தமிழ்நாட்டில் நிலமற்ற ஏழை விவசாயிகளுக்கு தரிசு நிலம் வழங்கும் திட்ட பணிகள் தொடக்கம்
![]() |
![]() |
தமிழக முதல்வர் கருணாநிதி |
தமிழ் நாட்டில் இருக்கும் நிலமற்ற ஏழை விவசாயிகளுக்கு தலா 2 ஏக்கர் தரிசு நிலத்தை மேம்படுத்தி இலவசமாக வழங்கும் திட்டத்தின் முதற் கட்டப் பணிகள் தொடங்கியிருப்பதாக தமிழக முதல்வர் மு கருணாநிதி இன்று செவ்வாய்க்கிழமை சட்டமன்றத்தில் அறிவித்தார்.
தற்போது தமிழ்நாட்டில் இருக்கும் தரிசு நிலங்கள் பற்றி எடுக்கப்பட்ட கணக்கீட்டின் முதற் கட்ட புள்ளி விவரங்களின்படி, ஆக்கிரமிப்பு செய்யப்படாமல் உடனடியாக ஏழை விவசாயிகளுக்கு ஒப்படைக்கக்கூடிய நிலையில் இருக்கும் அரசு புறம்போக்கு தரிசு நிலம் 1 லட்சத்து 95 ஆயிரம் ஏக்கர் இருப்பதாக தெரிய வந்திருப்பதாக கருணாநிதி தெரிவித்தார்.
சுமார் 98,000 சிறு குறு விவசாயிகளால் 67,000 ஏக்கர் அரசு புறம்போக்கு தரிசு நிலம் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளதாகவும்; இது தவிர 4 லட்சத்து
25 ஆயிரம் விவசாயிகளுக்கு சொந்தமாக சுமார் ஏழு லட்சம் ஏக்கர் பட்டா தரிசு நிலம் இருப்பதாகவும் அவர் கூறினார்.
இதில், ஆக்கிரமிப்பு செய்யப்படாத அரசுக்குச் சொந்தமான 1 லட்சத்து 95 ஆயிரம் ஏக்கர் தரிசு நிலத்தை மேம்படுத்தி நிலமற்ற ஏழை விவசாயிகளுக்கு தலா
2 ஏக்கர் வீதம் பிரித்து வழங்க நடவடிக்கைகள் தொடங்கப்பட்டு விட்டதாக தெரிவித்த கருணாநிதி, சிறு குறு விவசாயிகளால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ள 67,000 ஏக்கர் அரசு புறம்போக்கு தரிசு நிலத்தை பண்படுத்தி அதனை ஆக்கிரமித்துள்ள 98,000 விவசாயிகளுக்கே மீண்டும் வழங்கப் போவதாகவும் அறிவித்தார்.
நான்கு லட்சத்து 25 ஆயிரம் சிறு குறு விவசாயிகளுக்குச் சொந்தமானதாக இருக்கும் 7 லட்சம் ஏக்கர் தரிசு பட்டா நிலத்தைப் பொறுத்தவரையில், நிலச்சொந்தக்காரர்களே விரும்பி கேட்டுக் கொண்டால், அரசாங்கம் அவர்களின் நிலங்களை விவசாயம் செய்யத்தக்க நிலமாக பண்படுத்தி அவர்களுக்கே திருப்பித் தரப்படும் என்றும் அவர் கூறினார்.
எனவே இந்த மூன்று வகையான நடைமுறைகள் மூலமாக முதற்கட்டமாக தமிழகத்தில் உள்ள சுமார் 5 லட்சம் ஏழை விவசாயக் குடும்பங்களுக்கு தரிசு நிலம் மேம்படுத்தி வழங்கப்படுவதற்கான துவக்கப்பணிகள் ஆரம்பித்துவிட்டதாக கருணாநிதி கூறினார்.
கருணாநிதியின் இன்றைய அறிவிப்பு பற்றி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் விவசாயிகள் சங்கப்பிரிவு செயலாளர் கே.பாலகிருஷ்னணின் செவ்வியை நேயர்கள் இன்றைய செய்தி அரங்கத்தில் கேட்கலாம்.