சுற்றுப்புறத் தூய்மை-மேலான வாழ்க்கை
யோ. கில்பட் அந்தோனி
நம் வாழ்க்கைத் தரம் மேம்பட நமது சுற்றுப்புறத்தைச் சுகாதாரமாகவும் சுத்தமாகவும் வைப்பது அவசியம். இதற்கு முதலில் குப்பைக் கழிவுகளைச் சரியான முறையில் அகற்றுவது இன்றியமையாதது. இதற்கான விழிப்புணர்வை மக்கள் மத்தியில் ஏற்படுத்த வேண்டும். குப்பையை அகற்ற வேண்டுமென்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான். ஆனால் அதை எப்படிச் செய்வது? குப்பைகளை அகற்றுவதற்கு மிகவும் எளிதான வழி அதைச் சிறப்பான முறையில் வகைப்படுத்துவதாகும். இதில் மிக முக்கியமான ஏழு வகைகளைப் பார்க்கலாம். இவற்றைத் தனித்தனியே அகற்றுவது, கண்டிப்பாகக் கடைப்பிடிக்கப்பட வேண்டிய ஒன்றாகும்.
உணவுக் கழிவுகள்: அனைத்து உணவருந்தும் விடுதிகளும் இலை, மீதமுள்ள உணவுகள் ஆகியவற்றை பெருமளவில் பொது இடங்களில் கொட்டுகிறார்கள். இதில் கையேந்தி பவன் என்று சொல்லப்படுகிற நடமாடும் வண்டிகளும் முக்கியப் பங்கு வகிக்கின்றன. இதுபோல் கல்யாண மண்டபங்கள், கேன்டீன்கள், கோயில் வளாகங்கள், குடியிருப்புகள் மற்றும் போக்குவரத்து நிலையங்கள் ஆகியவற்றிலும் இந்த உணவுக் கழிவுகள் அதிகம் காணப்படுகின்றன. இவை சூரிய வெப்பத்தில் காய்ந்து போவதற்கு முன், மிகவும் அழுகிய நிலையில் பெரும் நாற்றத்தையும் கண்களுக்கு மிக மோசமான தோற்றத்தையும் அளிக்கின்றன.
இதை அகற்றத் தேவையான செலவுகளை, இந்தக் கழிவுகளை உண்டாக்கும் நிறுவனங்கள் மற்றும் வியாபாரிகளிடமிருந்து தனி வரி மூலம் வசூலிக்கலாம். இவர்களுக்குத் தனியாகக் குறியீட்டு எண் கொடுக்கப்பட்டு, மின்சாரக் கட்டணம் வசூல் செய்வதுபோல் வரிவசூல் செய்ய வேண்டும். இந்தக் கழிவைச் சிறிய இயந்திரங்கள் மூலம் அரைத்துக் கூழாக்கி அதைப் பாதாளச் சாக்கடையில் சேர்த்து விடலாம் அல்லது உரங்கள் தயாரிக்கப் பயன்படுத்தலாம். பெரிய உணவு விடுதிகள் மற்றும் கல்யாண மண்டபங்கள், அவற்றின் விடுதிக்குள்ளாகவே இத்தகைய எந்திரங்களை அமைக்கலாம். சொந்த எந்திரங்கள் இல்லாதவர்களிடம், நகராட்சித் துறை தங்களது சிறிய மற்றும் நடுத்தர வகை வாகனங்களில் உணவுக் கழிவுகளை எடுத்து வந்து நகராட்சிக்குச் சொந்தமான எந்திரங்களில் அரைத்துக் கூழாக்கலாம். பெரிய வகை வாகனங்களைத் தவிர்க்க வேண்டும்.
மருத்துவ நிலையக் கழிவுகள்: மருத்துவ நிலையங்களில் ஏற்படும் கழிவுகள் அனைத்தையும் தனியாகக் கொண்டு வருவது அவசியம். அனைத்து அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகள், ரத்தப் பரிசோதனை நிலையங்கள், மருத்துவரின் ஆலோசனை மையங்கள் போன்ற எல்லா நிலையங்களிலும் கழிவுகளைச் சேகரிக்க வேண்டும். முதலில் மருத்துவக் கழிவுகளை ஏற்படுத்தும் அனைவருக்கும் குறியீட்டு எண்கள் வழங்க வேண்டும். இதில் தனியார்களிடம் வரி வசூலித்து, செலவுகளை ஈடு செய்ய வேண்டும். இந்தக் கழிவுகளை அனுமதிக்கப்பட்ட முறையில் குறிப்பிட்ட சில அரசு மருத்துவமனைகளில் நிர்வகிக்கலாம். கழிவுப் போக்குவரத்துக்கு சிறிய மற்றும் நடுத்தர வகை வாகனங்களை மட்டும் பயன்படுத்தலாம்.
சந்தைக் கழிவுகள்: சந்தைகளில் மிகவும் அதிகமாக வருவது உணவுக் கழிவுகளாகும். எல்லா பொது மற்றும் தனியார் சந்தைகளிலும் உணவுக் கழிவுகளை அரைத்துக் கூழாக்கும் எந்திரங்களை அமைக்க வேண்டும். சிறிய சந்தைகளில் எந்திர வசதி இல்லாதபோது, இந்த உணவுக் கழிவுகளை எந்திரவசதி உள்ள இடங்களுக்கு அனுப்பலாம். இதற்கான செலவுகளை சந்தைகளில் வசூல் செய்து கொள்ளலாம். நகராட்சித் துறை இதன் நிர்வாக நடவடிக்கைகளுக்குப் பொறுப்பாளராக அமையும். உரங்கள் தயாரிக்கவும் சந்தைக் கழிவுகள் பயன்படும்.
காகிதக் கழிவுகள்: அனைத்து வகையான காகிதங்கள், அட்டைகள், அட்டைப் பெட்டிகள், பழைய புத்தகங்கள், ஏடுகள் போன்றவை இந்த வகைக் கழிவில் அடங்கும். இவற்றை மொத்தமாகச் சிப்பம் சிப்பமாகக் கட்டி “பேப்பர் மில்’களுக்கு அனுப்பலாம். மிகவும் சிதைந்த நிலையில் உள்ள பேப்பர்களும், மில்களில் கூழாக்கப்பட்டு பிறகு புதிய பேப்பர்கள் செய்யப் பயன்படுகிறது. ஆகவே பொதுமக்கள் கடைகள், அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்கள் தங்கள் இடத்திலேயே இதனைப் பிரித்து, மொத்தமாகச் சேர்த்து, பின் அதை விற்றுப் பணம் பெறலாம். இதன் போக்குவரத்திற்கு சிறிய மற்றும் நடுத்தர வகை வாகனங்கள் பயன்படுத்தப்படலாம். காகிதக் கழிவுகளை அகற்றும் பொறுப்பு பொதுமக்களைச் சார்ந்ததாகும்.
விறகுக் கழிவுகள்:நமது நாட்டின் பல நகரங்களில் ஏராளமான செடி, கொடி, மரங்கள் உள்ளன. இவற்றிலிருந்து நிறைய விறகுகளும், எரிபொருள்களும் உற்பத்தியாகின்றன. ஆனால் நகரத்து மக்கள் இவற்றை உபயோகப்படுத்தாமல் வீட்டிற்கு வெளியே வீசி விடுகின்றனர். இதனால் இந்த விறகுகளும் ஓலைகளும் குப்பைகளோடு கலந்து விடுகின்றன. இது குப்பைச் சுமையை அதிகப்படுத்துகின்றது. இந்தச் சுமையைக் குறைப்பதற்கு, விறகுகளும் அதனைச் சார்ந்த எரிபொருள்களும் தனியாகச் சேகரிக்கப்பட்டு, அதனை மின் உற்பத்தி போன்ற பயனுள்ள பணிகளுக்குப் பயன்படுத்தலாம். இத்தகைய கழிவுகளுக்கு, தாழ்ந்த தளத்தைக் கொண்ட வாகனங்களைப் பயன்படுத்தலாம். இக் கழிவு அகற்றும் வேலைகளுக்கான செலவுகளை இதைப் பயன்படுத்தி உற்பத்தி செய்யும் நிலையங்கள் கொடுக்குமாறு செய்யலாம்.
மண் மற்றும் கட்டட இடிபாடுகள்: தனியார் மற்றும் அரசுத் துறைகள் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களைத் தொடர்ந்து நடைமுறைப்படுத்தி வருகின்றன. இதன் விளைவாக ஏராளமான மண் மற்றும் கட்டட இடிபாடுகள் உற்பத்தியாகின்றன. இவை நகரத்திற்குள்ளும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் பள்ளங்களை நிரப்புவதற்கும், சாலைகள் அமைப்பதற்கும் மற்றும் பல கட்டட வேலைகளுக்கும் பயன்படுகிறது. இதைப் பயன்படுத்துபவர்கள் இதனை அகற்றும் செலவுகளை ஏற்றுக் கொள்வார்கள். உடைக்கப்பட்ட செங்கல் சுவர்கள், கான்கிரீட் பகுதிகளை, மதில்சுவர் அடித்தளம் மற்றும் பலவகை தளங்கள் அமைக்கப் பயன்படுத்தலாம். இதன் போக்குவரத்திற்குத் தாழ்ந்த தளத்தையுடைய வாகனங்களைப் பயன்படுத்தலாம்.
மீதமுள்ள கழிவுகளின் கூட்டு: மேற்சொன்ன 6 வகைக் கழிவுகளை ஆரம்ப நிலையிலேயே தனித்தனியே பிரித்து அகற்றி விட்ட பிறகு மீதமுள்ள கழிவுகளைக் கூட்டாக அகற்றி விடலாம். முதலிலேயே பெரும் பகுதி கழிவுகளை அகற்றி விடுவதனால் இந்த மீதமுள்ள கழிவுகளின் அளவு மிகவும் குறைந்து விடும். இந்தக் கழிவுகளில் இருந்து பிவிசி பொருள்கள் தனியே பிரிக்கப்படலாம். இந்தக் கழிவுகள் சாலைகள் அமைக்கப் பயன்படுத்தப்பட்டால் பிளாஸ்டிக் பொருள்களைப் பிரிக்க வேண்டியதில்லை. இவை சாலைகளின் அடித்தள உறுதியைப் பலப்படுத்தும். பெரியவகை வாகனங்களைக் கொண்டு இக் கழிவுகளை அப்புறப்படுத்தலாம்.
முடிவாக, குப்பைகள் அகற்றும் அவசியத்தை, பள்ளி மாணவர்களின் இளம்மனத்தில் பதிய வைக்கலாம். அவர்கள் பிற்காலத்தில் பொறுப்புகள் வகிக்கும்போது தக்க நடவடிக்கைகள் எடுப்பார்கள். குப்பை அகற்றும் பணிகளுக்குத் தேவையான போதிய நிதிகளை அரசு எப்போதும் தாராளமாக ஒதுக்கிட வேண்டும். இந்தப் பணிகளில் ஈடுபட்டுள்ள பொறியாளர்கள் ஒவ்வொரு வருடமும் கூடி இவற்றை மிகச் சிறந்த முறையில் செயல்படுத்தும் முறைகளைப் பற்றி ஆராய்ந்து அதனை அறிக்கைகள் மூலம் தெரியப்படுத்த வேண்டும். இந்தத் துறையிலுள்ள நிபுணர்களின் யோசனைகளை அந்த அறிக்கைகளில் இடம் பெறச் செய்ய வேண்டும். நாம் குப்பைகளை அகற்றுவதற்கு முதன்மை முக்கியத்துவம் கொடுக்காவிட்டால் மிகவும் தாழ்ந்த நிலைக்குத் தள்ளப்படுவோம். ஆகவே குப்பைகளை அகற்றுவோம். மேலான வாழ்க்கை நிலையைப் பெறுவோம்.