நேர்காணல்: ஆண்டுதோறும் ஆயிரம் இசை நிகழ்ச்சிகள் !
பா. ஜெகதீசன்

நல்லி குப்புசாமி செட்டியார்
‘நான் இசை மேதை அல்ல. ஆரம்பக் காலங்களில் பாடல்களின் ராகங்களைக் கூட எனக்குத் தெரியாது’ -இப்படித் தன்னடக்கத்துடன் சொல்பவர் யார் தெரியுமா?
ஆண்டுதோறும் சராசரியாக ஆயிரம் இசை நிகழ்ச்சிகளை நடத்தி வரும் இசைக் காவலர் தொழில் அதிபர் நல்லி குப்புசாமி செட்டியார்.
வான வில்லின் வண்ணங்களைப் போன்ற 7 சங்கீத சபாக்களின் தலைவராகவும், ஏராளமான சபாக்களில் முக்கிய பொறுப்புகளிலும் அவர் உள்ளார்.
மலர்களில் வாசம் மிக்கது மல்லி… பட்டுத் துணியில் சிறந்தது நல்லி… கலைகளைக் காக்கும் தொழில் அதிபர்களில் குறிப்பிடத் தக்கவர் நல்லி குப்புசாமி செட்டியார் என்றால் அது மிகையாகாது.
பட்டுச் சேலை வியாபாரத்தில் கொடி கட்டிப் பறக்கும் நல்லி குப்புசாமி செட்டியார், இயல், இசை, நாடகக் கலைகளைக் கட்டிக் காப்பதிலும் தன்னிகரற்ற மாமனிதராகத் திகழ்கிறார்.
விசுவரூப வியாபாரம்: சென்னை தியாகராய நகரில் பனகல் பூங்கா எதிரே 1928-ல் சிறிய கடையாக 200 சதுர அடியில் தொடங்கப்பட்டது நல்லி பட்டு நிறுவனம். தற்போது அந்த இடத்தில் 30 ஆயிரம் சதுர அடிப் பரப்பளவில் ஒரு தெருவில் இருந்து பக்கத்துத் தெரு வரையில் விரிந்து, பரந்து, விசுவரூபம் எடுத்து அது காட்சி தருகிறது.
ஆல மரத்தின் விழுதுகளைப் போல, இந்நிறுவனத்துக்கு உலகின் பல்வேறு பகுதிகளில் 17 கடைகள் உள்ளன. ஒரு காலத்தில் ஆண்டுக்கு இரண்டரை லட்ச ரூபாய் அளவுக்கு மட்டுமே தமது நிறுவனத்தில் நடைபெற்ற விற்பனையைப் படிப்படியாக சில நூறு கோடிகளுக்கு உயர்த்திக் காட்டி, உழைப்பின் சிகரத்தைத் தொட்டவர் நல்லி குப்புசாமி செட்டியார்.
பல்வேறு பதவிகளை வகித்தவர். ஏராளமான விருதுகளைப் பெற்றவர். அறப் பணிகளுக்கும், நலிந்தோருக்கும் போட்டி போட்டுக் கொண்டு உதவுபவர்.
தியாகராய நகரில் நல்லி சில்க்ஸில்
விறுவிறுப்பாக வியாபாரம் நடைபெற்றுக் கொண்டிருந்த நிலையிலும், எத்தகைய பரபரப்பும் இன்றி, சிரித்த முகத்துடன் அவர் அளித்த பேட்டி:
இசை ஆர்வம் துளிர்த்தது: கிருஷ்ண கான சபா 1954-ல் தியாகராய நகரில் எங்கள் கடைக்கு அருகே தான் இருந்தது. அப்போதெல்லாம் இரவு 7 மணியானால், இப்பகுதியே அமைதியாகி விடும். அந்த நேரத்தில் கடையின் முன் பகுதியில் நின்றால், கிருஷ்ண கான சபாவில் இருந்து சங்கீதம் காற்றினில் தவழ்ந்து வரும்.
என்ன ராகம் என்றே தெரியாது. இருந்தாலும் அந்த இசையை நான் விரும்பி ரசிப்பேன். அப்படி நான் உள்ளம் லயித்து கேட்ட இசை நிகழ்ச்சிகள்.தான் என் மனதில் இசை ஆர்வத்தை விதைத்தன. பின்னர் கிருஷ்ண கான சபாவில் துணைத் தலைவர் பதவியில் என்னை அமர்த்தினார்கள்.
1969-ல் மயிலாப்பூர் வரசித்தி விநாயகர் கோயில் கமிட்டியில் நான் இடம் பெற்றிருந்தேன். விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு கச்சேரி நடைபெற்றது. கச்சேரியை நாங்கள் பார்த்துக் கொண்டிருந்தோம். அப்போது எனது நண்பரின் 8 வயது பேத்தி பாடல்களின் ராகங்களைச் சரியாகச் சொல்லியதைக் கேட்டு வியப்பில் ஆழ்ந்தேன்.
குழந்தைகளைப் பார்த்து ஆச்சரியம்: 1980-ல் எனது மகளின் திருமணம் நடைபெற்றது. நாமகிரிப்பேட்டை கிருஷ்ணன் நாகஸ்வரம், வளையப்பட்டி தவில், எம்.எஸ்.சுப்புலட்சுமி இசை நிகழ்ச்சி போன்றவை திருமண விழாவில் இடம் பெற்றன.
இசை நிகழ்ச்சியில் இடம் பெற்ற பாடல்களின் ராகங்களை குழந்தைகள் எளிதாகக் கண்டுபிடிப்பதைப் பார்த்து ஆச்சரியப்பட்டேன்.
தொலைக்காட்சி நிலைய முன்னாள் இயக்குநர் ஏ. நடராஜனுடன் 1980-ல் பல்வேறு கச்சேரிகளுக்குப் போய் வந்தபோது, பாடல்களின் ராகங்களைக் கண்டுபிடிக்க முடியவில்லை என்று கூறினேன். உடனே அவர் திரைப்படப் பாடல்கள் சிலவற்றைக் குறிப்பிட்டு, அவற்றின் ராகங்களைக் கூறினார்.
ராகத்தை அறிய எளிய வழி: அக்காலத்தில் “திரைப்படங்களில் கர்நாடக இசை’ என்கிற நூலை கள்ளபிரான் என்பவர் வெளியிட்டார். திரைப்படப் பாடல்கள் பாடப்பட்டதை அடிப்படையாகக் கொண்டு ராகங்களைக் கண்டு பிடிக்கும் நூல் அது. அதைப் படித்து, ஓரளவுக்கு ராகங்களைத் தெரிந்து கொண்டேன்.
பின்னர், இசை நிகழ்ச்சிகளில் இடம் பெறும் பாடல்களின் ராகங்களைத் தொகுத்து, கச்சேரி கையேடு என்கிற நூலை வெளியிட்டோம். பாடல் -ராகம் -பாடலாசிரியர் என்கிற முறைப்படி அகர வரிசையில் விவரங்கள் பட்டியலிடப்பட்டுள்ளன.
231 பக்கங்களைக் கொண்ட இந்நூல் இசையைப் பயிலும் மாணவ -மாணவிகளுக்கு மட்டுமின்றி, இசையைத் தெரிந்து கொள்ள விரும்புபவர்களுக்கும் கூட பெரிதும் பயன்படும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.
ஒருமுறை உன்னிகிருஷ்ணன் தனது கச்சேரியில் டாக்டர் ராமநாதன் சொல்லிக் கொடுத்த அபூர்வமான ராகத்தில் பாடினார். அந்த ராகம் இந்த நூலில் இடம் பெறவில்லை. இதையடுத்து, இந்நூலில் புதிய ராகங்களையும் அவ்வப்போது சேர்த்து, மேம்படுத்தி வருகிறோம்.
அதற்குப் பிறகு, பல சபாக்களின் தலைவரானேன். ஏராளமான இசை விற்பன்னர்களோடு பழகக் கூடிய வாய்ப்புக் கிடைத்தது. குறிப்பாக, எம்.எஸ். சுப்புலட்சுமி -சதாசிவம் ஆகியோருடன் பழகியபோது இசையைப் பற்றித் தெரிந்து கொண்டேன்.
யார், எங்கே, எப்போது?: 40 ஆண்டுகளுக்கு முன்பு திருவல்லிக்கேணி பார்த்தசாரதி சுவாமி சபா, சங்கீத வித்வத் சபை (மியூஸிக் அகாதெமி), மயிலாப்பூர் தியாகராஜ வித்வத் சமாஜம், இந்தியன் ஃபைன் ஆர்ட்ஸ் சொûஸட்டி (பாரிமுனை அரண்மனைக்காரன் தெருவில் உள்ள கோகலே ஹால்), ஜெகந்நாத பக்த ஜன சபா (எழும்பூர்), பெரம்பூர் பக்த ஜன சபா ஆகியவை தான் இருந்தன.
எனவே, இசை விழா நடைபெறும் காலங்களில் எந்த சபாவில் எந்தத் தேதியில் யார் கச்சேரி செய்கின்றனர் என்பதை எளிதாக நினைவில் வைத்துக் கொள்ள முடிந்தது. ஆனால், கடந்த ஆண்டு நிலவரப்படி சென்னையில் 81 சபாக்கள் உள்ளன. ஒரே மாதத்தில் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
10 ஆண்டுகளுக்கு முன்பு எனது நண்பர் கண்ணன் (பேங்க் ஆஃப் பரோடாவில் பணியாற்றியவர்) எந்தெந்த சபாக்களில் எந்தெந்தத் தேதிகளில், யார் பாடுகின்றனர் என்கிற விவரங்களைத் தொகுத்து சிறிய நூலை வெளியிட்டார்.
உலகம் முழுவதும் இருந்து இசை விழாவில் பங்கேற்பதற்காகவும், இசை அமுதத்தைப் பருகவும் ஏராளமானவர்கள் சென்னைக்கு வருவது வழக்கம். அவர்கள் இத்தகைய நூலைப் பார்த்து, எங்கே செல்வது என எளிதாக முடிவு செய்ய இயலும்.
அத்தகைய இசை விழா வழிகாட்டி நூலை கண்ணனுடன் சேர்ந்து நாங்களும் தயாரித்து வெளியிட்டு வருகிறோம்.
தற்போது (1) கிருஷ்ண காண சபா -தியாகராய நகர், (2) பிரம்மா கான சபா -மயிலாப்பூர், (3) நுங்கம்பாக்கம் கல்சுரல் அகாதெமி, (4) திருவல்லிக்கேணி பார்த்தசாரதி சுவாமி சபா, (5) முத்ரா -தியாகராய நகர், (6) பைரவி கான சபா -மயிலாப்பூர், (7) மெலட்டூர் பாகவத மேளா சபா -தஞ்சை ஆகியவற்றில் தலைவராக உள்ளேன். மயிலாப்பூர் ஃபைன் ஆர்ட்ஸ் சபா துணைத் தலைவராக உள்ளேன்.
பத்மஸ்ரீ, பத்மபூஷண், பத்மவிபூஷண் விருதுகளைப் பெற்ற இசைக் கலைஞர்களை ஆண்டுதோறும் அழைத்து பாராட்டு விழா நடத்துகிறோம். அவ்விழாக்களிலும் பிரபலங்களின் கச்சேரிகள் இடம் பெறும்.
சென்னையில் நடைபெறும் இசை விழாக்களில் விருது பெற்ற அனைவரையும் அழைத்து, கச்சேரி நடத்தி கெüரவித்து வருகிறோம்.
இலக்கியத்தை ஊக்குவிக்க பாரதி கலைக்கூடத்தை ஆரம்பித்து, அதன் தலைவராக உள்ளேன். நூல்கள் வெளியீடு, எழுத்தாளர்களுக்குப் பாராட்டு, நூல்கள் மொழி பெயர்ப்பு போன்ற பணிகளை அந்த அமைப்பின் மூலம் செய்து வருகிறோம்.
பைரவி கான சபையின் மூலம் நாங்கள் நடத்திய ஜுகல் பந்தி நிகழ்ச்சிக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.
தற்போது புறநகர்ப் பகுதிகளிலும் இசை விழாக்கள் சிறப்பாக நடைபெறுகின்றன. அவற்றுக்கும் மக்களிடையே நல்ல வரவேற்பு உள்ளது.
நாடகத்துக்கும் ஊக்கம்: நாட்டியம், சங்கீதம் போன்றவற்றுக்கு வழங்குவதைப் போல நாடகத்தை ஊக்குவிக்க நாடகத்துக்கும் விருது அளிக்கிறோம்.
நாகசுரத்தை ஊக்குவிக்க 81 சபாக்களிலும் தற்போது தொடக்க விழாக்களின்போது ஒரு மணி நேரம் மங்கள இசை நிகழ்ச்சி நடத்தப்படுகிறது.
இசை விழாவை முதற்கட்டமாக தற்போது ஆகஸ்ட் 5-ல் தொடங்கி அக்டோபர் 2 வரை நடத்துகிறோம். சங்கீத சூடாமணி விருது வழங்குகிறோம். டிசம்பரில் நடத்தப்படும் வழக்கமான இசை விழாவில் நித்ய சூடாமணி விருது வழங்கி வருகிறோம்.
பாரம்பரியச் சிறப்பு: தஞ்சை மெலட்டூரில் 450 ஆண்டுகளாக நடைபெற்று வரும் மெலட்டூர் பாதவத மேளாவை அதன் பாரம்பரியத் தன்மை மாறாமல் கொண்டாடி வருகிறோம். கிட்டத்தட்ட 6 நூற்றாண்டுகளுக்கு முன்பு பயன்படுத்தப்பட்ட சொற்களைக் கொண்ட தெலுங்கு சாகித்தியங்களே தற்போதும் நாடகத்தில் இடம் பெறுகின்றன.