Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

Archive for ஓகஸ்ட் 3rd, 2006

Is US a warlord?

Posted by Snapjudge மேல் ஓகஸ்ட் 3, 2006

“யு.எஸ். மார்க்’ ஜனநாயகம்

ஜனகப்பிரியா

இப்புவியிலேயே மிக அமைதியான நாடு என ஜார்ஜ் புஷ் வர்ணித்த அமெரிக்கா, கடந்த ஐம்பது ஆண்டுகளாக ஏதாவது ஒரு நாட்டுடன் ஒவ்வோர் ஆண்டும் போர் புரிந்த வண்ணமாக இருக்கிறது. இப்போதைக்கு உலகில் உள்ள எண்ணெய் வளம் முழுவதையும் தன்னுடைய கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவது அமெரிக்க வெளியுறவுக் கொள்கையில் முக்கிய இடத்தைப் பெறுகிறது.

பால்கன், மத்திய ஆசியப் பகுதிகளில் அமெரிக்காவின் ராணுவத் தலையீடுகள் அங்கிருக்கும் எண்ணெய் வளத்தினை இலக்காகக் கொண்டவை. உலக எண்ணெய் வளத்தில் மூன்றில் இரண்டு பங்கு மேற்காசியாவில் இருப்பதனால்தான் அப்பகுதியின் அரசியல் மேலாண்மையைத் தன் பிடிக்குள் கொண்டு வரத் துடிக்கிறது அமெரிக்கா.

கிறிஸ்டோபர் கொலம்பஸ் அமெரிக்காவினைக் கண்டுபிடித்த 500வது ஆண்டுவிழாக் கொண்டாட்டங்களை எதிர்த்து, ஐரோப்பிய, ஆசியப் பூர்வீகக் குடிகளின் வம்சாவளியினரும் மனித உரிமை ஆர்வலர்களும் 1992-ல் எதிர்ப்பியங்களை நடத்தினர். அதற்கான வரலாற்று ரீதியான நியாயங்கள் உண்டு. உலகின் இயற்கை வளங்கள் அனைத்தையும் தானே அடைய வேண்டுமென்ற தீவிர வெறியினால் தென் அமெரிக்கக் கண்டத்தில் சிலி, குவாட்டிமாலா, பிரேஸில், பெரு, நிகரகுவா ஹோண்டுராஸ், எல்சால்வடார், மெக்ஸிகோ போன்ற நாடுகளிலெல்லாம் தனது உளவுத்துறையான சி.ஐ.ஏ.வின் ரகசிய, நேரடி நடவடிக்கைகளின் வழியாக அந்த நாடுகளின் அமைதியையும் சுதந்திரத்தையும் சீர்குலையச் செய்த மிகப்பெரிய “ஜனநாயகக் காவலனாக’ அமெரிக்கா இருக்கிறது!

நாகசாகி, ஹிரோஷிமா நகரங்களின் மீது அணுகுண்டு வீசி “அமைதியை’ ஏற்படுத்தியது தொடங்கி, வியட்நாமில் பனிரெண்டு ஆண்டுகளுக்கும் மேலாகப் போர் நடத்தி மக்களின் வாழ்க்கையில் “ஜனநாயகம்’ தழைக்கப் பாடுபட்டதை உலகம் மறக்க முடியுமா?

1970 மார்ச் 25-ல் அப்போதைய அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஹென்றி கிஸிஞ்சர் தலைமையில் கூடிய 40 பேர் கொண்ட ஆலோசனைக் கமிட்டி, ஜனநாயக ரீதியில் தேர்ந்தடுக்கப்பட்ட சோஷலிச அரசாங்கத்தைக் கவிழ்க்க, சிலியின் ராணுவ எதிர்ப்புரட்சிக்கு 1 லட்சத்து 25 ஆயிரம் டாலர் நிதி ஒதுக்குகிறது. 1973 செப்டம்பர் 11-ந் தேதி மக்கள் வாக்களித்துத் தேர்ந்தெடுத்த அரசாங்கத்தை சி.ஐ.ஏ.வின் வழிகாட்டுதலோடு ராணுவ பலத்தால் சீர்குலைத்து மக்கள் தலைவர் அலண்டேவைக் கொலை செய்தனர். பல்லாயிரக்கணக்கான மனித உரிமை ஆர்வலர்களும் கலைஞர்களும் சான்டியாகோ விளையாட்டு மைதானத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டனர்.

1988-ல் ஆயிரக்கணக்கான குர்து இன மக்களைக் கொன்று குவித்தார் சதாம் என்று குற்றச்சாட்டு. அதே ஆண்டில்தான் அமெரிக்க விளைபொருள்களை வாங்க 500 மில்லியன் டாலர்களை அமெரிக்க அரசாங்கம் சதாம் உசேனுக்கு மானியமாக வழங்கியது. குர்து இனமக்கள் அழித்தொழிக்கப்பட்டதற்குப் பரிசாக அடுத்த ஆண்டில் மானியத் தொகையை இரு மடங்காக்கி 1 பில்லியன் டாலர்களை வழங்கியது அமெரிக்கா. ஆந்த்ராக்ஸ் கிருமிகளை உண்டுபண்ணும் நுண்ணுயிர் வித்துகளையும் ஹெலிகாப்டர்களையும் ரசாயன உயிரியல் ஆயுதங்களை உற்பத்தி செய்யத் தேவையான துணைப்பொருள்களையும் சதாமுக்குக் கொடுத்தது அமெரிக்கா. ஆனால் 1990-ல் சதாம் குவைத் நாட்டுக்குள் படைகளை அனுப்பி போர் நடவடிக்கைகளை மேற்கொண்டார் என்பதற்காக அவர் மீது கோபம் வரவில்லை அமெரிக்காவுக்கு; தன்னுடைய உத்தரவின்றி அனுப்பினார் என்பதுதான் குற்றம்.

வளைகுடாப் போருக்குப் பிந்தைய ஆண்டுகளில் அமெரிக்கா விதித்த தடைகளின் காரணமாக, உணவு, மருந்து, சுத்தமான குடிநீர், மருத்துவமனை உபகரணங்கள் எல்லாமும் மறுக்கப்பட்டுள்ளன. இதனால் ஐந்து லட்சம் இராக்கியக் குழந்தைகள் இறந்திருக்கின்றன. இதைப்பற்றி அமெரிக்காவின் ஐ.நா. தூதுவராக இருந்த, “மேடலின் ஆல்பிரெட்’ கூறியது என்னவென்றால்: “”அது ஒரு கடினமான முடிவுதான், இருந்தாலும் அடைந்த லாபத்தை எண்ணும்போது கொடுத்த விலை சரிதான் என்று நாங்கள் எண்ணுகிறோம்”.

பனிரெண்டு ஆண்டுகள் கழித்து இராக்கின் மேல் இன்னொரு போர். இரண்டரை லட்சத்திற்கும் அதிகமாக மக்கள் கொல்லப்பட்டிருக்கின்றனர். லட்சக்கணக்கில் குழந்தைகள் நோய் கண்டு இறந்து போயின.

இறந்து போனவர்களுக்கு இழப்பீடு வழங்குவதில்கூடப் பாரபட்சம். அமெரிக்க சிப்பாய் இறந்தால் 5 லட்சம் டாலர். இராக்கிய பிரஜை இறந்தால் இரண்டாயிரம் டாலர் கொடுப்பதே கடினம். ஆனால் 30 ஆயிரம் டாலர்களுக்கு மேல் வழங்குவதாக விளம்பரம். கடந்த சில ஆண்டுகளில் 300 டன் எடையுள்ள யுரேனியத்தினாலான கதிரியக்கத் தன்மை கொண்ட ஆயுதங்களை இராக்கின் நிலப்பரப்பில் வயல்வெளிகளில் வீசியிருக்கிறது அமெரிக்க ராணுவம்.

அமெரிக்க நிர்வாகத்தின் உள் அறைகளினுள் பதுங்கியிருந்த சில பழைய உண்மைகளை உலகம் இப்போது அறியத் தொடங்கியிருக்கிறது. 70களின் முற்பாதியில் ஆப்கன் பிரச்சினையில் முன்னாள் சோவியத் யூனியனின் படைகளை வெளியேற்ற நடைபெற்ற அமெரிக்க முழக்கங்களின் திரைமறைவில் சவூதி மன்னரின் குடும்பத்தினருடன் இணைந்து “அல்-காய்தா’ அமைப்பு உருவாகத் துணையாக நின்றார் சீனியர் புஷ்.

“ஹில்பர்ட்டன்’ எனும் பெயரிலான ஆயுத உற்பத்தி நிறுவனம் புஷ் குடும்பத்தினருக்குச் சொந்தமானது. இதன் சகோதர நிறுவனமான “டிக்செனி’க்குத்தான் ஆப்கனிலும் இராக்கிலும் கட்டுமானப் பணிகளுக்கான ஆணை கிடைத்திருக்கின்றன. இப்போது நமக்குப் புரியும்: “அழித்தலும் ஆக்கலும் நானே’ என்கிற அமெரிக்க கொக்கரிப்பின் பொருள்; அப்பாவி லெபனான் மக்களின் மீது இஸ்ரேல் குண்டுமழை பொழிவதை அவர்களின் உரிமையைப் பாதுகாக்கும் நடவடிக்கை என்று இன்று அறிவிக்கிற அமெரிக்க ஜனநாயகத்தின் நிஜமுகம்!

Posted in America, Ammunitions, Arms, Dinamani, Fights, Lord of war, Op-Ed, Tamil, US, USA, warlord, Wars | Leave a Comment »

Manavai Mustafa on World Tamil Research Organization’s Goals & Activities

Posted by Snapjudge மேல் ஓகஸ்ட் 3, 2006

நிறைவேறுமா அண்ணாவின் ஆசை?

மணவை முஸ்தபா

சென்னை தரமணியில் அமைந்துள்ள உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனம் குறித்த சிறப்புச் செய்தி 27-7-06 “தினமணி’யில் வெளிவந்தது. அது தொடர்பாக சில செய்திகளை நினைவூட்ட விரும்புகிறேன்.

சுமார் முப்பத்தைந்து ஆண்டுகளுக்கு மேலாக இயங்கி வரும் இவ்வமைப்பு 1968-ல் சென்னையில் நடைபெற்ற இரண்டாம் உலகத் தமிழ் மாநாட்டின் விளைவாக, உலகளாவிய முறையில் செயல்பட அண்ணாவின் முனைப்பால் உருவாக்கப்பட்டதாகும். இதற்குத் தூண்டுதலாக இருந்தவர் ஃபிரெஞ்சுத் தமிழறிஞர் ஜீன் பிலியோஸô. துணையாக இருந்தவர் அன்றைய யுனெஸ்கோ துணை பொது இயக்குநராக இருந்த டாக்டர் மால்கம் ஆதிசேஷையா.

இவ்வமைப்பு உருவான நேரத்தில், ஏடுகளெல்லாம் பாராட்டின. “தமிழாய்வுகள் உலகெங்கும் விரைந்து நடைபெற, தமிழின் சிறப்பும், தமிழ் கலை, இலக்கிய, பண்பாட்டுப் பெருமைகள் ஆதாரபூர்வமாக உலக அரங்கில் நிலைபெற அரிய வாய்ப்பு’ எனக் கருதி பெருமையும் பெருமிதமும் அடைந்தோம்.

உலகத் தமிழாராய்ச்சி நிறுவன நோக்கும் போக்கும் மற்ற தமிழாய்வு நிறுவனங்களிலிருந்து முற்றிலும் மாறுபட்ட நிலையில் உருவாக்கப்பட்டதாகும். இந்தியாவின் பிற மொழி மாநிலங்களில் – உலகிலுள்ள பிற நாடுகளில் நடைபெறும் தமிழாராய்ச்சிக்கான மையமாக இவ்வமைப்பு இயங்க வேண்டும் என்பது அடித்தளக் கோட்பாடாகும். இன்னும் விளக்கமாகக் கூற வேண்டுமானால், உலகின் எப்பகுதியினராயினும் – தமிழ் மொழி, கலை, இலக்கிய, பண்பாடு போன்ற எப்பிரிவு ஆய்வாயினும், அவ்வாய்வு எல்லா வகையிலும் சிறப்பாக நடந்தேற அனைத்து விதமான உதவி, ஒத்துழைப்புகளை ஆய்வாளர்க்கு நல்கும் தகவல் தொடர்பு மையமாகும்.

சான்றாக, சுவீடனிலுள்ள ஆய்வாளர் ஒருவர் தமிழ் இசை பற்றி ஆராய்வதற்குத் துணை செய்யும் இசை பற்றிய பழைய, புதிய நூல்கள், இசைக் குறிப்புகள், திறமிக்க இசை வல்லார்கள், தமிழிசை ஆய்வு அமைப்புகள் போன்றவை பற்றிய தகவல்களைத் தந்து உதவுவதும், அந்த சுவீடன் ஆய்வாளர் தமிழகம் வந்து கள ஆய்வு செய்ய முன்வரின், அவருக்குத் தேவைப்படும் அனைத்து உதவி, ஒத்துழைப்புகளையும் நல்கி தமிழிசை ஆய்வைச் சிறப்பாகச் செய்து முடிக்க எல்லா வகையிலும் உதவுவதும்தான் அதன் நோக்கமாகக் குறிக்கப்பட்டது.

வெளிநாட்டினர் தமிழாய்வைத் தொடங்குமுன் ஆய்வாளர் தமிழ் கற்க விரும்பினால் அதற்கு உதவும் வகையில் நவீன கருவிகளைக் கொண்டு குறுகிய காலத்தில் தமிழ் கற்க – பேச உதவுவதும் இம்மையத்தின் முக்கிய நோக்கமாகக் குறிக்கப்பட்டது.

இந்த நோக்கத்தின் அடிப்படையில்தான் ஐ.நா.வின் பேரங்கமான யுனெஸ்கோ நிறுவனம் தமிழ் மொழியை எளிதாகக் கற்பிக்கும் எந்திரங்கள் உட்பட அனைத்து வகையான உதவிகளை அளிக்கவும் செய்தது. மேலும், இந்நிறுவனம் முனைவர் பட்டம் போன்றவற்றை வழங்கும் முயற்சியில் ஈடுபடக் கூடாது என்பதும் அந் நிறுவன அடிப்படைக் கோட்பாடாகும்.

இந்நிறுவனத்தின் நோக்கங்களைச் செவ்வனே நிறைவேற்ற, இதற்கேற்ற தகுதி, திறமை, பட்டறிவு மிக்க இயக்குநர்களை நியமித்திருக்க வேண்டும். இதன் செயல்பாடுகள் உலக அளவில் அமையாது தமிழ்நாட்டளவில் சுருங்கவே, யுனெஸ்கோ நிறுவனம் உட்பட உலக அமைப்புகள் தங்கள் உதவியையும் ஒத்துழைப்பையும் நிறுத்த அல்லது திரும்பப் பெறலாயின என்பது வரலாறு.

இதனால் உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் மாநில உதவி கொண்டு மட்டுமே இயங்கும் ஓர் அமைப்பாக உருவெடுத்தது. காலப்போக்கில் ஆய்வு நூல்களை வெளியிடும் வெளியீட்டகமாகத் தன்னைச் சுருக்கிக் கொண்டு, பின்னர் எம்.ஃபில்; பி.எச்டி. ஆய்வுக் களமாகவும் தன்னை ஆக்கிக் கொண்டது.

சுருங்கச் சொன்னால் உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் உள்ளூர் தமிழாராய்ச்சி நிறுவனமாகத் தன்னைக் குறுக்கிக் கொண்டது எனலாம்.

இவ்வாறு மூலநோக்கிலிருந்து பெரிதும் மாறியதோடு, இன்று பல்வேறு அறக்கட்டளைச் சொற்பொழிவுக்கான கட்டமைப்பாகத் தன்னை ஆக்கிக் கொண்டு வருகிறதோ என எண்ணுமளவுக்குத் தன் போக்கை மாற்றிக் கொண்டுள்ளது.

போகட்டும், இனியாவது இந்நிறுவனத்தின் மூல நோக்கத்திற்கேற்ப, உலகளாவிய முறையில் தன் சிறகுகளை விரித்து, உலகெங்குமுள்ள தமிழாராய்ச்சி முயற்சிகளையெல்லாம் திரட்டும் முறையில் அரவணைத்து அவற்றை ஒருங்கிணைக்கும் உலகத் தமிழாராய்ச்சிப் பேரமைப்பாக, மூலத் தடத்தில் இயங்க வல்லதாக மாற்றியமைத்து, உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடுகளின் தொடர் நிகழ்வாக, இவ்வமைப்பை மறுசீரமைப்பது தமிழ்நாடு அரசின் பொறுப்பும் கடமையுமாகும். மத்திய அரசு தமிழைச் செம்மொழியாக ஏற்று அறிவித்துள்ள நிலையில் இப்படியோர் உலக அமைப்பு யுனெஸ்கோ போன்ற உலகப் பேரமைப்புகளின் அரவணைப்போடு இயங்குவது உலகளாவிய தமிழாய்வுக்கு இன்றியமையாததாகும்.

Posted in Dinamani, Manavai Mustapha, Tamil, Ulaga Thamizh Aaraichi | 1 Comment »

King Kalingarayan Stamp will be Issued – Subbulakshmi Jegadeesan

Posted by Snapjudge மேல் ஓகஸ்ட் 3, 2006

காலிங்கராயனுக்கு தபால் தலை: சுப்புலட்சுமி ஜெகதீசன் தகவல்

ஈரோடு, ஆக. 4: நதிகள் இணைப்புத் திட்டத்துக்கு முதல் காரணமாக விளங்கிய மன்னர் காலிங்கராயனுக்கு தபால் தலை விரைவில் வெளியிடப்படும் என்று மத்திய சமூக நீதித் துறை இணை அமைச்சர் சுப்புலட்சுமி ஜெகதீசன் கூறினார்.

ஈரோடு காலிங்கராயன் விருந்தினர் இல்லத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற பளிங்குக்கல் பெயர்ப் பலகை திறப்பு விழாவில் அவர் பேசியதாவது:

வனத்தை வயலாக்கியவர் காலிங்கராயன். வயல் வனமாக இப்போது மாறி வருகிறது. சாயப்பட்டறை மற்றும் தோல் ஆலைகளின் கழிவுகள் வாய்க்காலில் கலப்பதுதான் இதற்குக் காரணம். கழிவுநீர் கலப்பதால் தாவரங்கள்தான் ஒரு காலத்தில் அழிந்து வந்தன. இப்போது மனிதனே அழியக்கூடிய நிலை உருவாகிவிட்டது. புற்றுநோய் பாதிப்பால் பொதுமக்கள் இறந்து வருகின்றனர். சென்னையில் உள்ள புற்றுநோய் ஆய்வு மையம் நடத்திய ஆய்வில், ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த பலருக்கு புற்றுநோய் இருப்பது உறுதியாகியுள்ளது.

மத்திய, மாநில அரசுகள் ஒத்துழைப்புடன் சாயக்கழிவுநீர் பிரச்சினைக்கு விரைவில் தீர்வு காணப்படும். காலிங்கராயனுக்கு தேசிய நெடுஞ்சாலையில் சிலை வைக்க அனுமதி கேட்கப்பட்டது. தேசிய நெடுஞ்சாலைகளில் சிலை வைக்க இப்போது அனுமதி கொடுப்பதில்லை என நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது.

மாநிலச் சாலையில் வைக்கலாம் என்றால், இது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. எனவே காலிங்கராயன் இல்லத்திலேயே சிலையை வைக்க நடவடிக்கை எடுக்கப்படும். யார் யாருக்கு தபால் தலை வெளியிடுவது? என்பதை முடிவு செய்ய ஆகஸ்ட் இறுதி வாரத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது. இதில் காலிங்கராயனுக்கு தபால் தலை வெளியிட வலியுறுத்தப்படும். தபால் தலை வெளியீட்டு விழா ஈரோட்டில் நிச்சயம் நடக்கும் என்றார் சுப்புலட்சுமி ஜெகதீசன்.

Posted in Dinamani, Kalingaraayan, King, Minister, River, Stamps, Subbulakshmi Jegadeesan, Tamil, Uplink | Leave a Comment »

‘I am Sorry’ PM to Pakistan Human Rights Activist Asma Jehangir

Posted by Snapjudge மேல் ஓகஸ்ட் 3, 2006

பாக். மனித உரிமை ஆர்வலர் அஸ்மா ஜஹாங்கீரிடம் மன்னிப்பு கோரினார் பிரதமர்

இந்தியா வந்துள்ள பாகிஸ்தான் மனித உரிமை ஆர்வலர் அஸ்மா ஜஹாங்கீர் தில்லியில் தங்கியுள்ள ஹோட்டல் அறையை போலீஸôர் சோதனை செய்தது தொடர்பாக அவரிடம் மன்னிப்பு கோரினார் பிரதமர் மன்மோகன் சிங். மன்மோகன் சிங்குக்கு தனிப்பட்ட முறையில் நன்கு அறிமுகமானவர் அஸ்மா ஜஹாங்கீர். அவருக்கு ஏற்பட்ட அசெüகரியத்துக்கு மன்னிப்பு கோருவதாக மன்மோகன் அவரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு தெரிவித்தார்.

பிரதமரின் செய்தி தொடர்பாளர் சஞ்சய் பாரு இத் தகவலைத் தெரிவித்தார். தில்லியில் நடைபெறும் மனித உரிமைக் கருத்தரங்கில் கலந்துகொள்ள பாகிஸ்தான் பிரதிநிதிகள் குழு உறுப்பினராக அஸ்மா ஜஹாங்கீர் இந்தியா வந்துள்ளார். இதனிடையே, அஸ்மா ஜஹாங்கீர் தங்கியுள்ள ஹோட்டல் அறையை சோதனை செய்த சம்பவம் தொடர்பாக விசாரணைக்கு தில்லி போலீஸ் உத்தரவிட்டுள்ளது.

Posted in Activist, Apology, Asma Jehangir, Dinamani, Human Rights, India, Manmohan Singh, New Delhi, Pakistan, PM, Prime Minister, Sorry, Tamil | Leave a Comment »

Mid-East Updates

Posted by Snapjudge மேல் ஓகஸ்ட் 3, 2006

 
  லெபனான் பிரதமர்
லெபனான் பிரதமர்

‘லெபனானில் இதுவரை 900 பேர் கொல்லப்பட்டுள்ளனர்’- லெபனான் பிரதமர்

இஸ்ரேல் லெபனான் மீது தாக்குதலை ஆரம்பித்தது முதல் இதுவரை லெபனானில் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை தொள்ளாயிரத்தையும் தாண்டியுள்ளதாக லெபனானின் பிரதமர் போவுட் சினியோரா தெரிவித்துள்ளார்.

மேலும் மூவாயிரம் பேர் காயமடைந்துள்ளதாகவும், பாதிக்கப்பட்டவர்களில் மூன்றில் ஒரு பகுதியினர் சிறார்கள் என்றும் அவர் கூறினார்.

அத்தோடு பத்துலட்சத்துக்கும் அதிகாமான மக்கள்- அதாவது லெபனானின் மொத்த சனத்தொகையில் கால்வாசிப் பேர் இடம்பெயர்ந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மலேசியாவில் நடக்கும் இஸ்லாமிய நாடுகளின் கூட்டமைப்பின் மாநாட்டுக்கு, அவர் அனுப்பி வைத்த வீடியோ செய்தி ஒன்றிலேயே அவர் இந்தத் தகவல்களை அறிவித்துள்ளார்.

ஐக்கிய நாடுகள் சபை ஒரு அவசர போர் நிறுத்தத்தை அமுல்படுத்தி, இஸ்ரேலால், லெபனானில் மேற்கொள்ளப்பட்ட மனித உரிமை மீறல்கள் என்று தம்மால் கூறப்படுபவை குறித்து புலன் விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று அந்த மாநாடு நிர்ப்பந்தித்துள்ளது.


மத்தியகிழக்கு மோதல் மேலும் வலுக்கிறது

மோதல் அதிகரிக்க மனிதம் அழிகிறது
மோதல் அதிகரிக்க மனிதம் அழிகிறது

லெபனானின் தலைநகர் பெய்ரூட்டின் தெற்கு புறநகர்களில் பல நாட்களாக தணிந்திருந்த வான் தாக்குதல்களை மீண்டும் ஆரம்பித்ததை அடுத்து, சில மணிநேரங்களின் பின்னர், லெபனான் எங்கிலும் உள்ள இலக்குகள் மீது இஸ்ரேலிய விமானங்கள் தாக்குதல்களை நட்த்தியுள்ளன.

வடக்கு லெபனானில் உள்ள ஒரு பாலம், கிழக்கில் சிரியாவின் எல்லைக்கு அருகில் உள்ள ஒரு வீதி மற்றும் தெற்கு நகரான நபதியா ஆகியவையும் இலக்கு வைக்கப்பட்டன.

தெற்கில் உள்ள பகுதிகளில் தரை மோதலும் நடக்கிறது; அங்கு குறைந்தது 4 இடங்களில் ஹெஸ்பொல்லா கிளர்ச்சிக்காரர்களுடன், சுமார் பத்தாயிரம் இஸ்ரேலிய துருப்பினர் மோதலில் ஈடுபடுகின்றனர்.

தாங்கி எதிர்ப்பு சுடுகலன்களின் தாக்குதலில் தமது சிப்பாய்கள் இருவர் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் கூறியுள்ளது.

இஸ்ரேலுக்குள் மேலும் ராக்கட்டுகளை ஏவிய ஹெஸ்பொல்லாக்கள் அதில், குறைந்தது 5 பேரைக் கொன்றுள்ளனர்.


அமைதிக்கான இருகட்டத் திட்டம் குறித்து ஐ.நா பாதுகாப்புச் சபை ஆராய்கிறது

லெபனான் குறித்த பாதுகாப்புச் சபையின் விவாதம் தொடர்கிறது
லெபனான் குறித்த பாதுகாப்புச் சபையின் விவாதம் தொடர்கிறது

லெபனான் மோதல்களை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான இரண்டு கட்ட திட்டம் குறித்து, நியூயோர்க்கில், ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபையின் 15 உறுப்பு நாடுகள் ஆலோசித்து வருகிறார்கள்.

இடைக்கால போர் நிறுத்தம் ஒன்றை கோருவதற்கான தீர்மான பிரேரணை குறித்து, பிரிட்டன், பிரான்ஸ் மற்றும் அமெரிக்கா ஆகியவை ஒரு உடன்பாட்டை நெருங்கியுள்ளதாக இராஜதந்திரிகள் கூறுகிறார்கள்.

ஒரு சர்வதேச அமைதிப்படையை அங்கு நிறுத்துவது உட்பட ஒரு நீண்டகால தீர்வு ஒன்றுக்கு சர்வதேச ஆதரவைப் பெறுவதே அதன் இரண்டாவது கட்டமாக இருக்கும்.

லெபனானின் உடனடி மோதல் நிறுத்தத்தை கோருவதற்கான ஐக்கிய நாடுகள் சபைத் தீர்மானம் குறித்த உடன்பாடு சில நாட்களில் ஏற்படக்கூடும் என்று பிரிட்டிஷ் பிரதமர் டொனி பிளயர் தெரிவித்துள்ளார்.


காசாவில் இஸ்ரேலிய தாக்குதலில் 7 பேர் பலி

காசா மக்களும் பள்ளிக்கூடங்களில் தஞ்சம்
காசா மக்களும் பள்ளிக்கூடங்களில் தஞ்சம்

காசாவின் தெற்குப் பகுதியில் இஸ்ரேலிய இராணுவ நடவடிக்கையில் ஒரு குழந்தை உட்பட குறைந்தது 7 பொதுமக்கள் கொல்லப்பட்டதாக பாலத்தீன அதிகாரிகள் கூறுகிறார்கள்.

26 பேர் அதில் காயமடைந்துள்ளனர்.

ரபா நகருக்கு அருகில் இராணுவ இலக்குகள் மீது வான் தாக்குதல் நடத்தியதாக இஸ்ரேலிய இராணுவம் கூறுகிறது.

தாங்கி எதிர்ப்பு ராக்கட் ஒன்றை ஏவ முயற்சித்த ஒரு குழுவையும் தாம் தாக்கியதாகவும் அது கூறுகிறது.

ஜூன் மாத இறுதியில் கிளர்ச்சிக்காரர்கள் ஒரு இஸ்ரேலிய சிப்பாயை பிடித்துச் சென்றதை அடுத்து காசாவில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் சுமார் 150 பாலத்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

கடந்த மாதத்தில் மாத்திரம் 35 சிறார்கள் கொல்லப்பட்டதாக ஐக்கிய நாடுகள் சபை கூறுகின்றது.

 

Posted in BBC, Israel, Lebanon, Mid-east, Middle East, Tamil | Leave a Comment »