பட்டினிச்சாவுக்கு அஸ்திவாரம்
இரா. சிசுபாலன்
கடந்த சட்டமன்றத் தேர்தலில், பிரசாரத்தின் மையமான அம்சமாக, திமுகவின் தேர்தல் அறிக்கை திகழ்ந்தது. மத்திய நிதியமைச்சர் ப. சிதம்பரத்தின் வார்த்தைகளில் குறிப்பிட்டால் அத் தேர்தலின் “கதாநாயகனாக’ அந்த அறிக்கை விளங்கியது. தற்போதைய உள்ளாட்சித் தேர்தலில் “சிக்குன் குனியா‘ மைய விவாதப்பொருளாக மாறியிருந்தது. சில அடிப்படைப் பொருளாதாரப் பிரச்சினைகளும் போகிற போக்கில் விவாதிக்கப்பட்டன. குறிப்பாக சிறப்புப் பொருளாதார மண்டலத்தின் சாதக, பாதக அம்சங்கள் குறித்து, ஜனநாயக முற்போக்குக் கூட்டணிக் கட்சிகளிடையே முரண்பட்ட கருத்துகள் வெளிப்பட்டன.
சுமார் 15 கோடி இளைஞர்கள் வேலை வாய்ப்பின்றி “தேசிய சேதாரமாய்’ இருக்கும் நமது நாட்டில் வேலைவாய்ப்பைப் பெருக்க புதிய தொழிற்சாலைகளை ஏற்படுத்த வேண்டும் என்பதில் இரு வேறு கருத்துகளுக்கு இடமில்லை. அதேசமயம் உயர்தொழில்நுட்பக் கல்வி பயின்ற சிலருக்கு மட்டும் வேலைவாய்ப்பு அளிக்கும் சிறப்புப் பொருளாதார மண்டலம், வேலைவாய்ப்பைப் பெருக்குமா என்பதே நமது கேள்வி!
“உற்பத்தி சாராத லாபம்’ (Productionless Profit), “வேலைவாய்ப்பற்ற வளர்ச்சி’ (Jobless Growth) என்பவையே இன்றைய உலகமயத்தின் தாரக மந்திரங்களாகும். இப் பின்னணியில் இத் திட்டம் 2000-ம் ஆண்டில் ஏற்றுமதி, இறக்குமதிக் கொள்கையில் அறிமுகப்படுத்தப்பட்டு, நாடாளுமன்ற ஒப்புதலுக்குப் பிறகு 2005 ஜூன் 23 அன்று சட்டமாக நிறைவேற்றப்பட்டுள்ளது. நாட்டில் இதுவரை 300 சிறப்புப் பொருளாதார மண்டலங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டு 67 மண்டலங்களுக்கென 1,34,000 ஹெக்டேர் நிலம் கையகப்படுத்தப்பட்டுள்ளது. பன்னாட்டு பகாசுரக் கம்பெனிகளும், இந்தியாவின் ஏகபோக நிறுவனங்களான அம்பானி, யூனிடெக், ஆடன், சகாரா, டிஎல்எப், டாடா, மகேந்திரா போன்றவையும் இச் சிறப்புப் பொருளாதார மண்டலங்களை அமைக்க அனுமதி பெற்றுள்ளன.
வரிகளை முழுமையாகத் தளர்த்தி ஏற்றுமதியைப் பெருக்குவதே சிறப்புப் பொருளாதார மண்டலத்தின் அடிப்படைக் குறிக்கோளாகும். இங்கு அமையும் நிறுவனங்கள் எவ்வித வரியோ, அனுமதியோ இன்றி பொருள்களை இறக்குமதி செய்து கொள்ளலாம். 100% நேரடி அன்னிய முதலீடு இங்கே வரலாம். லாபம் முழுவதையும் தாராளமாக அவர்கள் எடுத்துக் கொள்ளலாம். இந் நிறுவனங்களுக்கு ஐந்து ஆண்டுகளுக்கு முழுமையான வரிவிலக்கு அளிக்கப்படும். அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு 50 சதவீத வரிவிலக்குத் தரப்படும். லாபத்தை மறுமுதலீடு செய்யும் நிறுவனங்களுக்கு மேலும் ஐந்து ஆண்டுகளுக்கு வரிவிலக்கு அளிக்கப்படும்.
அரசு திட்டமிட்டுள்ள சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் அனைத்தும் செயல்பாட்டுக்கு வந்தால் அதன் மூலம் லட்சம் கோடி ரூபாய் அன்னிய முதலீடு நாட்டுக்குக் கிடைக்கும். அதேசமயம் இந் நிறுவனங்களுக்கு அளிக்கப்படும் வரிச்சலுகைகள் மூலம் அரசுக்கு ரூ. 90,000 கோடி வரி இழப்பு ஏற்படும் என மத்திய நிதியமைச்சகம் குறிப்பிடுகிறது. “வரி இழப்பை ஏற்படுத்துவது மட்டுமல்ல, இந்நிறுவனங்கள் விரும்பினால் புதிய இடங்களுக்கு மாறிச் செல்லும் வாய்ப்பும் அளிக்கப்பட்டுள்ளது. இதனால் சமூகத்திற்கு பெரும் கேடுகள் விளையும்’ என எச்சரிக்கிறார் சர்வதேச நிதிய அமைப்பின் தலைமைப் பொருளியலாளர் ராஜன்.
சிறப்புப் பொருளாதார மண்டலங்களுக்கென கையகப்படுத்தப்படும் நிலங்களில் 75 சதவீதம் குடியிருப்புகள், வணிக வளாகங்கள், மருத்துவமனைகள் போன்றவற்றிற்காக ஒதுக்கப்படுகின்றன. உலக அளவிலும், இந்தியாவிலும் இயங்கி வரும் இத்தகைய பொருளாதார மண்டலங்களின் செயல்பாடுகள் திருப்தி அளிக்கக்கூடிய வகையில் இல்லை என்கிறார் பேராசிரியர் பிரபுல் பித்வாய். மேலும், இத்தகைய நிறுவனங்கள் மூலம் லட்சக்கணக்கில் வேலைவாய்ப்பு பெருகும் என்பதும் வெறும் பகற்கனவே என்கிறார் அவர்.
நாட்டில் ஏற்கெனவே நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் சட்டத்திட்டங்கள் எவையும் சிறப்புப் பொருளாதார மண்டலத்தில் செல்லுபடியாகாது. இங்கு பணியாற்றும் தொழிலாளர்கள் தங்களுக்கென தொழிற்சங்கங்களை அமைத்துக் கொள்ளவும் சாத்வீக வழிகளில் தங்களின் கோரிக்கைகளை முன்வைத்துப் போராடவும், உரிமைகள் கிடையாது. சுற்றுப்புறச்சூழல் துறையின் தடையில்லாச் சான்றும் இந்நிறுவனங்களுக்கு அவசியமில்லை. நிலத்தடி நீரை எவ்வளவு வேண்டுமானாலும் உறிஞ்சிக் கொள்ளலாம். மின்சாரம், சாலை வசதி போன்ற உள்கட்டுமான வசதிகளை முழுமையாக அவர்களுக்குச் செய்து தர வேண்டும்.
இவை எல்லாவற்றிற்கும் மேலாக இந் நிறுவனங்களுக்கென நிலங்களைக் கையகப்படுத்த புதிய சட்டத்திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அரசு பொதுக் காரியங்களுக்காக நிலத்தைக் கையகப்படுத்தும் நிலை மாறி தனிநபர்களுக்காக நிலத்தைக் கையகப்படுத்தி அளிக்கும் வகையில் சட்டத்திருத்தம் நடைமுறைக்கு வந்துள்ளது. நிலக்குவியலைத் தடுத்து நிறுத்தி அனைவருக்கும் நிலம் என்ற லட்சியத்துடன் மேற்கொள்ளப்பட்ட நில உச்சவரம்புச் சட்டம் கைவிடப்பட்டு மீண்டும் நிலக்குவியலுக்கு வகை செய்யப்பட்டுள்ளது. விவசாயிகளிடமிருந்து கைப்பற்றப்படும் இந்நிலங்களுக்கு மாற்று நிலங்களோ, போதுமான இழப்பீடோ வழங்கப்படுவதில்லை.
சிறப்புப் பொருளாதார மண்டலத்திற்கு விவசாய விளைநிலங்களை அரசு எடுக்காது என மத்திய வர்த்தக அமைச்சர் கமல்நாத் குறிப்பிட்டுள்ளார். ஆனால், ஒசூர் அருகே அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ள சிறப்புப் பொருளாதார மண்டலத்திற்கு 3,000 ஏக்கர் நல்ல விவசாய விளைநிலம் (ஊங்ழ்ற்ண்ப்ங் ப்ஹய்க்) கையகப்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. நூற்றுக்கணக்கில் மின்சார பம்பு செட்டுகளும் ஏரிகளும், குடியிருப்புகளும் அமைந்துள்ள இப் பகுதியைக் கைப்பற்றுவதால் இங்கிருந்து பெங்களூர், சென்னை, கேரளம் போன்ற பகுதிகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் காய்கறிகள் வர்த்தகம் முழுமையாகத் தடைபட்டுப் போகும். இதற்கு மாற்றாக, அப் பகுதியிலேயே உள்ள தரிசு நிலங்களைக் கையகப்படுத்த வலியுறுத்தி விவசாயிகள் போராட்டக் களமிறங்கி உள்ளனர். உத்தரப்பிரதேசம், ஹரியாணா, பஞ்சாப், மகாராஷ்டிரம் போன்ற மாநிலங்களில் இவ்வாறு விவசாய விளைநிலங்களைப் பாழ்படுத்துவதைக் கண்டித்து விவசாயிகள் தங்கள் வாழ்வுரிமைக்காகப் போராடி வருகிறார்கள்.
ஹரியாணா மாநிலம் ஜஜ்ஜாரில் 2.4 லட்சம் மக்களுக்கு உணவளித்து வரும் 10 லட்சம் ஹெக்டேர் நிலங்கள் கையகப்படுத்தப்பட்டுள்ளன. நாடு முழுவதும் அமையவுள்ள 300 சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் மூலம் 10 கோடிக்கும் மேற்பட்ட மக்களின் உணவுப் பாதுகாப்பு கேள்விக்குறியாகும். உலக அளவில் தனிநபர் உணவுப்பொருள் நுகர்வு 309 கிலோ கிராம் ஆகும். இந்தியாவில் இது 200 கிலோ கிராம் ஆக உள்ளது. இந்திய மக்கள் அனைவருக்கும் தேவையான உணவுப்பொருள் வழங்க 310 மில்லியன் டன் உணவுப்பொருள் உற்பத்தி செய்யப்பட வேண்டும். ஆனால், தற்போது 200 மில்லியன் டன் மட்டுமே உற்பத்தி செய்யப்படுகிறது.
சிறப்புப் பொருளாதார மண்டலங்களுக்கென விவசாய விளைநிலங்கள் பெருமளவில் கையகப்படுத்தப்படுவது தொடருமானால் நாட்டின் உணவுப்பொருள் உற்பத்தி மேலும் குறைந்து அது பட்டினிச்சாவுக்கு அஸ்திவாரமாகிவிடும். தொழில் வளர்ச்சி என்ற பெயரால் நாட்டின் 65 சதவீத மக்களின் வாழ்வோடு விளையாடுவதை மத்திய – மாநில அரசுகள் நிறுத்திக் கொள்ள வேண்டும். மகத்தான மக்கள் எழுச்சியின் மூலமே இந்த ஆபத்தைத் தடுத்து நிறுத்த முடியும்!