ஓசையில்லாத உலகத்துக்கு ஒரு விடியல்
சென்னை, நவ. 4: குழந்தைகளின் காது கேளாமையைப் போக்கி, அவர்களுக்கு பேச்சுத் திறனைக் கொடுக்கும் நவீன காக்ளியர் இம்பிளாண்ட் சிசிச்சையை 200 குழந்தைகளுக்குச் செய்து சாதனை படைத்துள்ளது சென்னை காது-மூக்கு-தொண்டை மருத்துவமனை.
வேலூரைச் சேர்ந்த ஒன்றரை வயதுக் குழந்தை மதன்ராஜுக்கு நவீன காக்ளியர் சிகிச்சை வெற்றிகரமாக செய்யப்பட்டது. இது இந்த மருத்துவமனையில் செய்யப்பட்ட 200-வது காக்ளியர் இம்பிளாணட் சிகிச்சை. இதற்கான விழா சென்னையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இதில் இந்த நவீன சிகிச்சை குறித்து மருத்துவமனையின் தலைவர் டாக்டர் மோகன் காமேஸ்வரன் கூறியதாவது:
இந்தியாவில் சுமார் 1 லட்சம் குழந்தைகள் காது கேட்கும் திறனை இழந்துள்ளனர். இந் நிலையில் காது கேளாத குழந்தைகளுக்கு நவீனத் தொழில்நுட்ப அடிப்படையில் காக்ளியர் இம்பிளாண்ட் சிகிச்சை சிறந்த வரப்பிரசாதமாக அமைந்துள்ளது.
இதன் மூலம் நூறு சதவீதம் காது கேட்கும் திறன் இல்லாமல் இருக்கும் குழந்தைகளுக்குக் கூட செவித் திறன் கிடைக்கிறது.
தொடர்ந்து பேச்சுப் பயிற்சி அளிக்கும் நிலையில் இக் குழந்தைகளால் இயல்பாக பேசவும் முடியும்.
அபிநயா என்ற பச்சிளம் குழந்தைக்குக் கூட இம் மருத்துவமனையில் 9-வது மாதத்திலேயே காக்ளியர் சிகிச்சை அளிக்கப்பட்டது. தற்போது இக் குழந்தைக்கு 2 வயது ஆகிறது. இக் குழந்தையின் கேட்கும் திறனும் மேம்பட்டு வருகிறது.
தெற்கு ஆசியாவிலேயே இச் சிகிச்சை அளிப்பதில், சென்னை காது மூக்கு தொண்டை மருத்துவமனை முன்னணியில் உள்ளது.
இந்த மருத்துவமனையில் முதன் முதலில் செய்யாறைச் சேர்ந்த துரைமுருகனுக்கு காக்ளியர் சிகிச்சை அளிக்கப்பட்டது.
கடந்த 24.1.2005-ல் சென்னையைச் சேர்ந்த சிதார்த் (3) என்ற குழந்தைக்கு 100-வது காக்ளியர் சிகிச்சை அளிக்கப்பட்டது. இதையடுத்து ஓராண்டு 9 மாதங்களுக்குப் பின் தற்போது வேலூரைச் சேர்ந்த மதன்ராஜூக்கு வெற்றிகரமாக காக்ளியர் சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. இது 200-வது காக்ளியர் சிகிச்சை.
திருமண தகவல் இணைய தளம்: காக்ளியர் சிகிச்சை செய்தவர்களை மண வாழ்வில் இணைக்க உதவும் தனி இணைய தளத்தையும் சென்னை காது மூக்கு தொண்டை நிறுவனம் விரைவில் அறிமுகப்படுத்தும் என்றார் டாக்டர் மோகன் காமேஸ்வரன்.
மருத்துவத்தின் மகத்துவம்: தெற்காசிய அளவில் புதிய சாதனையாக இம் மருத்துவமனையில் 200-வது காக்ளியர் சிகிச்சை நிறைவு விழா சென்னை தியாகராயநகர் கர்நாடக சங்கத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்த சிகிச்சை மூலம் பயனடைந்த 120 பேர் தங்களது குடும்பத்தினருடன் விழாவுக்கு வந்திருந்தனர்.
தங்களது புதுவாழ்வு மலரப் பெற்றதால் மகிழ்ச்சி பொங்க அவர்கள் இவ்விழாவில் அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டனர்.
சாஃப்ட்வேர் பொறியாளர்: இம் மருத்துவமனையில் காக்ளியர் சிகிச்சை செய்து காது கேட்கும் திறனைப் பெற்ற ஜனீஸ் (25) (ஐஐடியில் பட்டம் பெற்றவர்) தனது இளம் மனைவியுடன் விழாவில் பங்கேற்றார். முதன்முதலில் காது கேட்டதால் ஏற்பட்ட உற்சாகத்தையும், தற்போது பெங்களூரில் உள்ள ஐபிஎம் நிறுவனத்தில் சாஃப்ட்வேர் பொறியாளராகப் பணியாற்றுவதையும் மகிழ்ச்சியுடன் விவரித்தார் அவர்.