Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

Liberalization, WTO, US Subsidy Economy, Protection of Developed Countries

Posted by Snapjudge மேல் ஓகஸ்ட் 23, 2006

உலக வணிகம் எட்டாக் கனியா?

மு. இராமனாதன்

அமெரிக்காவின் சியாட்டில் நகரில் 1999-இல் உலக வணிக அமைப்பின் (World Trade Organisation – WTO) அமைச்சரவை மாநாட்டின்போது நடந்த கிளர்ச்சிகள் பிரபலமானவை. போராட்டக்காரர்களின் முக்கியக் குற்றச்சாட்டு, கட்டற்ற வணிகம் எனும் நஞ்சை, வளரும் நாடுகளின் வாயில் அமெரிக்கா புகட்டுகிறது என்பதாக இருந்தது. ஆனால் கட்டற்ற வணிகம் எனும் இலக்கை அடைய பெருந்தடையே அமெரிக்காதான் என்பது இப்போது தெளிவாகியிருக்கிறது. ஜூலை கடைசி வாரத்தில் ஸ்விட்சர்லாந்தின் ஜெனீவா நகரில் நடந்த ரபஞ-வின் பிரதான அமைச்சர்களின் பேச்சுவார்த்தை, தோல்வியில் முடிந்தது. தமது விவசாயிகளுக்கு வழங்கி வரும் அபரிமிதமான சலுகைகளையும் மானியங்களையும் பின்வாங்க அமெரிக்கா மறுத்துவிட்டது. சலுகைகள் மற்றும் மானியங்களால் செயற்கையாக விலை குறைக்கப்பட்ட செல்வந்த நாடுகளின் விவசாய விளைபொருள்களோடு தங்களால் போட்டியிட முடியவில்லை; இந்த வணிகம் சமனாக்கப்பட வேண்டும் என்று வளரும் நாடுகளின் பிரதிநிதிகளான இந்தியாவும் பிரேசிலும் வலியுறுத்தியபோது கட்டற்ற வணிகம் அமெரிக்காவுக்கும் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கும் கசந்தது. பேச்சுவார்த்தைகள் முறிந்தன. இப்போது வேளாண் மானியங்களை மையப்படுத்திய பேச்சுவார்த்தைகள் மீண்டும் தொடங்குமா என்பதிலிருந்து, ரபஞ எனும் அமைப்பே நீடிக்குமா என்பது வரையிலான ஐயங்கள் உறுப்பு நாடுகளிடையே தோன்றியிருக்கின்றன.

செல்வந்த நாடுகள், விவசாயிகளுக்கு மானியங்கள் வழங்குவது மட்டுமன்றி, விளைபொருள்களுக்கு ஏற்றுமதிச் சலுகைகள் வழங்கி சர்வதேசச் சந்தையில் அவற்றின் விலை குறைவாக இருக்கும்படிப் பார்த்துக் கொள்கின்றன. அதேவேளையில் பிற நாடுகளின் இறக்குமதிப் பொருள்களுக்குத் தீர்வைகள் விதித்து உள்ளூர்ச் சந்தையில் அவற்றின் விலை கூடுதலாக இருப்பதை உறுதி செய்து கொள்கின்றன. இன்னின்ன நாடுகள் இன்னின்ன பொருள்களைத்தான் இறக்குமதி செய்யலாம் என்கிற ஒதுக்கீடுகள் வேறு! மாறாக தீர்வைகளும், மானியங்களும், ஒதுக்கீடுகளும் படிப்படியாக அகற்றப்பட்ட, தடைகளற்ற வணிகம் நிலவி வரவேண்டும் என்பதுதான் ரபஞ -வின் கொள்கை. ஆனால் சமச்சீரான வணிகம் என்பதில் அமெரிக்காவும் ஐரோப்பாவும் இரட்டை வேடம் தரித்து வருகின்றன.

வேளாண்மை எப்போதும் செல்வந்த நாடுகளின் செல்லப்பிள்ளை! அமெரிக்காவில் ஆண்டொன்றில் உற்பத்தியாகும் பருத்தியின் மதிப்பு ரூ. 13,500 கோடி. இதற்கு அரசு வழங்கும் மானியங்களோ ரூ. 18,000 கோடி என்கிறார் “கார்டியன்‘ நாளிதழின் கட்டுரையாளர் ஹீதர் ஸ்டீவார்ட். 25 நாடுகளின் கூட்டமைப்பான ஐரோப்பிய ஒன்றியத்தின் வரவு – செலவுத் திட்டத்தில் 40% வேளாண் மானியங்களுக்கே போகிறது. இதன் மதிப்பு ரூ. 2 லட்சம் கோடிக்கு மேல்! ஒன்றியத்தின் மானியங்களில் 80% போய்ச் சேர்வது 20% பணக்கார விவசாயிகளிடமே என்கிறது “தி எகானமிஸ்ட்‘ பத்திரிகை. எனில், செல்வந்த நாடுகளின் பொருளாதாரத்தில் வேளாண்மையின் பங்கு வெறும் 2 சதவீதம்தான். எனினும் இந்நாடுகளில் பணக்கார விவசாயிகளின் அரசியல் செல்வாக்கு அதிகம். வரும் நவம்பரில் செனட் தேர்தலைச் சந்திக்கவிருக்கும் ஜார்ஜ் புஷ்ஷின் நிர்வாகத்திற்கு இது தெரியும். ஐரோப்பிய ஒன்றியத்தின் முக்கிய உறுப்பு நாடும், வேளாண் மானியங்களின் குருபீடமுமான பிரான்சின் அதிபர் தேர்தல் மே 2007-இல் வருகிறது. அவர்களுக்கும் இது தெரியும்.

வேளாண் மானியங்களைச் செல்வந்த நாடுகள் எல்லாக் காலங்களிலும் ஆதரித்தே வந்திருக்கின்றன. வேளாண் மானியங்களைக் குறைப்பதற்குக் கைமாறாக அமெரிக்கா அறிவுசார் சொத்துரிமை, காப்புரிமை போன்றவற்றில் தனது கோட்பாடுகளை வளரும் நாடுகள் ஏற்க வேண்டுமென்றது. மேலும் அமெரிக்காவும் ஐரோப்பாவும் உற்பத்தி மற்றும் சேவைத்துறைகளிலும் வளரும் நாடுகளின் சந்தைகளைத் திறக்க வேண்டுமென்றன. இதில் கணிசமான வெற்றியும் பெற்றன. ஆனால் வேளாண் மானியங்கள் அப்போதும் ஒரு சமரசத்தை எட்டவில்லை. ரபஞ-வின் அமைச்சரவை மாநாடு 2001-இல் வளைகுடா நாடான கத்தாரின் தோஹா நகரில் நடந்தது. வளரும் நாடுகளின் பொருளாதார முன்னேற்றத்திற்கு ஏற்ற பங்கு உலக வணிகத்தில் அவர்களுக்கு வழங்கப்பட வேண்டுமென்பது தோஹா உடன்படிக்கையின் சாரம். இது 2005-க்குள் எட்டப்பட வேண்டுமென இலக்கும் நிர்ணயிக்கப்பட்டது. பயங்கரவாதிகளின் 2001-செப்டம்பர் 11 தாக்குதலுக்குப் பிறகு, சர்வதேச ஒத்துழைப்பு எனும் சித்தாந்தம் வலுப்பெற்று வந்த காலத்தில் நடந்தது தோஹா மாநாடு. ஆனால் இந்த உணர்வு அதிக காலம் நீடித்திருக்கவில்லை.

2003-இல் மெக்ஸிக்கோவின் கான்கன் நகரில் நடந்த மாநாடு ஒத்திசைவின்றி முடிவுற்றது. 2005-இல் ஹாங்காங்கில் நடைபெற்ற மாநாட்டில் “தோஹா சுற்று’ மீண்டும் விவாதத்திற்கு வந்தது. வேளாண் விளைபொருள்களுக்கு வழங்கி வரும் ஏற்றுமதி மானியங்களை 2013-க்குள் விலக்கிக் கொள்ள செல்வந்த நாடுகள் சம்மதித்தன. எனில் அதைவிட பல மடங்கு அதிகமாக விவசாயிகளுக்கு வழங்கப்படும் வேளாண் மானியங்களைக் குறைப்பதைக் குறித்த தீர்மானத்தை அவை 2006-க்கு ஒத்தி வைத்தன. இதன் தொடர்ச்சியாகத்தான் ஜூலை இறுதியில் ஜெனீவாவில் ஆறு அமைச்சர்களின் (அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம், ஜப்பான், இந்தியா, பிரேசில் மற்றும் ஆஸ்திரேலியா) பேச்சு வார்த்தை நடந்தது; செல்வந்த நாடுகளின் பிடிவாதத்தால் தோல்வியுற்றது.

இது வளரும் நாடுகளுக்குப் பெரிய பின்னடைவுதான். கடந்த ஆண்டுகளில் கட்டற்ற வணிகத்திற்கு வளரும் மற்றும் ஏழை நாடுகளில் ஆதரவு அதிகரித்திருக்கிறது. தமது மனித வளமும் இயற்கை வளமும் வணிக லாபங்களை ஈட்ட வல்லவை என்பதை அவை உணர்ந்து கொண்டிருக்கின்றன.

ஆயினும் இந்தத் தோல்வியின் பின்விளைவுகள் என்ன?

முதலாவதாக, ரபஞ-விற்கு அமைப்பு ரீதியாக ஏற்படும் பாதிப்பு. 1947-இல் 23 உறுப்பு நாடுகளுடன் தொடங்கப்பட்டது “காட்’. அதன் இன்றைய வடிவமான ‘ரபஞ’-வின் உறுப்பினர் எண்ணிக்கை 150. ரபஞ குறைகளற்ற அமைப்பு அல்ல. ஆனால் சர்வதேச வணிகத்தை முன்னெடுத்துச் செல்லும் ஒரே அமைப்பு. ஐ.நா.வைப்போல பலவான்களுக்கு வீட்டோ அதிகாரம் இல்லாத அமைப்பு. உறுப்பினர் ஒவ்வொருவருக்கும் ஓர் ஓட்டுதான். உறுப்பு நாடுகளிடையே ஏற்படும் வணிகத் தகராறுகளை, இதுவரை பாரபட்சமின்றித் தீர்த்து வைத்திருக்கிறது ரபஞ. கோஸ்டா ரிகா போன்ற ஒரு குட்டித்தேசம் கூட அமெரிக்காவைக் கேள்வி கேட்கக்கூடிய அமைப்பு ரபஞ ஒன்றாகத்தான் இருக்க முடியும். தோஹா சுற்றின் தோல்வி ரபஞ-வை பலவீனப்படுத்தலாம்.

இரண்டாவதாக, சர்வதேச வணிக உடன்பாடு என்பது போய், இனிமேல் நாடுகளுக்கிடையிலான இருதரப்பு உடன்பாடுகள் அதிகமாகலாம். இந்தியாவின் வணிக அமைச்சர் கமல்நாத், ஐரோப்பிய ஒன்றியம், ஜப்பான் போன்றவற்றுடன் இந்தியா இரு தரப்பு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளும் என்று சொல்லியிருக்கிறார்.

தென்கிழக்கு ஆசிய நாடுகளின் ஒருங்கிணைப்பான “ஆசியான்’ அமைப்புடனும் இந்தியா வணிக ஒப்பந்தங்கள் ஏற்படுத்திக் கொள்ள முயற்சித்து வருகிறது. ஆனால் இதுபோன்ற இரு தரப்பு ஒப்பந்தங்களில் சக்தி மிகுந்த நாடுகள் செல்வாக்கு செலுத்துவதைத் தவிர்க்க முடியாது.

மூன்றாவதாக, கட்டற்ற வணிகம் எனும் சித்தாந்தத்தில் வெறுப்புற்ற நாடுகள் இன்னும் பாதுகாப்புக் கவசங்களைப் பூணலாம். மானியங்களும், ஒதுக்கீடுகளும் அதிகரிக்கலாம்.

இவை எல்லாமே உலகம் முழுமையும் ஒரே சந்தையாக்கும் கட்டற்ற வணிகம் என்னும் தொலைநோக்குத் திட்டத்திற்குப் பின்னடைவே ஆகும். பிரேசிலின் சர்வதேச வணிக உறவுகள் எனும் அமைப்பின் தலைவர் மார்கஸ் ஜாங் சொல்கிறார்: “”பல தரப்புகளை ஒருங்கிணைக்கும் வணிக அமைப்பு அவசியமானது. இது நெருக்கடியான காலகட்டம்தான். ஆனால் இதிலிருந்து நாம் மீண்டு வர வேண்டும். வருவோம்.” நம்பிக்கைகளால் ஆனதுதானே உலகம்!

(கட்டுரையாளர்: ஹாங்காங்கில் பணியாற்றும் பொறியாளர்.)

ஒரு பதில் to “Liberalization, WTO, US Subsidy Economy, Protection of Developed Countries”

  1. prashant said

    though i cant read, but your blog seems to be good.. why dont u down load the translate plugin from wordpress so that people who dont know your language can also read.

பின்னூட்டமொன்றை இடுக