ஆனந்த சுதந்திரம் அடைந்து விட்டோம்…?
தி. இராசகோபாலன், விடுதலை வீரர் பாஷ்யம்
இயற்கை உரமிட்ட வயல், மனம் விரும்பும் மகசூலைத் தந்தே தீரும்! தாய்ப்பால் ஊட்டி ஆரோக்கியமாக வளர்க்கப் பெற்ற குழந்தை, கொழுகொழு என்று வளர்ந்தே தீரும்! ஆனால், சர்வ பரித்தியாகத்தை உரமாக்கி, கண்ணீரைத் தண்ணீராக வார்த்து வளர்க்கப் பெற்ற சுதந்திரப் பயிர், எதிர்பார்த்த விளைச்சலைத் தரவில்லையே, ஏன்?
கொஞ்சமோ நம்மவர் தியாகம்? 1772இல், ஆர்க்காடு நவாப் கும்பினியின் படைத்துணையோடு சிவகங்கைச் சீமையை முற்றுகையிட்டான். அரண்மனை அருகே வெடிமருந்து வைக்கோல் போர்போல் குவித்து வைக்கப்பட்டிருந்தது. கும்பினியாரின் போர்ப்பிரகடனத்தைச் சந்திப்பதற்காக, வேலுநாச்சியார் படை நடத்தி வருகிறார்.
அன்று ஆயுதபூசை – நவராத்திரி விழா. இராஜேசுவரி அம்மனைத் தரிசிக்க ஆலயம் திறந்து விடப்பட்டது. குயிலி என்ற பணிப்பெண் தன்னுடல் முழுவதும் நெய் பூசிக்கொண்டு, நெருப்பைப் பற்ற வைத்துக்கொண்டு, அரண்மனை மேல் மாடத்திலிருந்து வெடிக்கிடங்கில் குதித்து, ஆயுதக் கிடங்கை அழித்துவிட்டாள். ஆயுதபூசை அன்று, உண்மையிலே ஆயுதபூசை செய்த அந்தக் குயிலியின் தியாகத்திற்கு ஈடு ஏது? இணை ஏது?
பணிப்பெண் மட்டுமன்று; பாலகன் ஒருவன் விடுதலை வேள்வியில் செய்த உயிர்த்தியாகத்தை இன்றைக்கு நினைத்தாலும் சிலிர்க்கின்றது. மகாராஜா ரஞ்சித் சிங் படையில், சீக்கியர்களில் ஒரு பிரிவான நாமதாரிகள் (கூக்கர்கள்) பணிபுரிந்து வந்தனர். குரு ராம்சிங்கைத் தலைவராகக் கொண்ட கூக்கர்கள், ஆங்கில ஆட்சியை முற்றாக அகற்றுவதில் முனைப்பாக நின்றனர். அவர்களைக் கூண்டோடு ஒழிக்க வேண்டும் என்று கங்கணம் கட்டியிருந்தான் கவுன் என்ற பிரிட்டிஷ் ராணுவ அதிகாரி. 1872ஆம் ஆண்டு அமிர்தசரசில் நீராடுவதற்காகச் சென்ற கூக்கர்களைத் தாக்கும்படி, கவுன் தன் கைக்கூலியான மலர்கோட்லா என்ற சமஸ்தானத்தை ஆண்ட மன்னனுக்குக் கட்டளையிட்டான். போரை எதிர்பார்க்காத கூக்கர்களில் 59 பேர்களைக் கைது செய்து, அவர்கள் வழிபாடு செய்த கோயில் வாசலிலேயே பீரங்கி வாயில் கட்டிச் சுட்டுத் தள்ளினான். 18 கூக்கர்களைச் சாலையோரத்தில் மரத்தில் கட்டித் தூக்கிலிட்டான்.
மேலும் பீரங்கியால் சுடப்பட இருந்தவர்களில் பதிமூன்று வயது பாலகனும் ஒருவன். இக்கொடுமையைக் காணச் சகியாத துணைக்கமிஷனரின் மனைவி, அந்தப் பாலகனை மட்டும் விட்டுவிடுமாறு கணவனிடம் கெஞ்சினாள். அதற்கிணங்க அந்தக் கொடும்பாதகன் அந்தப் பாலகனைப் பார்த்து, “”அந்த நீசன் ராம்சிங்கின் கூட்டத்தில் இனிச் சேர மாட்டேன் என வாக்களித்தால், விட்டு விடுகிறேன்’ எனச் சொன்னவுடனேயே, அந்தப் பாலகன் துணைக் கமிஷனரின் தாடியைப் பிடித்து உலுக்கி, “”என் குருவை அவமதிக்க உனக்கு என்ன தைரியமடா” என்றான். உடனே அந்தப் பாவி அப் பாலகனின் கைகளைத் தனியாக வெட்டி, அதற்குப் பின், பீரங்கி வாயில் அவனையும் கட்டிச் சுட்டுவிட்டான். இந்தியாவைச் சுற்றிப் பார்க்க வந்த சோவியத் ஓவியர் “விர்ஷெக்தசின்’ அந்தக் கோரக் கொலையைக் கண்டு, ஓவியமாகவே தீட்டிவிட்டார். ரத்த சாட்சியாக வரையப்பட்ட அந்த ஓவியம், பொற்கோயிலின் கண்காட்சியில் வைக்கப்பட்டிருப்பதை இன்றைக்கும் காணலாம்.
பணிப்பெண் – பாலகன் மட்டுமன்றி, விடுதலைப் போராட்டத்தில் ஆதிவாசிகள் ஆற்றிய தியாகமும் அளப்பரியது. பஞ்சாப் படுகொலையால் சினந்தெழுந்த அல்லூரி சீதாராம ராஜு, ஆதிவாசிகளுக்கு மத்தியில் விடுதலைப் பறையை வேகமாகத் தட்டினார். அல்லூரியைக் கண்டுபிடித்து அவர் கதையை முடித்து விட வேண்டுமென்று கணக்குப் போட்ட ஆங்கில அதிகாரிகளுக்கு அவர் கோதாவரி மாவட்டத்தில், மலைப்பகுதியில், ஆதிவாசிகளுக்கிடையில் தலைமறைவாக வாழ்வதாகச் செய்தி கிடைத்தது. அல்லூரியைச் சரணடைய வைப்பதற்காக ஆங்கில அதிகாரிகள், ஆதிவாசிகளைச் சித்திரவதை செய்தனர். மலபார் ஸ்பெஷல் போலீûஸ ஏவி, ஆதிவாசிகளின் குழந்தைகளைத் துப்பாக்கி முனையிலுள்ள குத்தீட்டியால் குத்திக் கொன்றனர்; போராளிகளைக் கொன்று குவித்தனர். இறுதியில் ஆதிவாசிப் பெண்களைப் பாலியல் வன்முறைக்கு உட்படுத்த முனைகையில், அல்லூரி சீதாராம ராஜு அக் கொடுமையிலிருந்து பெண்களைக் காக்க, தானே சரணடைந்தார். சரணடைந்த இடத்திலேயே அல்லூரி சுட்டுக் கொல்லப்பட்டார். அல்லூரி செய்த தியாகம், அன்னியரை விரட்டியது; ஆனால், நமக்கு அது ஆனந்த சுதந்திரத்தைத் தந்ததா?
இந்திய விடுதலைப் போரில் முன்னணித் தலைவர்கள் ஆற்றிய தொண்டு வெளியில் தெரிகின்றது; ஆனால், முகவரியே தெரியாத பலர் ஆற்றிய தொண்டு இன்னும் இருட்டில்தானே கிடக்கின்றது! மன்னார்குடி சேரன்குளத்தில் பிறந்த ஓர் ஓவியர், 1932 ஜனவரி 25ஆம் தேதி இரவு, ஓவியத்தில்கூட வரைய முடியாத அர்ப்பணிப்பைச் செய்திருக்கிறார். சென்னை ஜார்ஜ் கோட்டையிலுள்ள நீண்டு உயர்ந்த 200 அடிக்கம்பத்தில், தன் கையாலேயே தீட்டிய மூவர்ணக் கொடியை ஏற்றி விட்டார். நள்ளிரவில் கலங்கரை விளக்கத்தின் ஒளி வினாடிக்கு வினாடி சுற்றி வரும்போது, கம்பத்தோடு உடலை ஒட்டிக் கொண்டு உச்சியில் ஏறி, அந்த அரும்பெரும் பணியைச் செய்திருக்கிறார். அதிர்ச்சியடைந்த ஆங்கில அதிகாரிகள், கே. பாஷ்யம் ஐயங்கார் என்ற அந்த ஓவியரைப் பெல்லாரி சிறையில் தள்ளினர்.
பெல்லாரி சிறையில் குல்லாய் அணிய மறுத்தமைக்காகத் தேசபக்தர் மகாவீர் சிங்கினுடைய கை – கால்களைக் கட்டி, மற்ற கைதிகள் பாடம் பெற வேண்டி, அனைவரும் பார்க்கும்படியாக 30 கசையடிகள் கொடுக்க ஆணையிட்டான் மேஜர் ஜெனரல் இன்ஸ். மகாவீர் சிங்கிற்குக் கொடுக்கப்பட்ட தண்டனையைக் கண்டு மனங்கொதித்த ஓவியர் பாஷ்யத்திற்குப் பழிக்குப் பழி வாங்க வேண்டுமென்ற எண்ணம் ஏற்பட்டது. சிறையதிகாரிகளிடம் தனக்குப் பேதி மருந்து வேண்டும் என்று கேட்டு வாங்கி, அதை வாயிலேயும் போட்டுவிட்டார். ஆனால், அதை விழுங்கிவிடாமல் ஒருபக்கத்தில் வாயிலேயே ஒதுக்கி வைத்து, வெளியில் துப்பிவிட்டார். “அவசரம்’ என்று சொன்னவுடன் கழிப்பிடம் போக, கைவிலங்குகளை அவிழ்த்து விட்டனர். வெளியே வந்த ஓவியர் யாரும் எதிர்பார்க்காத வகையில், பூட்ஸ் காலால் ஜெனரல் இன்ஸ் தலைமேலே ஆத்திரம் தீர ஓங்கி ஓங்கி உதைத்தார். “எங்கள் வீரர் மகாவீர் சிங்கிற்குக் கொடுத்த தண்டனைக்கு இதுதான் பரிசு” என்றார். வெறி கொண்டெழுந்த மேஜர் இன்ஸ், ஓவியர் பாஷ்யத்தைத் தனியறையில் தள்ளி சதைநார்கள் பிய்ந்து ரத்தம் பீறிட்டு அடிக்குமாறு சவுக்கால் அடித்தான். ஒவ்வோர் அடி விழும்போதும் ஒரு சொட்டுக் கண்ணீர் விடாமல், “வந்தேமாதரம் ஜெயபேரிகை கொட்டடா’ என முழங்கினார். கசையடி முடிந்ததும் அவர் வாய் “ஜயமுண்டு பயமில்லை மனமே’ எனும் பாரதியின் பாடலை முணுமுணுத்தது. இவ்வாறு பெற்ற சுதந்திரம் எதிர்பார்த்த பலனைத் தந்ததா?
1947ஆம் ஆண்டு சுதந்திர தினத்தையொட்டி, அரசியல் நிர்ணய சபையில் பேசிய நேரு பெருமானார், “”உலகம் உறங்குகின்ற நடுநிசி வேளையில் இந்தியா விழித்தெழுந்தது. வாழ்வும் விடுதலையும் பெறுகின்றது” என்றார். அவர் சொன்னவாறு விடுதலை வந்தது; வாழ்வு வராமல் போனதேன்? இன்றைக்கும் நாட்டில் 30 கோடிப் பேர் ஒருவேளை உணவுக்கும் உத்தரவாதமின்றி வாழும் நிலைதானே உள்ளது! உழவுத்தொழில் செய்தும், தரித்திரம் தீராததால் தற்கொலை செய்துகொண்ட 22 திருவாரூர் மாவட்ட விவசாயிகள் குடும்பங்களுக்கு, முதல்வர் நிவாரணம் வழங்கத்தானே வேண்டியிருக்கிறது!
“ஏழ்மை மிக்கவரும் இது தங்கள் நாடு என்றும், இதை உருவாக்குவதில் தங்களுக்கும் பங்கும் பொறுப்பும் உண்டு என்றும் உணர்வு கொள்ளும் வகையில் அமையும் இந்திய நாட்டை உருவாக்கவே நான் பாடுபடுவேன்” என மகாத்மா காந்தியடிகள் பிரகடனம் செய்தாரே, அந்த மகான் கண்ட கனவு நனவாகாமல் போனதேன்?
இந்த மண்ணின் மைந்தர்கள் தங்களுக்கு வாழ்வு விடியாததால்தானே, அன்னிய தூதரகங்களுக்கு முன்னர் விடிவதற்கு முன்னால் வரிசையில் நிற்கிறார்கள்! இவற்றுக்குரிய காரணங்களை எண்ணிப் பார்த்தால், இந்தநாள், இனியநாள் ஆகும்!