விடுதலை வேள்வியில்..: மருதிருவர்
ரவிக்குமார்
பீரங்கிக் குண்டுகளால் துளைக்கப்பட்டும், கால வெள்ளத்தால் கரைக்கப்பட்டும் சிதிலமடைந்து காட்சியளிக்கும் அரண்மனைகள்… பிரம்மாண்டமான காளையார் கோவில் கோபுரம்… இவற்றின் பின்னணியில் துவங்குகிறது “மருதிருவர்’ ஆவணப்படம். நாட்டின் சுதந்திரத்துக்காகப் பாடுபட்ட இரண்டு மாவீரர்களை நாம் மறந்ததற்கு அடையாளமாய் அவர்களின் அரண்மனையும், மருது மன்னர்களின் இறைப்பணிக்கு அடையாளமாய் உயர்ந்து நிற்கும் கோபுரங்களும் நம்மை 18-ம் நூற்றாண்டுக்கு கைபிடித்து அழைத்துச் செல்கின்றன.
கதவுகளே இல்லாத அரண்மனை, காவலர்களே இல்லாமல் மக்களை சந்தித்து, மருதிருவர் ஆட்சி செய்த முறை. கோபுரங்களைக் கட்டித் தருவது, மண்டபங்களைக் கட்டித் தருவது என 87 கோயில்களில் மருது பாண்டியர்கள் இறைப்பணி செய்திருக்கும் விவரம், இந்துக் கோயில்களைத் தவிர, இஸ்லாமிய, கிறிஸ்தவ ஆலயங்களிலும் நற்பணிகளைச் செய்திருக்கும் விவரம், வீரபாண்டிய கட்டபொம்மன், ஊமைத்துரை போன்ற சக பாளையத்துக் காரர்களிடமும், திப்பு சுல்தானின் தளபதியாக இருந்த துந்தா ஜீவாக் ஆகியோரிடமும் நட்பு பாராட்டிய விதம், ஒற்றுமையை வலியுறுத்தி இந்திய சுதந்திரப் போராட்ட வரலாற்றின் போராளி அணியில் இருந்து வெளியிடப்பட்ட முதல் சுதந்திரப் போராட்ட அரசியல் பொது அறிக்கையை மருது பாண்டியர்கள் வெளியிட்ட நிகழ்ச்சி குறித்த தகவல்கள் இந்த ஆவணப் படத்தில் உள்ளன.
மருதிருவரைப் பற்றி சரித்திரத்தின் பக்கங்களில் காணமுடியாத பல விஷயங்கள், இந்த ஆவணப் படத்தில் பதிவாகியிருக்கின்றன.
இந்த ஆவணப்படத்தை தயாரித்திருப்பவர் தீனதயாள பாண்டியன். இவர், பெரியமருதுவின் எட்டாவது வாரிசு. அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கு ஆடைகளை ஏற்றுமதி செய்யும் “ஃபர்ஸ்ட் கார்மென்ட்ஸ் மேன்யுஃபாக்சரிங் கம்பெனி’யின் நிர்வாக இயக்குனராக இருக்கிறார். மருதிருவர் ஆவணப்படத்தின் சி.டி.யை தமிழக ஆளுனரின் கையால் வெளியிட்டிருக்கும் தீனதயாள பாண்டியனிடமும், படத்தின் இயக்குனர் தினகரன் ஜெய்யிடமும் பேசியதிலிருந்து…
மருதிருவரின் வாரிசுகள் அனைவரையும் ஆங்கிலேய ஏகாதிபத்தியத்தினர் கொன்று விட்டதாகத்தான் கேள்விப்பட்டிருக்கிறோம்…நீங்கள் பெரியமருதுவின் எட்டாவது வாரிசு என்கிறீர்களே..?
நீங்கள் கேள்விப்பட்டதும் உண்மைதான். நான் சொல்வதும் உண்மைதான். பெரிய மருது, சின்ன மருதுவோடு சேர்த்து ஏறக்குறைய 500 பேருக்கு தூக்கு தண்டனையை நிறைவேற்றினர். அதோடு அவர்களின் கழுத்தை வெட்டிச் சாய்த்த சம்பவமும் நடந்திருக்கிறது. மருதுபாண்டியர்களின் ஆண் வாரிசுகளை நாடு கடத்திவிட்டார்கள். பெண் வாரிசுகளை விட்டுவிட்டார்கள். நான் பெண் வாரிசின் வம்சாவளியில் வந்தவன்தான்.
சுதந்திரப் போராட்டத்தில் மருதுபாண்டியர்களின் பங்களிப்பு எத்தகைய முக்கியத்துவம் வாய்ந்தது?
வரலாற்றின் பக்கங்களில் இடம்பெற்றிருக்கும் இந்தியாவின் முதல் சுதந்திரப் போர் 1857-ல் நடந்த சிப்பாய் கலகம்தான். மங்கள் பாண்டே என்பவரால் தொடங்கப்பட்ட இந்த கலகம், சலசலப்புதானே தவிர, போர் இல்லை. அதோடு இந்த கலகத்துக்கு சுதந்திரப் போராட்ட உணர்வை விட, மத அடிப்படையான காரணங்களே அதிகம் இருந்ததும் எல்லோருக்கும் தெரிந்த விஷயம்தான்.
ஆனால் சிப்பாய் கலகம் நடப்பதற்கு 57 ஆண்டுகளுக்கு முன்பே, ஏகாதிபத்தியத்தை எதிர்ப்பதற்காக பல பிரிவுகளில் இருப்பவர்களும் ஒன்றுபட வேண்டிய அவசியத்தை வலியுறுத்தி மருதிருவரால் திருச்சி மலைக்கோட்டையிலும், ஸ்ரீரங்கத்திலும் ஒட்டப்பட்ட “ஜம்புத்வீபப் பிரகடனம்’, (ஒஹம்க்ஷன்க்ஜ்ண்ல்ஹம் ஙஹய்ண்ச்ங்ள்ற்ர்) விவசாயிகள், நெசவாளர்கள், வணிகர்கள் என அனைத்துப் பிரிவினரையும் சுதந்திரக் கிளர்ச்சிகளில் பங்கேற்கும் உத்வேகத்தைத் தந்தது. 30 நாள்கள் போராட்டத்துக்குப் பிறகே சிவகங்கை கோட்டையை ஆங்கிலேயர்களால் பிடிக்கமுடிந்தது.
அப்படியும் ஆங்கிலேயர்களால் மருதிருவரைப் பிடிக்கமுடியவில்லை. 150 வீரர்களுடன் மருதிருவர் நடத்திய கொரில்லா போர்முறையை ஆங்கிலேயர்களால் தாக்குப்பிடிக்க முடியவில்லை. கொதிப்படைந்த ஆங்கிலேயர்கள் மருதிருவர் கட்டிய காளையார் கோவில் கோபுரத்தை தகர்க்கப் போவதாக செய்தி பரப்புகின்றனர். அதேசமயத்தில், மருதிருவரை உயிரோடோ, பிணமாகவோ பிடித்துத் தருபவர்களுக்கு 4000 கூலிச்சக்கரம், அவர்களின் சந்ததிகளுக்கு 3000 கூலிச்சக்கரம் பரிசு என்று அறிவிக்கின்றனர்.
ஒரு கூலிச்சக்கரம் என்பது மூன்று ரூபாய்க்குச் சமம். கோபுரத்தை காக்கும் பொருட்டு போரை நிறுத்தி விட்டு, பதுங்கியிருந்த மருதிருவரை பணத்திற்கு ஆசைப்பட்டு இந்த மண்ணின் மைந்தர்களே காட்டிக் கொடுக்கின்றனர். வீரத்தில் தொடங்கி துரோகத்தால் முடிந்த மருதிருவரின் சரித்திரத்தை ஆவணப்படுத்துவது எங்களின் கடமை என்று நினைத்தோம். செய்து முடித்தோம்.
நீங்கள் மருதிருவரின் வாரிசு என்பதால் இதைச் செய்ய வேண்டும் என நினைத்தீர்களா?
அது மட்டுமே காரணம் இல்லை. இந்தப் படத்தில் வீரபாண்டிய கட்டபொம்மன், ஊமைத்துரை, திப்புசுல்தான், அவரின் தளபதி என மருதிருவரின் சமகாலத்தில் வாழ்ந்த போராளிகளைப் பற்றியும் நிறையக் குறிப்புகள் இருக்கின்றன. கடவுளின் கருணையால் நேரிடையாகவும், மறைவாகவும் ஆயிரக்கணக்கான ஊழியர்களுக்கு பணியை அளிக்கும் நிலையில் இருக்கிறேன். அதனால் இந்த சி.டி.யை விற்பனைக்காக நான் தயாரிக்கவில்லை.
இந்த சி.டி.யை மக்களுக்கு நேரிடையாகக் கொண்டுசெல்லும் வகையில் அறிமுகக் கூட்டங்களை நடத்துகிறோம். வாரிசு என்பதால் மருதிருவர் பற்றிய படத்தை எடுத்திருக்கிறேன் என்கிறீர்கள். அடுத்து நாங்கள் எடுத்துக் கொண்டிருக்கும் படம், ஆங்கிலேயர் காலத்தில் வழக்கத்திலிருந்த “குற்றப்பரம்பரை’ என்ற சட்டத்தைப் பற்றியது. இந்தச் சட்டத்தின்படி படையாச்சி, கள்ளர்கள், மறவர்கள்…போன்று இந்தியா முழுவதும் 231 சாதிப் பிரிவில் இருக்கும் ஆண்கள் தினமும் இரவில் தங்களின் ரேகையை காவல் நிலையத்திலிருக்கும் பதிவுப் புத்தகத்தில் பதித்துவிட்டு, அங்கேயே தூங்கிவிட்டு, காலையில்தான் வீட்டுக்குச் செல்லவேண்டும் என்ற நிலை இருந்தது.
“ஆங்கிலேயர்களின் ஆட்சியில் நாம் எல்லோருமே குற்றப்பரம்பரையினராகத்தான் இருந்தோம். அப்படியிருக்கும்போதுநமக்குள் இன்றைக்கு ஏன் இவ்வளவு பிரிவினை? என்ற கேள்வியை சற்று உரக்கவே எழுப்பும் “ரேகை’ ஆவணப்படம்.
-என்றார் தீனதயாள பாண்டியன்.
இனி, இயக்குனர் தினகரன் ஜெய், “”வரலாற்று அறிஞர்களின் பார்வையில் ஜம்புத்வீபப் பிரகடனம் என்பது பிரெஞ்சுப் புரட்சியின்போது நிகழ்த்தப்பட்ட பாஸ்டில் சிறைத் தகர்ப்புக்கு இணையானதாக கருதப்படுகின்றது. 15 வயதான சின்ன மருதுவின் மகன் உள்பட 73 புரட்சியாளர்கள் நாடு கடத்தப்பட்டதாக குறிப்பு இருக்கிறது. சுதந்திரம் அடைந்து 57 வருடங்களுக்குப் பின்தான் மருதிருவரின் அஞ்சல்தலையை அரசு வெளியிட்டிருக்கிறது. அந்த வீரர்களின் சிதிலமான கோட்டைகளை, வாழ்விடங்களை, அவர்கள் பயன்படுத்திய பொருட்களை அரசுடமையாக்கிப் பாதுகாக்க வேண்டும். அதுதான் அந்த மாவீரர்களுக்கு நாம் செலுத்தும் நிஜமான மரியாதையாக இருக்கும்!” என்கிறார் தினகரன் ஜெய்.