் திண்ணையைக் கடந்து தட்சிணா ஆச்சாரியார் வீட்டு ஹாலில் மேஜை மேல் தூசிக்கு நடுவே போலீஸ்காரர் வரவுக்காகக் காத்திருக்கும்.

ரொம்பவே அமைதியான ஊர் எங்களுடையது என்றாலும் பக்கத்தில் எங்கேயாவது திருவிழா நேரத்தில் சண்டை, வயல் தகராறு, கோஷ்டி மோதல் என்று அவ்வப்போது நிலைமை உருவாகும்போது, உடையார் ஊருணி போலீஸ் ஸ்டேஷனில் ஊர் அமைதியைப் பாதுகாக்க முடிவெடுக்கப்படும். அதன்படி, காரியரில் சணல் கயிற்றால் லாட்டிக் கம்பை வைத்துக் கட்டிய பழைய ஹெர்குலிஸ் சைக்கிளில் ஒரு போலீஸ்காரர் வேகுவேகுவென்று ரெட்டைத் தெரு தட்சிணா சவுண்ட் சர்வீஸ் வாசலில் வந்து இறங்குவார். ஊரில் வேறு எத்தனையோ சவுண்ட் சர்வீஸ் இருந்தாலும் இந்த விஷயமாக ஏதாவது சர்க்கார் உத்தரவுப்படி இது இருக்கக்கூடும். காந்தி வீதி மாயழகு டீ ஸ்டாலில் ஆச்சாரியாரின் அசிஸ்டெண்ட் ராசப்பன் வாங்கி வந்த டீயைக் குடித்தபடி கான்ஸ்டபிள் காத்திருக்க, சவுண்ட் சர்வீஸ் மைக்குக்கு உயிர் வந்து உய்ங்ங்ங்க் என்று நாலைந்து விசிலடிக்கும். பிறகு பி.பி. சீனிவாஸ் ராஜகுமாரிக்கு அழைப்பு விடுப்பார். போலீஸ்காரர் சைக்கிளில் ஏறித் திரும்பப் போகும்போது பாட்டு முடிந்துபோய், ராசப்பன் தொண்டையைக் கனைத்துக் கொண்டு படிக்க ஆரம்பித்திருப்பான் -“”இதனால் அறிவிப்பது என்னவென்றால் ஊரில் 144 தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஐந்து நபர்களுக்கு மேற்பட்டவர்கள் கூட்டமாக நிற்பதும், பேசுவதும், நடப்பதும் சட்டப்படி குற்றமாகும். மக்கள் அமைதி காக்கும்படி வேண்டப்படுகிறார்கள்”. பத்து நிமிடம் கழித்து, ஒரு குதிரை வண்டிக்குக் கூம்பு ஒலிபெருக்கி அலங்காரம் செய்து, உள்ளே உட்கார்ந்து ராசப்பன் சர்க்கார் அறிவிப்பையும், ரோஜா மலரே ராஜகுமாரியையும் ஒலிபரப்பியபடி நகர்வலம் வருவான்.

சமயத்தில், பக்கத்து கிராமத்தில் காதுகுத்து வைபவத்துக்குப் போய்விட்டு தட்சிணா ஆச்சாரியார் போலீஸ் ஸ்டேஷன் பக்கம் பஸ் இறங்கும்போதே வழிமறித்து 144 தடையுத்தரவு காகிதத்தைக் கொடுப்பதுண்டு. அப்போது அவர் வேகவேகமாக தேசத் தொண்டு செய்யும் முனைப்போடு தன் வீட்டுக்கடைக்கு நடந்து வருவார். திடீரென்று தன் இடது தோள் வலதை விட அரை அடி தாழ்ந்து போயிருப்பதாகத் தோன்ற சட்டென்று அதை உயர்த்தி விட்டுக் கொள்வார். நாலடி நடப்பதற்கு ஒருமுறை இப்படித் தோள் உயரும். “”ஆச்சாரியார் ஆர்மியிலே இருந்தா, தோள்லே பிடிச்ச துப்பாக்கி நிமிசத்துக்கு ரெண்டு பேரைத் தன்பாட்டிலே சுட்டுத் தள்ளியிருக்கும், அதுவும் நம்ம ஆளாயிருக்கும்’ என்பான் மாயழகு. பழைய பட்டாளக்காரன் அவன்.”

ரெட்டைத் தெரு தட்சிணா சவுண்ட் சர்வீஸ் பெரும்பாலும் சர்க்கார் காரியத்துக்காகப் பயன்படுத்தப்பட்டதென்றால், காந்தி வீதி, நேரு வீதி, சவுண்ட் சர்வீஸ்கள் ஏனைய தனியார், பொது நிகழ்ச்சிகளுக்காக ஒலிபெருக்கி சேவை வழங்கின. புதிய பொரட்டா ஸ்டால் திறப்பு, ஜவுளிக்கடை ஆரம்பம் போன்ற நிகழ்ச்சிகள் சர்வமத பிரார்த்தனை கீதங்களோடு தொடங்குவது வழக்கம். விடிகாலையிலேயே சீர்காழி, “வினாயகனே, வினை தீர்ப்பவனே’ என்று வேகவேகமாகப் பாடி முடிப்பார். பிறகு கனகம்பீரமாக “இறைவனிடம் கையேந்துங்கள்’ என்று நாகூர் ஹனீபா. இன்று தொடங்கப்பெறும் புதிய நிறுவனத்தின் பெருமைகள் குறித்து சவுண்ட் சர்வீஸ்காரரின் சிறப்புச் சொற்பொழிவு முடிந்து அவருடைய சொத்தான பத்துப் பாட்டும் திரும்பத் திரும்ப நாள் முழுக்க ஒலிபரப்பாகி ஊரை இரைச்சலிலும் மகிழ்ச்சியிலும் ஆழ்த்தும், நடுநடுவே கடை விளம்பரத்தோடு இலங்கை வானொலி ஸ்டைலில் நேரமும் சொல்லப்படும்.

சினிமாப் பாட்டுகளின் உலகம் தனியானது. சவுண்ட் சர்வீஸ் உலகமும்தான். செல்வம் சவுண்ட் சர்வீஸ்காரருக்கு “கட்டித் தங்கம் வெட்டியெடுத்து’ பாட்டில் அப்படி ஒரு ஈடுபாடு. ஒலிபெருக்க தேவை இல்லாதபோதுகூட சும்மா கட்டித் தங்கம் வெட்டிக் கொண்டிருப்பார். கணபதி சவுண்ட் சர்வீஸ் சதா “நான் பேச நினைப்பதெல்லாம் நீ பேச வேண்டும்’ என்று கோரிக்கை விடுத்துக் கொண்டிருக்கும். “மாபெரும் சபைகளில் நீ நடந்தால் உனக்கு மாலைகள் விழவேண்டும்’ என்று தனக்குப் பிடித்த இடத்தில் எம்.ஜி.ஆர் படப்பாடலைத் தொடங்குவதில் ராஜா சவுண்ட் சர்வீஸ்காரருக்கத் தனி உற்சாகம். சிவப்பு ஸ்பீக்கர் ஜீவா சவுண்ட் சர்வீசில் எம்.பி. சீனிவாசனின் அபூர்வமான “சின்னச் சின்ன மூக்குத்தி’ அடிக்கடி தட்டுப்படும். மதுமதி இந்திப் படத்தில் சலீல் சவுத்ரியின் “ஆஜாரே பரதேசி’. மற்றும் அவர் இசையமைத்த மலையாள செம்மீனில் “கடலினக்கரெ போனாரே’ போன்ற கானங்களை ஒலிபரப்பி எங்கள் ரசனையை மொழி கடக்க வைத்தது இந்த சவுண்ட் சர்வீஸ்தான்.

டேப் ராஜமாணிக்கம் குரல் விசேஷமானது. “”உன்னைப்போல் ஒருவர் உண்டோ உழைப்பாலே உயர்ந்தவரே” என்று அவர் பாடினால் அது காங்கிரஸ் கட்சி பொதுக்கூட்டத்துக்கான அழைப்பு. பெருந்தலைவர் காமராஜ் பற்றிய பாட்டு அது. ராஜமாணிக்கம் “கேளுங்கள் தரப்படும், தட்டுங்கள் திறக்கப்படும்’ என்று தொடங்கினால் மேரி அச்சகம் திறப்புவிழா அல்லது திரவியம் ஸ்டூடியோ துவக்கம்.

அரண்மனை வாசலில் அரசியல் பொதுக்கூட்டம் என்றால் ராஜமாணிக்கம் பாட்டோடு, ஊர்கிற காரில் இருந்து சரமாரியாக பிட் நோட்டீஸ்கள் ஜன்னல் வழியாக வீசப்படும். “திருக்குறள் முனுசாமி அவர்களின் திருக்குறள் நகைச்சுவை தேசியச் சொற்பொழிவு கேட்க வருக’ என்று ஒரு நோட்டீஸ் இன்னும் நினைவில் இருக்கிறது. “கல்லக்குடி கொண்ட கருணாநிதி வாழ்கவே’ பாட்டோடு விளம்பர வண்டி போனால், அனேகமாக தீப்பொறி ஆறுமுகம் கூட்டம் அல்லது மலையாளத் தமிழில் கேரளசுந்தரம் பிரசங்கம். கம்யூனிஸ்ட் மீட்டிங் என்றால் டி.எம்.எஸ். ஈஸ்வரி குரலில் “ஒன்று எங்கள் ஜாதியே’ அல்லது சீர்காழியின் “எல்லோரும் எல்லாமும் பெறவேண்டும்’ ஒலிக்கும். அறந்தை நாராயணனோ, மூத்த தோழர் எம்.ஆர். வெங்கட்ராமனோ மேடையில் பேசப்போவதில் பாதியை தெருக்கோடியில் நோட்டீஸ் கொடுப்பவர்களே பேசி முடித்துவிடுவார்கள்.

பாலு சவுண்ட் சர்வீஸ்காரர் எட்டு ரிக்கார்ட் “வாராய் என் தோழி வாராயோ’ வாங்கி வைத்திருந்தும் போதவில்லை என்று குறைப்படுவார். தை பிறந்தால் ஊர் முழுக்கக் கேட்டது எல்.ஆர். ஈஸ்வரி குரல்தான். தமிழ்நாட்டில் லட்சக்கணக்கான மணப்பெண்களுக்குப் பிரியமான கல்யாணத் தோழி அவர். தை மாதத்திற்கு முந்திய மார்கழிக்குக் குடிபெயர்ந்து இன்னும் அவர் எல்லா ஊரிலும் அதிகாலையில் கோயில் தோறும் மாரியம்மன் பாட்டாக வலம் வந்து கொண்டிருக்கிறார். எங்கள் ஊர் பாலு சவுண்ட் சர்வீஸ் பற்றி சாவகாசமாக விசாரித்துச் சொல்கிறேன்.

———————————————————————————————————————————————-

Sunday December 23 2007

ஞாபகம் வருதே…: நெ.40, ரெட்டை தெரு

நவராத்திரி முழுக்கப் பெண்கள் சம்பந்தப்பட்ட விஷயம் என்று யாராவது சொன்னால், அப்புறம் பேச என்னிடம் வேறே எதுவும் இல்லை என்று மூஞ்சியைத் திருப்பிக்கொள்ள வேண்டி வரும். மனதில் இன்னும் பத்து வயதில் இருக்கிற ஒரு சிறுவன் நவராத்திரியை ஆசையோடு திரும்பிப் பார்த்துக் கொண்டேயிருக்கிறான்.

நவராத்திரி கொலு வைப்பதற்கென்றே தச்சு ஆசாரியார் எந்தக் காலத்திலோ செய்து கொடுத்த மரப்படிகள் சமையலறைக்கு இடம் பெயர்ந்தது நான் பிறந்ததற்கு முன்னால் நிகழ்ந்த ஒன்று. மாவடு ஊறும் கல்சட்டி, தோசைக்கு அரைத்து வைத்த பாத்திரம், இலைக்கட்டு, தேங்காய், காபி பில்டர், எண்ணெய்த் தூக்கு. பீங்கான் ஜாடியில் உப்பு என்று நித்தியப்படிக்குக் கொலு வைத்து ஊறுகாய் வாடையோடு இருக்கும் அந்தப் படிகள். நவராத்திரி கொலுவுக்கு அது தோதுப்படாது என்று பாட்டியம்மா தவிர மற்ற எல்லாராலும் ஏற்றுக்கொள்ளப்பட, ராச் சாப்பாட்டுக்கு அப்புறம் கொலுப்படி அமைப்பதற்கான அவசர நடவடிக்கை தொடங்கும். இது நவராத்திரி தொடங்க சரியாக இருபத்து நாலு மணி நேரத்துக்கு முன்னால் வாடிக்கையாக நடப்பது.

வெங்கலப் பாத்திரம் அடைத்த சதுரமும் செவ்வகமுமான கள்ளிக்கோட்டைப் பெட்டிகள், மாடியில் அடுக்கிய தேக்குப் பலகை, வாசல் பெஞ்ச், தாத்தா காலத்து மேஜை என்று வீட்டில் அங்கங்கே இருக்கிறவை இடம்பெயர்ந்து கூடத்துக்கு வந்து, மேலே பளீரென்று சலவை செய்த எட்டு முழ வேட்டிகளைத் தழையத்தழைய விரித்ததும் அழகான ஏழு கொலுப்படிகள் ஆகிற மாயம் சொல்லிப் புரியவைக்கிற சமாசாரம் இல்லை, இது நடந்தேற பதினோரு மணி ஆகிவிடும். அப்படியும் கண்ணில் தூக்கத்தின் தடமே இல்லாமல் அடுத்த வேலைக்கு ஆயத்தமாவது வழக்கம்.

நாலைந்து பேர் அவசர அவசரமாகக் கொலுப் பெட்டிகளில் இருந்து பொம்மைகளை வெளியே எடுத்துப் பரப்பி வைத்தபின் வீட்டுக் கூடத்துக்குக் கல்யாண மண்டபம்போல் ஒரு தனிக் களை வந்துவிடும். ஒவ்வொரு பொம்மையாக எடுத்து கொலுப்படியில் அடுக்குவது சுலபமான வேலை இல்லை. ராமர் பட்டாபிஷேக பொம்மை செட் ஓரமாக ஒரு போலீஸ்காரர் பாரா கொடுத்தபடி நிற்க, அனுமார் மிஸ்ஸிங். அவர், தண்டிக்கு உப்புக் காய்ச்ச விரைவாக நடக்கிற மகாத்மா காந்தி பக்கத்தில் பவ்யமாக உட்கார்ந்திருப்பார். கல்யாண செட்டிலிருந்து கோபித்துக் கொண்டு வெளியேறிய மாதிரி தவில்காரர் பாம்பு பிடாரன் முன்னால் கொட்டி முழக்கிக் கொண்டிருப்பார். பிடாரனுக்கு முன்னால் படம் விரித்து ஆட வேண்டிய பாம்பு, தொப்பியும் குடையுமாக ஒய்யாரமாக நடக்கிற பளிங்கு வெள்ளைக்காரனின் முழங்காலை ஒட்டி சாதுவாகக் கவிழ்ந்து கிடக்கும். பொம்மை மளிகைக் கடையில் வாடிக்கையாளர்கள் காத்திருக்க, பொறி பறக்கத் துப்பாக்கியால் சுட்டுத் தள்ளும் நாலு பட்டாளச் சிப்பாய்களுக்கு நடுவிலே கொஞ்சம்கூட அலட்டிக் கொள்ளாமல் தொப்பையைத் தள்ளிக்கொண்டு மளிகைக் கடைக்காரர் ஓய்வாக அமர்ந்திருப்பார். தான் எந்த செட் என்ற தெரியாமல் கிரீடம் வைத்த ராஜா ஒருத்தர் அரக்கப்பரக்க விழித்தபடி தூணோரம் நின்றிருப்பார்.

யார் யார், எது எது எந்தெந்தக் குழுவைச் சேர்ந்தது என்று கடகடவென்று பொறுக்கி எடுத்துச் சேர்த்து வைத்துவிட்டால் அடுத்த வேலைக்குக் கிளம்பி விடலாம். வீட்டுப் பெரியவர்கள் சரியான குழுக்களாகப் பிரித்து வைக்கப்பட்ட பொம்மைகளை அததற்கான கொலுப்படிகளில் அமர்த்திக் கொண்டிருக்க, கொலுப் பெட்டிக்குள்ளே விரித்திருந்த பழைய செய்தித்தாள், பொம்மை சுற்றி வைத்த பத்திரிகைக் காகிதம் ஒன்றுவிடாமல் பத்திரமாக எடுத்துப் பிரித்து அடுக்க வேண்டும். கொலு முடிந்து பொம்மைகளை மறுபடி சுற்றி அடுத்த வருடம் வரை பாதுகாப்பாக வைக்க அவை தேவைப்படும். சராசரி ஐந்திலிருந்து பத்து வருடம் முந்தைய சற்றே மக்கிப்போன காகித உலகம் அது. அமிழ அமிழ அலுப்புத் தட்டாத அந்தப் பழைய பத்திரிகை வாசிக்கிற அனுபவத்துக்காகவே நவராத்திரியை எதிர்பார்ப்பது வழக்கமாயிருந்தது நன்றாக நினைவிருக்கிறது. நான் பிறந்த வருடத்து தினப் பத்திரிகை அது. ஐப்பானில் முதல்முதலாக டெலிவிஷன் அறிமுகமாகி, அதில் விளம்பரமும் ஒளிபரப்பான செய்தி. அதற்குப் பத்து வருடம் கழித்து வெளியான இன்னொரு பத்திரிகை. காந்தி பொம்மை சுற்றி வைத்தது. அமெரிக்கக் கறுப்பர் இனத்தின் குரலாக மராட்டின் லூதர் கிங் “எனக்கு ஒரு கனவு உண்டு’ என்று திரும்பத் திரும்ப முழங்கிய கவித்துவமான பிரசங்கம் அச்சடித்தது. போன வருடப் பத்திரிகையில் “சிவாஜி நடிக்கும் ஈஸ்ட்மென் கலர் சித்திரம் பத்மினி பிக்சர்ஸ் தயாரிப்பில் கர்ணன்’ படப்பிடிப்பு விவரம். கிருஷ்ணன் என்.டி.ராமாராவும் அர்ஜுனன் முத்துராமனும் ரதத்தில் நிற்கிற ஸ்டில். படம் ரசிகர்களால் பெருவாரியாக வரவேற்கப்படும் என்று பி.ஆர். பந்துலு கூறியதாகச் செய்தி. அவர் நம்பிக்கை பாவம் பொய்த்துப் போனது. ரீ-ரிலீஸ் ஆக பின்னால் எப்போது எங்கே வெளியிட்டாலும் ஹவுஸ்புல் ஆக ஓடிய “கர்ணன்’ முதலில் வெளியானபோது தோல்வியைத் தழுவியது மறக்க முடியாததுதான்.

இதுவும் நினைவிருக்கிறது. தினமணி சுடர் சினிமா பகுதியில் நல்ல படத்துக்கு இலக்கணமாகப் புகழ்ந்திருந்த திருமலை -மகாலிங்கத்தின் “ஆலயம்’ பட விமர்சனம். ஒவ்வொரு நவராத்திரிக்கும் படிக்கக் கிடைத்து மனப்பாடமானது அது. தசாவதார செட் சுற்றி வைத்திருந்த இந்த விமர்சனத்தை அப்போது வருடம் ஒரு முறை பார்க்கக் கிடைத்தாலும், “ஆலயம்’ படத்தை இதுவரை பார்க்கக் கொடுத்து வைக்கவில்லை.

கொஞ்சம் சிறிய பொம்மைகளைச் சுற்றி வைத்த வாரப் பத்திரிகைப் பக்கங்கள் இன்னொரு சுவாரசியம். எப்போதோ, எந்தப் பத்திரிகையிலோ வெளியான ஏதோ சிறுகதை அல்லது தொடர்கதையின் துண்டு துணுக்கான அதெல்லாம் ஒன்றுவிடாமல் நினைவிருக்கிறது. “தில்லானா மோகனாம்பாள்’ தொடர்கதையில் ஒத்துக்கார தருமன் மூர்மார்க்கெட்டில் கறுப்புக் கண்ணாடி வாங்கிப் போட்டுக்கொண்டு நடக்க ஆரம்பிப்பதற்குள் பக்கம் முடிந்திருக்கும். “அலுவலகத்திலிருந்து களைத்துத் திரும்பி வந்த சரளா, வீட்டுக்குள் முட்டமுட்டக் குடித்துவிட்டுப் படுத்திருந்த கணவனைப் பார்த்ததும் இனம் புரியாத’ என்று அரைகுறையாக முடிந்த சிறுகதையில் சரளாவுக்காக வருடாவருடம் அனுதாபப்பட நேர்ந்தது. வேறு ஏதோ மொழியிலிருந்து மொழிபெயர்ப்பாகி, பரபரப்பான தொடர்கதையாகப் படிக்கப்பட்ட “ரோஷன் எங்கே’ கதையில் பல்பீர் தில்லி சாந்தினி செüக்கில் நடந்துபோகும்போது கதாநாயகியைப் பார்த்துத் திகைத்துப் போய் பின் தொடர்வது மனதில் இன்னும் அப்படியே நிற்கிறது.

கலந்து கட்டியாக இப்படிப் படித்து ரசிப்பது பிற்காலத்தில் பின் நவீனத்துவ எழுத்தை ரசிக்கப் பயிற்சி கொடுத்தாலும், “பரீட்சை நேரத்துலே தூங்கு. இப்போ விடியவிடிய படி. உருப்பட்ட மாதிரிதான்.’ என்று பெரிசுகள் படுக்கைக்கு விரட்டுகிற அட்டூழியம் பொறுத்துக் கொள்ள வேண்டிய நவராத்திரி நேரக் கொடுமைகளில் ஒன்றாகும்.

நவராத்திரிக் கொலு பொம்மையை எடுத்துப் படியில் வைப்பதோடு முடிவதில்லை. கீழ்ப்படியை ஒட்டி நிறைய மணலைக் கொட்டி, பூங்கா உருவாக்க வேண்டியதும் என் வேலைதான். பூங்கா அட்டை பெஞ்சுகளில் உட்கார சின்னதாக பிளாஸ்டிக் கடைகடையாக ஏறி வாங்கி வந்தால், நாலு நாளில் உடைந்து போய்விடும். சைக்கிளில் போகிற தபால்காரர், நர்ஸ், குட்டி யானை, வெள்லைக்காரி, தவழும் குழந்தை இவர்களெல்லாம் அப்புறம் பூங்காவுக்கு இடம்பெயர்வார்கள். பூங்கா மணலில் தண்ணீர் தெளித்து தினசரி வெட்டினரி ஆஸ்பத்திரி பக்கமிருந்து புல் பறித்து வந்து நட்டு வைக்க வேண்டும். பூங்கா நடுவே பித்தளைத் தாம்பாளத்தை வைத்துச் சுற்றிச் சிமெண்டால் கட்டிய சுற்றுச் சுவரோடு லாஜிக்கே இல்லாமல் ஒரு குளம் அமைத்துத் தண்ணீர் நிரப்பும் வேலையும் கூடவே நினைவு வருகிறது. நளதமயந்தி செட்டிலிருந்து பிரித்த தமயந்திதான் எப்போதும் அந்தக் குளக்கரையில் நிற்பாள் என்பதும் மறக்கவில்லை. எதுதான் மறந்தது இப்போது புதிதாக நினைவில் வர? ஆமா, “ரோஷன் எங்கே’ துப்பறியும் தொடர்கதையில் பல்பீர் வில்லனா கதாநாயகனா?
———————————————————————————————————————————————-

ஞாபகம் வருதே…: நெ.40, ரெட்டைத் தெரு

இரா. முருகன்

Sunday December 30 2007

நவராத்திரி முடிந்து விஜயதசமி காலையில் பூஜைக்கு வைத்த புத்தகங்களை எடுத்துக் கட்டாயத்தின் பேரில் படித்துக் கொண்டிருக்கும்போது ரெட்டைத் தெருவில் போகிற ஒவ்வொரு லாரியும் கவனத்தை ஈர்க்கும். ஊருக்குள் போவதால் மெதுவாகப் போகிற அவற்றில் ஒன்று மட்டும் ஊர்ந்தபடி வரும். அது தென்பட்ட நாலு நிமிடத்துக்கும் குறைவான நேரத்தில், தெருவில் இருக்கப்பட்ட ஏழிலிருந்து, பதினைந்து வயதுக்குட்பட்ட பையன்கள் கூட்டம் ரங்கன் வாத்தியார் வீட்டு வாசலில் கூடிவிடும்.

ரங்கன் வாத்தியாரைப் பள்ளிக்கூடத்தில் பார்த்ததைவிட, தீபாவளிக்காக வீட்டுத் திண்ணையை ஒட்டிப் பட்டாசுக்கடை வைத்து நாலு திசையிலும் சிப்பந்திகளை ஏவிக்கொண்டு மும்முரமாக வியாபாரம் செய்துவந்த கோலத்தில் தான் நினைவிருக்கிறது. தீபாவளிவரை தினசரி விளையாடக்கூடப் போவதில்லை. சாயந்திரம் தொடங்கி ராத்திரி ஒன்பது வரை வாத்தியாருடைய தீபாவளிப் பட்டாசுக் கடையின் கவுரவ உத்தியோகஸ்தர்கள் நாங்கள்தான். ஒரு பைசா ஊதியம் கூட எதிர்பார்க்காமல், பட்டாசுக் குவியலுக்குப் பக்கத்தில் நின்று, எண்ணிக் கொடுத்து, எடுத்துக் கொடுத்து, பொட்டலம் கட்டித் தருகிற வேலையில் இருக்கும் சந்தோஷத்துக்காக ரங்கவிலாஸ் பட்டாசுக்கடை வாலண்டியர் தேர்வுக்கு எக்கச்சக்கமான போட்டி. வீட்டில் முணுமுணுப்பு எழுந்தால் கண்டுக்கவே கூடாது.

ஒவ்வொரு வருடமும் கடை தொடங்குவதற்கு முன்னால் சில பிரத்தியேகச் சடங்குகள் நிறைவேற்றப்படும். வழக்கமான பிள்ளையார் படம், ஊதுவத்தி, பூ, பழுப்புச் சர்க்கரை நைவேத்தியத்தோடு ஏட்டையா ஆராதனை என்ற ஒரு நிகழ்ச்சியும் உண்டு. நாலு சிவப்பு வாளியில் உடையார் ஊருணிக் கரையிலிருந்து வாரி வந்த மணல், ஊருணித் தண்ணீர் இதெல்லாம் கடை வாசலில், திண்ணைக்கு இரண்டு பக்கத்திலும் போட்ட பெஞ்சுகளில் பிரதிஷ்டை செய்யப்படும். சுற்றி அவசரமாக ஒரு பந்தல் உயரும். வாத்தியார் வீட்டுக் கூடத்துத் தூணில் சுளகு, முறம், கோட் ஸ்டாண்ட் கோஷ்டிக்கு இடையே கூம்பு வடிவ தீயணைப்புச் சாதனம் ஒன்று மாட்டி இருக்கும். பாஷை புரியாத நாட்டில் தன்னந்தனியாக மாட்டிக் கொண்ட அந்நியன் போல பரிதாபமாக நிற்கிற அது திண்ணைக்கு இஷ்ட மித்ர பந்துக்களான பட்டாசு, மணல் வகையறாக்களோடு இடம் பெயர்ந்து மூங்கில் கொட்டகைத் தூணைக் கம்பீரமாக அலங்கரிக்கும்.

இந்த ஏற்பாடெல்லாம் முடிந்த பிறகு, போலீஸ் ஸ்டேஷனிலிருந்து ஏட்டையா சைக்கிளில் வந்திறங்குவார். எங்களைப் போல அவரும் அரை டிராயர்தான் போட்டிருப்பார். “”என்ன, பட்டாசுக் கடை போடறாப்பிலேயா சார்?” என்று விசாரித்தபடி பெஞ்சில் தண்ணீர் வாளிக்குப் பக்கமாக தொடுக்கினாற்போல் உட்கார்வார். முண்டாசா தொப்பியா என்று குழம்ப வைக்கும் தன் தலைக் கவசத்தைக் கழற்றி மடியில் வைப்பார். டிரவுசர் பாக்கெட்டில் இருந்து பொடிக்கறையோடு கைக்குட்டையை எடுத்து வழுக்கைத் தலை நடுவில் வியர்வையை அழுத்தத் துடைப்பார். பட்டாசுக் கடைதான் போடறோம். மூக்குப் பொடி விக்கறதுக்கா இப்படி வாளியில் மணல், ஊருணித் தண்ணி, தீயணைப்பு சாதனம் எல்லாம்?

மணலை முகர்ந்து பார்த்து, உள்ளங்கையில் எடுத்த தண்ணீர் உத்தேசமாக நாலடி முன்னால் தெளித்து, தீயணைப்பு சாதனம் மேல் கிறுக்கிய சர்டிபிக்கேட்டை சிரத்தையாகப் படித்தபடி அவர் காத்திருக்க, ரங்கன் வாத்தியார் ஒரு பழைய கவரை அவர் கையில் தருவார். அதைக் காக்கிச் சட்டைப் பையில் திணித்தபடி சைக்கிளில் ஏறுகிறதோடு ஏட்டையா ஆராதனை முடியும். இந்தக் கவர் தருகிற சடங்கை நாலுநாள் முன்னால் நவராத்திரி நேரத்தில் கொலுவுக்குக் கூப்பிட்டுப் பாட்டுப் பாடச் சொல்லி தெருப் பெண்களுக்கு சுண்டல், ரவிக்கைத் துணி தருகிற நேரத்திலேயே வாத்தியார் முடித்திருக்கலாம். ஏட்டையாவுக்குப் பாடத் தெரியுமா என்று தெரியவில்லை.

கொலுப்படி மாதிரியே ரங்கன் வாத்தியார் வீட்டுத் திண்ணையில் நாலைந்து மரப்படி வைத்து சாம்பிள் வெடிக்கட்டும் மத்தாப்பும் அங்கே நிறுத்தி வைக்கப்படும். மேல் வரிசையில் வெள்ளி நிறத்தில் மின்னும் கம்பி மத்தாப்பு. அடுத்து அங்கங்கே வெள்ளிப் பொறுக்கு தட்டிய ஸ்பெஷல் மத்தாப்பு. முதலாவதைக் கொளுத்தினால் குளுமையாக இருட்டுக்கு அழகைக் கொடுத்தபடி பூச்சிதறும். மற்றது பல வர்ணத்தில் ஆடம்பரமாக சினிமா வில்லி போல் சிரிக்கும். மத்தாப்பு அடைத்த அட்டை டப்பா மேலே ஒட்டிய படத்தில் சினிமா நடிகை சாயலில் ஒரு பெண் மத்தாப்பைக் கொளுத்திப் பிடித்துக் கொண்டிருப்பாள். போன வாரம் ஜெயராம் தியேட்டரில் பார்த்த “வல்லவன் ஒருவன்’ படத்தில், “பளிங்கினால் ஒரு மாளிகை’ என்று ஜெயசங்கரை மயக்க நடனமாடும் விஜயலலிதா போல் மத்தாப்புப் பெண் வெகு சிக்கனமாக உடுத்தியிருப்பாள்.

வரிவரியாகக் கோடு போட்டு நாலாக மடித்த மண்புழு போல் சாட்டை, அரை இஞ்ச் விட்டத்தில் ஆரம்பித்து தோசைக்கல் சைஸ் வரை வட்டவட்டமாகச் சுருண்ட தரைச் சக்கரம், எங்கே எப்படி வைத்துக் கொளுத்தினாலும் உய்ங்ங்ங்ங் என்று வீராப்பாகக் கிளம்பி மிகச் சரியாக ரேடியோ ரிப்பேர்காரர் வீட்டுத் திண்ணையில் போய் விழும் ஏரோப்ளேன் (ரேடியோக்காரர் அப்புறம் வால்வ் ரிப்பேரான ரேடியோ போல் அரைமணி நேரம் கொரகொரப்பார்), காலி பாட்டிலில் நிறுத்தி தீ வைத்தால் சில சமயம் ஆகாயத்துக்கு எழும்பி மற்றபடி தரையோடு ஊர்ந்து சிவன் கோயிலுக்குள் பிரதோஷ தீபாரதனை பார்க்க நுழையும் ராக்கெட், கொளுத்தினால் குப்பென்ற வாடையோடு கருப்பாக நீளும் பாம்பு மாத்திரை என்று மரப்படிகள் நிரம்பி இருக்கும்.

கீழ் இரண்டு படியிலும் அனைவருக்கும் பிரியமான பட்டாசுகள், ஒற்றைவெடிகளை மாலையாகக் கோர்த்த சரங்கள் கொண்ட பெரிய பாக்கெட்டுகளில் தில்லி செங்கோட்டை படம் தவறாமல் இடம் பெறும். காதைக் கிட்டத்தட்ட செவிடாக்கும் ஆட்டம் பாம் அட்டைப் பெட்டியில் தொங்கு மீசையோடு பட்டாளக்காரர்கள் போர்முனையில் இலக்கின்றி சுட்டுக் கொண்டிருப்பார்கள். கடைத் தூணில் பொம்மைத் துப்பாக்கிகள் சணலில் தொங்கும். அவற்றில் வைத்து வெடிக்க கேப் அம்பாரமாகப் பக்கத்தில் அடுக்கியிருக்கும். கைக்கு அடக்கமான குருவி வெடி ஐந்து ஐந்தாகச் சுற்றிய கண்ணாடிப் பேப்பர் மேல் இந்தி நடிகர் ஷம்மிகபூர் அல்லது ஒரு குரங்கு அல்லது இரண்டுமே அச்சடித்திருக்கும். குரங்கு கன கம்பீரமாக இருக்கும்.

வாடிக்கையாளர்களை வரவேற்பது, தேர்ந்த விற்பனையாளர்களாக கடைச் சரக்குகளின் மகத்துவத்தை விளக்குவது, பட்டாசு எடுத்துத் தருவது, குண்டுராஜூ போட்ட பில்லை திரும்ப சரிபார்ப்பது (நிச்சயம் நாலு தப்பாவது இருக்கும்), இப்படி ரங்கன் வாத்தியார் செய்ய வேண்டியதில் பாதியை நாங்களே கவனித்துக் கொள்ள, அவர் கடமையே கண்ணாகக் கல்லாவில் காசு வாங்கிப் போட்டுக் கொண்டு பெரிய தொகை பில்லை மட்டும் இன்னொரு தடவை சரிபார்ப்பார். ரங்கன் வாத்தியார் வீட்டம்மா அவ்வப்போது சீடை, முறுக்கு, நவராத்திரிக்கு வாங்கி மீந்த கடலைப் பொரி, நீர்க்கக் கரைத்த ஒண்டிப்புலி பிராண்ட் நன்னாரி சர்பத் என்று விநியோகித்து வியாபாரத்தை விருத்தி செய்யும் உதவியாளர்களை ஊக்குவிப்பார்.

“பிரபல ஹாலிவுட் அழகி மர்லின் மன்றோ லாஸ் ஏஞ்சல்ஸ் ஓட்டலில் தூக்க மாத்திரை சாப்பிட்டுத் தற்கொலை’ செய்தி வெளியான பழைய தினசரியைக் கத்தரித்துச் செய்த காகிதப் பையில் பட்டாசுகளை வைத்து வாடிக்கையாளர்களுக்குத் தரும்போது இனம்புரியாத சந்தோஷம் ஏற்படும். அதே செய்திப் பக்கத்தில் தென்னாப்பிரிக்காவில் யாரோ நெல்சன் மண்டேலாவை அரசாங்கம் கைது செய்து சிறையில் அடைத்த செய்தியும் பார்த்த நினைவிருக்கிறது. இந்த நாற்பத்தைந்து வருடத்தில் மர்லின் மன்றோ யாரோவாக மாறி, நெல்சன் மண்டேலா சிறைக்கு வெளியிலும் வெளிச்சத்துக்கு வந்து பிரபலமாவார் என்று அப்போது தெரியாது. நடக்கப் போவது தெரிந்தால் வாழ்க்கையில் என்ன உற்சாகம் பாக்கி இருக்கும்?

———————————————————————————————————————————————-

Sunday January 6 2008

ஞாபகம் வருதே…: நெ. 40, ரெட்டைத் தெரு

பள்ளிக்கூடம் விட்ட சாயந்திரங்களில் ரங்கவிலாஸ் பட்டாசுக் கடையோடு தீபாவளிக் காலம் ஆரம்பித்தாலும், அது சூடு பிடிக்கும்போது ஸ்கூல் என்ற சமாசாரம் சுத்தமாக மறக்கப்படும். தீபாவளிக்கு இரண்டு நாள் இருக்கும்போது, வாரப் பத்திரிகைகள் சவலைக் குழந்தைபோல் சோனியாக இருந்த நிலைமை திடீரென்று மாறி, பீமபுஷ்டி அல்வா சாப்பிட்ட கொழுகொழு சைஸþக்கு வளரும். அதில் சிலது அச்சு மை வாடையோடு செண்ட் வாடையும் கலந்து அசத்தலாகப் பூசி வரும். நல்லையா சைக்கிள் பின்னால் கட்டிய மரப்பெட்டியிலிருந்து அவை வீட்டுக்குள் வந்து விழும்போது பட்டாசு, பட்சண நெடியோடு, கனமான மரிக்கொழுந்து செண்ட் வாடையும் கும்மென்று தெரு முழுக்கச் சூழப் பண்டிகைச் சூழ்நிலை பரிபூரணமாகும்.

சில பத்திரிகைகள் வழுவழு காகிதத்தில் நானூறு பக்கத்துக்கு வெளியிடும் தீபாவளி மலர்களை வாங்குகிற குடும்பத்தில் அடுத்த ஜன்மத்திலாவது பிறக்க வேண்டும் என்று தீபாவளிக்கு முந்தைய நாள் சாயந்திரம் தோன்றும். மலர் கேட்டவர்களுக்குக் கையெழுத்து வாங்கிக்கொண்டு நல்லையா வக்கீல் வீடுகள் பலதிலும் மரியாதையோடு கையில் கொடுத்துவிட்டு வருகிற நேரம் அது. “” பதினைஞ்சு ரூபாய் கொடுத்து தீபாவளி மலர் வாங்க காசு கொட்டிக் கிடக்கலே, இந்த வருஷம் உனக்கு பேண்ட் தைச்சு எக்கச்சக்க செலவு” என்று வீட்டு பட்ஜெட்டில் பாதி எனக்கு உடுப்பு வாங்கிய வகையில் செலவானதாக நாசுக்காக வலியுறுத்தப்படும். லைப்ரரியில் அந்த தீபாவளி மலர்கள் புதுக்கருக்கு எல்லாம் அழிந்து, ஓரம் மடங்கி, அட்டையில் அப்பிய அழுக்கோடு என் கைக்கு வந்து சேரும்போது கிட்டத்தட்ட அடுத்த தீபாவளி வந்துவிடும். எல்லா மலரிலும் பம்ப்செட் மோட்டார் கம்பெனி, லுங்கி விளம்பரம், சவுந்தரா கைலாசம் கவிதை, ஆர்ட் பேப்பரில் ஆச்சாரியார்கள், சுத்தியலை மைசூர்ப்பாகால் உடைக்கிற ஜோக், பிரபல எழுத்தாளர்கள் அவசரத்தில் பிடித்த கொழுக்கட்டைக் கதைகள் என்று ஒரு வருட மலரை மற்ற வருடத்துப் புத்தகத்திலிருந்து வேறுபடுத்திக் காட்ட ஒன்றும் இருக்காது. இன்னும் அப்படித்தான்.

தீபாவளி மருந்து வாடை சுகமாக மூக்கில் ஏற ஆரம்பிக்கும் நொடியும் பத்திரிகை சென்ட் நெடியோடுதான் எப்போதும் சேர்ந்து வரும். திப்பிலி, சதகுப்பை, அதிமதுரம், வசம்பு போன்ற வினோதமான பொருள்களை தீபாவளி மருந்து கிளறும்போது சேர்க்க வாங்கிவர ஆவன்னா றூனா கடைக்கு ஓடவேண்டும். எண்ணெய்த் தூக்கோடு நிற்கிற கோர்ட் சிப்பந்திக்கு இருநூறு மில்லி காரல், கசப்பு இல்லாத நல்லெண்ணெயும், வாத்தியார் வீட்டம்மாவுக்குக் கடலைமாவும் வெல்லமும் வழங்கிக் கொண்டிருப்பார் ஆவன்னா றூனா… அல்லது, அடகுக்கடை பெரி.வயி. வகையறா வளவுக்கு அரைக்கிலோ முந்திரி, கால் கிலோ பாதாம், உலர்ந்த திராட்சை, ஊத்துக்குளி வெண்ணெய் என்று ராஜபோஜனத்துக்கான ஐட்டங்களாகப் பெரிய லிஸ்டை எடுத்து வைக்கக் கல்லாவில் ஆரோகணித்தபடி உரக்க ஆணையிட்டுக் கொண்டிருப்பார். அவர் என்னைக் கவனித்து திப்பிலி தேடக் குறைந்தது அரைமணி நேரமாவது ஆகும்.

அதற்குள் காந்தி வீதியில் காதைப் பிளக்கும் இரைச்சலோடு வர்த்தக ஒலிபரப்பு தொடர்ந்து கொண்டிருக்கும். எல்லா சவுண்ட் சர்வீஸ்காரர்களும் தீபாவளிக்கு முன்னால் கூட்டம் போட்டு ஒவ்வொருவருக்குமான ஒலிபெருக்கி நேரத்தைப் பங்கு பிரித்துக் கொள்வதால் ஒரு நேரத்தில் ஒரு கூச்சல் மட்டுமே கேட்டு இன்புறக் கிட்டும். வழக்கமான “தீபாவளிக்குப் புத்தம்புதிய ஜவுளிகள் குவிந்திருக்கும் தனலட்சுமி ஸ்டோர்’, “தரமான சுவையான இனிப்புகளுக்கு ஷண்முகம் ஸ்வீட் ஸ்டால்’, “நகைகளின் பேரில் குறைந்த வட்டியில் கடன் வாங்க ராம.பெரி. அழகு வட்டிக்கடை’, விளம்பரங்களோடு, “பசுமாடுகள் கன்று ஈன வெங்காயத்துரையை உடனே அணுகுங்கள்’ போன்ற ஸ்பெஷல் விளம்பரங்களும் இடம் பெறும். பத்து விளம்பரத்துக்கு ஒருதடவை சவுண்ட் சர்வீஸ்காரர் நகரப் பெருமக்களுக்குத் தன் இதயம் கனிந்த தீபாவளி வாழ்த்துகளைத் தெரிவித்தபின், இசைத்தட்டு, “கடவுள் மனிதனாகப் பிறக்க வேண்டும். அவன் காதலித்து வேதனையில் வாடவேண்டும்’ என்று கண்ணதாசன் எழுதியபடிக்கு டி.எம்.எஸ் சாபம் கொடுப்பார். “”இப்போது நேரம் சரியாக, சரியாக, வேலு, கடியாரத்தை எடுறா, சரியாக ஆறு மணி நுப்பது நிமிடம். வணக்கம் கோரி விடைபெறுவது உங்கள் ராஜா சவுண்ட் சர்வீஸ்”.

காதி, கதர்க்கடைகளில் சர்க்கார் உத்தியோகஸ்தர்கள் அதிகம் தட்டுப்படுவார்கள். தீபாவளித் துணி அங்கே வாங்காவிட்டால் தண்டனைக்கு ஆளாக வேண்டிவரும் என்று சர்க்கார் உத்தரவு இருக்கலாமோ என சந்தேகத்தைக் கிளப்பியபோது, “துணி வாங்கி மாசாமாசம் சம்பளத்திலே கழிச்சுக்க ஜி.ஓ. வந்திருக்கும்’ என்றான் குண்டு ராஜூ. ஜி.ஓ. என்றால் என்ன என்று அவனுக்கும் தெரியாது. யாரோ சொன்னதாம்.

பஞ்சாயத்து போர்ட் ஆபீஸ் சங்கு தீபாவளி காலையில் நாலுமணிக்கு விசேஷமாக ஒலிக்கும். திருச்சி வானொலியில் நேயர்களுக்குத் தீபாவளி வாழ்த்து சொல்லி நாகசுரக் கச்சேரி தொடங்கும். எஸ்.எம்.ஆர் வக்கீல் வீட்டுப் பிள்ளைகள் போல் அவர்களும் தீபாவளி கொண்டாடாமல் வேலைக்கு வந்திருப்பார்கள் போலிருக்கிறது. எஸ்.எம்.ஆர். வக்கீல் வீட்டுக் கூடத்தில் சோவியத் புத்தகக் கடை மாதிரி லெனின், மார்க்ஸ் இன்னும் சில தாடிக்காரர்களின் படங்களைப் பார்த்ததுண்டு. அவர்கள் ஒட்டுமொத்தமாகச் சொன்னபடியோ எண்ணமோ, நாங்கள் எல்லாம் புதுத் துணியோடு பட்டாசு வெடித்துக் கொண்டிருக்க, தீபாவளி கொண்டாடாத அந்த வீட்டுப் பிள்ளைகள் இருப்பதிலேயே பழையதாக எடுத்து உடுத்திக் கொண்டு எங்களைத் துச்சமாகப் பார்த்தபடி ஒரு தெரு விடாமல் புரட்சிகரமாகச் சுற்றி வருவார்கள்.

எல்லா வீட்டிலும் படியேறி நடேசன் நாயன கோஷ்டி “உள்ளம் உருகுதையா’ பாதி பாட்டு வாசித்து தீபாவளி வெகுமதி வாங்கிப் போகும். பாட்டியம்மாவிடம் தீபாவளி மருந்தையும் கேட்டு வாங்குவார் தவில்கார கருப்பையா பிள்ளை. “இன்னிக்கு இந்த லேகியம் மட்டும்தான். அடடா என்னமா கமகமன்னு இருக்கு’ என்பார் நாயனக்காரர்.

வீட்டு வாசல் தோறும் குவிந்து கிடக்கும் பட்டாசுக் குப்பைக் காகிதத்தைப் பார்த்தால், போன வருடத்துத் தலைப்புச் செய்திகள் துண்டு துணுக்காகத் தெரியும். ஒரு தீபாவளிக்கு, சோவியத் ராக்கெட்டில் உலகிலேயே முதல் பெண்ணாக வாலண்டினா தெரஷ்கோவா வானில் வலம் வந்த செய்தி லட்சுமி வெடியிலிருந்து அரைகுறையாக வெளிப்பட்டது. பட்டாசுக்குத் தீவைத்துவிட்டு கொஞ்சம் பயத்தோடு பத்தடி முன்னால் ஓடுவதற்குள் வெடித்துச் சிதறினார் அந்த வீராங்கனை. “கீலர்- ப்ரப்யூமோ களியாட்’ என்ற பாதித் துணுக்கில் அடிபட்டது வாசனையான ஜப்பான்காரனான பெர்ப்யூமோ என்றான் குண்டுராஜூ. அவன் சொன்னால் சரிதான்.

தீபாவளிக் காலை நேரங்களை நினைக்கத் தெரிந்த மனமே, உனக்குத் தீபாவளிப் பகலை மறக்கத் தெரியாதா? ஊரே ஓய்ந்து போய், வர்த்தக ஒலிபப்பு, ரங்கன் வாத்தியார் வெடிக்கடை, இரைச்சல், வாடை எல்லாம் காணாமல் போய் சோர்வாக ஊறும் அந்தப் பகல். அது ராத்திரியில் முடியும்போது வானொலியில் வழக்கம்போல் “ஆகாசவாணி, செய்திகள்’ என்று பிரதமர் சாஸ்திரி அலகாபாதில் நிருபர்களிடம் உணவுப்பொருள் தட்டுப்பாட்டை நீக்க எடுக்கப்படும் நடவடிக்கைகள் பற்றிப் பேசிய விவரம் ஜலதோஷம் பிடித்த சர்க்கார் குரலில் வாசிக்கப்படும். தொடர்ந்து தீபாவளி விசேஷ இசைச் சித்திரமாக நிலையக் கவிஞர் எழுதி, நிலைய சீனியர் வித்துவான் இசையமைத்து, நிலைய வாத்திய கோஷ்டியின் பின்னணி இசையோடு மற்ற வித்துவான்கள் கோஷ்டி கானமாக இசைக்க “”தீபாவளி வந்ததே, தீபத் திருநாள் வந்ததே” போன்ற பாடல்கள் அடங்கிய இசை நிகழ்ச்சி. தீபாவளியோ, பொங்கலோ, இருபத்துநாலு மணி நேரமும் சினிமா நட்சத்திரங்களையே சுற்றிச் சுற்றி வரும் இந்தக்கால டெலிவிஷன் நிகழ்ச்சிகளைவிட அவை சுவாரசியமானவை.

———————————————————————————————————————————————-

ஞாபகம் வருதே…: நெ.40, ரெட்டைத் தெரு

1965எல்லா வருடத்தையும் போல பொங்கல், கரும்பு, வார்னிஷ் வாடை அடிக்கும் பொங்கல் வாழ்த்து, நாலு நாள் விடுமுறை என்று ஜனவரி நகர்ந்தது. மாசக் கடைசியில் குடியரசு தினம் வரும். ஜனாதிபதி ஆகாசவாணியில் சொற்பொழிவு, பள்ளிக்கூடத்தில் கொடியேற்றம், எல்லா இந்தியரும் என் சகோதர சகோதரிகள் என்று பிரதிக்ஞை (அப்பாவை அண்ணா என்று கூப்பிடும் வீடுகளில் வேண்டுமானால் இது சரியாக இருக்கலாம்), இனிப்பு வழங்குதல். பெரிதாக எதிர்பார்க்க ஏதுமில்லை. ஆனால் அடுத்த இரண்டு மாதமும் பரபரப்பாக இருக்கப் போகிறது என்று பெரியவர்களுக்குத் தெரியுமோ என்னமோ எங்களுக்கு யாரும் சொல்லவே இல்லை.

ஜனவரி இருபத்து நாலாந்தேதி ஞாயிற்றுக்கிழமை தினசரியில் “சர்ச்சில் கவலைக்கிடம்’ என்று கொட்டை எழுத்தில் வந்தது. கோகலே ஹால் நூலகத்தில் பேப்பர் படித்த எனக்கு, இப்படி அரைகுறைச் செய்தியை அதுவரை படித்ததாக நினைவு இல்லை. சர்ச்சுக்கு யார் போனது, அதில் என்ன கவலை என்ற தகவல் ஏதும் இல்லாது, ஒரு வெள்ளைக்காரக் கிழவர் போட்டோவோடு வந்த செய்தி. படிக்கப் பொறுமையில்லாமல், “சரோஜாதேவி தினசரி என் கனவில் வருகிறாரே’ என்று முறையிடும் கேள்வி-பதில் படிக்கப் பக்கத்தைத் திருப்பினால், பேப்பர் படக்கென்று பிடுங்கப்பட்டது. பெரிசுகள் தான். இந்தி நாடு முழுக்க ஆட்சி மொழி ஆகப் போகிறதாம். தமிழ்நாட்டில் அப்போது பக்தவத்சலம் தான் முதலமைச்சர். சரியாகச் சொன்னால், மதராஸ் மாகாண முதல் மந்திரி அவர். “போ ரைட்’ என்று அவரும் இந்திக்குக் கை காட்டிவிட்டாராம். “”சும்மாக் கிடக்கிற சங்கை ஊதிக் கெடுக்கறதுலே இவங்களை மிஞ்ச ஆளே இல்லை” என்றான் லைபிரரிக்கு வெளியே நடந்து சைக்கிளில் ஏறிய எஸ்.எம்.ஆர் வக்கீல் மகன் சந்துரு. யாருக்கு சங்கு? ஏன்?

செவ்வாய்க்கிழமை குடியரசு தினம். பள்ளிக்கூடத்தில் கொடியேற்றத்தை ரத்து செய்துவிட்டதாக குண்டுராஜூ காலையிலேயே ஒருத்தர் பாக்கி விடாமல் தகவல் அறிவித்து விட்டான். தமிழ்நாடெங்கும் கலவரமாம். நிறையப் பேர் கைது, ஊர் முழுக்க பதற்றமான சூழ்நிலை. தெருமுனையில் ஏதோ கூட்டம். இந்தி

ஆட்சிமொழி ஆனதை ஆதரித்துத் தலையங்கம் எழுதிய பத்திரிகைகளையும், இந்தி பாடப் புத்தகங்களையும் குவித்து வைத்துக் கொளுத்திக் கொண்டிருந்தார்கள். சீதரன் சொன்னான், “மணியன் வாத்தியாரை போலீஸ்காரங்க அரஸ்ட் பண்ணிட்டாங்கடா’. அவரையும் காகிதம் கொளுத்தியதற்காகத்தான் கைது செய்தார்களாம். அரசியல் அமைப்புச் சட்டத்தை எரித்துவிட்டாராம். போனால் போகிறது, இன்னொரு காப்பி இல்லாமலா போய்விடும்? “மடையா, இனிமே நாம எல்லோரும் இந்தியிலே தான் பேசி, எழுதி, படிச்சு, இந்திக்காரனுக்குக் கைகட்டி நிக்கணும்னு சட்டம் போட்டிருக்காராம் சாஸ்திரி.’ எனக்கும் பிரதமர் லால்பகதூர் சாஸ்திரி மேல் இப்படி அப்படி என்றில்லாத கோபம் வந்தது. கோயில் பிரகார உத்திரத்தில் வெüவால் தொங்குகிறதுபோல் வரிசையாகத் தொங்குகிற எழுத்தோடு இந்தியைப் படித்துக் கொண்டு தினசரி காய்ச்சல்காரன் போல சுக்கா ரொட்டி சாப்பிட்டுக்கொண்டு மிச்ச வாழ்க்கையைத் கழிக்க எனக்கென்ன தலைவிதி? இந்தி இருந்த பழைய ரயில்வே கைடு புத்தகத்தை வீட்டிலிருந்து கிளப்பிக்கொண்டு வந்து எரிகிற தீயில் போட்டேன். ஒழியட்டும் இந்தி.

“ரோஜா மலரே ராஜகுமாரி’ பாட்டு துணைக்கு வராமலேயே தட்சிணா ஆச்சாரியார் சவுண்ட் சர்வீஸ் மூலம் “144 தடையுத்தரவு’ போடப்பட்ட விஷயம் மூலைமுடுக்கு விடாமல் ஒலிபரப்பானது. சர்க்கார் போட்ட தடையுத்தரவு தவிர வீட்டிலும் அதைவிடக் கடுமையான தடைச்சட்டம் அமலாக்கப்பட்டது. சும்மா வெளியே எங்கேயும் போய்ச் சுத்திட்டுக் கிடக்காமல் பாடத்தை எடுத்துப் படிக்கச் சொல்லி உத்தரவு. பத்து நிமிடம் புத்தகத்தைத் திறந்து வைத்து சுமேரியர்கள் டேப்லெட்டில் அரசியல் சட்டத்தை எழுதி வைத்திருந்த அதிசயத்தை இன்னொரு தடவை கர்மமே என்று படித்தேன். டேப்லெட் என்றால் மாத்திரை இல்லையோ. சட்டத்தை எழுதி வைக்க காகிதம் கிடைக்கவில்லையா சுமேரியர்களுக்கு? அங்கேயும் இந்தி மாதிரி எதையாவது திணித்து, மணியன் வாத்தியாரோ அவர் மாதிரி ஊருக்கு ஊர் நிறையப் பேரோ படையாகத் திரண்டு வந்து எரிக்க முடியாமல் இப்படி மாற்று ஏற்பாடு செய்தார்களோ? டேப்லெட் என்றால் களிமண் பலகையும்தான் என்றார் அப்பா. அவருக்கும் இந்தியை வலுக்கட்டாயமாகக் கொண்டு வந்தது பிடிக்கவில்லை. நான் திண்ணைச் சுவரில் பென்சிலால் “இந்தி ஒழிக’ எழுதியபோது அவரைத் தவிர மற்றவர்கள் சத்தம் போட்டார்கள். இந்திக்கு ஆதரவாக இல்லை. புதிதாக சுண்ணாம்பு அடித்த சுவராம். உடனடியாக அழித்து இந்தியை வாழவைத்தார்கள்.

இந்தி அரக்கி படம் வரைந்து வைக்கோல் பொம்மையில் ஒட்டிப் பாடை கட்டி எரிக்க ஒரு கூட்டம் கிளம்பியது. கிருஷ்ணன் வாத்தியாரை வரையச் சொல்லலாம் என்று யாரோ ஆலோசனை சொன்னார்கள். கனகவல்லி டீச்சர் ஜாடையில் இந்தி இருப்பதைப் பார்க்க யாருக்கும் தைரியம் இல்லாததால், படம் இல்லாமலே அரக்கி பள்ளிக்கூட வாசலுக்குப் பாடையில் பவனி வந்தாள். எரிக்க முடியாமல் போலீஸ் எல்லோரையும் விரட்டிவிட்டது. பள்ளிக்கூடமும் பத்து நாள் லீவாகப் பூட்டப்பட்டது.

சிதம்பரத்தில் கல்லூரி மாணவர்களைத் துப்பாக்கி வைத்து சுட்டத்தில், ராஜேந்திரன் இறந்த தகவல் வந்தபோது ஊரே துக்கத்தில் முழுகியது. ஒவ்வொரு வீட்டிலும் சாவு ஏற்பட்ட வருத்தம் கனமாகக் கவிய, பேப்பரில் தினசரி செய்தி -துப்பாக்கிச் சூட்டில் சாவு, தடையை மீறி ஊர்வலம் போனவர்கள் கைது, பள்ளிகள் அடைப்பு நீடிப்பு.

ரயில்வே ஸ்டேஷனில் ஒரு கூட்டம் புகுந்து இந்தியில் பெயர் எழுதிய பலகைகளில் தார் பூசியது. “ராமேஸ்வரத்துக்கு வர்ற வடக்கத்திய பிரயாணிகள் கஷ்டப்பட மாட்டாங்களா?” என்று ரிடையர்ட் ஸ்டேஷன் மாஸ்டர் வருத்தப்பட்டார். “காசிக்குப் போற நம்ம ஆளுங்க படற கஷ்டத்தை விடவா?” என்றார் இன்னொரு வயசாளி.

பிப்ரவரி பிறந்தும் தமிழ்நாடு முழுக்க காவு வாங்குவதில் இந்தி மும்முரமாக இருந்தது. சி.சுப்ரமணியம் மந்திரிசபையிலிருந்து ராஜினாமா என்ற செய்தியை ஆகாசவாணியில் கேட்டு என்ன என்று புரியாமலேயே கைதட்டினோம். பெங்களூரில் காரியக் கமிட்டி கூட்டம் என்று பத்திரிகைச் செய்தி. சாதாரணமாக இந்த மாதிரி தகவல் எல்லாம் திண்டு தலையணையில் சாய்ந்து காந்தி குல்லாய் வைத்தவர்கள் விவாதிக்கிற படத்தோடு வரும். இப்போது வெறும் செய்தி மட்டும்தான். இந்தி திணிப்பை வற்புறுத்த வேண்டாம் என்று நிஜலிங்கப்பா நிஜமாகவே மன்றாட, உள்துறை அமைச்சர் மொரார்ஜி தேசாய் மாட்டேன் என்று பிடிவாதம் பிடிப்பதாகச் செய்தி சொன்னது. அவருக்குச் சாய வாகாகக் காரியக் கமிட்டியில் திண்டு கொடுத்திருக்க மாட்டார்கள்.

இரண்டு மாதம் சென்று பள்ளிக்கூடம் மறுபடி திறந்தபோது, சர்க்கார் ஏதோ உத்தரவாதம் கொடுத்ததால் இந்தி அதிகாரமாக உள்ளே நுழையவில்லை. ஆனாலும், இந்தியை மூன்றாம் மொழியாகப் படிக்க வேண்டிப் போனது. பள்ளிக்கூடத்தில் உடற்பயிற்சிக் கட்டளை கூட “அட்டென்ஷன்’. “ஸ்டாண்ட்-அட்-ஈஸ்’ போய், “சாவ்தான்’, “வீஸ்ராம்’ ஆக மாறியது. “சாவறான்; அழுகிப் போய் வாடை வீசுறான்’ என்று நாங்கள் ஒவ்வொரு தலைவர் பெயரையும் சொல்லிச் சபித்தபடி சாவ்தான் -வீஸ்ராமுக்கு மெல்ல நடைபோட, இரண்டு வருடத்தில் ஒரு ஆட்சியே மாறிப்போனது.

இன்றைக்கு எனக்கு இந்தி தெரியும். மனிதர்கள் பேசிப் புழங்குகிற ஒரு மொழி என்ற மட்டில் அதன் பேரில் வெறுப்பு எதுவும் இல்லை. ஆனாலும், “ஹிந்தி ராஜ்பாஷா; தேசிய மொழி அதுதான்’ என்று யாராவது பேச ஆரம்பித்தால், “சரிதான் உட்காருடா’ என்று தலையில் தட்ட மனதில் ஒரு சின்னப் பையன் எழுந்து வருகிறான். அவனுக்குக் கோடிக்கணக்கில் சிநேகிதர்கள் உண்டு என்பதை அவன் அறிவான்.
Sunday January 27 2008

———————————————————————————————————————————————

ஞாபகம் வருதே.: நெ.40, ரெட்டைத் தெரு

“மாடர்ன் ஃபேன்சி ஸ்டோர்’ வாசலில் தொடங்கியது அந்த க்யூ. அது வளைந்து நெளிந்து குடிதண்ணீர் ஊருணிக்கரை வரை நீண்டிருந்தது. அடகுக்கடை ராம.பெரி.அழகு, பஜ்ஜி ராயர், ஸ்தானிஸ்லாஸ் வாத்தியார், மாயழகு, மளிகைக் கடை அசன் ராவுத்தர் என்ற கலவையான இந்த வரிசையின் கோடியில் நானும் நிற்கிறேன். மத்தியானம் கடையை எடுத்து வைத்துவிட்டுப் பக்கத்தில் மடத்துத் தெருவில் வீட்டுக்குப் போயிருக்கிறார் மாடர்ன் ஸ்டோர்காரர். அவர் சாப்பிட்டு, குட்டித் தூக்கம் போட்டு, சாவகாசமாக வந்து திரும்பவும் கடை திறக்க வேண்டும். காத்திருக்கிறோம்.

ரேஷன் கடை தவிர இதுவரை வேறு எந்தக் கடை வாசலிலும் இப்படிக் கியூவில் காத்திருந்தது இல்லை. அதுவும் மாடர்ன் ஸ்டோரில். அதிகபட்சம் ஐந்து வாடிக்கையாளர்கள் ஒரே நேரத்தில் நின்றால் அங்கே மும்முரமான விற்பனை என்று அர்த்தம். மந்தித் தோப்பு தைலம், காம்போசிஷன் நோட்புக், மர ஸ்கேல், நஞ்சங்கூடு பல்பொடி, வாய்ப்பாடு புத்தகம் என்று கடைக்கு உள்ளே எங்கோ இருட்டுக் குகைக்கு நடந்துபோய் ஒவ்வொன்றாக எடுத்துவந்து கடை சிப்பந்தி கொடுக்க, அடுத்த கஸ்டமராக “”இன்னிக்கு பேப்பர் போடலை” என்று எம்.ஆர்.ஆர்.வக்கீல் புகார் மனுவோடு நடுவில் நுழைவார். பெரும்பாலான ஆங்கில, தமிழ் தினசரிகள் மற்றும் வாராந்தர “குடும்பப் பத்திரிகை’களுக்கு மாடர்ன் ஸ்டோர்தான் வினியோகஸ்தர். நல்லையா மரப்பெட்டியில் வைத்து எடுத்துவந்து ஊர் முழுக்க வீடுவீடாக வீசிவிட்டுப் போகும் இவை அபூர்வமாக இடம் மாறி விழுந்துவிடுவதால் ஏற்படும் பிரச்சினை இது. லாட்டரி சீட்டு விற்க ஏஜென்சி கிடைத்ததும் இந்த வியாபாரம், விவகாரம் எல்லாம் தாற்காலிகமாகப் பின்னால் தள்ளப்பட்டு, கடைக்கே புதுக்களை வந்துவிட்டது.

“”வாசலை மறைக்காம நில்லுங்க. காசு நோட்டா ஒத்த ரூபா எடுத்து வச்சுக்குங்க. ஒருத்தருக்கு ஒரு சீட்டுத்தான் தரச்சொல்லி கவர்மென்ட் உத்தரவு”. ஷட்டரை ஏற்றிக் கொண்டே கடை சிப்பந்தி அறிவிக்க, முதலாளி கம்பீரமாக எல்லோரையும் பார்த்தபடி கடைக்குள் நுழைந்தார். முதல் லாட்டரிச் சீட்டு விற்பனை தொடங்கியது.

“செலவு ஒரு ரூபாய், வரவோ லட்ச ரூபாய்’. புது அரசாங்கம் ஆட்சிக்கு வந்தபோது தமிழ்நாடு முழுக்க இந்தப் பரபரப்புதான். “”லட்ச ரூபாய் எப்படி இருக்கும்?” அசன் ராவுத்தர் வரிசையில் பின்னால் நின்ற அடகுக்கடை ராம.பெரி.அழகுவைக் கேட்டார். அவரும் பார்த்ததில்லையாம். “”நியூஸ் பேப்பரைப் பாதியாக் கிழிச்ச சைசிலே ஒத்த நோட்டா அடிச்சிருப்பாங்களோ” என்று பஜ்ஜி ராயர் சந்தேகத்தை வெளியிட்டார். “”சாமிகளே, உங்களுக்கு லாட்டரி விழுந்து அந்த நோட்டுக் கெடச்சா, ஆத்திர அவசரத்துக்கு அதையெடுத்து மொளகா பஜ்ஜி கட்டிடாதீங்க” என்றான் மாயழகு. வரிசைக் கோடிவரை இந்தக் கிண்டல் ஒலிபரப்பாகி, அலையலையாகச் சிரிப்பு எழுந்தபோது, வரிசையை உடைத்துக் கொண்டு கறிகாய்க்கடை ஜோதி நடந்தாள்.

“”பின்னாலே போம்மா” என்று அவளை வரிசைக் கடைசிக்கு அனுப்பப் பார்த்த சிப்பந்தியைத் தடுத்தாட்கொண்டு, “”முதல் சீட்டை ஜோதி வாங்கட்டும். சுபிட்சமாத் தொடங்கலாம்” என்றார் கடை முதலாளி. யாருக்குச் சுபிட்சம் என்று சொல்லவில்லை.

வரிசை மெதுவாக முன்னேறிக் கொண்டிருந்தது. லாட்டரி சீட்டு கிடைத்தவர்கள் அதைத் திருப்பித் திருப்பிப் பார்த்துக் கொண்டு, ஜாக்கிரதையாக பையிலோ பர்ஸிலோ வைத்தபடி முகமெல்லாம் மகிழ்ச்சி தெரியக் கடை வாசல் படியிறங்கிக் கொண்டிருந்தார்கள். எனக்குப் பசியும் தாகமும் உச்சத்தில் இருந்தது. பள்ளிக்கூடம் விட்டு வந்ததும் காப்பியோ நொறுக்குத் தீனியோ உள்ளே போகாமல், நியூஸ்பேப்பர் கிடைக்காத எம்.ஆர்.ஆர். வக்கீல் போல் இரைந்தது வயிறு. சட்டைப் பையில் பொரிகடலை இருந்தாலாவது அசை போடலாம். அவசரமாகக் கிளம்பியாகிவிட்டது.

சாயந்திரம் வீட்டுக்கு வந்தபோது அங்கே மும்முரமான பாட்டிமன்றம் நடந்து கொண்டிருந்தது. லாட்டரிச்சீட்டு ஏன் வாங்க வேண்டும் என்று ஆணித்தரமான வாதங்களோடு பாட்டியம்மா விளக்கிக் கொண்டிருந்தாள். தாத்தா உயிரோடு இருந்தபோது யாரோ மாதாமாதம் பெங்களூரிலிருந்து வந்து குதிரைப் பந்தயத்தில் கட்ட அவரிடம் பணம் வாங்கிப் போவார்களாம். அடுத்தமாதம் அவர் வரும் போது காயா பழமா தெரியும். தான் சந்தித்தே இருக்காத எத்தனையோ குதிரைகளை நம்பித் தாத்தா கட்டிய பணத்தை அவற்றில் சிலவாவது ஐம்பது, நூறு ரூபாயாகத் திருப்பிக் கொடுக்க தாத்தாவின் பந்தய யோகமே காரணமாம். அவருடைய யோகம் முழுக்க எனக்கு வந்திருப்பதால் நான் போய் ஒரு லாட்டரிச் சீட்டு வாங்கி லட்சாதிபதியாக பாட்டியம்மா ஆசைப்பட்டாள். அம்மா, அத்தை இரண்டு பேரும் லாட்டரிக்கு எதிர்க்கட்சியில் உறுதியாக நிற்க, எப்போதுமே ஆளுங்கட்சியான பாட்டியின் யோசனை கடைசியாக ஏற்றுக் கொள்ளப்பட்டது. “”ஒரே ஒரு தடவை வாங்கலாம்” என்றார் மாமா அசிரத்தையாக. ஒற்றை ரூபாயோடு காந்திவீதிக்கு நான் ஓடினேன்.

திருப்பதி தரிசன க்யூ மாதிரி மாடர்ன் ஸ்டோர் படிவாசலை நெருங்கிக் கொண்டிருந்தோம். பஜ்ஜி ராயர் படி ஏறும்போது தடுமாறி விழப் போக அசன்ராவுத்தர் தாங்கிப் பிடித்தார்.

“விழுந்தால் வீட்டுக்கு; விழாவிட்டால் நாட்டுக்கு’ என்று எங்கிருந்தோ அறிஞர் அண்ணா குரல். பின்னால் நின்ற மிமிக்ரி கணேசன் வாயைக் கைக்குட்டையால் மறைத்தபடி பேசியது அது. ராயரின் ரெகுலர் கஸ்டமர் அவன்.

நான் கொடுத்த ஒற்றை ரூபாய் நோட்டை வெளிச்சத்தில் உயர்த்திப் பிடித்துப் பார்த்து நடுவில் ஓட்டை இல்லை என்று நிச்சயப்படுத்திக் கொண்டு, கடைக்காரர் லாட்டரி சீட்டைக் கிழித்துக் கொடுத்தார். நம்பரை மனதில் கூட்டிப் பார்த்தபடி வெளியே வந்தேன். ஒரு தடவை ஒற்றைப் படையாகவும் அடுத்தமுறை ரெட்டைப் படையாகவும் வந்தது. “”ஒத்தப்படைன்னா குறைஞ்சது நூறு ரூபாயாவது ப்ரைஸ் கிடைக்கும். ஏழு வந்தா பத்தாயிரம்” என்று குண்டுராஜூ நம்பகமானத் தகவலாகத் தெரிவித்திருந்ததால் வீட்டுக்கு நடந்தபடி இதைச் செய்தேன். வயிற்றில் பசி இல்லாமல் சாவதானமாக மறுபடி கூட்டி நான் லட்சாதிபதியா, நூறாவதுபதியா என்று பார்க்க வேண்டும்.

லாட்டரி முடிவு வெளியானதற்கு அடுத்த நாள் விடிகாலையில் நல்லையா வரவுக்காகத் தெருவே கையில் லாட்டரிச் சீட்டுக்களோடு காத்திருந்தது. எங்கள் வீட்டுச் சீட்டு இரும்பு அலமாரியில் ரெட்டைத் தாழ்ப்பாள் போட்டுப் பூட்டிப் பத்திரமாக வைக்கப்பட்டாலும், அதன் நம்பர் எனக்கு மனப்பாடமாகியிருந்தது. தெருமுனையிலேயே காத்திருந்து நல்லையாவிடமிருந்து கெஞ்சிக் கூத்தாடி பேப்பரை வாங்கி கங்காராஜ் ஸ்டோர் வாசலில் பரத்தினேன். லட்ச ரூபாய் பரிசு பெற்ற யாரோ பற்றிய விவரம் முதல் பக்கத்தில். நானில்லை. தினசரியைப் புரட்டி இரண்டு பக்கத்துக்கு வந்திருந்த பரிசு விவரத்தைக் கவனமாகப் படித்தேன். நூறு, ஐம்பது கூடப் பரிசு எங்கள் வீட்டுக்கு விழாமல், என் ஒற்றை ரூபாய் நாட்டுக்குப் போய்விட்டது.

அடுத்த அரை மணி நேரத்தில் எல்லா வீட்டு வாசலிலும் தீபாவளிப் பட்டாசு வெடித்துப் போட்ட மாதிரி காகிதக் குப்பை. பரிசு கிடைக்காத லாட்டரிச் சீட்டு அதெல்லாம்.

“”எதுக்கும் எல்லாத்தையும் பொறுக்கி எடுத்து வச்சு சாவகாசமாப் பார்க்கலாம்டா. சரியாக் கவனிச்சிருக்க மாட்டாங்க” என்ற குண்டுராஜூவிடம் ஒன்றும் பேசாமல் எங்கள் வீட்டு லாட்டரிச் சீட்டைக் கொடுத்தேன். பழைய தெருவில் ஆறு புஷ்பம் வீட்டில் வாங்கிய சீட்டுக்கு ஆயிரம் ரூபாய் கிடைத்த செய்தி அதற்குள் ஊர் முழுக்கப் பரவியது. லட்சுமியைப் பார்க்க வேண்டும் என்று ஏனோ மனதில் சின்ன ஆசை.

“”லாட்டரி சம்மானமும் வேறொண்ணும் வேணாம். உள்ளது மதி” என்றாள் பாட்டி அடுத்த குலுக்குக்குச் சீட்டு விற்றபோது. ஆனாலும் மாடர்ன் ஸ்டோர் முன்னால் மலைப்பாம்பு போல நீள வளைந்து நின்ற க்யூவில் மாமாவும் இருந்தார்.

Sunday February 3 2008
———————————————————————————————————————————————

ஞாபகம் வருதே…: நெ.40, ரெட்டைத் தெரு

இரா. முருகன்

ரெட்டைத் தெருவாசியாக இருபது வருடத்துக்கு மேலே இருந்தும், தெருக்காரர்கள் பலரின் கண்ணில் படாமல் போயிருக்கக் கூடிய ஒருத்தர் மாத்திரம் உண்டு. தெருக்கோடி உமர்தீன் ரெடிமேட் ஹவுஸýக்கும், நல்லப்பா பெட்டிக் கடைக்கும் நடுவே கீகடமாகக் குறுக்குவெட்டில் நீளும் இத்தனூண்டு வீட்டுக்காரர் அவர். ரிடையர்ட் போஸ்ட் மாஸ்டர். அவர் வீட்டை அடையாளம் காட்டக்கூட அவரை யாரும் உபயோகித்ததில்லை. “எருமைக்கார வீடு’. இந்தச் சிறப்பு அடையாளத்தை நியாயப்படுத்தும் விதமாக, தெருவிலேயே எருமை வளர்த்த ஒரே வீடு அவர் வீடுதான்.

வயதான போஸ்ட் மாஸ்டர், அவரை விட வயதான ஒரு அக்கம்மா (அதாவது அக்கா-அம்மா) அப்புறம் சுமார் ஐம்பத்தைந்து மதிக்கத்தக்க அவருடைய செல்லி. செல்லி என்றால் தெலுங்கில் தங்கை என்று அர்த்தம் என்று யாரோ சொன்னார்கள். அது சரியாக இருக்கலாம். விடிந்ததும் யாரையாவது “ஏண்டா எருமை’, “ஏண்டி எருமைச்சி’ என்று உச்சக்குரலில் கூப்பிட்டபடி தகரக் குடத்தோடு படியிறங்கிப் போகும் அந்தத் தாட்டியான அம்மாவைச் செல்லமாக யாரும் செல்லி என்று கூப்பிட்டிருக்க முடியாது. சொந்தத் தங்கை என்றாலும் ரிடையர்ட் போஸ்ட் மாஸ்டர் கூடத்தான்.

செல்லியம்மா, வீட்டில் வளர்ப்பு மிருகங்களான எருமைகளைத் தவிர மற்ற இனங்களை எருமை என்று சிறப்புப்படுத்தும்போது, அக்கம்மாவுக்கு அவர்கள் எல்லாரும் “உலக்கை’களாக மட்டும் தெரிவார்கள். “ஒலக்க்க்கை’ என்று ஏகப்பட்ட அழுத்தத்தோடு புடவைத் தலைப்பை இழுத்துச் செருகிக் கொண்டு தகரக் குடத்தை ஓரமாக வைத்துவிட்டு அவர் தெருவில் இறங்கினால், எதிர்ப்பட்ட ஆள் சட்னிதான். ஆக இந்த எருமைகளுக்கும் உலக்கைகளுக்கும் நடுவே ரிடையர்ட் போஸ்ட் மாஸ்டர் காணாமல் போய், வீட்டுப் படியிறங்காமல் மாதக் கணக்கில், வருடக் கணக்கில் உள்ளேயே அடைகாப்பதால், அவர் ஒல்லியா குண்டா, கறுப்பா சிவப்பா, குட்டையா நெட்டையா என்று தெரியாதவர்கள் தெருவிலும் ஊரிலும் அனேகம்.

ரிடயர்ட் போஸ்ட் மாஸ்டர். இதை, ரி.போ.மா என்று சுருக்கிக் கொள்ளலாம். இந்த ரி.போ.மா பற்றித் தொடர்வதற்குள் தகரக் குடங்கள் பற்றி ரெண்டு வரியாவது சொல்லியாக வேணும். அக்கம்மாவும், செல்லியம்மாவும் தகரக் குடத்தோடு தெருவில் மற்ற வீடுகளின் கொல்லைக் கதவைத் தட்டுவது கழுநீருக்காக, அரிசி களைந்து, வடித்து ஊற்றிய நீரை எல்லா வீட்டிலும் முன் ஜாக்கிரதையாக, ஒரு பழம்பானையில் சேமித்து வைத்திருப்பார்கள். இப்படிப் பல வீட்டுக் கழுநீரைக் தகரக் குடத்தில் கலந்து எடுத்துப் போய்க் கொடுக்கிற கழுநீர் காக்டெய்ல், ரி.போ.மா வீட்டுப் பசு, எருமைகளுக்கு இஷ்டமான காலை பானம் என்று தெருவில் எல்லோருக்கும் தெரியும். வாங்கிய கழுநீருக்குப் பண்டமாற்றாக கொஞ்சம் ஊர் வம்பும், சாண வரட்டி இரண்டும் ரி.போ.மா சகோதரிகளால் வழங்கப்படுவது வாடிக்கை. குளிக்க வென்னீர் கொதிக்க வைக்கும் “வேம்பா’ என்ற கொஞ்சம் பெரிய சைஸ் டீக்கடை பாய்லர் சமாச்சாரத்துக்கு முக்கிய எரிபொருள் இந்த வரட்டிகள். ரி.போ.மா வீட்டு மாடுகளும் எங்கள் வீட்டுக் கழுநீரும், அந்தத் தகரக் குடங்களும் இல்லாமல் இருந்தால், நான் வருடக்கணக்காகக் குளிக்க முடியாது போயிருக்கும்.

இது இப்படியிருக்க, விடிந்ததும் அஞ்சால் அலுப்பு மருந்து வாங்க ஒரு நாள் என்னைத் துரத்திய இடம் நல்லப்பா பெட்டிக்கடை. வீட்டில் யாருக்கோ சள்ளைக் கடுப்பு. அது என்ன என்று இன்றுவரை எனக்குத் தெரியாத சமாசாரம். விழுந்து படுத்துப் போர்வையைப் போர்த்திக்கொண்டு காலை பத்து மணி வரை சும்மா புரண்டு கொண்டிருக்க வைக்கும் ஏதோ நோக்கோடு. இந்த அலுப்பு மருந்து விழுங்கினால் மதியத்துக்குள் நோய் தீர்ந்து வெங்காய சாம்பாரை ஒருபிடி பிடிக்க வலுக்கொடுக்கும். பள்ளிக்கூடம் போக வெறுப்பாக வரும் சில நாள்களில் நானும் இந்தச் சள்ளைக்கட்டு அஸ்திரத்தைப் பிரயோகித்திருக்கிறேன். அப்போதெல்லாம் என் தீனமான கோரிக்கைகள் ஏகமனதாக நிராகரிக்கப்பட்டு ஸ்கூலுக்குத் துரத்தப்படுவது வாடிக்கை.

அலுப்பு மருந்தோடு திரும்ப நடக்குபோது ரி.போ.மா வீட்டு வாசலில் கொரகொர என்று ஆகாசவாணியில் பஞ்சாபகேசன் அகிலபாரதச் செய்தி அறிக்கை வாசிக்கிறது கேட்டது. தர்மாம்பாள், சரோஜ் நாராயணசாமி என்று யார் டெல்லியிலிருந்து “பிரதமர் சாஸ்திரி நான்கு நாள் நல்லெண்ண விஜயமாக மாலத்தீவு போய்ச் சேர்ந்தார்’ ரக நாடு தழுவிய செய்திகளை வாசித்தாலும் எல்லார் குரலும் ஜலதோஷம் பிடித்துத்தான் கேட்கும். தில்லி ஆகாசவாணி ஸ்பெஷல் விஷயம் இது.

ரி.போ.மா பஞ்சாபகேசனுக்கு ஒத்தாசையாக ரேடியோ பக்கம் குனிந்து ஏதோ செய்து கொண்டிருந்தது கண்ணில் பட்டது. அந்தப் பழைய வால்வ் ரேடியோவைத் தரையில் பள்ளம் தோண்டி துருப்பிடித்த ஒரு கம்பியால் இணைத்திருந்த இடத்தில் ஒரு பீங்கான் குவளை பொருத்தியிருந்தது. ஒரு டம்ளரில் இருந்து குவளைக்குக் கொஞ்சம் கொஞ்சமாகத் திரவ பதார்த்தமாக எதையோ புகட்டிக் கொண்டிருந்தார் ரி.போ.மா.

“”ஆகாசவாணிக்குக் காப்பி தரீங்களா தாத்தா?” என்று ஆவலோடு விசாரித்தேன். எருமை, உலக்கை என்ற வீட்டு பிரயோகங்கள் இல்லாமல், ரி.போ.மா “தண்ணிடா’ என்றார். “”அப்பப்போ விட்டுக்கிட்டு இருந்தா, எர்த் சரியா பிடிச்சு, கொரகொக்காம ரேடியோ கேக்கலாம்.” அவர் விளக்கம் பாதி புரிந்தாலும் பஞ்சாபகேசனின் ஜலதோஷம் இந்த ஊருணித் தண்ணி வைத்தியத்தில் இன்னும் கடுமையானது.

“”என்னய்யா போஸ்ட் மாஸ்டர் வேலை. வெள்ளிக்கிழமை சாயந்திரம் ஒருத்தன் கவுண்டர்லே எட்டிப் பார்த்துக் கட்டியாச்சான்னு அச்சானியமாக் கேட்பான். வெளியே போற தபாலை எல்லாம் ரயிலுக்கு எடுத்துப் போகச் சாக்குப் பையிலே கட்டறதை எப்பச் செஞ்சா இவனுக்கு என்ன? இவனுக்குக் கட்டியாச்சு, கட்டலேன்னு பதில் சொல்லி முடிக்கும்போது இன்னொருத்தன் எடுத்தாச்சான்னு விசாரிப்பான். கட்டறதுக்கும் எடுக்கறதுக்கும் நித்தியபடி சாவு விழுற இடமா என்ன?” ரி.போ.மா ஒரு தடவை அப்பாவிடம் தான் ரிடையர் ஆனபிறகு இந்தத் தொந்தரவுகள் இல்லாமல் அக்கம்மா, செல்லி, ஆகாசவாணி, எருமைகள் சகவாசத்தில் நிம்மதியாக இருப்பதை அழுத்திச் சொன்னார். கழுநீர் போக, ரேடியோவுக்குத் தண்ணீர் வார்க்க அவர் வீட்டில் இன்னொரு தகரக் குடம் இருந்திருக்க வேண்டும். அகில பாரதச் செய்தி, தென்கிழக்கு ஆசிய நேயர்களுக்காக அதே தர்மாம்பாள், பஞ்சாபகேசன், சரோஜ் நாராயணசாமி கூட்டணி நடத்திய தினசரி சேவை (“மலேயா பாங்கூர் ரப்பர் எஸ்டேட் முனியப்பன், ஆதினமிளகி வகையறாவுக்காக ஆலயமணியில் இருந்து “சட்டி சுட்டதடா கை விட்டதடா’ இதோ ஒலிக்கிறது’), மதியம் நிலைய வித்துவான் கோட்டு வாத்தியம், சாயந்திரம் “வாங்க கண்ணுச்சாமி, வாங்க சின்னச்சாமி’ இத்யாதி. முழுக்கமுழுக்க ஆகாசவாணி ஆதரவாளராக டம்ளரும் கையுமாக இருந்ததால், ரி.போ.மா தெருவில் இறங்கி நாலு பேரோடு சகஜமாகப் பழகியது அபூர்வமாகிப் போயிருந்தது. பஞ்சாபகேசன் மட்டும் தில்லியிலிருந்து வந்திருந்தால், வீட்டுத் திண்ணையிலிருந்தே நல்லப்பா கடையில் அஞ்சால் அலுப்பு மருந்து வாங்கிக் கொடுத்து ரெண்டு நிமிஷம் பேசி அனுப்பியிருப்பாராக்கும் எங்கள் ரிட்டையர்ட் போஸ்ட மாஸ்டர்.

என்றாலும் நான் பத்தாவது பாஸ் ஆனதைச் சொல்ல தேங்காய் சாக்லெட்டோடு போனபோது, அவர் எனக்கு ஒரு சன்மானம் கொடுத்தார். கட்டுக்கட கட்டுக்கட என்று தந்தி அடிக்க மோர்ஸ் கோட் பழக உதவி செய்யும் ஒரு கட்டைப் பலகை. மேலே, வளைந்து அழகான பிடியோடு பளபளவென்று பித்தளையில் ஒரு லீவர். “ஆகாசவாணி, அகில பாரத செய்தியறிக்கை’ என்று தந்தியடிக்க அவர் சொல்லிக் கொடுத்தது இன்னும் நினைவிருக்கிறது. எருமையும் உலக்கையும் எப்படி அடிப்பது என்று அவர் சொல்லவும் இல்லை. நான் கேட்கவும் இல்லை.
———————————————————————————————————————————————

ஞாபகம் வருதே…: நெ.40, ரெட்டைத் தெரு

இரா. முருகன்

சீரங்கத்தம்மா வீடு ரெட்டைத் தெருவில் இல்லை. ராஜூத் தெருவில் முதல் வீடு. அடுப்புக்கரி டிப்போவை அடுத்து, ரெட்டைத் தெருவுக்குச் செங்குத்தாக ஒரே வசத்தில் மட்டும் அமைந்த தெரு அது. ரெட்டைத் தெருவிலிருந்தே சீரங்கத்தம்மா வீட்டைப் பார்க்க, பேச முடியும் என்பதால் அவளும் எங்கள் தெருவாசியே.

சீரங்கத்தம்மா வீட்டுக்காரர் சுதந்திரப் போராட்ட தியாகி. கோலி சோடாவும் கலரும் உற்பத்தி செய்கிற சோடா கம்பெனி நடத்தியவர். எனக்கு நினைவு தெரிந்ததிலிருந்து வீட்டுக் கூடத்தில் கண்ணாடி பிரேம் செய்த ஓவல் சைஸ் கருப்பு வெள்ளைப் படத்தில் முண்டாசும் நெற்றி நிறைய விபூதி குங்குமமுமாகத்தான் உருட்டி விழித்துக் கொண்டிருக்கிறார். ஓய்ந்துபோன சோடா மிஷினை ராம. பெரி வகையறாவில் யாரோ வாங்கி, பக்கத்து பூங்குடி கிராமத்தில் “சோடா கலர் ஃபாக்டரி’ நடத்திக் கொண்டிருக்கிறார்கள். ஜெயராம் சினிமா தியேட்டரில் ஐம்பது காசுக்குக் கிடைக்கும் பச்சையும் மஞ்சளுமான கோலி சோடா அங்கேதான் தயாராகிறது. “சோடான்னா, அந்தக் கால கதர் சோடா மாதிரி குடிச்சதும் சுகமா வாய் வழியாக் காற்றுப் பிரிஞ்சு ஏப்பம் வரணும். இதுலே காத்தும் இல்லே. கலரும் இல்லே. சாக்ரின் தண்ணிதான் நுரைச்சுக்கிட்டு நிக்குது’. பூங்குடி சோடா குடித்த பெரிசுகள் ஏமாற்றத்தோடு பழைய கோலி சோடாவின் பொற்காலமாகக் காட்டும் கதர் சோடா காந்தி, கதர், கைராட்டினம் காலத்தில், சீரங்கத்தம்மா வீட்டுக்காரர் சுதேசிச் சரக்காக உற்பத்தி செய்தது. அது சென்னை, பெங்களூர், ஒங்கோல் என்று எல்லா ஊர் பொருட்காட்சியிலும் மெடல் வாங்கியதாம். சீரங்கத்தம்மாதான் ஒரு பகல் நேரத்தில் வீட்டுக்கு வந்து ஊர்க்கதை பேசும்போது சொன்னாள். பொற்காலத்தில் கோலி சோடாவுக்கெல்லாம் மெடல் கொடுத்துக் கவுரவித்தது ஏனென்று கேட்க நினைத்தாலும் தேசபக்தி காரணமாகச் சும்மா வாய் பார்த்துக் கொண்டிருந்தேன்.

பக்கத்துப் பட்டி தொட்டி கிராமங்களில் யார் வீட்டில் குழந்தை பிறந்தாலும், பிரசவ மருந்து கொடுப்பது சீரங்கத்தம்மா வீட்டில்தான். இந்த இலவச சேவையையும் கதர் சோடா காலத்தில் அமலில் இருந்ததாகக் கேட்டிருக்கிறேன். பழைய நினைவோடு யாராவது அவ்வப்போது வந்து, மருந்து கிடைக்காமல் பக்கத்து கங்கராஜூ கடையில் அதை விலைக்கு வாங்கி, சீரங்கத்தம்மா கையால் கொடுக்கச் சொல்லி எடுத்துப் போவார்கள். “வாவரசியா இருந்த மகராசி’ என்று வாயாரச் சொல்வார்கள் அவர்கள்.

சீரங்கத்தம்மா வீட்டில் எப்போதும் ஏதேதோ உறவுமுறை சொல்லிக்கொண்டு கூட்டம் நிரம்பி வழியும். வாரம் ஒருதடவை “தேங்காய்த்துருவி’ கடன் கேட்டு யாராவது அங்கிருந்து வருவார்கள். மனசேயில்லாமல் துருவியைக் கொடுத்தனுப்பிவிட்டுப் பாட்டியம்மா பதினைந்து நிமிடம் கூடத்தில் பித்துப் பிடித்ததுபோல் உலாத்திக் கொண்டிருப்பாள். அது முடிந்ததும் என்னைக் கெஞ்சுகிற பார்வை பார்ப்பாள். ஓடிப்போய் தேங்காய்த் துருவியைத் திரும்ப வாங்கிவா என்று அதற்கு அர்த்தம். சீரங்கத்தம்மா வீடு தினுசு தினுசான நபர்கள் புழங்குகிற இடம் என்பதால் அம்பலப்புழை தச்சன் இழைத்துக் கொடுத்து பாட்டியம்மா சீதனமாக எடுத்துவந்த துருவி காணாமல் போகவோ, ஊருக்குக் கிளம்புகிறவர்களால் கிளப்பிக் கொண்டு போகப்படவோ வாய்ப்பு உண்டு என்று அவள் நினைத்ததில் தப்பு ஏதுமில்லைதான்.

ரேஷன் ஆபீசில் வேலை பார்க்கிற ஒரு பிள்ளையும், மலேரியா கணக்கெடுத்து, எல்லா வீட்டு வாசல் சுவரிலும் பென்சிலால் சதுரம் போட்டு பால்காரி மாதிரி அவ்வப்போது அந்த சதுரத்துக்குள் ஏதோ குறித்துவிட்டுப் போகும் இன்னொரு மகனும் சீரங்கத்தம்மாவுக்கு உண்டு. கல்யாணம் ஆகியும் பிள்ளைகுட்டி இல்லாத இந்த இரண்டு பேரும் அம்மாவோடு அதே வீட்டில் இருந்தாலும், சீரங்கத்தம்மாவுக்கு தினசரி சாப்பாடு என்னமோ ஆனந்தபவன் ஓட்டலிலிருந்துதான் வரும். சர்வர் குருமூர்த்தி, நாலடுக்கு டிபன் செட், மேலே அலங்காரமாகச் சுருட்டி வைத்த வாழையிலை, அப்பளத்தோடு சீரங்கத்தம்மா வீட்டுப்படி ஏறும்போது தினம் ஓட்டல் சாப்பாடு சாப்பிடக் கொடுத்து வைத்த அந்தம்மாவைப் பற்றிப் பொறாமையாக இருக்கும். ராத்திரிக்கு மிச்சம் எடுத்து வைத்துவிட்டு அதைச் சாப்பிடுவாள் என்று கேட்டபோதுதான் பரிதாபமாக இருந்தது. பகலில் செய்து அனுப்பிய ஓட்டல் சாப்பாட்டை ராத்திரி சாப்பிடுவது போல் ஒரு தண்டனை வேறே உண்டா என்ன?

ரெண்டு பிள்ளைகள், மற்றும் மருமகள்களோடு தொடர்ந்த குடும்பச் சண்டை காரணமாகவும், சமையல் செய்ய முடியாமல் கண் பார்வை மங்கியிருந்ததாலும் சீரங்கத்தம்மா இப்படி ஓட்டல் சாப்பாட்டை நாட வேண்டிப் போனது. ஆனந்த பவன்காரர் குடும்ப நண்பர் என்பதால் மேற்படி போஜனம் அடக்க விலைக்கே அந்தம்மாவுக்குக் கிடைத்ததாம். தியாகி குடும்ப பென்ஷனாக சீரங்கத்தம்மாவுக்கு மாதாமாதம் கிடைத்து வந்ததில் கணிசமான பகுதி இதற்கே செலவாகியிருக்கும்.

ஆனந்தபவன் சாப்பாடு, குடும்பச் சண்டை, மூட்டை முடிச்சோடு வந்து சேர்ந்து தேங்காய்த் துருவி கடன் வாங்க அலைகிற உறவுக்காரர்கள் என்று எல்லாம் அலுத்துப்போய் சீரங்கத்தம்மா தீபாவளி கழிந்த அடுத்த நாள் திடுதிடுப்பென்று காசிக்குக் கிளம்பிவிட்டாள். மதுரையிலிருந்து யாரோ கூட்டிப் போவதாகச் சொல்லி, எல்லா வீட்டிலும் விடைபெற்றுக் கொண்டு புறப்பட்டாள். பாட்டி பத்து ரூபாயும், மஞ்சள் துண்டில் முடிந்து வைத்திருந்த ராஜா தலைக்காசு எட்டணாவும் சீரங்கத்தம்மாவிடம் கொடுத்து, பணம் வழிச்செலவுக்கென்றும், மஞ்சள் துணிக் காணிக்கை காசி விசுவநாதர் கோவிலில் சேர்க்க எந்தக் காலத்திலோ எடுத்து வைத்திருந்தது என்றும் சொல்லியனுப்பினாள். சீரங்கத்தம்மா பற்றி அப்புறம் ஒரு வருடம் போல பேச்சே இல்லை. காசியில் அவள் காலமாகியிருக்கலாம் என்று வீட்டில் ராத்திரி சாப்பாட்டுக்குப் அப்புறம் பேச்சுக் கச்சேரியில் எப்போதாவது பேச்சு எழும். “உத்தரப்பிரதேசத்தில் வெள்ளம்’ என்று ஜெயராம் தியேட்டரில் “கலங்கரை விளக்கம்’ படத்துக்கு முன்னால் காட்டிய இந்தியன் நியூஸ் ரீலில், படகில் உட்கார்ந்து போகிற சீரங்கத்தம்மாவைப் பார்த்ததாக குண்டுராஜூ சொன்னதை யாரும் நம்பவில்லை.

அடுத்த தீபாவளிக்கு நாலு நாள் இருக்கும்போது சீரங்கத்தம்மா திரும்பி வந்திருந்தாள். இப்போதும் வீடுவீடாகப் படையெடுப்பு. காசி விபூதி கொடுக்கவும், கங்கைச் செம்பிலிருந்து இங்க் ஃபில்லரால் எடுத்து கங்கா தீர்த்தம் பிரசாதம் வழங்கவுமாக பத்து நாள் மும்முரமாக அலைந்தாள். பிரசாதம் எல்லாம் வாங்கிக் கொண்டு மருமகள்கள் குடும்பச் சண்டையை விட்ட இடத்திலிருந்து தொடர்ந்ததால், மறுபடியும் ஆனந்தபவனிலிருந்து டிபன் காரியர் அணிவகுப்பு.

“”காசியிலே போய் நின்னா, அங்கே ஜனம் பேசறது ஒரு அட்சரமும் புரியலே. அவுகளை அதான் தெய்வமா நிக்கறாரே எங்க வீட்டுக்காரர். அவுகளையும் காசிநாத சாமியையும் மனசுலே தியானிச்சுட்டு வாயைத் தொறந்தேன் பாருங்க. என்னையறியாமலேயே கடகடன்னு இந்துஸ்தானி கரைபுரண்டு நாக்குலே வந்துது. அப்புறம் என்ன, நம்ம ராஜ்ஜியம்தான்”. சீரங்கத்தம்மா சொன்னதை பாட்டி மட்டும் நம்பினாள்.

சீக்கிரமே சீரங்கத்தம்மா ஓய்ந்து போனாள். சர்வர் குருமூர்த்தி கொண்டு வரும் சாப்பாடைக் கையில் எடுத்துச் சாப்பிடக்கூட முடியவில்லை. அது வருவதும் நின்று போனது. மருமகள்கள் சண்டைக்கு நடுவில் கஞ்சி வைத்துக் கொடுத்தார்கள். ஊர்ந்தபடி வீட்டுக்குள் நகர்ந்த சீரங்கத்தம்மா உடுத்தப் பழம்புடவையை விட்டெறிந்தார்கள். வீட்டை விற்றுப் பாகப் பிரிவினையாகிக் காலி செய்து போனபோது இளைய மகன் நசுங்கின அண்டா, பாதாளக் கரண்டி, எலிப்பொறி, ஒட்டடைக்குச்சி இவற்றோடு கைவண்டியில் சீரங்கத்தம்மாவையும் ஏற்றி ஒரு கிழிந்த போர்வையைப் போர்த்தி உட்கார்த்தி வைத்துத் தள்ளிக் கொண்டு போனான். “”அந்தக் காலத்துலே சாரட்டுலே கல்யாண ஊர்வலம் வந்தவள்டா சீரங்கத்தம்மா” என்றாள் பாட்டி. அவள் கண்கள் கலங்கியிருந்தன.

———————————————————————————————————————————————

Posted in Dinamani, Era Murugan, Era Murukan, Eraamu, Eramu, Ira Murugan, Ira Murukan, Iraa Murugan, Iraamu, Iramu, Kathir, Murugan, Murukan | 1 Comment »

75 Years: Indian Express Group of Publications Anniversary

Posted by Snapjudge மேல் செப்ரெம்பர் 5, 2007

எக்ஸ்பிரஸ் ’75: நன்றியுடன் வாசகர்களுக்கும் நலம் நாடுவோருக்கும்…

இன்றைக்குச் சரியாக 75 ஆண்டுகளுக்கு முன், 1932, செப்டம்பர் 5-ம் தேதி “தி இந்தியன் எக்ஸ்பிரஸ்’ பிறந்தது. இத்தனை ஆண்டுகால கொந்தளிப்பான வரலாற்று வழித்தடத்தில், “எக்ஸ்பிரஸ்’ சந்தித்ததைப்போல வெற்றிகளையும் வேதனைகளையும் மகிழ்ச்சிகளையும் சோதனைகளையும் இந்தியாவில் வேறு எந்த நாளிதழும் சந்திக்கவில்லை. அத்தனையையும் நாம் கடந்து வந்திருக்கிறோம்; அதற்கு, இந்தியாவில் வேறு எந்த நாளிதழுக்கும் கிடைத்திராத வகையில், வாசகர்களின் அன்பும் ஆதரவும் எக்ஸ்பிரஸýக்குக் கிடைத்ததே காரணம் என்பதைப் பணிவுடன் நான் தெரிவித்துக்கொள்கிறேன். உள்ளபடியே, இந்த நாளிதழைக் கட்டியெழுப்பிய முன்னோடிகள், இதை மக்களின் நாளிதழாகவே உருவாக்கினர். கடந்த 75 ஆண்டுகளாகவும் அதே தடத்தில்தான் எக்ஸ்பிரஸ் பயணம் செய்துகொண்டிருக்கிறது. அந்த வரலாற்றின் மைல் கல்லை, வரும் வாரங்களில் பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்துவதன் வாயிலாகக் கொண்டாடவிருக்கிறோம்; பாதுகாக்கப்பட வேண்டிய சிறப்பு இணைப்பையும் வெளியிடத் திட்டமிட்டிருக்கிறோம்.

முதன்முதலாக சென்னை வாசகர்களின் கரங்களில் எக்ஸ்பிரஸ் தவழ்ந்தபோது, காலனியாதிக்கத்தின் பிடியில் இந்தியா இருந்தது. சுதந்திரப் பாதையில் இந்தியா காலடி எடுத்து வைத்தபோது எக்ஸ்பிரஸýக்கு வயது 15. முதலில் பிரிட்டிஷ் ஆதிக்க சக்திகளை எதிர்த்துப் போராடியது எக்ஸ்பிரஸ்; சுதந்திரத்தால் துளிர்த்த நம்பிக்கைகள், அரசியல் ஊழல்களால் நொறுக்கப்பட்டபோது, சுதேசி ஆதிக்க சக்திகளை எதிர்த்துப் போராடியது எக்ஸ்பிரஸ். 1975-ல் நாட்டின் மீது “நெருக்கடி நிலை’ என்ற கருமேகங்கள் கவிந்தபொழுது, வெற்றிக்கான நம்பிக்கை ஒளிக்கீற்று தெரியாத நிலையிலும் அதை எதிர்த்துப் போராடியது எக்ஸ்பிரஸ். ஆனால், மக்களின் அமோகமான ஆதரவின் காரணமாக, அந்தக் காலகட்டத்தின் கெடுபிடிகளையும் வெற்றிகண்டது எக்ஸ்பிரஸின் எழுச்சி. எக்ஸ்பிரûஸப்போல வாசகர்களுடன் இறுக்கமாகப் பிணைக்கப்பட்டிருக்கும் வேறு எந்த நாளிதழும் இந்தியாவில் இல்லை.

அண்மை ஆண்டுகளாக வேறுவிதமான யுத்தம் நடந்துகொண்டிருக்கிறது. நாட்டின் தெற்கில் நாம் “தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்’ ஆகியிருக்கிறோம். அதே நேரத்தில் பதிப்பகத் துறையைச் சந்தைச் சக்திகள் தம் ஆதிக்கத்தின் கீழ் கொண்டுவந்து கொண்டிருக்கின்றன. செய்திகள் பண்டமயமாக்கப்படுவது தவிர்க்க முடியாதது போலத் தோன்றும் சூழலிலும், பத்திரிகை தர்மம் அதற்கு வளைந்து கொடுத்துவிடாமல் நாம் போராடிக்கொண்டிருக்கிறோம். அதில் வெற்றி பெறுவது அவ்வளவு எளிதான காரியமல்ல. பரந்து விரிந்த எக்ஸ்பிரஸ் வாசகர் குடும்பத்தின் ஆதரவு மீண்டும் எங்களுக்கு உறுதுணையாக இருக்கும் என்ற நம்பிக்கையில் தளராது உழைத்துக்கொண்டிருக்கிறோம். எது நடந்தாலும் சரி, தயக்கமின்றி என்னால் ஒன்றைக் கூற முடியும்: நாங்கள் எப்படிப் பிறந்தோமோ அப்படியே என்றும் இருப்போம். ஆம், மக்களின் செய்தித்தாளாக.

அனைவருக்கும் நன்றி.

மனோஜ் குமார் சொந்தாலியா

தலைவர்

Posted in 75, Anniversary, Daily, Dinamani, Dinmani, Express, IE, jubilee, Magazines, Magz, Media, MSM, News, Newspaper, Newspapers, Paper, Platinum, weekly | Leave a Comment »

Controlling Inflation & Avoiding Recession – RBI & Stagflation

Posted by Snapjudge மேல் ஓகஸ்ட் 2, 2007

ரிசர்வ் வங்கியின் கை வைத்தியம்!

ரிசர்வ் வங்கிக்கு உள்ள பல கடமைகளில் தலையாய கடமை, பணவீக்க விகிதத்தைக் கட்டுப்படுத்துவதுதான் என்பது அதன் சமீபகால நடவடிக்கைகளைக் கவனிக்கும்போது எளிதில் புலனாகிறது.

நாட்டின் ஒட்டுமொத்த பொருளாதார வளர்ச்சி வீதம் 8.5%-க்கும் மேல் இருக்கிறது, பணவீக்க விகிதம் 5%-க்கும் குறைவாக இருக்கிறது. அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு சமீபகாலத்தில் அதிகரித்து சராசரியாக 40 ரூபாயாக இருக்கிறது. வங்கிகளிடம் டெபாசிட் பணம் அபரிமிதமாக இருக்கிறது. இத்தனை இருந்தும் மக்களிடம் நிம்மதியோ, வாங்கும் சக்தியோ குறிப்பிடும்படி இல்லை.

“”மக்கள்” என்று இங்கே நாம் குறிப்பிடுவது பெரும்பாலானவர்களான நடுத்தர, ஏழை மக்களைத்தான். நடுத்தர வர்க்கத்தினரின் வாங்கும் சக்திக்கே சவால் விடுவதைப் போல தங்கத்தின் விலையும், நிலத்தின் விலையும் (வீட்டுமனை) உயர்ந்துகொண்டே வருகின்றன. இந்நிலையில் அவர்களுடைய சேமிப்பைப் பாதுகாக்கவும், அதற்கு சுமாரான வருமானத்தையும் தருவது வங்கிகள் தரும் வட்டிவீதம்தான். ஆனால் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த, அந்த வட்டிவீதத்துக்குத்தான் ரிசர்வ் வங்கி குறிவைக்கிறது என்பது வருத்தத்துக்கு உரிய விஷயம்.

உலக அரங்கில், இந்தியப் பொருளாதாரத்தின் வலிமைக்கான காரணங்களாக உள்ள அம்சங்களை ஆராய்ந்த வல்லுநர்கள், வருவாயில் ஒரு பகுதியைப் பிற்காலத்துக்காகச் சேமித்துவைக்க வேண்டும் என்ற எண்ணம் இந்தியாவின் ஏழைகளிடம்கூட இருப்பதையும், அதைச் செயல்படுத்துவதையும் சுட்டிக்காட்டி, பாராட்டியுள்ளனர். ரிசர்வ் வங்கி இந்த சேமிப்புப் பழக்கத்தை மேலும் ஊக்குவிக்க முயல வேண்டுமே தவிர, மக்களை விரக்தியின் விளிம்புக்கு விரட்டக் கூடாது.

நஷ்டம் வரக்கூடாது என்று மத்திய அரசே முனைப்புக் காட்டி வருங்கால வைப்பு நிதிக்கான வட்டியைக் குறைப்பதும், வங்கிகளில் போடப்படும் டெபாசிட்டுகளுக்கான வட்டியைக் குறைப்பதும் நல்லதல்ல. அந்த நடவடிக்கைகளை நடுத்தர, ஏழை மக்களின் சேமிப்பு மீதான “”மறைமுக வரி” என்றே கூற வேண்டும்.

வங்கிகளிடம் மிதமிஞ்சி சேர்ந்துவிட்ட டெபாசிட்டுகளால் ஒரு லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு உபரிப் பணம் இருப்பதாக ரிசர்வ் வங்கி மதிப்பிட்டுள்ளது. அதை உறிஞ்சுவதற்காக, வங்கிகளின் ரொக்கக் கையிருப்பை மேலும் 0.5% அதிகரித்து, 7% ஆக்கியிருக்கிறது. இப்படி ரொக்கக் கையிருப்பு விகிதத்தை உயர்த்திய பிறகும்கூட அதிகபட்சம் 16 ஆயிரம் கோடி ரூபாயைத்தான் புழக்கத்திலிருந்து உறிஞ்ச முடியும். வங்கிகளிடம் உள்ள மொத்த டெபாசிட்டுகளின் மதிப்பு சுமார் ரூ.4,90,000 கோடியாகும்.

வீடுகட்ட கடன் வாங்கியவர்களும், இனி வாங்க நினைப்பவர்களும் ரிசர்வ் வங்கியின் இந்த நடவடிக்கையால் மனம் தளர்ந்து போய்விட்டார்கள். வீட்டுக் கடனுக்கான வட்டி வீதத்தைக் குறைத்து, வீடமைப்புத் திட்டங்களுக்கு ரிசர்வ் வங்கி புதிய உத்வேகத்தைத் தரும் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. அது பொய்த்துவிட்டது. இனி வீட்டுக் கடனுக்கான வட்டி உயர்ந்தாலும் வியப்பதற்கு ஏதும் இல்லை.

விலைவாசியைக் கட்டுப்படுத்த, பண அச்சடிப்பைக் கட்டுப்படுத்துவது ஒரு வழி என்று ரிசர்வ் வங்கி கருதுகிறது. விலைவாசியைக் குறைக்க வேண்டும் என்றால் உற்பத்தியைப் பெருக்குவதும், பொது விநியோக முறையை வலுப்படுத்துவதும்தான் உற்ற வழிகள்.

இடைத்தரகர்கள், ஊகபேர வியாபாரிகள், கள்ளச்சந்தைக்காரர்கள், முன்பேர வர்த்தகர்கள் ஆகியோரை ஒடுக்காவிட்டாலும், எச்சரிக்கும் விதத்திலாவது ஓரிரு நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்தால் சற்று ஆறுதலாக இருக்கும்.

சிக்கனத்துக்கும் சேமிப்புக்கும் பெயர்பெற்ற இந்தியர்களைக் கடன் சுமையில் ஆழ்த்தவே பன்னாட்டு வங்கிகளும் பன்னாட்டு நிறுவனங்களும் 24 மணி நேரமும் தீவிரமாக உழைக்கின்றன. நம் மக்களின் சேமிப்பையும் உழைப்பையும் மதிக்கும் விதத்தில் ரிசர்வ் வங்கியாவது செயல்படலாம் இல்லையா? இதனால் சில நூறு கோடி ரூபாய்கள் வருமானம் குறைந்தாலும்கூட அதைப் பெரிய இழப்பாக மத்திய அரசும் ரிசர்வ் வங்கியும் கருதலாமா?

————————————————————————————————–
கவலைப்பட யாருமே இல்லையா?

Dinamani op-ed (August 7 2007)

வீட்டுக் கடன்களுக்கு உச்சவரம்பு நிர்ணயிக்கும் திட்டம் ஏதும் அரசுக்கு இல்லை என்று அறிவித்திருக்கிறார் மத்திய நிதி அமைச்சர் ப. சிதம்பரம். பணவீக்க விகிதம் குறைந்தால் மட்டுமே வீட்டுக் கடனுக்கான வட்டி விகிதமும் குறையும் என்றும் கூறியிருக்கிறார்.

இருக்க இடம் என்பது, உலகிலுள்ள எல்லா மனிதர்களுக்கும் இயற்கையான லட்சியம். ஆனால், சொந்த வீடு என்கிற இந்த கனவு நனவானதுடன் நிற்காமல், ஒரு நிரந்தர நரகமாகவும் ஆகிவிட்டால் எப்படி இருக்கும்? வீட்டுக் கடன் வாங்கிக் கனவு நனவானவர்களின் நிலைமை அதுதான்.

ஆறேழு ஆண்டுகளுக்கு முன்னர், அத்தனை வங்கிகளும் போட்டிபோட்டுக் கொண்டு வீட்டுக் கடன் வழங்க முன்வந்தன. நகர்ப்புறங்களில் திரும்பிய இடத்திலெல்லாம் அடுக்குமாடிக் குடியிருப்புகள் காளான்கள்போல முளைத்தன.

வாடிக்கையாளர்களிடம் இரண்டு வகையான வீட்டுக் கடன் வசதி முன்வைக்கப்பட்டது. முதலாவது வகை வீட்டுக் கடனில் வட்டி விகிதம் அதிகம். ஆனால், கடன் அடைந்து முடியும்வரை இந்த வட்டி விகிதம் மாறாது என்பதால் திருப்பி அடைக்க வேண்டிய மாதாந்திரத் தவணைத் தொகையும் மாறாது. ஆனால், இரண்டாவது வகை வீட்டுக் கடனுக்கான வட்டி விகிதம், அவ்வப்போது வங்கியின் வட்டிவிகித ஏற்றத்தாழ்வுகளுக்கு ஏற்றபடி மாறும் தன்மையது. இதற்கான வட்டி குறைவு என்பதால், பலரும் இந்த முறையிலான வீட்டுக் கடனையே விரும்பி ஏற்றனர்.

அப்போதிருந்த நிலையில், வங்கிகளின் வட்டி விகிதம் குறைந்து வந்த நேரம். அதனால், மேலும் வட்டி குறையும்போது அதன் பயன் கிடைக்குமே என்கிற நம்பிக்கையில் இந்த முறை வட்டிக் கடனைத் தேர்ந்தெடுத்தவர்களே அதிகம். ஆனால், இப்போது இந்த இரண்டாவது வகை வீட்டுக் கடன் முறையைத் தேர்ந்தெடுத்து வீடு வாங்கியவர்கள் நிலைமை மிகவும் பரிதாபகரமாகிவிட்டது.

வட்டி விகிதம் குறைவதற்குப் பதிலாக, வங்கிகள் வட்டி விகிதத்தை உயர்த்தி விட்டிருக்கின்றன. அதனால், வீட்டுக் கடன் வாங்கியவர்கள் உடனடியாக தங்களது கடனில் ஒரு பகுதியைத் திருப்பிக் கட்டினால் ஒழிய, வாங்கிய கடனைத் திருப்பிச் செலுத்தவே முடியாது. இந்தத் தவணைகள் வட்டிக்குத்தான் சரியாக இருக்குமே தவிர அசல் குறையாது. அதாவது, வாழ்நாள் முழுவதும் வட்டி மட்டும் கட்டிக் கொண்டிருக்கலாம்.

கடந்த இரண்டு ஆண்டுகளாகவே வீட்டுக் கடனுக்கான வட்டி விகிதம் உயர்ந்து வருகிறது. 6.5 சதவிகிதத்திலிருந்து இப்போது 11 சதவிகிதமாக உயர்ந்திருக்கிறது. ஆரம்பத்தில், அதிகரித்த வட்டி விகிதத்தை ஈடுகட்ட வங்கிகள் தவணைகளை அதிகப்படுத்தின. இன்றைய நிலையில், தவணைகள் 25 ஆண்டுகளுக்கு மேல் நீட்டிக்கப்பட்டாலும் கடன் அடைந்து தீராது என்கிற நிலைமை ஏற்பட்டுவிட்டது.

மாறும் வட்டி விகித முறையில், ஒரு லட்ச ரூபாய்க்கான 20 ஆண்டு வீட்டுக் கடனுக்கு 7.25% வட்டியானால் மாதாந்திரத் தவணை ரூ. 790. இப்போதைய 11.25% வட்டிப்படி கணக்கிட்டால், மாதாந்திரத் தவணைத்தொகை ரூ. 900. ஆரம்ப ஆண்டுகளில், சுமார் ஐந்து ஆண்டு வரை, ஒருவர் அடைக்கும் ரூ. 790 தவணைத்தொகையில் அசலுக்குப் போகும் பணம் வெறும் ரூ. 79 மட்டுமே. அதனால், இப்போது வட்டி விகிதம் அதிகரித்த நிலையில், ஐந்து ஆண்டுகளுக்கு முன்னர் கடன் வாங்கிய பலருடைய அசல் தொகையில் பெரிய அளவு பணம் திருப்பி அடைக்கப்படாத நிலைமை.

வீட்டுக் கடன் வாங்கிய லட்சக்கணக்கான மத்தியதர வகுப்பினர் மனநிம்மதி இழந்து, தூக்கம்கெட்டுத் தவிக்கும் நிலைமை. வெளியில் சொல்ல முடியாமல் மனதிற்குள் அழுபவர்கள் பலர். இதற்கெல்லாம் காரணம், சராசரி மனிதனின் உணர்வுகளையும் கஷ்டங்களையும் புரிந்துகொள்ளாத மத்திய நிதியமைச்சகமும் ரிசர்வ் வங்கியும் வங்கித் துறையும்தான்.

இந்த நிலைமையைப் பற்றிக் கவலைப்பட யாருமே இல்லையா?

Posted in Ahluwalia, APR, Balance, bank, Banking, Biz, Budget, Business, Center, Chidamabram, Chidambaram, Chidhambaram, Chithambaram, Commerce, Common, Consumer, Control, Currency, Customer, Deposits, Dinamani, Dollar, Economy, Exchanges, Expenses, Exports, Finance, fiscal, GDP, Governor, Govt, Growth, Homes, Houses, Imports, Industry, Inflation, Insurance, Interest, Land, Loans, Loss, Manmohan, Monetary, Money, Op-Ed, PPP, Profit, Property, Rates, RBI, Real Estate, Recession, Revenues, Rupee, Spot, Stagflation, USD | Leave a Comment »

Use of minors in wars & extremist forces – Worldwide Analysis & Report

Posted by Snapjudge மேல் ஜூலை 31, 2007

போர்முனைக் “கேடயங்கள்’!

எஸ். ராஜாராம்

இலங்கையில் சிறுவர்களைப் படையில் வலுக்கட்டாயமாகச் சேர்ப்பதாக விடுதலைப் புலிகள் மீது அவ்வப்போது புகார்கள் எழுவதுண்டு. ஆனால், உலகம் முழுவதும் லட்சக்கணக்கான சிறுவர்கள் ஆயுதக் குழுக்களில் சேர்க்கப்பட்டு சண்டையில் ஈடுபடுத்தப்படுகின்றனர்.

ஆப்பிரிக்க நாடுகளில்தான் அதிகபட்சமாக சுமார் 2 லட்சம் சிறுவர்கள் ஆயுதக் குழுக்களின் படைகளில் சேர்க்கப்பட்டுள்ளதாக ஐ.நா.வின் குழந்தைகளுக்கான அமைப்பான யுனிசெஃப் தெரிவிக்கிறது.

 • புரூண்டி,
 • காங்கோ,
 • ருவாண்டா,
 • லைபீரியா,
 • சோமாலியா,
 • சூடான்,
 • உகாண்டா

உள்ளிட்ட நாடுகளில் செயல்படும் ஆயுதக் குழுக்கள் சிறுவர்களுக்கென தனிப்படைப் பிரிவையே உருவாக்கியுள்ளன. “18 வயது நிரம்பும்வரை போர்முனைக்கு சிறுவர்களை அனுப்புவதில்லை’ என இந்த ஆயுதக் குழுக்கள் தெரிவித்தாலும் அது நம்பும்படியாக இல்லை.
உகாண்டாவை சேர்ந்த மக்கள் பாதுகாப்புப் படை என்ற ஆயுதக் குழு, 13 வயது நிரம்பிய சிறுவர்களைக்கூட அவர்களது பெற்றோரின் அனுமதியுடன் படையில் சேர்த்துக் கொள்கிறது. லத்தீன் அமெரிக்காவில் சுமார் 11 ஆயிரம் சிறுவர்கள் இரண்டு கெரில்லா படைகளில் உள்ளனர்.

ஆசியாவை பொருத்தவரை

 • இலங்கை,
 • ஆப்கானிஸ்தான்,
 • மியான்மர்,
 • இந்தியா,
 • இந்தோனேஷியா,
 • லாவோஸ்,
 • பிலிப்பின்ஸ்,
 • நேபாளம்

உள்ளிட்ட நாடுகளில் சிறுவர்கள் ஆயுதக் குழுக்களின் படையில் சேர்க்கப்படுகிறார்கள்.
சமீபத்தில் ஆப்கானிஸ்தானில் மனித வெடிகுண்டாக அனுப்பப்பட்ட 15 வயது சிறுவனை அரசுப் படையினர் பிடித்தனர். அந்தச் சிறுவன் மனித வெடிகுண்டு எனத் தெரியவந்ததும் அதிபர் ஹமீத் கர்சாய் பேரதிர்ச்சி அடைந்தார். இருப்பினும், பொது மன்னிப்பு அளித்து அந்தச் சிறுவனை அவனது தந்தையிடம் ஒப்படைத்தார். பாகிஸ்தானின் வரிஜிஸ்தான் பகுதியில் மதரஸôவுக்கு படிக்கச் சென்ற அந்தச் சிறுவனை தலிபான்கள் மனித வெடிகுண்டாக அனுப்பியிருந்தது பின்னர் தெரியவந்தது.

“”சிறுவர்களைப் படையில் சேர்ப்பது ஒருபுறம் இருக்க, குழந்தைகளைக் குறிவைத்துக் கொல்லும் சம்பவங்கள் ஆப்கானிஸ்தானில் அதிகரித்துள்ளன” என்கிறார் குழந்தைகள் உரிமைகளுக்கான ஐ.நா.வின் சிறப்புப் பிரதிநிதி ராதிகா குமாரசாமி.

கடந்த ஜூன் 15-ம் தேதி கூட்டுப் படைக்கு எதிரான தலிபான்களின் மனித வெடிகுண்டுத் தாக்குதலில் 11 குழந்தைகள் கொல்லப்பட்டனர். பள்ளிக் கட்டடங்களும், பள்ளிக் குழந்தைகளும் தீவிரவாதிகளின் இலக்காகிவருவது கவலை அளிக்கும் விஷயம். மனித கேடயமாக சிறுவர்கள் பயன்படுத்தப்படுகிறார்களோ என்று சந்தேகிக்க வேண்டியுள்ளது என்கிறார் அவர்.

18 வயதுக்கு குறைவான சிறுவர்களை படையில் சேர்ப்பதை தடுக்கும் வகையில் ஐ.நா. பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. சிறுவர்களுக்கு கல்வி, உணவு, சுகாதாரம் போன்றவை முழுமையாகக் கிடைக்க வேண்டும் என்பதில் யுனிசெப் உறுதிபூண்டுள்ளது.

இலங்கையில் விடுதலைப் புலிகள் மற்றும் கருணா படையினருக்கு எதிராக ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கடந்த மே 11-ம் தேதி கடும் எச்சரிக்கை விடுத்தது. சிறுவர்களைப் படையில் சேர்க்கும் நடவடிக்கையை நிறுத்த வேண்டும்; ஏற்கெனவே படையில் சேர்த்த சிறுவர்களை அவர்களுடைய பெற்றோரிடம் ஒப்படைக்க வேண்டும் என அறிவுறுத்தியது.

சூடான் நாட்டில் இயங்கும் சூடான் விடுதலைப் படை என்ற தீவிரவாத அமைப்புக்கும், யுனிசெஃப்புக்கும் இடையே ஜூன் 11-ம் தேதி ஓர் ஒப்பந்தம் கையெழுத்தானது. அதன்படி, தனது படையில் உள்ள சிறுவர்களை விடுவிக்க சூடான் விடுதலைப் படை அமைப்பு ஒப்புக்கொண்டுள்ளது. பல மாதங்களாக நடைபெற்ற இந்தப் பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டுள்ளதை யுனிசெஃப் வரவேற்றுள்ளது. எத்தனைச் சிறுவர்கள் விடுவிக்கப்படுவர் என உறுதியாகத் தெரியாவிட்டாலும், சுமார் 7000 சிறுவர்களை சூடான் விடுதலைப் படை விடுவிக்கும் எனத் தெரிகிறது.

ஆயுதக் குழுக்கள் ஒருபுறம் சிறுவர்களைச் சேர்ப்பது இருக்க பல நாடுகளில் அரசுகளே 18 வயது நிரம்பாத சிறுவர்களைப் படைகளில் சேர்க்கின்றன. 2004-ம் ஆண்டில் மியான்மர் அரசுப் படைகள் 12-18 வயதுக்குட்பட்ட சிறுவர்களை வலுக்கட்டாயமாக படையில் சேர்த்தன. இங்கிலாந்தில் 16 வயது நிரம்பிய சிறுவர்கள் அவர்களது பெற்றோரின் அனுமதியுடன் பிரிட்டிஷ் ராணுவத்தில் சேர்த்துக் கொள்ளப்படுகின்றனர்.

இதுபோல அமெரிக்காவில் 17 வயது நிரம்பிய சிறுவர்கள் ராணுவத்தில் சேர்த்துக் கொள்ளப்படுகின்றனர். ஆனால், அவர்கள் 18 வயது நிரம்பும்வரை சண்டையில் ஈடுபடுத்தப்படுவதில்லை. அமெரிக்கா, இங்கிலாந்தில் ராணுவச் சேவை கட்டாயம் என்பதால், மாணவப் பருவத்திலேயே சிறுவர்கள் படையில் சேர்க்கப்படுகின்றனர்.

மொத்தத்தில் ஆயுதப் போராட்டங்கள் நடைபெறும் நாடுகளில் எல்லாம் சிறுவர்கள் கடத்தப்படுவதும், அவர்கள் வலுக்கட்டாயமாக ஆயுதக் குழுக்களில் சேர்க்கப்படுவதும் வேதனை தரும் விஷயம். பள்ளி செல்ல வேண்டிய வயதில் சிறுவர்களை ஆயுதம்தாங்கி சண்டையிட அனுப்பும் தீவிரவாதக் குழுக்களை ஐ.நா. இன்னும் தீவிரமாகக் கண்காணிக்க வேண்டும்.

அனைத்து நாடுகளும் இந்த விஷயத்தில் ஐ.நா.வுக்கு முழு ஒத்துழைப்பு அளித்து, சிறுவர்களைப் படைகளில் சேர்ப்பதைத் தடுக்க வேண்டும்: ஏற்கெனவே தீவிரவாதக் குழுக்களில் இருக்கும் சிறுவர்களை விடுவிக்கவும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

Posted in 18, abuse, Afghan, Afghanistan, Afghanisthan, africa, Age, AK-47, AK47, Ammunitions, Analysis, Arms, Backgrounder, Burma, Burundi, Child, Children, clash, Clashes, Colombo, Congo, Cyanide, Darfur, Data, Delhi, Dinamani, Extremism, Fights, Force, Guerilla, Hamid, Hindu, India, Indonesia, IPKF, Islam, kalashnikov, Karzai, Kids, Laos, Latin America, Leninist, Liberia, LTTE, Marxists, Minors, Moslem, Muslim, Mynamar, Nepal, Op-Ed, Opinion, Pakistan, Phillipines, Prabakharan, Prabhakaran, Protect, Protection, Report, rights, Rwanda, Somalia, Sri lanka, Srilanka, Statistics, Stats, Statz, Sudan, Suicide, Teen, Teenage, Terrorism, Terrorists, Thinamani, Uganda, UN, Underage, UNICEF, Viduthalai, Viduthalai Puli, Viduthalai Puligal, Viduthalai Pulikal, Vituthalai, Vituthalai Puli, Vituthalai Puligal, Vituthalai Pulikal, War, Warlords, Weapons, Worldwide, Zaire | 1 Comment »