Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

Archive for ஓகஸ்ட் 31st, 2006

State of Public & School Libraries in Tamil Nadu

Posted by Snapjudge மேல் ஓகஸ்ட் 31, 2006

தூங்கும் நூலகங்கள்

அச்சு இயந்திரம் கண்டுபிடிக்கப்பட்டதன் விளைவாக புத்தகங்களின் வெளியீடு பெருகியது. புத்தகங்களைப் படிப்போர் எண்ணிக்கையும் அதிகரித்து வந்தது. தொலைக்காட்சியின் தாக்கம் அதிகரித்து வரும் இன்றையச் சூழ்நிலையிலும் மக்களிடம் படிக்கும் பழக்கத்தை வளர்ப்பதற்கு நூலகங்கள் முக்கியப் பங்காற்றி வருகின்றன. சாமானிய மற்றும் நடுத்தர மக்கள் நல்ல புத்தகங்களைப் படிக்க வேண்டும் என்று நினைத்தாலும் அதை வாங்கும் நிலையில் பலருக்குப் பொருளாதார வசதி இருப்பதில்லை. எனவே மக்களின் அறிவுத் தாகத்தைத் தணிப்பதில் நூலகங்களின் பங்கு முக்கியமானது. மாணவர்கள் தங்களது பள்ளிப் பாடப்புத்தகங்களைத் தாண்டி பொது அறிவை வளர்த்துக் கொள்வதற்கும் நூலகங்கள் முக்கிய வாய்ப்பாகத் திகழ்கின்றன. ஒருகாலத்தில் பட்டிதொட்டிகளெங்கும் தொடங்கப்பட்ட படிப்பகங்கள் சாமானிய மக்களிடம் அரசியல் விழிப்புணர்வை ஊட்டின என்பதை மறக்க முடியாது. வீட்டுக்கு ஒரு நூலகம் வேண்டுமென்றார் அண்ணா. அது சாத்தியமில்லாத பெரும்பாலான மக்களுக்கு அறிவுச்சுடர் ஏற்றி வைக்க உதவியாக இருப்பவை பொது நூலகங்களே.

பொது நூலகங்களில் நூல்கள் போதிய பராமரிப்பின்றி இருப்பதைப் பல்வேறு சந்தர்ப்பங்களில் பலரும் சுட்டிக்காட்டியுள்ளனர். அடிப்படை வசதிகளுக்கே அல்லாடிக் கொண்டிருக்கும் பல அரசுப் பள்ளிகளிலும் மாநகராட்சிப் பள்ளிகளிலும் நூலகங்களின் செயல்பாடு திருப்திகரமாக இல்லை. பெரும்பாலான பள்ளிகளில் இந்த நூல்களை மாணவர்களுக்குப் படிக்கக் கொடுப்பது கூட இல்லை. மாணவர்களும் ஆசிரியர்களும் படிப்பதற்குப் பயன்படாமல் அலமாரிகளில் புத்தகங்கள் பூட்டி வைக்கப்பட்டுள்ளன. சென்னை மாநகராட்சிப் பள்ளிகளில் இந்த நிலைமை நிலவுவதை சமீபத்திய பத்திரிகைச் செய்தி படம்பிடித்துக் காட்டியது. இதுபோன்ற நிலைமை மேலும் பல பள்ளிகளில் இருக்கக்கூடும். சில நல்ல ஆசிரியர்களின் பொறுப்புணர்வால் இதற்கு விதிவிலக்கான சில பள்ளிகளும் உண்டு. மாணவர்கள் படிப்பதற்கு நூலகங்களில் போதிய புத்தகங்கள் இல்லாமல் இருக்கலாம். ஆனால் இருக்கின்ற புத்தகங்களை மாணவர்களுக்குப் படிப்பதற்குக் கொடுக்காமல் இருப்பது என்ன நியாயம் என்று புரியவில்லை.

இதுபோன்ற பள்ளி நூலகங்களில் மிகக் குறைவான புத்தகங்களே இருக்கலாம். அதனால் தனி நூலகர்கள் யாரும் இருப்பது கிடையாது. ஆசிரியர்களில் யாராவது ஒருவர் பொறுப்பேற்று இதனைப் பராமரிக்கும் நிலை இருக்கும். புத்தகங்கள் தொலைந்துபோகாமல் கணக்குச் சரியாக இருக்க வேண்டும். அதற்கு ஒரே வழி, யாருக்கும் புத்தகங்களைக் கொடுக்காமல் இருப்பதுதான் என்ற எண்ணத்தில் இதுபோல புத்தகங்களை அலமாரிக்குள்ளேயே சிறைவைக்கும் போக்கு நடைபெறுகிறது. இந்த நிலைமையைச் சரிசெய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம். அத்துடன் பள்ளி நூலகங்களுக்கு நூல்கள் என்ற பெயரில் தேவையற்ற, பயனற்ற புத்தகங்களை வாங்கிக் குவிப்பதை விட்டுவிட்டு மாணவர்களுக்கு உண்மையிலேயே பயன்படும் புத்தகங்களை மட்டும் வாங்கச் செய்வதும் முக்கியம். பொது நூலகங்கங்களுக்கு வாங்கப்படும் புத்தகங்கள் பற்றியும் இதேபோல கடுமையான விமர்சனங்கள் இருந்து வந்திருக்கின்றன. தற்போது பொது நூலகங்களுக்கு ஆயிரம் பிரதிகள் வீதம் புத்தகங்களை வாங்கத் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது வரவேற்கத்தக்கது. பொதுமக்கள் பணத்தில் வாங்கப்படும் இந்த நூல்கள் அனைத்தும் அறிவு வளர்ச்சிக்குப் பயன்படுவனவாக இருக்க வேண்டும்.

பொது நூலகத் துறைக்கும் பள்ளி நூலகங்களுக்கும் பணம் ஒதுக்கீடு செய்வதுடன் நின்று விடாமல் அவை சிறப்பாகச் செயல்படுவதற்கு அரசு தகுந்த கண்காணிப்பு ஏற்பாடுகளையும் செய்ய வேண்டும். தற்போதைய கணினி யுகத்தில், உயர்கல்வி நிலையங்களில் உள்ள நூலகங்கள் டிஜிட்டல் நூலகங்களாகத் தரம் உயர்த்தப்படுகின்ற வேளையில், பள்ளி நூலகங்களை அவல நிலையில் வைத்திருக்கக் கூடாது.

Posted in Books, India, Lend, Library, Magazines, Member, Memberships, Op-Ed, Reader, Students, Tamil, Tamil Nadu, TN | 1 Comment »

Cuba’s Fidel Castro Administration

Posted by Snapjudge மேல் ஓகஸ்ட் 31, 2006

எளியவர் விடுதலைக்கான தாகம்

ஜோ அருண்

ஓர் ஆட்சியாளர் பாமரரைக் கண்டு கண்ணீர் விடுகிற கனிந்த இதயமும், சமூகத்தின் பொருள்வளத்தைக் கூட்டுகிற அறிவுநுட்பம் நிறைந்த கூர்மையான மூளையும் கொண்டிருக்க வேண்டும்.

கியூபாவின் தலைவர் பிடல் காஸ்ட்ரோ ஒரு புரட்சியாளர். காடுகளில் ஒளிந்திருந்து ஓர் ஆயுதம் தாங்கிய பேரியக்கத்தை வழி நடத்தியவர். இருந்தும் வெறுமனே புரட்சி என்று பொருளாதாரச் சிந்தனையில்லாமல் இருந்துவிடவில்லை. துப்பாக்கி ஏந்திய புரட்சியாளர்கள் கூடாரத்தில் தொழில் முனைவோருடன் பேச்சு நடத்தி கியூபா நாட்டின் தொழில் வளத்தைக் கொஞ்சம் கொஞ்சமாகப் பெருக்கிக் கொண்டார். கியூபாவில் ஒரு தன்னிறைவை உருவாக்கியுள்ளார் என்பதை யாராலும் மறுக்க முடியாது. எது வளர்ச்சி தருமோ அதை மனத்தில் வைத்து தனது ஆயுதப்புரட்சி என்கிற இறுகுதலை ஒருவகையான இளகுதலுக்குட்படுத்தியதால் உண்டான வளர்ச்சி அது. எளியவர்களது விடுதலைக்கான தாகமும், பொருளாதார வளர்ச்சிக்கான ஈடுபாடும் சமவேகத்தில் கொண்டு இயங்கும் அரசு, ஆரோக்கியமான அரசு.

இன்று நாம் பின்பற்றுகிற மக்களாட்சித் தத்துவத்தின் அடிப்படையும் அதுதான். மக்களாட்சி என்கிற ஆட்சிமுறையின் மூலம் கிரேக்கத்திலிருந்து வருகிறது. மூன்றாம் நூற்றாண்டுகளில் கிரேக்க அரசியல் சமூகம் ஒரு பெரும் குழப்பத்தில் சிக்கி நின்றது. பணக்காரர்கள் “ஜிம்னாசியம்’ கட்டிக் கலைகள் வளர்த்தனர். ஆனால் கஞ்சிக்குத் தவித்து கடைநிலையில் ஒரு கணிசமான மக்கள் கூட்டம் வாடிக் கிடந்தது. நாளாவட்டத்தில் தொழிலாளர்கள் எதிர்ப்புக் குரல் கொடுத்தனர். இந்த அரசியல் சிக்கலைத் தீர்த்து வைக்க சொலோன் என்ற தத்துவியலாரை நடுவராக நியமித்தனர். அவர் எந்தச் சார்புமின்றித் தீர்ப்புச் சொல்லி, ஒரு முறையான அரசியலமைப்பை உருவாக்க வேண்டும் என்று முடிவு செய்தார். நிலக்கிழார்களுக்கு சொத்துகளை வைத்துக்கொண்டு நிர்வகிக்க அனுமதி தந்து, ஆனால் அவர்கள் அதிகமான வரி கட்ட வேண்டும் என்ற ஒழுங்கை முன்வைத்தார். அதேநேரத்தில் அரசைத் தேர்ந்தெடுக்கிற பொறுப்பின் பெரும்பகுதியை ஏழைகளுக்குக் கொடுத்தார்.

செல்வந்தர்கள் தங்கள் சொத்தை வளர்த்துக் கொள்கிறபோதே ஏழைகளை அவர்களது வறுமை நிலையிலிருந்து உயர்த்த ஏதாவது ஒரு சமூகப்பொறுப்பை அவர்கள் எடுத்துக் கொள்ள வேண்டும் என்பதில் சொலோன் குறிப்பாய் இருந்தார். பணக்காரர்களுக்கு இந்தச் சமூகப்பொறுப்பு இருக்கிறபோது ஒரு நாடு சமநிலை பெறும் என்பதை மனப்பூர்வமாக நம்பினார் அவர். வெறுமனே பாமரர்கள் கத்தியெடுத்து போராட்டத்தில் ஈடுபடுவதால் ஒரு நாட்டில் சமத்துவம் வந்துவிடாது. தங்களை நிர்வகித்து வழிநடத்துகிற தலைவர்களைத் தேர்ந்தெடுக்கிற அதிகாரம் அவர்களுக்கு இருக்கிறபோது, அந்த அதிகாரத்தைப் பயன்படுத்தி ஆக்கபூர்வமான வளர்ச்சிக்கு வழி வகுப்பார்கள் என்று நம்பினார். செல்வந்தர்களின் பணம் பெருகிடும் சூழலும், பாமரர்களின் அரசு அமைக்கிற அரசியல் பலம் வலுப்பெற்று இருக்கிற நிலையும் உள்ள ஒரு நடுநிலையை உருவாக்கிக் கொள்வது மக்களாட்சியின் அடிப்படை என்று அடிக்கோடிட்டுக் காண்பித்தார். பணக்காரர்களுக்கு ஏழை மக்களின் முன்னேற்றம் பற்றிய அக்கறையும், பாமரர்களுக்கு அரசு அதிகாரத்தை யாரிடம் கொடுக்க வேண்டும் என்கிற பொறுப்பும் உள்ள சூழல் ஒரு வளமான அரசியலமைப்பு என்று சொலோன் சிந்தித்தார்.

இந்தத் தத்துவம் இன்று செயலாக்கம் பெற வேண்டும். ஓர் அரசு தனது இதயத்தை பாமரர்களுக்காகத் துடிக்க விட வேண்டும். அதேநேரத்தில் அறிவையும், அரசு அதிகாரத்தையும் பயன்படுத்தி தொழில்வளத்தைப் பெருக்கி பொருளாதாரத்தில் பலம் பெற வேண்டும். அந்தப் பொருளாதாரப் பலத்தைக் கொண்டு வறுமை என்கிற பலவீனத்தைக் களைய வேண்டும். மாடி வீடுகளை மட்டும் வளர விட்டுவிட்டு குடிசைகளைக் கண்டுகொள்ளாத அரசியல் நீதியற்ற அரசியல். தொழில்வளப்படுத்துதல் என்பது ஏழைகளின் முன்னேற்றத்திற்கு எந்தவிதத்திலும் தடையாக அமைந்துவிடக் கூடாது. அதேநேரத்தில் “அன்னிய முதலீடே இருக்கக் கூடாது, தொழிலதிபர்களுக்கு எதிராகப் போர் நடத்திக் கொண்டே இருப்பதுதான் மக்கள் மைய அரசு’ என்றால் அது ஒரு முதிர்ச்சியற்ற சிந்தனை. இதனால் நாம் வளர முடியாது. ஏழ்மையை மகிமைப்படுத்தி (ஞ்ப்ர்ழ்ண்ச்ண்ஸ்ரீஹற்ண்ர்ய் ர்ச் ல்ர்ஸ்ங்ழ்ற்ஹ்) ஏழைகளை ஏழைகளாகவே வைத்து, மேடைப்பேச்சிலும் தத்துவப் புலம்பலிலும் நாட்டைச் சிறைப்படுத்த வேண்டி வரும். தொழிலைப் பெருக்குவது, ஏழ்மையை ஒழிப்பது என்ற இரண்டு அடிப்படைச் செயல்பாட்டுத் தளங்களை ஒவ்வோர் அரசும் கொண்டிருக்க வேண்டும்.

மக்களின் துயர் கண்டு கசிந்துருகி நிறைய இலவசமாகப் பொருளையும் பதவியில் ஒதுக்கீட்டையும் கொடுத்து மக்களிடம் புகழ் பெறுவது என்பது ஒரு குறுகிய சிந்தனை. இன்றைக்கு வேண்டுமானால் அது உதவலாம். ஆனால் தொலைநோக்குப் பார்வையில் சிந்தித்து, தாற்காலிகச் செயல்பாடுகளை விடுத்து நிறைவான நீண்டகாலச் செயல்பாடுகளில் இறங்க வேண்டும். மக்களாட்சியில் ஒரு சாபக்கேடு என்னவென்றால் தேர்தலின்போது குடிமக்களைக் கண்டு கொள்கிற அரசியல், ஆட்சியில் அமர்ந்துவிட்ட பிறகு விலகிப் போய் விடுகிறது. வாக்குகள் என்கிற முட்டை மட்டும் போடும் கோழிகளாகக் குடிமக்களை ஆக்கி விடுகிற அரசியல் எஞ்சி நிற்கிறது. முறையான அரசு என்பது ஏழை எளிய மக்களை இதயத்துக்கு நெருக்கமாக வைத்துக்கொண்டு, தொழிலதிபர்களையும், பணக்காரர்களையும் முடுக்கிவிட்டு ஏழ்மை நிலை அகற்றப் பாடுபட வைக்க வேண்டும்.

இது அரசு மட்டும் செய்கிற செயலாக இருந்துவிடக் கூடாது. அரசாங்கத்தைத் தேர்தல் நேரத்தில் பாமரர்கள் உருவாக்குகிறார்கள் என்றால் அந்தத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிற அரசாங்கத்தை முடுக்கிவிடுவது தொழில் நிறுவனங்களும் (இர்ழ்ல்ர்ழ்ஹற்ங்ள்) தொழில் அதிபர்களும்! அரசுக்கு எப்படி ஏழைகள் மீது அக்கறையும் கரிசனையும் இருக்க வேண்டுமோ, அதே அளவுக்கு தொழில் நிறுவனங்களுக்கும் அவற்றின் அதிபர்களுக்கும் இருக்க வேண்டும்.

ஒரு தொழில் நிறுவனம் தொடங்க அரசு அனுமதி கொடுக்கிறபோது அந்த நிறுவனம் இயங்குகிற பகுதியில் உள்ள ஏழை மக்களுக்கு அந்த நிறுவனம் என்ன செய்யப் போகிறது என்பதைத் தெரிந்து கொள்ளாமல் அரசு அனுமதியும் அங்கீகாரமும் தரக்கூடாது. அனுமதி வாங்கித் தொடங்கிய பிறகு உறுதியளித்ததுபோல் வறுமை ஒழிப்புச் செயல்பாடுகளில் ஈடுபடவில்லையென்றால் அந்த நிறுவனத்தின் அங்கீகாரத்தைத் திரும்பப் பெற்றிட வேண்டும். கணினி நிறுவனங்கள் அதிகமாக உருவாகிக் கொண்டிருக்கிற இதே நேரத்தில் இந்த நிறுவனங்களின் லாபத்தில் பத்து சதவீதத்தையாவது அருகில் உள்ள வறியவர்களின் குடும்பச்சூழல் முன்னேறுவதற்குப் பயன்படுத்த வேண்டும். அந்தக் குடும்பங்களில் உள்ள குழந்தைகளின் படிப்புக்கும் அவர்களது வேலைவாய்ப்புக்கும் உதவ வேண்டும். ஒவ்வொரு நிறுவனமும் ஒரு குடிசைப்பகுதியையோ, ஒரு கிராமத்தையோ தத்து எடுத்துக் கொள்ள வேண்டும். நிகர லாபத்தின் கணிசமான பகுதியை ஏழைகளை, அவர்களது வறுமை நிலையிலிருந்து மேலே உயர்த்தப் பயன்படுத்த வேண்டும். கோடிக்கோடியாக லாபம் ஈட்டும் கணினி மென்பொருள் தயாரிக்கும் நிறுவனங்கள் உள்ள சென்னையில் சாக்கடை நாற்றத்தில் குடிசைகள் இருப்பது அசிங்கமாகத் தெரியவில்லையா? இதேபோன்று இடஒதுக்கீட்டில் படித்த ஒரு பொறியாளர், ஒரு மருத்துவர் வேலையில் அமர்ந்த பிறகு குறைந்தபட்சம் மூன்று மாணவர்களை அவர் உயர்ந்திருக்கிற நிலைக்குக் கொண்டு வருகிற பொறுப்பு இருக்கிறது.

பணக்காரர்களுக்கும் ஏழைகளுக்கும் உள்ள இடைவெளி இதனால் குறையும். ஒருவர் வளர்கிறபோதே தன்னோடு பத்துப்பேரையும் சேர்த்துக் கொண்டு வளர்வது மனிதத்தின் அடிப்படைத் தர்மம். ஒரு நாடு வளர்கிறதென்றால் எத்தனை ஏழைக்குடும்பங்கள் வசதி பெற்று இருக்கிறார்கள் என்று பார்ப்பதுதான் முறையான வளர்ச்சியாகும். ஏழைகளுக்கும் பணக்காரருக்கும் இருக்கும் பொருளாதார இடைவெளியை அழித்திடும் அரசே உண்மையான அரசு.

———————————————————————————————

அமெரிக்கா கொடுங்கோல் நாடு: காஸ்ட்ரோ

ஹவானா, ஜூலை 10: அமெரிக்காவை ஒரு எதேச்சதிகார, கொடுங்கோல் நாடு என வர்ணித்துள்ளார் கியூபா அதிபர் ஃபிடல் காஸ்ட்ரோ.

அவர் எழுதி ஞாயிற்றுக்கிழமை வெளியான கட்டுரை ஒன்றில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

1959-ல் இருந்து தனக்கு எதிராக நடந்த கொலை முயற்சிகளை இக் கட்டுரையில் அவர் விளக்கியுள்ளார். 1776-ல் அறிவிக்கப்பட்ட அமெரிக்காவின் சுதந்திரத்துக்கு தலை வணங்குவதாகக் கூறியிருக்கும் அவர், அதுவே அமெரிக்கா உலகின் எதேச்சதிகார நாடாக மாறுவதற்கு காரணமாக அமைந்துவிட்டது எனக் குறை கூறியிருக்கிறார்.

சிஐஏ ஆவணங்களை மேற்கோள்காட்டியுள்ள அவர், கியூபாவின் அரசு அதிகாரி ஒருவரைக் கொண்டு தனக்கு விஷம் கொடுத்துக் கொல்ல முயன்ற அமெரிக்காவின் செயலை வஞ்சகம், ஒழுக்கக் கேடான செயல் என்று கண்டித்துள்ளார்.

1959-ல் கியூபாவின் சர்வாதிகாரி பாடிஸ்டாவுக்கு எதிராகப் புரட்சி செய்தபோது, காடுகளிலும், மலைகளிலும் மறைந்திருந்தை அவர் நினைவு கூர்ந்துள்ளார். அதிர்ஷ்டமும், அனைத்து விஷயங்களிலும் கவனமாகச் செயல்படும் குணமுமே தன்னை கொலை முயற்சிகளில் இருந்தும், ராணுவத்திடம் பிடிபடுவதில் இருந்தும் தப்பிக்க உதவின என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

இவ்வாறு எண்ணிலடங்கா கொலை முயற்சிகளில் இருந்து தப்பித்ததாக அவர் எழுதியுள்ளார்.

எனினும் இந்த விவரங்களை, கடந்த மாதம் வெளியான சிஐஏ ஆவணங்களில் அடிப்படையில் கூறுகிறாரா அல்லது பல ஆண்டுகளுக்கு முன்பே கிடைத்த தகவலின் அடிப்படையில் தெரிவிக்கிறாரா என்பது தெளிவாகத் தெரியவில்லை.

Posted in Administration, America, Arun, Castro, civics, Communism, Cuba, Fidel Castro, Havana, Marxism, Politics, Poverty, pub ad, public admin, Society, Tamil, Upliftment, US, USA | Leave a Comment »

Motivation to Achieving Achievements

Posted by Snapjudge மேல் ஓகஸ்ட் 31, 2006

சாதனை-சாதனையாளர்கள்

வி.எஸ். ஸ்ரீதரன்

இப்போதெல்லாம் அடிக்கடி “சாதனை’ என்ற வார்த்தையைக் கேள்விப்படுகிறோம். தொலைக்காட்சிகளிலும், பத்திரிகைகளிலும் மேடைகளிலும் சாதனையாளர் சம்பந்தப்பட்ட விஷயங்கள் பேசப்படுகின்றன.

சாதனை செய்யும் உணர்வு கீழ்க்கண்ட காரணங்களால் வரலாம்:

1. தான் மற்றவர்களிடமிருந்து வேறுபட்டு நிற்க வேண்டும் என்ற உணர்வு.

2. தன்னிடம் உள்ள கலை, அறிவு, எழுத்தாற்றல், பேச்சாற்றல் மற்றும் பிற திறமைகளை வெளி உலகுக்குக் காட்ட வேண்டும் என்ற உந்துதல்.

3. சிலசமயங்களில் பிற சாதனையாளர்களால் உந்தப்பட்டு தானும் சாதிக்க வேண்டும் என்று எண்ணுதல்.

4. வாழ்வின் லட்சியம் என்று தேடும்போது எதையாவது சாதிப்பது என்ற இலக்கை வைத்துக் கொள்வது.

5. எந்திரத்தனமாய்ப் போய்க் கொண்டிருக்கும் வாழ்க்கையில் விரக்தி அடைந்து சாதனை என்று ஒன்றைச் செய்ய எண்ணும் மனப்போக்கு.

6. புகழின் மேல் உள்ள நாட்டம்.

7. சமூகத்துக்குத் தான் உபயோகமானவனாக இருக்க வேண்டும் என்ற ஆதங்கம்.

8. தோல்விகளையும் தடங்கல்களையும் வென்று, பிரச்சினைகளோடு போராடி வாழ்க்கையில் – தொழிலில் – பொருளாதார நிலையில் உயர்ந்து நிற்க வேண்டும் என்ற எண்ணம்.

ஆகவே, வெவ்வேறு காரணங்கள் சாதனைக்குப் பின்னணியாய் இருக்கக் கூடும். இயற்கை சிலருக்குச் சில கலைத்திறமைகளை அல்லது அனுகூலமான விஷயங்களைத் தந்திருக்கிறது. அதைக் கண்டறியும்போது, அவர்கள் அதில் தொடர்ந்து முயற்சித்து வெற்றி பெறுகிறார்கள். சிலருக்கு அதுவே தொழிலாகவும் ஆகிப்போய் விடுகிறது. அதாவது, பொருளாதார பலமாகவும் ஆகிறது.

சாதனை உணர்வு மனிதர்களை ஆக்கபூர்வமானவர்களாகவும் படைப்பாளிகளாகவும் மாற்ற உதவுகிறது என்ற அளவில் சிறந்தது. அதேசமயத்தில் அதில் முழுவதும் தன்னைக் கரைத்துக் கொள்வதிலும் சிக்கல்கள் உள்ளன. பேரும் புகழும் தாமாகவே தேடி வர வேண்டும். அவையே ஒருவரின் நோக்கமாக இருக்கக் கூடாது. அதேபோல் அகங்காரம் மிகுந்துவிடக் கூடாது.

சாதனையாளர்களைப் பற்றித் தெரிந்து கொள்பவர்கள் மேற்போக்காக அவர்களைப் பார்த்துத் தாங்களும் அப்படி ஆக வேண்டும் என்று நினைப்பது இயல்பே. ஆனால், அவர்கள் எத்தனை கசப்பான அனுபவங்கள் – உழைப்பு – தடைகள் – மேலும் பல சூழ்நிலைகளைக் கடந்து வந்திருப்பார்கள் என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டும் – நினைத்துப் பார்க்க வேண்டும்.

சிலர் அவர்கள் உண்டு – அவர்கள் வாழ்க்கை உண்டு என்றிருப்பார்கள். அதில் சாதனை என்ன இருக்கிறது என்றுகூட நினைப்பார்கள். ஆனால் தங்கள் கடமைகளை ஒழுங்காகச் செய்து கொண்டு வருபவர்களும் சாதனையாளர்கள்தான். புகழ் என்ற பெயரில் வெளிச்சத்துக்கு வரவில்லை என்ற ஒரே காரணத்துக்காக அவர்களைக் குறைத்து மதிப்பிட்டு விட முடியாது. சில பிரபலமான சாதனையாளர்கள் கூடப் பேசும்போது, நான் சிறந்த மனிதனாக இருக்க வேண்டும்…. சிறந்த மனுஷியாக இருக்க வேண்டும்… என்று கூறுகிறார்கள். அவர்கள் துறையில் அவர்கள் சாதனை படைத்திருந்தாலும், அதைவிடப் பெரியதாக நல்ல மனிதனாக – நல்ல மனுஷியாக இருக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள். காரணம், சாதனையாளனாக இருப்பது வேறு; சிறந்த மனிதனாக இருப்பது வேறு.

ஒருகாலத்தில் ஒரு துறையில் சாதனை புரிந்தவர்கள் இன்னொரு காலகட்டத்தில் அதையெல்லாம் விட்டுவிட்டு வேறு எதிலாவது கவனம் செலுத்துவார்கள். சில படைப்பாளிகள் தங்களுடைய மிகச்சிறந்த படைப்பை இனிமேல்தான் தர வேண்டும் என்பார்கள்.

சில குடும்பங்களில் பல சவாலான சூழ்நிலைகளில் பெண்களும் ஆண்களும் தங்கள் குடும்பத்தைச் சேர்ந்தவர்களின் முன்னேற்றத்துக்காகவும் நல்வாழ்வுக்காவும் தியாகங்களைச் செய்கிறார்கள் – உழைக்கிறார்கள் – சோதனைகளைத் தாங்கிக் கொள்கிறார்கள். சிலர் பிறருக்கு உதவும் சுபாவம் கொண்டவர்கள். சிலர் மற்றவர்களின் நன்மதிப்பைப் பெற்று மற்றவர்களுடன் நட்பையும் உறவையும் நன்றாக வைத்துக் கொள்கிறார்கள். வயதான காலத்தில் கூட சில அப்பாக்களும் தாத்தாக்களும் அம்மாக்களும் பாட்டிகளும் குடும்பப் பொறுப்புகளைக் கவனிக்கிறார்கள்; பிரச்சினைகளைத் தலையில் சுமக்கிறார்கள். அவர்கள் எல்லோருடைய பெருமையும் போற்றத்தக்கதுதான்.

ஆகவே, சாதனை என்பது தனிமனிதன் வாழ்விலும் குடும்ப வாழ்விலும்கூட நிகழக்கூடியதுதான். எனவே, வெளிச்சத்துக்கு வராதவர்கள்கூட அவரவர் வட்டத்தில் சாதனையாளர்கள்தான்.

இந்தச் சாதனைகளை எல்லாம் ஒருபுறம் ஒதுக்கி வைத்துவிட்டு வேறு ஒரு சாதனையைப் பற்றி நினைக்க வேண்டும். மனிதன் தன் மகிழ்ச்சியை நிலைநிறுத்திக் கொள்ளவும், கூடியவரை உலக விஷயங்களால் பாதிப்பு அடையாமலும் இருக்கப் பழகிக் கொண்டால் அது வேறுவிதமான சாதனை. உலக விஷயங்கள் சம்பந்தப்பட்ட சாதனைகளில் நாட்டம் குறையக் குறைய – மெய்யறிவைப் பற்றிய நாட்டம் அதிகரிக்கும். அதுதான் மிகப்பெரிய சாதனையாய் இருக்கும். மனத்தை அடக்கி அமைதியை அனுபவிப்பது மாபெரும் சாதனை என்று ஞானிகள் கூறுகிறார்கள். “நான் இனிமேல் எதையும் அடையத் தேவை இல்லை’ என்னும் அளவுக்கு மனம் அமைதி அடைவதுதான் நிரந்தரமான சாதனை.

Posted in Achievements, Dinamani, Heroism, Motivation, Philosophy, Psychology, Saathanai, Sridharan, Tamil, Think, Thoughts | Leave a Comment »

Chennaionline’s Music Service – Listen Tamil Songs

Posted by Snapjudge மேல் ஓகஸ்ட் 31, 2006

தமிழ்ப் பாடல்களுக்கு தனி இணையதளம் முதல்வர் தொடங்குகிறார்

சென்னை, ஆக. 31: தமிழ்ப் பாடல்களுக்கென்று பிரத்யேகமான இணையதளம் வியாழக்கிழமை தொடங்கப்படுகிறது. சென்னை ஆன்லைன் இணையதள இதழ் இந்த இணையதளத்தைத் தொடங்குகிறது.www.tamil-songs.co.in

என்ற இந்த இணையதளத்தை தமிழக முதல்வர் கருணாநிதி முறைப்படி தொடங்கி வைக்கிறார். மத்திய இணை அமைச்சர் ஜி.கே. வாசன், முன்னாள் மத்திய அமைச்சர் சு.திருநாவுக்கரசர், திரைப்பிரமுகர்கள் எம்.சரவணன், ராம்குமார், கவிஞர் வைரமுத்து ஆகியோர் பங்கேற்கிறார்கள்.

Posted in Chennaionline, CM, E-Commerce, Kalainjar, Karunanidhi, MP3, Online, Tamil, Tamil Audio, Tamil Cinema, Tamil Music, Website | 1 Comment »