திரவ வெடி பொருட்கள்
 |
 |
பல வகை வெடிபொருட்கள் |
லண்டன் விமான நிலையங்களில் இருந்து புறப்படும் விமானங்களை திரவ வெடி பொருட்களைக் கொண்டு தகர்க்க மேற்கொள்ளப்பட்ட ஒரு சதியை தாம் கண்டு பிடித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இது இங்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதேவேளை திரவ வெடிபொருட்கள் குறித்தும் பலர் ஆர்வமாக அறிய முற்பட்டுள்ளனர்.
ஒரு விமானத்தில் வெடிக்கும் உபகரணத்தினை கடத்தி செல்ல வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு திரவ வடிவிலான வெடிகுண்டு ஒரு கவர்ச்சியான மாற்று வழியாகும்.
திரவ வடிவிலான வெடிகுண்டினை சுலபமாக மறைத்து விடலாம். பிளாஸ்டிக் வெடிப்பொருட்களை தேடுவதற்கு பயன்படும் மிக உயர் நுட்பம் கொண்ட இயந்திரத்தினால் கூட இவற்றை கண்டு பிடிக்க முடியாமல் போகலாம்.
நன்கு தெரிந்த திரவ வடிவிலான எரிபொருள் என்றால், அது நைட்ரோகிளிசரின் ஆகும். இது ஒரு சிறு நகர்விலும் வெடிக்க கூடிய நிறமற்ற திரவம் என்று கூறப்படுகின்றது.
நிறமற்ற தன்மையினால், விமானங்களை அழிக்க வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு இது ஒரு கவர்ச்சியான அம்சமாக தெரிந்தாலும், வெடிகுச்சிகள் இல்லாமல் இவை வெடிக்காது என அறிவியல் வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.
உண்மையில், பெரும்பாலான திரவ வெடிகுண்டுகளை வெடிக்க வைக்க, வெப்பம் அல்லது மின்சார உந்துதல் தேவை. ஆகவே திரவ வெடிகுண்டுகளை வெடிக்க வைக்க காமிராக்களில் இருக்கும் ஃபிளாஷ் அல்லது பேட்டரியினால் இயங்கும் உபகரணம் தேவை.
சாதாரண வீட்டில் பயன்படும் பெரும்பாலான பொருட்களில், உதாரணமாக நகப் பூச்சினை எடுக்க பயன்படும் திரவம், கேசத்திற்கு நிறம் கொடுக்கும் திரவங்கள் மற்றும் பூச்சிக்கொல்லி திரவங்களை கொண்டு கூட திரவ வெடிப்பொருளினை உருவாக்கலாம்.
ஆனால் இதில் கடினமான விடயம் என்னவென்றால், இவற்றினை சரியான விகிதத்தில் கலக்க வேண்டும். கடந்த ஆண்டு ஜுலை மாதம் ஏழாம் ஆம் திகதி தாக்குதல் நடத்திய குண்டுத்தாரிகள், வீட்டில் தயாரிக்கப்பட்ட ட்ரைஅசிடோன் ட்ரைபெராக்சைட் என்ற வெடிப்பொருளினை பயன்படுத்தியதாக லண்டனில் இருக்கும் காவல்துறையினர் நம்புகின்றனர்.
இந்த வெடிப்பொருளை கூட திரவ வடிவில் தயாரிக்க முடியும். ஆனால் சரியான விகிதத்தில் கலவையினை உருவாக்குவதற்கு நிபுணத்துவம் தேவை. இந்த பொருட்களை கொண்டு, வெடிப்பொருட்களை உருவாக்க முயலும் அனுபவம் அற்றவர்கள், பெரும்பாலும் வெடிக்குண்டு தயாரிக்கும் போது பொருட்கள் வெடித்து கொல்லப்படுகின்றனர்.
இது போன்று வெடிப்பொருளாக செயற்பட கூடிய மேலும் பல திரவங்கள் இருக்கின்றன. அவற்றில் ஒன்று நைட்ரோமீதேன் – இது மாதிரி விமானங்களில் எரிபொருளாக பயன்படுகின்றது. இது தொழிற்சாலைகளிலும் பயன்படுகின்றது.
அதே போன்று நைட்ரோ ஈதேன் மற்றும் மீதேல் நைட்ரேட்டும் இருக்கின்றது.
இந்த இரசாயன பொருட்களை பெறுவதற்கு கடினம் அல்ல, ஆனால் இவற்றை வெடிக்க வைக்க கூடிய சரியான பொருளினை கண்டுபிடிப்பதற்கு, அறிவும், அனுபவமும் தேவை.
முக்கியமாக, திரவப் வெடிப்பொருட்களால் மிகுந்த சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் தயாராவதில்லை. ஆனால் விமானங்கள் என்று பார்த்தால், சக்தி வாய்ந்த குண்டுகள் தேவை இல்லை. ஏனென்றால் சிறிய வெடித்தாக்குதல் பெரிய பாதிப்பினை ஏற்படுத்த வல்லது.
காற்றழுத்தம் செய்யப்பட்ட விமானத்தின் அறைகள், வானில் உயரமாகவும், வேகமாகவும் பறக்கும் போது ஏற்படும் மாற்றங்கள் போன்றவை, ஒரு சிறிய வெடித்தாக்குதலின் பாதிப்பினை கூட பூதாகரமாக்கும், அதன் விளைவாக விமானம் முற்றாக நாசம் அடையும்.