அமெரிக்கத் தேர்தலின் பின்விளைவுகள்
பொ. லாசரஸ் சாம்ராஜ்
ஆண்டு முழுவதும் தேர்தலுக்கான ஆயத்தங்களும், தேர்தலும் நடத்திக் கொண்டிருக்கும் ஒரே நாடு அமெரிக்காதான். தற்போது நடந்த தேர்தலைத் தொடர்ந்து 2008 தேர்தலுக்கான ஆயத்தங்களும் அங்கு தொடங்கிவிட்டன. அமெரிக்காவின் பிரதான கட்சிகளான குடியரசுக் கட்சி, ஜனநாயகக் கட்சிகளிடையே அடிப்படையில் பெரிய சித்தாந்த வேறுபாடுகள் இல்லையென்றாலும், பல்வேறு பிரச்சினைகளை அணுகுவதில் அவைகளுக்குள் வேறுபாடுகள் உள்ளன என்பது உண்மை. அமெரிக்க ஆட்சியாளர்களின் கொள்கை முடிவுகளைப் பற்றி பல்வேறு விமர்சனங்களைப் பலர் செய்தாலும், அமெரிக்க மக்களின் ஜனநாயகப் பண்பு, சுயவிமர்சனத் தன்மை, ஆட்சியாளர்களையும் அவர்களின் அணுகுமுறைகளையும், அமைதியான தேர்தல் மூலம் மாற்றும் சிறப்பு ஆகியவற்றையும் எவரும் மறுக்க முடியாது.
அமெரிக்க நாடாளுமன்றமான காங்கிரஸின் இரு அவைகளுக்கும் நடந்த தற்போதைய தேர்தலில் 16 பெண்களை மேலவையான செனட்டுக்கும், 70 பேரை கீழவையான பிரதிநிதிகளின் சபைக்கும் தேர்ந்தெடுத்து புதிய வரலாறு படைத்துள்ளனர் அமெரிக்க மக்கள். அத்துடன் முதன்முதலாக ஜனநாயகக் கட்சியைச் சார்ந்த 66 வயதான நான்ஸி பெலோஸி, அமெரிக்காவின் மூன்றாவது சக்தி வாய்ந்த பதவியான பிரதிநிதிகள் சபையின் தலைவராகவிருப்பது குறிப்பிடத்தக்கது. எல்லாவற்றிற்கும் மேலாக 2008-ன் அதிபர் தேர்தலுக்கு ஜனநாயகக் கட்சியின் டிக்கட்டுக்கு ஹில்லாரி கிளிண்டன் பிரசாரத்தை மறைமுகமாகத் தொடக்கியிருப்பதும், பெண்களின் பங்களிப்பு அமெரிக்க அரசியலில் அதிகரித்து வருவதைக் காட்டுகிறது. அத்துடன் முதன்முதலாக கெய்த் எலீய்சன் என்ற இஸ்லாமியர், பிரதிநிதிகள் சபைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
பொதுவாக, நெருக்கடியான காலகட்டங்களில் அமெரிக்க வாக்காளர்கள் அதிபரின் கட்சிக்கு ஆதரவாக வாக்களிப்பதுதான் வழக்கம். ஆனால், தற்போதைய தேர்தல் ஜார்ஜ் புஷ்ஷின் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுக் கொள்கைகளின் அணுகுமுறையில் மாற்றத்தை மக்கள் விரும்புகிறார்கள் என்பதைத் தெளிவாக்கி விட்டது. இராக் போர், நிர்வாகத்தின் ஊழல், குடியரசுக் கட்சியினரின் மீது கூறப்பட்ட பாலியல் குற்றச்சாட்டுகளை ஜனநாயகக் கட்சியினர் இத் தேர்தலில் பிரதானப்படுத்தினர். ஆனால், தேர்தல் தோல்விக்குப் பாதுகாப்பு அமைச்சரான ரொனால்டு ரம்ஸ் பெல்ட் – இராக் பிரச்சினையில் ஏற்படுத்திய குளறுபடிதான் முக்கியக் காரணம் என்று கூறி, பலிகடா ஆக்கப்பட்டு, பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். உண்மையில் இராக் போருக்கு புஷ், செனீ, காண்டலீசா ரைஸ் மற்றும் உதவிப் பாதுகாப்பு அமைச்சராக இருந்த பால் உல்ஃபோ விட்ஸ் போன்றோர் பிரதாரன காரணம் என்பதை எவரும் மறுக்க முடியாது.
தேர்தல் முடிவுகள் ஆளும் குடியரசுக் கட்சிக்குப் பாதகமாக இருந்தாலும் இம் முடிவு அமெரிக்காவின் வெளிநாட்டுக் கொள்கைகளில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தாது என்பதே பலரின் கருத்து. முக்கியமாக உலகத்தை மேலாண்மை செய்யும் கொள்கையின் அடிப்படையில் இரு பிரதானக் கட்சிகளும் ஒருமனதுடன், தேச நலனையும் உலக சமாதானத்தையும் ஜனநாயகத்தையும் பயங்கரவாதத்தையும் காரணம் காட்டி செயல்படும். வட கொரியா, ஈரான் பிரச்சினைகளில் அமெரிக்காவின் நிலை கடுமையாகத்தான் வாய்ப்பிருக்கிறது. பில் கிளிண்டன் அதிபராக இருந்த போது தென்கொரிய எல்லைக்குச் சென்று, தென்கொரியா மீது வடகொரியா படையெடுத்தால் “அந்த நாடே இருக்காது’ என்று எச்சரித்ததும், நான்ஸி பெலோஸி ஜனநாயக ஆதரவாளர்கள் மீது சீனாவின் அடக்குமுறைகளைக் கடுமையாக எதிர்த்ததும் நினைவுகூரத்தக்கது. அதுபோல ஈரானை நிராயுதபாணி ஆக்கும் முயற்சிக்கு ஜனநாகக் கட்சியினர் தீவிர ஆதரவு கொடுக்கத்தான் வாய்ப்பிருக்கிறது.
ராணுவ பலத்தில் பலவீனமான நாட்டைத் தோற்கடித்து ஆட்சியை மாற்றுவது வல்லரசு நாடுகளுக்கு எளிதாக இருக்கலாம். ஆனால் அந்த நாட்டின் மக்களை ஆட்சி செய்ய இயலாது என்பதை ஆப்கன், இராக் ஆக்கிரமிப்புகள் தெளிவாக்கிவிட்டன. புகழ்பெற்ற ரான்ட் (தஅசஈ) ஆய்வு நிறுவனத்தின் அறிக்கையின்படி, இராக்கையும், ஆப்கானிஸ்தானையும் தொடர்ந்து கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்க 11 லட்சம் வீரர்கள் தேவையாம். எனவேதான் கூட்டுப் படைகள், உள்நாட்டுப் படைகள், பன்னாட்டுப் படைகள், நேட்டோ படைகள், ஐ.நா. படைகள், நேச நாட்டுப் படைகள் என்ற போர்வையில் பிற நாட்டுப் படை வீரர்களின் உயிரில் தன் தேச நலனைக் காக்க அமெரிக்கா முயலுகிறது. அணு சக்தி ஒப்பந்தத்தை காட்டி, இந்தியாவை இதில் மாட்டிவிட எதிர்காலத்தில் அமெரிக்கா முயலலாம். இந்திய அரசு எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
2003-மார்ச்சுக்குப் பின் இராக்கில் கூட்டுப் படையினர் 3078 பேர் மரணமடைந்ததாகவும், இதில் 2839 பேர் அமெரிக்க வீரர்கள் என்றும், இதுபோக 21,419 பேர் காயமடைந்ததாகவும் பென்டகனும், இசச -ம் தெரிவிக்கின்றன. ஆனால், இங்கிலாந்திலிருந்து வெளிவரும் லான்செட் (கஅசஇஉப) மருத்துவ ஆய்விதழ் அக்டோபர் 10-ல் வெளியிட்ட இணையதள ஆய்வுக் கட்டுரையில் இராக் யுத்தத்தில் நேரடியாகவும், மறைமுகமாகவும் 6 லட்சத்து 50 ஆயிரம் பேர் மரணமடைந்துள்ளதாகவும், எட்டு லட்சம் பேர் பல்வேறு காயங்கள் அடைந்துள்ளதாகவும், இதில் பத்தில் ஒரு பகுதியினருக்குக்கூட மருத்துவ உதவி கிடைக்கவில்லை என்றும் கூறுகிறது. இது மிகைப்படுத்தப்பட்ட தகவலாக இருந்தாலும், இராக் உள்நாட்டுப் போரை நோக்கி வேகமாகச் சென்று கொண்டிருப்பது உண்மை. அமெரிக்காவின் பொம்மை அரசும் செயலிழந்து விட்டது.
இந்த நிலையில், புஷ் நிர்வாகம் ஜனநாயகக் கட்சியின் ஒத்துழைப்புடன்தான் பல கொள்கை முடிவுகளை எடுத்தாக வேண்டும். முதலாவது, இம்மாத இறுதியில், புஷ் வியட்நாம் செல்லவிருப்பதை ஒட்டி நிறைவேற்ற இருக்கும் அமெரிக்க-வியட்நாம் தடையில்லா வர்த்தக ஒப்பந்தத்திற்கு காங்கிரஸின் ஒப்புதலைப் பெறுவது; இரண்டாவது, ஐ.நா.வின் அமெரிக்கத் தூதராக நியமிக்கப்பட்ட பிரச்சினைக்குரிய ஜான். த. போல்டனின் பதவிக்கான அங்கீகாரத்தைப் பெறுவது; மூன்றாவது, இந்தியாவுடனான அணுசக்தி ஒப்பந்தத்திற்கு ஒப்புதலைப் பெறுவது போன்றவை முக்கியமானவை.
இந்தியாவை அணு ஆயுத நாடாக இன்னும் அமெரிக்க செனட் அங்கீகரிக்கவில்லை. மன்மோகன் சிங்கின் கியூபா பயணம், இராக்கிற்கு இந்தியப் படைகளை அனுப்ப மறுப்பு, ஈரான் – இந்திய இயற்கை எரிவாயு ஒப்பந்தம் ஆகியன காங்கிரஸில் எதிர்ப்பை ஏற்படுத்தும். மூன்றாவது, இந்தியாவிற்கு மட்டும் சிறப்புச் சலுகை அளித்தால், அணு ஆயுதப் பரவல் திட்டத்திற்குப் பின்னடைவை ஏற்படுத்தும் எனும் வாதம் மேலோங்கும். நான்காவது, நேசநாடான பாகிஸ்தானும், இந்தியாவைப் போன்று சலுகை கேட்கலாம் என்ற சந்தேகம் வலுப்பெறும். எல்லாவற்றிற்கும் மேலாக, 1977-ல் அணு ஆயுதப் பரவல் தடைச் சட்டத்தை காங்கிரஸில் நிறைவேற்றி, இந்திய – அமெரிக்க தாராப்பூர் அணு உலை எரிபொருள் ஒப்பந்தத்திற்கு முற்றுப்புள்ளி வைத்ததும், ஜிம்மி கார்ட்டர் தலைமையிலான ஜனநாயகக் கட்சியினர் தாம் என்பதும் நினைவுகூரத்தக்கது.
இவை அனைத்தையும் மீறி, இந்திய-அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தத்திற்கு அமெரிக்க காங்கிரஸ் ஒப்புதல் அளித்தாலும் நிச்சயம் இந்தியா ஏற்றுக்கொள்ள இயலாத நிபந்தனைகளை புகுத்துவதற்கான வாய்ப்புகள் அதிகம். இதில் 110 கோடி இந்தியர்களின் கௌரவமும் அடங்கியிருக்கிறது. மன்மோகன் சிங் அரசு எச்சரிக்கையுடனும், தொலைநோக்குடனும் பிரச்சினைகளை அணுக வேண்டும்.