Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

Archive for ஓகஸ்ட் 4th, 2006

Iraama Gopalan – Kumudam Biosketch Series

Posted by Snapjudge மேல் ஓகஸ்ட் 4, 2006

இராம.கோபாலன் பள்ளிச் சிறுவனாய் இருந்த காலம். அவரது வீட்டில் ஓர் ஓவியம் உண்டு. பகத்சிங் தன் தலையை வெட்டி எடுத்து பாரத மாதாவுக்குக் காணிக்கை செலுத்துவது போன்ற உயிரோட்டத்துடன் அமைந்த ஓவியம் அது.

ஒருநாள், இராம.கோபாலன் தன் தந்தையிடம் அந்த ஓவியத்துக்கு அர்த்தம் கேட்கிறார். தந்தை சொன்னார்:‘‘நாட்டுக்காக வாழணும். இந்த நாட்டுக்காக எந்தத் தியாகமும் பண்ணலாம். தேவைப்பட்டால் உயிரையும் தரலாம். இந்தப் படத்துக்கு அதுதான்பா அர்த்தம்…’’

தந்தை கூறிய விளக்கம் சிறுவன் இராம.கோபாலனின் அடி மனதில் ஆழப் பதிந்துவிட்டது. அது புதைந்து விதைவிட்டு வேர் விட்டு, கிளைவிட்டு விருட்சமானது. தந்தை ஒரு தீவிர தேசியவாதி. அவர் கூறும் சுதந்திரப் போராட்ட வீரர்களின் கதைகள் சிலிர்க்க வைக்கும். பாரதி, திலகர், வாஞ்சிநாதன், வ.உ.சி. பற்றி தந்தை கூறும்போது, தானும் அது போல வாழவேண்டும் என்ற எண்ணம் இராம. கோபாலன் மனதில் எழுந்தது.

தேசப் பற்று!

இராம கோபாலனின் தந்தை: மு.இராமஸ்வாமி; தாய்:செல்லம்மாள். பிறந்த நாள்:19_9_1927. பிறந்தஊர்: தஞ்சை மாவட்டம் சீர்காழி. சம்பந்தருக்கு ஞானப்பால் தந்த திருத்தலம்.

தந்தை சிறு விவசாயி. காவிரி நீர் பிரச்னை இல்லாத அந்தக் காலத்தில் முப்போக விளைச்சல்! பள்ளிச் சிறுவனாய் இராம.கோபாலன் துள்ளித் திரிந்த காலம்; சுதந்திர நெருப்பு நாடெங்கும் பற்றியெரிந்தது. அந்த நெருப்பு இவரையும் விட்டு வைக்கவில்லை. சுதந்திரப் போராட்ட மேடைகளில் பாரதி பாடல்களை உணர்ச்சி ததும்ப கம்பீரமாகப் பாடுவார்.

சீர்காழியிலுள்ள சட்ட நாதஸ்வாமி திருக்கோயிலுக்குள் அடிக்கடி சுதந்திரப் போராட்டக் கூட்டங்கள் நடக்கும். பட்டுக்கோட்டையிலிருந்து நாடிமுத்துப்பிள்ளை என்ற சுதந்திரப் போராட்ட வீரர் பல முறை அங்கு வந்து பேசியிருக்கிறார். அது போன்ற கூட்டங்களில் கலந்துகொண்டு சுதந்திரப் போராட்ட வீரர்களின் பேச்சுகளைக் கேட்க… கேட்க… சிறுவன் இராம.கோபாலனுக்குத் தேசப்பற்றும் தேசிய உணர்வும் படிப்படியாக கொழுந்துவிட்டு எரியத் தொடங்கின.

ஒருபுறம் தேச உணர்வு பொங்கியெழுந்தாலும் _ இராம.கோபாலன் படிப்பில் சோடை போகவில்லை. நன்றாகப் படித்தார். ஆனாலும், சிறுவர்களுக்கே உரிய வால் தனமும் உண்டு.

வேலை!

சீர்காழியில் எஸ்.எஸ்.எல்.சி. முடித்துவிட்டு, கல்லூரிப் படிப்புக்காக சென்னை வந்தார். வீட்டில் இன்ஜினீயரிங் எடுத்துப் படிக்கச் சொன்னார்கள். ஆனால், அதற்கு ஏகப்பட்ட பணம் தேவைப்பட்டது. இதனால் டிப்ளமோ முடித்து ஏ.எம்.ஐ.ஈ.ஈ. சேர்ந்து படித்துக் கொண்டிருந்த போது 1945_ல் ஆர்.எஸ்.எஸ்_ல் சேர்ந்தார்.

படித்து முடித்த பிறகு, மின்சாரத் துறையில் வேலை கிடைத்தது. குடியாத்தத்தில் பணி. இவர் அங்கு வேலை பார்த்ததை விட, ஆர்.எஸ்.எஸ்.ஸ§க்காக பார்த்த வேலைதான் அதிகம்.

கல்தா!

இந்த நிலையில்தான், சுதந்திரம் கிடைத்து தேசப்பிரிவினையின் போது, சிந்து பகுதியிலிருந்து இந்துமக்கள் புலம் பெயர்ந்து சென்னை வந்தார்கள். அவர்கள் ஆவடியில் தங்க வைக்கப்பட்டிருந்தனர். ஆர்.எஸ்.எஸ். சார்பாக இராம.கோபாலன் தொண்டர்களுடன் ஆவடிக்குச் சென்று ஞாயிற்றுக்கிழமைகளில் அந்த மக்களுக்கு உதவி செய்வார்.

அப்போது, அவர்களின் கண்ணீர்க் கதைகளைக் கேட்ட இராம.கோபாலன் துடித்துப் போனார். மனதைச் சோகம் அப்பிக் கொண்டது. ‘இந்த நாட்டு மக்கள் சொந்த நாட்டிலேயே அகதிகளாக வாழ வேண்டியுள்ளதே’ என்று கொதித்தார். இந்துக்கள் பலஹீனமாக இருப்பதுதான் இதற்கெல்லாம் காரணம் என்ற தீர்மானம் அவர் மனசுக்குள். இந்துக்களைப் பாதுகாக்கவும் பலப்படுத்தவும் முழுநேரத் தொண்டராக முடிவெடுத்தார் இராம.கோபாலன்.

நாடு முக்கியம். நாடு என்பது வெறும் நிலமல்ல; அதில் வாழும் மக்கள்! அந்த மக்கள் பாதுகாப்பாக வாழ வேண்டும். அதை ஆர்.எஸ்.எஸ்._ஸால் மட்டுமே நிகழ்த்திக் காட்ட முடியுமென்று முடிவெடுத்தவர், தனது வேலையை உதறினார். முழுநேர ஆர்.எஸ்.எஸ். தொண்டரானார்.

தடை!

1948_ல் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்துக்குத் தடைவிதித்தது அரசு. திருநெல்வேலியில் முழுநேர ஊழியராய் இருந்த இராம.கோபாலன் கைது செய்யப்பட்டு, வேலூர் சிறையில் அடைக்கப்பட்டார்.

சிறைவாழ்க்கை இராம.

கோபாலனின் உணர்ச்சிகளில் திடத்தையும் அறிவில் தெளிவையும் அளித்தது. யோகா, பிராணாயாமம், தியானம், உடற்பயிற்சி என்று இராம.கோபாலனின் சிறைப்பொழுதுகள் நகர்ந்தன. மீதி நேரங்களில் புத்தகப் படிப்பு.

சிறையில் இவர் படித்த வீரசாவர்க்கர் எழுதிய ‘எரிமலை’ என்ற நூல் இவரது மனசுக்குள் தீக்கங்குகளை வீசியது. சுதந்திரப் போராட்ட வீரர்களைப் பற்றி எழுதப்பட்ட அந்த நூல்_இவரது இரவுகளில் நெருப்பாய் எரிந்தது.

சுமார் ஆறு மாதங்கள் நீடித்தது இந்தச் சிறை வாழ்வு. பிறகு, ஹேபியஸ் கார்பஸ் கொண்டு வரப்பட்டு பலர் விடுதலையாகினர். ஆர்.எஸ்.எஸ்.ஸ§க்குத் தொடர்ந்து தடை நீடித்தாலும் ரகசியமாக இயங்கினார் இராம. கோபாலன்.

மீண்டும் வேலை!

சென்னையில் மின்சாரத் துறையில் மீண்டும் வேலையில் சேர்ந்தார். ஆறுமாதம் வேலையிலிருந்தார். இயக்கப் பணிகளுக்கு, சம்பளப் பணி இடையூறாக இருந்ததால் மீண்டும் வேலையை உதறினார். தொடர்ந்து தீவிர ஆர்.எஸ்.எஸ். பணி.

அதன் பிறகு, குடும்பம், சொந்தங்களை மறந்தார். வீட்டுக்குக் கூடச் செல்வதில்லை. எண்ணம், செயல் அனைத்தும் இயக்கமாக மாறிப் போனது. அதன் பிறகு, போராட்டங்கள்… கைது… சிறைவாழ்க்கை… என்று இந்தப் பிரம்மச்சாரியின் வாழ்வு கரடு முரடான பாதையில், பயணப்பட்டது. நெருக்கடி நிலையை எதிர்த்து ஆர்.எஸ்.எஸ். போராடிய போது, இவரைக் கைது செய்ய போலீஸ் வலை வீசி தேடியது. இவரோ, மாறுவேடம் தரித்து தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்து, ஆர்.எஸ்.எஸ்.ஸின் தகவல் தொடர்பாளராக தமிழகம் முழுக்கச் சுற்றி வந்தார்.

திருமணம்

இன்று 79 வயதாகும் இவர் திருமணம் குறித்து ஒரு முறை கூட யோசித்ததேயில்லை. இது குறித்து இந்து முன்னணித் தொண்டர் ஒருவர்கூறும் போது, ‘‘திருமணம் செய்து கொண்டால், இயக்கப் பணிகளில் தீவிரமாக ஈடுபட முடியாது. குடும்ப வாழ்க்கை இயக்கப் பணிகளுக்கு இடையூறாக இருக்கும் என்பதால் திருமணத்தையே மறந்துவிட்டார். இந்திய நாட்டைக் குடும்பமாகவும், மக்களைத் தன் குடும்பத்தவர்களாகவும் நேசிக்க ஆரம்பித்துவிட்டார்’’ என்கிறார்.

இராம கோபாலன் கவிஞரும் கூட. இவர் எழுதிய நூற்றுக்கும் மேற்பட்ட பாடல்கள் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் மேடைகளில் தேசபக்திப் பாடல்களாகப் பாடப்படுகின்றன.

இந்து முன்னணி!

இந்திய அளவில் ஆர்.எஸ்.எஸ். தீவிரமாகப் பணியாற்றினாலும், தமிழக அளவில் சில விஷயங்கள் தனிக் கவனத்துடன் கவனிக்கப்பட வேண்டும் என்று உணர்ந்தார் இராம.கோபாலன். குறிப்பாக தென்மாவட்டங்களில் பரவலாக நடந்த மதமாற்றங்கள்!

இதற்காக, ஆர்.எஸ்.எஸ்.ஸின் தென்பாரத அமைப்பாளர் யாதவராவ் ஜோஷியின் வழிகாட்டுதலால் இராம.கோபாலன் உருவாக்கிய இயக்கம் தான் இந்து முன்னணி. ஆண்டு 1980. இதன் முதல் தலைவர் ப. தாணுலிங்க நாடார்.

இந்து முன்னணி வளர்ச்சிக்காக இராம. கோபாலன் தமிழகம் முழுவதும் சுற்றுப் பயணம் செய்தார். இவரது மேடைப் பேச்சுகள் சில தரப்பினரை எரிச்சலூட்டவே பல இடங்களில் கொலை மிரட்டல்கள்! 1982_ல் மதுரை ரயில் நிலையத்தில் இவர் மீது கொடூரத் தாக்குதல் நடந்தது. இதில் இவரது கழுத்திலும் தலையிலும் பலத்த வெட்டு. தழும்பை மறைக்க அன்றிலிருந்து காவித் தொப்பியணிய ஆரம்பித்தார்.

தாணுலிங்க நாடாரின் மறைவுக்குப் பிறகு, இந்து முன்னணியின் தலைவரானார் மதுரை வழக்கறிஞர் பெ. ராஜகோபால். 1994_ம் ஆண்டு அவரது வீட்டு வாசலிலேயே வைத்துப் படுகொலை செய்யப்பட்டார்.

இப்படியாக _ இந்து முன்னணியைச் சேர்ந்த 60_க்கும் மேற்பட்டோர் இதுவரை பல்வேறு இடங்களிலும் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். சென்னை சிந்தாதிரிப்பேட்டை இந்து முன்னணி தலைமை அலுவலகம் குண்டு வைத்துத் தகர்க்கப்பட்டது. என்றாலும்_இராம கோபாலனின் பணி துளியும் அச்சமின்றி இன்றும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது.

இந்து முன்னணியினர் இராம.கோபாலனை ‘வீரத் துறவி’ என்றுதான் பாசத்தோடு அழைப்பார்கள். அதற்கு அவர் தகுதியானவர்தான்!

_பெ. கருணாகரன்

Posted in Biosketch, Iraama Gopalan, Kumudam, Raama Gopalan, Tamil | Leave a Comment »

APJ Abdul Kalam – Kumudam Biography Series

Posted by Snapjudge மேல் ஓகஸ்ட் 4, 2006

விமானப்படை விமானியாக வேண்டும் என்பது அவரது கனவு; மகன் கலெக்டராக வேண்டும் என்பது தந்தையின் கனவு; ஆனால், இறைவனின் எண்ணம் வேறாக இருந்தது. ‘இவன் நல்லவன்; அறிவுத்திறன் நிறைந்த வல்லவன்!’ என்றுணர்ந்த வல்லான் இறைவன், அந்த மனிதரை ராக்கெட் பொறிஞராக அருள்புரிந்தான். இதோ, அந்த மாண்புமிகு மனிதர் _ இந்தியத் தலைக்குடிமகனாகி, இந்திய இளைய தலைமுறை இதயங்களில் க்ரியா ஊக்கியாக நிறைந்து கிடக்கிறார்.

‘இளைய தலைமுறையே… கனவு காணுங்கள்’ என்று மேடைக்கு மேடை முழங்கும் அப்துல்கலாம், சிறுவயதில் மிகப் பெரும் கனவு ரசிகன். பறவைகளைப் பார்க்கும்போது, தன்னால் அப்படிப் பறக்க முடியவில்லையே என்ற ஏக்கத்துடன் சிறகுகளற்ற தோள்பட்டை வெறுமையைத் தொட்டுப்பார்த்துக் கொள்வான். ‘சிறகுகள் இல்லாவிட்டால் என்ன… நானும் ஒருநாள் வானத்து உச்சியை எட்டுவேன்’ என்ற வைராக்கியம் அந்தப் பிஞ்சு நெஞ்சுக்குள் பீறிடும்.

அந்த வைராக்கியம் பலித்தது. கனவுச் சிறகுகள் மூலம் வானவீதியில் உலாவந்த அந்தச் சிறுவன், பெரியவனானபோது, ராக்கெட்டுகள் மூலம் வானத்தை ரகளை செய்தான்.

மாதா… பிதா!

அப்துல்கலாமின் தந்தை : ஜைனுல்லாபுதீன். தாய்: ஆஷியம்மா. இருவருமே நல்ல உயரம்; அழகு. நெறிமுறைகளைப் பின்பற்றும் ஜைனுல்லாபுதீனுக்கு தேவையற்ற வசதிகளும் ஆடம்பரமும் பிடிக்காது. ராமேஸ்வரம் மசூதித் தெருவில் அமைந்த அவர்களது வீடு, சுண்ணாம்பு, செங்கற்களால் கட்டப்பட்டதல்ல; அன்பு, பாசம் என்ற ஆழ்ந்த உணர்ச்சிகளால் கட்டப்பட்டிருந்தது.

ராமேஸ்வரத்தில் ஆரம்பக்கல்வியை முடித்த கலாம், மாவட்டத் தலைநகரான ராமநாதபுரத்துக்குச் சென்று உயர்நிலைக் கல்வி கற்றார்.

ராமநாதபுரம் _ ஸ்வார்ட்ஜ் உயர்நிலைப்பள்ளியில் படிப்பு. புதிய சூழல் கலாமுக்குச் சரிப்படவில்லை.

வீட்டு ஞாபகம் துன்புறுத்தியபோதும், அவற்றைத் தூக்கி எறிந்தார் கலாம். தான் கலெக்டராக வேண்டும் என்ற அப்பாவின் கனவை நனவாக்க வேண்டும் என்பதே அவர் மனதில் வேள்வித் தீயாய் எரிந்து கொண்டிருந்தது.

அங்கு படிப்பு முடிந்தபிறகு, 1950ல் திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரியில் இன்டர்மீடியட் படிப்பு. இங்கு நான்காமாண்டு படிப்பின்போதுதான் கலாமுக்கு இலக்கியம் மீது ஆர்வம் பிறந்தது. டால்ஸ்டாய், ஸ்காட், ஹார்டியின் படைப்புகளைப் படித்து உள்ளம் கவர்ந்திழுக்கப்பட்டார். இந்தக் காலகட்டத்தில்தான் கலாமுக்கு இயற்பியல் மீது ஈடுபாடு வளர்ந்தது.

கடின உழைப்பு! இன்டர்மீடியட் முடித்து, எம்.ஐ.டி. (விணீபீக்ஷீணீs மிஸீstவீtutமீ ஷீயீ ஜிமீநீலீஸீஷீறீஷீரீஹ்)யில் விண்ணப்பித்தார்; தேர்வானார். ஆனால், அதைப் படிக்க அந்தக் காலத்தில் ஆயிரம் ரூபாயாவது தேவை. அவ்வளவு பணத்தைக் கலாமின் அப்பாவால் தயார் செய்யமுடியாது. கலாமின் சகோதரி ஜோஹரா கைகொடுத்தார். தனது தங்கநகைகளை அடமானம் வைத்துப் பணம் கொடுத்தார். எம்.ஐ.டி.யில் விமானப் பொறியியல் படிப்பின்போது, தாழ்வாகப் பறந்து தாக்கும் ஒரு போர் விமானத்தை வடிவமைக்கும் திட்டப் பணியை கலாமுடன் இன்னும் நான்கு சகமாணவர்கள் கூட்டாக முடிக்கவேண்டும் என்று பொறுப்பு கொடுத்தார்கள். ஏரோ டைனமிக் டிஸைன் வரையும் பொறுப்பு கலாமுக்கு. டிஸைன் தயாராவது தாமதமானது. அதற்குப் பல்வேறு காரணங்கள். ஒருநாள் எம்.ஐ.டி. இயக்குநர் ஸ்ரீசீனிவாசன் ‘மூன்றே நாட்களுக்குள் வரைபடம் தயாராக வேண்டும். இல்லாவிட்டால் உதவித் தொகை நிறுத்தப்படும்’ என்று எச்சரித்து விட்டுச் சென்றார். கலாம் திகைத்தார். அவர் படிப்பின் உயிரோட்டமே அந்த உதவித் தொகைதானே! அன்று இரவு…. வரைபலகை முன் உட்கார்ந்தவர்தான். ஊண், உறக்கம் மறந்த கடின உழைப்பு அது. வரை படத்தைத் தயாரித்து முடித்துதான் வெளியே வந்தார் கலாம். ‘‘சாத்தியமில்லாத கெடுவுக்குள் இவ்வளவு கச்சிதமாக முடிப்பீர்கள் என்று நான் எதிர்பார்க்கவே இல்லை!’’ என்று புகழ்ந்தார் ஸ்ரீனிவாசன்.

எம்.ஐ.டி.யில் வெற்றிகரமாகப் படிப்பை முடித்து விமானப் பொறியியல் பட்டதாரியாக வெளியே வந்தார் கலாம்.

தனது கனவான விமானப் படையில் வேலைக்கு விண்ணப்பித்தார். அங்கு வேலை கிடைக்காத நிலையில் பாதுகாப்பு அமைச்சகத்தின் தொழில் நுட்ப வளர்ச்சி மற்றும் உற்பத்தி (விமானம்) இயக்குநரகத்தில் முதுநிலை விஞ்ஞானி உதவியாளராக வேலையில் சேர்ந்தார். அதன்பிறகு, கலாமின் கேரியர் டேக்_ஆஃப் ஆனது. பிறகு, மிஷிஸிளி, ஞிஸிஞிலி, ஞிஸிஞிளி என்று பல்வேறு அமைப்புகளில் பணிகள்; பல்வேறு பொறுப்புகள்; அனுபவங்கள்! கலாம் அனைத்திலும் தனது முழு ஆர்வத்தைக் காட்டினார்.

நன்றியுள்ள குழந்தை!

கலாமின் சாதனைகளில் முக்கியமானது, ‘அசெம்பிளிங் டெக்னாலஜி’யாக இருந்த இந்திய ராக்கெட் தொழில் நுட்பத்தை’ ‘புரொடக்ஷன் டெக்னாலஜி’யாக மாற்றியமைத்ததுதான்.

வெளிநாடுகளிடம் உதிரிபாகங்களை வாங்கி அசெம்பிள் செய்வது சாதனையல்ல; நாம் வடிவமைக்கும் ஒவ்வொன்றிலும் நூறு சதம் நம் தயாரிப்பிலான பொருட்களே இடம்பெறவேண்டும். சின்ன சின்ன விஷயங்களில் கூட அடுத்தவர்களைச் சார்ந்திருக்காமல், தொழில்நுட்பத் தன்னிறைவு காணவேண்டும் என்பதே கலாமின் வேட்கையாக இருந்தது.

வல்லரசு தொழில்நுட்பத் தாங்குக் கட்டைகளை வீசியெறிந்துவிட்டு, நம் சொந்தக் காலில் நிற்கவேண்டும் என்பதே இந்த ராமேஸ்வர மனிதனின் ஜெபமாய் இருந்திருக்கிறது. இந்த வேட்கை ஒரு சாதாரண தொழில்நுட்ப அறிஞருக்கு வந்துவிடாது. உண்மையான தேசப்பற்றும் தேசத் தொண்டும் நிறைந்த உள்ளத்தில்தான் அத்தகைய எண்ணம் உருவாக முடியும். கலாம் இந்தியாவின் காதலன்; இந்தியத் தாயிடம் நன்றியுள்ள குழந்தை!

கூட்டு முயற்சி!

கலாம் பணியாற்றிய நிறுவனங்களிªல்லாம் நல்ல திறமையான விஞ்ஞானிகள் இருந்தனர். ஆனால், அவர்கள் நம்மால் முடியும் என்பதை மறந்து, தன்னால் மட்டுமே எல்லாம் முடியும் என்ற ‘தன்னம்பிக்கை’யோடு இறுமாந்திருந்தனர். கூட்டு முயற்சியின் மேன்மை அவர்களுக்குப் புரிந்திருக்கவில்லை. கூட்டு முயற்சியின் மேன்மையை அவர்களுக்குப் புரியவைத்தார் கலாம்.

இயல்பான, நட்புரீதியான கலாமின் அணுகுமுறை கடின இதயங்களையும் வெற்றி கண்டது.

திறமையான சகாக்கள்; கலாமைப் புரிந்துகொண்டு சுதந்திரமளித்த டாக்டர் விக்ரம் சாராபாய், டாக்டர் பிரம்மபிரகாஷ் போன்ற உயரதிகாரிகள்; பாதுகாப்புத்துறை அமைச்சராய் இருந்த ஆர்.வெங்கட்ராமன் போன்றோரின் ஒத்துழைப்பு; பிரதமர்களாய் இருந்த இந்திராகாந்தி, ராஜீவ்காந்தி போன்றோரின் ஊக்குவிப்பு… விளைவு… எஸ்.எல்.வி, பிருத்வி, ஆகாஷ், அக்னி என்று கலாம் தொட்டதெல்லாம் துலங்கியது.

ராஜபாட்டை!

ராக்கெட் தொழில்நுட்பத்தில், கலாமின் செயல்திட்டங்களும் அணுகுமுறைகளும் மற்ற இந்தியத் தொழில்நுட்பங்களிலும் பரவலாக்கப்படவேண்டும். கம்ப்யூட்டரிலிருந்து கட்டுமானத் தொழில்நுட்பம் வரை _ அதில் இடம்பெறும் ஒவ்வொரு உதிரிப் பாகத்திலும் ‘விணீபீமீ வீஸீ மிஸீபீவீணீ’ என்று பொறிக்கப்பட வேண்டுமானால் ஒவ்வொரு இந்தியனும் கலாமாக மாறவேண்டும்.

கலாமின் வாழ்வை ஆராயும் போது, அதிலே ததும்பி நிற்பவையெல்லாம் ஆன்மீகத் தத்துவங்களும், துடிப்பான எண்ணங்களும், வண்ண மயமான கனவுகளும்தான்! அவை வல்லரசு என்ற நிலையை இந்தியா அடைவதற்கான ராஜபாட்டை. அதில் பயணிப்போம்; சாதிப்போம்.

இந்தியா _ 2020

‘2020_ம் ஆண்டுக்குள் இந்தியாவை வளம் படைத்த வல்லரசாக மாற்ற வேண்டும்’. என்று கூறும் கலாமின் 2020 லட்சியங்களில் சில: ‘உலகின் ஐந்து பொருளாதார வல்லரசு நாடுகளில் ஒன்றாக இந்தியா திகழ வேண்டும். தேசப் பாதுகாப்பில் தன்னிறைவு. வேளாண் உற்பத்தியில் அதிவேக முன்னேற்றம் கண்டு வேளாண் பொருட்கள் ஏற்றுமதி செய்யும் நாடாக உயரவேண்டும். நம் கனிம வளங்களை மூலதனமாக்கி தொழில்துறை வல்லரசாக வேண்டும். கடல் வளங்களைப் பொருளாதார சக்தியாக மாற்ற வேண்டும். மென்பொருள் தயாரிப்புத்துறையில் முதன்மையான பங்களிப்பு. விண்வெளி, அணுசக்தி, தேசப்பாதுகாப்பு போன்ற துறைகளில் நிபுணத்துவம். அடிப்படைத் தேவைகளில் அதிவிரைவான வளர்ச்சி,’ _ கலாமின் கனவுகள் நனவாகிக் கொண்டிருக்கின்றன.

 _ பெ.கருணாகரன்

Posted in Abdul Kalaam, Abdul Kalam, APJ Abdul Kalam, Biography, Kumudam, Tamil | 21 Comments »

Ilaiyaraja Lifesketch – Maanbiku Manidhargal

Posted by Snapjudge மேல் ஓகஸ்ட் 4, 2006

சீர்காழி _ ஞானசம்பந்தருக்கு ஞானப்பால் ஊட்டியதென்றால், பண்ணைபுரம் இளையராஜாவுக்கு இசைப்பால் ஊட்டியது. பண்ணைபுரம் _ மேற்குத் தொடர்ச்சி மலையின் மடியில் தவழும் கிராமம்.

தந்தை: எம்.ஆர்.ராமசாமி, தாய்: சின்னத்தாயி. பாவலர் வரதராசன், ஆர்.டி.பாஸ்கர், கங்கை அமரன் என்று சகோதரர்கள்.

ராஜாவுக்கு அந்தச் சிறுவயதிலேயே இசைமீது இனம்புரியா ஆர்வம். ஓடைக்கரைகளும், சாலை மதில்களும், பள்ளிமரத்தடிகளும் சிறுவயதிலேயே ராஜா அகார சாதகம் செய்த சங்கீதக் கலா சாலைகள். அங்கு, சத்தங்களைச் சுரம்பிரித்து, இயற்கையிடம் இசைப்பாடம் பயின்றான் அந்தச் சிறுவன்.

ஒவ்வொரு துளைகளுக்கும் நடுவே எவ்வளவு இடைவெளி இருக்க வேண்டும் என்ற இலக்கண மெல்லாம் தெரியாமலேயே, மூங்கிலில் தோராயமாகத் துளைகள் போட்டு அவன் தயாரித்த புல்லாங்குழல் _ சரியான கனகச்சிதமான இலக்கணத்தோடு அமைந்ததுதான் ஆச்சரியம்!

பாவலர்!

அண்ணன் பாவலர் வரதராசன் கம்யூனிஸ்ட் இயக்கத்தின் புகழ்பெற்ற பிரசாரப் பாடகர். பாவலரின் பாடல்கள் ராஜாவின் சங்கீதப் பாதையை முறைப்படுத்தியது.

ராஜா ஒன்பதாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தபோது, கம்யூனிஸ்ட் இயக்க நிகழ்ச்சி ஒன்று. அந்த நேரத்தில் பாவலருக்கு உடல் நிலை சரியில்லை. ராஜாவைத் துணைக்கு அழைத்துச் செல்ல வேண்டிய நிலை.

திருச்சி _ திருவெறும்பூரில் நடந்த அந்த நிகழ்ச்சிக்கு நல்ல கூட்டம். பாவலருக்கு ஓய்வுதர _ இடை இடையே ராஜாவும் தன் பிஞ்சுக் குரலெடுத்துப் பாடினார். அவரது பாட்டுகளுக்குக் கைதட்டல்கள் மூலம் கௌரவம் செய்தனர் மக்கள். அதன்பிறகு, கச்சேரிக்குச் செல்லும்போதெல்லாம் அவ்வப்போது, இந்த ‘இலக்குவணனை’யும் உடனழைத்துச் செல்ல ஆரம்பித்தார் பாவலர்.

விளைவு… பாட்டு, இசை, கச்சேரி என்று ஓடிய வாழ்க்கையில் படிப்பு, பள்ளி ஆகியவை மறந்து போயின.

அந்த வயதில் ராஜாவின் குரல் பெண் சாயலுடையதாக இருக்கும். பாவலருடன் ஜோடியாகப் பாட ஏற்ற குரல்! ராஜா தொடர்ந்து கச்சேரிகளுக்குப் போய்க் கொண்டிருந்த நிலையில், மகரக்கட்டு ஏற்பட்டு, குரல் உடையத் தொடங்கியது. அதனால், பாவலர், ராஜாவை வீட்டில் விட்டு விட்டு, தம்பி கங்கை அமரனை உடனழைத்துச் சென்றார்.

பிரதர்ஸ்!

அண்ணன் ஊருக்குச் செல்லும் நேரங்களிலெல்லாம் அவரது ஆர்மோனியப் பெட்டியைத் தனியாக வாசித்துப் பழக ஆரம்பித்தார். அண்ணனுக்கு, தன் ஆர்மோனியப் பெட்டியை யாரும் தொடக்கூடாது. தொட்டால் கோபம் வரும். பிரம்பெடுத்துப் புறங்கையில் டிரம்ஸ் வாசித்துவிடுவார்.

பாவலருக்கு விஷயம் தெரியவந்தபோது, ராஜாவின் திறமை கண்டு வியந்தார்; மகிழ்ந்தார்! அதன்பிறகு, பாவலர் கச்சேரிகளில் ஆர்மோனியம் வாசிக்கும் பொறுப்பு ராஜாவுக்கு. ஆர்.டி. பாஸ்கர் தபேலா. பாவலரும், கங்கையமரனும் பாடுவார்கள். பாவலர் இசைக்குழு, பாவலர் பிரதர்ஸ் இசைக்குழுவானது.

பாரதிராஜா!

1963 _ வாக்கில் நடிப்பில் ஆர்வம் கொண்ட மலேரியா இன்ஸ்பெக்டர் ஒருவர் பண்ணைபுரத்துக்கு வந்தார். பெயர், அல்லி நகரம் சின்னசாமி. பாரதிராஜா. தேனி, மதுரை முதலிய பகுதிகளில் பாரதிராஜா நாடகம் போட்டபோது _ இசைப் பொறுப்பு, ராஜாவுக்கு.

1965_ல் சினிமாவில் சாதிக்கும் துடிப்புகளுடன் பாரதிராஜா சென்னை கிளம்பினார். 1967_ல் ராஜா, பாஸ்கர், கங்கை அமரன் ஆகியோர் சென்னைக்குப் புறப்பட்டனர்.

வடபழனியில் ஒரு சிறு அறையில் வாழ்க்கை; வயிற்றில் பசி; மனதிலோ தாகம்; அது, இசை தாகம்! வாய்ப்பு தேடியலைந்தார் ராஜா. நடுநடுவே நாடகங்களுக்கு இசையமைத்தார். பசி, வறுமையுடன் எட்டாண்டுகள் ஓடின. வறுமைக்கு நடுவிலும் ராஜா இசை பயிலத் தவறவில்லை. லஸ் கார்னரில் தங்கியிருந்த தன்ராஜ் மாஸ்டரிடம் மேற்கத்திய இசை கற்றுக் கொண்டார்.

அன்னக்கிளி!

வாய்ப்பு தேடி அலைந்து காய்ப்பு ஏறிய பாதங்கள்; ஆனாலும், மனம் முழுக்க நம்பிக்கை நந்தவனம்.

அது, 1975. ஒரு நாள் தயாரிப்பாளர் பஞ்சு அருணாசலத்தை ராஜா பாம்குரோவில் சந்தித்தார். வாய்ப்பு கேட்டார். எதிரில் ஒல்லியாக வெட வெடவென்றிருந்த அந்த இளைஞரை நம்பிக்கையில்லாமல் பார்த்த பஞ்சு, ‘‘நாளை ஆர்மோனியப் பெட்டியோடு வந்து ட்யூன் போட்டுக் காட்டுங்க’’ என்றார்.

‘‘நாளை எதுக்கு? இப்பவே பாடிக் காட்டறேன்’’ என்ற ராஜா, ‘அன்னக்கிளி’ படத்தில் இடம்பெற்ற பாடல்களின் மெட்டுகளை உருக்கமாகப் பாடினார். அவை, பஞ்சு அருணாசலத்துக்குப் பிடித்துப்போக, அன்னக்கிளி வாய்ப்பு ராஜாவுக்குக் கிடைத்தது. ராஜையா என்ற பெயரை இளையராஜா என்று மாற்றியவரும் பஞ்சுதான்.

ராஜாவின் ராஜாங்கம்!

1970_களில் தமிழ் சினிமா இசையில் ஒரு தேக்கநிலை! அந்த வெற்றிடத்தை இந்திப் பாடல்கள் இட்டு நிரப்பின. அந்தச் சமயத்தில்தான் அன்னக்கிளி ரிலீஸானது. தென்றலின் இனிமையோடும் புயலின் வலிமையோடும் வெளிப்பட்ட பாடல்களைக் கேட்ட தமிழ் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி!

அன்னக்கிளி, பத்ரகாளி என்று வெற்றிப் படிக்கட்டுகளில் ஏறத்தொடங்கினார் இந்த ட்ரெண்ட் செட்டர். அதன் பிறகு, தமிழ் சினிமா இசையின் வசந்த காலம்! 80_களுக்குப் பிறகு வெளிவந்த பெரும்பாலான படங்கள் ராஜாவின் இசையில் வெளிவந்தன. வருடத்துக்கு முப்பதிலிருந்து ஐம்பது படங்கள்! ராஜாவின் இசை, இந்திப் பாடல்களை மீண்டும் மும்பைக்கே விரட்டியடித்தன.

பாடல்களிலும், ரீ ரெக்கார்டிங்குகளிலும் பல புதுமைகள்; பல சோதனை முயற்சிகள்!

ராஜாவின் இசைப் பாடல்களால் மட்டுமல்ல; பின்னணி இசையாலும் மனதைத் தொட்டன. நடிகர்கள் நடிக்க முடியாத நுணுக்க உணர்வுகளையும் அவரது பின்னணி இசை நடித்துக் காட்டியது.

நடிகர் கால்ஷீட் இருந்தால் போதும் என்ற நிலைமாறி ராஜாவின் கால்ஷீட் இருந்தால் போதும் என்ற நிலை. ஃபைனான்ஸியர்களும், டிஸ்ட்ரிபியூட்டர்களும் ராஜாவை முழுதாக நம்பினர்.

ஏராளமான தேசிய விருதுகளும், தமிழக அரசு விருதுகளும் இவரது வரவேற்பறையை அலங்கரிக்கத் தொடங்கின.

பரம்பொருள்!

இசைப் பணியால் பொருள் சேர்ந்தது. அதில் பொருளற்ற தன்மை இருப்பதை மனம் உணர்ந்தது. பரம் பொருள் தேடி மனம் விரைந்தது. சிறு வயதில் நாத்திகராகவும், சாமி கும்பிடுபவர்களைக் கிண்டல் செய்து கொண்டுமிருந்த ராஜாவுக்குள் இறையருள் புகுந்தது. 1986_ம் ஆண்டு களில் அந்த மாற்றம் நிகழ்ந்தது.

அன்னை மூகாம்பிகையின் தீவிர பக்தரானார். ஸ்ரீரங்கம் ராஜ கோபுரம் உட்பட பல கோயில்களுக்குக் கோபுரம் கட்ட உதவியதன் மூலம், இறைவன் தனக்களித்ததை அவனிடமே அர்ப்பணித்தார். இந்த இசை ஞானிக்குப் பிடித்த ஞானி: ஸ்ரீரமணர். பிடித்த நூல் ரமணரின் ‘அருண்மொழித் தொகுப்பு!

சிம்பொனி!

சினிமா, இசை, பாட்டு என்று ஓடிக்கொண்டிருந்த ராஜா 1987_ல் ‘ஹெள டு நேம் இட்’ என்ற இசை ஆல்பத்தை வெளியிட்டார். 1988_ல் ஹரிப்பிரசாத் சௌராஷ்யா புல்லாங்குழலில் ‘நத்திங் பட் விண்ட்’ என்ற ஆல்பத்தை வெளியிட்டார். இந்த விழாவில் கலந்து கொண்ட மிகப் பெரும் இந்தி இசையமைப்பாளர் நௌஷாத், ‘இளையராஜாவிடம் நிறைய விஷயங்கள் இருக்கின்றன. எனக்கு உடல்நிலை சரியாக இருந்து _ நேரமும் இருக்குமானால், இந்த இளைஞனிடம் உட்கார்ந்து கற்றுக் கொள்ளத் தயங்க மாட்டேன்’ என்றார் நெகிழ்ச்சியாக.

இதற்கெல்லாம் மகுடம் வைப்பது போல், ஆசியாவிலேயே ‘சிம்பொனி’ இசையமைத்த மேதை என்ற சிறப்பும் ராஜாவையே சேரும். அவரது வாழ்க்கைப் புத்தகத்தின் பக்கங்கள் சாதனைகளால் நிறைந்தவை. லேட்டஸ்ட் சாதனை திருவாசகத்துக்குப் புதிய பாணியில் இசையமைத்தது.

ராஜா கூறுகிறார்: ‘எதையும் நான் செய்யவில்லை. இங்கிருந்ததை மீண்டும் எடுத்துக் கொடுக்கிறேன்!’ அட!

அடக்கம் அமரருள் உய்க்கும்!

இசையுலகில் இளையராஷா ஓர் ஆல் ரவுண்டர். மெட்டு போடுவது, பாடுவது, கருவிகள் இசைப்பது எல்லாம் அவருக்குக் கைவந்த கலை. இவர் பாடலாசிரியரும் கூட. நிறைய பாடல்களை எழுதியிருக்கும் இவர் நிறைய கவிதைகளும் எழுதியிருக்கிறார்.

‘வெட்டவெளியில் கொட்டிக் கிடக்குது’ என்பது இவர் எழுதிய வசன கவிதைத் தொகுதி. மரபுக் கவிதைகளும் இவருக்கு அத்துப்படி. எல்லாப் புலவர்க்கும் புலியான வெண்பா இவரிடம் பூனைக்குட்டியாய் பணிந்து கிடந்தது. இவரது வெண்பாக்களை அ.ச.ஞான சம்பந்தன், ஷெயகாந்தன், பெரும்புலவர் நமசிவாயம் ஆகியோர் வியந்து புகழ்கிறார்கள்.

தமிழில் புகுந்து விளையாடும் ராஷாவுக்கு, சமஸ்கிருதமும் தெரியும். இதுதவிர, இவருக்கு ஓவியமும் வரைய வரும்; கூடவே நல்ல புகைப்படக் கலைஞரும் கூட. இவர் எடுத்த புகைப்படங்களை வைத்து, மிக விரைவில் ஒரு கண்காட்சி நடந்துவதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.

_பெ.கருணாகரன்

Posted in Biosketch, Ilaiyaraaja, Ilaiyaraja, Kumudam, Tamil | Leave a Comment »

CPI(M)’s N Sankaraiyaah – Kumudam.com

Posted by Snapjudge மேல் ஓகஸ்ட் 4, 2006

மூன்று முறை எம்.எல்.ஏ., ஆனால், சாமான்யர்களுடன் மின்சார ரயிலில் பயணம். எளிமை; கதராடை! தனி வாழ்விலும் அரசியல் வாழ்விலும் தூய்மை! அவர்தான் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தூண்களில் ஒருவரான தோழர் என். சங்கரய்யா.

சங்கரய்யாவின் தந்தை: நரசிம்மலு; தாய்: இராமானுஜம் அம்மாள்.

இவர்களது இரண்டாவது மகன்தான் சங்கரய்யா. பிறந்தநாள்: 15.7.1922.

சங்கரய்யாவின் குடும்பம், சுயமரியாதைக் குடும்பம் இவரது தாய் மாமா, நேதாஜியின் இந்திய தேசிய ராணுவத்தில் சேர்ந்து இந்திய விடுதலைக்காகப் போராடியவர்.

பூர்வீகம்: நெல்லை மாவட்டம், ஆத்தூர். பிறந்த ஊர்: கோவில்பட்டி. தந்தை நரசிம்மலு, பொறியாளர். மதுரை நகரசபை நீரேற்று நிலையத்தில் மேற்பார்வையாளர் பணி.

மாணவர் சக்தி!

1938_ல் தமிழகத்தில் மெட்ராஸ் ஸ்டூடண்ட்ஸ் ஆர்கனைசேஷன் என்ற அமைப்பு உருவாகி, பிரிட்டிஷ் அரசுக்கு எதிராகப் போராடியது. மாணவர் பேரணிகள் நடத்தப்பட்டன. முத்தையா, பாலதண்டாயுதம், ஆர்.உமாநாத், தூத்துக்குடி சீனுவாசன் போன்றோருடன், மதுரையில் படித்துக் கொண்டிருந்த சங்கரய்யாவும் அந்தப் பேரணிகளில் கலந்து கொண்டார்.

1939_ல் மதுரை அமெரிக்கன் கல்லூரியில் இண்டர்மீடியட் (வரலாறு) தேறினார். கல்லூரியின் மாணவர்கள் சுதந்திரப் போராட்டத்தில் குதித்தனர். இதைச் சகிக்காத கல்லூரி நிர்வாகம் சிலரை சஸ்பெண்ட் செய்தது. இதை எதிர்த்து சங்கரய்யா தலைமையில் மாணவர்கள் போராடினர். இறுதியில் கல்லூரி நிர்வாகம் பணிந்தது. ‘நாங்கள் வேலைக்காகப் போராடுபவர்கள் அல்ல; நாட்டு விடுதலைக்காகப் போராடுகிறவர்கள்’ என்று சங்கரய்யா தலைமையில் மாணவர்கள் உணர்ச்சிகரமாக ஆர்ப்பரித்தனர்.

இவரது பேச்சு காந்த சக்தி கொண்டது. யாரையும் வசியப்படுத்தும் திறன் வாய்ந்தது. மாணவர்கள் பலரும் இவர் தலைமையை ஏற்றனர். விளைவு, அமெரிக்கன் கல்லூரியில் 1940_ல் மாணவர் மன்றச் செயலாளரானார். 1941_ல் நேரு கைது செய்யப்பட்டார். சங்கரய்யா தலைமையில் மாணவர்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர். தமிழகத்தில் இவர் உட்பட 40 மாணவர்கள் கைதானார்கள். ‘சுதந்திரப் போராட்ட வீரர்களை அரசியல் கைதிகளாக நடத்த வேண்டும்’ என்பதை வலியுறுத்தி ஏ.கே. கோபாலன் தலைமையில் நடந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் 19 நாட்கள் உண்ணாமல் இருந்தார்.

அது தேர்வு நேரம். சிறை சென்றதால், சங்கரய்யாவால் தேர்வு எழுத இயலவில்லை. படிப்பையும் தொடர முடியவில்லை. கல்லூரித் தேர்வு எழுதாவிட்டாலென்ன? விடுதலைப் போர் என்னும் அரசியல் தேர்வில், அவர் அவுட்ஸ்டாண்டிங்கில் பாஸ் செய்துவிட்டாரே!

1942_ல் தமிழ்நாடு மாணவர் அமைப்பின் பொதுச் செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். பிறகு தமிழகம் முழுதும் சுற்றுப் பயணம். சங்கரய்யாவின் கடும் உழைப்பு மாணவர் சக்தியை ஒன்றுதிரட்டியது. அதன்பிறகு, ஏராளமான பேரணிகள்… போராட்டங்கள்.. ஆர்ப்பாட்டங்கள்! பிரட்டிஷ் அரசின் அடித்தளத்தை அசைத்துப் பார்த்தது மாணவர் சக்தி!

பாளையங்கோட்டையில் பிரிட்டிஷ் அரசுக்கு எதிராக நடந்த மாணவர் ஊர்வலத்துக்கு, சங்கரய்யா தலைமை தாங்கினார். ஊர்வலக் கூட்டத்தில் அவர் பேசிக் கொண்டிருந்த போது, போலீஸ் தடியடியில் அவர் காயப்பட்டார். பிறகு, மதுரையில் கைது. அவரது கைதை எதிர்த்து தமிழகம் முழுதும் மாணவர்கள் போராட்டத்தில் குதித்தனர். அரண்டு போன பிரிட்டிஷ் அரசு, சங்கரய்யாவை விடுதலை செய்தது.

தந்தை மறைவு!

1944_ல் தந்தை நரசிம்மலு காலமானார். குடும்பப் பொறுப்பு தோழரின் தோள்மீது. கட்சியின் முழுநேர ஊழியராக இருந்து கொண்டே குடும்பப் பொறுப்பையும் திறம்பட நிர்வகித்தார் சங்கரய்யா.

1946_ம் ஆண்டு, காஷ்மீரில் நுழையக் கூடாது என்று நேருவுக்குத் தடை விதிக்கப்பட்டதைக் கண்டித்து சங்கரய்யா தலைமையில் கூட்டங்களும் ஆர்பாட்டங்களும் மதுரையில் நடந்தன. இதே சமயத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் பி.சி.ஜோஷி மதுரை வந்தபோது, மிகப்பெரும் பொதுக்கூட்டத்துக்கு ஏற்பாடு செய்தார் சங்கரய்யா. இந்தக் காரணங்களால் ஆத்திரமடைந்த ஆங்கில அரசு, 1946_ல் மதுரை சதி வழக்கை ஜோடித்து பி.ராமமூர்த்தி, என்.சங்கரய்யா, கே.டி.கே. தங்கமணி ஆகியோரைக் கைது செய்தது. இந்திய விடுதலையின் முதல்நாள் வரை அந்தச் சிறை வாழ்க்கை நீடித்தது.

திருமணம்!

1947_ம் ஆண்டு நவமணி அம்மாளை மணம் புரிந்தார். கலப்புத் திருமணம். நவமணி அம்மாள் கிருத்துவ மதத்தைச் சேர்ந்தவர். கரடுமுரடான கணவரின் அரசியல் பாதையில் எந்த முகச் சுளிப்பும் காட்டாமல் அனுசரணையும் அன்பும் காட்டி குடும்பத்தை நடத்தி வருபவர். இவர்களுக்கு இரண்டு மகன்கள்; ஒரு மகள். ஏழு பேரக் குழந்தைகள்.

இவரது குடும்பத்தினரும், பல்வேறு பொறுப்புகளிலிருந்து கட்சிப் பணியாற்றி வருகிறார்கள் உறவினர்கள் பலர் கம்யூனிஸ்ட் இயக்கம் சார்ந்தவர்களே. இவரது சகோதரர் என். ராமகிருஷ்ணன் நிறைய கம்யூனிஸ்ட் இயக்க நூல்களை எழுதியிருக்கிறார்.

கம்பீரக்குரல்!

நேரம் தவறமாட்டார். கூட்டம் நடப்பதற்கு முன்பே அங்கு போய்விடுவார். மேடையில் பேச ஆரம்பித்தால் புள்ளி விவரங்கள் துள்ளித் தெறிக்கும். கம்பீரமான குரல்! தமிழ், ஆங்கிலம் இரண்டிலும் சரளமான பேச்சுத்திறன். சட்டமன்றத்தில் இவர் மிக வேகமாகப் பேசும்போது, குறிப்பெடுக்கும் சுருக்கெழுத்தர்கள் திணறுவார்கள்.

காலை 5.30க்கு விழிப்பு. எழுந்தவுடன் ஹிந்து, தீக்கதிர் படிக்காவிட்டால், அடுத்த வேலை ஓடாது.

கட்சிப் பொறுப்புகளில் உயர்ந்த போதிலும் மூன்று முறை எம்.எல்.ஏ.வாக இருந்தபோதிலும் முழு நேர ஊழியர்களுக்கு கம்யூனிஸ்ட் கட்சி கொடுக்கும் அலவுன்சை மட்டுமே வைத்துக் கொண்டு குடும்பத்தை நிர்வகித்து வந்த சங்கரய்யா, சமீப காலம் வரை குரோம்பேட்டை நியூகாலனியில் ஒரு சிறிய வீட்டில்தான் குடியிருந்தார் என்பது, சுயநலமில்லாத அவரது பொதுநல உழைப்பின் அடையாளம். அவரது பிள்ளைகள் வளர்ந்து வேலைக்குப் போன பிறகுதான், தந்தைக்காகச் சிறிய வீட்டைக் கட்டிக்கொடுத்துள்ளனர்.

இலக்கிய ஆர்வலர்!

சங்கரய்யாவுக்கு இலக்கியத்தில் ஆர்வம் அதிகம். கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தபோது, பரிமேலழகர் தமிழ்ச்சங்கத்தின் தலைவராக இருந்திருக்கிறார். இவரது மிகப் பெரும் உந்து சக்தி பாரதியார் கவிதைகள். புறநானூறு, நற்றிணை, குறுந்தொகை என்று சங்க இலக்கியங்களை விரும்பிப் படிப்பார்.

‘சங்க இலக்கியத்தைப் பற்றிய ஆழ்ந்த புலமை பெற வேண்டும்’ என்று இயக்கத்தின் இளைய தலைமுறையினரிடம் அன்புடன் வலியுறுத்துவார். பேச்சுத்திறன் போலவே எழுத்திலும் வல்லமையுள்ளவர். ‘ஜனசக்தி’யின் ஆசிரியராக மூன்றாண்டுகள் பணியாற்றியிருக்கிறார் (1959_62).

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம் அமைப்பதில் இவரது பங்கு மகத்தானது.

இந்திய சுதந்திரத்துக்குப் பிறகு, ஏராளமான போராட்டங்கள்… பொதுக் கூட்டங்கள்… மாநாடுகள்… தொழிலாளர்கள், விவசாயிகள் நலம் நாடும் களப்பணிகள்… இயக்கம் தடை செய்யப்பட்டபோது, 1948_லிருந்து 1951 வரை தலைமறைவு வாழ்க்கை. 1962 சீனப்போரின் போது, கைது செய்யப்பட்டு ஓராண்டு சிறை! பிறகு விடுதலை. 1964_ல் சீனா நெருக்கடி நிலை தொடர்பாக சென்னையில் கைது செய்யப்பட்டு, கடலூர் சிறையில் 1966 வரை சிறை! கிட்டத்தட்ட மொத்தம் ஏழரை ஆண்டுகள் சிறை வாழ்க்கை… மூன்றரை ஆண்டுகள் தலைமறைவு வாழ்க்கை! பதவிகள் பல இவரைத் தேடி வந்தன. தங்களை அலங்கரித்துக்கொண்டன.

மார்க்சிஸ்ட் இயக்கம்!

1964_ம் ஆண்டு, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியிலிருந்து 35 உறுப்பினர்கள் பிரிந்து மார்க்சிஸ்ட் கட்சியினை அமைத்தனர். அந்த 35 பேரில் சங்கரய்யாவும் ஒருவர்.

2002_ம் ஆண்டு, கோவையில் மார்க்சிஸ்ட் கட்சியின் மாநாடு. கட்சியின் மாநிலச் செயலாளராக இருந்த சங்கரய்யா, தன் உடல்நிலை காரணமாக, அந்தப் பொறுப்பிலிருந்து விலகிக் கொண்டார்!

பதவியிலிருந்துதான் ஒதுங்கினாரே தவிர, கட்சிப் பணியிலிருந்து அவர் ஒதுங்கவில்லை. 84 வயதிலும் அவர் கட்சி அலுவலகத்துக்கு இப்போதும் வருகிறார். தன் நெடிய அனுபவத்திலிருந்து ஆலோசனை தருகிறார். மேற்கு வங்கம், கேரளா, திரிபுரா பாதையில் தமிழகமும் திரும்ப வேண்டும் என்பது சங்கரய்யாவின் ஆழமான கனவு! இதோ, சங்கரய்யாவின் வழிகாட்டுதலில், இளைய தலைமுறை சிவப்புச் சிப்பாய்கள் அணிவகுத்துக் கொண்டிருக்கின்றனர் _ சங்கரய்யாவின் கனவை நிறைவேற்ற! றீ

2002_ம் ஆண்டு கோவையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில மாநாடு. அந்த மாநாட்டின் கொடியேற்று விழாவின்போது, ‘விடுதலைப் போரில் வீழ்ந்த மலரே’ என்று தொடங்கும் பாடல் பாடப்பட்டபோது, ஒரு குழந்தையைப் போல் குலுங்கிக் கண் கலங்கினார் என். சங்கரய்யா. காரணம், அந்தப் பாடலின் பின்னணியில் புதைந்து கிடக்கும் தியாகச் சரித்திரம்!

அந்தப் பாடலின் பின்னணி இதுதான்: இந்திய சுதந்திர தினமான 1947_ ஆகஸ்ட் 15_ம் தேதிக்கு முதல்நாள் வரையில் பி.ராமமூர்த்தி, கே.டி.கே. தங்கமணி, என். சங்கரய்யா உள்பட நூற்றுக்கணக்கான கம்யூனிஸ்ட்கள் ‘மதுரை சதி வழக்கு’ போடப்பட்டு மதுரைக் சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர்.

ஆகஸ்ட் 14_ம் தேதி மாலை சிறைச்சாலைக்கே வந்து தோழர்களை விடுதலை செய்தார் நீதிபதி. தொழிலாளர்கள் அவர்களை ஊர்வலமாய் அழைத்துச் சென்றனர். விடுதலைத் திருநாளில், மதுரை தமுக்கம் மைதானத்தில் தியாகி வைத்திய நாதய்யர் ஏற்பாடு செய்த பொதுக் கூட்டம்!

விடுதலைப் போரில் இறந்தவர்களின் நினைவுகளைப் போற்றி இந்தி ஆசிரியரும் கம்யூனிஸ்டுமான மணவாளன் ‘விடுதலைப் போரில்’ பாடலை எழுதியிருந்தார். புகழ்பெற்ற இசையமைப்பாளர் எம்.பி. சீனிவாசன் கம்யூனிஸ்ட் கட்சி ஆபீஸிலேயே அமர்ந்து மெட்டமைக்க, குரல்வளம்மிக்க ஐ.வி. சுப்பையா, கம்பீரக் குரலில் பாடினார்.

நாட்டுக்குக் கிடைத்த சுதந்திரம் காம்ரேட்களுக்கு நீடிக்கவில்லை. 1948ல் மீண்டும் கைது. பிரிட்டிஷ் ஆட்சியில் நடந்ததைவிட, சுதந்திர இந்தியாவில் அவர்களுக்குக் கடுமையான சிறைக் கொடுமைகள்!

அந்தப் பாடலை எழுதிய மணவாளனை மதுரைக்கு வெளியே லாரியில் ஏற்றிச் சென்று சுட்டுக் கொன்று, தப்பிக்க முயன்ற போது சுட்டதாகக் கதைவிட்டது சுதந்திர இந்திய போலீஸ்!

பாடலைப் பாடிய ஐ.வி. சுப்பையா, சிறைச்சாலை அடக்குமுறைக்கு எதிராக உண்ணாவிரதமிருந்து, அணு அணுவாக உயிரைவிட்டார். விடுதலைப் போரில் இறந்த மலர்களுக்காகப் பாடிய இரண்டு மலர்கள் விடுதலை இந்தியாவில் உதிர்ந்து விழுந்த பரிதாபம்!

அன்று கோவை கம்யூனிஸ்ட் மாநாட்டில் ‘விடுதலைப் போரில்’ பாடல் பாடப் பட்டபோது, சங்கரய்யாவுக்குக் கடந்து வந்த கரடுமுரடான தியாகப் பாதைகளும்… இளமைக்காலப் போராட்டங்களும் இறந்து போன சகாக்களும்… கடந்து செல்ல வேண்டிய இலக்குகளும்… இன்னும்… இன்னும் எழுத முடியா உணர்வுகள் எல்லாம் மனதில் எழுந்திருக்க வேண்டும்! கம்யூனிஸ்ட்கள் நெகிழ்ச்சித் தன்மையற்றவர்கள், இறுக்கமானவர்கள் என்ற வாதங்களின்மீது ஒரு முற்றுப்புள்ளியாய் விழுந்தது சங்கரய்யாவின் கண்ணீர்த்துளி!

_பெ. கருணாகரன்

Posted in Kumudam.com, Sankaraiya, Tamil | Leave a Comment »

K Balachander – Kumudham.com

Posted by Snapjudge மேல் ஓகஸ்ட் 4, 2006

தமிழ்த் திரைப்பட டைரக்டர்களில், ‘ஸ்டார் மேக்கர்கள் நிறைய உண்டு; சூப்பர் ஸ்டார் மேக்கர் ஒரே ஒருவர்தான். அவர்தான் கே. பாலசந்தர். செல்லமாய் கே.பி.

தமிழ் நாடகம், சினிமா இரண்டிலும் இவர் நுழைந்த பிறகுதான், அறிவுப்பூர்வமான மாறுதல்கள் நிகழ்ந்தன. புதுமைகள் பிறந்தன. படிய வாரிய தலை; மடிப்பு கலையாத சட்டை; ஒட்ட வெட்டப்பட்ட நகங்கள்; சுற்றுப்புறம் சுத்தமாய் இருக்க வேண்டும் என்பதில் அக்கறை. இப்படி பாலசந்தர் தொடர்பான எல்லா விஷயங்களிலும் பர்ஃபெக்ஷன்.

தஞ்சை மாவட்டம் _ நல்லமாங்குடி கே.பி. பிறந்த ஊர். பெற்றோர் : கைலாசம் ஐயர், காமாட்சியம்மாள். 9.7.1930_ம் ஆண்டு பிறந்த இவருக்கு, ஓர் அண்ணன்; நான்கு சகோதரிகள். பள்ளி நாட்களில் படிப்பில் சூப்பர் ஸ்டூடண்ட். அந்த நாட்களில், தெரு நண்பர்களைக் கூட்டிக் கொண்டு நாடகங்கள் போடுவார்.

அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் படிக்கும் போதும் நாடக ஆசை அடங்கவில்லை. தானே எழுதி, நடித்து இயக்கிய நாடகங்கள் சிதம்பரத்திலும் அரங்கேறின. கல்லூரிப் படிப்பு முடிந்த பிறகு, முத்துப்பேட்டையில் ஒரு பள்ளியில் ஆசிரியர் பணி! தனது நாடகங்களை மாணவர்களிடமும் அரங்கேற்றினார் பாலசந்தர்.

பட்டிணப் பிரவேசம்!

1950_ல் சென்னை ஏ.ஜி.எஸ். ஆபீஸில் வேலை. இங்கேயும் பாலசந்தரை நாடக மோகம் விடவில்லை. மாலை ஐந்து மணியடித்ததும், எல்லோரும் வீட்டுக்கு மூட்டை கட்டும்போது, கே.பி.யின் பாதங்கள் சபாக்களை நோக்கி நகர்ந்தன. தனது நாடகத் திறனை வெளிப்படுத்துவதற்கான சந்தர்ப்பத்துக்காகக் காத்திருந்தார். அந்த நாளும் வந்தது.

ஏ.ஜி.எஸ். ஆபீஸில் ஒரு விழா. உயரதிகாரியைச் சந்தித்து நாடகம் போட அனுமதி கேட்டார். அதிகாரி சம்மதித்தார். நாடகத்தின் பெயர் ‘சினிமா விசிறி’ சதா சர்வ காலமும் சினிமாவையே நினைத்துக் கொண்டிருக்கும் கேரக்டரை பற்றிய கதை.

இடையில் இருந்ததோ ஒரே நாள். மொத்த வசனத்தையும் ஒரே நாளில் யாரால் மனப்பாடம் செய்ய இயலும்? இறுதியில், எல்லா கேரக்டர்களையும் தான் ஒருவனே நடித்து விடுவதென முடிவு செய்தார். மோனோ ஆக்டிங்!

ராஜா அண்ணாமலை மன்றத்தில் நாடகம்! விதவிதமான கேரக்டர்கள்; உணர்வுகள்; நாடகத்துக்கு ஆடியன்ஸிடம் பலத்த வரவேற்பு! அதன் பிறகு, நாடகங்களில் நடிப்பதற்கு நிறைய வாய்ப்புகள் வந்தன. இதில் விநோதம் என்னவென்றால், இளைஞரான கே.பி. போட்டதெல்லாம் அப்பா வேடம்!

நாடகங்களில் நடித்தபடியே தனக்கென்று சொந்தமாக ‘ராகினி ரெக்ரியேஷன்ஸ்’ என்ற பெயரில், ஒரு நாடகக் குழுவையும் ஏற்படுத்திக் கொண்டார் கே.பி. சபா வாய்ப்புகளுக்காகக் காத்திராமல் திருமணம், ஜானவாசம் என்று எங்கு வாய்ப்புக் கிடைத்தாலும் நாடகம் போட்டார்.

பாமா விஷயம்!

மகள் புஷ்பலதா பிறந்த நேரம் _ கே.பி.யின் வாழ்வில் நல்ல நேரம். அவருக்கு, வி.எஸ்.ராகவன் குழுவுக்கான முழுநீள நாடகம் எழுதும் வாய்ப்பு கிடைத்தது. நாடகத்தின் பெயர் கௌரி கல்யாணம்! இதில் கே.பி. வில்லனாக நடித்தார்.

ஏ.ஜி.எஸ். ஆபீஸின் உயரதிகாரி டிரான்ஸ்பராகிப் போனபோது, பிரிவு உபசார விழாவில் கே.பி. மேடையேற்றிய நாடகம், மேஜர் சந்திரகாந்த். மேஜர் சந்திரகாந்த்தாக கே.பி.யே நடித்தார். இந்த நாடகத்தில் ஃபேட்இன், ஃபேட்அவுட் என பல மேடைப் புதுமைகளைப் புகுத்தினார்.

அமெச்சூர் நாடகத்திலிருந்து முழுநீள நாடகம் நடந்த முடிவு செய்தார் கே.பி. சுந்தரராஜன் நடிக்க ஃபைன் ஆர்ட்ஸ் கிளப்பில் மேஜர் சந்திரகாந்த் அரங்கேறியது. அதே நாடகம் மீண்டும் நாரத கான சபாவில் நடந்தது.

இந்தக் காலக்கட்டத்தில்தான் கே.பி.யுடன் நெருக்கமானார் நாகேஷ். அவருக்காக எழுதப்பட்ட நாடகம்தான் ‘சர்வர் சுந்தரம்.’ மக்களின் ஏகோபித்த ஆதரவுடன் 25 முறை மேடையேறியது சர்வர் சுந்தரம்.

இந்த நிலையில்தான், கே.பி.யின் ‘மெழுகுவர்த்தி’ என்ற நாடகத்துக்குத் தலைமை தாங்கிய எம்.ஜி.ஆர். ‘தெய்வத்தாய்’ படத்துக்கு வசனமெழுதும் வாய்ப்பையும் ஏற்படுத்திக் கொடுத்தார்.

அரங்கேற்றம்!

கே.பி. டைரக்ட் செய்த முதல் படம் ‘நீர்க்குமிழி’ கே.பி.யால் அரங்கேற்றப்பட்ட ஐந்தாவது வெற்றிகரமான நாடகம் நீர்க்குமிழி. இதில் நடித்தவர் நாகேஷ். இந்த நாடகம் அரங்கேறிய போதே, பலத்த வரவேற்பு. நாடகத்தைப் பார்த்த டைரக்டர் ஏ.கே.வேலன் அந்தப் படத்தைத் தயாரிக்க முன்வந்தார்.

நீர்க்குமிழிக்குப்பிறகு, பாமா விஜயம், அனுபவி ராஜா அனுபவி, எதிர்நீச்சல், இருகோடுகள் என்று ஏகப்பட்ட படங்கள் இயக்கினாலும் 1973_ல் வெளிவந்த ‘அரங்கேற்றம்’ படம் அவரது வாழ்வில் பெரும் திருப்புமுனையை ஏற்படுத்தியது. தமிழ்ப்படவுலகத்தினர் தொடுவதற்கும் யோசிக்கிற கதை. பாலசந்தரின் ட்ரீட்மெண்ட் _ அந்தக் கதையை எல்லோரும் ஏற்கும்படி செய்தது. அதன்பிறகு, இவரது படமாக்கல் முறை மாறியது. சொல்லதான் நினைக்கிறேன், அவள் ஒரு தொடர்கதை, அபூர்வ ராகங்கள், மூன்று முடிச்சு என்று தொடர்ந்து வந்த படங்கள், பாலசந்தரின் தனித்துவத்தை நிரூபித்தன.

எல்லாப் படங்களிலும் புதுப்புது உத்திகள்; புதுப்புது ஃபிரேம்கள். டைரக்ஷனில் பாலசந்தர் டச் என்று தனி ஸ்டைலே உருவானது. இவர் தொட்டதெல்லாம் துலங்கியது; கண்பட்டதெல்லாம் நடித்தது.

கமலஹாசன், ரஜினிகாந்த், ஸ்ரீவித்யா, ஸ்ரீதேவி என்று இன்று திரையுலகை ஆக்கிரமித்திருக்கும் பல நடிகர், நடிகைகள் பாலசந்தரின் அறிமுகங்கள்தான். அதேபோல், விசு, அமீர்ஜான், நடிகை லட்சுமி, வஸந்த், சுரேஷ் கிருஷ்ணா சரண், ஹரி, என்று டைரக்ஷனில் சினிமாவைக் கலக்கிக்கொண்டிருக்கும் இவரது சிஷ்யப்பிள்ளைகள் ஏராளம்.

தமிழ்த் தவிர, கன்னடம், தெலுங்கு, இந்திமொழிப் படங்களிலும் கே.பி.யின் வெற்றி முத்திரைகள் ஏராளம். ‘மரோசரித்ரா’ அறுநூறு நாட்கள் ஓடி சாதனை படைத்தது. தேசிய விருதுகள், மாநில அரசு விருதுகள், தனியார் நிறுவன விருதுகள் என்று ஏராளமான விருதுகள் அவரது வரவேற்பறையில். ஆனால், பேசும்போதோ, ‘நான் ஒண்ணும் பெருசா செய்துடலையே’ என்பார் குழந்தை மாதிரி.

நான் அவனில்லை!

கே.பி.யின் கோபம் நாடறிந்தது. ஆனால், அது சில நொடிகளிலேயே மறையும் நீர்க்குமிழி போன்றது. தான் எதிர்பார்த்தது கிடைக்காதபோது, பொறுமையின்மையினால் வருகிற கோபம் அது.

நடிகரோ, நடிகையோ நடித்தது திருப்தியில்லாதபோது, தானே நடித்துக் காட்டுவார். அதன் பிறகும் சரியாக நடிக்கவில்லை என்றால்தான் கோபம் வரும். திட்டி விடுவார். திட்டுவாங்கிய கலைஞர் அடுத்த ஷாட்டில் சரியாக நடிக்கும்போது, மனம் விட்டுப் பாராட்டுவார். படப்பிடிப்பு இல்லாத நேரங்களில், ஜாலியாக இருப்பார். ‘அவர்தானா இவர்’ என்று ஆச்சரியமாய் இருக்கும்.

அவர்கள்!

சின்னத்திரையை இப்போதுகூட பல சினிமா இயக்குநர்கள் ஏற்றுக்கொள்வதில்லை. ஆனால், பெரிய திரையில் பிஸியாக இருந்த காலத்திலேயே, பாலசந்தர் சின்னத் திரைத் தொடர்களையும் இயக்கினார். சினிமாவுக்கு அடுத்து டி.வி. மீடியாதான் பவர்ஃபுல்லாக வரும் என்று அப்போதே தீர்மானித்த தீர்க்கதரிசனம் அது. இவர் இயக்கிய ரயில் சிநேகம், பிரேமி, கையளவு மனசு, காசளவு நேசம், ஜன்னல் என்று டி.ஆர்.பி.யை எகிற வைத்த சீரியல்கள் ஏராளம்.

‘மின்பிம்பங்கள்’ தயாரிப்பில் உருவான சீரியல்கள்மூலம் உருவான இயக்குநர்கள் பட்டியலும் நீளமானது. சி.ஜே.பாஸ்கர், நாகா, சுந்தர் கே.விஜயன், ‘மெட்டிஒலி’ திருமுருகன், சமுத்திரக்கனி, பத்ரி _ இவர்கள் அனைவரும் பிறந்த இடத்தின் பேர் சொல்லும் பிள்ளைகள். சின்னத்திரையின் கலக்கல் மன்னர்கள்!

அச்சமில்லை… அச்சமில்லை…

ஏராளமான வெள்ளிவிழாப் படங்கள், நூறு நாள் படங்களைக் கொடுத்த இந்தச் சிந்தனை மார்க்கண்டேயருக்கு, இப்போது வயது 76. ஆனால், அவரது சிந்தனைகளிலோ என்றும் 16. கதை, திரைக்கதை, வசனம், டைரக்ஷன் என்று பல்வேறு துறைகளிலும் இவர் பணியாற்றிய படங்களின் எண்ணிக்கை 125. சினிமா, சின்னத்திரை ஆகியவற்றில் இவர் டைரக்ட் செய்தவற்றின் எண்ணிக்கை 100. இப்போது இவர் இயக்கத்தில் வெளிவரப்போகும் படம் பொய். இது இவர் டைரக்ட் செய்யும் 101வது படம்.

கே.பி. மகா துணிச்சல்காரர். யாருக்காகவும் எதற்காகவும் தனது கருத்துக்களில் பின் வாங்கமாட்டார்.

தன்னைப் பற்றி ஒரே வார்த்தையில் கே.பி. வைக்கும் விமர்சனம்: ‘‘அச்சமில்லை!’’றீ

_ பெ.கருணாகரன்,

Posted in K Balachandar, K Balachander, KB, Tamil | 1 Comment »

Arasu Bathilgal – Tamil Poem

Posted by Snapjudge மேல் ஓகஸ்ட் 4, 2006

முகவை முத்துசாமி,

தொண்டி.

ஒரு இனிய கவிதை ப்ளீஸ்?

தமிழிலக்கியத்தில் கவிதைக்கு நீண்ட சரித்திரமும், பெருமைக்குரிய இடமும் உள்ளதைப் போலவே சீனாவின் இலக்கிய பாரம்பரியத்திலும் கவிதைக்கு வளமான ஓர் இடம் உண்டு. நம் கவிஞர்களைப் போலவே சீனத்துக் கவிஞர்களும் வறுமையில் வாடியிருக்கிறார்கள். ஏழ்மையில் இறந்தும் போயிருக்கிறார்கள். ஆனாலும் வாழ்வின் அற்புதக் கணங்களையும், அனுபவங்களையும் எளிய மொழிநடையில் பதிவு செய்து விட்டுச் சென்றிருக்கிறார்கள். கல்பனாவின் மொழிபெயர்ப்பில், ரிஷபம் பதிப்பகம் வெளியீடான சீனத்துக் கவிதைகள் என்கிற புத்தகத்திலிருந்து சாம்பிளுக்கு கவிஞர் ஃபாங் பிங்கின், இலையுதிர் காலம் என்கிற கவிதை :

உதிர்ந்த இலைகள்

அமைதியாக உரசிச் செல்கின்றன

என் சன்னலில்

காலம் காலமாய்.

கதவு சிரமப்பட்டு

திறப்பது போல் தோன்றுகிறது

காற்றின் குறும்பிற்கு.

ஆனால் பக்கத்து வீட்டுக்காரரின்

மூன்று வயது மகள்

உள்ளே நுழைந்தாள்.

தன்னிரு கைகளிலும் ஏந்தியிருந்த

ஒளி நிறைந்த செந்நிற

ஆப்பிளைத்

தந்தாள் பரிசாக.

Posted in Arasu, Kavithai, Kumtham.com, Poem, Tamil | 1 Comment »

Choker Bhaali – Tamil : Kaama Dhaagam

Posted by Snapjudge மேல் ஓகஸ்ட் 4, 2006

அ. சுனஹல் ரஹ்மான்,
திருச்சி.

«இளம் விதவையின் காமதாகம் பார்த்தீர்களா?

ரிட்டு பர்ணகோஷ் சிறந்த இயக்குநர். காசநோயினால் கணவன் இறந்துவிட, ஆதரவற்ற நிலையில் தன் தோழியின் கணவனிடம் உடல் மற்றும் மனரீதியாக சரணடையும் ஒரு பெண்ணின் (ஐஸ்வர்யாராய்) பரிதாபமான முடிவை, ஒரு கலைப்பட நேர்த்தியில், அதாவது மகா மெதுவான பாணியில் சொல்லியிருக்கிறார். தமிழ் ரசிகர்களை இதைப் பார்க்க வைக்க, ஒரே வழி காமதாகம் என்று முடிவு செய்து, ஐஸ்வர்யாராய் அழைக்கிறார் என்று விளம்பரம் வேறு. இதைவிடத் தமிழர்களைக் கேவலப்படுத்த முடியாது!

Posted in Aiswarya Rai, Ishwaryaa Rai, Kaama Dhaagam, Kumudham, Tamil | Leave a Comment »

Jeyakaanthan – Maanpumigu Manithargal

Posted by Snapjudge மேல் ஓகஸ்ட் 4, 2006

புதுமைப் பித்தனுக்குப் பிறகு, தமிழ்ச்சிறுகதை உலகில் மின்சார அதிர்ச்சியை ஏற்படுத்தியவர்; எழுத்தாளர்கள் ஐம்பது வயதிலடையும், அனுபவங்களையும் புகழையும் தன் முப்பதாவது வயதிலேயே அடைந்தவர். சாகித்ய அகாடமி விருதும், இந்திய எழுத்தாளர்களின் உச்சக் கனவான ஞானபீட விருதையும் பெற்று தமிழ் இலக்கியத் தரத்தை உலகுக்குணர்த்தியவர். பேச்சாளர்; அரசியல்வாதி; இன்னும் நிறைய நிறைய எழுதலாம். ஆனால், அவற்றையெல்லாம் ஒரே வார்த்தையில் குறிப்பிட வேண்டுமென்றால் _ ‘ஜெயகாந்தன்!’. இயற்பெயர் முருகேசன்.

பழைய தென்னாற்காடு மாவட்டத்தைச் சேர்ந்த கடலூர் _ மஞ்சக்குப்பம்தான் ஜெயகாந்தன் பிறந்த ஊர். பெற்றோர் : தண்டபாணிப்பிள்ளை, மகாலட்சுமி அம்மாள். பிறந்த நாள் 24.4.1934.

குடும்பத்தார் பலரும் அரசியலில் ஈடுபட்டிருந்ததால் அவரையும் சிறுவயதிலேயே அரசியல் ஆர்வம் பிடித்துக்கொண்டது. சுதந்திரப் போராட்டத்தின்போது, ஜெயகாந்தன் குடும்பத்தினர் எல்லோரும் ஜெயிலுக்குப் போனார்கள். சிலர் காங்கிரஸ்காரர்களாக ஜெயிலுக்குப் போனார்கள். சிலர் கம்யூனிஸ்ட்களாக. காங்கிரஸ்காரர்கள் சிறையிலிருந்து வெளியே வரும்போது கம்யூனிஸ்ட்கள் சிறையேகுவர். கம்யூனிஸ்டுகள் வெளியே வரும்போது, காங்கிரஸ்காரர்கள் சிறை செல்வர். காங்கிரஸார் சிறையிலிருந்து வெளிவரும்போது, கம்யூனிஸ்ட்களை ‘துரோகி’ என்பார்கள்.

இவை, ‘நான் ஒரு தேசபக்தன். காந்தியத் தொண்டன்’ என்ற ஜெயகாந்தனின் கொள்கை உணர்வுகளை அசைத்துப் பார்த்தது, ‘கம்யூனிஸ்ட்களைத் துரோகி என்று சொல்வது தவறு. அவர்கள் உலகத்தைக் காப்பாற்றுவதற்காக ஜெயிலுக்குப் போனவர்கள்’ என்ற எண்ணம் அந்தச் சிறுவனின் மனதில் குமிழியிட, சிந்தனைகளில் சிவப்பு நிறம் ஏறத் தொடங்கியது.

காம்ரேட்!

அந்தக் காலக்கட்டத்தில் விழுப்புரத்தில் கம்யூனிஸ்ட் கட்சி இருந்தது. ஆனால், சிறுவர்களை எந்தக் கட்சியிலும் சேர்த்துக் கொள்ளமாட்டார்கள் என்ற நிலை. மாறாக, ஜெயகாந்தனை கம்யூனிஸ்ட் கட்சியில் சேர்த்துக் கொண்டார்கள். இவர் அங்கு சேர்ந்ததும், இவருக்காகவே பாலர் சங்கம் என்று புதிய பிரிவு தொடங்கப்பட்டது. அதில் இவர் உறுப்பினராகச் சேர்த்துக் கொள்ளப்பட்டார்.

1946_ல் ஒரு பெரிய ரயில்வே ஸ்ட்ரைக் நடந்தது. அதை அடக்க காவல்துறை துப்பாக்கிப் பிரயோகம் செய்தது. இதனால், ஜெயகாந்தன், விழுப்புரம் கம்யூனிலிருந்து சென்னை கம்யூனுக்கு வர நேர்ந்தது. சென்னையில் ஜனசக்தி அச்சகத்தில் கம்போஸிங் செக்ஷனில் போட்டார்கள். பிறகு, கட்சி ஆபீஸில் ஆபீஸ் பையன் வேலை. அப்போது, ஜனசக்தியில் நிறைய எழுத்துப் பிழைகள் வரும். அவற்றை இவர் கிண்டல் செய்து கொண்டிருப்பார். இதனையட்டி, இவருக்கு பிழை திருத்தும் பணி வழங்கப்பட்டது. அந்தப் பணியைச் சிறப்பாகச் செய்ததால் இவருக்கு நல்ல பெயர்.

இந்த வாழ்க்கை நீண்ட நாட்கள் ஓடவில்லை. காரணம், அப்போது சுதந்திர இந்தியாவில் கம்யூனிஸ்ட் கட்சி தடை செய்யப்பட்டது. அதன்பிறகு, தலைமறைவு வாழ்க்கை. தலைமறைவு வாழ்க்கையில் தோழர்களின் கடிதங்கள், பொருட்கள் பரிமாற்றம் ஜெயகாந்தன் வசம் ஒப்படைக்கப்பட்டது.

கட்சியின் தடை நீக்கப்பட்ட பிறகு, 1952_ல் தனது பதினெட்டாவது வயதில் மீண்டும் கட்சி அலுவலகப் பிரவேசம். அவரை ஜனசக்தி ஆசிரியர் குழுவில் ஒருவராகச் சேர்த்துக் கொண்டார்கள்.

கம்யூனிஸ்ட்களால் வளர்க்கப்பட்டு, கல்வி அளிக்கப்பட்டு, அங்கேயே வாழ்ந்து கொண்டிருப்பதால் மட்டுமே ஒருவர் கம்யூனிஸ்ட்டாகிவிட முடியாது. ஒரு நேர்மையான இலக்கியவாதி, அரசியல்வாதியாக இருக்க முடியாது என்ற அடிப்படை மனோதத்துவமும், எதிலும் சமரசம் செய்து கொள்ளாத கொள்கை நெறியும் இவரை கம்யூனிஸ்ட் இயக்கத்திலிருந்து 1964_ல் வெளியே அழைத்து வந்தது. எல்லோரும் கட்சியில் சேரும் வயதில் அவர் கட்சியிலிருந்து வெளியே வந்தார்.

படைப்புப் பட்டறை!

1950_ல் எழும்பூரில் அவரது மாமா வீடுதான் இவரது படைப்புப் பட்டறையாக இருந்தது. இங்கிருந்துதான் இவரது சிறுகதைகள் சூறாவளியாய்ச் சுழன்றெழுந்தன. இவர் எழுதி முதன்முதலில் பிரசுரமான கதை சௌபாக்கியம் இதழில் வெளியானது. அதன்பிறகு, ஏகப்பட்ட சிறுகதைகள், ஏகப்பட்ட நாவல்கள், குறு நாவல்கள், அதிரடி கட்டுரைகள்! அனைத்திலும் ஜெயகாந்தனின் தனித்துவம் தலைநிமிர்ந்து நின்றது.

ஜெயகாந்தன் கூறுகிறார். ‘‘நான் தனிமனிதனேயல்ல. பிறருடைய துயரம், வாழ்க்கைப் பிரச்னைகள் என்னை நீதிபதி ஸ்தானத்தில் அமர்த்தி, நீதி வழங்குமாறு கேட்கிறது. பக்கத்து வீட்டில் ஒரு பெண்ணைப் போட்டு அடிக்கிறார்கள். அதுதான் அக்னிப் பிரவேசம். நான் ஒரு நீதிபதியாக நின்று அதில் யோசிக்க வேண்டியதிருக்கிறது. உயர்வில்லை; தாழ்வில்லை எல்லாம் ஒரு நிறை என்பதுதான் நம்முடைய விதி. இதைப்புரிந்து கொள்ளாமலிருப்பது ஒரு விபரீதம். ஆகவே, இந்தச் சமத்துவப் பார்வையும் சமநோக்கும் எனக்கு எழுதுவதற்குத் தூண்டுகோலாக இருந்தன.’’

குடும்பம்!

இந்த ஞானச்சூரியனின் துணைவி _ ஞானாம்பிகை. ஆசிரியை. 1956_ல் திருமணம். ஜெயகாந்தனின் பெற்றோர் செய்துகொண்டது சீர்த்திருத்த திருமணம். ஜெயகாந்தன் செய்து கொண்டதோ வைதீகத் திருமணம். இவர்களுக்கு மூன்று குழந்தைகள். காதம்பரி, ஜெயசிம்ஹன், தீபலட்சுமி.

வாழ்வியல் ஞானி!

ஜெயகாந்தன் படித்தது ஐந்தாம் வகுப்புவரைதான். அதையும் மூன்று முறை படித்தார். இதற்குக் காரணம், வறுமையோ, வாய்ப்பில்லாமல் போனதோ, படிக்க வைக்க ஆள் இல்லாததோ அல்ல. சுதந்திரமாகவும் சந்தோஷமாகவும் கற்றுக் கொள்வதற்குப் பள்ளிக்கூடம் தடையாக இருந்தது. வகுப்பறைகளில் கற்காத கல்வியையும் அனுபவங்களையும் நடைமுறை வாழ்க்கையில் கற்றறிந்தார். ‘இது எல்லோருக்கும் கிடைக்காத அரிய வாய்ப்பு’ என்கிறார் ஜெயகாந்தன்.

ஐந்தாம் வகுப்பு வரை படித்த இவர், ஆசிரியராக இருந்த பத்திரிகைகள் ஏராளம்.

ஜெயக்கொடி, ஜெயபேரிகை, ஞானரதம், கல்பனா, நவசக்தி போன்ற பத்திரிகைகளின் ஆசிரியராக இவர் இருந்தபோதும், அவற்றில் தொடர்ந்து நீடிக்கவில்லை. ஓர் இலக்கியவாதி அரசியல்வாதியாக இருப்பதில் இருக்கும் தடைகள்தான் பத்திரிகையாளராக இருப்பதிலும் இருந்திருக்கவேண்டும்.

ஜெயகாந்தனின் நாவல்கள் படமாயின. உன்னைப்போல் ஒருவன், சில நேரங்களில் சில மனிதர்கள், கருணை உள்ளம் போன்ற படங்கள் சிறந்த படம், கதைகளுக்கான தேசிய, தமிழகஅரசு விருதுகளையும் பெற்றன. எடுக்கப்பட்ட சில படங்கள் வெளியிடப்படாமல் நிற்கின்றன என்பது ஒரு தமிழ் அவலம்!

ஏன் நிறுத்தினார்?

திடீரென்று ஜெயகாந்தன் எழுதுவதை நிறுத்தியபோது திகைத்தது தமிழ்கூறு நல்லுலகு. சஹ்ருதயர்கள் அவரை மீண்டும் எழுதச் சொல்லி வலியுறுத்தியபோது, அவரிடமிருந்து புன்னகையையே பதிலாகப் பெற முடிந்தது. இது குறித்துப் பல்வேறு இடங்களில் ஜெயகாந்தன் பேசியிருக்கிறார்.

‘‘வேலையில் இருக்கறவங்க வி.ஆர்.எஸ். வாங்கலாம்; ஓர் எழுத்தாளன் வி.ஆர்.எஸ். வாங்கக்கூடாதா?’’ என்று ஒரு முறை கூறினார்.

‘‘எழுதுவது போலவே எழுதாமல் இருக்கவும் ஓர் எழுத்தாளனுக்குத் தெரிந்திருக்க வேண்டும்.’’ என்று இன்னொரு சந்தர்ப்பத்தில் கூறுகிறார்.

காவ்யா பதிப்பகம் நடத்திய ஒரு கூட்டத்தில் இப்படிப் பேசினார். ‘‘என்னை ஓர் அர்த்தமுள்ள சக்தி எழுதும்படி வைத்தது. அதே சக்திதான் என்னைப் பிடித்து நிறுத்தியும் இருக்கிறது. எழுதமாட்டேன் என்று சொல்ல மாட்டேன்; நேரம் வரும்’’

அந்த நேரத்துக்காகத்தான் தமிழர்கள் காத்துக் கொண்டிருக்கிறார்கள்.

மாலை நேர மகோன்னதங்கள்!!

கே.கே. நகரிலிருக்கும் ஷெயகாந்தன் வீட்டின் இரண்டாவது மாடி. கூரை வேயப்பட்டு ஒரு பர்ணசாலை மாதிரி காட்சியளிக்கும். இங்குதான் மாலை நேரங்களில் ஷெயகாந்தனின் சஹ்ருதயர்களின் சந்திப்பு நடக்கும். அவை மகோன்னதப் பொழுதுகள். கற்றாய்ந்த அறிஞராய் இருந்தாலும், ஆட்டோ ஓட்டுநராய் இருந்தாலும் எல்லோருக்கும் அங்கே சம அந்தஸ்து.

சில நேரங்களில் மீசையைத் திருகிக் கொண்டே பாட ஆரம்பித்து விடுவார் ஷெயகாந்தன். பாட ஆரம்பித்தால் நிறுத்தமாட்டார். பெரும்பாலும் பாரதியார், பாரதிதாசன் பாடல்களாகவே அவை இருக்கும். சில நேரங்களில் தன்னுடைய சினிமாப் பாடல்களையும் பாடுவார்.

ஷெயகாந்தனின் நண்பர் கே.எஸ். சுப்பிரமணியன், அந்தச் சந்திப்புகள் பற்றி இப்படிக் கூறுகிறார். ‘‘இவை மிகவும் சுவையான அர்த்தமுள்ள, இனிமையான ‘மாலை’ நேரங்கள். ஏழு மணியளவில் தொடங்கி காலை ஒன்று இரண்டு வரை நீளும். இலக்கியப் பரிமாற்றம்; அக்னிக் குஞ்சுகளின் ஒளிர்வு; அறிவுச் சீற்றத்தின் மின்னல் வெட்டு; சுருள் சுருளாகக் கிளர்ந்தெழும் புதுமைக் கோணக் கருத்துக்களின் எழில் நடம்; இயல்பான பிசிறில்லாத ஷிமீஸீsமீ ஷீயீ லீuனீஷீuக்ஷீன் பல விகஸிப்புகள்; ‘ஸவிஸ்தகுருடு’ (எங்கள் பரிபாஜையில் மதுவின் மறுபெயர்) வின் துணை; மருந்துப் புகையும் என் எதிரில் கமழும். ஆனால், கொச்சையான புரிதலோ, வக்கிரமான அணுகலோ அந்தச் சூழ்நிலையைச் சிறிதும் வடுப்படுத்த இயலாது…’’

மனசாட்சியின் குரலை எந்த மேடையாக இருந்தாலும் ஷெயகாந்தன் ஒலிக்கத் தயங்குவதில்லை. 1959_ம் ஆண்டு திருச்சியில் தமிழ் எழுத்தாளர் சங்க மாநாடு, தந்தை பெரியார் மாநாட்டின் திறப்பாளர். ஷெயகாந்தன் மாநாட்டின் சிறப்புப் பேச்சாளர். மாநாட்டை ஆரம்பித்து வைத்துப் பேசிய பெரியார், நமது இதிகாச புராணங்களையும், இந்து மதத்தையும், பிராமணர்களையும் தனது பாணியில் விளாசினார்.

ஷெயகாந்தனால் பெரியாரின் வாதங்களை ஏற்க முடியவில்லை. பெரியாரை மறுத்துப் பேச வேண்டாம் என்று மாநாட்டுத் தலைவர் வேண்டுகோள் வைத்தபோதும், ஷெயகாந்தன் எது பகுத்தறிவு, எது மூடத்தனம் என்றெல்லாம் ஆணித்தரமான வாதங்களை முன் வைத்தார். திராவிடர் கழகத்தினர் அவரது பேச்சால் கோபமடைந்தபோதும் வெளிப்படையான ஷெயகாந்தனின் பேச்சு பெரியாரை மகிழ்ச்சியடையவே செய்தது.

_ பெ. கருணாகரன்

Posted in Biography, Jeyagandhan, Jeyaganthan, Jeyakaanthan, Kumudam, Tamil | Leave a Comment »