சிறப்பு பொருளாதார மண்டலம் திட்டத்தை அடுத்து நீர் நிலைகள், விவசாய நிலங்களுக்கு புதிய ஆபத்து
வி. கிருஷ்ணமூர்த்தி
சென்னை, நவ. 29: துணை நகரம், சிறப்பு பொருளாதார மண்டலம் அமைக்கும் திட்டங்களுக்கு அடுத்தபடியாக புதிய நகர்களை (டவுன்ஷிப்) உருவாக்கும் நிறுவனங்களால் ஏரிகள் மற்றும் விவசாய நிலங்களுக்கு புதிய ஆபத்து உருவாகியுள்ளது.
சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் டவுன்ஷிப் எனப்படும் புதிய நகர்களை உருவாக்கும் பணியில் பல்வேறு தனியார் நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளன.
இவ்வாறு புதிய நகர்களை உருவாக்க குறைந்தபட்சம் 20 ஏக்கர் முதல் அதிகபட்சமாக 100 ஏக்கருக்கும் அதிகமான நிலங்கள் தேவைப்படுகின்றன.
சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் தற்போது இத்தகைய திட்டங்களுக்கு நிலம் பெறுவதில் தனியார் நிறுவனங்களுக்கு பிரச்சினை ஏற்பட்டுள்ளது.
வேறு வழி இல்லாமல் சில நிறுவனங்கள் பல ஆண்டுகளுக்கு முன்னர் மூடப்பட்ட தொழிற்சாலைகளை விலைக்கு வாங்கி அந்த நிலத்தில் புதிய நகர்களை உருவாக்கி வருகின்றன.
இந்த நிறுவனங்களுக்கு போட்டியாக இத் தொழிலில் இறங்கியுள்ள சில நிறுவனங்கள் எந்த விலை கொடுத்தாவது பெருமளவில் நிலம் பெறுவதற்கு தயாராகி வருகின்றன.
தங்களது திட்டங்களுக்காக இந் நிறுவனங்கள் குறி வைத்திருப்பது புறநகர்ப் பகுதிகளில் உள்ள ஏரிகள் மற்றும் விவசாய நிலங்களைத்தான்.
சென்னை புறநகர்ப் பகுதிகளில் முறையான பராமரிப்பு இல்லாததால் தண்ணீர் தேங்காமல் உள்ள ஏரிகளைத் தங்களது திட்டங்களுக்கு கையகப்படுத்தித் தருமாறு இந் நிறுவனங்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளன.
இதேபோல, கடந்த சில ஆண்டுகளாக சாகுபடிப் பணிகள் நடைபெறவில்லை என்று கூறி விவசாய நிலங்களையும் விலைக்கு வாங்க இந் நிறுவனங்கள் முயன்று வருகின்றன.
இது தொடர்பாக சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் நீர் நிலைகள் மற்றும் விவசாயப் பகுதிகளாக உள்ள நிலங்களைக் குடியிருப்புப் பகுதிகளாக மாற்றம் செய்வதற்கான பணிகளில் இந் நிறுவனங்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளன.
தற்போது நீர் நிலைகளான ஏரிகளில் சில பகுதிகள் மட்டுமே தனியாரால் ஆக்கிரமிக்கப்பட்டன.
புதிய நகர்கள் திட்டங்கள் மூலம் இந்த நிலை மாறி ஏரிகள் முழுமையாகவே காணாமல் போகும் நிலை உருவாகியுள்ளது.
நீர் நிலைகள் பாதுகாப்பில் ஈடுபட்டுள்ள பல்வேறு அமைப்புகளுக்குக்கூட இது குறித்து தெரியாத நிலை உள்ளது.
சாத்தியமா?: நீர் நிலைகளைப் பாதுகாக்க வேண்டும் என பல்வேறு விழிப்புணர்வு பிரசாரங்களை அரசு மேற்கொண்டு வரும் நிலையில் இப் பிரச்சினை புதிய குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
இவ்வாறு நீர் நிலைகளைக் குடியிருப்புகளாக மாற்றுவதற்கு சட்டத்தில் வழி உண்டா என்று அரசு அதிகாரிகள் கேள்வி எழுப்பினால் அதற்கு உரிய பதில் தரவும் தனியார் நிறுவனங்கள் தயாராகி வருகின்றன.
கடந்த ஆண்டு ஹைதராபாதில் 2 ஏரிகளை குடியிருப்புப் பகுதிகளாக மாற்றுவது தொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பின் அடிப்படையில் இதற்கு அரசின் அனுமதி பெறப்படும் என பிரபல கட்டுமான நிறுவனத்தின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
நகர்ப்புறங்களில் பெருகிவரும் மக்கள் தொகைக்கு ஏற்ப புதிய குடியிருப்புகளை உருவாக்க வேண்டியது தவிர்க்க முடியாதது தான்.
ஆனால், மக்களின் வாழ்க்கைக்கு ஆதாரமாக உள்ள நீர் நிலைகள் அதைவிட முக்கியமானது என்பதை தொடர்புடைய துறையினருக்கு தெரிவிக்க வேண்டிய தருணம் தற்போது உருவாகியுள்ளது.
————————————————————————————————–
துணை நகரத்தை எதிர்ப்பவர்களுக்கு மன்னிப்பு கிடையாது: அமைச்சர் பரிதி இளம்வழுதி
சி.எம்.டி.ஏ. உருவாக்கியுள்ள 2-வது மாஸ்டர் பிளான் வரைவு அறிக்கை குறித்து சென்னையில் புதன்கிழமை தொடங்கிய பயிலரங்கில் சி.எம்.டி.ஏ. தலைவர் பரிதி இளம்வழுதி, துணைத் தலைவர் ஆர். சந்தானம்.
சென்னை, ஆக. 30: துணை நகரங்கள் அமைக்கப்படுவதை எதிர்ப்பவர்களுக்கு மன்னிப்பு கிடையாது என சி.எம்.டி.ஏ. தலைவரும், செய்தித் துறை அமைச்சருமான பரிதி இளம்வழுதி தெரிவித்தார்.
சி.எம்.டி.ஏ. உருவாக்கியுள்ள 2-வது பெரும் திட்ட (மாஸ்டர் பிளான்) வரைவு அறிக்கை குறித்த 2 நாள் பயிலரங்கை புதன்கிழமை தொடக்கி வைத்து அவர் பேசியது:
சென்னை மாநகரின் அதீத வளர்ச்சியை கருத்தில் கொண்டு அடுத்த 25 ஆண்டுகளுக்குத் தேவையான எதிர்பார்ப்பு, வளர்ச்சி ஆகியவற்றை கருத்தில் கொண்டு இந்த மாஸ்டர் பிளான் உருவாக்கப்பட்டுள்ளது.
மாநகரின் வளர்ச்சியை கருத்தில் கொண்டு துணை நகரம் அமைப்பது உள்ளிட்ட அரசின் வளர்ச்சித் திட்டங்களை சிலர் வேண்டுமென்றே எதிர்க்கின்றனர். இவர்களுக்கு மக்களின் எதிர்காலம் பற்றி கவலை இல்லை.
இவ்வாறு எவ்வித எதிர்கால திட்டமிடலும் இல்லாமல் தங்கள் விருப்பம் போல அரசின் திட்டங்களை எதிர்ப்பது எதிர்கால வளர்ச்சிக்கு தடையாக அமையும். இவர்களை எதிர்கால சந்ததியினர் மன்னிக்க மாட்டார்கள்.
வளர்ச்சியை கருத்தில் கொண்டு உருவாக்கப்படும் அரசின் திட்டங்களுக்கு வரக்கூடிய இடையூறுகளை தகர்த்தெரியக்கூடிய திடமான நிலையில் தமிழக அரசு உள்ளது.
அதற்காக மாற்று கருத்துகளை தமிழக அரசு புறந்தள்ளியதில்லை. கருத்து வேறுபாடுகள் தவிர்க்க முடியாதவை தான். அத்தகைய மாற்று கருத்துகள் இருந்தால் தயங்காமல் அரசுக்குத் தெரிவிக்கலாம்.
ஐ.டி. வளர்ச்சி மட்டும் போதாது: சென்னை நகரை அழகு படுத்துவது, தகவல் தொழில்நுட்பம் உள்ளிட்ட பல்வேறு துறையினருக்கு தேவையான வசதிகளை ஏற்படுத்துவதால் மட்டும் அரசின் திட்டம் முழுமை அடையாது.
நகர்ப்புறங்களில் வாழும் நடுத்தர மற்றும் ஏழ்மை நிலையில் வாழும் மக்களையும், நடைபாதைவாசிகளையும் உள்ளடக்கி அவர்களுக்கும் அனைத்து வாழ்விட வசதிகளையும் ஏற்படுத்தித் தரும் பணிகளையும் அரசு கருத்தில் கொண்டுள்ளது என்றார் பரிதி இளம்வழுதி.
தலைமைச் செயலாளர்: பயிலரங்கில் பங்கேற்ற தலைமைச் செயலாளர் எல்.கே. திரிபாதி பேசியது:
சென்னை உள்ளிட்ட பல்வேறு நகரங்களுக்கு அருகே துணை நகரங்களை உருவாக்க வேண்டியது தற்போதைய நிலையில் மிகவும் அவசிய தேவையாகும்.
இவ்வாறு துணை நகரங்களை உருவாக்காவிட்டால் எதிர் காலங்களில் நகரங்களில் மட்டுமல்லாது அதனை ஒட்டிய பகுதிகளிலும் திட்டமிடப்படாத வளர்ச்சி ஏற்படும்.
இதனால், புறநகர்ப் பகுதிகளில் பல்வேறு பிரச்னைகள் ஏற்படும்.
சென்னைப் பெருநகர்ப் பகுதி மட்டுமல்லாது தமிழகம் முழுவதும் ஏரி, குளங்கள் உள்ளிட்ட நீர் நிலைகளை பாதுகாத்து பராமரிக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
அனைத்து ஊராட்சி ஒன்றியங்களிலும் செயல்படுத்தப்படும் அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தில் நீர் நிலைகளை பாதுகாக்க முன்னுரிமை அளிக்கப்படும் என்றார் திரிபாதி.
சி.எம்.டி.ஏ. துணைத் தலைவர் ஆர். சந்தானம், வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற மேம்பாட்டுத் துறை செயலர் ஆர். செல்லமுத்து உள்ளிட்ட பல்வேறு துறைகளின் உயர் அதிகாரிகள் பங்கேற்றனர்.
————————————————————————————————–