Naarana Duraikannan – Biosketch : 100th Anniversary
Posted by Snapjudge மேல் ஓகஸ்ட் 23, 2006
“உயிரோவியம்’போல் உயர்ந்த மனிதர்
உதயை மு. வீரையன்
ஒருவரே தேசியவாதிகளுக்கும், திராவிட இயக்கத்தவர்க்கும் தோழமையாக இருக்க முடியுமா? சிறந்த பத்திரிகையாளரே ஒரு சமுதாய சீர்திருத்தவாதியாகவும் திகழ முடியுமா? நல்ல நாவலாசிரியரே நல்ல நாடக ஆசிரியராக விளங்க முடியுமா?
“முடியும்’ என்பதற்கு எடுத்துக்காட்டாக வாழ்ந்தவரே நாரண. துரைக்கண்ணன். இவரது புனைபெயர் “ஜீவா’.
இவரது காலம் சுதந்திரப் போராட்டக் காலம்; தேசபக்தர் பரலி சு. நெல்லையப்பர் மூலம் “லோகோபகாரி‘ வாரப் பத்திரிகையில் உதவி ஆசிரியராக அறிமுகம். அந்தக்காலத்தில் பத்திரிகைகளுக்கும் அற்ப ஆயுள்தானே! அதன்பின் தேசபந்து, திராவிடன், தமிழ்நாடு எனத் தொடர்ந்தது. இறுதியாக 1932 ஆம் ஆண்டு “பிரசண்ட விகடன்‘ ஆசிரியர் பொறுப்பினை ஏற்றார். 1934-ல் “ஆனந்த போதினி‘யின் ஆசிரியர் பொறுப்பும் வந்தது.
இவர் பத்திரிகையாளராக மட்டும் இருந்துவிடாமல் மிகச் சிறந்த படைப்பாளராகவும் இருந்தார். ஆரம்ப காலத்தில் தமிழ்ப் பத்திரிகை உலகில் நாவலுக்கென ஓர் இடம் பெற்றுத் தந்தவர்கள் கல்கியும், நாரண. துரைக்கண்ணனுமே! ஆனந்த விகடன் மூலம் கல்கியும், பிரசண்ட விகடன் மூலம் “ஜீவா‘ என்ற புனைபெயரில் நாரண. துரைக்கண்ணனும் தமிழ் எழுத்துலகில் புதிய மாற்றத்தினை உருவாக்கினர்.
இவர் எழுதிய “உயிரோவியம்’, “நான் ஏன் பெண்ணாகப் பிறந்தேன்?’, “தாசி ரமணி’ முதலிய பெண்ணுரிமை பற்றிய புதினங்கள் படித்தவரைச் சிந்திக்கத் தூண்டின. “தீண்டாதார் யார்?’ என்னும் சமுதாயப் புரட்சி நாடகமும், “காதலனா? காதகனா?’ என்னும் மாணவர் சீர்கேட்டைச் சுட்டிக்காட்டும் நாவலும், “இலட்சிய புருடன்’ என்னும் அரசியல் புதினமும், வேலைக்காரி, நடுத்தெரு நாராயணன் முதலிய சமூக சீர்திருத்தக் கதைகளும் என இவர் எழுதிய நூல்கள் 130-க்கும் மேல். இந்தப் பட்டியலில் இவரது கவிதைகளும், கட்டுரைகளும், ஆராய்ச்சிகளும், மொழியாக்கங்களும் அடங்கும்.
டி .கே.எஸ். சகோதரர்கள் நடத்திய நாரண. துரைக்கண்ணனின் “உயிரோவியம்’ நாடகத்தைப் பார்த்துவிட்டு, “”காதலைப் பற்றி மிகத் தூய்மையாகவும், மேன்மையாகவும், புனிதமாகவும் சித்திரித்துள்ள நாடகம்…” என்று பாராட்டி தமிழ் நாடகத் தந்தை பம்மல் சம்பந்த முதலியார் எழுதி அனுப்பிய கட்டுரையே “உயிரோவியம்’ நாடக நூலில் முன்னுரையாக அச்சிடப்பட்டது.
இவர் எழுத்தாளர் மட்டுமல்ல, எழுத்தாளர்களின் உரிமைக்கும் போராடியவர். பாரதியார் பாடல்களுக்குத் தனியொருவர் உரிமை கொண்டாடுவது சரியல்ல, அவை நாட்டுடைமை ஆக்கப்பட வேண்டும் என்று உரிமைக்குரல் எழுந்தது. அதற்காக “பாரதி விடுதலைக் கழகம்‘ அமைக்கப்பட்டது. அதன் தலைவர் நாரண. துரைக்கண்ணன் – செயலாளர்கள் “சிவாஜி’ ஆசிரியர் திருலோக சீதாராம் மற்றும் வல்லிக்கண்ணன்.
அப்போது தமிழ்நாட்டின் முதலமைச்சராக இருந்தவர் ஓமந்தூர் இராமசாமி ரெட்டியார். அவரது உதவியை நாடியபோது, பாரதியார் மனைவியான செல்லம்மாள் பாரதியிடமிருந்து ஓர் இசைவுக் கடிதம் வாங்கி வந்தால் ஆவன செய்வதாகக் கூறிவிட்டார்.
செல்லம்மாள் பாரதியும் ஒப்புதல் கடிதம் தந்தார். பின்னர் முதலமைச்சர் ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார் முயற்சியால், ஏ.வி.எம். செட்டியார் மனமுவந்து பாரதி பாடல்கள் மீதிருந்த உரிமையை விட்டுக் கொடுத்தார். பாரதியார் பாடல்கள் நாட்டுடைமையாக்கப்பட்டன.
செல்லம்மாள் பாரதியைச் சந்திக்கும் நெல்லைப் பயணத்தின்போது நாரண. துரைக்கண்ணனின் மகன் நோய்வாய்ப்பட்டிருந்தவர் இறந்து போனார். அந்தச் சோகத்தையும், இழப்பையும் சுமந்து கொண்டு, வெளியில் காட்டாமல் கருமமே கண்ணாக இருந்தார் என்பது அவரது தன்னலமற்ற தொண்டுகளுக்குச் சிகரமாகும்.
சென்னை மயிலாப்பூரில் 1906 ஆகஸ்ட் 24 அன்று இவர் பிறந்தார். தந்தையார் நாராயணசாமி; தாயார் மீனாம்பாள். இவரது இளமைக்கல்வி திண்ணைப் பள்ளியிலும், திருவல்லிக்கேணி இந்து உயர்நிலைப் பள்ளியிலும்!
பட்டம் பதவிகளுக்கு அப்பாற்பட்டவராகவே வாழ்ந்தார். தமிழ் எழுத்தாளர் சங்கத் தலைவராகவும், சென்னை கம்பர் கழகச் செயலாளராகவும், முற்போக்கு எழுத்தாளர் சங்கத் தலைவராகவும், தென்னிந்திய பத்திரிகையாளர் பெருமன்றத்தின் துணைத் தலைவராகவும், தமிழ்க் கவிஞர் மன்றத் தலைவராகவும் பணியாற்றியதும்கூட தவிர்க்க முடியாத தேவையின் காரணமாகவே.
1952-இல் உலக மொழிகளில் நடத்தப்பட்ட நாடகங்களில் தலைசிறந்ததெனப் பிரெஞ்சு நாட்டு ஏடொன்று இவரது “உயிரோவிய’த்தைத் தேர்வு செய்து பாராட்டியது.
மனிதனுக்கு உயிர்; மனித சமுதாயத்துக்கு உயிரோவியம். இவர் படைத்த “உயிரோவியம்’போல் இவரும் உயர்ந்த மனிதரே!
(இன்று நாரண. துரைக்கண்ணன் நூற்றாண்டு தினம்).
மறுமொழியொன்றை இடுங்கள்