மாநிலங்களின் பொன்னாள்!
மு. மாரியப்பன்
மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்ட நவம்பர் 1ஆம் நாளை வழக்கம்போல் இந்த ஆண்டும் கேரளம், கர்நாடகம், ஆந்திரம் உள்ளிட்ட மாநிலங்கள் வெகு சிறப்புடன் கொண்டாடுகின்றன. மாநிலங்கள் உருவான பொன் விழா ஆண்டாகவும் இவ்வாண்டு அமைந்திருக்கின்ற காரணத்தால், மேற்கண்ட மாநிலங்களில் இன உணர்வுடன் கூடிய நிகழ்ச்சிகள் களைகட்டும் என்பது உறுதி.
இந் நாளை “ராஜ்யோத்சவ தினமாக‘க் கொண்டாடும் கர்நாடக அரசு, இந்த ஆண்டு கூடுதலாக, மாநில உருவாக்கத்திற்குத் துணை நின்ற எஸ்.ஆர். பொம்மை, ரங்கநாத் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள், பத்திரிகையாளர்கள் மற்றும் எழுத்தாளர்கள் 36 பேருக்கு கட்சி வேறுபாடுகளுக்கு இடமின்றி மரியாதை செலுத்துகிறது.
மலையாள மொழிக்கும், கேரள மாநிலத்தின் வளர்ச்சிக்கும் பாடுபட்ட அனைத்துத் தரப்பினருக்கும் மரியாதை செலுத்துவதோடு, நவம்பர் மாதம் முழுவதும் பல்வேறு விழாக்களுக்கு கேரள அரசு ஏற்பாடு செய்துள்ளது.
இதுவரை இந்த நாளை, சென்னை மாகாணத்திலிருந்து பிரிந்த பிற மாநிலங்கள் மட்டுமே விழா எடுத்துக் கொண்டாடிக் கொண்டிருந்தன. பொன் விழா ஆண்டான இந்த ஆண்டுதான் தமிழகத்தில் இந்தநாள் அரசு சார்பில் கொண்டாடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
கர்நாடக மாநிலத்தின் ஒரு பகுதியாக தற்போது இருந்து வரும் பெல்காம் மாவட்டத்தை மராட்டிய மாநிலத்தோடு சேர்க்க வேண்டும் என்ற கிளர்ச்சி, மொழிவாரி மாகாணங்கள் தோற்றுவிக்கப்பட்ட நாள் முதல் நடைபெற்று வருகிறது. ஆனால் அது கர்நாடகத்தின் ஒரு பகுதி எனக் கூறி, அதனை ஒருபோதும் மராட்டியத்தோடு இணைக்க விட மாட்டோம் என்பதில் உறுதியாக இருக்கும் கர்நாடக அரசு, மிகச் சமீபத்தில் மாநிலம் முழுவதும் கடையடைப்பினை நடத்தியதோடு, பெல்காமை கர்நாடகத்தின் மற்றுமொரு தலைநகராக மாற்றுவதற்குத் திட்டமிட்டும் வருகிறது.
மராட்டியத்தைத் தாய்மொழியாகக் கொண்ட பெல்காம் வாழ் மக்களோடு இணைந்து, மராட்டிய மாநில முதல்வர் விலாஸ்ராவ் தேஷ்முக் உள்ளிட்ட அங்குள்ள அரசியல் தலைவர்கள் பெரும் ஆதரவு காட்டி வருகின்றனர். பெல்காம் மாவட்டத்தின் மராட்டிய அமைப்பான “ஏக் கிரண் சமிதி‘க்குத் தற்போது கர்நாடக சட்டசபையில் இரண்டு உறுப்பினர்கள் உள்ளனர் என்பதும், பெல்காம் மாநகராட்சியின் மேயராக இவ்வமைப்பைச் சேர்ந்த மராட்டியரே இருந்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
மொழிவாரி மாகாணங்கள் தோற்றுவிக்கப்பட்டு ஐம்பது ஆண்டுகள் ஆன பின்னரும் கூட, கர்நாடக மாநிலத்தின் வடக்கெல்லையாய்த் திகழும் பெல்காமிலுள்ள மராட்டியர்கள் மொழி வழி இன உணர்ச்சியின் அடிப்படையில், கன்னடர்களுக்குச் சற்றும் குறையாமல் போராடி வருகிறார்கள். ஒவ்வொரு மாநில மக்களின் அடி மனத்தில் கனன்று கொண்டிருக்கும் மொழி வழி இன உணர்வினையே இது காட்டுகிறது.
பிரிவினைக்கு முன்னதாக, சென்னை ராஜதானி என்றழைக்கப்பட்ட இன்றைய தமிழகம் உருவான வரலாற்றைச் சற்றே பின்னோக்கிச் சென்று பார்க்க வேண்டும்.
தமிழைத் தாய்மொழியாகக் கொண்ட தமிழ்ப் பகுதிகளைத் தவிர சென்னைக்கு வடக்கே விசாகப்பட்டினம் வரையில் ஆந்திரப் பகுதியும், மேற்குக் கடற்கரையில் கோகர்நாத்திலிருந்து காசர்கோடு வரையிலுள்ள கன்னட மொழியை தாய்மொழியாகக் கொண்ட தென் கன்னடமும், அதோடு காசர்கோட்டிலிருந்து பாலக்காடு வரை மலையாளம் பேசும் பகுதியும் அன்றைய சென்னை ராஜதானியில் தான் இருந்தன.
இவையனைத்திற்கும் மேலாக விசாகப்பட்டினத்திற்கு வடக்கே ஒரிய மொழி பேசும் கஞ்சம் மாவட்டமும்கூட சென்னையோடு இணைந்திருந்தது.
பிரிவினைக் கிளர்ச்சி எழுந்த நேரத்தில் நீதிபதி பசல்அலி தலைமையில் உருவான “ராஜ்ய புனர் அமைப்பு கமிஷன்‘, மாநிலங்களுக்கான எல்லைகளை வரையறை செய்தது. அவ்வமைப்பு, ஹைதராபாத் சமஸ்தானத்திலுள்ள கன்னட மொழி பேசும் மாவட்டத்தையும், சென்னை மாநிலத்திலுள்ள தென் கன்னட மாவட்டத்தையும், மன்னர் ஆட்சியிலிருந்த மைசூரையும் சேர்த்து கர்நாடக மாநிலம் அமையப் பரிந்துரை செய்தது.
அதோடு தமிழகத்தோடு இணைந்திருந்த மலபார் மாவட்டத்தையும், மன்னர் ஆட்சியின் கீழிருந்த திருவாங்கூர் – கொச்சி ராஜ்யத்தையும் சேர்த்து கேரள மாநிலம் உருவாக்கப்பட்டது. ஹைதராபாத் சமஸ்தானத்தில் தெலுங்கு மொழி பேசும் ஜில்லாக்களைப் பிரித்து ஹைதராபாத் ராஜ்யம் அமைக்கவும், பின்னர் தமிழகத்திலிருந்த தெலுங்கு மொழி பேசும் பகுதியை இணைத்து பரந்து விரிந்த ஆந்திரப்பிரதேசம் அமைக்கவும் பரிந்துரை செய்யப்பட்டது.
இதற்குப் பிறகு எஞ்சியிருந்த நிலப்பகுதி சென்னை ராஜ்யம் என்று அழைக்கப்பட்டது.
தமிழகத்தின் வடக்கெல்லையும், தெற்கெல்லையும் சரியான முறையில் வரையறுக்கப்படாத காரணத்தால், தமிழ் மொழி பேசும் மக்கள் மிகுதியாக வாழ்ந்த திருப்பதி, ஆந்திரத்தோடு இணைந்துவிட்டது.
அதேபோல் தெற்கே தற்போது கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள தோவாளை, அகஸ்தீஸ்வரம், கல்குளம், விளவங்கோடு ஆகிய பகுதிகளையும் செங்கோட்டை தாலுகாவையும் தமிழகத்தோடு இணைக்க ராஜ்ய புனரமைப்புக் கமிஷன் பரிந்துரை செய்தது. ஆனால் தமிழ்நாட்டோடு இப்பகுதிகளை இணைப்பதற்கு அன்றைய திருவாங்கூர், கொச்சி அரசுகள் கடும் எதிர்ப்பினைத் தெரிவித்தன.
அன்றைக்கு தமிழகத்தில் ஆளுங்கட்சியாக இருந்த காங்கிரஸ் தெற்கு மற்றும் வடக்கு எல்லைகளைக் காப்பதற்கு எந்த முயற்சியும் எடுக்கவில்லை. திராவிடர் கழகத் தலைவராக இருந்த பெரியாரும்கூட,
“ஆந்திரத்தில் இருந்தாலென்ன, தமிழ்நாட்டில் இருந்தாலென்ன மொத்தத்தில் திராவிடத்தில் தானே இருக்கின்றன’ என்று குடியரசில் எழுதினார்.
தமிழரசுக் கழகத்தின் தலைவர் ம.பொ.சி., தமிழகத்து எல்லைகளை மீட்க மாபெரும் இயக்கத்தை நடத்தினார். தமிழகத்திலுள்ள எந்தக் கட்சியும் இதற்கு ஆதரவு தெரிவிக்காத நிலையில் மக்களை நம்பிக் களத்தில் இறங்கியது தமிழரசுக் கழகம். தமிழக மக்களும் பெரும் ஆதரவை நல்கினர். தலைநகரான சென்னையைக் காத்து, தமிழகத்தின் எல்லைகளையும் மீட்டு தமிழரசுக் கழகம் பெரும் வெற்றி கண்டது.
வடக்கு மற்றும் தெற்கு எல்லைகளை மீட்பதற்காக தமிழகம் கொடுத்த விலை மிகவும் நெகிழ்ச்சிக்குரியது. இது குறித்து ம.பொ.சி. தனது “புதிய தமிழகம் படைத்த வரலாறு’ எனும் நூலில், 1946 தொடங்கி பத்து ஆண்டுகள் நடைபெற்ற எல்லைப் போராட்டங்களைப் பற்றி மிக விரிவாக எழுதியுள்ளார். தொடர்ச்சியான, அதேசமயத்தில் இடைவிடாத போராட்டத்தின் விளைவாக திருவாங்கூர் ராஜ்யத்தின் தென்பகுதியிலுள்ள ஐந்து தாலுகாக்களும், வடபகுதியில் திருத்தணி தாலுகா முழுவதும் தமிழகத்தோடு இணைக்கப்பெற்றன. மேலும், ஆந்திரத்திலிருந்து 394 கிராமங்கள் தமிழகத்தோடு இணைந்தன. 1960ஆம் ஆண்டு திருத்தணியின் இணைப்பு சட்டபூர்வமாக்கப்பட்டது.
தமிழக எல்லைப்புறங்களில் இணைப்புக் குறித்த வெற்றி விழாக் கூட்டங்கள் வெகு விமரிசையாக நடைபெற்றன. அந்தச் சமயத்தில் தமிழரசுக் கழகத்தின் போராட்டம் குறித்து மகிழ்ச்சி தெரிவித்த அண்ணா,
“தமிழர்கள் முயன்றால் குன்றத்தை மட்டுமல்ல, திராவிட நாடு என்ற பெரும் நிலப்பரப்பையே மீட்க முடியும்’ என்று கூறியதோடு, “அவர்கள் (தமிழரசுக் கழகத்தார்) ஏன் நம் பக்கம் வரவில்லை என்ற எண்ணம் எனக்குப் பிறக்கிறது. சிறிய குன்றோடு நின்றுவிடாமல் மலை போன்ற அந்தக் கட்சி, நம்மோடு ஒத்துழைக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்’ என்று மனதாரப் பாராட்டி மகிழ்ந்தார்.
அந்த நேரத்தில் தி.மு.க., திராவிட நாட்டுப் பிரிவினைக் கொள்கையைக் கைவிடவில்லை என்பதையும் நினைவிலிருத்த வேண்டும்.
தமிழக எல்லைகளைக் காப்பாற்ற நடைபெற்ற போராட்டங்களில் பல உயிர்களை இழந்துதான் இன்றைய தமிழகம் உருவாகியிருக்கிறது. பிற மாநிலங்களைக் காட்டிலும் எல்லைப் போர்த் தியாகிகள் தமிழகத்திலே அதிகம். ஆனால் அவர்களுக்காகத் தமிழகம் என்ன செய்திருக்கிறது என்பதை எண்ணிப் பார்த்தால், வேதனைதான் மிஞ்சும்.
(இன்று மொழிவாரி மாநிலங்கள் அமைந்த நாள்)