Archive for நவம்பர் 14th, 2006
Posted by Snapjudge மேல் நவம்பர் 14, 2006
நீங்கியது அவமானம்
க. பழனித்துரை
பத்தாண்டு காலமாக நாம் எங்கே சென்றாலும், நம்மைக் கேட்பது
“பாப்பாபட்டி, கீரிப்பட்டி, நாட்டார்மங்கலம், கொட்டாங்கச்சியேந்தல் பஞ்சாயத்துத் தேர்தல் நடக்குமா? இதை எப்படி மத்திய அரசு, தமிழக அரசு, நிர்வாக இயந்திரம், அரசியல் கட்சிகள், அறிவு ஜீவிகள், நீதிமன்றங்கள் சகித்துக்கொண்டு உள்ளன’ என்பதாகத்தான் இருந்தது.
இடஒதுக்கீட்டிற்கு இந்தியாவிற்கே வழிகாட்டும் மாநிலம் தமிழகம். ஆனால் இந்த இடஒதுக்கீட்டை இந்தப் பஞ்சாயத்துகளில் வாழும் ஜாதி இந்துக்கள் புரிந்துகொள்ளவும் இல்லை. புரிந்துகொள்ள முயற்சிக்கவும் இல்லை. புரிய வைக்க யாரும் முனையவுமில்லை. நமக்கு அண்டை மாநிலமான கேரளத்தில் சமூக நீதிக்காக நம் பெரியார் சென்று வைக்கத்தில் போராட்டம் நடத்தினார். அந்த மாநிலம் இன்று சமூக நீதிக்கும் மனித வளத்திற்கும் மனித உரிமைப் பாதுகாப்பிற்கும் உலகிற்கு வழிகாட்டும் மாநிலமாக உருவாகிவிட்டது. ஆனால் நம் தமிழ்நாட்டில் அறுபது ஆண்டு ஜனநாயக ஆட்சியில் நம் அரசியல் சாசன ஷரத்துகளைச் சமுதாயப் பழக்கவழக்கங்களுக்குக் காவு கொடுத்து பார்க்கத்தான் முடிந்ததே தவிர, அரசியல் சாசனத்தைப் பாதுகாக்க முடியவில்லை. இதுதான் இந்த நான்கு பஞ்சாயத்துகளிலும் அண்மைக்காலம் வரை நடைபெற்றது. அரசியல் கட்சிகளோ, குறிப்பாகத் தமிழகத்தை ஆளும் கட்சிகள், பிரதான எதிர்க்கட்சிகள் இந்தப் பிரச்சினையைச் சமூகநீதி என்ற அடிப்படையில் அணுகினால், தென்மாவட்டங்களில் ஜாதி இந்துக்களின் வாக்குகளை இழக்க நேரிடும் என்ற போலிக் காரணத்தைப் பின்னணியில் வைத்து வாளாவிருந்தன. “”இந்தப் பஞ்சாயத்துகள் எல்லாம் நாட்டில்தான் இருக்கின்றனவா அல்லது காட்டில் இருக்கின்றனவா? இந்தப் பஞ்சாயத்துகளில் நடப்பதற்கு என்ன பெயர்? இவை நாட்டிற்குள் ஒரு காடுபோல் அல்லது ஒரு தீவுபோல் இருந்து வந்துள்ளனவே” என்றுதான் அனைவரும் கேட்டவண்ணம் இருந்தனர். ஆனால் நம் அரசாங்கமோ, இது அரசு இயந்திரத்திற்கு அரசியல் ஆட்சிக் கட்டமைப்பிற்கு விடப்பட்ட ஒரு சவால் என்று கருதவில்லை.
இந்தப் பஞ்சாயத்துகளில் தேர்தல் வரும்போதெல்லாம், அந்தத் தலைவர் பதவியைத்தான் குறி வைத்து அரசு இயந்திரமும் சரி, அரசியல் கட்சிகளும் சரி செயல்பட்டனவே அன்றி ஒட்டுமொத்தப் பஞ்சாயத்தை – அதாவது தலைவர், வார்டு உறுப்பினர் அனைவரும் சேர்ந்த ஓர் அமைப்பாகத் தேர்தல் மூலம் உருவாக்கிட வேண்டும் என்று யாரும் முயலவில்லை. இதுதான் இவ்வளவு நாள் தோல்விக்கும் காரணமாக இருந்தது. தேர்தல் நடத்த முடியவில்லை அல்லது அப்படி நடந்தாலும் தலைவரால் நீடித்துப் பதவியில் இருக்க முடியவில்லை. இந்த நாடகங்கள் நான்கு பஞ்சாயத்துகளில்தான் நடந்தன என்றாலும் இதன் விளைவுகள் எவ்வளவு கொடியதாக இருக்கும் என்பதை எண்ணிப் பார்த்து தமிழகத்தில் உள்ள பெரிய அரசியல் கட்சிகள் வலுவாகச் செயல்படவில்லை. இடதுசாரிக் கட்சிகளும் ஒரு சில தலித் இயக்கங்களும் தன்னார்வத் தொண்டு நிறுவனங்களும் சில பத்திரிகைகளும்தான் இந்தப் பிரச்சினையைத் தாங்கித் தூக்கிப் பிடித்துக் கொண்டிருந்தனவே தவிர, மற்ற அரசியல் கட்சிகள் பெரிய அளவில் அக்கறை காட்டவில்லை. அரசு இயந்திரமும் எப்படியாவது தேர்தலை நடத்தி முடித்தாக வேண்டும் என்ற கடப்பாட்டுடன் செயல்படுவதற்குப் பதிலாக மேலதிகாரிக்கு தாங்கள் “கடமைகளைச் செய்து கொண்டுதான் உள்ளோம், இருந்தும் முடியவில்லை’ என அறிக்கை சமர்ப்பிப்பதில்தான் கவனமாக இருந்தது. மாறாக, “கண்டேன் சீதையை’ என்று ராமனிடம் அனுமன் கூறியதுபோல் “முடித்தேன் வேலையை’ எனச் சொல்லும் ஓர் அமைப்பாகச் செயல்படவில்லை என்பதை தற்பொழுது நடந்து முடிந்துள்ள தேர்தலுக்குப் பிறகு புரிந்து கொள்ள முடிகிறது.
ஆனால் இந்த முறை பல்முனைத் தாக்குதலை, மாநில அரசும் மாவட்ட நிர்வாகமும் பத்திரிகைகளும் ஒரு சில இடதுசாரி மற்றும் தலித் கட்சிகளும் கூட்டாக நடத்தி வெற்றி பெற்றுள்ளன. கொள்கை முடிவைச் சரியாக எடுத்து உறுதியாக மாநில அரசும் நின்றதால், தமிழக அரசு ஒரு செய்தியை அந்த ஜாதியத் தலைவர்களுக்குத் தெளிவாக அறிவித்துவிட்டது. “நாம் என்னதான் செய்தாலும் மாநில அரசு அசைந்து கொடுக்காது. அது மட்டுமல்ல, எத்தனை முறை நாம் இப்படித் தடுத்தாலும் அதனால் நம் பஞ்சாயத்து பொதுத் தொகுதியாக மாறப்போவது இல்லை’ என்ற செய்தியினைத் தெளிவாகத் தந்துவிட்டது. அடுத்து மாவட்ட நிர்வாகத்திற்கு முழுச்சுதந்திரம் தந்து செயல்பட வைத்தது. மாவட்ட நிர்வாகம் இந்தத் தேர்தலைச் சந்திக்கத் தன்னைத் தயார்படுத்திக் கொண்டு, களத்தில் உள்ள அமைப்புகளுடன் கூட்டணி அமைத்துக் கொண்டது. அடுத்த நிலையில் இந்த முறை களத்திற்கும் – அதாவது பஞ்சாயத்தில் நடக்கும் நிகழ்வுகளை, நிமிடத்திற்கு நிமிடம் கவனித்து, முடிவுகளை அவ்வப்போது எடுத்து அவற்றை நிறைவேற்றும்போது ஏற்படும் விளைவுகளை உடனுக்குடன் மாவட்ட நிர்வாகத்திற்குக் கிடைக்கும் வகையில் ஓர் உயிரோட்ட செய்தித் தொடர்பினை ஏற்படுத்தி அனைவரும் முழு மூச்சுடன் செயல்பட்டுள்ளனர். ஏனென்றால் களத்தில் மணித்துளியில் கருத்துப் பரிமாறும் அளவிற்கு – களத்தில் இறங்கி வேலை செய்த அமைப்புகள், அதிகாரிகள், அனைவருடனும் மாவட்ட நிர்வாகம் தொடர்பு வைத்துக்கொண்டு கணநேரத்தில் முடிவுகளை எடுத்துக் கொண்டேயிருந்தது. இந்தப் பஞ்சாயத்துகளில் ஜாதி இந்துக்களின் தலைவர்கள் வகுக்கும் அனைத்திற்கும் பதில் திட்டங்களை வைத்து ஒட்டுமொத்தப் பஞ்சாயத்திற்கும் தேர்தலை நடத்த முனைந்ததால் மிகப்பெரிய வெற்றியினை மாவட்ட நிர்வாகம் பெற்றுவிட்டது. இதில் மிக முக்கியமாக மாவட்ட ஆட்சித்தலைவரின் பார்வையும் பிரச்சினைகளின் ஆழ அகலங்களைப் பற்றிய புரிதலும் சிக்கல்களைத் தீர்ப்பதற்கு உதவியாக இருந்துள்ளன. மாவட்ட ஆட்சித்தலைவர்கள் இந்தப் பிரச்சினையைத் தீர்ப்பதற்கு எந்தக் கடுமையான நடவடிக்கையையும் எடுத்து மாநில அரசிற்கு எந்த விதத்திலும் தர்மசங்கடத்தை உருவாக்கவில்லை. ஆனால் மாவட்ட ஆட்சித்தலைவர்கள் தமக்கிருந்த அதிகாரங்களை வைத்தே சாதுரியமாக, தெளிவான திட்டத்தை உருவாக்கி வெற்றி கண்டிருக்கிறார்கள். அவர்கள் நிச்சயமாகப் பாராட்டுக்குரியவர்கள். இந்தத் தேர்தலுக்குப் பெரிதும் உதவிய காவல்துறை மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர் அனைவரும் பாராட்டுக்குரியோராவர்.
மாவட்ட நிர்வாகத்திற்கு ஒரு சரியான தலைமை கிடைக்கும்போது, அது தன்னகத்தே உள்ள சக்தியை எப்படிப் பயன்படுத்தி வெற்றி பெற்றுத் தருகிறது என்பதற்கு இது ஒரு மிகச் சிறந்த சான்றாகும். மாநில அரசு, அரசுத்துறைச் செயலர், மாவட்ட நிர்வாகம், அடிநிலை அரசு அலுவலர்கள், மக்களுடன் பணியாற்றும் அரசியல் அமைப்புகள் அனைத்தும் ஒன்று சேர்ந்து இந்த நான்கு பஞ்சாயத்துகளிலும் தேர்தலை நடத்தித் தலைவர்களை மட்டும் தேர்ந்தெடுக்காமல் பஞ்சாயத்து அமைப்பையே உருவாக்கி விட்டனர். இதுவரை பஞ்சாயத்துத் தலைவரைத் தேர்ந்தெடுக்கத்தான் நம் அரசு இயந்திரமும் தேர்தல் ஆணையமும் பிரயத்தனப்பட்டுள்ளன. ஆனால் இந்த முறை ஒட்டுமொத்தப் பஞ்சாயத்துக்கான அனைத்துப் பதவிகளுக்கும் தேர்தலை முடித்துவிட்டது மாவட்ட நிர்வாகம். இனிமேல் இந்தப் பஞ்சாயத்துகளில் தலைவர் ராஜிநாமா செய்தாலும் உதவித்தலைவரை வைத்துப் பஞ்சாயத்தை நடத்தி விடலாம். இந்தப் பஞ்சாயத்துகளைப் பின்பற்றி செல்லம்பட்டி ஒன்றியத்தில் இன்னொரு கிராமப் பஞ்சாயத்துத் தேர்தலை முறியடிக்க எடுத்த முடிவையும் மாவட்ட நிர்வாகமும் அமைப்புகளும் தகர்த்திருக்கின்றன. இவர்களின் செயல்களால் நம் அவமானம் நீங்கியது. சென்னையில் நடந்த மாநகராட்சித் தேர்தலில் நமக்கு ஓர் அவமானம் நிகழ்ந்தது. ஆனால் இந்த நான்கு பஞ்சாயத்துகளிலும் தேர்தல் நடந்து பஞ்சாயத்துகள் உருவாக்கப்பட்டதன் மூலம் நமக்கு ஏற்பட்ட இந்த அவமானம் நீங்கியது. இதற்காகப் பாடுபட்ட அனைவருக்கும் நாம் உண்மையிலேயே நன்றி கூறக் கடமைப்பட்டவர்கள். ஏனென்றால் அவர்கள்தான் நமக்கு ஏற்பட்ட அவமானத்தை நீக்கியவர்கள்.
Posted in civic elections, Leader, Local Polls, Religion/Politics, Tamil Nadu | Leave a Comment »
Posted by Snapjudge மேல் நவம்பர் 14, 2006
கட்சிகளுக்கு இடையிலான அதிகாரப் போட்டியால் அரசியல் உரிமை பறிக்கப்பட்ட தலித்துகள்?
வீர. ஜீவா பிரபாகரன்
மதுரை,நவ.15: தேனி மாவட்டத்தில் அரசியல் கட்சிகளுக்கு இடையிலான அதிகாரப் போட்டியால் தலித்துகளின் அரசியல் உரிமை பறிக்கப்பட்டுள்ளது.
- மாவட்ட ஊராட்சித் தலைவர் பதவிக்கும்,
- ஆண்டிபட்டி ஊராட்சி ஒன்றியத் தலைவர் பதவிக்கும் தலித்துகள் வரமுடியாத நிலை அரசியல் கட்சிகளால் உருவாக்கப்பட்டுள்ளது.
ஜனநாயகப் பாதைக்குத் திரும்பிய கீரிப்பட்டி, பாப்பாபட்டி, நாட்டார்மங்கலம், கொட்டக்காச்சியேந்தல் கிராமத்தினர் சமத்துவத் திருவிழா காண்பது மகிழ்ச்சி அளிக்கிறது. அதே நேரத்தில், தேனி மாவட்டத்தில் உள்ள அரசியல் நிலை வேதனை அளிக்கிறது என்கிறனர் சமூக ஆர்வலர்கள்.
ஊராட்சித் தலைவர் பதவி தலித்துக்கு ஒதுக்கப்பட்டதால் கீரிப்பட்டி, பாப்பாபட்டி உள்ளிட்ட கிராமங்களில் தேர்தல் நடைமுறையை கேலிக்கூத்தாக்கும் நிலை 10 ஆண்டுகள் தொடர்ந்தது.
அரசியல் கட்சிகள், அமைச்சர்கள், மக்களவை உறுப்பினர்கள், சட்டப்பேரவை உறுப்பினர்கள், அமைதிக் குழுவினர், நீதிமன்ற வழிகாட்டுதல் போன்ற முயற்சிகள் எல்லாம் அசைந்து கொடுக்காமல் இருந்த இந்த 4 கிராம மக்கள், தற்போது ஜனநாயக நடைமுறைக்குத் திரும்பி தலித்துகளின் அரசியல் உரிமையை நிலைநாட்டியுள்ளனர்.
தற்போது, இந்தக் கிராமங்களில் மக்களிடையே நல்லிணக்க சூழ்நிலை காணப்படுகிறது. இதற்கு அரசு நிர்வாகம், அரசியல் கட்சிகள் ஒத்துழைப்புடன் மாவட்ட ஆட்சியர் த. உதயச்சந்திரனின் தனிப்பட்ட முயற்சியும் பிரதான காரணமாகும்.
தேனி மாவட்ட ஊராட்சித் தலைவர்: இந்த மகிழ்ச்சியைக் கொண்டாடும் நேரத்தில், தேனி மாவட்டத்தில் தலித்துகள் அரசியல் உரிமையைப் பெறமுடியாத நிலை உள்ளதாக, தலித் பிரதிநிதிகள் பலரும் தெரிவிக்கின்றனர்.
இம் மாவட்ட ஊராட்சித் தலைவர் பதவி தலித்துகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. மாவட்ட ஊராட்சிக்கு மொத்தம் 10 உறுப்பினர்கள் உள்ளனர். இதில்
- திமுக- 6,
- அதிமுக-3,
- மதிமுக-1. ஆனால்,
- ஆதிதிராவிடர்களுக்கு ஒதுக்கப்பட்ட இரண்டு வார்டுகளிலிருந்தும் அதிமுகவைச் சேர்ந்தவர்களே தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
திமுக அதிக இடங்களில் வெற்றி பெற்றும், மாவட்ட ஊராட்சித் தலைவருக்கு தலித் வேட்பாளர் கிடைக்காத நிலை. எனவே, மாவட்ட ஊராட்சித் தலைவர் தேர்தலில் திமுக இரு முறையும் பங்கேற்கவில்லை. கோரம் இல்லை என்று காரணம் காட்டி தேர்தல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இதனால் மாவட்ட ஊராட்சித் தலைவராக தலித் வகுப்பினர் வரமுடியாத நிலை உள்ளது.
ஆண்டிபட்டி ஒன்றியத் தலைவர்: இதே போன்று ஆண்டிபட்டி ஒன்றியத் தலைவர் பதவியும் தலித் பெண்ணுக்கு ஒதுக்கப்பட்டது. இந்த ஒன்றியத்தில் மொத்தம் 19 வார்டு உறுப்பினர்கள் உள்ளனர். இதில்
- திமுக-7,
- அதிமுக-6,
- மதிமுக-2,
- சுயேச்சைகள் 4. இந்த ஒன்றியத்தில் எக்கட்சிக்கும் பெரும்பான்மை இல்லை.
ஒன்றியத் தலைவர் பதவிக்கு கடந்த மாதம் 28-ம் தேதி நடைபெற்ற தேர்தலில் திமுக பங்கேற்கவில்லை. திங்கள்கிழமை (நவ.13) தேர்தல் நடத்த அதிகாரிகளே வரவில்லை. இந்த நிகழ்வுகள் தலித்துகளின் அரசியல் உரிமையை பறிப்பதாகவே உள்ளன.
சமூக அநீதி: அரசியல் கட்சிகள் தங்கள் கட்சியினர் பதவியைப் பெறவேண்டும், கூடுதல் இடங்களில் வெற்றி எண்ணிக்கை காட்ட வேண்டும் என்பதில் கவனம் செலுத்துகின்றன. தலித்துகளின் உரிமையில் அக்கறை காட்டவில்லை என தேனி மாவட்டத்தைச் சேர்ந்த தலித் பிரதிநிதிகள் தெரிவிக்கின்றனர்.
இந்நிலையைப் போக்க, வரும் காலங்களில் ஒன்றியத் தலைவர், மாவட்ட ஊராட்சித் தலைவரை மக்களே நேரடியாகத் தேர்வு செய்யும் நிலையை உருவாக்க வேண்டும் என்றும் வலியுறுத்துகின்றனர்.
Posted in ADMK, Civic Polls, Dalit, DMK, Elections, Independents, Indirect, Keeripatty, Kottaakachiyenthal, MDMK, Municipality, Naattarmanagalam, Oppression, Pappapatty, Tamil Nadu | Leave a Comment »
Posted by Snapjudge மேல் நவம்பர் 14, 2006
உள்ளாட்சித் தேர்தல் குறித்த அலசல்: ஒத்திவைக்கப்பட்ட கூட்டம் இன்று நடைபெறும்
சென்னை, நவ. 15: உள்ளாட்சித் தேர்தல் குறித்து அலசும் பொதுக் கூட்டம் சென்னையில் புதன்கிழமை நடைபெறுகிறது.
- ராஜாஜி பொது விவகார மையம்,
- மக்கள் உரிமை மன்றம்
ஆகியவை இணைந்து ஏற்பாடு செய்த இக்கூட்டம் சில வாரங்களுக்கு முன் சென்னை மியூசிக் அகாதெமியில் நடைபெறுவதாக இருந்தது.
- பத்திரிகையாளர் சோ,
- நாடாளுமன்றவாதி இரா.செழியன்,
- முன்னாள் போலீஸ் அதிகாரி வி.ஆர். லட்சுமிநாராயணன்,
- ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி பி.எஸ். ராகவன் ஆகியோர் பங்கேற்பதாக அறிவிக்கப்பட்டது.
இக்கூட்டம் திடீரென்று ரத்து செய்யப்பட்டது. போலீசார் அனுமதி தரவில்லை என்று சில தரப்பினர் கூறினர்.
ஆனால், போலீஸ் அனுமதி மறுக்கவில்லை என்றும் அமைப்பாளர்களே கூட்டத்தை ரத்து செய்துவிட்டனர் என்றும் காவல் துறை மறுத்தது. எனினும், கூட்டம் நடத்த அனுமதி கோரி, மீண்டும் விண்ணப்பித்தால் அனுமதி அளிக்கப்படும் என்றும் காவல் துறை அறிவித்தது.
தற்போது அக்கூட்டம் மயிலாப்பூர் கிழக்கு மாட வீதியில் பாரதீய வித்யா பவன் அரங்கில் புதன்கிழமை மாலை 6 மணியளவில் நடைபெறுகிறது.
இக்கூட்டத்தில் இரா.செழியன், பி.எஸ். ராகவன், சத்தியமூர்த்தி அறக்கட்டளைத் தலைமைக் காப்பாளர் லட்சுமி கிருஷ்ணமூர்த்தி, பத்திரிகையாளர் மாலன் ஆகியோர் பேசுகிறார்கள்.
Posted in Ban, Bharatiya Vidya Bhawan, Cho S Ramasamy, Civic Polls, Era Sezhiyan, Fear, Iraa Sezhiyan, Lakshmi Krishnamurthy, Malan, Meeting, Police Order, PS Raghavan | Leave a Comment »
Posted by Snapjudge மேல் நவம்பர் 14, 2006
“பெரியார்’ திரைப்பட விவகாரம்: இளையராஜாவுக்கு பகிரங்க வருத்தம் தெரிவிக்க த.மு.எ.ச. முடிவு
திருநெல்வேலி, நவ. 15: “பெரியார்’ திரைப்படத்திற்கு இசை அமைக்க மறுத்த இளையராஜாவுக்கு பகிரங்கமாக வருத்தம் தெரிவிப்பது என தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம் முடிவு செய்துள்ளதாக, அதன் பொதுச் செயலர் ச. தமிழ்ச்செல்வன் தெரிவித்துள்ளார்
இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை:
மதுரையில் நடைபெற்ற தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் செயற்குழுக் கூட்டத்தில் முக்கியமான சில முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன.
இசை அமைப்பளர் இளையராஜா, “பெரியார்’ திரைப்படத்துக்கு இசை அமைக்க மறுத்து கோபமாக பேசிய வார்த்தைகள் முற்போக்கு எண்ணம் கொண்ட அத்தனை தமிழ் மக்களின் நெஞ்சங்களிலும் பெருத்த வேதனையை உண்டாக்கியுள்ளது.
அவர் ஆத்திகராக இருப்பதும், எந்த ஒரு படத்துக்கும் இசை அமைக்க மறுப்பதும் அவரது ஜனநாயக உரிமை. ஆனால், ஆத்திகராக இருப்பதால், “பெரியார்’ படத்துக்கு இசை அமைக்க மாட்டேன் என கூறியிருப்பது பல கேள்விகளை எழுப்புகிறது.
மேலும், அவரது கருத்துக்கு ஆதரவாக மதவாத சக்திகள் குரல் கொடுப்பது தமிழ்ப் பண்பாட்டுச் சூழலில் மிகுந்த கவலை அளிக்கிறது.
எனவே, நல்லெண்ணத்தின் அடிப்படையில் எங்களது வருத்தத்தை பகிரங்கமாக இளையராஜாவுக்கு தெரிவிக்க முடிவு செய்துள்ளோம். அதை அவர் புரிந்து கொண்டு மக்களின் பக்கம் நிற்க வேண்டும்.
நடிகை ராதிகாவுக்கு கண்டனம்: தமிழக மக்களின் மனங்களில் மிகச் சிறந்த குணச்சித்திர நடிகையாக இடம் பெற்றிருக்கும் திரைப்படக் கலைஞர் ராதிகா, கோக கோலா குளிர்பான விளம்பரம் ஒன்றில் நடித்த காட்சிகள் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகி வருகின்றன.
எந்த நிறுவனத்தின் விளம்பரத்திலும் நடிப்பது அவரது தனிப்பட்ட உரிமை. கோக கோலாவுக்கு எதிராக நாடு முழுவதும் மக்கள் போராடிக் கொண்டிருக்கும் வேளையிலும், அதைக் குடிக்கச் சொல்லி ஒரு விளம்பரத்தில் நடிப்பது கூட அவரது சுதந்திரம்தான். ஆனால், அறிவியல் பூர்வமாக அந்த குளிர்பானத்தை குடிப்பது ஆபத்தில்லை என்று சொல்ல ஒரு விஞ்ஞானிக்குத்தான் உரிமை உண்டு. ராதிகா ஒரு விஞ்ஞானியைப் போல அந்த நிறுவனத்திற்கு ஆதரவாகப் பேசி இருப்பது கண்டனத்திற்குரியது.
எனவே, ராதிகா அவ்வாறு நடித்திருப்பதைக் கண்டித்தும், அந்த விளம்பரத்தை திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தியும், அவர் வீட்டுக்கு தமிழகம் முழுவதுமிருந்து ஆயிரக்கணக்கான அஞ்சல் அட்டைகளை அனுப்ப முடிவு செய்துள்ளோம்.
இலங்கைத் தமிழர் துயரம்: இலங்கையில் அப்பாவித் தமிழர்கள் மீது குண்டு மழை பொழியும் அந்நாட்டு ராணுவத்தின் நடவடிக்கைகள் நிறுத்தப்பட வேண்டும். தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் மாவட்டக் குழுவினர், அந்தந்த மாவட்டங்களில் உள்ள இலங்கை அகதிகள் முகாமுக்குச் சென்று அவர்களின் குறைகளை கேட்டறிந்து அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
சிறந்த திரைப்படம்: கடந்த ஆண்டு வெளியான தமிழ் திரைப்படங்களில் சிறந்த படமாக இயக்குநர் சேரன் இயக்கிய “தவமாய்த் தவமிருந்து’ செயற்குழுவால் தேர்வு செய்யப்பட்டுள்ளது. சென்னையில் டிசம்பரில் நடைபெறும் விழாவில், அதற்கான பரிசு வழங்கப்படும் என்றார் தமிழ்ச்செல்வன்.
Posted in Advertisement, BJP, Coke, cola, Eezham, EVR, Ila Ganesan, Ilaiyaraja, Isainjaani, music, Periyar, Politics, Radhika, Religion, Religion/Politics, Sa Thamizhselvan, Tamil, Tamil Cinema, Tamil Movies, Tamil Nadu Murpokku Ezhuthalargal Sangam | Leave a Comment »
Posted by Snapjudge மேல் நவம்பர் 14, 2006
இராக்கில் அமைச்சு அதிகாரிகள் ஒட்டுமொத்தமாகக் கடத்தப்பட்டனர்
இராக்கின் தலைநகர் பாக்தாதின் மையப் பகுதியில் உள்ள அரசாங்க அமைச்சுக் கட்டிடத்தில் இருந்து பெருமளவிலானோரை ஆயுதபாணிகள் கடத்திச் சென்றுள்ளனர்.
கொமாண்டொக்களுக்கான சீருடையில், பாதுகாப்புப் படையினர் போன்று, வாகனத் தொடரணி ஒன்றில் வந்த ஆயுதபாணிகள், உயர் கல்வி அமைச்சுக்கு வெளியே வீதியை இரு புறமும் வழிமறித்துள்ளனர்.
கட்டிடத்துக்கு உள்ளே நுழைந்த ஆயுதபாணிகள் அங்கிருந்த பெண்களை ஆண்களிடம் இருந்து தனியாகப் பிரித்து, பெண்களை அறை ஒன்றினுள் அடைத்து விட்டு, ஆண்களை அங்கிருந்து அழைத்துச் சென்றுள்ளனர்.
பொலிஸ் மற்றும் நேரில் கண்டவர்களின் தகவல்களின்படி, 40 முதல் 100 பேர்வரை கடத்திச் செல்லப்பட்டுள்ளதாக ஒரு இராக்கிய கல்வி அமைச்சர் தெரிவித்துள்ளார்.
ஆட்கடத்தல்கள் என்பது இரக்கில் வழமையாகிப் போய்விட்ட போதிலும், அங்கு அமெரிக்கா தலைமையிலான ஆக்கிரமிப்புக்குப் பின்னர் நடந்த மிகப் பெரிய கடத்தல் இதுவே என்று பாக்தாதில் உள்ள ஒரு பிபிசி செய்தியாளர் கூறுகிறார்.
அதேவேளை பாக்தாத் நகரின் சன நெருக்கடி மிக்க ஒரு சந்தைப் பகுதியில் குண்டு ஒன்று வெடித்துள்ளது. இந்த குண்டு வெடிப்பில் 10 பேர் கொல்லப்பட்டுள்ளதாகவும், 25 பேர் காயமடைந்துள்ளதாகவும், இராக்கிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Posted in Al Quaeda, Al quaida, al-Qaeda, Al-Queda, America, Baghdad, Iraq, Kidnap, oil, Osama, Protest, Security, Tamil, USA, War | 1 Comment »
Posted by Snapjudge மேல் நவம்பர் 14, 2006
லண்டன் டைரி: மூச்சுவிட மறந்த விஐபிகளின் விலாசம்!
இரா. முருகன்
வெஸ்ட்மின்ஸ்டர் பாதாள ரயில் நிலையத்துக்குள் இருந்து ஞாயிற்றுக்கிழமை மதியம் என்றாலும் ஒரு பெரிய அலையாக எல்லாக் கிரகங்களிலிருந்தும் புறப்பட்டு வந்த உயிரினங்கள் வெளியேறிக் கொண்டிருக்கின்றன. மற்றொரு கும்பல் வெளியிலிருந்து உள்ளே இறங்கிக் கொண்டிருக்கிறது. இப்போதைக்கு நான் முதல் கூட்டத்தில்.
கழிவறைக்குப் போகிற பாதையில் தரையில் துண்டு விரித்து வைத்து ஓர் இளைஞர் அற்புதமாக வயலினில் மேற்கத்திய இசை வாசித்துக்கொண்டிருக்கிறார். அவருக்குப் பின்னால் சுவரில் “இங்கே பஸ்கிங்க் அனுமதிக்கப்பட்டுள்ளது‘ என்று எழுதியிருப்பது கண்ணில் படுகிறது. ரயில் நிலையத்தில் இப்படி வாத்தியம் வாசித்து துண்டு விரித்துக் காசு சம்பாதிக்க (இதற்குப் பெயர்தான் “பஸ்கிங்க்’) லண்டன் மாநகராட்சி ஏற்படுத்திய தடை சமீபத்தில் நீங்கியதால், ரயில்வே ஸ்டேஷன்களில் அங்கங்கே இசைமழை. துண்டு விரிப்பில் காசு போட்டுவிட்டு “”என்ன வாசிக்கிறீங்க?” என்கிறேன். ரிச்சர்ட் வாக்னர் எழுதிய இசை என்று சொல்லிவிட்டு அவர் தொடர்கிறார். அடுத்து இடத்தைப் பிடிக்கத் தயாராக ஓர் ஆப்பிரிக்கக் கூட்டம் முரசுகளோடு நிற்கிறது.
ரயில் நிலையக் கழிவறையில் நுழைய ஐம்பது பென்ஸ் கட்டணம். ஒன் பாத்ரூம் போக நாற்பத்தைந்து ரூபாயா? “”பக்கத்திலே செடிகொடி இருக்காமலா போயிடும்?” தோளைக் குலுக்கிக் கொண்டு இரண்டு அமெரிக்க இளைஞர்கள் வெளிநடப்புச் செய்கிறார்கள். உள்ளே காசைக் கொடுத்துவிட்டுக் கனவான்கள் பொறுமையாக வரிசையில் காத்திருக்கிறார்கள். “”குப்தாஜி, இஸ் மே ஸரா பானி…” அடைத்த கதவுக்குப் பின்னால் இருந்து யாரோ காலி பிளாஸ்டிக் மினரல் வாட்டர் பாட்டிலை வெளியே நீட்ட, வெளியே நிற்கும் குப்தாஜி காகிதத்தை உபயோகிக்கச் சொல்லி இந்தியில் மன்றாடுகிறார். உள்ளே இருந்து இன்னும் அதிகாரமும் அவசரமுமாக குப்தாஜி மிரட்டப்பட, காலிபாட்டிலோடு தண்ணீர் பிடிக்க ஓடுகிறார் அவர். இனிமேல் இந்த பிராண்ட் மினரல் வாட்டர் வாங்கப் போவதில்லை என்று தீர்மானித்தபடி ஸ்டேஷனுக்கு வெளியே வருகிறேன்.
பாதாள ரயில் பாதையின் இருட்டைப் பார்த்துப் பழகிய கண்ணுக்கு, ஸ்டேஷனுக்கு வெளியே கண்ணைக் குத்தும் காலை வெயில் இதமாக இருக்கிறது. இங்கிலாந்தின் பரபரப்பான சரித்திரம் தொடர்ந்து நிகழ்கிற பெரிய வெட்டவெளி மேடையாக லண்டன் வெஸ்ட்மின்ஸ்டர் தேவாலயத்தின் வாசலில் நூற்றுச் சொச்சம் வயதானவர்கள் பெஞ்சில் உட்கார்ந்து ஒரு கடமையை நிறைவேற்றுகிறது போல் நிதானமாகச் சாக்லெட் க்ரீம் வடியும் ஐஸ்கிரீம் சாப்பிட்டுக்கொண்டிருக்கிறார்கள். கொஞ்சம் பின்னால், வெஸ்ட்மின்ஸ்டர் கல்லறைகள். மூச்சுவிட மறந்துபோன வி.ஐ.பிகளால் அந்த இடம் நிறைந்து கிடக்கிறது. பெரிய சைஸ் சதுரங்கப் பலகைகளிலிருந்து வாரியெடுத்துக் கிடத்திப் படுக்க வைத்தது மாதிரி ராஜா, ராணி, மந்திரி, மதகுரு என்று ஒரு நட்சத்திரக் கும்பலே அங்கே உண்டு. கூடவே புகழ்பெற்ற எழுத்தாளர்கள், கவிஞர்கள், சினிமா, நாடக நடிகர்கள், அரசியல்வாதிகள். இன்னும் நிறையப் பிரபலங்களை இங்கே புதைக்க இங்கிலாந்து மக்கள் தயாராக இருப்பதாகத் தெரிகிறது. ஆனால், உயிரோடு இருக்கிறவர்களைப் புதைக்கச் சட்டத்தில் இடமில்லை என்பதுதான் சின்னச் சிக்கல்.
வெஸ்ட்மின்ஸ்டர் அரண்மனை வாசல். அப்படிச் சொன்னால் ஆட்டோக்காரருக்கு வழி தெரியாது. நாடாளுமன்றம் என்று சொன்னால் சுலபமாகப் புரியும். (குறுக்கு வெட்டாக ஒரு தகவல் -இங்கிலாந்தில் ஆட்டோக்கள் புதிதாக அறிமுகமாகியிருக்கின்றன. நம்ம ஊர்த் தயாரிப்புதான். இன்னும் இவை லண்டனுக்கு வராவிட்டாலும் அறிமுகப்படுத்திய இடங்களில் சக்கைப்போடு போட, லண்டன் டாக்ஸி டிரைவர்கள் முஷ்டியை மடக்கிக்கொண்டு காத்திருக்கிறார்களாம்.)
நாடாளுமன்ற வாசல் முன்பாக நின்றபடி முறைத்துப் பார்க்கிற பழைய இங்கிலாந்து பிரதமர் வின்ஸ்டன் சர்ச்சில் சிலை, கன்சர்வேடிவ் கட்சி -லிபரல் கட்சி -திரும்ப கன்சர்வேடிவ் கட்சி என்று தாத்தா அந்தக் காலத்திலேயே ஜம்மென்று கட்சித் தாவல் நடத்தினாலும் இரண்டாவது உலக மகா யுத்தத்தின் போது சர்வ கட்சி அரசாங்கத்தின் பிரதமராக சக்கைப் போடு போட்டிருக்கிறார். அதிமுக்கியமான நூறு பிரிட்டீஷ்காரர்கள் யார் என்று பி.பி.சி டெலிவிஷன் இரண்டு வருடம் முன்னால் எடுத்த கணக்கெடுப்பில் எலிசபெத் மகாராணி, மறைந்த அவருடைய மருமகள் டயானா எல்லோரையும் பின்னால் தள்ளிவிட்டு முதல் இடத்தைப் பிடித்தவர் இவர். மகாத்மா காந்தியைப் பற்றி, “அந்த அரை நிர்வாணப் பக்கிரியைக் கையையும் காலையும் கட்டி, டில்லித் தெருவிலே போட்டு யானை மேலே வைஸ்ராய் துரையை உக்கார வச்சு ஓங்கி மிதிச்சுக் கொல்லச் சொல்லணும்’ என்று அழுகல் வாக்கு அருளிய இந்தச் சுருட்டுக்காரக் கிழவரைப் பார்க்கப் பிடிக்காமல் முகத்தைத் திருப்பிக்கொள்கிறேன்.
நாடாளுமன்றத்துக்கு முன்னால் சுற்றி வளைந்து போகிற சந்து பொந்துகளில் கால்போன போக்கில் நடக்கிறேன். பழைய நாடாளுமன்ற உறுப்பினர்கள் வசித்த இந்தத் தெருக்கள் இன்னும் பழைய கேஸ் விளக்கு அலங்காரத்தோடு காலத்தில் உறைந்துபோய் நிற்கின்றன. நாடாளுமன்றத்தில் ஏதாவது மசோதா மேல் ஓட்டெடுப்பு வந்தால் அங்கே முழங்கும் மணிச்சத்தம் இந்த முடுக்குச் சந்துகளில் சத்தமாகக் கேட்க, சாப்பிட உட்கார்ந்த, தூங்க ஆரம்பித்த, சும்மா வீட்டில் நாற்காலியில் உட்கார்ந்து காதைக் குடைந்து கொண்டிருக்கிற உறுப்பினர்கள் எல்லாரும் போட்டது போட்டபடி ஓடி வருவார்களாம்.
தற்போது நாட்டை ஆளும் தொழிற்கட்சியும் எதிர்க்கட்சியான கன்சர்வேட்டிவ் கட்சியும் எதிரும் புதிருமாகத் தலைமைச் செயலகம் அமைத்திருந்த தெரு நிசப்தமாக இருக்கிறது. ஐம்பது வருடங்களுக்கு முன்னால் இரண்டு கட்சி ஆபீசிலும் தொண்டர்கள் மாடியில் ஏறி நின்று கட்சித் தாவலுக்காக எதிர்க் கட்டட ஆசாமிகளைத் தூண்டுவார்கள். இதோ வந்தாச்சு என்று யாராவது நிஜமாகவே கட்டடம் விட்டுக் கட்டடம் தாவித் தவறி விழுந்து காலை உடைத்துக்கொண்டார்களோ என்னவோ தெரியாது. ரெண்டு கட்சிகளும் ஆபீசை வேறுவேறு இடங்களுக்கு மாற்றி விட்டன.
வெஸ்ட்மின்ஸ்டர் சுரங்கப் பாதையில் மறுபடி புகுந்து நான்காம் வாசல் வழியாகத் தேம்ஸ் நதி தீரத்துக்கு வருகிறேன். போன நூற்றாண்டில் கிட்டத்தட்ட லண்டன் கூவமாகத் கிடந்த தேம்ஸ், சுத்தமும் சுகாதாரமும் பளிங்கு போன்ற தண்ணீருமாக மணக்க ஆரம்பித்து வெகு காலம் ஆகிறதை நினைத்துப் பார்க்கிறேன்… கூவம் ஐயோ பாவம் என்று பக்கத்தில் பிக்பென் கடிகாரம் சத்தமாக மணியடித்து அனுதாபப்டுகிறது.
தேம்ஸ் படித்துறையில் பான்கேக் கடை பூட்டியிருக்கிறது. இந்தியக் களையோடு எந்த மூஞ்சியாவது தட்டுப்பட்டால், பான்கேக் வார்க்கிற இரும்புச் சட்டியில் கரண்டியால் டொண்டொண் என்று தட்டி, “தோசை சாப்பிட வாங்க’ என்று அன்போடு கூப்பிடுகிற பிரிட்டீஷ் பாட்டியம்மாளைக் காணோம். பான் கேக்குக்கும் தோசைக்கும் உள்ள ஒற்றுமையை யாரோ அவருக்குச் சொல்லிக் கொடுத்திருக்கிறார்கள். “” ஒரு மாதம் கடையை மூடிட்டு தென்னிந்தியாவிலேயே சுத்தலாம்னு இருக்கேன்” என்று போனமுறை சந்தித்தபோது சொன்னார். மெரினா மிளகாய் பஜ்ஜிக் கடைகள் பக்கம் புதுசாக ஸ்டால் போட்டு, “இங்கிலீஷ் தோசை’ விற்கிற, கத்தரிப்பூ கலர் கவுன் மாட்டிய ஒரு வெள்ளைக்காரப் பாட்டியை யாராவது பார்த்தால் தகவல் சொல்லவும்.
Posted in Churchill, Diary, Dinamani, Dosa, Era Murugan, Ira Murukan, Iraa Murugan, Kathir, London, VIP, Westminister | Leave a Comment »
Posted by Snapjudge மேல் நவம்பர் 14, 2006
பிள்ளைகளின் பார்வையில் அப்பா!
4 வயதில் – எங்கப்பா ரொம்பப் பெரிய ஆள்.
6 வயதில் – எங்கப்பாவுக்கு எல்லாம் தெரியும்.
10 வயதில் – அப்பா நல்லவர்; ஆனால் சிடுமூஞ்சி.
14 வயதில் – எப்பவும் எதிலும் குறைகண்டுபிடிக்கும் ஆசாமி.
16 வயதில் – கால நடப்பைப் புரிந்து கொள்ளாதவர்.
18 வயதில் – சரியான எடக்கு மடக்குப் பேர்வழி.
20 வயதில் – இவரோட பெரும் தொல்லை; எங்கம்மா எப்படி இந்த ஆளோட குப்பை கொட்றாங்க?
30 வயதில் – என் பையனைக் கட்டுப்படுத்தறதே கஷ்டமா இருக்கு. அவன் வயசில எங்கப்பான்னா எனக்குப் பயம்.
40 வயதில் – எங்கப்பா எங்களைக் கட்டுப்பாடா வளர்த்தார். நானும் அப்பிடித்தான் என் பிள்ளைகளை வளர்க்கப் போறேன்.
50 வயதில் – அப்பா எங்களையெல்லாம் வளர்க்க எவ்வளவு கஷ்டப்பட்டார்? எனக்கோ என் ஒரு பிள்ளையைக் கட்டுப்படுத்த முடியலை.
55 வயதில் – எங்கப்பா எவ்வளவு திட்டமிட்டு எங்களுக்காக எல்லாத்தையும் செய்திருக்கிறார். அவரை மாதிரி ஒருத்தர் இருக்க முடியாது.
60 வயதில் – எங்கப்பா ரொம்ப பெரிய ஆள்.
-“சத்துணவு ஊழியர்’ இதழிலிருந்து.
Posted in Comedy, Email, Father, Fatherhood, Fear, Fun, Jokes, Junk, Kid, Moral, Net, Papa, Sathunavu Oozhiyar, SMS, Tamil, Thought, Translation | Leave a Comment »
Posted by Snapjudge மேல் நவம்பர் 14, 2006
தமிழ் எழுத்துருவைத் தரப்படுத்த ஆனந்தகிருஷ்ணன் தலைமையில் பணிக்குழு
சென்னை, நவ. 14: தமிழ் எழுத்துருவைத் தரப்படுத்துவதற்காக ஒரு பணிக்குழுவைத் தமிழக அரசு அமைத்துள்ளது.
சென்னை வளர்ச்சி ஆராய்ச்சி நிறுவன (எம்.ஐ.டி.எஸ்.) தலைவர் மு.ஆனந்தகிருஷ்ணன் தலைமையிலான இக்குழுவின் துணைத் தலைவராக எஸ்.ஆர்.எம். பல்கலை. இயக்குநர் மு.பொன்னவைக்கோ உள்ளார்.
இதில் இடம்பெற்றுள்ள உறுப்பினர்கள் விவரம்:
- ம. இராஜேந்திரன் (இயக்குநர், தமிழ் வளர்ச்சித் துறை),
- என்.பாலகிருஷ்ணன் (இணை இயக்குநர், இந்திய அறிவியல் நிறுவனம், பெங்களூர்),
- ஏ.மோகன் (இணை இயக்குநர், தேசிய தகவல் தொழில்நுட்ப மையம், சென்னை),
- விஞ்ஞானி சுவரண் லதா (மத்திய தகவல்தொடர்புத் துறை),
- எஸ். ராமகிருஷ்ணன் (செயல் இயக்குநர், சி.டி.ஏ.சி., புனே),
- எம்.என். கூப்பர் (மாடுலர் இன்ஃபோடெக், புனே),
- பி.செல்லப்பன்,
- மா. ஆண்டோ பீட்டர் (இருவரும் கணித்தமிழ்ச் சங்கம்),
- வி.கிருஷ்ணமூர்த்தி (கிரெசன்ட் பொறியியல் கல்லூரி),
- என்.அன்பரசன் (ஆப்பிள்சாஃப்ட், பெங்களூர்).
இவர்களுடன், வெளிநாட்டில் வசிக்கும்
- மணி. மணிவண்ணன் (கலிபோர்னியா, யு.எஸ்.),
- கே.கல்யாணசுந்தரம் (சுவிட்சர்லாந்து),
- கலைமணி (சிங்கப்பூர்) ஆகிய வெளிநாட்டவரும் இடம்பெற்றுள்ளனர்.
கணிப்பொறியில் தமிழ் எழுத்துகளை இடம்பெறச் செய்ய “8 பிட்’ எனப்படும் இட அளவு ஒதுக்கப்பட்டுள்ளது. மாறாக, “16 பிட்’ இட அளவை ஒதுக்கவேண்டும் என்று தமிழ் அறிஞர்களும் விஞ்ஞானிகளும் கருதுகின்றனர். தற்போது ஆங்கில எழுத்துகள் அவ்வாறு உள்ளன. இந்த விரிவாக்க முறை தமிழுக்கும் செயல்படுத்தப்பட்டால், கணினியில் தமிழை வெகு விரைவாகப் பயன்படுத்த இயலும்.
இது தொடர்பான கருத்தரங்கு செப்டம்பர் மாதம் நடைபெற்றது. அண்ணா பலைகலைக்கழக முன்னாள் துணைவேந்தர் வா.செ.குழந்தைசாமி தலைமையில் நடைபெற்ற கருத்தரங்கை மத்திய அமைச்சர் தயாநிதி மாறன் தொடங்கி வைத்தார். அதன் தொடர்ச்சியாக இப்பணியை மேற்கொள்ள ஆனந்தகிருஷ்ணன் குழு அமைக்கப்பட்டது.
இத்தகவலை தமிழ் இணையப் பல்கலைக்கழக இயக்குநர் ப.அர. நக்கீரன் தெரிவித்தார்.
Posted in Ananthakrishnan, Applesoft, CDAC, Crescent Engg, IISc, K Kalyanasundaram, Kalaimani, Mani M Manivannan, MIDS, Modular Infotech, TAB, TAM, Tamil fonts, Tamil Software, TSCII, Tune, Type, Typing Help, Unicode | 1 Comment »
Posted by Snapjudge மேல் நவம்பர் 14, 2006
ஹோட்டல்கள், வீடுகளில் 86 குழந்தைத் தொழிலாளர்கள் மீட்பு
சென்னை, நவ. 14: கடந்த ஒரு மாதத்தில் சென்னையில் ஹோட்டல்கள், வீடுகளில் பணிபுரிந்த 86 குழந்தைத் தொழிலாளர்கள் மீட்கப்பட்டுள்ளனர்.
இவர்கள் அனைவரும் சென்னையிலும் அவர்களது சொந்த ஊர்களிலும் உள்ள பள்ளிகளில் சேர்க்கப்பட்டுள்ளனர். குழந்தைத் தொழிலாளர்களை வைத்திருந்தது தொடர்பாக 19 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
அக்டோபர் 10-ம் தேதி முதல் நாடு முழுவதும் ஹோட்டல்கள், வீடுகளில் 14 வயதுக்குட்பட்ட குழந்தைகளை பணியமர்த்தக் கூடாது என்ற சட்டத் திருத்தம் அமலுக்கு வந்தது.
தொழிலதிபர் வீட்டில்… கடந்த வியாழக்கிழமை பூக்கடை என்.எஸ்.சி. போஸ் சாலையில் தொழிலதிபர் வீட்டிலிருந்து பிருந்தா (13) என்ற சிறுமி மீட்கப்பட்டார். அவர் இந்திய குழந்தைகள் நலச் சங்கத்தின் மாணவிகள் விடுதியில் சேர்க்கப்பட்டார்.
தலைமைச் செயலகத்தில்… சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள உணவு விடுதியில் இரு சிறுவர்கள் கடந்த வெள்ளிக்கிழமை மீட்கப்பட்டுள்ளனர். இவர்கள் மீண்டும் பள்ளிகளில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
தொழிலாளர்துறை அமைச்சர் தா.மோ. அன்பரசன் தலைமையில் அதிகாரிகள் கடந்த வியாழக்கிழமை குழந்தைத் தொழிலாளர்கள் சோதனையில் ஈடுபட்டனர். இதில் 8 குழந்தைகள் மீட்கப்பட்டனர்.
Posted in Action, Child Labour Act, Children, Childrens Day, Enactment, Labor, Labour Welfare Minister, Law, Secretariat, TM Anbarasan, Work | Leave a Comment »
Posted by Snapjudge மேல் நவம்பர் 14, 2006
லல்லு பிரசாத் யாதவ் பொய்யர்-மோசடி பேர்வழி: சரத்யாதவ் குற்றச்சாட்டு
1990-ம் ஆண்டு வி.பி.சிங் பிரதமராக இருந்தார். பாரதீய ஜனதா வெளியில் இருந்து ஆதரவு கொடுத்தது. அப்போது அயோத்தியில் ராமர் கோவில் கட்டக் கோரி அத்வானி ரத யாத்திரை மேற்கொண்டார். உத்தரபிரதேசத்திற்குள் நுழையும் முன்பு அவரை பீகார் முதல்-மந்திரியாக இருந்த லல்லு பிரசாத் யாதவ் கைது செய்தார். இதனால் வி.பி.சிங் ஆட்சி கவிழ்ந்தது.
1990-ம் ஆண்டு அத்வானியை கைது செய்ய வேண்டாம் என்று வி.பி.சிங் மந்திரி சபையில் மத்திய மந்திரிகளாக இருந்த சரத்யாதவ், முப்தி முகமது சையது கூறியதாக ரெயில்வே மந்திரி லல்லு பிரசாத் யாதவ் சமீபத்தில் தெரிவித்தார். இது சர்ச்சையை ஏற்படுத்தியது.
லல்லுவின் இந்த கருத்துக்கு ஐக்கிய ஜனதாதள தலைவரான சரத்யாதவ் கண்டனம் தெரிவித்து உள்ளார். அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-லல்லு பிரசாத் யாதவ் பொய்யர் எப்போதுமே பொய் பேசுவதை வழக்கமாக கொண்டவர். மிகப்பெரிய பொய்யர் மட்டுமல்ல மோசடி பேர்வழியும் ஆவார். பீகாரை சேர்ந்த ஏழை மக்களை அவர் ஏமாற்றி உள்ளார். லல்லு பீகார் முதல்-மந்திரியானதே மோசடிதான்.
2005ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் ஏற்பட்ட தோல்விக்கு பிறகு லல்லுபிரசாத் யாதவ் தொடர்ந்து 3 தோல்விகளை சந்தித்து உள்ளார். சமீபத்தில் பாகல்பூர், நாலந்தா எம்.பி. தொகுதிகளில் தோற்றது. ராஷ்ட்ரீய ஜனதா தளம் பீகாரில் செல்வாக்கை இழந்து விட்டது.
என்னை பற்றி லல்லு பிரசாத் யாதவ் இட்டுக்கட்டி பொய்யான தகவல்களை கூறியுள்ளார். எனது உத்தர வின் பேரில்தான் அத்வானியை அவர் கைது செய்தார். இவ்வாறு சரத்யாதவ் கூறினார்.
Posted in Advani, Arrest, Bihar, BJP, Debacle, Elections, Lalloo, Lallu prasad yadav, Mufthi Mohammed Sayyed, Rashtriya Janatha Dal, Rath Yatra, RJD, Sharad Yadav, UP, Uttar Pradesh, VP Singh | Leave a Comment »
Posted by Snapjudge மேல் நவம்பர் 14, 2006
மின்சார ரெயில் பயணம்: ரூ. 2 ஆயிரம் சம்பளத்தில் கடையில் வேலை பார்த்தேன்: நடிகை பூமிகா பேட்டி
சினிமா உலகில் இன்று முன்னணி கதாநாயகிகளாக வலம் வரும் நடிகைகள் சிலரிடம் அவர்களின் பழைய வாழ்க்கைப் பற்றி கேட்டால், தாங்கள் ஒரு வசதியான வீட்டு பெண் என்பது போலவே காட்டிக் கொள்வார்கள். சினிமாவில் நடிக்க வராவிட்டாலும் இதே அளவு வசதியோடு வாழ்ந்திருக்க முடியும் என்பது போல் காட்டிக் கொள்வார்கள். நடிகர்கள் தங்களின் பழைய வாழ்க்கையை ஒளிவுமறைவு இல்லாமல் தெரிவிப்பது போல நடிகைகள் தெரிவிப்பதில்லை.
ஆனால் பத்ரி, ரோஜாக் கூட்டம், சில்லுனு ஒரு காதல் போன்ற தமிழ் படங்களில் நடித்தவரும், தென் இந்திய மொழிகளில் மட்டுமல்லாது இந்தி பட உலகிலும் முன்னணி நாயகியாக வலம் வருபவருமான பூமிகா இதிலிருந்து முற்றிலும் மாறுபட்டு இருக்கிறார்.
இன்று கோடிக்கணக்கில் சம்பாதிக்கும் அவர் ஒரு காலத்தில் மாதம் ரூ. 2 ஆயிரம் சம்பளத்தில் ஒரு கடையில் சேல்ஸ்கேர்ளாக வேலை பார்த்திருக்கிறார். இதுபற்றி அவர் கூறியதாவது:-
பணம் ஏராளமாக வருகிறது என்பதற்காக நான் தாராளமாக செலவு செய்வதில்லை. பணத்தின் அருமை எனக்கு நன்கு தெரியும். காரணம் என் பழைய வாழ்க்கை அப்படி. ஒரு நடுத்தர குடும்பத்தில் பிறந்தவள்நான். என் குடும் பத்தின் கஷ்டத்தில் பங்கெடுக்க வேண்டும் என்பதற்காக ஒரு கடையில் மாதம் ரூ. 2 ஆயிரம் சம்பளத்தில் சேல்ஸ் கேர்ளாக வேலை பார்த்தேன். அப்போது தினசரி மின்சார ரெயிலில் கூட்ட நெரிசலில் பயணம் செய்து சிரமப்பட்டிருக்கிறேன். வாழ்க்கை எப்போதும் ரோஜாபடுக்கையாகவே இருக்காது. யாருக்கும் எந்த நேரத்திலும் கஷ்டம் வரலாம் என்கிறார் பூமிகா.
முன்னணி கதாநாயகிகள் தாங்கள் சம்பாதிக்கும் பணத்தில் தங்க, வைர நகைகள், ஆடம்பர பொருட்கள் என்று லட்சக்கணக்கான ரூபாயில் பொருட்களை வாங்கிப் போடுவது வழக்கம். ஆனால் இவர் விரும்பி வாங்கும் பொருட்களின் பட்டியலில் புத்தகங்கள், டி.வி.டி.க்கள், மொபைல் ரீசார்ஜ் கார்டுகள் போன்றவைதான் இடம் பெறுகின்றன. பூமிகாவிடம் கிரெடிட் கார்டு கூட கிடையாதாம்.
Posted in Badri, Bhoomika Chawla, Boomika, Chillunnu oru kaathal, Credit card, Interview, Roja koottam, Salesgirl, Tamil Actress, Tamil Cinema, Tamil Movies, Telugu, Tollywood | Leave a Comment »