பக்திப் பயிர் வளர்த்தவர்
தஞ்சை லியோ இராமலிங்கம்
விடியற்காலை எழுந்து, நாளும் பூஜை செய்வதையும் தினமும் சொற்பொழிவு நிகழ்த்துவதையும் தவமாகக் கொண்டு வாழ்ந்தவர் வாரியார் சுவாமிகள்!
முருகனின் நாமங்களில் ஒன்றாகிய கிருபானந்த வாரி என்ற பெயரை இவருக்கு இவரின் தந்தையார் சூட்டினார். கிருபை என்றால் கருணை என்று பொருள். ஆனந்தம் என்றால் இன்பம். வாரி என்பதற்கு சமுத்திரம் என்று பொருள். கருணையே உருவான, பிறரை இன்பத்தில் ஆழ்த்திய, இவர் ஓர் தமிழ்க்கடல்! தீர்க்கத் தரிசனமாக இவர் தந்தையார் பொருத்தமான பெயரைச் சூட்டியுள்ளார்!
இவருக்கு இவரின் தந்தையாரே இலக்கிய இலக்கணங்களைக் கற்றுத் தந்தார். எட்டுவயதிலேயே கவிபாடும் ஆற்றலைப் பெற்று இறுதிக்காலம் வரை பலருக்கும் வெண்பாவில் வாழ்த்து எழுதி வழங்கினார். பன்னிரெண்டு வயதிலேயே ஏராளமான பாடல்களை மனப்பாடம் செய்யும் திறன் பெற்றிருந்தார். பதினெட்டு வயதிலேயே சிறப்பாகச் சொற்பொழிவாற்றும் ஆற்றலுடையவராய் விளங்கினார்.
தமிழ் வருடங்கள் அறுபதினையும் அடிமாறாமல் உணர்ச்சியோடு ஒரே மூச்சில் அழகுறச் சொல்லும் திறன் பெற்றிருந்தார். இவரது பேச்சில் சங்கீதத்தை ரசிக்கலாம். நாடகத்தைப் பார்க்கலாம். நகைச்சுவையை அனுபவிக்கலாம். இனிய நல்ல கருத்துகளை அறியலாம். நல்லோர் பலரின் வாழ்வில் நிகழ்ந்த நல்ல சுவையான நிகழ்ச்சிகளையும் தெரிந்து கொள்ளலாம்.
படித்தவர், பாமரர், முதியவர், இளைஞர், பெண்கள், குழந்தைகள் எல்லாரும் இவர் பேச்சை விரும்புவர். பலரும் விரும்பும் வகையில் மணிக்கணக்கில் பேசி பக்திப்பயிர் வளர்த்த செந்தமிழ்க் கடல் வாரியார் சுவாமிகள்!
தாய்மாமன் மகளை மணந்து கொண்டாலும் “”கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரின்னு என் வாழ்க்கை தொண்டு செய்வதிலேயே கழிந்தது” என்று குறிப்பிட்டுள்ளார்.
ஒரு முறை பழநி ஈசான சிவாச்சாரியார் என்பவர் லியோ டால்ஸ்டாய் எழுதிய “நாம் என்ன செய்யவேண்டும்?” என்ற நூலை வாரியாரிடம் தந்தாராம்! அந்த நூலைப் படித்த வாரியாருக்கு பொன், பொருள் உலகம் என்ற பற்று பறந்து போயிற்றாம். தான் அணிந்திருந்த தங்க நகைகளை காங்கேய நல்லூர் முருகனுக்குக் காணிக்கை ஆக்கினராம். இவர் எழுதிய நூல்கள் பல.
அருளாளர்களின் பாடல்களை நாள்தோறும் படிக்க வேண்டும். தினமும் தியானம் செய்ய வேண்டும் என்றார். பிற உயிர்களுக்குத் தீங்கு செய்யாமலும், வந்த இடையூறுகளை நீக்குவதுமே அறமாகும் என்று அறத்திற்கு விளக்கம் அளித்தார்.
சர்க்கரை இல்லையானால் அங்கு எறும்பு வராது. ஆசையான சர்க்கரை இருந்தால் துன்பங்களான எறும்புகள் வந்து சேரும் என்றார்.
“”மனம் அடங்கிய இடத்திலேதான் உண்மையான நலம் ஊற்றெடுத்து ஓடுகின்றது. அலைகின்ற மனத்தை ஒருபுறம் நிறுத்தி வைத்தால் சுகமுண்டாகும்” என்றார். “”தனக்கென்று யாசிப்பது இகழ். அறப்பணிக்கென்று யாசிப்பது புகழ்” என்ற இவர், தனக்கென்று யாசிக்காமல் அறப்பணிக்கு யாசித்து பல அரிய செயல்களைச் செய்தார்.
திருப்பராய்த்துறை இராமகிருஷ்ண குடிலுக்கும் தாம் பிறந்த காங்கேய நல்லூரில் தம் அன்னையின் விருப்பத்திற்கேற்ப ஏற்படுத்திய அன்ன சத்திரத்திற்கும் பெரும் நிதியைத் திரட்டினார். வடலூர் ஞானசபையின் திருப்பணியையும் செய்தார். தமது சொற்பொழிவை இவற்றிற்கெல்லாம் பயன்படுத்திக்கொண்டார். அறுபது ஆண்டுகாலம் ஆன்மிகப் பணிகளைச் செய்தார்.
நியாயம் அல்லாத வழியில் பொருளைச் சேர்க்காதே. இகழையும் புகழையும் சமமாகக் கருது. அது அமைதியை அளிக்கும். பிறரை வன்சொல்கூறி வையாதே. தாழ்மை தேவை’ என்றார்.
“”அழகை விட ஆரோக்கியம் முக்கியம். ஒரு மனிதன் ஆரோக்கியமாக வாழ விரும்புவானானால் உணவு நியதி அவசியமானது. ஓர் உணவுக்கும் மறு உணவுக்கும் போதுமான இடைவெளி இருக்க வேண்டும். பிறருடைய விருப்பத்துக்காகவும் வற்புறுத்தலுக்காகவும் இடையில் உண்ணுதல் கூடாது” என்ற இவர் காலையில் எதுவும் உண்ணாமல் இரவில் கொஞ்சம் பால்கலந்த கோதுமைக் கஞ்சியை அருந்தி வந்தார். இறுதிவரை ஆரோக்கியமாகவே வாழ்ந்தார்.
“”ஆசையின்றிப் பயன் கருதாமல் மக்களுக்குச் சேவை செய்தால் புகழ் தானே வந்து சேரும். புகழுக்கு ஆசைப்படக் கூடாது, மலரை நாடி வண்டுகள் வருவதுபோல பற்றற்ற சேவையால் புகழ் தானே வரும்”.
“”இளமை வளமையாக ஒழுக்கமாக அமையவில்லையானால் இடைப்பகுதியும் கடைப்பகுதியும் ஒழுங்காக அமைய மாட்டா”.
“”பிறர் குற்றங்களை மன்னிப்பதுதான் பெருமையும் பொறுமையுமாகும்”. இவ்வாறெல்லாம் பற்பல நற்கருத்துகளை வழங்கி, கடல்மடை திறந்தாற்போல, ஆன்மிகச் சொற்பொழிவாற்றி வந்த வாரியார் சுவாமிகளுக்கு எம்.ஜி.ஆர். முதல்வராக இருந்தபோது, தமிழக அரசு விருது அளித்து கௌரவித்தது.
(இன்று வாரியார் சுவாமிகள் நூற்றாண்டு நிறைவுநாள் கடைப்பிடிக்கப்படுகிறது.)