Curfew in Jaffna: Sri Lanka military says northern fighting kills 19 – Eezham & Sri Lanka Updates
Posted by Snapjudge மேல் செப்ரெம்பர் 25, 2008
இலங்கையின் கிழக்கில் இருந்து இடம்பெயர்ந்தவர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளனர்
இலங்கையின் கிழக்கு மாகாணத்திலிருந்து வந்து மேல்மாகாணத்தில் தற்காலிகமாக தங்கியுள்ளவர்கள் தங்களை காவல்துறையில் இன்று ஞாயிற்றுகிழமை பதிவு செய்து கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தல் விடுக்கப்பட்டு பதிவு நடைபெற்றுள்ளது.
இது தொடர்பாக இலங்கை காவல்துறையின் பேச்சாளர் ரஞ்சித் குணசேகர கூறுகையில், தமக்கு கிடைத்த தகவலின்படி, மொத்தம் 1310 குடும்பங்களை சேர்ந்த 4308 பேர் பதிவு செய்யப்பட்டிருப்பதாக கூறினார்.
அத்தோடு சிங்கள முஸ்லிம் மக்கள் பதிவு செய்துகொள்ள முன்வரவில்லை என்று கூறப்படுவதில் உண்மையில்லை என்றும், தமிழ் மக்கள் அளவுக்கு அவர்கள் பதிவு செய்து கொள்ளவில்லை என்பது உண்மை தான் என்றும் கூறினார்.
மேலும், சென்றமுறை வடபகுதியிலிருந்து வந்து குடியேறியவர்களுக்காக நடந்த பதிவு நடவடிக்கையின்போது பதிவுசெய்துகொண்டவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருந்தது. இம்முறை பதிவு செய்து கொண்டவர்களின் எண்ணிக்கை குறைவாக இருக்கிறது என்றும் அவர் குறிப்பிட்டார்
இலங்கையில் ரயில் சேவைகள் பாதிப்பு
![]() |
![]() |
இலங்கை ரயில் |
இலங்கையில் ரயில் ஒட்டுநர்களும், நடத்துனர்களும், கடந்த வெள்ளிக்கிழமை நள்ளிரவு முதல் திடீர் வேலைநிறுத்தத்தில் ஈடுப்பட்டிருப்பதால் நாடளாவிய ரீதியில் புகையிரதசேவைகள் மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்டிருப்பதாக ரயில்வே அமைச்சக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
கடந்த மாத நடுப்பகுதியில் கம்பஹா மாவட்டத்தின் கனேமுல்ல பகுதியில் இரண்டு ரயில் வண்டிகள் ஒன்றோடு ஒன்று மோதிக்கொண்ட சம்பவத்தினைத் தொடர்ந்து இரண்டு ரயில் சாரதிகளும், இரண்டு நடத்துனர்களும் சேவையிலிருந்து இடைநிறுத்தம் செய்யப்பட்டிருந்தனர்.
ஆனாலும் ஒட்டுநர்களும், நடத்துனர்களும் இந்த விபத்து தங்களது தவறினால் ஏற்பட்டது அல்ல என்றும் இலங்கையில் பலதசாப்த காலமாக தொடர்ச்சியாக பாவனையில் இருந்துவரும் பழைய சமிக்ஞை வசதிகளின் தொழில் நுட்பகோளாறே காரணம் என்று தெரிவித்து, இந்த சமிக்ஞை வசதிகள் புதிதாக செய்யப்பட வேண்டுமென்று கோரி வேலை நிறுத்தத்தில் குதித்திருக்கின்றனர்.
கடந்த இரண்டு நாட்களும் வார இறுதி என்பதால் இந்த வேலை நிறுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்கள் கூட்டத்தின் தொகை ஒப்பீட்டளவில் சிறிதென்றும், இந்த வேலை நிறுத்தம் தொடரப்படுமானால், திங்கட்கிழமை அலுவலகம் செல்லும் மக்கள் மோசமாகப் பாதிக்கப்படுவார்கள் என்று கொழும்பு கோட்டை ரயில்நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.
கொழும்பு கோட்டை பிரதான ரயில்நிலையத்தில் வழமையாக நாளொன்றிற்கு சுமார் 300 க்கும் குறையாத தடவைகள் ரயில்கள் சேவையில் ஈடுபடும் என்றும் ஆனால் இன்று கண்டிக்கு இரண்டு ரயில்களும், காலிக்கு இரண்டு ரயில்களும், மாத்தறைக்கு ஒரு ரயில் என மொத்தம் ஐந்து ரயில்களே சேவையில் ஈடுபட்டன என்றும் அவர்கள் தெரிவித்தனர்.
இலங்கையில் அதிகார பரவலாக்கலில் நீதித்துறை முன்மாதிரி – பிரதம நீதிபதி
![]() |
![]() |
இலங்கை பிரதம நீதிபதி சரத் என்.சில்வா |
இலங்கையில் நாட்டின் அதிகாரப் பரவலாக்கலில் நீதித்துறை ஒரு முன்மாதிரியாக இருப்பதாக அந்நாட்டு பிரதம நீதிபதி சரத் என்.சில்வா கூறுகின்றார்.
மட்டக்களப்பிலும் கல்முனையிலும் சிவில் மேன்முறையீட்டு மேல் நீதிமன்றங்களை திறந்து வைத்து உரையாற்றிய போது இதனை தெரிவித்த அவர், நாட்டில் நீண்ட காலம் யுத்தத்திலேயே முடிவடைந்துள்ளதாகவும் கவலை வெளியிட்டுள்ளார்.
இனப் பிரச்சினை தொடர்பாகவும் அதிகாரப் பகிர்வு, சமஷ்டி நிர்வாக கட்டமைப்பு தொடர்பாகவும் தனது கருத்தக்களை வெளியிட்ட பிரதம நீதிபதி சரத் என்.சில்வா, நீதி நிர்வாகத்தைப் பொறுத்த அளவிலே அதிகபட்ச அளவிலே நாம் அதிகாரப் பகிர்வு செய்துள்ளோம். அரசியல் சாசனத்தின் 13ஆவது சீர்திருத்தம்கூட ஒரு அதிகாரப் பகிர்வு நடவடிக்கையாகத்தான் உருவாக்கப்பட்டிருந்தது. சிவில் வழக்குகளின் மேல்முறையீட்டை பிராந்திய நீதிமன்றங்களே விசாரிப்பது என்ற அளவிலே 13ஆவது சீர்திருத்தத்தையும் விஞ்சி அதிகாரப் பகிர்வு செய்யப்பட்டுள்ளது. 13ஆவது சீர்திருத்தத்தைத் தாண்டி அதிகாரப் பகிர்வு செய்யப்பட வேண்டும் என்பது குறித்து பல முறை அனைத்துக் கட்சி கூட்டங்கள் எல்லாம் நடந்திருக்கின்றன. ஆனால் அப்படியானஃ ஆர்ப்பாட்டம் ஒன்றுமே இல்லாமல் நீதி நிர்வாகத்தைப் பொறுத்த அளவிலே 13ஆவது சீர்திருத்தத்தை நாங்கள் விஞ்சியிருக்கிறோம்.
அதிகாரப் பகிர்வைப் பொறுத்த வரை அமெரிக்க பாணியில் கட்டமைப்பு வேண்டும் இந்தியப் பாணியில் கட்டமைப்பு வேண்டுமென்றெல்லாம் சிந்திக்கத் தேவையில்லை ஏனென்றால் அந்த உதாரணங்களையெல்லாம் நாங்கள் ஏற்கனவே விஞ்சிவிட்டோம் என்றும் அவர் குறிப்பிட்டார்.
இலங்கையின் வடக்கே இரண்டு மோதலற்ற பகுதிகளை அறிவித்துள்ளது இலங்கை அரசு
இலங்கையின் வடக்கே கிளிநொச்சியில் இராணுவத்தினருக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் கடும் மோதல் நடைபெற்று வருகின்றது. இந்நிலையில் அங்கே ஒட்டுசுட்டான் மற்றும் விஸ்வமடு ஆகிய பகுதிகளை மோதலற்ற பகுதிகளாக அறிவித்துள்ளார் இலங்கை இராணுவத்தின் தளபதி லெப்டினனட் ஜெனரல் சரத் பொன்சேகோ.
இது தொடர்பாக இலங்கை இராணுவத்தின் சார்பில் பேசவல்ல அதிகாரியான பிரிகேடியர் உதய நாணயக்கார கூறும் போது, விடுதலைப் புலிகள் மக்களை மனித கேடயங்களாக வைத்துள்ளார்கள் என்றும், அவர்கள் இந்த அறிவிப்பை பயன்படுத்தி இந்த பகுதி வரலாம் என்று கூறினார். மேலும் இவ்வாறு வரும் மக்களுக்கு தேவையான வசதிகளை அப்பகுதி அரசாங்க அதிபர்கள் செய்வார்கள் என்றும், அப்பகுதிக்கு ஏற்கனவே உணவு பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டு விட்டதாகவும் அவர் கூறினார்.
இது தொடர்பாக அவர் மேலும் தெரிவித்த கருத்துக்களை இன்றைய நிகழ்ச்சியில் கேட்கலாம்.
போர்ச்சூழலிலும் தொடர்ந்து இயங்கும் கிளிநொச்சி மருத்துவமனை
![]() |
![]() |
கிளிநொச்சி மருத்துவமனை |
இலங்கையின் வடக்கே விடுதலைப் புலிகளின் அரசியல் தலைமைத்தளமாக விளங்கிய கிளிநொச்சி நகரைக் கைப்பற்றுவதற்காக முன்னேறிக்கொண்டிருப்பதாகத் தெரிவிக்கப்படுகின்ற இராணுவத்தினருக்கும், விடுதலைப் புலிகளுக்கும் அந்த நகரைச் சூழ்ந்த பல களமுனைகளில் உக்கிரமான சண்டைகள் நடைபெற்றுக் கொண்டிருப்பதாக இரு தரப்பிரும் கூறுகின்றார்கள்.
கிளிநொச்சி பகுதியில் இருந்து செயற்பட்டுவந்த அரச தனியார் அலுவலகங்களும் பாதுகாப்பான இடங்களுக்கு இடம் மாற்றப்பட்டிருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. கிளிநொச்சி அரச செயலகமும் கண்டாவளையில் உள்ள பிரதேச செயலகத்திலிருந்து செயற்படத் தொடங்கியுள்ளது.
எனினும், கிளிநொச்சி பொது மருத்துவமனை தொடர்ந்தும் கிளிநொச்சி நகரிலேயே இயங்கி வருவதாக கிளிநொச்சி பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் சத்தியமூர்த்தி கூறுகின்றார்.
அந்தப் பிரதேசத்திற்குத் தேவையான குழந்தைகளுக்குரிய நோய்த்தடுப்பு மருந்துகள் உட்பட பல உயிர்காக்கும் மருந்துகளும், மகப்பேற்றுத் தாய்மார்களுக்கும் அவசியமான பல மருந்துகளும் கிளிநொச்சி மருத்துவமனையில் 20 குளிர்சாதனப் பெட்டிகளில் வைத்துப் பராமரிக்கப்பட்டு வருவதாகவும் டாக்டர் சத்தியமூர்த்தி கூறுகின்றார்.
இந்தக் குளிர்சாதன வசதி வன்னிப்பிரதேசத்தில் கிளிநொச்சி மருத்துவமனையில் மட்டுமே இருப்பதாகவும், இந்த மருத்துவமனையைச் சூழ்ந்த பகுதிகளில் எறிகணை வீச்சுக்களும் விமானக்குண்டுத் தாக்குதல்களும் இடம்பெற்று வருகின்ற போதிலும், இந்த மருத்துவமனைக்குரிய வசதிகளுடன் கூடிய மாற்றிடம் ஒன்று இல்லாத காரணத்தினால் வேறு இடத்திற்குச் செல்ல முடியாத நிலை இருப்பதாகவும் அவர் கூறுகின்றார்.
எறிகணை மற்றும் விமானக்குண்டுத் தாக்குதல்களுக்கு மத்தியிலும் கிளிநொச்சி மருத்துவமனை 24 மணித்தியாலமும் செயற்பட்டு வருவதுடன் 150க்கும் மேற்பட்ட நோயாளிகள் இங்கு தங்கியிருந்து சிகிச்சை பெற்று வருவதுடன் நூற்றுக்கணக்கான நோயாளிகள் வெளிநோயாளர் பிரிவில் சிகிச்சை பெறுவதற்கு வந்து செல்வதாகவும் டாக்டர் சத்தியமூர்த்தி தெரிவிக்கின்றார். இதுபற்றிய மேலதிக தகவல்களை இன்றைய செய்தியரங்கத்தில் கேட்கலாம்.
தாக்குதலுக்குள்ளாகும் கிளிநொச்சியிலிருந்து வெளியேறும் மக்கள்
இலங்கையின் வடக்கே விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டில் இருக்கும் கிளிநொச்சி நகரை அரச படைகள் நெருங்கி வருவதாக தகவல்கள் வரும் நிலையில், அந்நகர் மீது வான் தாக்குதல்களும், ஷெல் தாக்குதல்களும் தொடர்ந்து நடப்பதாகவும் செய்திகள் கூறுகின்றன.
இந்த சூழலில் கிளிநொச்சியை விட்டு, நகர மக்கள் பெரும்பாலோனோர் வெளியேறிவிட்டதாகக் கூறப்படுகிறது.
நகரில் உள்ள பெரும்பாலான தொலைபேசி இணைப்புகள் துண்டிக்கப்பட்டுவிட்டன. அத்துடன் கிளிநொச்சியின் அஞ்சல் அலுவலகம் உட்பட பல கட்டிடங்கள் சேதமடைந்துள்ளன.
இன்று நடத்தப்பட்ட விமானக் குண்டு தாக்குதலில், கிளிநொச்சியின் மையப்பகுதியில் அமைந்துள்ள விடுதலைப்புலிகளின் காவல்துறைத் தலைமையகம் அழிக்கப்பட்டிருப்பதாக விமானப்படைப் பேச்சாளர் விங் கமாண்டர் ஜனக்க நானயக்கார தெரிவித்துள்ளார். இந்தத் தாக்குதலை விடுதலைப்புலிகளின் சமாதானச் செயலகமும் உறுதிப்படுத்தியிருக்கிறது.
அத்துடன் இதற்கு அருகில் அமைந்திருந்த தமிழர் புனர்வாழ்வுக்கழகத்தின் களஞ்சியசாலை ஒன்றும் அழிக்கப்பட்டிருப்பதாகவும் புலிகளின் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
‘ஏழு பொதுமக்கள் குண்டுத்தாக்குதல்களில் காயம்’
இந்த தாக்குதல்களில் கிளிநொச்சி நகரைச்சேர்ந்த ஏழு பொதுமக்கள் காயமடைந்திருப்பதாகவும் விடுதலைப்புலிகள் கூறியிருக்கின்றனர்.
கிளிநொச்சி நகரைச் சூழ்ந்த பல களமுனைகளில் இன்றும் நேற்றும் நடந்த மோதல்களில் நான்கு படையினரும், 26 விடுதலைப்புலிகளும் கொல்லப்பட்டிருப்பதாக ராணுவம் கூறியிருக்கிறது. மோதல்களில் உயிர்ச்சேதங்கள் குறித்து பக்கச்சார்பற்றவகையில் உறுதிப்படுத்த முடியவில்லை.
இந்நிலையில், நகரவாசிகள் இருவரிடம் தமிழோசை சார்பில் தொடர்பு கொண்டு கேட்டபோது, அவர்கள், தொடர்ந்து இடம்பெற்று வரும் குண்டுவீச்சு காரணமாக 99 சதவீத மக்கள் வெளியேறிவிட்டதாகவும், நகரில் உள்ள அனைத்து கடைகள் மற்றும் உணவகங்கள் எல்லம் மூடப்பட்டிருப்பதாகவும் தெரிவித்தனர்.
மக்கள் வாடகைக்கு லாரிகளை அமர்த்தி, கொண்டு செல்ல முடிந்த அளவு உடமைகளுடன், கிளிநொச்சிக்கு கிழக்கே விசுவமடு போன்ற பகுதிகளை நோக்கி சென்று கொண்டிருப்பதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
இதற்கிடையே, கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகன் அவர்களிடம் தொடர்பு கொண்டு கேட்டபோது, வெள்ளிக்கிழமையும் , கிளிநொச்சி நகரின் மீது வான் மற்றும் குண்டு தாக்குதல்கள் நடந்ததாகத் தெரிவித்தார்.
குண்டுத் தாக்குதல்கள் காரணமாக, பொதுமக்கள் கிளிநொச்சியிலிருந்து கிழக்கு நோக்கி வெளியேறுவதாகவும் அவர் உறுதிப்படுத்தினார்.
![]() |
![]() |
அழிவின் ஒரு காட்சி |
வியாழக்கிழமை நடந்த குண்டுத் தாக்குதல்களில் ஆறு சிவிலியன்கள் கொல்லப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.
இதற்கிடையே, நேற்று வியாழக்கிழமை வன்னிப்பகுதிக்கு 51 ட்ரக் வண்டிகளில், ஐ.நா மன்றத்தால் கொண்டு செல்லப்பட்ட உணவுப்பொருட்கள் அங்குள்ள இடம் பெயர்ந்த மக்களுக்கு ஒரு வார காலத்துக்கு மட்டுமே போதுமானதாக இருக்கும் என்று அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
முல்லைத்தீவு மாவட்டத்தைப் பொருத்த மட்டில், மருந்துப்பொருட்கள், வாழ்விட வசதிகளை ஏற்படுத்துவதற்கான பொருட்கள், கழிப்பிட வசதிகள் ஏற்படுத்துவதற்கான பொருட்கள் ஆகியவை அவசரமாகத் தேவைப்படுவதாக முல்லைத்தீவு மாவட்ட அரச அதிபர் திருமதி இமெல்டா சுகுமார் தமிழோசையிடம் தெரிவித்தார்.
உணவுப்பொருட்கள் ஓரளவு வந்து சேர்ந்த போதிலும், உணவுசாரா நிவாரணப்பொருட்கள் வரவில்லை என்று கூறிய அவர், கடந்த 20 நாட்களாக முல்லைத்தீவு மாவட்டத்திற்கான தபால் சேவை நடைபெறவில்லை எனவும் தெரிவித்தார்.
இலங்கையில் வன்னியைச் சென்றடைந்துள்ளது உதவிப் பொருள் வாகனத் தொடரணி
இலங்கையின் வடக்கே வன்னிப் பகுதியில் இடம்பெயர்ந்த நிலையில் உள்ள மக்களுக்கான உணவுப் பொருட்களை ஏற்றிக்கொண்டு வாகனத் தொடரணி ஒன்று வன்னி சென்றடைந்துள்ளது.
வெள்ளிக்கிழமை மதியத்துக்குள் இந்த உணவுப் பொருட்கள் லாரிகளிலிருந்து இறக்கப்பட்டு அரசாங்க அதிபர்கள் மற்றும் பல்நோக்கு கூட்டுறவு சங்கங்களின் மூலம் விநியோகிக்கப்படவுள்ளதாக உலக உணவு திட்டத்தின் அதிகாரியான மேட்ஸ் வைல்ஸ்ட்ரப் தமிழோசையிடம் தெரிவித்தார்.
ஒரு வார காலத்துக்கு தேவையான உணவுப் பொருட்கள் தற்போது எடுத்துச் செல்லப்பட்டுள்ளன என்றும் அவர் தெரிவித்தார். பல்நோக்கு கூட்டுறவு சங்கங்கள் உணவு தேவைப்படுபவர்களின் பட்டியலை தயாரித்துள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.
உணவு விநியோகத்துக்கு தயாராக உள்ளது என்ற அறிவிப்பு விடுக்கப்பட்டவுடன் இடம்பெயர்ந்தவர்கள் தங்களை பதிவு செய்துகொண்டு உணவுப் பொருட்களை பெற்றுக் கொள்ளலாம் என்றும் உலக உணவு திட்டத்தின் அதிகாரி தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சியில் விடுதலைப் புலிகளின் அரசியல்துறை செயலகம் மீது அரச விமானப்படை குண்டுவீச்சு
![]() |
![]() |
புலிகளின் அரசியல்துறை செயலகம் |
இலங்கையின் வடக்கே விடுதலைப் புலிகளின் முக்கிய நகரமாகிய கிளிநொச்சியில் விடுதலைப் புலிகளின் அரசியல்துறை செயலகம் மற்றும் சமாதான செயலகம் என்பவற்றை அரச விமானப்படைகள் குண்டுவீசி அழித்திருப்பதாகத் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.
கிளிநொச்சி பிரதேச இராணுவ தலைமையகத் தளத்தினை விமானப்படையினர் விமானக் குண்டுத் தாக்குதல் நடத்தி அழித்துள்ளதாக விமானப்படை பேச்சாளர் விங் கமாண்டர் ஜனக்க நாணயக்கார தெரிவித்துள்ளதாகப் பாதுகாப்பு அமைச்சகம் கூறியிருக்கின்றது.
கிளிநொச்சி பரவிப்பாய்ஞ்சான் என்ற இடத்தில் அமைந்திருந்த விடுதலைப் புலிகளின் இராணுவ தலைமையகத் தொகுதியில் புலிகளின் முக்கிய தலைவர்கள் சந்திப்பு ஒன்றில் ஈடுபட்டிருந்தவேளையில் அதனை இலக்கு வைத்து, இந்த விமானக் குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டதாகக் கூறியுள்ள பாதுகாப்பு அமைச்சகம். இந்தத் தாக்குதலின் மூலம் விடுதலைப் புலிகளுக்கு ஏற்பட்ட சேத விபரங்கள் பற்றி உறுதிப்படுத்தப்படவில்லை என்றும் தெரிவித்திருக்கின்றது.
எனினும் கிளிநொச்சியில் அமைந்திருந்த விடுதலைப் புலிகளின் அரசியல்துறை செயலகம் மற்றும் சமாதான செயலகம் என்பவற்றின் மீதே இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டிருப்பதாக விடுதலைப் புலிகள் கூறியிருக்கின்றனர்.
இந்தத் தாக்குதலில் 2 பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளதுடன், மேலும் 5 பேர் காயமடைந்திருப்பதாகவும் விடுதலைப் புலிகளின் சமாதான செயலகம் மின்னஞ்சல் வழியான அறிக்கையொன்றில் தெரிவித்திருக்கின்றது.
இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவாக தமிழகக் கட்சிகள் உண்ணாவிரதம்
இலங்கைத் தமிழர் மீது நடத்தப்படும் தாக்குதல்கள் நிறுத்தப்படவேண்டும், இலங்கை அரசுக்கு எவ்வித ராணுவ ஒத்துழைப்பும் வழங்கக்கூடாது, அரசியல் ரீதியான தீர்வு காணவேண்டும் என மத்திய அரசு இலங்கை அரசை வற்புறுத்தவேண்டும் போன்ற கோரிக்கைகளை வற்புறுத்தி இந்திய கம்யூனிஸ்ட் மாநில அளவில் நடத்திய உண்ணாவிரதப் போராட்டத்தில், மார்க்சிஸிஸ்ட் கம்யூனிஸ்ட், மதிமுக, தேசிய முற்போக்கு திராவிடக் கழகம், விடுதலைச் சிறுத்தைகள், புதிய தமிழகம் உட்பட் பல்வேறு கட்சிகள் பங்கேற்றன.
ஆனால் அஇஅதிமுக ஆர்ப்பாட்டத்தை கலந்துகொள்ளவில்லை.
மாநிலத்தின் அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் ஆர்ப்பாட்டத்தில் தனது கட்சியினர் கலந்து கொள்வர் என்று அஇஅதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா அறிவித்திருந்தும், ஏன் அக்கட்சி இப்போது புறக்கணித்தது என்பதற்கு எவ்வித விளக்கமும் அளிக்கப்படவில்லை. பாமகவினரும் கலந்துகொள்ளவில்லை.
பிரதமர் மன்மோகன் சிங்கைச் சந்தித்துள்ளார் கனிமொழி
![]() |
![]() |
இலங்கைத் தமிழர் பிரச்சினை தொடர்பாகவும், தமிழக மீனவர்கள் நடுக்கடலில் தாக்கப்படும் சம்பவம் தொடர்பாகவும் இந்திய அரசு தலையிட்டு தீர்வு காண வேண்டும் என்று திமுகவைச் சேர்ந்த நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினரும், தமிழக முதல்வர் கருணாநிதியின் மகளுமான கனிமொழி வியாழன் மாலை பிரதமர் மன்மோகன் சிங்கைச் சந்தித்துக் கோரிக்கை விடுத்துள்ளார்.
கொழும்புக்கு வந்துள்ள கிழக்கு மாகாண மக்கள் காவல்துறையிடம் பதிவு செய்து கொள்ள வேண்டும் என அறிவிப்பு
இலங்கையின் கிழக்கு மாகாணத்திலிருந்து தற்காலிகமாக மேல் மாகாணத்துக்கு சென்றவர்கள் தம்மை காவல்துறையினரிடம் பதிவு செய்து கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இவ்வாறு கிழக்கு மாகாணத்திலிருந்து வந்துள்ளவர்கள் தங்களது பெயர்களையும் தங்கியுள்ள விலாசங்களையும் பதிவு செய்து கொள்ள வேண்டும் என காவல்துறை வேண்டியுள்ளதாக அதன் பேச்சாளர் ரஞ்சித் குணசேகர தமிழோசையிடம் தெரிவித்தார்.
இது காவல்துறையினரின் வேண்டுகோள் மட்டுமல்ல சட்டபூர்வ தேவையும் கூட என்று கூறிய அவர், எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமையன்று இவ்வாறான பதிவுகள் மேற்கொள்ளப்படும் என்றும் தெரிவித்தார்.
கிழக்கு மாகாணத்திலிருந்து மேல் மாகாணத்துக்கு வரும் தமிழர்கள் மட்டுமல்ல சிங்கள மற்றும் முஸ்லிம் மக்களும் பர்கர்களும் கூட இவ்வாறு பதிவு செய்து கொள்ள வேண்டும் எனவும் காவல்துறை பேச்சாளர் ரஞ்சித் குணசேகர தெரிவித்தார்.
அடுத்த கட்டமாக ஊவா மாகாணத்திலிருந்து வந்துள்ள மக்களை பதிவு செய்யும் நடவடிக்களை தொடங்கப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
இலங்கையின் வடக்கே மோதல்கள் தொடருகின்றன
![]() |
![]() |
வடக்கே வான் தாக்குதல்கள் |
இலங்கையின் வடக்கே கிளிநொச்சி மாவட்டத்தில் விமானப்படையினர் நடத்திய குண்டு வீச்சுத் தாக்குதலில் இரண்டு பொதுமக்கள் கொல்லப்பட்டு பதிமூன்று பேர் காயமடைந்துள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஆனால் கிளிநொச்சி திருவையாற்றுப் பகுதிக்கு வடக்கே அமைந்துள்ள விடுதலைப் புலிகளின் சார்லஸ் அண்டனி படைதளத்தின் மீதும் விடுதலைப் புலிகளின் பெண்கள் படைப்பிரிவின் பயிற்சி தளத்தின் மீது ஒரே நேரத்தில் தாக்குதல் நடத்தப்பட்டதாக பாதுகாப்பு அமைச்சகம் கூறியுள்ளது.
இதனிடையே கிளிநொச்சி, வெலிஓயா மற்றும் வவுனியா களமுனைகளில் இடம்பெற்ற சண்டைகளில் இரண்டு இராணுவத்தினரும் இருபத்தியாறு விடுதலைப் புலிகளும் பலியாகியுள்ளதாக இராணுவம் தெரிவித்துள்ளது. எனினும் இது தொடர்பில் புலிகள் தரப்பிலிருந்து கருத்துக்கள் வெளியாகவில்லை.
காத்தான்குடி குண்டு வெடிப்பில் இருபதுக்கும் அதிகமானோர் காயம்
இலங்கையின் கிழக்கே மட்டக்களப்பு மாவட்டத்தில் முஸ்லிம்கள் செறிந்துவாழும் காத்தான்குடி பிரதேசத்தில் திங்களன்று மாலை இடம்பெற்ற குண்டு வெடிப்பு ஒன்றில் சிறுவர்கள் உட்பட இருபதுக்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர்.
காத்தான்குடி பேருந்து நிலையத்துக்கு முன்னதாக உள்ள பள்ளிவாசல் ஒன்றுக்கு அருகேயே இந்த குண்டு வெடித்ததாகவும், அந்தப் பகுதியில் இரு மோட்டார் சைக்கிள்கள் எரிந்து காணப்பட்டதாகவும் அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் கூறுகின்றன.
காயமடைந்தவர்களில் 16 பேர் காத்தான்குடி வைத்திய சாலைக்கு எடுத்துவரப்பட்டதாக மருத்துவ அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். அதேவேளை ஆரையம்பதி மருத்துவமனையிலும் 7 பேர் சிகிச்சை பெற்றதாகவும் கூறப்படுகிறது.
இவை குறித்த மேலைதிக தகவல்களை நேயர்கள் இன்றைய நிகழ்ச்சியில் கேட்கலாம்.
கொழும்பு புறக்கோட்டை குண்டுவெடிப்பில், இருவர் காயம், வாகனங்கள் சேதம்
![]() |
![]() |
குண்டுவெடித்த இடம் |
இலங்கையின் தலைநகர் கொழும்பின் சனசந்தடி நிறைந்த புறக்கோட்டைப் பகுதியில் திங்களன்று பிற்பகல் இடம்பெற்ற சிறிய குண்டுவெடிப்பொன்றில் இருவர் சிறுகாயமடைந்திருக்கிறார்கள், சுமார் ஆறு வாகனங்கள் சேதமடைந்திருக்கின்றன.
இன்றைய இந்தச் சம்பவம் குறித்துக் கருத்து வெளியிட்டுள்ள பொலிசார் இன்று திங்களன்று சுமார் 12.30 மணியளவில் கொழும்பு புறக்கோட்டை மல்வத்தை வீதியிலுள்ள வாகனத் தரிப்பிடமொன்றிற்கு அருகில் மறைத்து வைத்துவைக்கப்பட்டிருந்த சிறிய குண்டொன்றே வெடித்திருப்பதாகவும், இதில் சிறுகாயங்களிற்குள்ளான ஆணொருவரும், பெண்ணொருவரும் சிறுகாயங்களிற்குள்ளாகி கொழும்பு தேசியசாலையில் சிகிச்சை பெற்றுவருவதாகவும் தெரிவித்தனர்.
இந்த குண்டுவெடிப்பின் சூத்திரதாரிகளைக் கண்டறிய பொலிசார் தற்போது தீவிர விசாரணைகளில் ஈடுபட்டுவருகின்றனர். கடந்த சில வாரங்களுக்குள் புறக்கோட்டைப்பகுதியில் இடம்பெற்ற இரண்டாவது சிறிய குண்டுவெடிப்பு இதுவாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
வன்னி மோதல்களில் பலர் பலி
![]() |
![]() |
இலங்கை பாதுகாப்புப் படைச் சிப்பாய் ஒருவர் |
இலங்கையின் வடக்கே வன்னிக்கள முனைகளில் விடுதலைப் புலிகளின் இலக்குகள் மீது இலங்கை விமானப்படையினர் இன்று இரண்டு தடவைகள் வான்வழி தாக்குதல்களை நடத்தி, விடுதலைப்புலிகளுக்கு சேதம் விளைவித்ததாகக் கூறியுள்ள பாதுகாப்பு அமைச்சகம், நேற்று வெவ்வேறு இடங்களில் இடம்பெற்ற சண்டைகளில் 23 விடுதலைப் புலிகளும் 4 இராணுவத்தினரும் கொல்லப்பட்டுள்ளதாகவும் தெரிவித்திருக்கின்றது.
இந்த மோதல்களில் 26 படையினர் காயமடைந்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.
அதேவேளை, கிளிநொச்சி மாவட்டத்தின் மேற்குப் பகுதியில் வன்னேரிக்குளத்திற்கும், பண்டிவெட்டிக்குளத்திற்கும் இடைப்பட்ட பகுதியில் முன்னேற்ற முயற்சியில் ஈடுபட்டுள்ள இராணுவத்தினரை எதிர்த்து நேற்றுக் காலை முதல் விடுதலைப் புலிகள் கடும் தாக்குதல்களை நடத்திவருவதாக விடுதலைப் புலிகள் கூறியிருக்கின்றனர்.
கனேமுல்லயில் ரயில் வண்டிகள் ஒன்றுடன் ஒன்று மோதியதில் ஒருவர் சாவு, 26 பேர் காயம்
இலங்கையில் இன்று மாலை கம்பஹா மாவட்டத்தின் கனேமுல்ல ரயில் நிலையத்திற்கு அருகில் இரண்டு ரயில் வண்டிகள் ஒன்றுடன் ஒன்று மோதிக்கொண்டதில் ஒருவர் உயரிழந்திருக்கிறார், மேலும் 26 காயமடைந்து கம்பஹா மாவட்ட வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்கள்.
இந்தச் சம்பவம் குறித்துக் கருத்து வெளியிட்ட ரயில்வே திணைக்கள அதிகாரிகள், இன்று சுமார் 3.30 மணியளவில் கொழும்பிலிருந்து கண்டி நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்த கடுகதி புகையிரத வண்டியொன்று, கொழும்பிலிருந்து பொல்காவலயை நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்த புகையிரதவண்டியுடன் மோதியதாகவும், இதில் காயமடைந்தவர்கள் சுமார் 27 பேர் உடனடியாகவே அருகிலுள்ள வைத்தியசாலைகளிற்கு விரையப்பட்டதாகவும், அவர்களில் ஒருவர் வைத்தியசாலையில் இறந்தாகவும் தெரிவித்தனர்.
இந்த விபத்துக்காரணமாக றாகமவிற்கு அப்பால் புகையிரத சேவைகள் பாதிப்படைந்திருப்பதாகவும், இதனை சீர்செய்ய விசேட குழுக்கள் உடனேயே அங்கு விரையப்பட்டிருப்பதாகவும், இன்றுமலையளவில் சேவைகள் வழமைக்குத் திரும்பக்கூடிய வாய்ப்புகள் இருப்பதாகவும் அந்த அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த விபத்துக் குறித்த விசாரணைகளை ரயில்வே திணைக்களம் ஆரம்பித்திருக்கிறது.
களுவாஞ்சிக்குடியில் இருவர் பலி
இலங்கையின் கிழக்கே மட்டக்களப்பு மாவட்டம் களுவாஞ்சிக்குடி பிரதேசத்தில் இன்று அதிகாலை குண்டு வெடிப்புச் சம்பவமொன்றில் 2 இளைஞர்கள் கொல்லப்பட்டுள்ளார்கள்.
இந்த இளைஞர்கள் இருவரும் விடுதலைப் புலிகள் அமைப்பைச் சேர்ந்தவர்கள் என இலங்கை தேசிய பாதுகாப்பு ஊடக மையம் வெளியிட்டுள்ள தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது
கோடைமேடு அணைக்கட்டோரம் சந்தேகத்திற்கிடமானவர்களின் நடமாட்டம் விசேட அதிரடிப்படையினரால் அவதானிக்கபட்டதையடுத்து, இரு தரப்பினருக்குமிடையில் துப்பாக்கி மோதல் இடம்பெற்றதாகவும் அப்போது ஒரு இளைஞரிடமிருந்த குண்டு வெடித்துச் சிதறியதாகவும் இந்தச் சம்பவம் தொடர்பாக கூறப்படுகின்றது.
இந்தச் சம்பவத்தின் பின்பு அப்பகுதியில் விசேட அதிரடிப்படையினரால் மேற்கொள்ளப்பட்ட தேடுதலின் போது 2 சடலங்களுடன் தற்கொலை அங்கியொன்றும், கிளேமார் குண்டொன்று உட்பட மேலும் சில பொருட்களும் அங்கு கண்டெடுக்கப்பட்டதாகவும் பாதுகாப்புத் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
வன்னியில் மீண்டும் மனிதாபிமான பணிகளை ஆரம்பிக்கிறது ஐ.நா
இலங்கையின் வடக்கே இராணுவத்தினருக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் கடும் மோதல் நடைபெற்று வரும் வன்னிப் பகுதியில் மீண்டும் உணவு மற்றும் இதர உதவி நடவடிக்கைகளை மீண்டும் ஆரம்பிக்கவுள்ளதாக ஐ.நா அறிவித்துள்ளது.
இது தொடர்பாக இலங்கையில் உள்ள ஐ.நா அலுவலகங்களின் சார்பில் பேசவல்ல அதிகாரியான கார்டன் வைஸ் தமிழோசையிடம் கூறுகையில், வன்னியில் இருக்கும் இடம்பெயர்ந்த மக்களுக்கு உணவு பொருட்களை நேரடியாக வழங்க அரசாங்கமும், ஐ.நா வும் ஒப்பு கொண்டுள்ளதாக தெரிவித்தார்.
மேலும் இந்த உணவு பொருட்கள் ஐ.நாவின் மேற்பார்வையில் இடம்பெயர்ந்த மக்களுக்கு நேரடியாக வழங்கப்படும் என்றும், இந்த உணவு பொருட்கள் கிளிநொச்சியை சுற்றியவாறு எடுத்து செல்லப்பட்டு இடம்பெயர்ந்த மக்கள் எங்கெல்லாம் பெரும் கூட்டமாக இருக்கின்றார்களோ அங்கெல்லாம் நேரடியாக விநியோகம் செய்யப்படும் என்றும் கார்டன் வைஸ் கூறினார்.
அத்தோடு இந்த உணவு பொருட்கள் எடுத்து செல்லப்படும் பாதை குறித்து அரசாங்கத்திடமும், விடுதலைப் புலிகளிடமும் ஒப்புதல் பெறப்பட்டுள்ளதாகவும், தாங்கள் வன்னியில் உதவி பணிகளை மீண்டும் ஆரம்பித்து இருந்தாலும், தாங்கள் வன்னியில் இருந்து செயற்படுவதாக எண்ணக் கூடாது என்றும் இலங்கையில் உள்ள ஐ.நா அலுவலகங்களின் சார்பில் பேசவல்ல அதிகாரியான கார்டன் வைஸ் கூறினார்.
அவர் தெரிவித்த தகவல்களை இன்றைய நிகழ்ச்சியில் கேட்கலாம்.
வவுனியா நகரின் மையப்பகுதியில் தற்கொலைக் குண்டுத்தாக்குதல்
![]() |
![]() |
வவுனியாவில் தற்கொலைக் குண்டுத்தாக்குதல் |
இலங்கையின் வடக்கே பலத்த இராணுவ பாதுகாப்புக்கு உட்படுத்தப்பட்டுள்ள வவுனியா நகரின் மையப்பகுதியில் ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற தற்கொலைக் குண்டுத் தாக்குதல் சம்பவம் ஒன்றில் தற்கொலைக் குண்டுதாரியும் சிவிலியன் ஒருவரும் கொல்லப்பட்டுள்ளதாக வவுனியா பொலிசார் தெரிவித்திருக்கின்றனர்.
இராணுவத்தினர் பொலிசார் உட்பட 8 படையினரும் 3 சிவிலியனகளும் இந்தச் சம்பவத்தில் படுகாயமடைந்துள்ளதாகவும் பொலிசார் கூறியிருக்கின்றனர்.
இந்தக் குண்டுத் தாக்குதல் சம்பவம் இராணுவ வாகனங்களும், பொதுப்போக்குவரத்து வாகனங்களும் போய் வருகின்ற ஏ9 வீதியில் வவுனியா நகர தனியார் பேரூந்து நிலையச் சந்தியில் இடம்பெற்றிருக்கின்றது.
சைக்கிளில் வந்த விடுதலைப் புலிகளின் தற்கொலைக் குண்டுத்தாரி, கடமை முடிந்து தமது விடுதிகளுக்குச் செல்வதற்காக 4 பொலிசார் பிரயாணம் செய்வதற்காக ஏறியிருந்த முச்சக்கர வண்டியொன்றின் மீது மோதி குண்டை வெடிக்கச் செய்துள்ளதாக இராணுவ தலைமையகம் கூறியிருக்கின்றது.
தமிழக மீனவர் கச்சத் தீவு பகுதியில் சுட்டுக்கொலை
![]() |
![]() |
தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் |
தமிழக மீனவர் ஒருவர் கச்சத் தீவு பகுதியில் சுட்டுக் கொல்லப்பட்டிருக்கிறார். மதுரை தத்தனேரி பகுதியைச் சேர்ந்த முருகன் என்பவர் மேலும் சிலருடன் இணைந்து கச்சத்தீவு பகுதியில் சனிக்கிழமை இரவு மீன் பிடித்துக்கொண்டிருக்கையில், இலங்கை கடற்படையினர் அவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நிகழ்த்தியதாகவும், சம்பவ இடத்திலேயே அவர் இறந்ததாகவும் கூறப்படுகிறது.
உடல் ஞாயிறன்று காலை ராமேஸ்வரம் வந்து சேர்ந்தது. ராமநாதபுரம் மாவட்ட நிர்வாகத்தின் உயர் அதிகாரி ஒருவர் அரசின் நிவாரணத் தொகையாக மூன்று லட்ச ரூபாய்க்கான காசோலையை முருகனின் குடும்பத்தினரிடம் வழங்கியுள்ளார்.
தொடரும் இத்தகைய சம்பவங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபடப்போவதாக ராமேஸ்வரம் பகுதி மீனவர்கள் அறிவித்திருக்கின்றனர்.
இதனிடையே சென்னையிலுள்ள இலங்கைத் துணைத்தூதர் அம்சா துப்பாக்கி சூட்டிற்கும் இலங்கை கடற்படையினருக்கும் எவ்விதத்தொடர்பும் இல்லை என்றும், இரு நாடுகளுக்கும் இருக்கும் நல்லுறவைக் கெடுக்க சதி செய்யும் சிலர் இவ்வாறு செய்திருக்கலாம் எனவும் அறிக்கை ஒன்றில் கூறி உள்ளார்.
இலங்கையின் வடக்கே தொடரும் மோதல்
![]() |
![]() |
தாக்குதலில் காயமடைந்தவர்கள் |
இலங்கையின் வடக்கே கிளிநொச்சி நகரப்பகுதியில் சனிக்கிழமையன்று இடம்பெற்ற விமானக்குண்டுத் தாக்குதலில் சிவிலியன் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். மேலும் 7 பேர் காயமடைந்துள்ளனர். இவர்களில் ஒரு குடும்பத்தைச் சேர்ந்த கணவன் உயிரிழந்துள்ளார். அவரது மனைவியும் குழந்தைகளும் காயமடைந்துள்ளனர்.
கிளிநொச்சி இரத்தினபுரம் பகுதியில் சனிக்கிழமை பகல் நடைபெற்ற இந்தத் தாக்குதல் விடுதலைப் புலிகளின் பெண் கரும்புலிகளுடைய தளத்தின்மீதே நடத்தப்பட்டுள்ளது என்று பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்திருக்கின்றது. இதன்போது அந்த முகாம் அழிக்கப்பட்டுள்ளதாகவும் படைத்தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.
எனினும் இந்தத் தாக்குதலில் 10 வீடுகள் சேதமடைந்துள்ளதாகவும் பலர் காயங்களுக்கு உள்ளாகியதுடன் சிவிலியன்கள் தரப்பில் உயிர்ச்சேதம் ஏற்பட்டிருப்பதாகவும் பாதிக்கப்பட்ட சிவிலியன்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது. இதுபற்றிய மேலதிக தகவல்களை இன்றைய செய்தியரங்கத்தில் கேட்கலாம்.
இலங்கையின் கிழக்கே மட்டக்களப்பில் காணாமல் போனவர் சடலமாக மீட்பு
![]() |
![]() |
மட்டக்களப்பு வரைப்படம் |
கிழக்கே மட்டக்களப்பு மாவட்டத்தில் சில நாட்களுக்கு முன்பு காணாமல் போனதாகக் கூறப்பட்ட ஆரையம்பதி பிரதேசவாசிகளிலொருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
கடந்த 18 ம் திகதி ஆரையம்பதி பிரதேசத்தைச் சேர்ந்த பாடசாலை மாணவன் உட்பட இருவர் காத்தான்குடிக்கு செல்வதாகக் கூறி புறப்பட்டு சென்ற பின்பு காணாமல் போயுள்ளதாக உறவினர்களினால் புகார் செய்யப்பட்டிருந்ததாக பொலிசார் தெரிவிக்கின்றனர்
பொலிஸ் தகவல்களின் படி இந்நபர்களில் ஒருவரே கைகள் கால்கள் கட்டப்பட்ட நிலையில் சடலமாக கரையொதுங்கியுள்ளார்.
குறிப்பிட்ட மாணவன் தொடர்பாக இது வரை தகவல்கள் இல்லை என தெரிவிக்கப்படுகின்றது.
இந்த இருவரும் எங்கு வைத்து காணாமல் போனார்கள் என்பது தொடர்பாகவோ,சம்பவத்துடன் தொடர்புடையவர்களின் பின்ணணியோ இது வரை கண்டறியப்படவில்லை என்றும் பொலிசார் குறிப்பிடுகின்றனர்.
இந்த இருவரும் காணாமல் போன சம்பவத்தையடுத்து ஆரையம்பதி பிரதேசத்தில் கடந்த ஒரு வார காலமாக வழமை நிலை பாதிக்கப்பட்டு பதட்ட நிலை காணப்பட்டமை இங்கு குறிப்பிடத்தக்கது.
இலங்கை நாடாளுமன்றம் தெரிவுக்குழுக்களை நியமித்துள்ளது
விடுதலைப்புலிகள் அமைப்புடன் இலங்கை ஆளுங்கட்சிக்கு ரகசிய உடன்பாடு இருந்ததாக கூறப்பட்ட குற்றச்சாட்டு, மிக் ரக விமானங்களின் கொள்வனவு குறித்த ஒரு சர்ச்சை மற்றும் இலங்கை உள்நாட்டு இறைவரித் திணைக்களத்துக்கு எதிரான சில குற்றச்சாட்டுகள் ஆகியவை குறித்து விசாரிக்கு முகமாக மூன்று நாடாளுமன்றத் தெரிவுக்குழுக்களை இலங்கை நாடாளுமன்ற சபாநாயகர் டபுள்யூ.ஜே.எம். லொகுபண்டார நியமித்துள்ளார்.
இவற்றில் மிக் விமான விவகாரம் குறித்து ஆராயும் குழுவுக்கு ஊடகத்துறை அமைச்சர் அநுர பிரிய தர்ஸன யாப்பவும், விடுதலைப்புலிகளுடனான, ஆளுங்கட்சியின் உடன்பாடு குறித்த குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் குழுவுக்கு அமைச்சர் நிமல்சிறிபால டி சில்வாவும், இறைவரி திணைக்கள விவகாரம் குறித்த விசாரணைக்குழுவுக்கு ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினரான கபீர் ஹசீம் அவர்களும் தலைவர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
முதலிரண்டு விவகாரங்களில் குற்றச்சாட்டுக்கள் ஆளும்கட்சிக்கு எதிராக எழுப்பப்பட்டுள்ள நிலையில், அவற்றை விசாரிக்கும் குழுக்களுக்கு அரசாங்க அமைச்சர்களே தலைவர்களாக நியமிக்கப்பட்டதை பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி எதிர்த்துள்ளது.
வட இலங்கையில் வான்வழித் தாக்குதல்கள்
இலங்கையின் வடக்கே வன்னிக் களமுனைகளில் விடுதலைப் புலிகளுக்கு எதிராக இராணுவத்தினர் மேற்கொண்டுள்ள முன்னேற்ற நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள படையினருக்கு உதவியாக வான்வழி குண்டுத் தாக்குதல்கள் நடத்தப்பட்டதாகவும், கிளிநொச்சி மாவட்டம் பூனகரி பகுதியில் விடுதலைப் புலிகள் ஒன்றுகூடும் இடம் ஒன்றின் மீது வியாழன் இரவு எம்.ஐ. 24 ரக தாக்குதல் உலங்கு வானூர்திகள் குண்டுத் தாக்குதல் நடத்தி சேதங்களை ஏற்படுத்தியதாகவும் இராணுவத் தலைமையகம் தெரிவித்துள்ளது.
எனினும் இந்தத் தாக்குதல்கள் குறித்து விடுதலைப் புலிகள் தரப்பிலிருந்து தகவல்கள் எதுவும் உடனடியாக வெளியாகவில்லை.
![]() |
![]() |
காயமடைந்த பெண் மருத்துவமனையில்… |
ஆயினும் கிளிநொச்சி நகரப் பிரதேசத்தை அண்டிய பகுதிகளை நோக்கி படையினர் தொடர்ச்சியாக எறிகணை தாக்குதல்களை நடத்தியதாகவும், இந்தத் தாக்குதல்களின்போது உருத்திரபுரம் பகுதியில் எறிகணை குண்டு ஒன்று வீழ்ந்து வெடித்ததில் 26 வயதுடைய இளம் தாயொருவர் படுகாயமடைந்து கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும் விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளனர்.
கிளிநொச்சி மீது அடுத்த வாரம் அளவில் தாக்குதல் ஆரம்பமாகலாம்: இலங்கை இராணுவத் தளபதி சரத் ஃபொன்சேகா
இலங்கையின் வடக்கே யுத்த நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள இராணுவத்தினர், தமிழீழ விடுதலைப்புலிகளின் நீண்டகாலக் கட்டுப்பாட்டிலிருக்கும் கிளிநொச்சி நகரை அண்மித்திருப்பதாகவும், அடுத்த வாரமளவில் இந்த நகரத்தின் மீது முதலாவது தாக்குதலை மேற்கொள்ள எதிர்பார்த்திருப்பதாகவும், இலங்கை இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சரத் ஃபொன்சேகா கொழும்பில் தெரிவித்திருக்கிறார்.
கடந்த இரண்டு வருடங்களாக நாம் திட்டமிட்டதுபோல் இராணுவ நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும், இதுவரை காலமும் திட்டமிட்டபடி இவை நிறைவேற்றப்பட்டுவருவதாகவும்,. அடுத்த வாரம் அளவில் கிளிநொச்சி மீது முதலாவது தாக்குதலை மேற்கொள்ளமுடியும் என்று எதிர்பார்ப்பதாகவும் இராணுவத் தளபதி தெரிவித்தார்.
மீண்டும் விண்வெளிக்கு மனிதனை அனுப்பும் முயற்சியில் சீனா
![]() |
![]() |
விண்வெளிக்கு செல்லும் சீன ரொக்கெட் |
சீனா விண்வெளிக்கு மூன்றாவது முறையாக மனிதனை அனுப்புவதற்கான பணிகளை தீவிரமாக செய்துவருகிறது. இம்முறை, விண்வெளிக்கு செல்பவர் விண்ணில் நடக்கவும் உள்ளார்.
சீன விண்வெளி வீரர் இப்படிச் செய்யவுள்ளது இதுவே முதல் முறையாகும்.
இதன் மூலம் சீனவுக்கு சர்வதேச மதிப்பு கிடைக்கும் என்றும் உள்நாட்டில் தேசப் பற்றும் நாட்டைப் பற்றிய பெருமிதமும் அதிகமாகும் என்றும் சீனக் கம்யூனிஸ்ட் தலைவர்கள் நம்புகின்றனர்.
சீன ஊடகங்கள் விண்வெளி வீரர்களைப் பற்றியும் அவர்களின் குடும்பங்களைப் பற்றியும் பல நுண்ணிய தகவல்களை வெளியிட்டு வருகின்றன.
அடுத்த 12 ஆண்டுகளுக்குள் சொந்தமாக விண்வெளி நிலையங்களை அமைக்கவும் நிலவில் தரையிரங்கவும் சீனா பிரம்மாண்டத் திட்டங்களை தீட்டிவைத்துள்ளது. இதன் காரணமாக சில நடைமுறை பலன்களும் இருக்கின்றன என்றும் சிலர் வாதிடுகின்றனர்.
வன்னிக்கு உணவுப் பொருட்கள் செல்லத் தொடங்கியுள்ளன
![]() |
![]() |
வன்னியில் ஒரு சாலையோரக் கடை |
இலங்கையின் வடக்கே கடும் மோதல்கள் இடம்பெற்றுக் கொண்டிருக்கும் கிளிநொச்சி மாவட்டத்துக்கு இரண்டு வாரங்களுக்கு பின்னர் உணவுப் பொருட்கள் செல்லத் தொடங்கியுள்ளன.
இருபது டிரக் வண்டிகளில் உணவுப் பொருட்கள் ஏற்றப்பட்டிருந்த போதிலும் ஐந்து டிரக் வண்டிகளில் எண்பத்து ஐந்து டண்கள் அளவுக்கு மட்டுமே பொருட்கள் அனுப்பப்பட்டள்ளதாக அதிகாரிகள் கூறுகிறார்கள்.
இதனிடையே கடந்த பத்து தினங்களில் முல்லைத்தீவு மாவட்டத்துக்கு 54 டிரக் வண்டிகளில் உதவிப் பொருட்கள் சென்றுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. தற்போது இருக்கும் நடைமுறைகளின்படி 80 டிரக் வண்டிகளில் பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டிருக்க வேண்டும் எனவும் கூறப்படுகிறது.
வடக்கே மோதல்கள் தொடருகின்றன
வடக்கே வவுனியா, கிளிநொச்சி மற்றும் வெலிஓயா பகுதிகளில் இடம்பெற்ற மோதல்களில் 19 விடுதலைப் புலிகளும், 3 இராணுவத்தினரும் கொல்லப்பட்டிருப்பதாக இராணுவம் தெரிவித்துள்ளது.
அக்கராயன்குளம் சண்டைகளில் கொல்லப்பட்ட விடுதலைப் புலிகளின் இரண்டு சடலங்கள் செஞ்சிலுவைச் சங்கத்தின் மூலம் ஒப்படைக்கப்பட்டுள்ளது என்று இராணுவம் கூறியுள்ளது.
இவை குறித்து விடுதலைப் புலிகள் தரப்பு கருத்துக்கள் உடனடியாக வெளியாகவில்லை.
மட்டக்களப்பு மாவட்டம் தமிழ் பகுதிகளில் ஹர்த்தால்
![]() |
![]() |
ஆளில்லா சாலைகளும் அடைக்கப்பட்டுள்ள கடைகளும் |
மட்டக்களப்பு மாவட்டம் ஆரையம்பதி பிரதேசவாசிகள் இருவர் மர்மமான முறையில் காணாமல் போன சம்பவத்தைக் கண்டித்து மாவட்டத்திலுள்ள சில தமிழ் பிரதேசங்களில் இன்று மேற்கொள்ளப்பட்ட ஹர்த்தால் காரணமாக மாவட்டத்தின் வழமை நிலை பாதிக்கப்பட்டிருந்தாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்த வியாழக்கிழமை ஆரையம்பதி பிரதேச பாடசாலை மாணவன் உட்பட இருவர் மர்மமான முறையில் காணாமல் போயுள்ளனர்
தமது அயல் பிரதேசமான காத்தான்குடிக்கு ஆடு விற்பதற்காக குறிப்பிட்ட இருவரும் சென்றிருந்ததாக உறவினர்கள் தெரிவிக்கின்றனர்
இருவரும் காணாமல் போன சம்பவத்தைக் கணடித்தும், அவர்கள் கடத்தப்பட்டிருந்தால் விடுவிக்க வேண்டும் என்று கோரியுமே இந்த ஹர்த்தாலுக்கான அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது
தமது பிரதேசத்திற்குள் குறித்த நபர்கள் கடத்தப்படவோ அல்லது காணாமல் போகவோ இல்லை என காத்தான்குடி பிரதேச பள்ளிவாசல்கள் சம்மேளனம் புதன்கிழமை மாலை விடுத்துள்ள அறிக்கையொன்றில் தெரிவித்துள்ளது.
![]() |
![]() |
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மக்கள் |
ஆனால் இவ்விருவரும் காத்தான்குடி பிரதேசத்திற்குள்ளேயே காணாமல் போன்தாக ஆரையம்பதி செல்வ விநாயகர் ஆலய பரிபாலன சபைத் தலைவர் எம். கமலாகரன் கூறுகின்றார்.
ஆரையம்பதி மற்றும் காத்தான்குடி பிரதேசவாசிகளிடையே ஏற்பட்டுள்ள பதற்ற நிலை குறித்து இன்று கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தனை தான் சந்தித்து உரையாடியதாக கூறும் மாகாண சுகாதார அமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா, வியாழக்கிழமை முதல் பிரதேசத்தில் இயல்பு நிலை ஏற்படுத்துவது குறித்து இரு தரப்பு பிரமுகர்கள் சந்திப்பொன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடுகின்றார்.
மறுமொழியொன்றை இடுங்கள்