Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

Sathyabama – Biosketch : Chennai’s New Deputy Mayor

Posted by Snapjudge மேல் நவம்பர் 1, 2006

துணை மேயர் சத்யபாமாவின் எதிர் நீச்சல் வாழ்க்கை: குடிசைப் பகுதியில் இருந்து ரிப்பன் மாளிகை வந்தார்

சென்னை, நவ. 1-

சென்னையின் `வெள்ளை மாளிகை’ என்றழைக்கப்படும் மாநகராட்சி அலுவலகமான ரிப்பன் கட்டிடம் வரலாற்று சின்னம் மட்டும் அல்ல. பெரிய பெரிய தலைவர்கள், அரசியல் பிரமுகர்கள் மேயராக, துணை மேயராக அமர்ந்து அலங்கரித்த இடம்.

அந்த ரிப்பன் மாளிகையில் சாதாரண சாமானிய ஏழைப் பெண் அதுவும் தலித் இனத்தைச் சேர்ந்த ஒருவர் துணை மேயராக அமர்ந்து சென்னை நகர மக்களுக்கு சேவை செய்ய வந்திருக் கிறார்.

44 வயதாகும் சத்யபாமா எழுதப்படிக்கத் தெரியாதவர். நெருக்கடி மிகுந்த பிராட்வே அருகே உள்ள ஆசீர்வாதபுரம் இவர் வசிக்கும் இடம். இது பங்களாக்கள் நிறைந்த இடம் அல்ல. குடிசைகள் நிறைந்த இந்தப் பகுதியில்தான் 10 அடி நீளம் 10 அடி அகலம் உள்ள சிறிய வீட்டில் சத்யபாமா வசிக்கிறார்.

தலித் இனத்தைச் சேர்ந்த இவர் வறுமையால் சிறு வயதில் பள்ளிக்கு சென்று படிக்க முடியவில்லை. ஊது வத்தி தயார் செய்து கணவர் ரூபனுடன் வீடுகள், கடைகளில் படியேறி விற்று குடும்பத்தை காப்பாற்றி வந்தார்.

இவர்களுக்கு ராஜா (21) என்ற மகனும், ரம்யா (18) மகளும் உள்ளனர். ஊதுவத்தி விற்பனை மூலம் மாதம் ரூ. 2 ஆயிரம் வருமானம் வரும். இதை வைத்து சென்னை நகரின் குடும்பம் நடத்துவது கஷ்டம் என்பதால் மகன் ராஜா ஒரு நகை கடையில் வேலை பார்த்து ரூ. 2 ஆயிரம் சம்பாதிக்கிறான். ரம்யாவும் கடையில் வேலை செய்து தன் பங்குக்கு குடும்பத்துக்கு பண உதவி செய்கிறார்.

சத்யபாமாவும், கணவர் ரூபனும் ஆரம்பத்தில் இருந்தே தி.மு.க.வின் அனுதாபிகள். இந்த நிலையில் மாநகராட்சி தேர்தலில் தான் வசிக்கும் 25-வது வார்டுக்கு சீட் கிடைத்து வெற்றியும் பெற்றார்.

155 கவுன்சிலர்களுடன் இவரும் ஒருவராகத்தான் இருந்தார். வெற்றி பெற்ற பின்பு ஒருநாள் வீட்டில் குடும்பத்துடன் அமர்ந்து போர்ட்டபிள் டி.வி.யில் பார்த்துக் கொண்டு இருந்த போதுதான் சத்யபாமா துணை மேயராக அறிவிக்கப் பட்ட தகவலை தெரிந்து கொண்டார்.

குடிசைப் பகுதியில் இருந்து ரிப்பன் மாளிகைக்கு வந்தி ருக்கும் சத்யபாமா, தனது 44 ஆண்டு கால வாழ்க்கையில் பசி, பட்டினி, வறுமையை கண்டு கலங்காமல் எதிர்நீச்சல் போட்டு வாழ்ந்தவர்.

இனி சென்னை நகர மக் களுக்காக உழைத்து முதல்- அமைச்சர் கருணாநிதி, அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆகியோருக்கு நல்ல பெயர் எடுத்துக் கொடுப்பேன் என்று நம்பிக்கையுடன் கூறினார் சத்யபாமா.

பின்னூட்டமொன்றை இடுக