தனுஷ்கோடி ஆதித்தன் கவலைக்கிடம்
தூத்துக்குடி, ஆக.7: சாலை விபத்தில் காயமடைந்து, தூத்துக்குடி தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் தனுஷ்கோடி ஆதித்தன் எம்.பி. உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக உள்ளதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.
தூத்துக்குடி அருகே சனிக்கிழமை மாலை நடந்த சாலை விபத்தில் தனுஷ்கோடி ஆதித்தனின் மனைவி இந்திராதேவி பலியானார். தனுஷ்கோடி ஆதித்தன், அவரது மகள் சிந்தியா உள்ளிட்ட 5 பேர் பலத்த காயமடைந்தனர்.
எட்டையபுரம் சாலையில் உள்ள சுந்தரம் அருள்ராஜ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த சிந்தியா, சனிக்கிழமை இரவே திருநெல்வேலிக்கு கொண்டு செல்லப்பட்டு, அங்குள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
தனுஷ்கோடி ஆதித்தன் தூத்துக்குடி – பாளையங்கோட்டை சாலையில் உள்ள ஏ.வி.எம். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அவரது இடுப்பு, தொடை, கைகள் ஆகியவற்றில் கடுமையான எலும்பு முறிவுகள் ஏற்பட்டுள்ளன. அவருக்கு அறுவைச் சிகிச்சை அளிப்பதற்கு மதுரை அப்போலோ மருத்துவமனை மருத்துவக் குழுவினர் ஞாயிற்றுக்கிழமை காலை தூத்துக்குடி வந்தனர்.
ரத்த அழுத்தம் சீராக இல்லை: ஆனால், தனுஷ்கோடி ஆதித்தனின் ரத்த அழுத்தம் மற்றும் நாடித்துடிப்பு சீராக இல்லை. எனவே, ஞாயிற்றுக்கிழமை மாலை வரை அவருக்கு அறுவைச் சிகிச்சை செய்ய முடியவில்லை.
அறுவைச் சிகிச்சை
ஞாயிற்றுக்கிழமை இரவு 8.30 மணியளவில் தனுஷ்கோடி ஆதித்தனுக்கு அறுவைச் சிகிச்சை செய்யப்பட்டது. எலும்புச் சிகிச்சை நிபுணர் முத்துவேல்ராஜன், அறுவைச் சிகிச்சை நிபுணர் வி.சேகர் அடங்கிய 16 பேர் கொண்ட மருத்துவர் குழுவினர் இந்த அறுவைச் சிகிச்சையில் ஈடுபட்டனர்.
அவரது உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாகவே இருப்பதாகவும், அவரது உடல்நிலையை உன்னிப்பாகக் கண்காணித்து வருவதாகவும் மருத்துவர்கள் தெரிவித்தனர்.
இதற்கிடையே, விபத்தில் மரணமடைந்த இந்திராதேவியின் உடல், தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு, ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் பாளையங்கோட்டைக்கு அனுப்பிவைக்கப்பட்டது.
அனைத்து சிகிச்சைகளும் அளிக்க ஏற்பாடு
தூத்துக்குடி தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ள மக்களவை உறுப்பினர் ஆர். தனுஷ்கோடி ஆதித்தனுக்கு தேவையான அனைத்து சிகிச்சைகளும் அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக மத்திய அமைச்சர் ஜி.கே. வாசன் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார்.
முதல்வர் கருணாநிதி விசாரித்தார்: தமிழக முதல்வர் மு. கருணாநிதியும், தனுஷ்கோடி ஆதித்தனின் உடல்நிலை குறித்து என்னிடம் தொலைபேசியில் விசாரித்தார் என்றார் வாசன்.
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கிருஷ்ணசாமியும், தனுஷ்கோடி ஆதித்தனை நேரில் பார்த்து, அவரது உடல்நிலை குறித்து மருத்துவர்களுடன் ஆலோசனை நடத்தினார்.