என்சிஇஆர்டி பாடப் புத்தகங்களில் திலகரை பயங்கரவாதி என குறிப்பிடுவதா? மாநிலங்களவையில் எம்.பி.க்கள் கண்டனம்
புது தில்லி, ஆக. 19: தேசிய கல்வி, ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் (என்சிஇஆர்டி) வெளியிட்டுள்ள பாட நூல்களில் சுதந்திரப் போராட்ட வீரர் பாலகங்காதர திலகரை “பயங்கரவாதி’ எனக் குறிப்பிட்டு இருப்பதற்கு மாநிலங்களவையில் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் வெள்ளிக்கிழமை கடும் கண்டனம் தெரிவித்தனர்.
சுதந்திரப் போராட்ட வீரர்கள் அரவிந்த கோஷ், பிபின் சந்திரா ஆகியோரையும் “”பயங்கரவாதிகள்” என்று அந்த நூலில் குறிப்பிட்டுள்ளனர் என்று எம்.பி.க்கள் சுட்டிக்காட்டினர்.
ஜாட் சமுதாயத்தினரை “கொள்ளையர்கள்’ எனக் குறிப்பிட்டு இருப்பதற்கும் எம்.பி.க்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர்.
சமாஜவாதி கட்சி, கம்யூனிஸ்ட் கட்சி, காங்கிரஸ் ஆகியவற்றைச் சேர்ந்த எம்.பி.க்களும் அதைக் கண்டித்துப் பேசினர். ஆனால், அதை அரசியலாக்க வேண்டாம் என்று அவர்கள் கேட்டுக்கொண்டனர்.
“”இது மிகவும் முக்கியமான பிரச்சினை. உறுப்பினர்களின் உணர்வுகளுக்கு மதிப்பு அளிக்கும் வகையில், இது குறித்து விசாரணை நடத்த அரசு நடவடிக்கை எடுக்கும்” என்று நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணை அமைச்சர் சுரேஷ் பச்செüரி உறுதி அளித்தார்.
எப்படி இந்தத் தவறு நிகழ்ந்தது என்பது குறித்து விசாரணை நடத்த வேண்டும்.
தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி, பாஜக தலைமையில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அவையின் மையப் பகுதியில் கூடியதால், கூச்சல் குழப்பம் ஏற்பட்டு, அவையில் அமளி ஏற்பட்டது.
பாஜக உறுப்பினர் ரவி சங்கர் பிரசாத் தலைமையில் அக் கட்சியைச் சேர்ந்த எம்.பி.க்கள், என்சிஇஆர்டி வெளியிட்டுள்ள பாட நூல்களை உயர்த்திப் பிடித்தபடி, “”இந்தப் புத்தகத்தில் அநாகரிகமான வார்த்தைகள் இடம்பெற்றுள்ளன.
மாணவர்களின் இளம் உள்ளங்களில் இவை நஞ்சை விதைத்துவிடும். சுதந்திரப் போராட்ட தியாகிகளை “பயங்கரவாதிகள்’ என இந்தப் புத்தகத்தில் வர்ணித்துள்ளனர்” என்று குறிப்பிட்டனர்.
என்சிஇஆர்டி வெளியிட்டுள்ள “நவீன இந்தியா’ என்ற நூலில் அவை இடம்பெற்றுள்ளதாக அவர்கள் கூறியதுடன், அதை அவையில் தாக்கல் செய்ய அனுமதி கோரினர். ஆனால், அவைக்கு அப்போது தலைமை வகித்த, துணைத் தலைவர் கே. ரஹ்மான் கான், “”அவை விதிகளில் அதற்கு இடமில்லை” என்று அதற்கு அனுமதி தர மறுத்தார்.
இருந்தபோதிலும், அவையின் மையப் பகுதியில் கூடிய பாஜகவினர், அந்தப் புத்தகத்தின் பிரதிகளை அவைத் தலைவர் மேசையின் மீது வைத்தனர்.
மனித ஆற்றல் மேம்பாட்டுத் துறை அமைச்சர் அர்ஜுன் சிங், அவைக்கு வந்து விளக்கம் அளிக்க வேண்டும் என்று பாஜக எம்.பி.யான முரளி மனோகர் ஜோஷி வலியுறுத்தினார்.
அதையடுத்து, அவை உறுப்பினர்களின் உணர்வுகளை சம்பந்தப்பட்ட அமைச்சரிடம் எடுத்துக் கூறுவதாக அமைச்சர் சுரேஷ் பச்செüரி உறுதி கூறினார்.